Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Sunday, November 27, 2011

திரிகுண ரஹஸ்யம்


தற்சமயம் 3 பற்றிய பேச்சு ஊருக்குள் பிரபலமாக இருப்பதால் நாமும் மூன்று பற்றி பேசுவோம். வடமொழியில் த்ரி என்றால் மூன்று மற்றும் மூன்றாம் நிலை என்பதை குறிக்கும். பிரபஞ்ச படைப்பில் எப்பொழுதும் மூன்று என்ற எண்ணுக்கு ஓர் சிறப்பு உண்டு. கவலைப்படாதீர்கள் நான் நியூமராலஜி பற்றி பேசப்போவதில்லை.


இறைநிலை முழுமையான தன்மையிலிருந்து வெளிப்பட்டு பிரபஞ்சமாக விரிவடையும் பொழுது மூன்று நிலையாக வெளிப்படுகிறது. இக்கருத்துக்கள் உபநிஷத்களில் காணலாம்.


மூன்று தன்மைகளை நாம் திரி - குணம் என்கிறோம். குணா என்ற வடமொழி சொல் தன்மையை குறிக்கும். ரஜோ, தமோ, சாத்வ என்பது இந்த மூன்று குணங்களாகும்.

மூன்று குணங்களை விவரிக்கும் முன் மனிதர்கள் இந்த மூன்று குணங்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை கூறினால் தெளிவுபெற ஏதுவாக இருக்கும். ஆணவத்துடனும், பிறர் தனக்கு கீழ் இருந்து செயல்பட வேண்டும் என இருப்பவர்கள் ரஜோ குணத்தின் தன்மை. உதாரணம் அரசனின் குணம்.

தனக்காக பிறர் செயல்பட வேண்டும், தான் எந்த செயலையும் செய்யாமலேயே அனைத்தும் கிடைக்கவேண்டும் என நினைப்பவர்கள் தமோ குணத்தின் அடிப்படையில் வருவார்கள். உதாரணம் ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள்.

தன்னையும் பிறரையும் ஒன்றுபோல நினைத்து, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் செயல்படுபவர்கள் சாத்வீக குணம் அல்லது சாத்வ குணம் கொண்டவர்கள். உதாரணம் தயாள குணம் கொண்டவர்கள் மற்றும் சேவை செய்பவர்கள்.

இவ்வாறு மனிதனின் குண அடிப்படையில் மூன்று நிலைகள் இருப்பதை காணலாம். அதுபோலவே மனிதன், தேவர் மற்றும் அசுரன் என புராணங்கள் இத்தன்மையை வகைப்படுத்துகிறது. மூன்று குணங்களில் எது உயர்வு எது தாழ்வு என வகைப்படுத்த இயலாது என்றாலும் சாத்வீகம் என்ற நிலை பிற குணங்களை விட நன்மையை அதிகம் கொடுக்கும் என்பது மறுக்க முடியாது.

மூன்று குணங்கள் அனைத்து படைப்பிலும் வெளிப்படுகிறது. இவை இல்லாத படைப்புகளே இல்லை.

சவாலாகக் கூட மூன்று குணமற்ற படைப்பை நீங்கள் காட்ட முடியுமா என கேட்கும் அளவுக்கு குணத்தின் ஆதிக்கம் அதிகம்.

விலங்குகளில் எடுத்துக்கொண்டால் சிங்கம்,புலி போன்றவை ரஜோ குணத்திலும், மான் - முயல் போன்றவை சாத்வீக குணத்திலும், எருமை பன்றி ஆகியவை தமோகுணத்திலும் இருக்கிறது.

காலத்தை எடுத்துக் கொண்டால் இறந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என வகைப்படுத்தலாம். நிகழ்காலம் என்பது சாத்வீக நிலையை குறிப்பதால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இந்த ஷணத்தில் மட்டும் இரு என கூறுகிறார்கள்.

கனிகளை பாருங்கள் எத்தனை வகை இருந்தாலும் அதில் முக்கியமானது முக்கனிகள் தான். மா,பலா மற்றும் வாழை. இதில் மாங்கனி ரஜோ குணத்தையும், பலா தமோ குணத்தையும், வாழை சாத்வீகத்தையும் வெளிப்படுத்தும். அதனால் தான் நற்காரியங்களுக்கு வாழை பிரதானமாக இருக்கிறது.

இயற்பியலில் பருப்பொருட்களின் தன்மையை கூறும் பொழுது கூட திட-திரவ-வாயு என்கிறார்கள்.
உதாரணமாக நீர் உறைய வைத்தால் பனிக்கட்டி, நீரின் இயல்பே திரவ தன்மைதான். சுட வைத்தால் நீர் ஆவி.

பரிணாமங்களில் X,Y மற்றும் Z என்கிற பரிணாமங்கள் இருக்கிறது. நம் கண்கள் முப்பரிமாணத்தையும் உணர்ந்தால் தான் ஒரு பொருளை முழுமையாக காண முடியும்.

நம் சுவாசம் மூன்று நிலையிலேயே இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. அவை உள் சுவாசம், வெளி சுவாசம் மற்றும் சுவாசம் அற்ற நிலை.

மனிதனின் சுயத்தன்மை கூட கனவு நினைவு மற்றும் தூக்கம் என்ற மூன்று நிலைகளிலேயே இருக்கிறது.

யோக சாஸ்திரம் மனித உடலில் முக்கிய நாடிகள் என ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா என்கிற நாடிகளை குறிப்பிடுகிறது.

நம் இருப்பு கூட உடல், மனம் மற்றும் ஆன்மா என்ற முக்குண நிலையில் இருக்கிறது. அதனாலேயே நம் இருப்பை நம்மால் உணர முடிகிறது. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் தன்னைதானே உணர்தல் என்பது இயலாது.

மேலும் சில உதாரணங்களில் கூறுவதென்றால் பால்,நீர் மற்றும் எண்ணெய் என்பது முக்குணத்திற்கு உதாரணம். பால் ரஜோ குணத்தையும், நீர் சாத்வீக குணத்தையும், எண்ணெய் தமோ குணத்தையும் குறிக்கும். இந்த உதாரணம் மூலம் நம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உண்டு.

நீரில் பால் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும். ஆனால் எண்ணெயில் நீர் சேர்த்தால் முழுமையாக இணையாமல் வேறுபட்டே நிற்கும். அதுபோல சாத்வீக நிலையில் இருப்பவர்கள் ரஜோ குணத்துடன் இணைந்து செயல்பட முடியும், ஆனால் தமோ குணத்துடன் இணைந்தாலும் முற்றிலும் இணைந்து செயல்பட முடியாது என்பதை இந்த உதாரணம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இக்கருத்தை தான் புராணங்கள் கதை வடிவில் கூறுகின்றன. அதாவது அசுரர்கள் என்ற தமோகுணம் தேவர்களுக்கும் மனிதர்களுக்கு தொல்லையை குடுப்பதாக இருக்கிறது என்கிறார்கள்.

மூன்று குணங்கள் உலக மதங்களில் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போமா?

(தொடரும்)
-------- ரஜோ குணம் / திரிகுணம் (1/3)--------

8 கருத்துக்கள்:

புதுகை.அப்துல்லா said...

அருமை அருமை.

புதுகை.அப்துல்லா said...

// ரஹஸ்யம் //

ரகசியம்

கைகாட்டி said...

/--
நீரில் தண்ணீர் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும்
--/
பாலில் தண்ணீர் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும்
என்ற வரிகள் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

//அருமை அருமை.//
மூனு பத்தி பேசும் பொழுது ரெண்டு அருமை தானா? இன்னொரு அருமை போடல? :))

//// ரஹஸ்யம் //

ரகசியம்//

ரஹ ரஹ ...இங்கிருந்து வரணும்.
ஏக் காவ்மே ஏக் கிஸான் ;)))))))

ஸ்வாமி ஓம்கார் said...

திரு துரைசாமி,

உங்கள் வருகைக்கும் திருத்தத்திற்கும் நன்றி. திருத்தி விட்டேன்.

naren said...

மூனு தடவை உங்களுக்கு சுத்திப் போடனும் சாமி!

அடுத்த பதிவிற்கு waiting!

திவாண்ணா said...

//மூன்று குணங்கள் அனைத்து படைப்பிலும் வெளிப்படுகிறது. இவை இல்லாத படைப்புகளே இல்லை. //
இந்த மூணில ஒரு நேரத்தில எது எவ்வளோ இருக்கும் என்கிற % தான் மாறுது, இல்லையா ஸ்வாமி?

Siva Sottallu said...

///--
நீரில் தண்ணீர் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும்
--/
பாலில் தண்ணீர் சேர்த்தால் அவை வேறுபாடு இன்று கலக்கும்
என்ற வரிகள் சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.//

நீரில் பால் சேர்ப்பதை விட பாலில் நீர் சேர்ப்பது நலம்.

இதேபோல் குளிர்ந்த நீரில் வெந்நீரை ஊற்றலாம், ஆனால் வெந்நீரில் குளிர்ந்த நீரை ஊற்றக்கூடாது என்றார்கள்.

இவை படிப்பதற்கு சரியாக இருக்கும் என்பதைவிட ஏதேனும் வேறு காரணம் உண்டா ஸ்வாமி?