Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, July 30, 2010

எனக்கு சாருன்னா பிடிக்காது....!

எந்த ஒரு விஷயமும் திடீரென நமக்கு பழக்கமாகி விடுவதில்லை. பாரம்பரியமாகவோ, ரத்ததிலேயே ஊரியோ அல்லது நாகரீகம் கருதியோ தான் அப்பழக்கங்கள் நாம் கொண்டு செல்லுகிறோம்.

உதாரணமாக ரயில் பயணத்தில் பரிசோதகர் உங்கள் சீட்டை சரிபார்த்தவுடன் அவரை பார்த்து ‘நன்றி’ என கூறிப்பாருங்கள். சட்டென உங்களை ஒரு முறை ஆழமாக பார்த்துவிட்டு நகர்வார். இதற்கு காரணம் அவரிடம் எவரும் நன்றி சொல்லுவதில்லை. அவர் தான் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறாரே என்ற நினைப்பு நமக்கு. இவ்வாறு பழங்கங்களில் மட்டுமல்ல சொற்களையும் மொழியையும் பயன்படுத்துவதிலும் நம் மக்களிடம் பல்வேறு நிறை குறைகள் உண்டு.

நம் மக்களிடையே ஒரு பழக்கம் உண்டு ஏதேனும் ஒரு வார்த்தை அவர்களிடம் சிக்கிவிட்டால் அதன் பொருள் தெரிந்துகொள்ளாமலேயே ஆழ்ந்து பயன்படுத்துவார்கள்.

காட்சு பிடிக்கிறது, க்யூ வரிசையில் வருவது என ஆங்கிலத்தில் கூறும் வார்த்தையே தமிழிலும் இணைத்து சொல்லுவார்கள். Catch என்றாலே பிடிப்பது தானே? இது இணைத்து சொல்லுகிறோம் என்ற பிரக்ஞையே இருக்காது நமக்கு. இது போல எத்தனையோ வார்த்தைகள்.

படிக்காதவர்கள் தான் இப்படி என்று இல்லை. நான் சந்தித்த ஒரு நகரின் ஆட்சியர் (கலெக்டர்) கூட என்னிடம் பேசும் பொழுது இப்படி பட்ட தவறுகளை செய்தார். உதாரணமாக, “நான் ஃபிரியாதான் இருக்கேன். நீங்க உங்க விஷயத்தை பிரீஃப்பா சொல்லுங்க” என்றார்.

நாம் கூட நண்பர்களிடம் “பிரீஃப்பா பேசனும் வா” என கூறி இருப்போம். உண்மையில் பிரீஃப் (brief) என்றால் குறுகிய , சுருக்கமான என பொருள். அதனால் தானே சிறிய அளவில் கோப்புகளை வைக்கும் பெட்டியை பிரீஃப் கேஸ் என கூறுகிறோம். பிரீஃபா பேசுவது என்றால் விரிவாக பேசுவது என்றே நாம் நினைத்திருக்கிறோம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நம்மில் பல வார்த்தைகள் இப்படி புரிதல் இல்லாமலே வெளி வந்துவிடும். பல வசவு சொல்கள் கூட சகஜமாக புழக்கத்தில் உள்ளதை காண முடிகிறது. அதை பெருமையாகவும், நாகரீகம் மற்றும் நகைச்சுவை என்ற பெயரிலும் மனிதர்கள் பேசிக்கொள்கிறார்கள். விழிப்புணர்வு குறைவாக இருப்பவர்கள் மட்டுமே தான் பயன்படுத்தும் வார்த்தையின் ஆழம் மற்றும் அர்த்தம் உணராமல் பயன்படுத்துவார்கள்.

விழிப்புணர்வு கொண்டவர்களுக்கு வார்த்தை ஒரு மந்திரம், விழிப்புணர்வு அற்றவர்களுக்கு எச்சில் போன்றது. இரண்டுமே வாயிலிருந்து வந்தாலும் பயன் வேறுபடுகிறது.

பலர் அப்படி பேசலாம் நான் அப்படி அல்ல, மிகத்தெளிவானவன் என நீங்கள் கூறினீர்கள் என்றால் அது உலகமகா பொய். நீங்கள் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அந்த தவறை செய்வீர்கள்.

முன் பின் தெரியாத ஒரு நபரை சந்தித்தோம் என்றால் அவரை அழைக்க, “சார்” என்போம். இது மிகவும் தவறான சொல் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.

முன்னூறு வருடங்களால நம்மை அடிமை படித்தி இருந்த ஆங்கிலேயர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த அடிமை வார்த்தையே “சார்”. ஓர் அடிமை தனது முதலாளியை பார்த்து பதில் அளிக்கும் வார்தையே இது. ஆங்கில அதிகாரிகளை சார் என்றும் பெண்களை மேடம் என்றும் பல்வேறு ஆண்டுகளாக அழைத்து பழகிய நாம் எங்கே சென்றாலும் அவ்வாறு அழைக்கிறோம். ஒவ்வொரு முறையை சார் என பிறரை அழைக்கையில் நீங்கள் ஒரு அடிமை என்பதை நீங்களே பதிவு செய்கிறீர்கள்....!

இந்தியர்கள், அப்ரிக்க மக்களை ‘நீக்ரோ’ என்ற சொல்லாடலில் பயன்படுத்துவார்கள். இது மிகவும் கொடூரமான ஒரு சொல். பிறப்பால் அடிமையானவன் என்ற அர்த்தம் கொண்டது இவ்வார்த்தை. இதை அப்ரிக்கர்கள் மிகவும் வெறுப்பார்கள். வெளிநாடு செல்லும் இந்தியர்கள் நம் ஊரில் அவர்களை அழைத்தது போலவே அழைத்து முன் பல் இழந்து நிற்பார்கள். இனியாவது அப்ரிக்கன் என அவர்களை கூறுங்களேன்.

பிறரை அழைக்க 'Sir', 'Boss' என அழைப்பதைக்கூட நீங்கள் பார்த்திருக்கலாம். இது நம்மில் இருக்கும் அடிமட்ட அடிமை உணர்வே காரணம். பிறரை ‘அண்ணா’, ‘அக்கா’ அல்லது பெயர் மூலமோ அழையுங்கள். உணர்வுபூர்வமாக அழைப்பதால் அவர்களுடன் நெருக்கமும் ஏற்படும்.

நான் பல்வேறு இடங்களில் பயணிக்கும் பொழுது என்னை ‘சார்’ என அழைப்பதை பார்த்து எனக்கு மிகவும் சங்கடமாக உணர்வேன். எல்லோரையும் எனக்கு இணையாகவும் சமமாகவும் பார்க்கும் நிலையில் அவர்களாகவே சார் என அழைத்து அவர்களை கீழேயும் என்னை மேலையும் வைத்து தர்ம சங்கடப்படுத்துவார்கள். அமெரிக்க ஜனாதிபதியை கூட நீங்கள் பெயர் சொல்லி அழைக்கலாம். சார் என அழைக்கக் கூடாது - என்ற வெள்ளை மாளிகை குறிப்புகள் உண்டு. ஆனால் நாம் இன்னும் அடிமையாகவே இருக்க விரும்புகிறோம்.

என்னை பெயர் சொல்லி அழையுங்கள் அல்லது வேறு வார்த்தையில் அழையுங்கள். சார் என்று மட்டும் அழைக்காதீர்கள்.

ஏன் என்றால்...
சாருன்னா எனக்கு பிடிக்காது...!

Wednesday, July 28, 2010

பழைய பஞ்சாங்கம் 28-ஜூலை - 2010

சன்யாசியானவர்

எனது நீண்ட நாள் மாணவர் ஒருவர் மிக சோகத்துடன் வந்து, “சாமி எனக்கு சன்யாசம் ஆயிடுச்சு” என்றார். தற்கால நவீன ஆஸரமங்களில் தான் ரூபாய்க்கு இரண்டு சன்யாசம் தருகிறார்களே அப்படி ஏதும் வாங்கிவிட்டாரோ என புரியாமல் விழித்தேன்.

அவரே தொடர்ந்தார், “ என் பையன், என் பேச்சை மீறி வேறு ஜாதி பெண்ணை கல்யாணம் செஞ்சுட்டான். என் சன்-நாசம் ஆயிடுச்சு சாமி..!” என்றார். புத்தர சோகத்திலும் அவரின் குறும்பு மட்டும் குறையவில்லை.
--------------------------------------
படிக்காதவள்...!

தன் மகள் கல்லூரியில் படிப்பதில்லை நீங்க தான் அவளுக்கு அறிவுரை சொல்லி படிக்கவைக்கனும் என ஒரு நடுத்தர வயது தந்தை என்னிடம் வந்தார். ஐயா நானோ அஞ்சாப்பு ஆ பிரிவு கூட தாண்டாதவன் நான் எப்படி அறிவுரை சொல்ல என கேட்டேன். அறிவுரை சொல்லுவது என்பதே எனக்கு பிடிக்காது, இதில் நான் கடைபிடிக்காத விஷயத்தை பற்றி வேறு அறிவுரையா என தவிர்த்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை

தன் மகளை அழைத்து வந்தார். வந்ததிலிருந்து அந்த பெண் தன் கையில் இருந்த செல்போனை விரலால் துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டே இருந்தார். அவ்வளவு அழுக்காகும் அளவுக்கு அந்த பெண்ணின் செல் போனில் அழுக்கு இருக்கிறதா என எட்டிப்பார்த்தேன். அது ஐ-போன்..!

இனி வரும் பரிணாமத்தில் மனிதனின் ஆள்காட்டி விரல் தட்டையாகவும் விரல் ரேகை இன்றியும் பிறப்பார்கள் என நினைக்கிறேன். முடிவில் அந்த பெண் படித்தாளா என கேட்கிறீர்களா? அவர் தந்தையிடம் ஐ-போனில் பாடங்களை இணைக்கும் படி கூறினேன்.

-----------------------------------------

உயிர் போகும் ‘மணி’தர்கள்

சென்னையில் ஒரு நண்பரை தொடர்பு கொள்ள அவரின் கைபேசிக்கு அழைத்தேன். இணைப்பு கிடைத்ததும்... திடீரென “உயிரே போகுதே உயிரே போகுதே” என சப்தம் வரவே...தொடர்பை துண்டித்து 108க்கு தொடர்பு கொண்டு அவரை காப்பாற்ற முயற்சித்தேன். அதற்கு முன் அவரே என்னை அழைத்து சாவகாசமாக, “என்ன சாமி மிஸ்டு கால் குடுக்கறீங்க” என்றார். விசாரித்ததில் அது ரிங்டோனாம். என் உயிர் சில வினாடிகளில் போயிவந்தது தான் மிச்சம்..! நல்லாவைக்கறாங்கப்பா ரிங் டோனை...

-------------------------------------------
பதில் சொல்ல முடியாத கேள்வி

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ப்ராண வித்யா பயிற்சிகள் மிகச்சிறப்பாக அமைந்தது. அதில் கலந்து கொண்ட மாணவர்களும் அவர்களின் ஈடுபாடும் வளர்ச்சியான பாதையில் இருந்தது. அதில் அனேகர் இந்த வலைப்பதிவை படிப்பவர்கள் என்பது தெரிந்து மகிழ்ந்தேன்.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் அளித்தாலும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்க முடியவில்லை. அந்த கேள்வி கட்டுரையின் கடைசியில்....

ப்ராண வித்யா மூலம் ஏராளமான ஹீலர்களை உருவாக்கி அவர்கள் மூலம் ஓர் விழிப்புணர்வு சமுதாயத்தை காணும் நோக்கம் என்னுள் உண்டு. அதை படிப்படியாக அறக்கட்டளை நோக்கில் செயல்படுத்தும் எண்ணம் உண்டு. உங்களில் பலரும் என்னுடன் கைக்கோர்ப்பீர்கள் என எண்ணுகிறேன்.
--------------------------------------------
கோவிந்தா....கோ....விந்தா..

வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சனி அன்று கோவையில் இருக்கும் ஒரு மலைக்கோவிலுக்கு செல்லும் திட்டம் உண்டு. விருப்பம் கொண்டவர்கள் கலந்து கொள்ளலாம். பால மலை ரங்க நாதர் கோவில் என்ற மலைக்கோவில் கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு அருகே உண்டு. எதில் இருக்கும் மலைப்பாதை எல்லோரும் ஏறி வருவதற்கு வசதியான அமைப்பில் இருக்கும். உடல் ஆரோக்கியமும் ஆன்மீக வளர்ச்சியும் பெற எவ்வயதினரும் கலந்து கொள்ளலாம். காலை 6 மணிக்கு ஆர்.எஸ் புரத்தில் இருந்து மலை புறத்திற்கு பயணம் துவங்கும்.

இதில் கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் ஒரு கண்டீஷன் மட்டும் உண்டு..!

1) சரியான நேரத்திற்கு வர வேண்டும்...(இது உங்களுக்கு நல்லது)
2)சிறிய அளவு உணவு பதார்த்தங்களை கொண்டு வர வேண்டும்.(இது எனக்கு நல்லது).

மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்
---------------------------------------------------
அந்த பதில் சொல்ல முடியாத கேள்வி

சுப்பாண்டி உங்க கூட வந்திருக்காரா?

Friday, July 23, 2010

டிவிட்டரில் குரு - சிஷ்யன்

எழுத்து என்பது பல்முக வடிவம் கொண்ட ஊடகம். முன்பு பனை ஓலை, கல்வெட்டு, செப்பு பட்டையம் என பல்வேறு வடிவில் இருந்த எழுத்து அறிவியல் முன்னேற்றத்தால் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

அறிவியல் முன்னேற்றத்தின் பயனாக செய்தி பரிமாற்றத்தின் இடைவெளியும் குறைந்து மக்கள் செய்தியால் நிரம்பி வழியும் நிலைக்கு நம் ஊடகங்கள் வைத்திருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் மனிதன் கடக்கும் செய்தியை எடுத்துக் கொண்டால் அவனின் மூளையின் வேகத்திற்கு இணையாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

ஊடகத்தின் பரிமாணமாக குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் முறை தற்சமயம் பரவலாக இருக்கிறது. அரசாங்கம் கூட குறுஞ்செய்தி பயன்படுத்தி விழிப்புணர்வு செய்தியை கொடுக்க துவங்கி உள்ளது.
பலர் இதனால் கெடுதல் உண்டாகிறது என்றும் மனச்சிதறல் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

உண்மையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இருக்கும் எந்த ஒரு ஊடகத்தையும் அற வழியில் பயன்படுத்தினோமானால் அதனால் அந்த ஊடகத்திற்கும் நமக்கும் கேடில்லை.

முதலில் இணையம் தோன்றிய காலத்தில் ஆன்மீகவாதிகள் இணையத்தை பயன்படுத்தலாமா என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. இன்றோ வலைதளம் இல்லாத ஆன்மீக குழு என்பதே இல்லை என்பது நிதர்சனம்.

மின்னஞ்சலை கூட ஆன்மீகவாதிகள் பயன்படுத்தலாமா? அதில் ‘அட்டாச்மெண்ட்’ உண்டே என்றல்லாம் சிந்தித்த புத்திசாலிகள் பலர் உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புக்களை மக்களால் அதிகம் நுகரப்படும் ஊடகங்களை ஆன்மீகத்திற்காக பயன்படுத்தினால் தவறு இல்லை என்பது எனது கருத்து.

ஒரு ஊடகம் மக்களை கெடுக்கிறது என கூக்குரல் எழுப்புவதைக் காட்டிலும் அந்த ஊடகத்தை நல்வழியில் பயன்படுத்தி காட்டுவதே ஆன்மீகவாதிகளுக்கு அழகு.

இப்படி நான் கொண்ட கருத்துக்களால் டிவிட்டர் (twitter.com) என்ற சேவையை பயன்படுத்த துவங்கினேன். 140 எழுத்தில் நம் கூற விரும்பும் கருத்தை கூறிவிடலாம். இது செல் போன் குறுஞ்செய்திக்கு ஒப்பானது.
உலகில் பலரால் பயன்படுத்தபட்டு வருகிறது. சிலர் நான் காலையில் எழுந்தேன், காப்பி குடித்தேன் என தங்களின் செயல்களை எழுதுகிறார்கள். சிலர் உத்தியோக விஷயங்களை கூறுகிறார்கள். பலர் நண்பர்களுடன் பேசி மகிழ்கிறார்கள்.

நமக்குத்தான் மேற்கண்ட விஷயங்கள் வராதே...! அதனால் குரு சிஷ்ய கதைகளை டிவிட்டரில் எழுத துவங்கிவிட்டேன். 140 எழுத்துக்குள் குறுங்கதையாகவும் அதுவே குரு கதையாகவும் இருக்க வேண்டும் என்ற சவாலில் சில கதைகள் எழுதி விட்டேன். அவற்றில் ஒரு டஜன் கதைகள் உங்களுக்காக...
>--------------------------
அற்புதமான தருணம் எது என்ற கேட்ட சிஷ்யனிடம் கூறினேன்.”நான் இல்லாமல் போவது” என்னை கொன்றான் சிஷ்யன்..! #1

தினமும் வேதம் படித்த சிஷ்யனின் வேத புத்தகத்தை பிடுங்கி எரித்தேன். தீய்ந்து கருகிய வாசம் வந்தது. சிஷ்யனின் உள்ளே நறுமணம் வீசத்துவங்கியது- #2

குண்டலினி சக்தியை தட்டி எழுப்ப என்ன செய்ய வேண்டும் என கேட்டான். தட்டி எழுப்ப அது என்ன எருமை மாடா? என்றேன் என் எருமை மாடு சிஷ்யனிடம். #3

எங்கும் கடவுள் நிறைந்திருக்க கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்றால் சிஷ்யன். அங்கும் இருக்கிறார என காண் என்றார் குரு..! #4

தலை முடியை மழித்தால் ஆன்மீகவாதியாகி விடுவேனா என கேட்டான் சிஷ்யன்.நார் உறிக்கப்பட்ட தேங்காய் ஒன்றை காட்டி,ஆன்மீக தேங்காய் என்றார் குரு- #5

ஞானம் அடைய குரு தேவையா என கேட்டான் சிஷ்யன். புன்சிரிப்புடன்,” குருவை அடைய ஞானம் தேவை” என்றார் குரு. #6

சிஷ்யன் : ஆன்மீகமாக இருக்க வெங்காயம் பூண்டு தவிர்க்க வேண்டுமா? குரு-இறைவன் படைப்புகளை ஒதுக்கும் ஆணவம் இருக்கும் நீ எப்படி ஆன்மீகனாவாய்? #7

குடும்ப நபர்களை காட்டிலும் உங்கள் மேல் எனக்கு ஈடுபாடு வர என்ன காரணம் குருவே என்றான் சிஷ்யன்.குரு:அவர்கள் இரத்த உறவுகள், நாம் உயிர் உறவுகள்#8

சிஷ்யன்:உருவவழிபாடு தேவையா? குரு : உன்னை நீ உடலாக நினைக்கும் வரை உருவம் வேண்டும். உடலை கடந்தால் அனைத்தும் அருவமே. ஏன் என்றால் தத்வமஸி..!#9

சிஷ்யன்:மனிதனுக்கு மட்டும் தானே குரு தேவைப்படுகிறார். விலங்குகளுக்கு குரு உண்டா?குரு:மனிதன் என்ற ஆணவம் உனக்கு.ஆகையால் கூறியும் பயனில்லை.#11

சிஷ்யன் : குருவே நான் என்று குரு நிலை அடைவேன்? குரு : என்று நீ சிஷ்யன் ஆகிறாயோ அன்றே அது முடிவாகும். #12

--------------------

Thursday, July 22, 2010

குரு பூர்ணிமா - அழைப்பிதழ்

விழாவில் கலந்து கொண்டு ஆன்மீக பேராற்றலில் இணையுமாறு அழைக்கிறேன்

குரு பூர்ணிமா பற்றிய பதிவு : பகுதி 1 பகுதி 2