Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, February 14, 2011

காதல் திருமணம் - தொடர்ச்சி

நானும் கல்லூரி நாட்களில் காதலை பரிசோதித்தது உண்டு. இதை எனக்கு கற்றுக்கொடுத்தவள் மீரா... என்றேன் அல்லவா?

இதில் எத்தனை பொய் இருக்கிறது தெரியுமா? முதலில் நான் கல்லூரி படித்தேன் என்பதும் பிறகு ஒரு பெண் எனக்கு கற்றுக்கொடுத்தாள் என்பதும்..! இங்கே நான் கூறப்போவது எனக்கு ஏற்பட்ட காதலை அல்ல...!

என் நண்பர்களிடையே இருக்கும் காதல் உறவை பற்றி சோதனை செய்வதில் எனக்கு அலாதி பிரியம் உண்டு. காதல் கொண்டவர்களிடம் நான் சில கேள்விகளைத் தொடுப்பேன். அவர்கள் கூறும் பதில் அவர்களின் உண்மையான காதலின் நிலையை காட்டும்.

எதற்காக நீ அவளை/அவனை காதலிக்கிறாய்? - இதுவே என் கேள்வி.

இதற்கு பலர் பதில்கள் பல வண்ணத்தில் இருக்கும்.
அவள் அழகாக இருக்கிறாள்,
அவள் புன்னகையே மிகவும் அழகு, இந்த நடிகை மாதிரி இருக்கிறாள்.
நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான்.
ஹாண்ட்சம்மா இருக்கிறான்.
என்னை நன்றாக பார்த்துக்கொள்வான்.
பொருளாதாரத்தில் நிலையாக இருக்கிறான்.

இப்படி அவர்கள் கூறும் பதிலை கேட்டதும் நான் புன்னகையுடன் கடந்து செல்லுவேன்.
காரணம் இவர்கள் அனைவருக்கும் ஏற்பட்டது உண்மையான காதல் அல்ல.

மனித நிலை என்பது மூன்று தளங்களில் செயல்படுகிறது. உடல்,மனம் மற்றும் ஆன்மா என்பதே அது.

ஆண்-பெண் இருவரை பார்த்து “நல்ல ஜோடி” என நீங்கள் கூறினால் அவர்களின் உடல் தளத்தில்இணைந்திருக்கிறார்கள் என அர்த்தம். நல்ல மனமொத்த தம்பதி என நீங்கள் சிலரை உணர்ந்திருக்கலாம். அவர்கள் மனம் என்ற தளத்தில் இணைந்திருக்கிறார்கள் என அர்த்தம்.

ஆன்மாவில் இணைந்த காதலர்கள் என்பது யாரை சுட்டிக்காட்ட முடியும்? ஆன்மாவில் இணையும் பொழுது தான் அது பூரண காதலாக மலருகிறது. உடலாலும், மனமாலும் ஏற்படும் காதல் எல்லைக்கு உட்பட்டது. ஆன்மாவில் ஏற்படும் காதல் எல்லைகளை கடந்தது.

இத்தகையவர்களிடம் “எதற்காக நீ அவளை/அவனை காதலிக்கிறாய் ?” என கேட்டால், “ தெரியாது” என்பார்கள். இதுவே சரியான பதில்..!

காரணம் ஆன்மாவை உணர முடியுமே தவிர விவரிக்க முடியாது. ஆன்ம ரீதியான காதலும் அத்தகையதே. இவ்வாறு ஏற்படும் காதல் எல்லையை கடந்து பயணிக்கும். அன்பு அங்கே அற்புதங்களை நிகழ்த்தும்.

இது போன்ற ஆன்ம காதலை எனக்கு உணர்த்தியவள் மீரா. பக்த மீரா என அனைவரும் கூறும் ராஜஸ்தானின் ராணியைத் தான் கூறுகிறேன். இவளின் அழகில் மயங்கி சாதாரணமாக இருந்த இவளை அரசன் மணந்து கொண்டான். ஆனால் இவள் இளவயது முதல் கண்ணனே தன் காதலன் என வாழ்ந்து வந்தாள்.

இறைவனை காதலனாக பாவித்தவளுக்கு எப்பொழுதும் பரமானந்தம் கிடைத்தது. ஆடினால், பாடினால் மகிழ்ந்தாள். சிலர் இவளை பைத்தியம் என்றார்கள். கண்ணன் மேல் ஏன் காதல் கொண்டாய்? என இவளின் காணவனே கேட்டான். மீரா என்ன சொன்னாள் தெரியுமா? “எதிர்ப்பார்ப்புடன் செய்யும் சேவை, பக்தி மற்றும் காதல் அனைத்தும் அசுத்தமானது. கண்ணனை நான் காதலிப்பது ஏன் என்பது எனக்கு தெரியாது. கண்ணனே இதற்கு காரணம்..!” என்றாள். கண்ணனை தவிர வேறு எதையும் அறியாதவள் மீரா...

மீராவின் வாழ்வில் நடந்த உன்னத சம்பவம் ஒன்று உண்டு. கிருஷ்ண கானம் பாடிய படியே அவள் பிருந்தாவனத்தில் வலம் வந்து கொண்டிருந்தாள். அங்கே ஒரு ஆன்மீக ஞானியின் ஆசிரமத்தை கண்டு அதனுள் செல்ல முற்பட்டாள். வாயிலில் இருந்தவர்கள் அவளை தடுத்தார்கள். இங்கே ஆண் துறவிகள் இருக்கும் இடம் பெண்களுக்கு அனுமதி இல்லை என்றார்கள்.

கல்கண்டை கண்ணாடியில் கொட்டியது போல சிரித்த மீரா கூறினால், “பரந்தாமனை தவிர வேறு யாரும் ஆண்கள் கிடையாது. அதனால் நாம் அனைவரும் பெண்களே..! உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது” என்றாள்.

ஆழ்ந்த வேதாந்த கருத்தை எளிமையாக கூறிவிட்டாள் மீரா. ஆன்மா இணைவது உன்னதமான காதல் என்றேன் அல்லவா? இந்த ஆன்மா பரமாத்தாவுடன் இணைந்தால் எத்தகைய காதலாக இருக்கும்? அப்படி பரமாத்தாவுடன் காதல் கொண்டால் அவர் தவிர வேறு யார் ஆணாக இருக்க முடியும்? அவர் தானே நமக்கு பக்தி என்ற குழந்தையை கொடுக்கிறார். பரமானந்தம் என்னும் அனுபவத்தை அளிக்கிறார். மீரா எப்படிபட்ட உண்மையை கூறினால் பார்த்தீர்களா?

இத்தகைய காதல் சிலருக்கு மட்டுமே இருந்தது. மீரா, சபரி மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் என இறைவனை காதலித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

தற்காலத்தில் எதிர்ப்பார்ப்பு இல்லாமல் காதல் பூக்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். மலைகளுக்கு அரசன் தக்‌ஷன். அவனின் மகளான தாக்‌ஷாயினி மிக அழகானவள். அவளின் வாழ்க்கை சுகபோகத்துடன் இருந்தது. அவளுக்கு யார் மேல் காதல் ஏற்பட்டது தெரியுமா? பரமேஸ்வரனின் மேல் காதல் உண்டானது. தாக்‌ஷாயணியும் சிவனும் இணைந்து நின்ற மண கோலத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

தாக்‌ஷாயணி நறுமணங்கள் தரிந்து பட்டு உடையுடன் நிற்கிறாள். இங்கே ஈஸ்வரன் மயான சாம்பலுடன் புலி தோல் கட்டிக்கொண்டு நிற்கிறார். தங்கமும் வைரமும் தாக்‌ஷாயணிக்கு, இங்கே பாம்பும் சடையும் பரமேஸ்வரனுக்கு..! அழகிய தோழிகளும், அரசர்களும் தாக்‌ஷாயணிக்கு அருகே, அகோரிகளும் முனிவர்களும் ஈஸ்வரனுக்கு அருகே நிற்க இத்திருமணம் நடைபெறுகிறது. தற்காலத்தில் இப்படி காண முடியுமா? எந்த பெண்ணாவது தாக்‌ஷாயணி போல திருமணம் செய்ய முன்வருவார்களா? அல்லது எந்த ஆணாவது கந்தனை போல வள்ளியை திருமணம் செய்ய தயாராக இருப்பார்களா?

பெண் என்ன படிக்கிறார், திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லுவாளா என்ற கேள்வியே காதலை இவர்களுக்கு முடிவு செய்கிறது..!

நம் கலாச்சாரத்தில் காதல் என்பது ஆன்மீக ரீதியாகவே உணரப்பட்டது. ஆன்மாவில் ஏற்பட்ட காதல் ஆன்மீக ரீதியானது தானே? ஆன்மாக்கள் இணைந்து ஆன்மானுபவம் ஏற்படுவதற்கு ஓர் ஆணும் பெண்ணும் இருக்க வேண்டும் என்பது இல்லை. பரமாத்மா சொரூபத்தில் உங்கள் ஆன்மாவை கரைக்க முயலுங்கள். எல்லையற்ற காதலை உணர வேறு யார் வேண்டும்?

“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி” என பாடினார்களே அவர்களின் காதலை நீங்களும் பெற வேண்டாமா? காதலியுங்கள், உங்களை காதலியுங்கள். உங்களின் உள்ளே என்றும் பிரகாசிப்பவனை காதலித்து கசிந்து உருகுங்கள்.

காதல் திருமணம்

காதல் திருமணம்
-மனதின் ரசாயன மாற்றம்

சமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு. ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள்.

தற்கால சமுதாய நிலையில் காதல் திருமணங்கள் பற்றி முதிர்ந்த வயதுள்ளவர்களை கேட்டால் “எல்லாம் கலிகாலம்” என நொந்து கொள்வார்கள். உண்மையில் அனைத்து யுகத்திலும் காதல் திருமணம் இருந்தது என்பதற்கான ஆதாரம் உள்ளது. நவீன நாகரீகம் படைத்தவர்கள் எனும் பெயரில் மேற்கத்திய உடையில் வலம் வரும் இளைய சமுதாயம் பழைய காலம் என்பது காதலுக்கு எதிரானது என்ற புரிதலில் உள்ளார்கள்.

அடிப்படையில் தற்காலத்தில் காதல் உணர்வு வருவதற்கு முற்காலத்தில் முன்னோர்களின் செயலால் நம்முள் ஏற்பட்ட சமஸ்காரங்கள் பரம்பரையாக தொடர்ந்து வருவதே காரணம். கலியுகம் என கூறும் முதியவர்களுக்கும், பழங்காலம் எனும் இளைய சமுதாயத்திற்கும் தெரிவிக்க வேண்டிய ஓர் விஷயம் உண்டு.

துவாபரயுகத்தில் பகவான் ஸ்ரீராமரும், திருதாயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரும் செய்தது என்ன? காதல் என்பது யுக யுகாந்திரமாக தொடர்வது. 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் காதல் இருந்திருக்கிறது. காதல் திருமணங்களும் நடந்திருக்கிறது. மனித இனம் தோன்றியதும் முதலில் இருந்தது காதலும், அதனால் இணைதலும் தானே? பின்பு நாகரீகம் என்ற பெயரில் அன்பு வர்த்தகமாக மாற்றமடைந்ததும் திருமணம் பெரியோர்களால் நிட்சயிக்கப்பட்டது..!

இதன் மூலம் காதல் திருமணம் மட்டுமே நல்லது என கூறவில்லை. திருமண முறைகளில் அதுவும் ஒரு வகை. அதனால் கீழாக பார்த்து ஒதுக்கும் கலாச்சாரம் நம்மில் உள்ளது, அதை களைய வேண்டும் என்பதே என் கோரிக்கை. பலர் காதல் திருமணம் என்பதை கந்தர்வ விவாஹகம் என புராணங்களில் கூறப்பட்டதாக விளக்குகிறார்கள். கந்தர்வ திருமணம் கூறப்பட்டதை தற்காலத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

கந்தர்வ திருமணம் என்பதை விளக்கினால் பல கலாச்சார காவலர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஒரு ஆணும் பெண்ணும் தங்களிடையே ஈர்ப்பை உணர்ந்தால், அவர்களாகவே இணைந்து மகிழ்வது கந்தர்வ நிலை. அவர்கள் குடும்பமாக இருக்க மாட்டார்கள், மேலும் அவர்களிடையே நீடித்த பந்தம் இருக்க வேண்டும் என்பது இல்லை. இருவரின் பின்புலத்தையும் கூறிக்கொள்ள தேவை இல்லை. திருமணமான ஒரு பெண் தன் கணவனிடம் தான் கந்தர்வ மணம் கொண்ட மற்றொருவரை அறிமுகபடுத்தி வாழ்ந்த காலம் அது. நினைத்து பார்த்தாலே ஜீரணக்க முடியவில்லை அல்லவா? ஆனால் நடந்தது.
மேலை நாட்டில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம்கள் அறிது. இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் அங்கே பிரிவுகளும் அதிகம். இந்தியாவில் நிச்சயக்கப்பட்ட திருமணம் ஒருவிதத்தில் பிரிவுகளையும் பல துணை தேடும் நோக்கத்தையும் தடை செய்கிறது.

இதனால் காதல் திருமணம் நல்லதா அல்லது நிச்சயக்கப்பட்ட திருமணம் நல்லதா என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. விவாஹத்திற்கே வராதவன் விவாதத்திற்கு வருவேனா?

எத்தகைய திருமணமாக இருந்தாலும் அடிப்படையில் இருவரின் உள்ளப்புரிதலே தேவை. அதனாலேயே மணவாழ்க்கை நிலை பெற முடியும்.

நானும் கல்லூரி நாட்களில் காதலை பரிசோதித்தது உண்டு. இதை எனக்கு கற்றுக்கொடுத்தவள் மீரா...

சாமீ நீங்களுமா என கேட்பது புரிகிறது...

(காதல் வரும்)

Sunday, January 30, 2011

விரைவில்.....!

திருமந்திரத்தை மக்களிடம் சேர்க்க எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகள் மூலமாகவும் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். டிவிட்டரும், குறுஞ்செய்தி மட்டுமே பாக்கி..!

இதன் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமந்திரங்கள் தொகுப்பாக ஒளி/ஒலி வடிவில் வெளியிட இருக்கிறோம். தித்திக்கும் திருமந்திரம் எனும் வீடியோவின் முன்னோட்டம் இதோ.



தித்திக்கும் திருமந்திர வீடியோவை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் ஏதேனும் தொலைக்காட்சி வழியாக தினமும் காலை ஆறு மணிக்கு உங்கள் வீடு வரை வந்து தொல்லை கொடுக்க வேண்டி வரும். :)

Monday, January 17, 2011

பழைய பஞ்சாங்கம் 17-ஜனவரி-2011

உண்மையாகவே இது பழைய பஞ்சாங்கம் தான். காரணம் கடந்த மூன்று மாதமாக எழுதாமல் அனைத்தையும் சேர்த்து இன்று எழுத போகிறேன். உங்கள் நேரம் அப்படி..!

மீனாச்சிபுரம்

வாகனத்தில் அந்த ஊருக்கு செல்ல பயணித்துக் கொண்டிருந்தேன். டிரைவர் ஊர் வந்து விட்டதாக சொன்னார். எனக்கு வந்ததே கோபம்,

“டிரைவர் என்னய்யா என்னை பார்த்தா காதில கடுக்கன் போட்ட ஆளா தெரியுதா? ஒரு போஸ்டரும் இல்லை பேனரும் இல்லை, இங்க என்னை இறக்கிவிட்டு மதுரைய்னு ஏமாத்த பார்க்கிரையா?” என்றேன். “நாங்க எல்லாம் மாறிட்டோமப்பு” என்றார் டிரைவர்.

மதுரையில் ஜோதிட வகுப்புக்காக கடந்த டிசம்பர் மாதம் சென்றிருந்தேன். மதுரை மக்களுக்கு ஜோதிட ஆர்வம் அதிகம் என்பது அவரிகளின் தொலைபேசி விசாரிப்பு மூலம் தெரிந்தது. 30 நபர்களுக்கான வகுப்பில் முன்பதிவு செய்தவர்கள் எழுபது நபர்களுக்கும் அதிகம். பிறகு அதில் தேர்ந்தெடுத்து முப்பது நபர்களுக்கு அனுமதித்தோம். இது தவிர வகுப்பு அன்று முன்பதிவு செய்யாமல் வந்தவர்கள் பலர் என மதுரை அதகளமான வரவேற்பை ஜோதிடத்திற்கு அளித்தது.

மதுரை வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள்

மதுரையில் பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முக்கியமாக சீனா ஐயாவின் வரவேற்பும், தருமி ஐயாவுடனான கலந்துரையாடலும், ஸ்ரீயுடனான பேச்சும் மிக சுவாரசியம். என்ன பேசினோம் என தெரிந்துகொள்ள இங்கே கிளிக்குங்கள்.
-----

ஸ்ரீசக்ர புரி

புனித பயணமாக ஸ்ரீசக்ரபுரிக்கு சென்றோம். எளிய குழு மற்றும் ஆர்வமிகு மக்கள் என பயணம் மிக சுவாரசியமாக இருந்தது. ஆன்மீக ஆற்றல் மிக்க இடங்களையும், குகைகளையும் கண்டு மகிழ்ந்தோம். மூன்று நாள் பயணமாக சென்ற எங்களுக்கு நான்காம் நாளாக பருவத மலைக்கு செல்லும் ஆசி கிடைத்தது. மூன்று நாள் பயணத்தை நான்கு நாட்களாக்கி அற்புத மலையான பருவத மலைக்கு சென்றோம். அனைவரும் தரிசிக்க வேண்டிய இடம் பருவதமலை. பயப்படாதீர்கள் கண்டிப்பாக இது பற்றி தொடர் எழுத மாட்டேன் :)
ஸ்ரீசக்ரபுரி பயணத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர்
--------

சபரிமலை

சபரிமலை தொடர் பலரை சென்று அடைந்தது மகிழ்ச்சி. பல்வேறு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் என்னை எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. அரசியல் மற்றும் தொலைக்காட்சி துறையில் பல பிரபலங்கள் என்னை தொடர்பு கொண்டது அதிச்சியான விஷயம் கூட. விஜய் தொலைகாட்சியில் கடுகளவு பேட்டி, சில பத்திரிகையில் அழைப்பு என சபரிமலை அதிர்வுகளை உண்டாக்கியது என்பதை உணர்ந்தேன்.

அதே போல சிலர் “ஸ்வாமி நீங்க ஓவரா கண்டிஷன் சொல்றீங்க. இந்த வழி பின்பற்றினால் தான் சபரிமலை போகனும்னா, ஒரு பயலும் போக முடியாது” என்றனர். நீங்கள் விண்வெளி வீரராக இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் செல்லுவதை போன்றது நியதியை கடைபிடிக்க முடியாமல் விரதம் இருப்பதும் என விளக்கினேன்.

இவர்கள் இப்படி செல்வதால் அங்கே விபத்துக்கள் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 20 நபர்கள் சபரிமலை பயணத்தில் இறந்து விடுகிறார்கள் என அங்கே இருக்கும் மருத்துவ அதிகாரி கூறுகிறார். இந்தவருடம் கொஞ்சம் அதிகம். இவர்களை எல்லாம் ஐயப்பன் காப்பாற்றமாட்டாரா என நாத்திகம் கேட்கிறார்கள் சிலர். குடித்து விட்டு ப்ரேக் இல்லாமல் வாகனம் ஓட்டினால் போலீஸ் காப்பாற்ற மாட்டார்களா என்பதை போன்றதேஇக்கேள்வி...!

இங்கே துறவியாக ‘இறந்து’ உண்டால் அங்கே மீண்டும் இறக்க தேவையில்லையே..!

----------

புத்தக கண்காட்சி

சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். ஒரு இலக்கியவாதியாக ஃபார்ம் ஆயிட்டாலே இது போன்ற நிகழ்வுக்கு செல்ல வேண்டி இருக்கிறது :). புத்தக கண்காட்சி பற்றி தனி பதிவே போடலாம். அங்கே நண்பர்களையும் பல பதிவர்களையும் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. பிரபல இலக்கிய செம்மல்களையும் சந்தித்தேன்.

அங்கே அனைத்து ஸ்டால்களையும் பார்வையிட்ட வண்ணம் செல்லும் பொழுது மாணவர்களுக்கான அறிவியல் கருவிகள் விற்கும் கடையை கண்டேன். ஒரு திசைக்காட்டியை வாங்கினேன். என் அருகே இருந்த பதிவர், “சாமி இது எதுக்கு வாங்கறீங்க ?” என கேட்டார். “அப்பத்தானே கிழக்கு பதிப்பகம் எங்கே இருக்கு என கண்டுபிடிக்க முடியும்” என்றேன். அதுவரை என்னுடன் வந்தவர் அவசர வேலை என சென்றுவிட்டார். :)

கோவை திரும்பியதும் தான் நான் நன்றாக ஏமாற்றப்பட்டது தெரிந்தது. திசைக்காட்டியில் முள் வடக்கு திசையை மட்டுமே காட்டுகிறது, மற்ற ஏழு திசைக்கு முள் நகர்வதே இல்லை..!