Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, October 2, 2025

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை - வெள்ளி விழா சிறப்பு அறிவிப்பு!



ஜோதிட ஆராய்ச்சிக் கூட்டிணைவு (Fellowship) பட்டயம்

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை தனது 25வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதன் வெள்ளி விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஜோதிட உலகின் ஆழமான ஆய்வுக்காக, சிறப்புமிக்க ஜோதிட ஆராய்ச்சிக் கூட்டிணைவு (Jyothisha Research Fellowship - JRF) பட்டய வகுப்புகளை அறிவிக்கிறது!

ஜோதிடம் என்ற மாபெரும் கடலில் மூழ்கி, ஆய்வு என்கிற ஞான முத்துக்களை வெளிக்கொணரும் அரிய வாய்ப்பு இது!

ஒரு வருட கால விரிவான ஆராய்ச்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளன. ஆர்வமுள்ள ஜோதிட ஆய்வு மாணவர்களை வரவேற்கிறோம்.

ஆய்வு செய்யக் காத்திருக்கும் முக்கியத் தலைப்புகள்:

  • ஜோதிட விதிகள் மறு ஆய்வு: காலத்திற்கு ஏற்ப ஜோதிட விதிகளைப் புரிந்துகொள்வதும், புதிய கோணங்களில் அணுகுவதும்.

  • வேதகால ஜோதிடத்தில் ஓர் புலனாய்வு: பண்டைய வேத ஜோதிட முறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த ஆழமான ஆய்வு.

  • தினசரி வாழ்வியல் ஜோதிடம்: அன்றாட வாழ்க்கையின் சவால்களுக்கும், வாய்ப்புகளுக்கும் ஜோதிடத்தின் பங்களிப்பு.

  • கால நிர்ணய ஆய்வு: ஒரு நிகழ்வின் சரியான காலத்தை நிர்ணயிப்பதற்கான பல நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிகள்.

  • பிரசன்ன ஜோதிட ஆராய்ச்சி 

மேலும் பல ஜோதிடத் தலைப்புகளில் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆய்வு செய்யலாம்.

இந்த ஆய்வுப் பயணத்தில் உங்களுக்குக் கிடைக்கும் பலன்கள்:

  • ஒவ்வொரு ஆய்வும் தனித்துவமான ஆராய்ச்சி நூலாக வெளியிடப்படும்.

  • தனியாகவோ அல்லது குழுவாகவோ (ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து) ஆய்வு செய்யும் வாய்ப்பு.

  • ஆய்வை வெற்றிகரமாக முடிக்கும் அனைவருக்கும் "ஆராய்ச்சியாளர் பட்டயம்" வழங்கப்படும்.

  • சிறந்த ஆய்வுகளுக்கு தங்கப் பதக்கமும், வெள்ளிப் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்படும்.

  • ஸ்வாமி ஓம்கார் அவர்கள் உங்களது ஆய்வு வழிகாட்டியாக இருந்து, நேரடியாகப் பயிற்சி அளித்து, வழிகாட்டுவார்.

  • மாதம் ஒரு முறை சிறப்பு ஆய்வு வகுப்புகள் நடைபெறும்.

ஆராய்ச்சி வகுப்பில் இணைந்துகொள்வதற்கான அடிப்படைத் தகுதிகள்

  • அடிப்படை ஜோதிட அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

  • பதினெட்டு வயது பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும்.

  • ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையில் ஜோதிடக் கல்வி கற்காதவர்களும் நேரடியாக இந்த ஆய்வு வகுப்பில் சேரலாம்.

  • சமர்ப்பிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வேறு எங்கும் வெளிவராத, தனித்துவமான ஆய்வாக இருத்தல் வேண்டும்.

உங்கள் ஜோதிட அறிவையும், ஆய்வுத் திறனையும் வளர்த்துக்கொள்ள இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

உங்கள் விருப்பங்களைத் தெரிவித்து, இப்போதே உங்களை எங்கள் ஆராய்ச்சிக் குழுவில் இணைத்துக் கொள்ளுங்கள்!


முன்பதிவுக்கு கடைசி நாள் : அக்டோபர் 20 - 2025.


Sunday, July 27, 2025

நலம் தரும் யோகம் - புத்தக மதிப்புரை

ஜெர்மனியில் நடைபெற்ற யோக மாநாட்டில் தான் முதன்முதலில் ‘ஐயங்கார் யோகா’ என்ற பெயர் கேட்டேன். திராவிட பூமியில் வாழும் எனக்கு உடனடியாக ஒரு புரட்சி மோடில் சிந்தனை உருவானது. ‘ஐயங்கார் யோகா’ என்றால் பிற ஜாதியினருக்கும் தனித்தனி யோகா இருக்கிறதா? எங்கே சமத்துவம்? எங்கே சமூக நீதி? என்று கார்ல் மார்க்ஸ் பிறந்த பூமியில் நின்று கேள்விகள் எழுப்பினேன்.

பின்னர் தான் தெரிந்தது, யோக முறையில் பி. கே.எஸ். ஐயங்கார் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு வகை யோகா தான் ‘ஐயங்கார் யோகா’.

ஐயங்கார் யோகாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, யோக மரபின் வரலாற்றைப் புரிந்துகொள்வது அவசியம். யோக மரபு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் நிலவி வரும் ஓர் ஆன்மீக மரபு. இதில் பல்வேறு யோக முறைகள் அடங்கும். இராஜ யோக மரபில் அஷ்டாங்க யோகத்தில் உள்ள ஆசனங்கள், ப்ராணாயாமம் போன்றவை நாத பாரம்பரியத்தால் உருவாக்கப்பட்டவை. மச்சீந்தர நாதர் மற்றும் கோரக்க நாதர் பல நூல்களை எழுதி ஹத யோக மரபை உருவாக்கினார்கள். ஹத யோக ப்ரதீபிகா என்ற நூலை ஸ்வாத ராமா (ராமநாத்) என்ற நாத வழி அறிஞர் எழுதியவர். இன்று வரை கோரக்கர் மற்றும் ஸ்வாதராமரின் நூல்களே ஹத யோகத்திற்கு ஆதாரமாக உள்ளன. தமிழில் ‘திருமந்திரம்’ ஹத யோகத்தைப் பற்றிச் சொல்லும் முக்கிய நூலாகும். இதில் மூன்றாம் தந்திரம் யோக மரபுகளுக்கான ஆதார நூலாக இருக்கிறது. அதில் ஹத யோக முறைகளும் விளக்கப்படுகின்றன.

முந்தைய யோக நூல்களில் எதிலும் ‘யோகம் இவ்வகை நோயை தீர்க்கும்’ என கூறப்படவில்லை. ஹத யோகம் ஆன்மீக உயர்வுக்கான கருவியாகவே விளக்கப்பட்டது.

கடந்த நூற்றாண்டில் யோக முறை பல நவீன பாய்ச்சல்களை சந்தித்தது. ‘மாடர்ன் யோகா’ என்ற பெயரில் தனது மரபை மாற்றிக்கொண்டு, ஹத யோகத்தின் முக்கிய உறுப்புகளான ஆசனம், ப்ராணாயாமம், முத்ரா மற்றும் பந்தா ஆகியவற்றில், ஆசனம் மற்றும் ப்ராணாயாமத்தையே முன்னிறுத்தி பயிற்சிகள் அளிக்கபட்டன. இவ்வாறான நவீன யோக மரபுகள் முக்கியமாக எதை மறைத்தது என்றால் கோரக்கர் மற்றும் நாத பாரம்பரியத்தால் ஹத யோகம் தோன்றியது என்ற வரலாற்றை தான்.

இன்று ஹத யோகத்தை பயிலும் பெரும்பாலானவர்களுக்கு கோரக்க நாதர் மற்றும் அவர் எழுதிய முதல் யோக நூல் பற்றிய தகவலே தெரியாது.

நவீன யோக மரபினர் யோகத்தின் தந்தையாக பதஞ்சலியை குறிப்பது வழக்கம். யோக சூத்திரம் போன்ற நூல் மூலம் அவர் தன் பங்களிப்பை செய்திருக்கலாம். ஆனால் அவர் கூறும் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்ற வரிகளில் ஆசனம் ஸ்திரமாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது. ஆனால் ஆசனங்களை எவ்வாறு செய்ய வேண்டும், எத்தனை ஆசனங்கள் உள்ளன என்பதற்கான வழிகாட்டுதல் யோக சூத்திரத்தில் இல்லை. ஏற்கனவே ஹத யோக ப்ரதீபிகா போன்ற நூல்கள் இருந்ததால், பதஞ்சலி அவற்றைப் பற்றிக் கூற தேவையில்லை என்று எண்ணியிருக்கலாம்.

பகவத் கீதையிலும் யோக சூத்திரத்திலும் ப்ராணாயாமம், முத்ரா, பந்தா ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் இல்லை. ஆனால் ஹத யோகத்தை முறையாக விளக்கியவர் கோரக்க நாதர். எனவே ஹத யோகத்திற்கு தந்தை கோரக்கர் தான் எனலாம்.

நாத சம்பிரதாயத்தில் இயங்கும் எனக்கு நவீன யோக மரபில் ஏற்க இயலாத அம்சங்கள் பல உள்ளன. குறிப்பாக கோரக்கர், திருமூலர் போன்றவர்களை முற்றிலுமாக மறந்துவிட்டு, யோகத்தை சிகிச்சை பொருளாக மாற்றிவிட்டது முக்கிய குறைபாடாக உள்ளது.

“பச்சிமுகத்தாசனம் செய்தால் முதுகெலும்பு வலி போகும்”, “ப்ராணாயாமம் செய்தால் மன உளைச்சல் குறையும்” போன்ற சிகிச்சை நோக்குடன் யோக முறை விளக்கப்படுவது எனக்கு ஒத்துவராதது. சிகிச்சை நோக்கில் ஆசனம் செய்யப்படுவதால், ஆசனத்தின் உண்மை தன்மை குறைந்து விடுகிறது. இது காயகல்ப மூலிகையை பசிக்கு உணவாக கொடுப்பதைப் போன்றது.

இப்போது கூட ‘முத்திரை செய்தால் நோய் குணமாகும்’ என்ற வகையில் யோக முறைகள் பரப்பப்படுகின்றன. ஆசனம், ப்ராணாயாமம், முத்ரா, பந்தா ஆகியவற்றை ஒருங்கிணைத்து வாழ்வியல் முறையாக செயல்படுத்தினால், அது அறியாமையால் ஏற்படும் துன்பங்களை போக்கும். அறியாமையை களைந்தால் ஆனந்தம் உருவாகும் — இவ்வளவுதான் யோகத்தின் கருத்து.

“கடன் தீர ஆசனம்”, “காதல் கைகூட ஆசனம்”  என யாராவது சொன்னால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறதோ, அதே போலவே “வியாதி தீர ஆசனம்” என்பதும் அத்தகைய விஷயமே என்பது என் கருத்து.

நாள்பட்ட நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு யோக பயிற்சியாளர் ஒருவர் தீர்வு கூறிக்கொண்டே இருந்தாலும், அதே நபர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு செல்வதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது - யோகம் என்பது நோய் தீர்க்கும் கருவி அல்ல, அது அறியாமையை போக்கும் ஒரு உள்பார்வைக் கருவி.

இத்துடன் விட்டார்களா ? மேலைநாடுகள் “பீச் யோகா”, “பீர் யோகா” என பல வியத்தகு பெயர்களில் யோகத்தைத் தங்களுக்கே உரியதுபோல் மாற்றுகின்றனர். நம் நாட்டிலும் பலர் “வாட்ஸ்அப் யோகா”, “இன்ஸ்டாகிராம் யோகா” என மரபை சீர்குலைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

எனினும், நவீன யோக மரபிலும் சில முக்கியமான வைரங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள கைவல்ய தாம் என்ற நிறுவனம் மற்றும் ஐயங்கார் யோகா ஆகியவை ஹத யோக மரபை அறிவியல்பூர்வமாக செயல்படுத்தி வரும் சிறந்த நிறுவனங்களாகும். முக்கியமாக ஹத யோக பயிற்சியை உலகளவில் பரப்பியவர் பி. கே.எஸ். ஐயங்கார்.

சமீபத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகம் பி. கே.எஸ். ஐயங்கார் எழுதிய நூலை தமிழில் ‘நலம் தரும் யோகம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அந்த நூலை வாசித்து கருத்து சொல்ல கேட்டிருந்தார்கள்.

காஞ்சிபுரம் பட்டு நெசவாளியிடம் பிகினி உடையைப் பற்றி கருத்து கேட்பது போல தான் - நான் இந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதும்..! இருந்தாலும் ஹத யோக குடும்பத்தின் கீழ் வருவதால், என் கருத்துகளை இங்கே பகிர்கிறேன்.

ஆங்கில நூலை பல வருடங்களுக்கு முன்பே வாசித்தேன். முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட இந்த தமிழ் நூல் மிகவும் எளிமையாகவும் அழகாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆசனங்கள் செய்வது எப்படி என்பதையும், ப்ராணாயாமம் முறையையும் தெளிவாகக் கூறியுள்ளது. மொழிபெயர்ப்பு ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ஹத யோக ஆசிரியர் ஒருவரிடம் ஆசனங்கள், ப்ராணாயாமம் கற்றுக்கொண்ட பிறகு, இந்நூல் பயிற்சியாளராக ஆசனங்களை மேலும் துல்லியமாக செய்ய உதவும். தமிழ் ஹத யோக வாசகர்களுக்கான அரிய நூல் இது.


புத்தகம்: நலம் தரும் யோகம்

வெளியீடு: காலச்சுவடு
விலை: — 295 ரூபாய்

Monday, April 28, 2025

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை : வேதகால ஞானத்தின் நவீனப் பயணம்

பழமையான வேதகால அறிவையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும் இன்றைய வாழ்வியலோடு இணைக்கும் ஒரு சிறந்த முயற்சியாக ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை திகழ்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக, ஸ்வாமி ஓம்கார் அவர்களின் தலைமையில், இந்த அறக்கட்டளை ஜோதிடம், யோகம் மற்றும் வேதகால வாழ்வியல் முறைகளை பரப்பி வருகிறது. கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் இயங்கும் இந்த அமைப்பு, ஆன்மீகத்தையும் நடைமுறை வாழ்வையும் இணைக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறது.


ஜோதிடம்: விதியை அறியும் விஞ்ஞானம்

ஜோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளால் மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்களை ஆய்வு செய்யும் ஒரு பழமையான அறிவியல். ப்ரணவ பீடம், இந்த அறிவியலை ஆழமாகவும், பயன்பாட்டு முறையிலும் கற்பிக்கிறது.

சிறப்புப் பாடத்திட்டங்கள்:

  • அடிப்படை ஜோதிடம் (வேதகால ஜோதிடம், நாடி, உயர் நட்சத்திர ஜோதிடம்)

  • சிறப்பு ஜோதிடத் துறைகள்:

    • மருத்துவ ஜோதிடம் (நோய்களுக்கான கிரக பலன்கள்)

    • வேளாண் ஜோதிடம் (பயிர்களுக்கான சரியான நேரம்)

    • பங்குச்சந்தை ஜோதிடம் (பொருளாதார முன்னறிவிப்புகள்)

  • நாடி ஜோதிடம், ஜெய்மினி ஜோதிடம் போன்ற பாரம்பரிய முறைகள்

இங்கு பயின்ற மாணவர்கள், ஜோதிடத்தை ஒரு தொழிலாகவும், ஆன்மீகப் பயணமாகவும் மாற்றிக் கொள்கின்றனர்.


யோகம் சாஸ்திரம்: உடல், மனம், ஆத்மாவின் ஒருங்கிணைப்பு

யோகம் என்பது பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் வழியாக ஆன்மீக உயர்வை நோக்கிய ஒரு பயிற்சி. ப்ரணவ பீடம், நாத சம்பிரதாயத்தின் அடிப்படையில், கோரக்க நாதர் மரபைப் பின்பற்றி ஹத யோகம் கற்பிக்கிறது.

யோகப் பயிற்சிகள்:

  • ஹத யோகம் (உடல் வளைவு திறன் மற்றும் மன உறுதி)

  • பால யோகம் (குழந்தைகளுக்கானது)

  • ஸ்ரீ யோகம் (பெண்களுக்கான சிறப்புப் பயிற்சிகள்)

  • கர்பகால யோகம் (கர்ப்பிணிப் பெண்களுக்கானது)

யோக ஆசிரியர் பயிற்சி:

  • ஒரு மாதம், ஆறு மாதம் மற்றும் ஒரு வருட பயிற்சிகள்

  • ஹத யோகம், நாத யோகம், தத்ரா யோகம்

இந்தப் பயிற்சிகள், யோகத்தை ஒரு வாழ்க்கை முறையாக மாற்ற உதவுகின்றன.


நாத கேந்திரா: வேதகால வாழ்வியல் 

2017-ல் உருவாக்கப்பட்ட நாத கேந்திரா, வேதகாலத்தின் தற்சார்பு மற்றும் ஆன்மீக வாழ்க்கை முறையை மீண்டும் உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது.

முக்கிய திறன் பயிற்சிகள்

வேதகால வேளாண்மை (இயற்கை விவசாயம்)
சூரிய ஒளி மின்சாரம் (சூரிய ஆற்றல் பயன்பாடு)
வேதகால உணவுமுறை (ஆரோக்கியமான உணவுகள்)
கணினி தொழில்நுட்பம் 
தியானம் & ஆன்மீக வளர்ச்சி

இங்கு, ஆன்மீகம் மற்றும் நவீன தொழில்நுட்பம் இணைந்து, தற்காலத்திற்கான முழுமையான வாழ்வியல் அமைகிறது.

 ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் பயிற்சி விவரங்கள்

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை, ஜோதிடம், யோகம் மற்றும் வேதகால அறிவை ஒருங்கிணைத்து, மனிதர்களை உள்ளார்ந்த ஆன்மீக வளர்ச்சியை நோக்கி வழி நடத்துகிறது. நாத கேந்திரா போன்ற ஒருங்கிணைந்த ஆன்மீக சூழல் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க உதவுகின்றன. மனிதன் தன்னை உயர்மனித நிலைக்கு மேம்படுத்த இத்தகைய சூழல் உதவுகிறது.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் அனைத்து பயிற்சிகளும் நாத கேந்திரா என்ற ஒருங்கிணைந்த ஆன்மீக சூழலில் நடைபெறுகின்றன. கோவை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் நகர அலுவலகத்திலும் இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன. இதன் கன்யாகுமரி கிளையிலும் ஜோதிடம் மற்றும் யோகம் சார்ந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இத்தகைய பயிற்சிகளை மதம், இனம், வயது, ஆண்-பெண் வேறுபாடுகள் இன்றி அனைவரும் கற்றுக்கொள்ளலாம். கல்வியில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்குமானது இப்பயிற்சிகள். நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன.

மாதாந்திர பயிற்சி அமைப்பு:

  • மாதத்தின் முதல் வாரம்: சிறப்பு ஜோதிட பயிற்சிகள்

  • இரண்டாம் வாரம்: திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

  • மூன்றாம் வாரம்: ஆன்மீகப் பயிற்சிகள்

வருடம் முழுவதும் இப்பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு முறை நடைபெறும் பயிற்சி மீண்டும் நடைபெறுவதற்கு ஒரு வருடம் காத்திருக்க வேண்டியிருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும். சில சிறப்புப் பயிற்சிகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுகின்றன. முழு வருடத்திறகான பயிற்சி அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது

யோகா வித்யா – பயிற்சி திட்டங்கள்

  • 1 மாத யோகா பயிற்சி – அக்டோபர்

  • 6 மாத யோகா பயிற்சி – ஜூலை

  • 1 வருட யோகா பயிற்சி – டிசம்பர்

சிறப்பு யோகா பயிற்சிகள்

  • ஹத யோகா2 மாதங்களுக்கு ஒருமுறை

  • பால யோகா (குழந்தைகளுக்கான யோகா)ஏப்ரல் / மே மாதம்

பயிற்சியில் இணைவதற்கு வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்யலாம். வாட்ஸ் அப் எண் - 9944 1 333 55, 9944 2 333 55.

மின்னஞ்சல் : swamiomkar@gmail.com 

 

 

 


Monday, March 24, 2025

இலவச ஜோதிட பயிற்சி - ஸ்வாமி ஓம்கார் ஜோதிட வகுப்புகள்

நமது கலாச்சாரத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று ஜோதிடம். ஒரு தனிமனிதன் உணவு, உறைவிடம் மற்றும் உடை போன்ற அடிப்படைத் தேவைகளை அடைந்த பின்னர், தனக்குக் கிடைத்த வசதிகள் தொடர்ந்து நிலைக்குமா என்ற கேள்வி எழுகிறது. அந்தத் தருணத்தில்தான் ஜோதிடத்தின் தேவை உருவாகிறது.

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, நமது கலாச்சாரம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, கலை மற்றும் கலாச்சார உயர்வில் திளைத்திருந்தது.அக்காலத்தில் ஜோதிடம் ஒரு செழிப்பான சாஸ்திரமாக விளங்கியது. இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்ட காலகட்டத்தில், ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கான நோக்கம் பலருக்கு இல்லாமல் போனது. ஆனால், மக்களின் தேவைகள் ஓரளவு பூர்த்தியான பின்னர், ஜோதிட சாஸ்திரத்தின் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.


ஜோதிடம் என்றும் நிலைத்திருக்கும் ஒரு சாஸ்திரமாக இருந்தாலும், கடந்த நூற்றாண்டில் மக்களுக்கு ஜோதிடக் கல்வி என்பது அன்னியமாகவே இருந்தது. அதைக் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கும் வசதிகள் இல்லாத நிலை நீடித்தது.


கடந்த 25 ஆண்டுகளாக, ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை ஜோதிடப் பயிற்சியை வழங்கி வருகிறது. இனம், நிறம், பாலினம் போன்ற எந்தவித ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல், ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அனைவருக்கும் இந்தக் கல்வி வழங்கப்படுகிறது.


ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று, ஜோதிடத்தைத் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, வட இந்திய மாநிலங்கள், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மலேசியா, ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் உள்ள மாணவர்கள் ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளையின் மூலம் பயிற்சி பெற்று, ஜோதிடத்தைப் பரப்பி வருகின்றனர்.
 

ஜோதிட அடிப்படைப் பயிற்சி கடந்த சில வருடங்களாக நேரடிப் பயிற்சியுடன், ஆன்லைன் பயிற்சியும் நடைபெறுகிறது. யூடியூப் தளத்தில் அனைத்து வகையான அடிப்படை ஜோதிடப் பயிற்சிகளும் இலவசமாகக் கிடைக்கின்றன.
யூடியூப் சேவையின் மூலம், நீங்கள் ஜோதிடப் பயிற்சியைப் பெற விரும்பினால், உங்கள் இடத்தில் இருந்தே ஆழமான ஜோதிடப் பயிற்சியைப் பெற முடியும். அதற்கான இணைப்பை இங்கே தருகிறேன்:
 

உயர் நட்சத்திர ஜோதிடம் - பன்னிரண்டு வகுப்புகள் (YouTube Link)

 

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

பகுதி 5

பகுதி 6

பகுதி 7

பகுதி 8

பகுதி 9

பகுதி 10

பகுதி 11

பகுதி 12


ஜோதிட அடிப்படைப் பயிற்சியில், கிருஷ்ண மூர்த்தி பத்ததி என்ற ஜோதிட முறையும், நாடி ஜோதிட முறையான சாயா நாடியும் பயிற்சியாக அளிக்கப்படுகிறது.
 

நாடி ஜோதிட முறையான சாயா நாடி ஜோதிடப் பயிற்சி, ஆழ்ந்த ஜோதிட அறிவு இல்லாதவர்களுக்கும் எளிமையாகக் கற்று பலன் கூறுவதற்கு உதவுகிறது. அதிகமான சூட்சமங்கள் இல்லாமல் பலன் கூறும் தன்மையே சாயா நாடியின் சிறப்பம்சமாகும்.
 

சாயா நாடியைக் கற்றுக்கொள்ள, யூடியூப் இணைப்பை இங்கே தருகிறேன்:
 

சாயா நாடி ஜோதிடப் பயிற்சி - YouTube Link
 

பகுதி 1
பகுதி 2
பகுதி 3

மூன்று வீடியோக்களில் நீங்கள் முழுமையாக சாயா நாடியைக் கற்று, பலன் கூறும் திறனைப் பெற முடியும். அடிப்படை ஜோதிட சாஸ்திரத்தைக் கற்றுக்கொண்ட பிறகு, தனித்துவமான துறைகளில் ஜோதிடத்தைப் பயன்படுத்தும் வகையில் உயர் வகுப்புகள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் மருத்துவத் துறையைச் சார்ந்தவராக இருந்தால், அடிப்படை ஜோதிடம் படித்த பிறகு, மருத்துவ ஜோதிடத்தைக் கற்றுக்கொண்டு, உங்கள் துறையில் ஜோதிடத்தைப் பயன்படுத்தலாம்.


ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை வழங்கும் உயர் துறை சார்ந்த ஜோதிட வகுப்புகளின் தலைப்புகளை இங்கே தருகிறேன்

 

  1. மருத்துவ ஜோதிடம்
  2. முண்டேன் ஜோதிடம்
  3. பங்குசந்தை ஜோதிடம்
  4. ஆன்மீக ஜோதிடம்
  5. கட்டடக்கலை ஜோதிடம்
  6. கேரள ஜோதிடம்
  7. கல்வியியல் ஜோதிடம்
  8. முஹூர்த்த ஜோதிடம்
  9. திருமணப் பொருத்தம்
  10. பிரசன்ன ஜோதிடம்
  11. வேளாண்மை ஜோதிடம்
  12. தொழில் முறை ஜோதிடம்
  13. உயர்நிலை ஜோதிடம்

அடிப்படை ஜோதிடம் கற்ற பிறகு, உங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து, நேரடி அல்லது ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். பயிற்சி நடைபெறும் தகவல்களை எங்கள் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுவில் இணைந்து தெரிந்துகொள்ளலாம்.

 

ஜோதிட கூடல்
 

பயிற்சி முடிந்த பிறகும், ப்ரணவ பீடம் அறக்கட்டளை நடத்தும் ஞாயிறு ஜோதிட கூடல் என்ற ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் இந்த ஜோதிட கூடல், கற்று முடித்த மாணவர்களுக்கான கூட்டமாகும். இதில் ஜாதக ஆய்வு மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஞாயிறு ஜோதிட கூடல் என்பது முற்றிலும் இலவசமாக நடைபெறும் நிகழ்வாகும். இதில் எந்தவித இணைய கட்டணங்களும் இல்லை. இந்த ஜோதிட கூடல் நிகழ்வு கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


உயர் வகுப்புகள் மற்றும் அடிப்படை வகுப்புகளில் கலந்துகொள்ளவும், அது பற்றிய தகவல்களைப் பெறவும், டெலிகிராம் மூலம் எங்களுடன் இணையுங்கள்.

* டெலிகிராம் குழு *

ஏப்ரல் 2025 முதல் பல்வேறு ஜோதிடப் பயிற்சிகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளன. உங்களை இணைத்துக்கொள்வதன் மூலம், சிறந்த ஜோதிடப் பயிற்சி முறைகள் வழியாக, ஜோதிட சாஸ்திரத்தின் அனைத்து பரிமாணங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

Friday, November 22, 2024

மஹா கும்பமேளா 2025 - முன்பதிவு

 

மஹா கும்பமேளாவிற்கு வருகை தருவதற்கு பலர் விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள். முன்பு முன்பதிவு செய்த ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை சார்ந்தவர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து கும்பமேளா வருவதற்கு விருப்பம் தெரிவித்தார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் திருயாத்திரை குழுவினர் முயற்சிகள் எடுத்துவருகிறார்கள். 

மஹா கும்பமேளா யாத்திரைக்கு வருவதற்கு விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தகவல் புத்தகத்தை படித்து உங்களின் விருப்பமான நாட்களை தேர்வு செய்யவும். மேலும் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடக்க உள்ளதால் அதன்படி உங்களின் பயணத்தை தேர்வு செய்யவும். 

மேலும் தகவல் வேண்டும் என்றால் கையேட்டில் கொடுக்கப்பட்ட 

தத்த நாத் 98401 87486 | தாரா நாத் 98407 48890 ஆகியோரை தொடர்புகொள்ளவும்.


கும்பமேளா 2025 கையேடு 

 மஹா கும்பமேளா உங்களை ஆன்மீகத்துடன் வரவேற்கிறது.

Thursday, October 31, 2024

மஹா கும்பமேளா 2025 - வருக வருக என வரவேற்கிறோம்

ஆன்மீகப் பெருநிகழ்வான மஹா கும்பமேளாவிற்கு அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம். பல பகுதிகளாக கும்பமேளா என்ற நிகழ்வின் முக்கியத்துவத்தைப்  பற்றித் தெரிந்துகொண்டோம். 

ஆதிநாதரின் அருளுடன் கும்பமேளாவில் உங்களை இணைத்துக்கொண்டு வாழ்வின் பெரும் உன்னதமான அனுபவங்களைப் பெறுவதற்கு தயாராகி விட்டீர்களா?

நடக்க உள்ள மஹா கும்பமேளாவைப் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். 

உத்ராயண கால ஆரம்பம் என்று கூறப்படும் ஜனவரி 13ஆம் தேதி 2025ஆம் ஆண்டில் மஹா கும்பமேளா தொடங்குகிறது. 26 பிப்ரவரி 2025ல் நிறைவு பெறுகிறது. 

மஹா கும்பமேளா 45 நாட்கள் நடைபெறும் நிகழ்வாகும். இவற்றில் முக்கியமான புனித ஸ்நான நாட்கள் எது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மஹா கும்பமேளா காலகட்டத்தில் வரும் பெளர்ணமி மற்றும் அமாவாசை நாட்கள் மிகவும் முக்கியமான ஸ்நான நாட்களாகும். இது தவிர பஞ்சமி, சப்தமி, ஏகாதசி ஆகிய நாட்கள் மிக முக்கியமானவை.

ஜனவரி 13 - தை பெளர்ணமி

ஜனவரி 14 - மகர சங்கராந்தி - தை 1 

ஜனவரி 29 - அமாவாசை (தை அமாவாசை)

பிப்ரவரி 3 - வசந்த பஞ்சமி

பிப்ரவரி 4 - சப்தமி

பிப்ரவரி 12 - மாசி பெளர்ணமி

புனித ஸ்நான நாட்கள் எப்பொழுதும் கூட்டம் மிகுந்த நாட்கள். 2013ஆம் ஆண்டு அமாவாசை ஸ்நானத்திற்கு ஆறு கோடி மக்கள் ஒரே நேரத்தில் குழுமி இருந்தார்கள் என புள்ளிவிபரம் கூறுகிறது. புனித ஸ்நான காலத்தையும் பிற நாட்களையும் நமது வசதிக்கு ஏற்பத் திட்டமிடுவது நல்லது.

கும்பமேளா காலத்தில் கங்கை-யமுனை -சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் சங்கமத்தில் கூடாரம் அமைத்து அனைவரும் தங்குவார்கள். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் என்பதால் நதிகளில் நீர் ஓட்டம் குறைவாக இருக்கும். நீர் குறைந்த ஆற்று மணலில் தற்காலிகக் கூடாரம் அமைத்துத் தங்கும் வசதிகள் செய்யப்படும்.

இந்திய ராணுவத்தின் உதவியுடன் தற்காலிக சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டப்படும். இத்தகைய தற்காலிக வசதிகள் குறைந்த பட்சம் பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செய்யப்படும். தற்சமயம் உத்தரபிரதேச அரசு பல்வேறு நவீன வசதிகளைச் செய்துவருகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அர்த்த கும்பமேளாவில் அதிநவீன கழிப்பிட வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. அதனால் 2025 மஹா கும்பமேளாவிலும் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும்.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை தனிமனித ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ப்ரணவ பீடம், வரும் மஹா கும்பமேளா நிகழ்விலும் நீங்கள் கலந்து கொள்ளும் வகையில் ஒருங்கிணைக்கிறது. 

புறச்சூழலில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் அக உலகில் ஆன்மீக உயர்நிலைக்கு உயர்த்தும் நோக்கிலும் ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை மஹா கும்பமேளா பயணத்தை ஒருங்கிணைக்க இருக்கிறது. முக்கிய ஸ்நான தினங்களில் சிறப்பாக நீராட வழிகாட்டுகிறது. மேலும் ஜபம், தியானம் மற்றும் ஆன்மீக வாழ்வியல் முறையில் தங்குமிடம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற பூர்ண கும்பமேளாவிலும் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற அர்த்த கும்பமேளாவிலும் சிறப்பாக ஒருங்கிணைத்த அனுபவம் கொண்ட ப்ரணவ பீடம் 2025ஆம் ஆண்டுக்கான செயல் திட்டங்களில் தயாராக உள்ளது.

மஹா கும்பமேளாவில் என்ன நிகழ்ச்சிகள் நடைபெறும்?

ப்ரணவ பீடம் அறக்கட்டளையின் கூடாரத்தில் தினமும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். யாகங்கள், பஜன், தியானம் மற்றும் சத்சங்கம் ஆகியவை நடைபெறும். அந்த சூழலில் ஸ்வாமி ஓம்கார் அவர்களுடன் கலந்து கொண்டு நீங்கள் நாத பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ள ஆன்மீக வாழ்வியல் முறையை உணரலாம். 

மஹா வித்யா என்கிற பத்து சக்திகளின் உபாசனையை ஆன்மீக உச்சம் கொண்ட சூழலில் தீக்‌ஷையாக பெறலாம். ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்குபவர்கள் மந்திர தீக்‌ஷை பெற்று உயர் ஆற்றல் கொண்ட மஹா கும்பமேளாவில் இருந்து தங்களது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கலாம். 

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் வழிகாட்டுதலில் பல்வேறு தீக்‌ஷைகள் மற்றும் ஆன்மீக அனுபவங்களைப் பெற்று இறையாற்றலை உணரும் நோக்கில் மஹா கும்பமேளா 2025 செயல்பட இருக்கிறது.

ஆன்மீக குருவின் அனுக்கம், மஹா கும்பமேளா சூழல் போன்ற பல்வேறு விஷயங்கள் மீண்டும் இது போன்று  நடக்க வாய்ப்பு உண்டா? இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். 

மஹா கும்பமேளாவில் என்ன வசதிகள் உண்டு?

அந்தச் சூழலில் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் தங்கி மஹா கும்பமேளாவை உணரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

அடிப்படை தங்கும் வசதிகள், உணவு மற்றும் ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதற்கான சூழல் அமைக்கப்பட உள்ளது. எளிமையான கட்டணத்தில் தங்கும் வசதிகளும் உணவும் அளிக்கப்படுகிறது. 

ஆயிரக்காணக்கான ஆன்மீக நபர்கள் கூடும் இடம் என்பதால் அங்கே பல தர்ம காரியங்கள் செய்வதற்கும் அன்னதானம் செய்வதற்கும் நமது ஆன்மீகக் குழு தயராக உள்ளன.

நீங்களும் நம்மில் ஒருவராக இணைந்து தன்னார்வத் தொண்டு செய்யலாம். 

மஹா கும்பமேளாவில் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?

முன்பதிவு செய்து தேர்ந்து எடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ப்ரணவ பீடம் ஒருங்கிணைக்கும் சூழலில் செயல்பட முடியும். இத்தகைய ஏற்பாடுகள் அதிக கூட்டத்தைத் தவிர்ப்பதற்கும் சுற்றுலா நோக்கில் வருபவர்களுக்கான இடம் இது அல்ல என்பதாலும் அவசியமாகிறது. 

கீழ்கண்ட கூகுள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் நவம்பர் மாத இறுதிக்குள் உங்களுக்கு தனித்தகவலில் நீங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளீர்களா என்பதை தெரியப்படுத்துவோம்.

விண்ணப்ப படிவம் - https://forms.gle/enjC2KPQTXpgvp1h6

மேலும் 2025 மஹா கும்பமேளாவில் இணைவது தொடர்பான கேள்விகள் உங்களுக்கு இருந்தால் கேளுங்கள். பதில் அளிக்கத் தயாராக உள்ளோம். கும்பமேளாவில் பங்கு பெறுவது பற்றிய தொலைபேசி தொடர்புக்கு

9944 1 333 55, 98401 87486 , 94435 38751, 98408 00704

ஆதி நாதரின் அருள் கடலில் சிறு மீனாக நீந்திக் களிக்க அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்.


Tuesday, July 30, 2024

கும்பமேளா 2025

சரஸ்வதி நதியின் கலாச்சாரத்தில் இயல்பான மனிதர்களைவிட உயர் சக்தி கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வந்தனர். உணவு, உடை மற்றும் வாழ்வியல் முறை ஆகியவற்றில் அவர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு இருந்தது. அவர்களிக்கு மெய்ஞானம் சார்ந்த அறிவு எப்படி உருவானது என்ற கேள்விக்கு ஆதிநாத் என்பதே பதிலாக இருக்கும்.

உலகம் உருபெற்ற காலம் தொட்டு மனித இனத்தின் மேம்பட்ட பரிமாணத்திற்காக இறையாற்றல் உருபெற்று வந்து வழி நடத்துகிறது. அடிப்படை மனித நிலையில் இருந்து உயர்மனித நிலைக்கு முன்னேற்றம் செய்ய குருவாக இருந்து பல்வேறு தூண்டுதல்களை செய்கிறது.

வேத காலத்தில் சரஸ்வதி நதியின் கரையில் வாழ்ந்து வந்தவர்களை ஆன்மீகத்தில் செலுத்தி மனித நிலையிலிருந்து உயர் மனித நிலைக்கு உயர்த்தினார் ஆதிநாத்.

இவர் யார் இவரின் பின்புலம் என்ன என்பது தெரியாது. முதலில் தோன்றியவர் என்பதால் ஆதிநாத் என அழைக்கப்பட்டார். இவருடன் இருந்த பிரதான சீடராக இருந்தவர் உமாநாத். எப்பொழுதும் உடன் இருப்பவர் என்பதால் உமா என அழைக்கப்பட்டார். இருவரும் இணைந்து பலர் ஆன்மீக விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தனர்.

இருவரும் உருவாக்கிய பாரம்பரியம் நாத பாரம்பரியம் எனப்பட்டது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒன்றிணைந்து இவர்களின் வழிகாட்டுதலில் ஆன்மீக உயர்நிலையை அடைந்தார்கள். சன்யாசிகள், துறவிகள் என்ற கருத்தியல்கள் அப்பொழுது இல்லை. குடும்ப அங்கத்தினர்கள் என்றே அவர்கள் அழைக்கப்பட்டனர்.

குழந்தை முதல் முதியவர் வரை குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஆன்மீக நிலையில் இருந்தனர். விழிப்புணர்வுடன் வாழ்ந்த குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் முழுமையான விழிப்புணர்வுடனேயே பிறந்தன. சிறப்பான குடும்பங்கள் ஒன்றிணைந்து வேதகால வாழ்க்கையை வாழ்ந்தனர். குல வாழ்வியல் முறை என இதற்கு பெயர்.

உமாநாத் வழிகாட்டுதலில் ஒளி பொருந்திய பரிமாணத்திற்கு பலர் சென்றார்கள். உலகில் வாழ்ந்தாலும் உடல் கடந்து ஆற்றல் நிலையில் வாழும் பரிமாணத்தை பலருக்கு உமாநாத் அளித்தார்.

குலாதிபதி என குலத்திற்கு அதிபதியான ஆதிநாத் வேத அறிவை அனைவருக்கும் கிடைக்கச்செய்ய பைரவ நிலையை பெற்று உமாநாதரை பைரவியாக்கி அனைவரையும் உச்சம் பெற்ற விழிப்புணர்வில் வைத்திருந்தார்கள்.

மனித குலம் ஆணவத்தால் உரைந்து போகும் தருணத்தில் அவர்கள் உண்மையை உணரச்செய்ய ஓவ்வொரு காலத்திலும் ஆதிநாத் மனித உருவில் வருகிறார். உமாநாத் உடன் இருக்கிறார் என்பது நாத பாரம்பரியத்தின் வரலாறு. காலத்திற்கு ஏற்ப ஆதிநாத் என்ற அடையாளமும் பெயரும் மாறுமே தவிர அவரின் இறை நோக்கம் மாற்றம் அடையாது.

இமய மலையில் துவங்கி தற்காலத்தில் இமாச்சல பிரதேசம் என அழைக்கப்படும் இடத்தில் அதிகரித்து, ராஜஸ்தானின் கிழக்கில் பிரவாகமாகி விரிவடைந்து குஜராத்தில் கடலில் கலந்தது சரஸ்வதி நதி.

குல மார்க்கம் என்ற தன்மையில் அனைவரும் சரஸ்வதி நதி நாகரீகத்தில் இணைந்து செயல்பட்டு சரஸ்வதி நதியை ஆன்மீக கருவியாக்கினார்கள். ஆன்மீக உச்ச நிலையில் அங்கே வாழ்ந்த அனைவரும் வேறு ஒரு பரிமாணத்திற்கு பைரவி தன்மையில் இருந்த உமாநாத் மூலம் மாற்றம் அடையும் தருணம் ஏற்பட்டது.

அப்பொழுது சரஸ்வதி நதி நாகரீகத்தில் வசித்த அனைவரும் உயர் பரிமாணத்திற்கு மாறும் பொழுது சரஸ்வதி நதியும் அந்த பரிமாணத்திற்கு சென்றது. நமது உலகில் இருந்து சரஸ்வதி நதி காணாமல் போனது. அதன் அருகே இருந்த சரஸ்வதி நதி நாகரீகத்தின் எஞ்சிய தன்மைகள் இடப்பெயர்ச்சி அடைந்து காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் மகாராஷ்ட்ரம் வரை விரிவடைந்து கன்யாகுமாரி வரை புகழ் பெற்றது. அத்தகைய நாகரீகம் நாத பாரம்பரியம் என அழைக்கப்பட்டது.

உலக கால சக்கரத்திற்கும் உயர் பரிமாண சக்கரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிய வேண்டும்.  பைரவர் மற்றும் பைரவி இருக்கும் உயர் பரிமாணத்தில் ஒரு நாள் என்பது உலகில் நமக்கு பன்னிரெண்டு வருடங்களுக்கு சமம் என கணக்கிடலாம்.



ஆதிநாதரும் உமாநாதரும் தங்களின் இருப்பை தினமும் நமக்கு உணர்த்தினாலும் நம்மால் அதை பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உணர முடியும். அத்தகைய காலத்தையே மஹா கும்பமேளா என்கிறோம்.

மஹா கும்பமேளா நடக்கும் தருணத்தில் உயர் பரிமாண நிலையில் இருந்து சரஸ்வதி நதி நமது பரிமாணத்தில் வெளிப்படுகிறது. சரஸ்வதி நதி நாகரீகத்தை பிரதிபலிக்கும் குல வாழ்வியல் முறை மற்றும் சரஸ்வதி நதி ஆகியவை மஹா கும்பமேளாவில் வெளிப்படுகிறது. சரஸ்வதி நதி அப்பரிமாணத்தின் ஆன்மீக ஊற்றாக பெருகி நம் பரிமாணத்தில் நீராக காட்சி அளிக்கிறது. குரு, ஆன்மீக சதனா, சாஸ்திரங்கள் என பல மெய்யறிவை நதியாக கும்பமேளாவில் பெருகச்செய்கிறது.

ஆதிநாதரும் உமா நாதரும் தங்களின் ஆன்மீக ஆற்றல் வடிவமாக ஒவ்வொரு நாளும் இணைகிறார்கள். நமக்கு மஹா கும்பமேளா பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது. உயர் பரிமாணத்தில் தினமும் நடக்கும் நிகழ்வாக மஹா கும்பமேளா இருக்கிறது.

ஆதிநாதரின் பரிமாணத்தில் தினமும் அதிகாலை நடைபெறும் முதல் நிகழ்வு மஹா கும்பமேளாவாகும். அப்பரிமாணத்தின் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வே பிற கும்பமேளாவாகும்.

இரு பரிமாணங்கள் எனப்படும் ஆற்றல் உலகுக்கும் பூமி எனும் நம் உலகுக்கும் இருக்கும் தொடர்பை முழுமையாக புரிந்துகொண்டால் மட்டுமே கும்பமேளாவை புரிந்துகொள்ள முடியும். இல்லை எனில் மேற்கத்திய கல்வியை படித்தவர்கள் அழுக்கானவர்கள் கூட்டமாக கூடும் நிகழ்வாக மட்டுமே பார்ப்பார்கள்.


 

உயர்பரிமாணம் அருவி போல இறங்கி பிரவாகமாக செயல்படும் மஹா கும்பமேளா என்ற நிகழ்வுக்கு ஞானிகளும், முனிவர்களும், யோகிகளும் ஏன் ஓடோடி வருகிறார்கள் என புரிகிறதா? இது சாதாரண திருவிழாவிற்கு கூடும் கூட்டமல்ல என்பதையும் உணர வேண்டும்.

பேராற்றல் இணையும் இத்தகைய இடத்திற்கு கோவில் அவசியமா? சடங்குகள் அவசியமா என கேள்வியை நாமே கேட்டு பதில் அளிக்கலாம்.


ஆதிநாத ஆற்றலும் நாத பாரம்பரியத்தின் விழிப்புணர்வும் பொங்கி பெருகும் மஹா கும்பமேளாவில் கலந்துகொள்ள நீங்கள் தயாரா?

ஆம் என்றால் அதற்கான தகவல்களை அளிக்கிறேன்.

(தொடரும்)

Tuesday, July 23, 2024

கும்பமேளா 2025

உலகில் நடக்கும் பெரும் ஆன்மீக கொண்டாட்டம் பற்றி பல்வேறு பரிமாணங்களில் பார்த்து வருகிறோம். புராணங்கள், ஜோதிடம் மற்றும் யோக சாஸ்திரத்தின் வாயிலாக ஓரளவு புரிந்துகொள்ள முடியும். கும்பமேளாவின் வரலாறு பற்றி நாம் தெரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

மஹா கும்பமேளாவின் விதை யார் போட்டது? அதன் துவக்கம் என்ன ? அதன் பின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் மேலோட்டமான வரலாறு போதாது.

வரலாறு தெரிந்துகொண்டாலும் அது நமக்கு முற்றிலும் புரியாது…!

ஒரு கிராமத்தில் அல்லது நதிக்கரை ஓரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்றால் அங்கே ஒரு கோவிலோ அல்லது கலாச்சாரமோ இருக்க வேண்டும். உதாரணமாக ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரம் சென்றால் மக்கள் கூட்டமாக நீராடுகிறார்கள். அங்கே கோவிலும், சனாதன தர்மத்தின் கலாச்சாரமான நீர்த்தார் கடன் செலுத்துவதையும் காணலாம். ஆடி அமாவாசைக்கு இராமேஸ்வரத்தில் ஏன் கூட்டம் எனக்கேட்டால் எளிமையாக பதில் அளித்துவிடலாம்

பெளர்ணமிக்கு ஏன் திருவண்ணாமலையில் கூட்டம் வருகிறது? சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாருக்கு ஏன் கூட்டம் வருகிறது என கேட்டு வரலாறு புரிந்துகொள்ள முயற்சித்தால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும்

கோவில் இல்லாத இடத்தில், தங்கும் வசதிகளோ, கலாச்சார பின்னனிகளோ இல்லாத நதிகள் மட்டும் இருக்கும் மணல் வெளியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயிரக்கணக்காணோர் கூடுகிறார்கள் என்றால் எது அவர்களை ஒருங்கிணைத்தது?  

குறிப்பிட்ட மதம் அல்லது இறைவழிபாடு செய்பவர்கள் தான் செல்வார்களா எனப்பார்த்தால் சைவம் மற்றும் வைணவம் துவங்கி அனைத்து கலாச்சாரத்தினரும் பாகுபாடு இன்றி கூடுகிறார்கள். இது என்ன வகையான கூட்டம்? எதற்காக கூடுகிறது? இந்த இடம் சைவர்களுக்கு சிவன் கோவிலோ, வைணவர்களுக்கு திவ்ய தேசமோ இல்லை. சாக்தர்களுக்கு அங்கே சக்திபீடமும் கிடையாது. ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களின் குருமார்களுக்கும் திரிவேணிக்கும் சம்பந்தம் இல்லை

பல வெளிநாட்டு வரலாறு மற்றும் மானுடவியல் அறிஞர்கள் குழப்பத்தில் கொண்டு சேர்த்தது இத்தகைய கேள்வி. ஏன் இவர்கள் கூடுகிறார்கள். வேற்றுமை கொண்ட கொள்கை உடையவர்கள் எப்படி ஒன்றாக நீராடி இரண்டு மாதங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக கொண்டாட முடிகிறது? பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூடுவதற்கு கூட கிரகங்களின் அமைப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் திரிவேணி சங்கமத்திற்கு எது இவர்களை ஈர்க்கிறது? முடிவில்லா விடையின் முடிவு தெரிந்துகொள்ள நாம் நமது உண்மையான வரலாறை தெரிந்துகொள்ள வேண்டும்.

கும்பமேளாவின் துவக்கப்புள்ளி உத்திரப்பிரதேசத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனும் இடத்தில் துவங்கவில்லை. இந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை.

 சரஸ்வதி நதி நாகரீகம்

இந்தியாவின் அகழ்வாராய்ச்சி வரலாறுகள் இந்திய பாரம்பரியத்தை பற்றி உணராத வெளிநாட்டினரால் உருவாக்கப்பட்டது. மேலும் சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய குறிப்புகள் அரசியல் சார்ந்து உருவாக்கப்பட்டது. இத்தகைய அகழ்வாராய்ச்சி வரலாற்றுக்கிடையே நம்மிடம் இருந்து விட்டுபோன வரலாறு சரஸ்வதி நாகரீகம் என்பதாகும்.

சரஸ்வதி நதி பள்ளத்தாக்கில் முதன் முதலில் வேதகால வாழ்க்கை முறை துவங்கியது. தற்சமயம் ராஜஸ்தான் என்ற மாநிலத்தில் இருக்கும் பெரும் பாலைவனம் ஒருகாலத்தில் நீர் மிகுந்த ஆற்று படுகையாக இருந்தது. அங்கே ஆன்மீக ஆற்றலுடன் ஓடிக்கொண்டிருந்தாள் சரஸ்வதி.

ரிக் மற்றும் யஜூர் வேதங்களில் சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. சரஸ்வதி நதியின் கரையோரத்தில் மனித குலத்தில் மேன்மை பொருந்திய குழுவினர் வாழ்ந்து வந்தனர்.

அக்குழுவினரின் வேளாண்மை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவை உலகில் வாழ்ந்த மற்றும் தற்சமயம் வாழ்கின்ற மனிதர்களை விட மிகவும் மேம்பட்ட நிலையில் இருந்தது.

சரஸ்வதி பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் இல்லை. பாரத தேசத்தின் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்கள் இடப்பெயர்ச்சி அடைந்து அங்கே குழுவாக வாழ்ந்தார்கள்.

இக்குழுவினர்களாலேயே வேதம் மற்றும் சாஸ்திரங்கள் வலிமை பெற்று அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டது.

வேதம் என்பது ஒரு சொல் வார்த்தையான ஓம் என்ற சப்தத்தில் இருந்து வந்தது என்பதை போல இவர்கள் பல்வேறு பின்புலம் கொண்டவர்களானாலும் ஒரே வார்த்தையால் அடையாளப்படுத்தப்பட்டனர்.

நாதர்கள்….!

சரஸ்வதி நதியின் நாகரீகத்தில் செழிப்புடன் வாழ்ந்த நாதப் பாரம்பரிய மனித குழுவே நாதர்கள் என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் மேன்மையாக வாழ்ந்த இடம் இப்பொழுது பாலைவனமாக இருக்கிறது. அந்த சரஸ்வதி நதிக்கு என்ன ஆயிற்று? நாதர்கள் இப்பொழுது எங்கே?

 

 (தொடரும்)