Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, May 6, 2011

ராமாயணம், மஹாபாரதம் - உண்மையா? - பகுதி 2


ஆழ்ந்த அமைதி கொண்ட அடந்த வனப்பகுதி அது. தூரத்தில் சில பறவைகளின் ஒலியும் அருகே சில வண்டுகளின் ரீங்காரம் தவிர வேறு எதுவமற்ற ஆழ் அமைதி கொண்ட வனம். ஆழ்ந்த மெளத்தில் ஆழ்ந்திருந்து மெளனத்தின் ரூபத்தை காணும் நோக்கத்தில் ரிஷிகள் நடந்து வந்து கொண்டிருந்தனர். தாங்கள் எதிர்பார்த்த இடம் கிடைத்த திருப்தியில் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

அப்பொழுது....

வனத்தின் ஆழ்ந்த அமைதியை கலைத்தவண்ணம் எங்கிருந்தோ ஓர் அம்பு புறப்பட்டு வந்தது. அவர்களின் கால்களின் அருகில் குத்தி நின்றது. அம்பு வந்த திசையை பார்த்தனர். யாரும் இல்லை.

அமைதி...

மீண்டும் அடுத்த அடி எடுத்த வைக்க முற்பட்டனர். மீண்டும் ஓர் அம்பு அவர்களின் கால்களுக்கு பக்கம் வந்து நின்றது. ரிஷிகள் தங்களுக்குள் சலனமற்று அதே இடத்தில் நின்றனர். சில நொடிகளில் மரங்களின் கிளைகள் சலசலக்க வனத்தின் அமைதியை கலைக்கும் வண்ணம் பேரும் இரைச்சலுடன் ஒரு ஒருவம் இவர்கள் முன் குதித்து நின்றது.

உடல் முழுவதும் கரும்பச்சை வண்ணம் பூசப்பட்ட உருவம். இடையில் சிறிய தோலால் ஆன ஆடை. கற்களை கூர்மையாக்கிய கத்திகள் இரு கைகளில் தாங்கிய வண்ணம் ரிஷிகளின் கூட்டத்தை வழி மறித்தான்

அவன்.

கையில் உள்ள கல் கத்தியால் தன் செம்பட்டை முடியை கோதிய படி கறைபடிந்த பற்களை காட்டி சிரித்தான். ரிஷிகளிடம் எந்த சலனமும் இல்லை.

“ம்.......உங்களிடம் விலைமதிக்க முடியாத அனைத்தையும் எடுத்து என் முன் வைத்துவிட்டு ஓடிவிடுங்கள். இல்லை என்றால் ஒருவர் கூட உயிருடன் செல்ல முடியாது” என்றான் அவன்.

“எங்கள் உயிரை பற்றி கவலையில்லை. உனக்கு யாரை கொல்ல வேண்டுமோ சொல் அவர்கள் உன் முன் வருகிறோம். நீ எதிர்பார்க்கும் விலைமதிப்பு கொண்டவை எங்களிடம் இல்லை. ஆனால் எல்லோரிடத்திலும் இல்லாத விலைமதிப்பற்ற பொருள் எங்களிடம் உண்டு. அதை வேண்டுமானால் தருகிறோம்” என்றனர் ரிஷிகள்.

உயிருக்கு பயந்தவர்களை பார்த்த இவனுக்கு உயிரை தர முன்வருபவர்களை பார்த்ததும் சந்தேகம் எழுந்தது. இவர்களிடம் உயிர்பயத்தால் பொருள் வாங்க முடியாது என உணர்ந்து,“ஓ அப்படியானால் அந்த பொருளை உடனடியாக தாருங்கள்” என்றான் அவன்.

“அதற்கு முன் அப்பொருளை நீ சரியாக கையாள முடியுமா என நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி கையாள தெரிந்தால் தான் இப்பொருளை நீ பெற்றுக்கொள்ள முடியும். அதனால் நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சி செய்”

சில நிமிட மெளனத்திற்கு பிறகு மெல்ல தலைய
சைத்தான் அவன்.

“இந்த வனத்தை கடந்து செல்லும் மனிதர்களிடம் நீ கொள்ளையடிக்கிறாயே அதனால் கிடைக்கும் பொருட்களையும் உணவுகளையும் உன் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்கிறாய். உன் குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் நீ கொடுக்கும் பொருட்களை பெற்றுக்கொள்கிறார்கள். இச்செயலால் உனக்கு ஏற்படும் தீவினைகளை உன் குடும்பத்தார் அது போலவே பகிர்ந்து கொள்வார்களா?” எனக் கேட்டனர் ரிஷிகள்.

“இதில் என்ன சந்தேகம். எனக்காகத் தானே அவர்கள் வாழ்கிறார்கள்” என்றான் இவன்.

“அதை நீயாக சொல்லாதே..! நாங்கள் கேட்ட கேள்வியை உன் குடும்பத்தாரிடம் கெட்டு பிறகு சொல். அதுவரை நாங்கள் இங்கேயே நிற்கிறோம். உன் அம்பு இருக்கும் இந்த இடத்தைவிட்டு விலக மாட்டோம்.” என்றார்கள் ரிஷிபுருஷர்கள்.

ரிஷிகளின் வார்த்தையில் உண்மை தெரியவே தன் இருக்கும் வனப்பகுதிக்கு விரைந்தான் அவன். தன் குடும்பத்தாரிடம் ஒவ்வொருவராக கேட்டான்.

“நான் அளிக்கும் உணவையும், பொருளையும் பகிர்ந்து கொள்ளும் நீங்கள். அதை சேகரிப்பதால் ஏற்படும் தீவினைகளையும் பகிர்ந்து கொள்வீர்களா?”

எல்லோரும் கூறிய ஒரே போல, “நீ உணவையும் பொருளையும் கொடுக்க வேண்டியது என்பது உன் கடமை. அதனால் ஏற்படும் வினைகளை நாங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்றனர்.

அதுவரை தன் வாழ்க்கையில் கண்டிராத விரக்தியும் சூன்யத்தையும் உணர்ந்தான் அவன்.

நேராக வந்து ரிஷிகள் முன் தலை குனிந்து நின்றான். “ஐயா, நீங்கள் சொன்னது போல கேட்டேன். நான் நினைத்து போல இல்லை” என்றவனின் வார்த்தையில் மரியாதை மிகுந்தும் மிரட்டல் குறைந்தும் இருந்தது.

“இப்பொழுது தான் நாங்கள் எதிர்பார்த்த சூழலில் நீ இருக்கிறாய். வா எங்களிடம் இருக்கும் விலை மதிப்பற்ற ஒன்றை தருகிறோம்” என கூறினார்கள் ரிஷிகள்.

அவன் காதின் அருகே சென்று “மரா” என மூன்று முறை உச்சரித்து. “இவ்வாக்கியத்தை தொடர்ந்து உச்சரி. உனக்குள் இருக்கும் குழப்பத்திற்கு விடிவு கிடைக்கும். மேலும் அற்புதங்களை காண்பாய்” என்றனர்.

எந்த இடத்தில் தன் காதுகளில் மரா என சப்தம் கேட்டதோ அதே இடத்தில் அமர்ந்து கண்களை மூடி தொடர்ந்து உச்சரிக்க துவங்கினான்.

நேரம் நாளிலும், நாள் மாதத்திலும் புகுந்து வருடங்களாக கரைந்தன. அவனை சுற்றி கரையான் புற்று கட்டத்து வங்கி முற்றிலும் அவனை மறைத்தது.

ஒரு நாள் அவனுக்குள் ஞானச்சுடர் தோன்றியது. அச்சுடரின் ஒளியில் கண்டுணர்ந்ததை தன்னுள் சேமித்தான். புற்றிலிருந்து வெளிப்பட்டான்.

புற்றிலிருந்து வெளிவந்ததால் அவனை வால்மீகி என்றனர். புற்றுவழி வந்தவன் என அர்த்தம்.

கண்ணில் கண்டவர்களை கொள்ளை கொண்டவனை. புற்றின் உள்ளே ஒருவன் கொள்ளை கொண்டான். கள்வனாய் இருந்தவன் கடவுளை கண்டவன் என மாற்றமடைந்தான்.

மரா மரா என்ற நிலையில் ராம ராம என மாற்றம் அடைந்தான். ஆனால் இன்று நாம் ராம ராம என ராமனை மறக்க முயகிறோம்.

ராமாயணத்தை இயற்றியவர் என வடமொழியில் கூறப்படுபவர் வால்மீகி. தென்மொழியில் இராமாயணத்தை கம்பர் இயற்றினார்.

தவத்தாலும் ஞானத்தாலும் வந்தது பொய் கதையாக இருக்குமா?
அதனால் தான் சொல்லுகிறேன் இதிகாசங்கள் உண்மையே.

ஆனாலும் சில முரண்கள் அதில் இருக்கவே செய்கிறது.

அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(வினைத் தொடரும்)

Monday, May 2, 2011

ராமாயணம், மஹாபாரதம் - உண்மையா?


சில நாட்களுக்கு முன் என்னை சந்திக்க பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் வந்தார். என் எழுத்தின் மூலமே என்னை பற்றி தெரிந்து கொண்டவர். பேச்சின் இடையே ராமாயணம் பற்றி பேச்சு எழுந்தது. ராமாயணம் அற்புதமானது என்றேன். அவ்வளவு தான்.

“சாமீ, நீங்க ராமாயணம் நடந்த விஷயம்னு சொல்றீங்களா? அது கற்பனை கதையாச்சே. நீங்க இதை உண்மைனு சொல்லுவீங்கனு நான் நினைக்கவே இல்லை” என நொந்து கொண்டார். இதற்கும் அவரின் பெயர் ராமாயண கதாபாத்திரத்தின் அடிப்படையில் இருந்தது...!

இவரை போல பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இந்த வலைப்பக்கத்தை படித்துவிட்டு நான் ஏதோ கடவுள் மறுப்பு கொள்கை கொண்டவன் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். சிலைக்கு செருப்பு மாலை போட சொன்னாலும் சொல்லுவார்கள் என நினைத்துக் கொண்டேன்.

ராமாயணமும் மஹாபாரதமும் ஏதோ ஒரு கதாசிரியர் கற்பனையில் உதித்த கதைகள் என்றும் அதனால் கவரப்பட்ட மக்கள் அந்த கதாபாத்திரத்தையே கடவுளாக்கிவிட்டனர் என்றும் பலர் நினைக்கிறனர்.

மீண்டும் சொல்லுகிறேன் “ராமாயணம் மட்டுமல்ல மஹாபாரதமும் உண்மை தான்”

நம் கலாச்சாரத்தில் இதிகாசம், புராணம் மற்றும் காவியம் என மூன்று விஷயங்கள் உண்டு. வட மொழியில் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தை ‘இதிஹாஸ்’ என கூறுவார்கள். அதற்கு ‘இவ்வாறு நடந்தது’ என அர்த்தம்.

புராணம் என்பது மெய்ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் விளக்க கோட்பாடுகளை எளிய கதையாக கூறும் எழுத்து வடிவம். இதில் கற்பனை பாதியும் மெய்ஞான கோட்பாடுகள் மீதியும் இருக்கும். காவியம் என்பது முழுக்க முழுக்க கற்பனையால் ஆனது.

ராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஒரு காலத்தில் நடந்தது என்பதாலேயே இதிஹாசம் என கூறுகிறார்கள் அல்லவா? அதுவும் பகுதி அளவு உண்மைதான்.

இலக்கணத்தில் வினைத்தொடர் என ஒரு கருத்தை சொல்லுவார்கள்.

ஒரு செயல் மூன்று காலத்திலும் நடந்தால் அது வினைத்தொடர் என நினைக்கிறேன். (தமிழ் புலவர்கள் வழிகாட்டுக.) உதாரணம் ஊறுகாய் என என் தமிழாசிரியர் கூறினார். அன்று அவர், “ஊறிய காய், ஊறுகின்ற காய் மற்றும் ஊறும் காய்” என வினைத்தொடருக்கு சரியான உதாரணம் கூறியதால் இன்றும் எனக்கு ஊறுகாய் சாப்பிடும் வினை மட்டும் தொடர்கிறது.

இது போல இதிஹாசங்களும் வினைத்தொடர் தான். முன்பு நடந்தது, தற்சமயமும் நடக்கிறது.இனி மேலும் நடக்கும்..! ஆமாம் ராமாயணமும் மஹாபாரதமும் இன்றும் நடக்கிறது...!

முன்பு நடந்ததை பற்றி நமக்கு தெரியாது. இனி நடக்கப்போவதை பார்ப்போமா என உறுதி இல்லை. ஆனால் தற்சமயம் நடப்பதை காணலாம் அல்லவா?

தற்சமயம் ராமர் எங்கே? கிருஷ்ணர் எங்கே?

வாருங்கள் காண்போம்...

(வினை தொடரும்)

Monday, April 18, 2011

மெய்ஞான கல்வி


தற்கால கல்வி முறைகள் நமக்கு விஞ்ஞானத்தை வளர்க்கிறது. நம் அடிப்படை தேவையான உடை, உணவு மற்றும் உறைவிடங்களை உருவாக்க உதவுகிறது. இவை அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் நடைபெறும் வளர்ச்சிகளாககும். உண்டு, உறங்கி மற்றும் இனப்பெருக்கம் செய்து இறந்து போகும் இவ்வாழ்க்கை அனேகமாக வெளிமுக செயல்களையே முன்னிறுத்துகிறது.

அக முகமாக நம் ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழிகளை கற்றுக்கொடுக்கும் மெய்ஞான கல்வியை கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் யாரும் முன்வருவதில்லை.

நம்முள் இருக்கும் இறையருளை தரிசித்து அதன் பயனாக நம்மை சுற்றி இருக்கும் இறையருள் நிறைந்த விஷயங்களை உணரும் கல்வி முறையே மெய்ஞான கல்வியாகும்.
நம்மில் பலருக்கு ஆன்மீக கல்வியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பினும் அதை முறையாக கற்றுக்கொள்ளவும் பயன்படுத்தவும் பல்வேறு தடைகள் இருக்கிறது. நம் வாழ்க்கை முறை முழுமையான ஆன்மீக பாதையில் இல்லாததால் ஆன்மீகத்தை நம் வாழ்க்கையில் இணைத்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி என்றுமே மனதில் மேல் ஓங்கி நிற்கிறது.

ப்ரணவ பீடம் ஆன்மீக அறக்கட்டளை நவீன காலத்திற்கு ஏற்ப மெய்ஞான கல்வி எனும் ஆன்மீக கல்வியை அனைவருக்கும் வழங்க இருக்கிறது.

மெய்ஞான கல்வியின் சிறப்புகள் என்ன?

  • வாழ்க்கை சூழல் எப்படி இருந்தாலும் முழுமையாக ஆன்மீக சூழலை பெறும் வாய்ப்பு

  • கற்றுக்கொடுக்க முறையான பயிற்சி அமைப்பு

  • ஆண்டு கணக்கில் படிக்கும் தன்மை இன்றி குறுகிய கால பயிற்சி முறை

  • நடைமுறை வாழ்க்கைக்கு விஞ்ஞான ரீதியாக ஆன்மீகத்தை பயன்படுத்தும் முறைகள்

  • இயல்பு வாழ்க்கையில் மாற்றம் ஏதும் செய்யாமலேயே ஆன்மீக உயர்நிலைக்கு செல்லத்தக்க பயிற்சிகள்

ப்ரணவ பீடத்தின் மெய்ஞான கல்வி சென்ற பிப்ரவரி மாதம் முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

பயிற்சிகள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வார இறுதியில் நடைபெறும். கோவையில் இருக்கும் ப்ரணவ பீடத்தின் நகர மையத்தில் பயிற்சிகள் நடைபெறும்.

பயிற்சிகளுக்கு கட்டணம் உண்டு. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கே பயிற்சி அளிக்கப்படும்.

உங்களுக்கு ஆன்மீக கல்வி கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தால் மட்டும் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். பயிற்சி பற்றிய விளக்கம் அடங்கிய தகவல் நூல் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். இப்பயிற்சி ஆன்மீக ரீதியாக வெளிப்படையாக கற்றுக்கொடுக்காத பயிற்சிகள் என்பதால் அனைவருக்கும் அனுமதி கிடைக்க வாய்ப்புகள் குறைவு. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறோம்.

அதனால் உங்களுக்கு முழுமையான ஆர்வமும் என்னிடம் நேரடியாக கற்றுக்கொள்ளும் ஆவல் இருந்தால் மட்டும் மின்னஞ்சல் அனுப்புங்கள். மெய்ஞான கல்வியை பற்றி வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் விளக்கம் அளிக்கிறேன். இதை தவிர்த்து உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணாக்க முயலும் கேள்விகளையும் மின்னஞ்சலையும் தவிர்த்தால் நலம்.


தகவல் ஏடு பெற மின்னஞ்சல் அனுப்பும் முகவரி : swamiomkar@gmail.com
சப்ஜெக்டில் “மெய்ஞான கல்வி” (அல்லது) “Vedic Education" என குறிப்பிடவும்.

Tuesday, April 12, 2011

சாமீ....கருமம் கருமம்....!

நம் வாழ்க்கையில் பல வார்த்தைகளின் அர்த்தம் தெரியாமலேயே பயன்படுத்துகிறோம் என்பது உண்மை. இன்னும் ஒருபடி மேலே சொன்னால் பல வார்த்தைகள் நான் ஏன் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாமல் பயன்படுத்துகிறோம். நம் கலாச்சாரத்திலும் நம் முன்னோர்களாலும் செம்மையாக பயன்படுத்தபட்ட பழக்கவழக்கங்கள் நாளடைவில் வார்த்தையாகி, அவ்வார்த்தையே வெறும் சொற்களாக நம்மிடையே உலாவுகிறது. அப்படிப்பட்ட வார்த்தை தான் “கருமம்”.

நம் சமுதாயத்தில் வாழ்ந்தவர்கள் ஆன்மீகத்தை ஒரு பகுதியாக வாழமல், வாழ்க்கையையே ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக வாழ்ந்தார்கள்.

தங்களின் ஒவ்வொரு செய்லும் அர்த்தத்துடன் இருக்க வேண்டும் என விரும்பினார்கள். கர்ம வினைகளால் மனித வாழ்க்கை கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து தாங்கள் செய்யும் ஒவ்வொரு கர்மங்களையும் உணர்ந்து தெரிந்து செயல்பட்டார்கள்.

தன் பிறவியின் நோக்கத்தை உணர்ந்து அதற்கு தக்க செயல்பட்டால் கர்மவினைகள் அதிகரிக்காது. கர்மவினை அதிகரிக்காத பட்சத்தில் பல்வேறு பிறவிகள் எடுத்து கஷ்டப்படாமல் முக்தியை அடையலாம்.

இக்கருத்து நம் முன்னோர்களுக்கு ஆழமாக இருந்ததால் கர்மவினையை பற்றிய விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஒருங்கே கொண்டிருந்தார்கள்.

நம் செய்யும் செயல் (கர்மா) என்பது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு போன்றது. அதை மீண்டும் உள்ளே அடைக்க முடியாது, மேலும் அது செல்லும் திசையில் உள்ள இலக்கை அடையாமல் விடாது. குண்டின் இச்செயலை நாம் முடக்க வேண்டுமானல் துப்பாக்கியை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

ஒருவர் தான் எதற்காக பிறந்திருக்கிறோம் எனபதை உணர்ந்து அதற்கு தக்க செயல்படாமல் வேறு விதமான செயலை செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் கர்மாவை சேர்க்கிறார் என அர்த்தம்.

உதாரணமாக ஒருவர் ஆசிரியராக இருக்கிறார். அதற்கு தக்க செயலை செய்யாமல் தான் ஒரு ஜவளிக்கடை அதிபராக வேண்டும் என முயல்கிறார் என்றால் அவரின் கர்மா அங்கே நீட்டிக்கப்படுகிறது.

துறவிகள் தங்களின் செயல்களில் சமுதாய பயனுடன் செயல்படுவார்கள். அப்படி செயல்படும் சமயம் தங்களை உணராமல் தன் சுய நலனுக்கு ஏதேனும் செய்துவிட்டால் அது கர்மவினையாக தங்களை தாக்கும் என்று நம்புவார்கள். அவ்வாறு தங்களுக்கு கர்மவினை சேராமல் இருக்க தங்கள் செயலை கண்காணித்து எச்சரிக்கை கொடுக்க சிலரை அருகே வைத்திருப்பார்கள். அப்படி சுய நலன் மேலோங்கும் பொழுது அவர்கள் துறவியின் காதில் “கர்மம் கர்மம்” என கூறுவார்கள். துறவியும் உடனே உணர்ந்து அச்செய்கையை கைவிடுவார்.

இவ்வாறு தமக்கு ஒவ்வாத கர்மாவை செய்யும் பொழுது பிறர் அதை சுட்டிக்காட்டி எச்சரிக்க பயன்படுத்தும் வார்த்தை தான் “கர்மம் கர்மம்”. இவ்வார்த்தையை கேட்டதும் மனம் தெளிந்து அதிலிருந்து விடுபட்டு நற்கதியை அடைவார்கள்.

தமக்கு ஒவ்வாத கர்மம் செய்ததன் பலனை கிரகங்கள் அடுத்த பிறவியில் தீவினையாக அளிக்கிறது. கிரகங்களால் கர்மவினை தாக்கம் பீடிக்கப்பட்டு மன நிலையிலோ அல்லது உடல் நிலையிலோ கஷ்டப்படுவார்கள். இதை கொங்கு மண்டல கிராமங்களில் “கிரகம் புடிச்சவனே” என சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம்.

பிறர் கருமம் செய்வதையும் அதனால் அவர்களின் வாழ்க்கை சிரமத்தையும் எச்சரித்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது. ஆனால் நடைமுறையில் நாம் பல விஷயங்களை எச்சரிக்க தவறுகிறோம்.

உதாரணமாக சென்ற வருடம் ஒரு நடிகை செய்ததை பார்த்து “கருமம் கருமம்” என நீங்கள் எச்சரித்து இருக்க வேண்டும். அல்லது அந்த நடிகையுடன் இருப்பவர் பார்த்து “கிரகம் புடிச்சவன்” என சொல்லி இருக்க வேண்டும். மாறாக இதை டீவியில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து நாமும் கர்மம் செய்தோம்..!

மேலும் உதாரணம் சொல்லலாம். இரு நடிகர்கள். ஒருவர் மற்றொருவரை ஏதோ காரணத்தால் துன்புறுத்திவிட்டார். அது கர்மம் தான். ஆனால் அதை நாம் “கர்மம் கர்மம்” என எச்சரிக்கவில்லை. இப்பொழுது அந்த நடிகர் மற்றொரு நடிகரை குடிகர் என வீதிக்கு வீதி அசிங்கமாக பேசுகிறார். எப்பொழுதோ செய்த கர்மம் கிரகங்களால் பிடிக்கபட்டது பார்த்தீர்களா?

ஆகவே இனிவரும் காலத்தில் இவ்வாக்கியங்களை தவறாக பயன்படுத்தாமல் உள் அர்த்தத்துடன் பயன்படுத்துங்கள்.

டிஸ்கி : இவற்றை நான் எழுதக் காரணம் உங்களின் செயல்களை பார்த்து “கருமம் கருமம்” என எச்சரிக்கத்தான். இதை படித்து நான் “கிரகம் பிடித்தவன்” என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல..! :)