Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, January 6, 2013

கும்பமேளா - 9


செய்வதறியாது திகைத்தான் அப்பு. சோமுவை காணாத பதட்டம் அதிகரித்தது. தன்னை சுற்றி கூடாரங்களும் கூட்டம் கூட்டமாக மக்கள் இருப்பதும் கண்டவுடன் ஒருவித இறுக்கம் பரவியது.

சங்கம் பாபாவை நோக்கி, “யார் நீங்க? நான் எங்க இருக்கேன்? சோமு எங்க?” என கேட்க...

சங்கம் பாபா அருகில் வந்து அப்புவின் சட்டையை கொத்தாக பற்றி தரதரவென இழுத்துக்கொண்டு அருகே இருக்கும் கூடாரத்தினுள் போட்டார். தடுமாறி விழுந்தவன் எழுந்து சுற்றும் முற்றும் பார்க்க..அங்கே ஒல்லியான தேகமும் பெரிய வயிறும் கொண்ட ஒருவர் அமர்ந்திருந்தார்.

அந்த கூடாரத்தில் வேறு யாரும் இல்லை. நிர்வாண நிலையில் இருந்தாலும் பெரிய தொப்பை அவரின் தொடைபகுதி வரை மறைத்திருந்தது. கையில் பெரிய தடி ஒன்று வைத்திருந்தார். அதன் முனைப்பகுதியில் கொண்டை போன்ற அமைப்பு பள்ளி ஆசிரியரின் பிரம்பை நினைவூட்டியது.

இவற்றையெல்லாம் பார்த்த அப்பு..குழம்பிய நிலையில் இருந்தான். உடலில் நாமம் வரையபட்டு நிர்வாணமாக இருந்தவரின் கண்கள் மட்டும் அப்புவை விட்டு விலக வில்லை. சிறிது நேரத்திற்கு பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம் கேட்டான், “என் பையன் சோமு எங்கே?”

“பட்”

கம்பில் இருந்த கொண்டையால் அப்புவின் நடு உச்சியில் அடி விழுந்தது.

“எதுக்கு என்னை அடிக்கிறீங்க? நான் சோமு எங்கேனு தானே கேட்டேன்?” குரல் கம்மிய நிலையில் அப்பு பரிதாபமாக கேட்டான்.

“பட்” மீண்டும் அடிவிழுந்தது.

தன்னந்தனியாக மாட்டிக்கொண்ட சுயபச்சாதாபம் மேலிட அப்புவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

சில நிமிடம் மெளனத்தில் கரைந்தது. விடைதெரியாமல் எப்படி இருக்க முடியும்? அடி வாங்க உடலை தயார்படுத்திக்கொண்டு “ சோமு எங்கே?”  என கேட்டான்.

நிர்வாண சுவாமியின் முகத்தில் சிறிய புன்னகை பூத்தது. 

“அப்பு....நான், எனது என யார் என்னிடம் கேட்டாலும் அவர்களுக்கு அடியே பரிசு. அடி உனக்கு விழவில்லை. உன் அகம்பாவத்திற்கே விழுந்தது. என்ன குழப்பம் உனக்கு? என்னை பார்த்தால் சோமுவாக தெரியவில்லையா?” என கேட்டுவிட்டு...

நிர்வாண ஸ்வாமி தன்னை சோமுவாகவும். சங்கம் பாபாவாகவும், மாறிமாறி காண்பித்தார். கடைசியில் மீண்டும் சோமுவாக மாறி அப்புவின் கைகளை பிடித்தார். அப்புவின் உடல் சிலிர்த்தது. 

அப்பு கண்ணீர் மல்க சோம் நாத் குருஜியின் கால்களில் விழுந்தான். மனது லேசாகி ஒருவிதமாக ஆகாயத்தில் பறப்பதை போல இருந்தது.

 “குருஜி, ஏன் இத்தனை உருவங்கள்? ஏன் என்னை இப்படி குழப்புகிறீர்கள்?” என்றான் அப்பு.

“அப்பு, நீங்க என்னை குழந்தையாக வளர்த்தாலும், என்னால் உருவான குழந்தை என்ற ஆணவம் உங்களுக்கு இருந்தது. உங்களை இங்கே அழைத்து வந்தவனே நான் தான் என்றாலும் என்னை காணவில்லை என தேடும் தகப்பனாக நீங்க இருந்தீங்க..! அதனாலேயே எனது பிற உருவங்களையும் உங்களுக்கு காட்ட வேண்டி இருந்தது..!”

அப்பு, சோம் நாத் குருஜியை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

“குருஜி, உங்களுடன் இருப்பதே எனக்கு போதுமானதாக இருந்தாலும்,   என் மனது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அக்கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் என் அறிவு அமைதி அடையும் என நினைக்கிறேன். கேட்கவா?”

“தாராளமாக கேளுங்க” என பச்சை கொடி காட்டினார் குருஜி...!

“முன்னாடியே கேட்ட கேள்விதான். என் மனைவி வந்ததால நீங்க பதில் சொல்ல முடியாம போச்சு.. மீண்டும் கேட்கறேன்...பல ஆன்மீக குழுக்கள் மற்றும் மதங்கள் இருந்தாலும் அவங்க எல்லாம் ஏன் ஒன்று கூடனும்? இந்த உலக அதிசயமா மக்கள் கூடுவது எப்போ ஆரம்பிச்சுது?” என மீண்டும் விடுபட்ட கேள்வியை கேட்டான் அப்பு.

கேள்வியை உள்வாங்கி கூடாரம் விட்டு வெளியே நடக்கத்துவங்கினார் குருஜி. அவருடன் நடந்தவண்ணம் பின் தொடர்ந்தான் அப்பு.

மக்கள் கூட்டமாக நடந்துகொண்டும் அமர்ந்துகொண்டும்  கூடாரங்களில் பஜனை செய்தவண்ணமும் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக இருந்தது...

கங்கையும் யமுனையும் ப்ரவாகமாக ஓடி தங்களை ஒன்றோடு ஒன்றாக கலந்துகொண்டிருந்தன. ஆற்றின் கரையில் பிரம்மாண்டமான கோட்டை ஒன்று இருந்தது. அதன் அருகே மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் அங்கே சென்று அமர்ந்தார் அப்பு..

“உங்க கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் முதலில் நாத சம்பிரதாயத்தை பற்றி சொல்லியாக வேண்டும். உலகத்தில தொன்மையான ஆன்மீக பாதைகளில் பழமையானது நாத வழி. இறைவன் முதலில் மனித உருவில் குருவாக தோற்றம் அளித்து மனிதர்களை வழிநடத்த துவங்கினார். அவரின் ஆன்மீக வழிகாட்டுதலை பின்பற்றி மோக்‌ஷத்தை அடைந்தார்கள். ப்ரணவம் என்ற ஓம் என்ற சப்தம் நாதம் என அழைக்கப்படுகிறது. இதுவே மனித உருவில் வந்து அறியாமையை களைந்து மோக்‌ஷத்தை அளித்தது. 

இவர்களை நாதர்களின் வழி அல்லது நாத சம்பிரதாயம் என அழைக்கப்படுகிறது.  முதன் முதலில் நாதம் உரு பெற்று இறை ரூபமாக வந்த நிலைக்கு பெயரிடப்படவில்லை. அதனால் அவ்வாறு வந்த முதல் குருவை ஆதிநாதர்(ஆதிநாத்) என்கிறார்கள். நாதம் வழி வந்த அனைவரின் பெயரும் நாத் என முடியும். இது தலைவன் என்ற பொருளில் நாதன் என்றும் நாதம் என்ற ஒலி வழி சார்ந்தவர்கள் என்றும் இரு பொருள் கொண்டு அழைக்கப்படுகிறது. தொன்மையான நாதர்கள் வழிக்கு ஆசிரமம், மடம் சார்ந்த முறைகள் கிடையாது. 

இவர்கள் இயற்கையானவர்கள். இறையாற்றலை முழுமையாக உணர்ந்து அந்த ஆற்றலை அனைவரையும் உணரச்செய்து இறையின்பத்தில் ஆழ்த்துவதே இவர்களின் பணி. ஆதிநாத் முதல் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப இறைவன் நாத வடிவம் எடுத்துள்ளான். இந்தியாவில் மட்டுமல்ல உலகின் அனைத்து பகுதிகளிலும் நாதர்கள் இறைவனால் அருளப்பட்டுள்ளனர். 

பலர் இறைதூதர்களாகவும் பலர் ஆன்மீகவாதியாகவும் அறியப்பட்டுள்ளனர். இறைவனின் சங்கல்ப்பத்தால் அவதரிக்கும் நாதர்கள் தங்களின் உருவத்தை சக்தி மிகுந்த நிலைக்கு உயர்த்தி சமாதி அடைவார்கள். அவ்வாறு அவர்கள் சமாதி அடைந்த அல்லது உருவான இடங்கள் தான் நம் நாட்டில் பல்வேறு இடங்களில் கோவில்களாக உள்ளது. 

கேதார் நாத், முக்தி நாத், பத்ரி நாத், விஸ்வநாத், ஜகன்னாத் என இறைவன் நாத ரூபமாக வந்து நிலை பெற்ற இடங்களின் பெயர்கள் இந்தியா முழுவதும் சிதறிக்கிடக்கின்றது. நாத சம்ப்ரதாயத்தை சார்ந்தவர்கள் இயல்பான நிலையில் இருப்பார்கள். சப்த ரிஷிகள் என கூறப்படும் ஏழு ஆன்மீகவாதிகள் நாத சம்ப்ரதாயம் கொண்டவர்களே ஆகும். இவர்கள் அனைத்து மக்களின் நிலையிலும் இருப்பார்கள். சராசரி மக்களின் வாழ்க்கையின் உள்ளே ஊடுருவி அவர்களை மோக்‌ஷத்தை நோக்கி அனுப்புவார்கள். ஆதிசங்கரர் காலத்திற்கு பிறகே சில நாத சம்பிரதாயம் கொண்டவர்கள் ஆசிரமங்களை வைக்க துவங்கினார்கள். அதற்கு முன்பு வரை நாத சம்ப்ரதாயம் கொண்டவர்களுக்கு என ஓர் இடம் இல்லை. மக்களுடன் மக்களாகவே இருந்தார்கள். அவ்வாறு அவர்கள் பல்வேறு மக்களுடன் கலந்து இருந்ததால் அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஓரே இடத்தில் சந்திக்கும் சூழலை ஆதிநாத் உருவாக்கினார். அந்த இடத்தின் பெயர்தான் சங்கம். கங்கை- யமுனை கூடும் மஹா கும்பமேளா...! ஒவ்வொரு மஹா கும்பமேளா சமயத்திலும் ஆதிநாத் தலைமையில் அனைத்து நாதர்களும் ஒன்றிணைகிறார்கள். ”

அனைத்தையும் புருவம் விரிய கேட்ட அப்புவின் உதட்டிலிருந்து கேள்வி உதிர்ந்தது. “அப்ப இன்னும் ஆதிநாத் இருக்காரா?”

“இது என்ன கேள்வி அப்பு, அவர் இல்லாமல் இருக்க முடியுமா? எப்பவும் எதிலும் இருக்கார். நாத சம்பிரதாயத்தை வழிநடத்திச் செல்லும் ஒரு நபர் அவர் தானே? உலக சூழலை உருவாக்கி அதில் எங்கெல்லாம் நாதர்கள் வரவேண்டும் என முடிவு செய்து அங்கே அவர்களை உருவாக்குபவர்களும் அவர் தான். எங்கே விழிப்புணர்வு தேவையோ அங்கே நாதர்கள் வெளிப்படுவார்கள். அதன் பின்னே இருப்பவர் ஆதி நாத் மட்டும் தான். நாத சம்பிரதாயம் வழி வந்தவர்கள் ஆன்மீகவாதிகளாக மட்டும் இல்லாமல், உலக விஷயங்களை செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.  உதாரணமாக நாத சம்பிரதாய ஸ்வாமி ஒருவர் விஞ்ஞானியாக இருக்கலாம், அரசியல்வாதியாக இருக்கலாம், ஏன் ஒரு தீவிரவாதியாக கூட இருக்கலாம். விழிப்புணர்வை அளிக்க அவர்கள் எந்த வேடம் எடுக்கவும் தயங்குவதில்லை. தனிநபரின் ஆன்மீக விழிப்புணர்வுக்காக ஆதிநாத்தின் கட்டளையை ஏற்று எந்த உருவை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்வார்கள். 

இது இன்று நேற்று அல்ல பல்வேறு யுகங்களாக நடக்கிறது. இந்த நாட்டை அரசர்கள் ஆண்டு கொண்டிருக்கும் பொழுது அவர்களுக்கு அரசியல் மற்றும் ஆன்மீக வழிகாட்டியாக இருந்தவர்கள் நாதர்கள் தான். முகமதிய அரசர்கள் காலத்திலும் இவர்களின் பணி தொடர்ந்தது. நாதர்கள் ஜாதி மத வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். உதாரணமாக அக்பர் சக்ரவர்த்தியாக இருந்தாலும் அவனின் ஆன்மீக தேடலை தூண்டியவர்கள் நாதர்கள் தான். அதனால் தான் அவன் மதம் கடந்த இறைவழிபாட்டுக்கு தீன்ஹிலாகி என்ற புதிய வழியை கண்டறிய முற்பட்டார். இதோ பார் நாம் அமர்ந்திருக்கும் இந்த கோட்டை யாருடையது தெரியுமா? அக்பர் கட்டியது தான். கும்பமேளாவில் கலந்து கொள்ள அக்பர் வருவதற்காக கட்டப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் நாதர்களின் பங்கு அதிகம். மேலும் காந்தியை வழிநடத்தியது, சுபாஷ்சந்திர போஸை நெருப்பாக்கியது என பல்வேறு வழிகள் இவர்கள் காட்டியது தான். 

நாதர்களின் பணி முடிவதில்லை. இன்றைய சமுதாயம், கலை, அரசியல் என பல்வேறு நிலைகளில் இவர்களின் ஊடுருவல் இல்லாமல் இல்லை. இந்த மஹாகும்பமேளா அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இடம், இதில் அவர்கள் புது உத்வேகம் பெற்று ஆதிநாத் அருளை பெற்று மேலும் தங்கள் ஆன்மீக பணியை செய்ய கிளம்பி செல்வார்கள். முதலில் தோன்றிய ஆதிநாத பரம்பரைகள் சில காரணங்களால் வெவ்வேறு வடிவம் எடுக்க துவங்கி பல்வேறு சம்பிரதாயங்களாக மாறியது. அவர்கள் அனைவரும் ஒன்றுகூடுவதால் பல்வேறு சம்பிரதாயம் மற்றும் மத ஆட்கள் கும்பமேளாவில் இணைவதை போல தோன்றுகிறது. உண்மையில் அனைவரும் ஒன்றே..!”

நீண்ட உரையை கேட்டு ஏதோ புரிந்ததை போல தலையாட்டினான் அப்பு. அங்கே மெளனம் மட்டும் குடிகொண்டது. கங்கை யமுனையை தழுவியவண்ணம் கலந்தாடி சென்றுகொண்டிருந்தது.

சில நிமிட இடைவெளிக்கு பிறகு அப்பு குருஜியை பார்த்து கேட்டான், “ஒவ்வொரு மஹா கும்பமேளாவும் ஆதிநாத் தலைமையில் நடப்பதாக இருந்தால் இந்த மஹாகும்பமேளாவும் அவரின் தலைமையில் தானே நடக்கும்? அவரை நான் நேரில் சந்திக்க முடியுமா?”

பெரும் குரல் எடுத்து சிரித்தார் சோம்நாத் குருஜி...!

மெல்ல சிரிப்பொலி அடங்கி, “ ஆதிநாதர் என்ன அரசியல் தலைவரா? நேரம் கேட்டு சந்திக்க? இறைவனாகிய ஆதிநாதர் மிக எளிமையானவர் அவரை சந்திக்க நீ நினைத்தால் உன்முன் அவர் வந்து நிற்பார். நாம் வேறு எதற்கு இங்கே வந்திருக்கிறோம்? அவரை சந்திக்க மட்டும் தானே?”

அப்புவிற்கு பெருகிய சந்தோஷம் அளவிடமுடியாததாக இருந்ததது....!

(மேளா தொடரும்)

13 கருத்துக்கள்:

Kazam_24 said...
This comment has been removed by a blog administrator.
Kazam_24 said...

சுவாமிஜி அப்பு காணபோகிற ஆதிநாதை வருகின்ற கும்பமேளாவில் நாமும் காண முடியுமா? காத்துகொண்டிருகிறோம் அடுத்த பகுதிக்காக......

Pattarai Pandi said...

Swami, What temples are there in South India in alignment with Natha heritage?

Unknown said...

எளிய நடையில் பிரமாதமாக அமைந்திருக்கிறது தொடர். ஒரே மூச்சில் படிக்க முடிகிறது.

ஆதிநாத்தைக் தரிசிக்க நானும் மிகுந்த ஆவலுடன் உள்ளேன் சுவாமி.

G . நந்தகோபால்

Anonymous said...

Waiting to see adinath

Senthil said...

பகுதிக்கு பகுதி சுவாரசியம் கூடுவதுபோலவே, பலரின் தேடலும், புரிதலும் பன்மடங்கு முடிக்கிவிடம்படும் என்று உனருகிறேன்! பதிவுக்கும் பகிர்வுக்கும் அனேக நன்றிகள்!
பாண்டி அவர்கள் கேட்ட அதே கேள்வி என் மனசிலும் தோனுச்சு! தென் இந்தியாவில் அப்படிப்பட்ட ஸ்தலங்கள் என்ன சுவாமி?

ஸ்வாமி ஓம்கார் said...

பாண்டி, SP ஒளிச்சுடர்

இந்தியா எங்கும் நாத சம்ப்ரதாய கோவில் உண்டு என்றால் தமிழகத்திலும் இருக்கும்.

சோக்கநாத்
ரங்கநாத்
அருணகிரிநாத்
ராமநாத்
சுவாமிநாத்
அகஸ்தியநாத்

இவர்களை எல்லாம் தரிசித்ததுண்டா?

நாதர்களை உணராமலேயே தரிசித்து இருப்போம்..இனி வரும் காலத்தில் நாதத்தின் வழி வந்த நாதர்களை கண்டு உணருங்கள்.

arul said...

waiting for next post - good information for all those seeking answers in aanmeegam

Senthil said...

/*சோக்கநாத்
ரங்கநாத்
அருணகிரிநாத்
ராமநாத்
சுவாமிநாத்
அகஸ்தியநாத்*/

நாத் - நாதன் / நாதர்.... இப்போ புரியுது. நன்றி!

Sivakumar said...

//காந்தியை வழிநடத்தியது, சுபாஷ்சந்திர போஸை நெருப்பாக்கியது என பல்வேறு வழிகள் இவர்கள் காட்டியது தான்.//
போன கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர் கலந்து கொண்ட போதே தெரிந்து விட்டது. :( . நாட்டில் ஒருவருக்கொருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் மக்களை மாக்களாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்நேரத்தில் இப்போது கும்பமேளா... இதனால் மக்களுக்கு விமோசனம் கிடைக்குமா? வாழ்வதற்குத் தகுதியான மகிழ்ச்சிகரமான இடமாக மாறுமா?

Sivakumar said...

//காந்தியை வழிநடத்தியது, சுபாஷ்சந்திர போஸை நெருப்பாக்கியது என பல்வேறு வழிகள் இவர்கள் காட்டியது தான். // சென்ற கும்பமேளாவில் காங்கிரஸ் தலைவர் கலந்து கொண்டது ஏனோ நினைவில் வந்தது. இப்போ என்ன நடக்குமோ?

geethasmbsvm6 said...

மெல்ல சிரிப்பொலி அடங்கி, “ ஆதிநாதர் என்ன அரசியல் தலைவரா? நேரம் கேட்டு சந்திக்க? இறைவனாகிய ஆதிநாதர் மிக எளிமையானவர் அவரை சந்திக்க நீ நினைத்தால் உன்முன் அவர் வந்து நிற்பார். நாம் வேறு எதற்கு இங்கே வந்திருக்கிறோம்? அவரை சந்திக்க மட்டும் தானே?”//

ஆஹா, நமக்கும் கிட்டுமா? :)))))

கனவு பையன் said...

ஸ்வாமி ,
இந்த விவரங்கள் சரியா ?

தமிழக நாத கோவில்கள் :
-----------------------------------

சோக்கநாத் = சோக்க நாதர்
ரங்கநாத்=ரங்கநாதர்
அருணகிரிநாத்=அருணகிரிநாதர்
ராமநாத்=இராமநாத ஸ்வாமி
சுவாமிநாத் = ?
அகஸ்தியநாத் = ?

மற்றும் எங்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏகம்பரநாதர் இந்த வழியில் வந்தவரா ? தெரியபடுத்தினால் மிக்க உதவியாக இருக்கும்