தங்கம் என்ற உலோகம் தற்சமயம் மக்களின் வாழ்வாதரத்தை முடிவு செய்யும் ஒரு விஷயமாகவிட்டது. ஒருவரிடம் இருக்கும் தங்கம் அவரின் அந்தஸ்த்தை முடிவு செய்கிறது. ஒரு நாட்டின் பொருளாதர நிலையும் இத்துடன் மறைமுகமாக இணைந்து உள்ளது. இன்று நேற்று அல்ல பல வருடங்களாகவே அப்படி இருக்கிறது.
ஐநூறு வருடங்களுக்கு முன் தங்கம் மிக மலிவான விஷயமாக பாரதத்தில் இருந்தது. மலிவு என்பது பொருள் நிலையில் அல்ல. பயன்பாட்டு நிலையில் எனலாம். ஆபரணங்கள் உடலில் நகைக்கடை விளம்பர மாடல் போல மக்கள் அணிந்து உலா வந்தார்கள். இன்றும் கூட ராஜஸ்தான் கிராமிய மக்களிடையே இப்பழக்கம் உண்டு. ஆப்கான் நாட்டை சேர்ந்தவர்கள் வடமாநில கோவிலை கொள்ளை கொள்ள வரும்பொழுது அந்த கோவிலில் இருக்கும் தங்கத்தை எடுத்த செல்ல தயாராக ஒரு குதிரை படையை கொண்டுவருவார்கள். அதாவது அவர்களுக்கு நிச்சயமாக தெரியும் பல டன் எடைகொண்ட தங்கம் கிடைக்கும் என்பது.
(கி.பி 1020) சோமநாதர் கோவிலை கஜினி கொள்ளைகொள்ளும் பொழுது எத்தனை முறை கொள்ளை கொண்டாலும் அந்த நூற்றாண்டில் நம் மதிப்பில் பத்து கோடிக்கு குறைவில்லாமல் கோவிலில் கொள்ளையடித்தான். வரலாறு சொல்லுவது போல இவர்கள் இஸ்லாமியர்கள் என நான் சொல்ல மாட்டேன். இஸ்லாமை அவர்கள் சரியாக புரிந்துகொண்டால் இவ்வாறு செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார் கஜினி.
காசிவிஸ்வநாதர் கோவிலையும் சோமநாத் கோவிலையும் செங்கல் செங்கலாக உருவி எடுத்து சென்றார்கள். காரணம் செங்கலின் மையப்பகுதி தங்கக்கட்டிகளும் மேல் பகுதி செங்கல்லிலும் செய்து அதன் மேல் தங்ககவசம் போடப்பட்டிருந்தது. கோவிலையே தங்கமாக கட்டவில்லை மற்றபடி தங்கத்தில் அப்படி இழைக்கப்பட்டிருந்தது.
சக்திவாயந்த இந்த இடங்களை அரேபிய, ஆப்கானிஸ்தான் கொள்ளையர்கள் தகர்த்ததற்கு ப்ராயச்சித்தமாக அனேக சூஃபி ஞானிகள் இந்தியாவிற்கு வந்து அந்த இடங்களில் ப்ரார்த்தனை செய்து அடக்கமானார்கள். கொள்ளையர்களை பதிவு செய்தது போல சூஃபி ஞானிகள் வரலாறு பதிவு செய்யவில்லை.
பாரதத்தின் வடகிழக்கு நாடுகள் மலை மற்றும் வரண்ட பாலை பூமியாக இருந்ததால் தங்கம் என்பது அவர்களுக்கு ஒரு மாபெரும் விஷயமாக இருந்தது. நம் மக்களுக்கு தங்கம் கோவிலில் போடும் காணிக்கையாகவும், நாணயம் பயன்படுத்தும் பொருளாகவும் இருந்தது. இங்கே நாம் கவனிக்கவேண்டும். எந்த பொருள் மலிவாகவும் லகுவாகவும் கிடைக்கிறதோ அப்பொருளிலேயே நாம் நாணயங்கள் செய்வோம். தற்காலத்தில் கரண்ஸி பேப்பரிலும், துருப்பிடிக்காத இரும்பு மலிவக கிடைப்பதால் பயன்படுத்துவதை போல அந்தகாலத்தில் தங்கம் வெள்ளி என்பது மலிவானதாக இருந்தது.
மேலும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஆன்மீக ரீதியாகவும் கையாளப்பட்டதால் வாழ்க்கைதரம் மேம்பட நாணயங்கள் தங்கமாக இருந்தது. நமக்கு மலிவானது பிறருக்கு மிகவும் உயர்ந்ததாக இருக்கலாம். அதனால் தான் பிறநாட்டினருக்கு தங்கம் ஒரு மாபெரும் விஷயமாக இருந்தது. ஒரு வேடிக்கை கதை ஒன்று பார்ப்போம்.
ஒரு வியாபாரி பொருட்களை கப்பலில் கொண்டு சென்று பல தேசங்களில் விற்பவன். ஒரு நாள் பயணமாகும் பொழுது புயலின் காரணமாக கப்பல் திசைமாறி வேறு ஒரு தீவில் ஒதுங்கியது. அங்கே இதுவரை பிற நாட்டினரை பார்க்காத மக்கள் வாழ்ந்துவந்தனர். கப்பல் என்ற ஒரு வாகனத்தையும், வியாபாரியின் உடை ஆகியவை அவர்களுக்கு வித்தியாசமாகப்பட்டது. தான் கொண்டு சென்ற சரக்குகளை அவர்களுக்கு விற்றுவிட்டு செல்லலாம் என எண்ணி அவர்களிடம் தான் கொண்டு வந்த பொருட்களை காட்டினான்.
அதில் ஒரு பொருள் தீவு மக்களை கவர்ந்தது. தீவின் அரசனிடம் வியாபாரியை கொண்டு சென்றார்கள். மக்கள் அரசனிடம் வியாபரியையும் அவனின் நவீன பொருளையும் அறிமுகப்படுத்தினர். அதன் தோலை நீக்கினால் கண்களில் கண்ணீர்வருகிறதாம். அப்படிபட்ட உணவு பொருளை வியாபாரி கொண்டு வந்திருப்பதாக சொன்னார்கள். புரிந்திருக்குமே. ஆம் அது வெங்காயம்.
அரசன் வியாபாரியின் பொருளுக்கு ஈடாக பல வைரம் வைடூரியம் தங்கம் என வெங்காயத்திற்கு எடைக்கு எடை கொடுத்தான். வியாபாரியும் மன நிறைவுடன் தன் நாடு திரும்பினான்.
எப்பொழுதும் கொஞ்சம் பணத்துடன் வரும் வியாபாரி அதிக செல்வத்துடன் வந்திருப்பதன் மாயம் புரியாமல் போட்டி வியாபாரிகள் முழித்தனர். ரகசிய தூதுவர்கள் மூலம் விஷயமும் தெரிந்து கொண்டான் ஒரு போட்டி வியாபாரி. தானும் கப்பலில் புதிய காய்கறிகள் தானியத்துடன் அந்த தீவு நோக்கி சென்றான்.
மக்கள் இவனையும் அரசன் முன் கொண்டு சென்றார்கள். அவன் கொண்டு வந்த பொருட்களை பார்த்த அரசன் மகிழ்ச்சி அடைந்தான். வியாபாரி கொண்டு வந்த பொருளுக்கு சமமான எடையில் தன்னிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத பொருளான வெங்காயத்தை அவனுக்கு பரிசாக அளித்தான்.
ஒருவருக்கு எளிமையாக கிடைப்பது பிறருக்கு அதிசயமானதாக இருக்கலாம். நம் பாரதத்தில் ஆன்மீகம் எளிமையாக கிடைக்கிறது. அதனால் மேற்கு நாட்டினர் அதை பெரிய விஷயமாக பார்க்கிறார்கள். உள்ளூர்காரர்களுக்கு அது வெங்காயம் ..!
உலகின் வல்லரசு நாடுகளின் நாணய மதிப்பு தங்கத்துடன் மறைமுகமாக இணைந்துள்ளதால் புதிதாக தங்க சுரங்கம் உருவாக பல நாடுகள் எதிர்ப்புடன் இருக்கிறார்கள். தங்க சுரங்கம் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தேவை நிறைவடையும். தேவை அதிகரித்தால்தானே விலை ஏற்ற முடியும்? (supply and demand) அதனால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும் என பயப்படும் வல்லரசுகள் புதிய சுரங்கம் என்பதை கானல் நீராக வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனுமதித்து ஒரு இருபது முப்பது சுரங்கங்கள் ஏற்பட்டால் நாம் கோக்கும் பெப்ஸியும் தங்க கேனில் குடிக்கலாம்.
தங்கம் எப்படி நம் சாஸ்திரம் கலாச்சாரம் சார்ந்ததோ அதுக்கு நேர் எதிரான சமாச்சாரம் ராசிகற்கள். தொலைக்காட்சி சேனலில் கூவி கூவி விற்கப்படும் ராசிகற்கள் நம் சாஸ்திரம் சார்ந்தவை அல்ல. அரேபியர்கள் தான் ராசிக்கற்களை நமக்கு அறிமுகப்படுத்தினார்கள். யுனானி மருத்துவ முறையில் படிகங்கள் (crystals), படிகாரங்கள் மற்றும் மலை உப்பு கொண்டு செய்யும் மருத்துவ பிரிவு உண்டு.
குறிப்பிட்ட நிற கற்களை அணிந்தால் மன நிலையில் ஏற்றம் மற்றும் வியாதி குணம் என துவங்கிய இப்பழக்கம் உங்கள் ராசியை கேட்டு விற்கும் அளவுக்கு வியாபாரம் ஆகிவிட்டது. வரும் நூற்றாண்டில் குரோசின் மாத்திரை சாப்பிட்டால் செல்வந்தர் ஆகலாம் என சிலர் கிளம்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் தற்சமயம் யுனானி மருந்தான ரத்தின கற்களை அப்படித்தான் பயன்படுத்துகிறோம். இன்றும் கூட சில தர்க்காவின் வாசலில் கற்களை விற்கும் ஆட்களை பார்க்க முடியும். ராசிகற்கள் இஸ்லாமுக்கு எதிராக இருந்தாலும் சிலர் தங்கள் மனநிறைவுக்கு வாங்கி அணிவதுண்டு.ரத்தின கற்கள் அரபியர் கொண்டுவந்தார்கள் என்பதால் கண்மூடித்தனமாக மறுக்கவில்லை.
நவ ரத்தின கற்களுக்கு ஆற்றல் இல்லையா ? உலகில் இருக்கும் அனைத்து பொருட்களையும் நவகிரகங்கள் தொடர்பு கொள்ளும். நவ தானியம், நவரசம் என சொல்லிக்கொண்டே போகலாம். குரு என்ற கிரகத்திற்கு மஞ்சள் புஷ்பராகம் அணியுங்கள் பலன் கிடைக்கும் என்றால் குரு குறிக்கும் கொண்டைகடலையை உண்டாலும் அதே ஆற்றல் கிடைக்கவேண்டும். காரணம் இரண்டு பொருளும் குரு என்ற கிரகத்தால் உருவானவை.
படிகங்கள் (Crysrals ) ஆற்றலை எதிரொலிக்க செய்யும் வல்லமை கொண்டது. உங்களிடம் எத்தகைய ஆற்றல் உண்டோ அதை பன்மடங்காக எதிரொலிக்கும். இயற்பியல் ஆய்வகங்களில் முப்பெட்டகம்(prism) எப்படி ஒளியை பிரிக்குமோ அதுபோல நவரத்தின கற்கள் ஆற்றலை பிரித்து எதிரொளிக்க செய்யும். அதனால் கோவில்களின் கருவரையில் இறைவனின் விக்ரஹத்தில் அதிகமாக கற்களை பயன்படுத்தினார்கள். கருவறையில் இருக்கும் இறையாற்றல் பன்மடங்காக எதிரொலிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
நான் ஒரு முட்டாள் என்றால் நான் ராசிக்கற்களை வாங்கி என் முட்டாள் தனத்தை பன்மடங்காக பெருக்கி என்ன செய்ய போகிறேன்? ஆற்றலே இல்லாத மனிதன் ராசிக்கல் அணிந்து எதை பெருக்க போகிறான்? ராசிக்கற்கள் மிகவும் சக்திவாய்ந்த இடங்களில் இருக்கட்டும். அங்கே சென்று வழிபடுவதாலோ அல்லது நாம் சில மணிகள் செலவிடுவதாலோ அந்த ஆற்றலை நாம் பெற்றுகொள்ளுவோம். அதைவிடுத்து ராசிக்கல் மோதிரம் என்ற பெயரில் வேலைசெய்யாத ஒருவிஷயத்திற்கு அடிமையாக வேண்டாம். நம் சாஸ்திரம் ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் நவரத்தின கற்களை போடசொல்லவில்லை. ஜோதிடத்தின் பெயர் சொல்லி விற்பவர்கள் சாஸ்திரத்திற்கு எதிரானவர்களே...!
வேடிக்கையான விஷயம் என்ன வென்றால் சதாம் உசேன் தங்கத்தில் கழிவறை வைத்திருந்தாராம், நம் ஊரில் சாதம் சாப்பிடும் உலக நாதர்கள் ராசிக்கற்களை வாங்கிகொண்டிருக்கிறார்கள்.
உலோகத்தில் வெளிச்சூழலுக்கு வினைபுரியாத சிறப்பு தங்கத்திற்கு உண்டு. உலகத்தின் சூழலுக்கு உருமாறாத தங்கமாக இருப்பது என்பது ஒரு வித யோக நிலை. அகத்தே நீங்கள் தங்கமானால் புறத்தங்கம் தகரமே...!