Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 9, 2014

வாழ்த்தும் அதன் பின்புலமும்

                                                       


இரு மனிதர்கள் சமூகத்தில் சந்திக்கும் பொழுது பரஸ்பரம் வாழ்த்து சொல்லுக்கொள்வது இயல்பான ஒன்று. ஆனால் இந்த வாழ்த்தின் பின்புலங்களை யாரும் ஆய்வு செய்வதில்லை. ஒரு சமூகமோ அல்லது இயக்கமோ பரஸ்பரம் தங்களுக்குள் கூறும் வாழ்த்து செய்திகள் அவர்களுக்கு கிடைக்காத ஒன்றை பற்றியதாக இருக்கும் என்கிறது மனோதத்துவ ஆய்வு.

தற்காலத்தில் குட் மார்னிங் அல்லது குட் டே என உங்கள் மேல் அதிகாரிகளை பார்த்து நீங்கள் சொல்லுவது எனது நாளை கெடுத்துவிடாதே என்பதன் உள்கருத்தாகும். ஆனால் அதை நாம் வெளிப்படையாக சொல்ல முடியாதே? அது போல மதங்கள் சார்ந்தவர்களும் இயக்கங்கள் சார்ந்தவர்களும் தங்களுக்கு கிடைக்காததையும் தேவையானதையுமே பரஸ்பரம் வாழத்தாக பகிர்ந்து கொண்டார்கள்.

உதாரணமாக  நமக்கு தெரிந்த சில மதங்களையும் அதன் வாழ்த்துக்களையும் பார்ப்போம். பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுவதையே இங்கே நான் குறிப்பிடுகிறேன்.

கிருஸ்துவர்கள் “அசிர்வாதம்” (Bless you) என சொல்லுவதுண்டு. ஏசு கிருஸ்து தனது இறுதி நாளில் ஏன் என்னை கைவிட்டீர் என கேட்டதன் காரணமாகவும், அனைவரும் ஆண்டவரின் ஆசி உண்டு என்பதற்காகவும் இப்படி வாழ்த்துகிறார்கள். 

இஸ்லாம் உருவான சூழல் போர் மிகு சூழல் என்பதால் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என வாழ்த்திக்கொண்டார்கள்.

இந்திய மதங்களான சைவமும், வைணவமும்  தென்னிந்தியாவில் ஏற்படும் பொழுது பொருளாதார பின்னடைவு என்பது மக்களின் தன்மையில் இருந்ததால் ‘நாராயணா’ என்றும் ’சிவாய நம’ என்றும் கூறிக்கொண்டார்கள். இதற்கு எல்லா வளமும் பெற்றுக என அர்த்தம் உண்டு.

நமஸ்கார், நமஸ்தே என்பது வடமொழியில் கூறும் வாழ்த்துக்கள். இதற்கு உண்மைக்கு(ஆன்மாவுக்கு) வணக்கம் என அர்த்தம். செல்வ செழிப்பாலும் சுக போகத்தாலும் இந்தியா திளைத்த காலத்தில், உனக்கு ஆன்மா என்ற ஒன்று உண்டு அதை உணரு என வாழ்த்தினார்கள். வேத வரிகளான ருத்ரத்தில் கூட ‘நமஸ்து அஸ்து பகவன்” என ஆன்ம ரூபமாக இருக்கும் இறைவனை வணங்குகிறேன் என்ற வரிகள் உண்டு.

ஜெர்மனியின் நாஜிக்கள் ‘ஹெயில் ஹிட்லர்’ என தங்கள் தலைவர் பெயரை கூறிக் கொண்டார்கள். தங்கள் தலைவனை யாரும் வாழ்த்தவில்லை என்பதே இவர்களின் வாழ்த்தாக வெளிப்பட்டது. இந்த வாழ்த்தை தற்சமய ஜெர்மனியில் சொன்னால் 4 வருட கடுங்காவல் தண்டனை கிடைக்கும். அத்தனை சக்தி வாய்ந்த வாழ்த்து இது. 2 மில்லியன் மனிதர்களை காவு வாங்கிய வாழ்த்து. 

எனக்கு தெரிந்த ஒரு ஆசிரமத்தில் பரஸ்பரம் பார்க்கும் பொழுது “நித்யானந்தம்” என்பார்கள். அவர்களுக்கு நித்யமும் ஆனந்தம் கிடைத்ததா என தெரியவில்லை...!

இப்படியாக தங்களுக்கு இல்லாத ஒன்று அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கமே வாழ்த்தாக இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறேன். 

எனக்கு ஒரு வழக்கம் உண்டு. யாரையாவது பார்க்கும் பொழுது ஷம்போ மஹாதேவா என  வாழ்த்துவேன். இதற்கு மேலான இறை நிலைக்கு வணக்கம் என்று அர்த்தம்.  ஷம்போ என்பது வெற்று கூச்சல் அதற்கு அர்த்தம் இல்லை. பாமரத்தனமாக சொல்லவேண்டுமானால் இறைவனுக்கு ஓ போடு என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அப்படி சொல்வதனால் நமக்குள் ஏற்படும் ஸ்வாச மாற்றம் நமக்கு அறிவு தெளிவை ஏற்படுத்துகிறது. இது என் நம்பிக்கை மட்டுமே.

இந்த வாழ்த்து செய்த வேடிக்கையை கூறுகிறேன் கேளுங்கள். நான் வெளிநாடு செல்லும் நேரத்தில் எனது தொலைபேசியை தானியங்கி பதில் அளிக்கும் நிலையில் (auto voice reply) வைத்துவிட்டு செல்லுவேன். அப்பொழுது யாராவது அழைத்தால் “ஷம்போ மஹாதேவா நான் இந்த நாட்டுக்கு சென்று இருப்பதால் இரண்டு வாரம் கழித்து அழைக்கவும்” என குரல் ஒலிக்கும். அது நானே பேசி பதிவு செய்தது தான். 

இந்தியாவில் சிலருக்கு இந்த விஷயம் புதிது என்பதால் நான் ஊருக்கு வந்தவுடன் பேசும் பொழுது, “ நான் ரெண்டு வாரம் முன்னாடி கூப்பிடிருந்தேன், உங்க அஸிஸ்டெண்ட் மஹாதேவன் ஒருத்தர் தான் பேசினார்” என்பார்கள். அந்த நேரத்தில் எப்படி சமாளிப்பது என குழம்பிப்போவேன். நானும் எத்தனை நாள் தான் சிரிக்காத மாதிரியே நடிக்கிறது? :)

நீங்கள் கூறும் வாழ்த்துக்களை உணர்ந்து கூறுங்கள் என்பதற்கே இதை இங்கே பதிவு செய்கிறேன். இயந்திரத்தனமாக வாழ்த்துவதால் பயனில்லை. தேவையை வாழ்த்தாக வைப்பதைவிட இறை வணக்கத்தை வாழ்த்தாக வையுங்கள். மதம் கடந்து இயக்கங்கள் கடந்து இறைவனை வணங்கும் வாழ்த்தாக இது இருக்கட்டும்.

ஓம் தத் சத்

1 கருத்துக்கள்:

Unknown said...

ஷாம்போ என்பது (நம்மிருவருக்கும் மிகவும் பிடித்த) காசியில் பூஜா சமயத்தில் பூஜை சாமான்களை எடுத்துச்செல்லும் பொழுது வாசிக்கப்படும் துந்துபி போன்றொரு வாத்தியமென கேள்விப்பட்டிருக்கின்றேன்.