Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, October 5, 2012

தெய்வம் இருப்பது எங்கே - பகுதி 2


குலதெய்வம் என்பது என்ன என இயல்பு மொழியில் கூறுகிறேன். உங்களின் பிறப்பின் மூலமே குலதெய்வம் என்பதாகும். ஒரு மரத்தின் விதையை எடுத்துக்கொண்டால் அந்த விதை வேறு ஒரு மரத்தில் தோன்றி இருக்கும் அல்லவா? அந்த விதை தோன்றிய மரத்தின் விதை? என பின்னோக்கி போனால் முதல் விதை எங்கே தோன்றி இருக்கும்? 

முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கதையாக இருக்கிறதா? நம் முன்னோர்களை நீங்கள் வரிசைப்படித்தினால் அதிகபட்சம் 3 தலைமுறை தாண்டி பெயர் சொல்ல  நமக்கு தெரியாது. அப்படி நம் வந்த வழிகளை ஆதி முன்னோர்கள் வரை பின்னோக்கி பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்லும் வழிபாட்டு முறையே குலதெய்வ வழிபாடு.

எத்தனையோ நூற்றாண்டுக்கு முன் இருந்தவர்களை பற்றி நமக்கு என்ன கவலை என நீங்கள் கேட்கலாம். உண்மையில் அவர்கள் எப்பொழுதோ இருந்தவர்கள் இல்லை. இன்னும் நம்முடன் இருப்பவர்கள். கண்ணாடியில் உங்கள் உடலை பாருங்கள். உங்கள் கண், காது மூக்கு , உடல் அமைப்பு இவை எல்லாம் யார் சாயலில் இருக்கிறது? உங்கள் ஒவ்வொரு அங்கமும் அதன் வடிவமும் உங்களின் முன்னோர்கள் உங்களுக்கு அளித்தவையே என உணருங்கள்.

நம் உயிர் தாங்கி நிற்க தேவையான உடலை அளித்த முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவது கடமை அல்லவா? 

குலதெய்வ வழிபாடு என்பது நம் அனைத்து முன்னோர்களுக்கும் முதலான ஆதி முன்னோர் என இறைவனையே நம் முன்னோராக கருதி வழிபடுவதாகும். நம் கலாச்சார பூஜா விதிகள் அவ்வாறு வழிபடாமல் எந்த பூஜை செய்தாலும் அதற்கு பலன் இருக்காது என்கிறது.

நியாயம் தானே? வந்த வழியை மறந்தவனுக்கு போகும் வழி எப்படி புலப்படும்?

குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பலருக்கு தெரிவதில்லை. ஒரு மனிதன் தன் வழிபாட்டு கடமையான குலதெய்வத்தை மறந்துவிட்டால் என்ன நடக்கும்? 

மனசஞ்சலம், காரியங்களில் 99% அடைந்து பிறகு தோல்வியை தழுவுவது, தீர்க்க முடியாத உடல் நோய்கள், ஆன்மீக வளர்ச்சியில் தடை, குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து உறவினர்களால் கைவிடப்படுதல் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். எளிமையாக சொல்வதானால் ஒரு மனிதன் கடமையை தவறினால் என்ன நடக்குமோ அத்தனையும் நடக்கும்.

குலதெய்வ வழிபாட்டை பற்றி நிறைய கூறலாம், முதலில் நம்மில் பலருக்கு குலதெய்வ வழிபாடு பற்றி இருக்கும் கேள்விகளை பார்ப்போம்.

கேள்வி : ஐயா, என்னக்கு முன் இரண்டு பரம்பரையாக என் குடும்பத்தார் குலதெய்வ வழிபாட்டை ஏதோ காரணத்தால் விட்டுவிட்டார்கள். எனக்கு குலதெய்வமே எது என தெரியாது. அப்படி இருந்தும் நான் குலதெய்வத்தை வழிபட வேண்டுமா?

பதில் : உங்களின் இரண்டு பரம்பரை முன்னால் உங்கள் பாட்டனாருக்கு 100 ஏக்கர் நிலம் இருந்ததாக ஒரு சிறிய முத்திரை தாள் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?  அந்த நிலம் எங்கே இருந்தது. யாருகெல்லாம் விற்கப்பட்டது என ஆராய்வீர்கள்.உங்கள் பூர்வீக சொத்தில் ஒரு சதவிகிதம் கிடைத்தால் கூட போதும் என அலைந்து திரிந்து கை பற்றுவீர்கள் அல்லவா? அதுபோல உங்களின் உறவினர்கள், பூர்வ குடிகளை தொடர்புகொண்டு தேடுங்கள். பொருளாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்களின் கடமைக்கும் கொடுங்கள்...! கண்டிப்பாக உங்களுக்கு குலதெய்வம் எது என கண்டறிய முடியும்.

கேள்வி : எங்கள் பூர்வீகம் சேலம் பக்கம் ஒரு கிராமம். அங்கே எங்கள் குலதெய்வம் இருக்கிறது. பிழைப்புக்காக எங்கள் தாத்தா கோவையில் இடப்பெயர்ச்சி அடைந்தார். எங்களின் பணிச்சுமையால் எங்களால் பூர்வீக கிராமத்திற்கு போக முடியவில்லை. எங்கள் பங்காளிகள் எல்லாம் முடிவு செய்து எங்கள் பூர்வீக கிராமத்தில் இருக்கும் கோவிலில் இருந்து மண் எடுத்து கோவையிலேயே ஒரு கோவிலை கட்டி குலதெய்வமாக வழிபடுகிறோம். இதை பலர் விமர்சிக்கிறார்கள்.எங்கள் வழிபாடு முறை சரியா?

பதில் : நீங்கள் கோவையில் வசிக்கிறீர்கள். உங்கள் மகன் சென்னையில் படிக்க சென்று விட்டார் என வைத்துக்கொள்ளுங்கள். அவரை சென்று பார்ப்பீர்களா? இல்லை அவரின் போட்டோ அல்லது சட்டையை பார்த்தால் போதும் என நினைப்பீர்களா? 

சேலம் என்ன அமெரிக்காவிலா இருக்குக்கிறது? 150 கிலோமீட்டர் இடைவெளிக்கே சிலர் புதிய குலதெய்வத்தை ஏற்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. தற்கால வாகன யுகத்தில் மின்னலைவிட வேகமான சென்றுவரும் தூரத்தில் குலதெய்வம் இருந்தும் நம்மால் வழிபடமுடியவில்லை என்றால் சோம்பேறித்தனத்தை விட வேறு என்ன இருக்க முடியும்? குலதெய்வம் கோவில் முற்றிலும் அழிந்து அதன் பல மேல் வருடங்களாக  பல குடியிருப்புகள் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே அப்பகுதி மண் எடுத்து புதிய கோவிலை கட்ட வேண்டும். அது இல்லாமல் குலதெய்வம் கோவில் இருக்கும் சூழலில் மீண்டும் கட்டுவது நம் ஆணவமும், சோம்பேறித்தனமும் தான் பக்தியும் கடமையும் அல்ல...!

கேள்வி : வருடத்திற்கு ஒரு முறை எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு வீடு திரும்பினால் எங்கள் பங்காளிகளில் யாரோ ஒருவர் இறந்துவிடுகிறார். இதன் காரணமாக பல வருடமாக யாரும் குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வதே இல்லை. மரண பயம்தான் காரணம். நாங்கள் என்ன செய்வது?

பதில் : நாங்கள் வழிபடுவது குலதெய்வமா? கொல தெய்வமா என கேட்கிறீர்கள்...!  உங்களுக்கான பதில் அடுத்த பகுதியில் கூறுகிறேன்.

(தொடரும்)

14 கருத்துக்கள்:

priyamudanprabu said...

:)

திவாண்ணா said...

கேள்வி பதில் என்ன, தாத்தா டைப்பா? :-)))
குல தெய்வ வழிபடு விட்டுப்போவதும் நீத்தார் கடன் விட்டுப்போவது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கின்றன என்பது எங்கள் அனுபவ பாடம்....

arul said...

nice post also please give some introduction about giving respect to elders by doing amavasai tharpanam

Sivakumar said...

பழனி முருகன், திருப்பதி வெங்கிடாசலபதி போன்ற தெய்வங்கள் குல தெய்வங்களாக இருக்க முடியுமா?
-----------------------------------
எங்க சமூகத்தவர்கள் மேற்கண்ட தெய்வங்களையே குல தெய்வமாக பரம்பரை பரம்பரையாக வழிபடுகின்றனர்.

Sanjai said...

அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் :)

இரா. பாலா said...

@ Sivakumar:
பழனி முருகன் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி போன்றவை குலதெய்வங்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தனது குலதெய்வம் எது எனத் தெரியாதவர்கள் இவற்றை குலதெய்வம் என வணங்குவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

sarojini said...

வந்த வழியை மறந்தவனுக்கு போகும் வழி எப்படி புலப்படும்?

Kazam_24 said...

குல தெய்வத்தை வருடத்திருக்கு ஒரு முறை கும்பிட்டால் போதுமா சுவாமி ?

மதி said...

வெளி நாடுகளில் பிறந்து வளர்த்தவர்கள் எப்படி குல தெய்வம் கண்டு பிடிப்பது....?

கைகாட்டி said...

ஸ்வாமி,
'பிடி மண்' எடுத்து வந்து குல தெய்வக் கோவில் கட்டுவது எல்லாக் குலத்திலும் / ஊர்களிலும் இருக்கிறது. மொத்தமாக 15-20 குடும்பங்கள் இடம் பெயரும்போது இந்த மாதிரி செய்வது வழக்கம் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டது எங்கள் மூல குல தெய்வம் இருப்பது காட்பாடி பக்கத்தில். அதனுடைய நகல் இருப்பது பொள்ளாச்சி பக்கத்தில். அந்த நகலைத் திரும்ப நகல் எடுத்து வந்து கரூர் பக்கத்தில் கோவில் கட்டி இருக்கிறார்கள். இவ்வளவு தூரம் செய்த பின்னும் எப்போது வழிபாடு நடந்தாலும், ஏதேனும் 10 குடும்பங்கள் (மொத்தம் 40-ல்) வழிபாட்டின்போது வர இயலாமல் போய் விடுகிறது.
மேலும் ஒரே தெய்வத்தைப் பல குலத்தினர் பல பெயர்களில் தங்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். (எனக்கும் என் மனைவி வீட்டார்க்கும் ஒரே குல தெய்வம், பெயரில் சிறிய வேறுபாடு இருக்கும் அவ்வளவுதான்).

கைகாட்டி said...

ஸ்வாமி,
'பிடி மண்' எடுத்து வந்து குல தெய்வக் கோவில் கட்டுவது எல்லாக் குலத்திலும் / ஊர்களிலும் இருக்கிறது. மொத்தமாக 15-20 குடும்பங்கள் இடம் பெயரும்போது இந்த மாதிரி செய்வது வழக்கம் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டது எங்கள் மூல குல தெய்வம் இருப்பது காட்பாடி பக்கத்தில். அதனுடைய நகல் இருப்பது பொள்ளாச்சி பக்கத்தில். அந்த நகலைத் திரும்ப நகல் எடுத்து வந்து கரூர் பக்கத்தில் கோவில் கட்டி இருக்கிறார்கள். இவ்வளவு தூரம் செய்த பின்னும் எப்போது வழிபாடு நடந்தாலும், ஏதேனும் 10 குடும்பங்கள் (மொத்தம் 40-ல்) வழிபாட்டின்போது வர இயலாமல் போய் விடுகிறது.
மேலும் ஒரே தெய்வத்தைப் பல குலத்தினர் பல பெயர்களில் தங்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். (எனக்கும் என் மனைவி வீட்டார்க்கும் ஒரே குல தெய்வம், பெயரில் சிறிய வேறுபாடு இருக்கும் அவ்வளவுதான்).

கைகாட்டி said...

பித்ரு தோஷம் மற்றும் குல தெய்வ வழிபாடு செய்யாமை இரண்டுக்கும் தொடர்பு உள்ளதா ஸ்வாமி?

நீத்தார் கடன் பற்றியும் அறிய விழைகிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Unknown said...

Kuladeivam villakathirku nandri swami