Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, March 6, 2015

ஓம்கார யோகம்

இறையருள் ஒளிரட்டும், குரு அருள் பெருகட்டும்.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை தனிமனித ஆன்மீக முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. நமது இயல்பு வாழ்க்கையின் சூழலால் ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டாலும் அதை தொடர்வதிலும் ஆழ்ந்து செயல்படுவதிலும் சில தடைகள் ஏற்படுகிறது.

அத்தகைய சூழலை சரி செய்யும் நோக்கில் ப்ரணவ பீடத்தில் நடைபெறும் நிகழ்வு - ஓம்கார யோகம்.

ஓம்கார யோகம் என்பது 90 நாட்களுக்கு ஒரு முறை ஒரு நாளை முற்றிலும் ஆன்மீகத்திற்காக அர்ப்பணிக்கும் வகையில் உங்களை தூண்டி ஆன்மீக வேள்வியில் ஈடுபடுத்தும் நிகழ்வாகும்.

காலை ஹத யோக பயிற்சியில் துவங்கி  பல்வேறு தியான பயிற்சிகள் மற்றும் மனவள பயிற்சி நடைபெறும். மாலை வேளையில் நம் கலாச்சார நூல்களான பாகவதம், திருமந்திரம் மற்றும் உபநிஷத்துகளுடன் சத்சங்கம் மற்றும் பஜன் நடைபெறும்.

ஆங்கில வருடத்தின் ஒற்றைப்படை மாதங்களின் மூன்றாம் ஞாயிறு அன்று ஓம்கார யோகம் நடைபெறும்.  இந்த நிகழ்ச்சி மார்ச் மாதம் 15ஆம் தேதி கோவை ப்ரணவ பீடத்தில் நடைபெறுகிறது.

ஓம்கார யோகத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு முன் ஆன்மீக பயிற்சியில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.

ஓம்கார யோகத்தில் கலந்து கொள்ள நன்கொடை 500/- ரூபாய். இந்த நன்கொடையில் மதிய உணவு  தேனீர் வழங்கப்படும். ஓம்கார யோகம் என்ற இந்த அந்தர் யோக நாளில் உங்கள் நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர்கள் என யாரேனும் ஒருவரை உங்கள் சார்பாக அழைத்து வரலாம். அவர்களுக்கு இப்பயிற்சி இலவசம்.

உங்களின் ஆன்மீக நெருப்பை அணையாமல் ஒளிர செய்ய ஓம்கார யோகத்தில் இணைவோம்.

மேலும் விபரங்களுக்கு

ஸ்வாமி ஓம்கார்

தொலைபேசி எண் : 9944 2 333 55

Thursday, February 5, 2015

உத்தவ சுப்பாண்டி


பாகவத புராணத்தின் கடைசி பகுதியில் வருவது உத்தவ கீதை. 125 வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டு பூலகை விட்டு வைகுண்டம் செல்லுவதற்கு ஸ்ரீகிருஷ்ணர் தயாராகிறார்.

இச்சமயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவரின் நீண்ட கால நண்பர் மற்றும் மந்திரியாக இருக்கும் உத்தவர் ஆயிரம் கேள்விகளுக்கு மேல் யோகம், ஞானம், மோட்சம் என பல விஷயங்களை பற்றி கேட்கிறார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில் உத்தவ கீதையாகும்.

ஆயிரம் கேள்விகளுக்கு மேல் கடந்த பிறகு உத்தவர் சில   நொடிகள் மெளனமாக இருக்கிறார். உடனே கிருஷ்ணர், " உத்தவா உனக்கு சந்தேகம் தீர்ந்ததா என கேட்கிறார்". 

உத்தவர் புன்னகையுடன், "ஸ்ரீ கிருஷ்ணா உன்னுடன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது முதல் வாழ்ந்து வருகிறேன். சிறுவயது  முதல் இந்த நாள் வரை நம் நட்பு தொடர்கிறது. நான் உனக்கு சித்தப்பா மகனும் கூட..! உன் ராஜபரிபாலனத்தில் எனக்கு மந்திரி பதவி அளித்து உன்னுடன் இருக்க செய்து மேலும் என்னை உனக்கு  நெருக்கமானவனாக மாற்றினாய். இத்தனை காலம் முழுமையான பகவத் செரூபமான உன்னுடன் வாழ்ந்துவிட்டு எனக்கு எப்படி சந்தேகம் வரும்? எனக்கு சந்தேகம் என்பதே இல்லை. எப்பொழுதும் இருக்காது...!" என்றார்.

ஸ்ரீகிருஷ்ணர் ஆச்சரியத்துடன் பார்த்து, "அப்படியானால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளை ஏனப்ப எழுப்பினாய்?" எனக் கேட்டார்.

உத்தவர் பக்தி நிறைந்த கண்களில் ஸ்ரீகிருஷ்ணரை முழுமையாக பார்த்தவண்ணம் கூறினார்....

"நான் கேட்ட கேள்விகளின் பதில் எனக்கு முன்பே தெரியும். இன்ன கேள்விக்கு இப்படித்தான் உமது பதில் இருக்கும் , அதற்கு இப்படி உதாரணம் சொல்வீர்கள் என்பது வரை எனக்கு தெளிவாக தெரியும். இருந்தாலும் இப்படிப்பட்ட கேள்வி கேட்டால் தான் நீங்களும் பதில் சொல்வீர்கள். அதை காரணமாக வைத்து உங்களுடன் சில மணி நேரம் செலவிடலாம். பகவானாகிய உங்களின் சாநித்தியத்தை நாங்கள் மெளனமாக பார்த்து எத்தனை காலம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் உங்களுக்கு சில நிமிடங்களில் எங்களின் இருப்பு சலித்துவிடலாம். அடுத்த பக்தர்களை பார்க்க சென்று விடுவீர்கள். ஆனால் இப்படி கேள்வி கேட்டால் அதன் காரணமாக எங்களுடன் இருப்பீர்களே அதனால் தான் கேட்டேன்" என நீண்ட விளக்கம் அளித்தான்.

இதை ரசித்த வண்ணம் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் செல்ல தயாரானார்..

இப்படித்தான் எனக்கும்......! 

நான் தலை போகும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் பொழுது சுப்பாண்டி ஏதாவது ஒரு கேள்வியை என்னிடம் கேட்ப்பான். சுற்றம் சூழல் எதையும் பார்க்க மாட்டான். கேட்டுவிட்டு பெருமையாக ஒரு பார்வை வேறு பார்ப்பான். அந்த கேள்விக்கு நான் பல முறை பதில் சொல்லி இருப்பேன். இவன் இருக்கும் பொழுது யாராவது அந்த கேள்வியை கேட்டு அதற்கு பதில்  சொல்லி இருப்பேன். ஆனாலும் அவன் கேட்காமல் இருப்பதில்லை. அதற்கு காரணம் உத்தவர் போல என்னுடன் இருக்க வேண்டும் என்ற பக்தி என நினைத்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் சுப்பாண்டிக்கு பக்தியை விட ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ் என்ற வியாதி என்றே நான் சந்தேகப்படுகிறேன்.

நீங்களும் நேரம் இருந்தால் உத்தவ கீதை படித்து அதன் சாரத்தை நன்றாக புரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமானவரிடம் கேள்வி கேளுங்கள்...

இனி தெரிந்து கொண்டே யாராவது கேள்வி கேட்டால் மனதுக்குள் இப்படி சொல்லி கொள்ளலாம்........

-தட் உத்தவ கீதை மொமேண்ட்..!

Monday, November 24, 2014

வேதகால வேளாண்மை பகுதி 2

பஞ்ச அங்கங்கள் என கூறப்படும் வாரம், நட்சத்திரம் யோகம் , திதி மற்றும் கரணம் என்பவையே பஞ்சாங்கம் என்பதாகும். பஞ்சாங்கம் என்பது சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை வானமண்டலத்தில் இருக்கும் இடமும் அவை பயணிக்கும் இடைவேளி கொண்டு கணிக்கப்படுபவை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக இன்று பெளர்ணமி என திதியின் வரிசையில் கூறினால் சூரியன் சந்திரன் இருவரும் 180 டிகிரியில் எதிர் எதிராக இருக்கிறார்கள் என அர்த்தம்.

 நட்சத்திரத்தில் அஸ்வினி என கூறினால் இன்று சந்திரன் முதல் ராசியான மேஷத்தில் ராசிமண்டலத்தில் பயணிக்கிறார் என பொருள் கொள்ளவேண்டும்.  இந்த ஐந்து விஷயங்களில் வாரம், நட்சத்திரம் ஆகியவற்றை சென்ற பகுதியில் பார்த்தோம். இப்பொழுது யோகம் என்பதை விவரிக்கிறேன்.

யோகம் என்ற வார்த்தையே இதன் செயலை உணர்த்தும். நல்லதொரு முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் நட்சத்திர யோகத்தை பயன்படுத்துவது சிறந்தது. இந்த நட்சத்திர யோகம்  என்பது பஞ்சாங்கத்தில் காணப்படும் யோகத்தைக் காட்டிலும் வித்தியாசமானது. 

சூரியன் , சந்திரன் இவற்றின் இணைவால் 15 திதிகள் கிடைக்கின்றன. இதை மேலும் பகுக்கும் பொழுது 20 யோகங்கள் கிடைக்கிறது. யோகத்தைப் பகுத்தால் வருவது கரணம். ஆனால் வேதகால வேளாண்மைக்கு கிழமை, நட்சத்திரம், திதி, நட்சத்திரம் யோகம் இவைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். யோகம் , கரணம் ஆகியவை மிகவும் குறுகிய கால அளவீடுகள் என்பதால் இதை பயன்படுத்துவதில்லை. மேலும் திதியை பிரதானமாக பயன்படுத்துவதால் திதியின் உட்பிரிவான யோகம்,கரணத்தை உபயோகிப்பது இல்லை.  ஆனால் பழைய வேளாண்மை ஜோதிட குறிப்பில் அனைத்தும் பயன்படுத்தி வந்தனர். முகூர்த்த சூடாமணி மற்றும் பிருஹத் ஜாதகத்தில் இருக்கும் குறிப்புகள் ஒரு விவசாயி முழுமையான ஜோதிடனாக இருந்தான் என்பதை காட்டுகிறது. 

அன்றைய வாழ்வியல் சூழலில் பள்ளி கல்வியில் ஜோதிடம் / வான சாஸ்திரம் ஒரு பாடமாக இருந்தது கூட காரணமாக இருக்கலாம்.  ஆகையால் இங்கே நான் குறிப்பிடுவது வேதகால வேளாண்மையின் முழு தகவல் அல்ல. ஆனால் ஒன்றும் தெரியாமல் உயிரற்ற வேளாண்மை செய்வதற்கு வாரம், நட்சத்திரம், யோகம் மற்றும் திதியை வைத்து பல அதிசயங்களை செய்யலாம்.

நட்சத்திர யோகம்  என்பது ஒரு குறிப்பிட்ட (வாரம்) கிழமையில் வரும் நட்சத்திரத்திற்கு இடையே உள்ள இணைவையும் மேன்மையையும் காட்டும். நட்சத்திர யோகங்களில் முக்கியமானது அமிர்த , சித்த , மரண யோகங்கள் இவற்றைக் கொண்டும் வேளாண் பணிகளை செய்யலாம்.

அமிர்த யோகம் :

"மிருதம் " எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு இறப்பு என்று பொருள். "அமிர்தம்" என்றால் இறவா (இறப்பற்ற நிலை) என்று பொருள். எனவே இந்த நாளில் உரமிடுதல் பஞ்சகவ்வியம் தயாரித்தல் போன்ற பணிகளைச்  செய்யலாம். 

சித்த யோகம் :

நினைத்த காரியத்தில் வெற்றியடைவதை "காரிய சித்தி" அடைதல் என்பார்கள். 

சித்தி அடைந்தவர்கள் சித்தர் என அழைக்கபடுவார்கள். நமது எண்ணம் நிறை வேற இந்த நாளை பயன்படுத்துவது சிறந்தது.  இந்த நாளில் நீர் பாசன முறையை திட்டமிடுதல் , வேளாண் பணிகளை திட்டமிடுதல் மற்றும் விதைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.

மரண யோகம் :

"மரணம்" என்பது இங்கு இறப்பை குறிப்பதில்லை. இந்த நாள் கேடு பலனை கொடுக்கும் என்பது மூடநம்பிக்கை எனலாம். மரணம் என்பது தவறானவற்றை வெளியேற்றுவதை குறிக்கும். களை எடுத்தல், தோட்டத்தை சீர் செய்தல், செடிகளை செதுக்குதல்  ஆகிய கழிவு பணிகளை மரண யோகத்தில் செய்யலாம்.

திதி :

சூரியனும், சந்திரனும்  சூரிய மண்டலத்தில் இணையும் புள்ளியையும், இடைப்பட்ட பாகையையும் குறிப்பது திதி. பஞ்சாங்கத்தில் இருக்கும் பஞ்ச அங்கங்களில் திதிக்கு என சில முக்கியத்துவங்கள் உண்டு.

புராண காலங்களில் கிருஷ்ணர் அஷ்டமியில் பிறந்தார் என்றும் ராமர் நவமியில் பிறந்தார் என்றும் திதியை சிறப்பித்து கூறுவார்கள். இதன் மூலம் திதியின் முக்கியத்துவத்தை அறியலாம். திதிகள்  மொத்தம் 15, அமாவாசை துவங்கி பௌர்ணமி வரையிலும் - பௌர்ணமி  துவங்கி அமாவசை வரையிலும் 30 நாட்களுக்கு திதிகள் இருமுறை வருகின்றன. இந்த இருகாலங்களும் முறையே சுக்கில பட்சம் (வளர்பிறை)  மற்றும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) எனலாம். திதிகளும் அதற்குறிய வேளாண் பணிகளும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.


வேளாண் பணிகளை மேற்கண்ட வரிசையிலேயே செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தேவைக்கு ஏற்றது போல திதி வரும் நாளில் செய்தால் நல்லது. சஷ்டி, பஞ்சமி , தசமி, சதுர்தசி இந்த நாட்களில் உரமிடுதல் அவசியம். அமாவசை நாளில் பயிர்களுக்கு அதிகமாக நீர் உற்றுவதும் , பயிர்களுக்கு பௌர்ணமி அன்று நீர் ஊற்றாமல் இருப்பதும் நன்று. ஏகாதசி நாளில் பூமிக்கு அடியில் விளையும் (கிழங்கு- கடலை) பயிர்களை மட்டுமே பாதுகாக்க வேண்டும். பூமிக்கு மேலே விளையும் பயிர்களை ஏகாதசி அன்று பண்படுத்தினால்  பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும். 

இன்று கூட அமாவாசை நாளில் பெரும்பாலும் வேளாண்மை பணிகளுக்கு விடுமுறை விடுவது நம் கலாச்சாரமாகவே இருந்து வருகிறது. இது ஏன் என பலருக்கு தெரிவதில்லை. உண்மையில் நம் முன்னோர்கள் பஞ்சாங்க நுணுக்கங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கான சான்றே இது. பெளர்ணமி அன்றும் அனேகமாக ஒவ்வொரு மாதமும் வழிபாட்டு நாளாக வருவதால் விடுமுறையாக அமைந்துவிடும். உதாரணமாக சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி, வைகாசி மாதம் வைகாசி விசாகம் என அனைத்து மாதமும் பெளர்ணமியும் வழிபாட்டுக்கு உரிய நாளாகி விவசாய பணிகளுக்கு விடுமுறையாகி விடும். ஆக அமாவாசை பெளர்ணமி அன்று பூமியின் ஈர்ப்பு விசை ஏற்ற தாழ்வில் இருக்கும் என்பதே விடுமுறைக்கான காரணம்.

செடிகளை சீரமைத்தல், களை எடுத்தல் ஆகிய வேளாண் பணிகளுக்கு  திரியோதசி திதி  சிறந்த நாள்.  மேற்கண்ட தகவல்களைக் கொண்டு சிறந்த முறையில் வேதகால வேளாண்மையை செயல்படுத்த முடியும். கிரக ஆற்றல் இலவசமாக கிடைக்கும் ஒன்று, இதை தக்க முறையில் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையிலிருந்து வேதகால வேளாண்மை எனும் புதிய பரிமாணத்திற்கு மாற்றம் அடையுங்கள். உங்கள் வேளாண்மை யுக்தியை புதிய பாதையில் அமைத்து உலகை வளமாக்குங்கள்.