Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, April 18, 2011

மெய்ஞான கல்வி


தற்கால கல்வி முறைகள் நமக்கு விஞ்ஞானத்தை வளர்க்கிறது. நம் அடிப்படை தேவையான உடை, உணவு மற்றும் உறைவிடங்களை உருவாக்க உதவுகிறது. இவை அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் நடைபெறும் வளர்ச்சிகளாககும். உண்டு, உறங்கி மற்றும் இனப்பெருக்கம் செய்து இறந்து போகும் இவ்வாழ்க்கை அனேகமாக வெளிமுக செயல்களையே முன்னிறுத்துகிறது.

அக முகமாக நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழிகளை கற்றுக்கொடுக்கும் மெய்ஞான கல்வியை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் யாரும் முன்வருவதில்லை.

நம்முள் இருக்கும் இறையருளை தரிசித்து அதன் பயனாக நம்மை சுற்றி இருக்கும் இறையருள் நிறைந்த விஷயங்களை உணரும் கல்வி முறையே மெய்ஞான கல்வியாகும்.
நம்மில் பலருக்கு ஆன்மீக கல்வியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பினும் அதை முறையாக கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் பல்வேறு தடைகள் இருக்கிறது. நம் வாழ்க்கை முறை முழுமையான ஆன்மீக பாதையில் இல்லாததால் ஆன்மீகத்தை நம் வாழ்க்கையில் இணைத்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி என்றுமே மனதில் மேல் ஓங்கி நிற்கிறது.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை நவீன காலத்திற்கு ஏற்ப மெய்ஞான கல்வி எனும் ஆன்மீக கல்வியை அனைவருக்கும் வழங்க இருக்கிறது.

மெய்ஞான கல்வியின் சிறப்புகள் என்ன?

  • வாழ்க்கை சூழல் எப்படி இருந்தாலும் முழுமையாக ஆன்மீக சூழலை பெறும் வாய்ப்பு

  • கற்றுக்கொடுக்க முறையான பயிற்சி அமைப்பு

  • ஆண்டு கணக்கில் படிக்கும் தன்மை இன்றி குறுகிய கால பயிற்சி முறை

  • நடைமுறை வாழ்க்கைக்கு விஞ்ஞான ரீதியாக ஆன்மீகத்தை பயன்படுத்தும் முறைகள்

  • இயல்பு வாழ்க்கையில் மாற்றம் ஏதும் செய்யாமலேயே ஆன்மீக உயர்நிலைக்கு செல்லத்தக்க பயிற்சிகள்

ப்ரணவ பீடத்தின் மெய்ஞான கல்வி சென்ற பிப்ரவரி மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

பயிற்சிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வார இறுதியில் நடைபெறும். கோவையில் இருக்கும் ப்ரணவ பீடத்தின் நகர மையத்தில் பயிற்சிகள் நடைபெறும்.

பயிற்சிகளுக்கு கட்டணம் உண்டு. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கே பயிற்சி அளிக்கப்படும்.

உங்களுக்கு ஆன்மீக கல்வி கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தால் மட்டும் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். பயிற்சி பற்றிய விளக்கம் அடங்கிய தகவல் நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இப்பயிற்சி ஆன்மீக ரீதியாக வெளிப்படையாக கற்றுக்கொடுக்காத பயிற்சிகள் என்பதால் அனைவருக்கும் அனுமதி கிடைக்க வாய்ப்புகள் குறைவு. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறோம்.

அதனால் உங்களுக்கு முழுமையான ஆர்வமும் என்னிடம் நேரடியாக கற்றுக்கொள்ளும் ஆவல் இருந்தால் மட்டும் மின்னஞ்சல் அனுப்புங்கள். மெய்ஞான கல்வியை பற்றி வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் விளக்கம் அளிக்கிறேன். இதை தவிர்த்து உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணாக்க முயலும் கேள்விகளையும் மின்னஞ்சலையும் தவிர்த்தால் நலம்.


தகவல் ஏடு பெற மின்னஞ்சல் அனுப்பும் முகவரி : swamiomkar@gmail.com
சப்ஜெக்டில் “மெய்ஞான கல்வி” (அல்லது) “Vedic Education" என குறிப்பிடவும்.

Tuesday, April 12, 2011

சாமீ....கருமம் கருமம்....!

நம் வாழ்க்கையில் பல வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமலேயே பயன்படுத்துகிறோம் என்பது உண்மை. இன்னும் ஒருபடி மேலே சொன்னால் பல வார்த்தைகள் நான் ஏன் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாமல் பயன்படுத்துகிறோம். நம் கலாச்சாரத்திலும் நம் முன்னோர்களாலும் செம்மையாக பயன்படுத்தபட்ட பழக்கவழக்கங்கள் நாளடைவில் வார்த்தையாகி, அவ்வார்த்தையே வெறும் சொற்களாக நம்மிடையே உலாவுகிறது. அப்படிப்பட்ட வார்த்தை தான் “கருமம்”.

நம் சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் ஆன்மீகத்தை ஒரு பகுதியாக வாழமல், வாழ்க்கையையே ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக வாழ்ந்தார்கள்.

தங்களின் ஒவ்வொரு செய்லும் அர்த்தத்துடன் இருக்க வேண்டும் என விரும்பினார்கள். கர்ம வினைகளால் மனித வாழ்க்கை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து தாங்கள் செய்யும் ஒவ்வொரு கர்மங்களையும் உணர்ந்து தெரிந்து செயல்பட்டார்கள்.

தன் பிறவியின் நோக்கத்தை உணர்ந்து அதற்கு தக்க செயல்பட்டால் கர்மவினைகள் அதிகரிக்காது. கர்மவினை அதிகரிக்காத பட்சத்தில் பல்வேறு பிறவிகள் எடுத்து கஷ்டப்படாமல் முக்தியை அடையலாம்.

இக்கருத்து நம் முன்னோர்களுக்கு ஆழமாக இருந்ததால் கர்மவினையை பற்றிய விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஒருங்கே கொண்டிருந்தார்கள்.

நம் செய்யும் செயல் (கர்மா) என்பது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு போன்றது. அதை மீண்டும் உள்ளே அடைக்க முடியாது, மேலும் அது செல்லும் திசையில் உள்ள இலக்கை அடையாமல் விடாது. குண்டின் இச்செயலை நாம் முடக்க வேண்டுமானல் துப்பாக்கியை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

ஒருவர் தான் எதற்காக பிறந்திருக்கிறோம் எனபதை உணர்ந்து அதற்கு தக்க செயல்படாமல் வேறு விதமான செயலை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் கர்மாவை சேர்க்கிறார் என அர்த்தம்.

உதாரணமாக ஒருவர் ஆசிரியராக இருக்கிறார். அதற்கு தக்க செயலை செய்யாமல் தான் ஒரு ஜவளிக்கடை அதிபராக வேண்டும் என முயல்கிறார் என்றால் அவரின் கர்மா அங்கே நீட்டிக்கப்படுகிறது.

துறவிகள் தங்களின் செயல்களில் சமுதாய பயனுடன் செயல்படுவார்கள். அப்படி செயல்படும் சமயம் தங்களை உணராமல் தன் சுய நலனுக்கு ஏதேனும் செய்துவிட்டால் அது கர்மவினையாக தங்களை தாக்கும் என்று நம்புவார்கள். அவ்வாறு தங்களுக்கு கர்மவினை சேராமல் இருக்க தங்கள் செயலை கண்காணித்து எச்சரிக்கை கொடுக்க சிலரை அருகே வைத்திருப்பார்கள். அப்படி சுய நலன் மேலோங்கும் பொழுது அவர்கள் துறவியின் காதில் “கர்மம் கர்மம்” என கூறுவார்கள். துறவியும் உடனே உணர்ந்து அச்செய்கையை கைவிடுவார்.

இவ்வாறு தமக்கு ஒவ்வாத கர்மாவை செய்யும் பொழுது பிறர் அதை சுட்டிக்காட்டி எச்சரிக்க பயன்படுத்தும் வார்த்தை தான் “கர்மம் கர்மம்”. இவ்வார்த்தையை கேட்டதும் மனம் தெளிந்து அதிலிருந்து விடுபட்டு நற்கதியை அடைவார்கள்.

தமக்கு ஒவ்வாத கர்மம் செய்ததன் பலனை கிரகங்கள் அடுத்த பிறவியில் தீவினையாக அளிக்கிறது. கிரகங்களால் கர்மவினை தாக்கம் பீடிக்கப்பட்டு மன நிலையிலோ அல்லது உடல் நிலையிலோ கஷ்டப்படுவார்கள். இதை கொங்கு மண்டல கிராமங்களில் “கிரகம் புடிச்சவனே” என சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம்.

பிறர் கருமம் செய்வதையும் அதனால் அவர்களின் வாழ்க்கை சிரமத்தையும் எச்சரித்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது. ஆனால் நடைமுறையில் நாம் பல விஷயங்களை எச்சரிக்க தவறுகிறோம்.

உதாரணமாக சென்ற வருடம் ஒரு நடிகை செய்ததை பார்த்து “கருமம் கருமம்” என நீங்கள் எச்சரித்து இருக்க வேண்டும். அல்லது அந்த நடிகையுடன் இருப்பவர் பார்த்து “கிரகம் புடிச்சவன்” என சொல்லி இருக்க வேண்டும். மாறாக இதை டீவியில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து நாமும் கர்மம் செய்தோம்..!

மேலும் உதாரணம் சொல்லலாம். இரு நடிகர்கள். ஒருவர் மற்றொருவரை ஏதோ காரணத்தால் துன்புறுத்திவிட்டார். அது கர்மம் தான். ஆனால் அதை நாம் “கர்மம் கர்மம்” என எச்சரிக்கவில்லை. இப்பொழுது அந்த நடிகர் மற்றொரு நடிகரை குடிகர் என வீதிக்கு வீதி அசிங்கமாக பேசுகிறார். எப்பொழுதோ செய்த கர்மம் கிரகங்களால் பிடிக்கபட்டது பார்த்தீர்களா?

ஆகவே இனிவரும் காலத்தில் இவ்வாக்கியங்களை தவறாக பயன்படுத்தாமல் உள் அர்த்தத்துடன் பயன்படுத்துங்கள்.

டிஸ்கி : இவற்றை நான் எழுதக் காரணம் உங்களின் செயல்களை பார்த்து “கருமம் கருமம்” என எச்சரிக்கத்தான். இதை படித்து நான் “கிரகம் பிடித்தவன்” என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..! :)

Thursday, March 24, 2011

பழைய பஞ்சாங்கம் 24-03-2011

குர்குரே சுப்பிணி

சுப்பாண்டி தன் மகன் சுப்பிணியுடன் வந்திருந்தான். அன்று உணவு பழக்கத்தை பற்றி மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். உணவு நம் வாழ்க்கையை தீர்மாணிக்கிறது. உணவு நம் மனம் மற்றும் செயல்களுக்கு காரணமாகிறது என விளக்கிக் கொண்டிருந்தேன். வேதத்தில் உள்ள வாசகமான “எதை உண்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்பதை உதாரணங்களுடன் விளக்கிக் கொண்டிருந்தேன்.

பேச்சுக்கு நடுவே அழுகையுடன் கூடிய விசும்பல் சப்தம் கேட்டது. சுப்பாண்டியின் மடியில் உட்கார்ந்திருந்த சுப்பிணி அழுது கொண்டிருந்தான். ஏன் அழுகிறாய் என கேட்க, சுப்பிணியோ என்னை பார்த்து கேட்டான்....

“ஸ்வாமிஜீ நான் குர்குரே ஆயிருவேனா?”

------------

தோட்டகார சாமி

புகழ் பெற்ற டீவி நிலையத்திலிருந்து அழைத்து பேட்டி எடுக்க வருவதாக சொன்னார்கள். முன்பு வேறு ஒரு தொலைக்காட்சியில் சில வினாடிகள் வந்ததால் இவர்களும் தங்களின் தொலைகாட்சிக்கு என்னை அழைத்தார்கள் என நினைத்து சரி என்றேன்.

சொன்ன நேரத்தை விட சில மணி நேரம் ஆகியும் யாரும் வந்தபாடில்லை. இவர்களுக்காக காத்திருந்த நான் நேரத்தை விரயமாக்க விரும்பாமல் தோட்டத்தை ஒழுங்குபடுத்த துவங்கினேன். சிறிது நேரம் கழித்து இரு நபர்கள் வந்து “ஸ்வாமி இருக்காரா?” என்ற வழக்கமான நாத்திக கேள்வி கேட்டனர். “நாந்தேன்” என்றேன். கையில் துடைப்பத்துடன் நான் தோட்டத்தில் இருப்பதை கண்டு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. கேமராவை வைத்து விட்டு வந்துவிட்டோம் இதோ வருகிறோம் என சென்றவர்கள் தான் இன்னும் வரவில்லை.

டீவி நிலையத்தில் எனக்கு தெரிந்தவர் தொலைபேசியில் இதன் காரணத்தை கூறினார். உங்கள் தோரணை சரியில்லை என வந்துவிட்டார்கள் என்றார். இவரின் காரணம் சரி என்றே பட்டது. தோட்ட வேலை செய்யும் சாமியை யார் விரும்புவார்கள்? இனி நானும் ஏஸி ரூமில் அமர்ந்து வருபவர்களுக்கு ஆசி வழங்கி என் தோரணையை மாற்றலாம் என இருக்கிறேன்...!
----------------
திருவண்ணாமலை பித்தர்

ஐந்து வருடத்திற்கு முன்பு திருவண்ணாமல் கிரிவலம் வரும் சமயம் அங்கே பைத்தியக்கார தோரணையில் ஒருவர் அமர்ந்திருந்தார். உடை எல்லாம் அழுக்கு, தலை முடி சடைசடையாக இருக்க குளித்தே பல நாள் ஆன தேகத்துடன் அமர்ந்திருந்தார். வாய் ஓயாமல் ஏதோ உளரிக்கொண்டே இருந்தார். நடு நடுவே பல வசுவுகள் என அவரின் உளரலே பயங்கரமாக இருந்தது. மக்கள் அவரை கடக்கும் பொழுது காசை அவர் முன் போட்டு விட்டு சென்றார்கள். அவர் காசை பற்றி கவலைப்படாமல் எங்கோ பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தார்.

நான் இளைப்பாற அங்கே அமர்ந்திருந்தேன். “பிச்சக்காரப்பயலுக பிச்சக்கார பயலுக எனக்கு ஒரு ரூவா போட்டுட்டு போறானுங்க..இவனுகளே அரிசியை ஒரு ரூவாய்க்கு வாங்கி திங்கப்போறாங்க.. XXXXX” என பல வசவுகளுடன் கூறினார். அப்பொழுது புரியவில்லை. அப்புறம் புரிந்தது...!

இந்த முறை சென்ற பொழுது அவர் என்ன சொன்னார் தெரியுமா? குழந்தைகள் பருப்பு கடைஞ்சு விளையாடுறது போல கையில சைகை காட்டிட்டு... அஸ்கு புஸ்கு அஞ்சு வருசம் கழிச்சு தெரிஞ்சுக்க என்றார் :)

சித்தர்களோ பித்தர்களோ இவர்களை புரிஞ்சுக்கவே முடியல..!
----------------------

சொல்லனும்னு தோணிச்சு சொன்னேன்
----------------------------------------------------------

நேற்றும் இன்றும் நாளையும்
மாறும் இவ்வுலகம் இந்த ஷணத்தில் மட்டும்
உறைந்து விடுகிறது

Monday, February 14, 2011

காதல் திருமணம் - தொடர்ச்சி

நானும் கல்லூரி நாட்களில் காதலை பரிசோதித்தது உண்டு. இதை எனக்கு கற்றுக்கொடுத்தவள் மீரா... என்றேன் அல்லவா?

இதில் எத்தனை பொய் இருக்கிறது தெரியுமா? முதலில் நான் கல்லூரி படித்தேன் என்பதும் பிறகு ஒரு பெண் எனக்கு கற்றுக்கொடுத்தாள் என்பதும்..! இங்கே நான் கூறப்போவது எனக்கு ஏற்பட்ட காதலை அல்ல...!

என் நண்பர்களிடையே இருக்கும் காதல் உறவை பற்றி சோதனை செய்வதில் எனக்கு அலாதி பிரியம் உண்டு. காதல் கொண்டவர்களிடம் நான் சில கேள்விகளைத் தொடுப்பேன். அவர்கள் கூறும் பதில் அவர்களின் உண்மையான காதலின் நிலையை காட்டும்.

எதற்காக நீ அவளை/அவனை காதலிக்கிறாய்? - இதுவே என் கேள்வி.

இதற்கு பலர் பதில்கள் பல வண்ணத்தில் இருக்கும்.
அவள் அழகாக இருக்கிறாள்,
அவள் புன்னகையே மிகவும் அழகு, இந்த நடிகை மாதிரி இருக்கிறாள்.
நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான்.
ஹாண்ட்சம்மா இருக்கிறான்.
என்னை நன்றாக பார்த்துக்கொள்வான்.
பொருளாதாரத்தில் நிலையாக இருக்கிறான்.

இப்படி அவர்கள் கூறும் பதிலை கேட்டதும் நான் புன்னகையுடன் கடந்து செல்லுவேன்.
காரணம் இவர்கள் அனைவருக்கும் ஏற்பட்டது உண்மையான காதல் அல்ல.

மனித நிலை என்பது மூன்று தளங்களில் செயல்படுகிறது. உடல்,மனம் மற்றும் ஆன்மா என்பதே அது.

ஆண்-பெண் இருவரை பார்த்து “நல்ல ஜோடி” என நீங்கள் கூறினால் அவர்களின் உடல் தளத்தில்இணைந்திருக்கிறார்கள் என அர்த்தம். நல்ல மனமொத்த தம்பதி என நீங்கள் சிலரை உணர்ந்திருக்கலாம். அவர்கள் மனம் என்ற தளத்தில் இணைந்திருக்கிறார்கள் என அர்த்தம்.

ஆன்மாவில் இணைந்த காதலர்கள் என்பது யாரை சுட்டிக்காட்ட முடியும்? ஆன்மாவில் இணையும் பொழுது தான் அது பூரண காதலாக மலருகிறது. உடலாலும், மனமாலும் ஏற்படும் காதல் எல்லைக்கு உட்பட்டது. ஆன்மாவில் ஏற்படும் காதல் எல்லைகளை கடந்தது.

இத்தகையவர்களிடம் “எதற்காக நீ அவளை/அவனை காதலிக்கிறாய் ?” என கேட்டால், “ தெரியாது” என்பார்கள். இதுவே சரியான பதில்..!

காரணம் ஆன்மாவை உணர முடியுமே தவிர விவரிக்க முடியாது. ஆன்ம ரீதியான காதலும் அத்தகையதே. இவ்வாறு ஏற்படும் காதல் எல்லையை கடந்து பயணிக்கும். அன்பு அங்கே அற்புதங்களை நிகழ்த்தும்.

இது போன்ற ஆன்ம காதலை எனக்கு உணர்த்தியவள் மீரா. பக்த மீரா என அனைவரும் கூறும் ராஜஸ்தானின் ராணியைத் தான் கூறுகிறேன். இவளின் அழகில் மயங்கி சாதாரணமாக இருந்த இவளை அரசன் மணந்து கொண்டான். ஆனால் இவள் இளவயது முதல் கண்ணனே தன் காதலன் என வாழ்ந்து வந்தாள்.

இறைவனை காதலனாக பாவித்தவளுக்கு எப்பொழுதும் பரமானந்தம் கிடைத்தது. ஆடினால், பாடினால் மகிழ்ந்தாள். சிலர் இவளை பைத்தியம் என்றார்கள். கண்ணன் மேல் ஏன் காதல் கொண்டாய்? என இவளின் காணவனே கேட்டான். மீரா என்ன சொன்னாள் தெரியுமா? “எதிர்ப்பார்ப்புடன் செய்யும் சேவை, பக்தி மற்றும் காதல் அனைத்தும் அசுத்தமானது. கண்ணனை நான் காதலிப்பது ஏன் என்பது எனக்கு தெரியாது. கண்ணனே இதற்கு காரணம்..!” என்றாள். கண்ணனை தவிர வேறு எதையும் அறியாதவள் மீரா...

மீராவின் வாழ்வில் நடந்த உன்னத சம்பவம் ஒன்று உண்டு. கிருஷ்ண கானம் பாடிய படியே அவள் பிருந்தாவனத்தில் வலம் வந்து கொண்டிருந்தாள். அங்கே ஒரு ஆன்மீக ஞானியின் ஆசிரமத்தை கண்டு அதனுள் செல்ல முற்பட்டாள். வாயிலில் இருந்தவர்கள் அவளை தடுத்தார்கள். இங்கே ஆண் துறவிகள் இருக்கும் இடம் பெண்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள்.

கல்கண்டை கண்ணாடியில் கொட்டியது போல சிரித்த மீரா கூறினால், “பரந்தாமனை தவிர வேறு யாரும் ஆண்கள் கிடையாது. அதனால் நாம் அனைவரும் பெண்களே..! உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது” என்றாள்.

ஆழ்ந்த வேதாந்த கருத்தை எளிமையாக கூறிவிட்டாள் மீரா. ஆன்மா இணைவது உன்னதமான காதல் என்றேன் அல்லவா? இந்த ஆன்மா பரமாத்தாவுடன் இணைந்தால் எத்தகைய காதலாக இருக்கும்? அப்படி பரமாத்தாவுடன் காதல் கொண்டால் அவர் தவிர வேறு யார் ஆணாக இருக்க முடியும்? அவர் தானே நமக்கு பக்தி என்ற குழந்தையை கொடுக்கிறார். பரமானந்தம் என்னும் அனுபவத்தை அளிக்கிறார். மீரா எப்படிபட்ட உண்மையை கூறினால் பார்த்தீர்களா?

இத்தகைய காதல் சிலருக்கு மட்டுமே இருந்தது. மீரா, சபரி மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் என இறைவனை காதலித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

தற்காலத்தில் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் காதல் பூக்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். மலைகளுக்கு அரசன் தக்‌ஷன். அவனின் மகளான தாக்‌ஷாயினி மிக அழகானவள். அவளின் வாழ்க்கை சுகபோகத்துடன் இருந்தது. அவளுக்கு யார் மேல் காதல் ஏற்பட்டது தெரியுமா? பரமேஸ்வரனின் மேல் காதல் உண்டானது. தாக்‌ஷாயணியும் சிவனும் இணைந்து நின்ற மண கோலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

தாக்‌ஷாயணி நறுமணங்கள் தரிந்து பட்டு உடையுடன் நிற்கிறாள். இங்கே ஈஸ்வரன் மயான சாம்பலுடன் புலி தோல் கட்டிக்கொண்டு நிற்கிறார். தங்கமும் வைரமும் தாக்‌ஷாயணிக்கு, இங்கே பாம்பும் சடையும் பரமேஸ்வரனுக்கு..! அழகிய தோழிகளும், அரசர்களும் தாக்‌ஷாயணிக்கு அருகே, அகோரிகளும் முனிவர்களும் ஈஸ்வரனுக்கு அருகே நிற்க இத்திருமணம் நடைபெறுகிறது. தற்காலத்தில் இப்படி காண முடியுமா? எந்த பெண்ணாவது தாக்‌ஷாயணி போல திருமணம் செய்ய முன்வருவார்களா? அல்லது எந்த ஆணாவது கந்தனை போல வள்ளியை திருமணம் செய்ய தயாராக இருப்பார்களா?

பெண் என்ன படிக்கிறார், திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லுவாளா என்ற கேள்வியே காதலை இவர்களுக்கு முடிவு செய்கிறது..!

நம் கலாச்சாரத்தில் காதல் என்பது ஆன்மீக ரீதியாகவே உணரப்பட்டது. ஆன்மாவில் ஏற்பட்ட காதல் ஆன்மீக ரீதியானது தானே? ஆன்மாக்கள் இணைந்து ஆன்மானுபவம் ஏற்படுவதற்கு ஓர் ஆணும் பெண்ணும் இருக்க வேண்டும் என்பது இல்லை. பரமாத்மா சொரூபத்தில் உங்கள் ஆன்மாவை கரைக்க முயலுங்கள். எல்லையற்ற காதலை உணர வேறு யார் வேண்டும்?

“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என பாடினார்களே அவர்களின் காதலை நீங்களும் பெற வேண்டாமா? காதலியுங்கள், உங்களை காதலியுங்கள். உங்களின் உள்ளே என்றும் பிரகாசிப்பவனை காதலித்து கசிந்து உருகுங்கள்.