Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, August 27, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 13

காண்கின்ற கண்ணொளி காதல்செய் ஈசனை
ஆண்பெண் அலிஉரு வாய்நின்ற ஆதியைப்
பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயல்அணை யாரே.
--------------------------------------------திருமந்திரம் 434


இறைவனின் மஹாசொரூபங்களை கண்டுகளித்தவர்கள் பல்வேறு நிலையில் இறைவனை வடிவமைத்தனர். உருவமாகவும் அருவமாகவும் மேலும் அருவுருவமாகவும் பார்க்கும் தன்மைகள் நம் கலாச்சாரத்தில் உண்டு. அத்தகைய இறைவனின் குறிப்பிடத்தக்க சொரூபம் அர்த்தநாரீஸ்வர சொரூபம். இயற்கையின் படைப்பில் எப்பொழுதும் இரு முனைகள் இருக்கும். தோற்றம் - மறைவு, மலை - பள்ளம், இரவு-பகல் என்ற எதிர்மறை தன்மைகள் எப்பொழுதும் இருக்கும். இவை இரண்டாக இருந்தாலும் தனித்து வேலை செய்ய முடியாது.

மின்சாரத்தை கடத்தும் அயனியில் நேர் மறை மற்றும் எதிர்மறை முனைகள் உண்டல்லவா? கணிப்பொறி கூட 1,0 என்ற எண்ணின் அடிப்படையில் வேலை செய்கிறது. எதிலும் இரு நிலைகளைகாணலாம். ஆனால் அந்த இருநிலை இணைந்து வேலைசெய்தால் மட்டுமே உருவாக்கம் என்ற செயல் உண்டு.


அர்த்தநாரீஸ்வர் நிலை என்பது நம்மில் உடலில் இருக்கும் இரு தன்மைகளை காட்டுகிறது. இரு நிலைகளும் சரிசமமாக இருக்கவேண்டும் என்பதை தான் உடலின் வலது இடது பக்கங்கள் பிரித்து காண்பிக்கபடுகிறது. திருநங்கையின் நிலைக்கும் அர்த்தநாரீஸ்வர நிலைக்கும் வித்தியாசம் உண்டு. திருநங்கை தன்மை என்பது உடல் மற்றும் மனோநிலையில் சரிசமமாக பிரிவு இருக்காது. முக்கால் பங்கும் ஒரு பாலினமும், கால் பங்கு மற்ற பாலினமும் இருக்கும்.

நம் உடலில் இயங்கு தன்மை, இயக்கமற்ற தன்மை என இரு அமைப்புகள் உண்டு. அவை இரண்டும் சம நிலையில் இருந்தால் அது தெய்வ நிலை என உணரலாம். வெப்பம் மற்றும் குளிர்ச்சி என அடிப்படை உடல் வெப்ப நிலையை எடுத்துக்கொண்டோமானால் இரண்டும் சரியான அளவில்லை எனில் உடல் நலம் கெடும். இதே போல மனம் மற்றும் ஆன்மாவிற்கு வெவ்வேறு நிலைகள் இரு முனைகளாக செயல்படுகிறது.

ஆண் பெண் என இருநிலைகளும் அவை இணைந்த நிலைகள் என மூன்று நிலைகளையும் காணும் பொழுது தெய்வ சொரூபம் பாலின வித்தியாசத்தில் அடங்குவதில்லை என புலப்படும். அவன் அருளால் என்றோ , அவள் அருளால் என்றோ சொல்லுவதை விட, அதன் அருளால் அதன் தாழ் வணங்கி என்றுதானே கூறவேண்டும் ?

திருவண்ணாமலையில் இறைவன் பல்வேறு சொரூபமாக காட்சி அளிக்கிறார். உண்மையில் அனைத்து சொரூப தரிசனமும் அரூப தரிசனமும் முழுமையாக பெற்ற தலம் அருணாச்சலம். அதில் ஒன்றுதான் அர்த்தனாரீஸ்வரராக காட்சி அளிக்கும் திருக்கோவில்.

நகரின்
மையத்தில் இருந்தாலும் அனேகர் காண முடியாத இடத்தில் அர்த்தநாரீஸ்வர் இருக்கிறார். பவளக்குன்று என்ற இந்த சக்தி மையம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு அருகில் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது. வீடுகளும் பாதைகளும் மறைத்திருப்பதால் இந்த கோவில் நகரின் மையத்தில் இருந்தும் வெளியே தெரியாது.
பவள குன்றின் நுழைவாயில், பின்புறம் சிறியதாக குன்றின் மேல் கோவில் காணலாம்.

திருவண்ணாமலைக்கு சாதாரணமாக செல்லுபவர்கள் இந்த இடத்திற்கு செல்ல மாட்டார்கள். பலருக்கும் தெரியாது என்றும் சொல்லலாம்.
ஒரு 100 மீட்டர் உயரம் கொண்ட சிறு குன்று. அருணாச்சல மலையில் தொடர்ச்சியாக சிறு மலையாக காட்சி அளிக்கிறது.

அந்த பேராற்றலை நான் உணர்ந்த மூன்று தினமும் திருவண்ணாமலையின் இப்பகுதியில் அதிகம் கழித்தேன். இக்கோவில் காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை அரைமணி நேரம் மட்டுமே திறந்திருக்கும். பிற நேரங்களில் கோவிலின் கருவறை பூட்டபட்டிருக்கும்.

அங்கே யாரும் இருக்கமாட்டார்கள் இறைவனை தவிர...!
பவள குன்று கோவிலின் வெளி பிரகாரத்தில் இருந்து
அருணாச்சல கிரியின் ஒரு பகுதி தோற்றம்


பவளக்குன்றின் மேல் இருந்து பார்த்தால் அருணாச்சலேஸ்வர் கோவிலும், அருணாச்சல மலையும் பக்கவாட்டில் அருமையான காட்சியாக தெரியும். சில நூற்றாண்டுகளுக்கு முன் இது ரிஷிகள் மட்டும் வாழும் இடமாக இருந்த இந்த குன்றின் மேல் பின்பு சிறிய கோவில் கட்டப்பட்டது. அர்த்தநாரிஸ்வரர் என்றாலும் கோவிலின் உள்ளே லிங்க சொரூபம் தான் இருக்கும். மேலும் பக்கவாட்டில் அம்மனின் விக்ரஹமும் வேறு தனி சன்னிதியில் உண்டு. பவளக்குன்றின் பின்புறம் தொடர்ச்சியாக அருணாச்சல மலையை இணைக்கும்.

ரமணர் பூத உடலில் வாழ்ந்த காலத்தில் சிலகாலம் இங்கே தங்கி இருந்தார். கோவிலின் உள்ளே ரமணர் இருந்த குகை இன்றும் உண்டு. பாதாள லிங்கத்தில் தவம் இயற்றிவிட்டு அருணாச்சலேஸ்வர் கோவிலில் இருந்த ரமணர் பொதுமக்களின் தொந்தரவின் காரணமாக இங்கே வந்தமர்ந்தார். பகவான் ரமணர் தவத்தாலும் நிஷ்டையாலும் பல ஆண்டுகளாக மெளனத்தில் இருந்தார். அதன் பிறகு முதல் முதலாக உபதேசம் அளித்த இடம் பவளக்குன்றுதான். அந்த சம்பவம் சுவாரசியமானது.

வீட்டை விட்டு வந்த பிறகு ரமணரை அவர் தாயார் முதல் முதலாக பவளக்குன்றில் தான் சந்தித்து மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறார். எந்த பதிலும் சொல்லாமல் ஒருவார்த்தையும் பேசாமல் எங்கோ கண்களை நிலைபடுத்தி அமர்ந்திருக்கிறார் ரமணர். தினமும் காலை முதல் இரவு வரை தாயார் அவரை கேட்டுக்கொண்டே இருக்கிறார். இவ்வாறு ஒருநாள் இரண்டு நாள் அல்ல பதினைந்து நாள் கழிந்தது. தாயாருக்கோ அவர் வெளி நிலையில் மகனாக தெரிகிறார். ரமணரின் உள் நிலையோ முற்றிலும் ஞான சாகரமாக இருந்தது. கடைசியில் ஒரு சிறு காகிதத்தில் ரமணர் மஹாவாக்கியத்தை எழுதி தாயாரிடம் கொடுத்தார். அதை படித்ததும் தனது பிள்ளையின் உண்மை நிலையை உணர்ந்து கொண்டார் அந்த தெய்வத்தாய். அந்த மஹாவாக்கியத்தை பார்த்தால் ரமணர் தன் தாயாருக்காக சொன்னதாக தெரியவில்லை.

நீங்களே அதை படியுங்கள்....


அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

வேறு உபதேசங்கள் வேண்டுமா? இவ்வரிகளை முற்றிலும் புரிந்துகொண்டோமானால் மனதில் பேரமைதி குடிகொள்ளும். இக்குன்று சக்திநிலையில் இன்றும் இருப்பதை அங்கு சென்று வழிபட்டாலே உணர முடியும். பல சித்தர்கள் மற்றும் யோகிகள் இங்கே சமாதி நிலையில் இருந்தார்கள் மற்றும் ஜீவ சமாதியாக இன்றும் இருக்கிறார்கள்.

பிறரால் தொல்லை கொடுக்காத இடம் என்பதால்
திருவண்ணாமலையில் அதிகமாக நான் இருந்த இடம் இது. அந்த மூன்று நாட்களில் இரவுகள் எனக்கு இங்கே கழிந்தது. பவளக்குன்று கோவிலின் முன் வளைந்த படிக்கட்டுக்கு அருகே இருக்கும் பெரிய பாறைதான் எனது மஞ்சம். என்னிடம் இருந்த துணி மூட்டையே தலையணை. கடந்த இரண்டு பகல் வேளையில் பல இடங்களுக்கு சென்றுவிட்டு பிறர் தானாக கொடுத்த உணவை உண்டு மகிழ்ந்து முழுமையான ஆனந்த நிலையில் இருந்தேன். அன்று வளர்பிறை ஏகாதசி. இன்னும் நான்கு நாளில் பெளர்ணமி வரும் ஆயுத்தமாக சந்திரன் தனது அழகைகாட்டிக் கொண்டிருந்தார்.

பவள குன்றின் முன்புறம் நான் படுத்திருந்த பாறை.

எனது தலைக்கு மேல் அருணாச்சல மலை நிலவொளியில் ஜொலித்தது,
வலது பக்கம் அருணாச்சலேஸ்வரர் கோவில் ஒன்பது வெண்குன்றுகள் போல காட்சி அளித்தது. இதமான காற்றும், பாறையின் குளிரும் அர்த்தநாரீஸ்வரின் மடியில் நான் இருக்கிறேன் என்பதற்கு சான்றுகளானது.

அப்பொழுது தான் என் ஆன்மீக வாழ்வில் அந்த முக்கிய சம்பவம் நிகழ்ந்தது.

(தொடரும்)
படங்கள் உதவி : http://richardarunachala.wordpress.com

Monday, August 24, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 12

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
-----------------------------------------------------திருமந்திரம் 1857

தமிழக கோவில்கள் எப்பொழுதும் பிரம்மாண்டமானது. தமிழக ஆன்மீகவாதிகளின் ஆன்ம ஆற்றலை போல விசாலமானது. கோவிலின்
பிரகாரங்கள் அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் என எத்தனை ஆண்டுகள் அதில் தங்கள் வாழ்நாளை தியாகம் செய்தார்கள் என்ற வியப்பு மேலிடும்.

வடநாட்டில் இருக்கும் கோவில்கள் இத்தகைய பிரம்மாண்டம் இருப்பதில்லை. கோபுரங்களில் வேலைப்படுகள் இத்தனை இல்லை. மத்திய பிரதேசம் தாண்டினால் கோவில்கள் உங்கள் வீட்டின் அளவில்தான் இருக்கும். இதற்கு காரணம் வட நாட்டில் இருந்த அரசர்கள் தங்கள் அரண்மனையை கட்ட எடுத்த முயற்சி கோவிலுக்கு செய்யவில்லை.

தென்நாட்டில் அரண்மனையை காட்டிலும் கோவில்களின்
முக்கியத்துவம் அதிகமாக இருந்தது. ஆன்மீகம் மட்டுமலாமல் தென்பகுதி கோவில்கள் சமூகத்தின் கலாச்சார மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு இருந்ததால் பிரம்மாண்ட வடிவம் கொண்டது.

திருவண்ணாமலை பயணம் செய்பவர்கள் அனேகமாக முதலில் வரும் இடம் அருணாச்சலேஸ்வர் கோவில். பலர் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவிலுக்கு வந்து பிறகு கிரிவலம் செய்து பஸ் ஏறி ஊர் செல்லுவர்கள். நம் மக்களை பொருத்தவரை இது தான் திருவண்ணாமலை பயணம். இப்படி பயணம் செய்வதற்கு ஊரில் இருக்கும் வரைபடத்தில் திருவண்ணாமலையை பார்த்துக்கொள்ளலாம்.
அருணாச்சலேஸ்வரர் கோவில் கிழக்கு கோபுரத்தில் அருகில் .....

இந்தியாவின் மிகபிரம்மாண்டமான கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அதற்கு பிறகு இத்தலமே பெரியது. அங்கே சக்திக்கு முக்கியத்துவம் என்றால் இங்கே சிவனுக்கு முக்கியத்துவம். மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் முழுவதும் சிற்பத்தால் நிறைந்திருக்கும். இங்கே சிற்பம் இல்லாமல் சிவ நிலையில் இருக்கிறது நவ கோபுரங்கள். கோவில் கட்டுமானத்திலும் ஆன்மீகத்தை புகுத்திய நம் சான்றோர்களை நினைத்து மெய்சிலிர்க்காமல் இருந்தால் நம் மெய் பொய்யாகிவிடாதா?

பல மன்னர்களின் அருட்கொடையால் விண்ணை தொடும் அளவுக்கு ஒன்பது கோபுரங்கள் கொண்ட கோவில். அருணகிரி நாதர், இடைக்காட்டுச் சித்தர் போன்ற யோகிகளும் பல ஞானிகளும் சமாதி கொண்ட இடம். திருவண்ணாமலை பகுதி முழுவதும் எத்தனையோ யோகிகளின் சமாதி இருந்தாலும் அருணகிரி நாதரும், இடைக்காட்டு சித்தரும் இன்றும் கோவிலின் உள் மக்களை உயிர்ப்பித்துவருகிறார்கள்.

அருணகிரி
நாதர் இறைவனை நோக்கி தவம் இருந்து அவர் காட்சி தராத நிலையில் தற்கொலை செய்ய கோபுரத்தில் ஏறி குதிக்கிறார். அவரை கிளிவடிவமாக்கி தடுத்த இடம் இந்த கோவில். அங்கே கிளி ரூபமான சிலையுடன் கோபுரம் காட்சி அளிக்கிறது.

அருணகிரி நாதர் இக்கோவிலில் திருப்புகழ் பாடினார். இவரின் பெயரே ‘அருண கிரி' என இருப்பதை கவனித்தீர்களா? இவரின் வாழ்க்கையில் அனேக அதிசயம் நிகழ்ந்ததாக கதைகள் கூறிகிறார்கள். நமக்கு எதற்கு அதிசயம்.? அவரின் பாடல்வரிகளில் இருக்கும் ஆன்மீகத்தை உணருங்கள் உணர்ந்தால் அவருக்குள் ஏற்பட்ட அதிசயத்தை உணர்வீர்கள். கந்தரனுபூதியில் கடைசி பாடல் இது.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


இறைவனை எங்கும் எதிலும் உணர்ந்தவருக்கே இவ்வரிகள் சாத்தியம். ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்...!

முருகனுக்கும் சிவனுக்கும் ஒரே கோவில் சிறப்புடையதாக இருக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மட்டும் என சொல்லலாம்.

முருகனை முழுக்கடவுளாக ஏற்றவர்களும், சிவனை ஏற்றுக்கொண்டவர்களும் ஒரு திருத்தலத்தில் பாடி பரவசம் கொண்டார்கள். அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அன்று தொட்டு ஏனைய யோகிகள் தரிசித்து ஆசிர்வதித்து சாமாதிகண்டார்கள்.

பாதாள லிங்க கருவறையின் முகப்பில். பின்புறம் பகவான் ரமணர்.

இக்கோவிலின் கிழக்கு
பகுதியில் இருக்கும் பாதாள லிங்கம் எனும் இடத்தில் ரமணர் தவம் இருந்தார். பாதாள லிங்கம் என்பது பல அடி ஆழத்தில் இருக்கும் ஒரு சிவ லிங்கம் கொண்ட சன்னிதி. ரமணர் பாதாள லிங்கத்திற்கு உள்ளே சென்று அங்கிருக்கும் சிவனை அரவணைத்தவாறு தவம் செய்ய துவங்கும் பொழுது அவருக்கு வயது 16. அவ்வாறு அவர் தவம் செய்யும் பொழுது சிறுவர்கள் பாதாள லிங்க சன்னிதியை அதற்கு உண்டான கல் கதவை வைத்து மூடிவிட்டார்கள். நவீனகாலத்தில் பாதாள சாக்கடை இரும்பு மூடியால் மூடுவது போல மூடி விட்டார்கள்.

பல நாட்கள் இடைவிடாது ரமணர் அங்கே தவம் இருந்தார். ஒரு பகுதி உடல் அசையாமல் இருந்ததால் உணர்வற்று பூச்சிகள் அரிக்க துவங்கிவிட்டது. சேஷாத்திரி ஸ்வாமிகளின் உள்நிலையில் அவர் அப்படி இருப்பது தெரிந்து ரமணரை வெளியே கொண்டுவந்து சேர்த்தார். அச்சமயம் ரமணரின் உடல் உணர்வற்று நிர்வாணமாக பூச்சிகள் அரித்தவண்ணம் இருந்தது.

தற்காலத்தில் சில யோக பயிற்சி பள்ளிகளால் தவம் என்ற வார்த்தை தடம்புரண்டு இருக்கிறது. தவம் இருப்பது என்பது இடம், காலம், சூழல் மறந்து தொடர்ந்து உள் நிலையில் அடங்கி இருப்பது தவம். முனிவர்கள் காட்டில் நாள்கணக்கில் அசைவற்று இருப்பார்களே அது பெயர் தவம். சில யோக பயிற்சி பயின்றவர்கள் காலையில் நான் இரண்டு மணிநேரம் தவம் செய்தேன் எண்பார்கள் இதை கேட்கும் பொழுது என்ன சொல்லுவதென்றே தெரியாது. தடகள வீரரிடம் சென்று 'நூறு மீட்டர் மராத்தான் ஓட்டம் ஓடலாமா' என கேட்டால் அவர் என்ன செய்வார்? தியானம் என்பது நூறுமீட்டர் ஓட்டம் போல, தவம் என்பது மராத்தான் ஓட்டம் போல நான்ஸ்டாப் தியானம் தவம் என புரிந்துகொள்ளுங்கள்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அனேக சிறப்புகள் உண்டு. மூன்று தீர்த்தம் உள்ள கோவில், நான்முக லிங்கம் உள்ள கோவில், நவ கோபுரம் கொண்ட கோவில் என சொல்லிக்கொண்டே போகலாம்.அருணாச்சலேஸ்வர் கோவிலின் உள்ளே எந்த இடம் பார்க்க வேண்டியது என்றால் ஒவ்வொரு அனுவும் என சொல்லலாம். இருந்த பொழுதிலும் பாதாள லிங்கேஸ்வரர், கல்யாண ஸுப்ரமணியர், கருவரை பின்புறம் மேற்கு கோபுரம் அருகில் இருக்கும் இடைகடார் சமாதி என யாருக்கும் அதிகமாக கண்களில் சிக்காத சில தெய்வீக கருவரையை கூறலாம்.

தமிழக கோவில்கள் எனக்கு பிடித்தவையாக இருந்தாலும் நவீன காலத்தில் “அருள்மிகு” ஆனதும் எனக்கு அதில் பற்றுதல் இல்லாமல் போனது. அதிக வருமானம் என்ற பொருளாதார நோக்கில் அரசு கையகப்படுத்தியதன் விளைவாக கருவறை வரை காசு தேவைப்படுகிறது. கையில் காசில்லாமல் என்னை போன்றவர்கள் கோவிலுக்கு செல்ல முடியுமா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஈஸ்வரனை அருகில் சென்று பார்க்க வேண்டுமானால் பக்தி மட்டுமல்லாமல் நீங்கள் 25 ரூபாய் உடன் செல்ல வேண்டும்.

பிரபலமான தமிழக கோவில்களில் எனக்கு சில மனக்குறை உண்டு. கருவரை மண்டப வாசலில் “இப்பகுதிக்கு மேல் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி” என வைத்திருப்பார்கள். அனேக கோவிலில் அதை பார்த்தவுடன் நான் திரும்பி விடுவேன். எனக்கு அத்தகுதி இல்லையே..!

வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வருவதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மட்டும் அனைவருக்கும் அனுமதி உண்டு. ஆகம விதிகள் டாலரால் மறைக்கப்படும் - தட்டிக்கேட்கும் ஊராரின் வாய் யூரோவால் அடைக்கப்படும் என்று வைத்துக்கொள்ளலாம். ஒருபக்கம் சங்கடமாக இருந்தாலும் இவர்கள் இங்கே மட்டுமாவது அனுமதிக்கபடுவது எனக்கு ஆறுதலை அளிக்கிறது.

வருடத்திற்கு பல முறை திருவண்ணாமலை சென்றாலும் கோவிலுக்கு சில முறையே செல்லுகிறேன். இதன் காரணத்தை வெளியே
சொல்ல முடியாது. கோவிலை உள்ளே சென்று பார்ப்பதை விட வெளியிலிருந்து கோவிலின் கட்டமைப்பை ரசிப்பது எனக்கு பிடிக்கும். கோவிலை கந்தாஸ்ரமம் என்ற அருணாச்சல மலையின் பகுதியிலிருந்து பார்த்தால் எனக்கு பிடிக்கும். அதே போல மற்றொரு இடத்திலிருந்து பார்த்தால் கோவில் அட்டகாசமாக தெரியும்.
கந்தாஸ்ரமத்தின் முன்புறத்திலிருந்து கோவிலின் தோற்றம்

நண்பர்களின் சவாலால் கையில் காசில்லாமல் திருவண்ணாமலை வந்து கோவிலுக்கு செல்லாமல் திருவண்ணாமலையில் பல
இடங்களில் சுற்றி திரிந்தேன் அல்லவா? அப்பொழுது அதிகம் நேரம் கழித்த இடம் இது தான். என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடம். அது ஒரு ஆற்றல் மிகுந்த இடம்...


(தொடரும்)

Saturday, August 22, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 11

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கனி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழிய வைத்தானே.
-----------------------------------------------------------------திருமந்திரம் - 2882

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் அனேக மலை சார்ந்த தெய்வீகத்தலங்களில் மலையின் உச்சியில் அல்லது மலையின் ஆற்றல் கொண்ட இடங்களில் கோவில் கட்டப் பட்டிருக்கும்.

இந்திய கலாச்சார கடவுள்களான சிவன்,விஷ்ணு, அம்மன், முருகன், விநாயகர் என அனைவருக்கும் மலைமேல் கோவில் இருக்கும். முருகனுக்கு அதிகமாக இருப்பதால் குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பார் என சொல்லுகிறார்கள்.

நாடி சாஸ்திரத்தின் அடைப்படையிலேயே மலையில் கோவில்கள் கட்டப்படுகிறது. உங்கள் ஸ்வாசமும் நாடிக்கும் தொடர்பு உண்டு என முன்பு பார்த்தோம்.

உங்கள் உடலின் வலப்பகுதியில் அழுத்தம் கொடுக்கபட்டால் இடது நாசியில் ஸ்வாசம் வரும் . அதாவது ஈடா நாடி வேலை செய்ய துவங்கும். இடப்பகுதியில் அழுத்தம் கொடுத்தால் வலபகுதியில் ஸ்வாசம் ஏற்பட்டு பிங்கள நாடி வேலை செய்யும். இருபக்கத்திலும் அழுத்தம் கொடுத்தால் ஸுக்‌ஷமணா நாடி வேலை செய்து இரு நாசியிலும் வேலை செய்யும்.

மேற்கண்ட விஷயத்தை ஒரு சோதனையாக நீங்களே செய்து பாருங்களேன். உங்களுக்கு எந்த நாசி துவாரத்தில் ஸ்வாசம் வருகிறது என பாருங்கள். பிறகு ஸ்வாசம் வரும் பகுதியில் உள்ள உங்கள் கைகளை நிலத்திலோ அல்லது மேஜையிலோ நன்றாக ஊன்றிக்கொள்ளுங்கள். சில நிமிடங்களில் கவனித்தால் உங்கள் ஸ்வாசம் அடுத்த நாசியில் வரத்துவங்கும். இடது நாசியில் ஸ்வாசம் வருவதாக இருந்தால் இடது கையை ஊன்றுங்கள். வலது பக்கம் ஸ்வாசம் சில நிமிடத்தில் வரத்துவங்கும்.

இம்முறைக்கு நாடி சலனா என பெயர். யோகிகள் யோக தண்டம் என ஆங்கில எழுத்து “Y" போல ஒரு பொருள் வைத்திருப்பார்கள் அல்லவா? அவை இதற்கு (ம்) தான் பயன்படுக்கிறது. அவர்களின் நாடியை சமப்படுத்த கைகளில் இடம் மாற்றி அழுத்தம் கொடுத்துக்கொள்வார்கள்.

நம் முன்னோர்களுக்கு இவ்விஷயம் தெரிந்ததால் தான் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்தாலோ, சாப்பிடும் பொழுது கைகளை ஊன்றி சாப்பிட்டாலோ அவ்வாறு செய்யாதே என கூறுவார்கள். கை மற்றும் உடலின் பாகங்கள் அழுத்தம் கொண்டால் உடலில் நாடி சலனம் ஏற்படும். சலனம் ஏற்படுவதால் நம் இயல்பான உடல் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்க படலாம்.

நாடி சலனத்தை சோதனை முறையில் செய்யுங்கள், தொடர்ந்து செய்யக்கூடாது. சரியான குருவின் வழிகாட்டுதலில் நாடியிடம் விளையாடுவது நல்லது.

நமது உடலின் நாடிகள் அனைத்தையும் தூண்டி ஆன்மீக நிலைக்கு இட்டு செல்லும் தன்மை ஸுக்‌ஷமணா நாடிக்கு உண்டு. அதனால் மலைக்கு மேல் கோவிலை கட்டிவிடால் இருகால்களையும் பயன்படுத்தி சம அளவு அழுத்தத்துடன் ஏறும் பொழுது உடலில் ஸூக்‌ஷமணா நாடி இயற்கையாகவே வேலை செய்யும். மலைக்கோவிகளுக்கு இனி செல்லும் பொழுது உங்கள் ஸ்வாசத்தை கவனிக்க தவறாதீர்கள். மலைக்கோவிலை அடைந்ததும் உங்கள் ஸ்வாசத்தை கவனித்தால் அவை இரு நாசிகளிலும் சரியான அளவாக வந்துகொண்டிருக்கும்.

[ குறிப்பு : கிருஸ்துவர்கள் இரு கால்களையும் மண்டி இட்டு வணங்கியும், இஸ்லாமியர்கள் இரு கால்களையும் அடுத்தி உட்கார்ந்து தொழுவதன் மூலமும் ஸூக்‌ஷமணா நாடியை தூண்டுகிறார்கள். நாடிகள் ஆன்மீகம் சார்ந்தது , மதம் சார்ந்தது அல்ல என புரிந்துகொள்ளுங்கள். ]

மலைமேல் கோவில் இருக்க காரணம் தெரிந்ததா? திருவண்ணாமலை திருத்தலத்தில் மட்டும் ஒரு விஷேடம் உண்டு. மலை மேல் கோவில் கட்டப்படாத ஒரு தெய்வீக ஸ்தலம் என்றால் அது திருவண்ணாமலை மட்டுமே. காரணம் மலையே இங்கு தெய்வமாக இருக்க மலையை உள்ளே வைத்து பிரம்மாண்டமாய் கோவில் கட்ட முடியுமா?

மலைமேல் ஏறுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் நாடி சலனம் தான். ஒரு இடத்தில் உட்கார்ந்து நாடியை மேம்படுத்த முடியும் என்றாலும் இயற்கையுடன் பயணித்து நாடியை மேம்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்த ஒருவிஷயம். மலைஏறும் திறன் இருந்தும் சிலர் மலைக்கோவிலுக்கு டோலியில் செல்வார்கள் அவர்களை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கும்.

ஆன்மீக அன்பர்கள் பலர் அருணாச்சல மலை மேல் ஏறுவதில்லை. காரணம் மலையே இங்கே கடவுளாக பார்க்கப்படுவதால் அதில் கால்வைக்க தயங்குகிறார்கள். இறைவன் அங்குமட்டுமா இருக்கிறார் ? ஒரு அடிக்கு ஒரு லிங்கம் இருக்கும் திருவண்ணாமலை என அருணாச்சல புராணம் விவரிக்கிறது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு லிங்கம் இருக்குமாம். அப்படி பார்த்தால் இவர்கள் ஊருக்குளேயே வர முடியாதே..!

அருணாச்சல மலையில் சரியான நடை பாதைகள் கிடையாது. கந்தாஸ்ரமம் எனும் பகவான் ரமணர் வாழ்ந்த இடம் வரைக்கும் தான் நல்ல பாதை உண்டு. பிறகு சுண்ணாம்பால் அம்பு குறி வரைந்து மேலே எப்படி செல்ல வேண்டும் என பாறைகளே நமக்கு வழிகாட்டும்.

நான் எனது மாணவியுடன் மேலே செல்ல செல்ல வெய்யிலும் மேலே சென்றது. மலையின் இடையே எங்களுடன் பயணத்திற்கு வேறு ஒரு வெளிநாட்டு அன்பரும் இணைந்து கொண்டார். அவரிடம் தண்ணீர் இல்லாததால் பாறையில் படுத்துவிட்டார். நீர் கொடுத்து அவரை தளர்வாக்கி அழைத்து சென்றோம். அன்று பார்த்து பாறைகள் உருகிவிடுமே என நினைக்கும் அளவுக்கு வெப்பம். அக்னி மலை என சொல்லுவதற்கு காரணம் கற்பிக்கும் வானிலை.


நான் தனியாக வந்திருக்க கூடாது என புலம்பிய படியே எங்களுடன் அந்த வெளிநாட்டு அன்பர் ஏறிக் கொண்டிருந்தார். அவருக்கு மலை ஏற்றமும் வெய்யிலும் புதுசு என்பதால் பாவம் மிகவும் மனசஞ்சலம் கொண்டுவிட்டார். யாரையும் துன்புறுத்தாதவர் ஆயிற்றே அருணாச்சலம்.... நாங்கள் உச்சியை அடைய சில தூரங்கள் இருக்க அங்கே மேக மூட்டம் சூழ்ந்தது. எங்களை சுற்றி முழுவதும் மேகங்கள். உச்சியும் தெரியவில்லை. கீழே நகரமும் தெரியவில்லை. எங்கும் குளிர்ச்சி குளிர்ச்சி .கேட்டதை கொடுப்பவர் என மீண்டும் அருணாச்சல மகாத்மியத்தை உணர்ந்தேன்.

மூவரும் உச்சியை அடைந்து கண்கள் மூடி தியானிக்க துவங்கினோம்..

திடீரென .......ஹோம்ம்ம்ம்ம் ............என்ற சப்தம் கேட்க துவங்கியது. நீண்ட அளவில் அதுவும் தீர்க்கமாக கேட்க துவங்கியது. சில விநாடிகளில் அதீத சப்தத்துடன் காதுகளின் கேட்கும் திறனுக்கும் மிகுதியாக கேட்டது.

நான் அந்த வெளிநாட்டுகாரர் சப்தம் எழுப்புகிறார் என நினைத்து கண்கள் திறந்து பார்த்தால் அவரும் எனது மாணவியும் காதுகளை இறுக அழுத்திகொண்டு கண்களில் நீர்வர உட்கார்ந்திருக்கிறார்கள்.

சுற்றியும் மழை மேகம், நாங்கள் அமர்ந்திருக்கும் இடமும் மேகமும் தவிர எதுவும் தெரியவில்லை. எங்களை சுற்றி பிரணவ மந்திர ஜபம் இயற்கை நிகழ்த்துகிறது. வேறு என்ன வேண்டும்? முக்தி வேண்டாம் உன்னை தரிசிக்க மனிதனாகவே பிறக்க வரம் கொடு என மாணிக்க வாசகர் சும்மாவா கேட்டார்? கீழ் இறங்கி வந்ததும் கண்ணீர் மல்க என்னிடம் விடை பெற்றார் அந்த வெளிநாட்டு அன்பர்.

இத்தனை பகுதிகளாக அருணாச்சல அருமைகளை தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஆசியாவிலேயா இரண்டாவது பெரிய கோவில் மற்றும் பிரம்மாண்டமாக கட்டபட்டு நவீன கட்டட கலைக்கு சவாலாக இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில் பற்றி ஒன்றும் பேசவில்லையே?

அடுத்த பகுதியில் தரிசிப்போம்...

(தொடரும்)

Thursday, August 20, 2009

தெரிந்த விநாயகரும் தெரியாத ரகசியமும்

நமது கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் கணபதி. உயர் நிலையில் இருக்கும் ஞானி ஆகட்டும், சராசரி மனிதனாகட்டும் கணபதியை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. உருவ நிலையிலும் சரி , பூஜா முறையிலும் சரி புரிந்து கொள்ள முடியாத ஒரு அதிசயம் விநாயகர். புராணங்கள் விநாயகரின் பிறப்பை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறினாலும், உள்ளார்ந்த ஞான நிலையில் கணபதியை புரிந்து கொள்ளும் நோக்கில் எழுதபட்டது தான் இந்த கருத்துக்கள்.

பாமரர்கள் புரிந்து கொள்ளுவதற்காக உருவகப்படுத்தபட்ட கதைதான் உமாதேவி தனது குளிக்கும் தருவாயில் விக்னேஷ்வரரை உருவாக்கினார் என்பது. அந்த கதையை உற்று நோக்கினால் சிவன் , சக்தியை காண வரும்பொழுது சிவனை தடுத்து போர் புரியும் பகுதி உண்டு. முடிவில் சிவன் விக்னேஷ்வரரின் தலையை கொய்து பிறகு யானையின் தலையை வைத்ததாக வரலாறு கூறுகிறது.

புராண கதையின் சுவையில் நாம் பக்தியுடன் இருப்பது தவறல்ல, ஆனால் அதை பற்றி சிந்திக்காத முட்டாளாக இருப்பது தவறு. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். சக்தி உருவாக்கிய விக்னேஷ்வரர் சிவனை பிரித்தரியாத மூட படைப்பாக இருக்க முடியுமா?

இல்லை சக்தி தான் அவ்வாறு உருவாக்குவாளா? அண்ட சராச்சரத்திற்கும் நாயகனான சிவன் தன் முன் இருக்கும் பாலகன் யார் என தெரியாமல் போர் புரிவாரா? இவை எல்லாம் திருவிளையாடலுக்காக என கொண்டாலும் தலையை கொய்து போடும் அளவிற்கா திருவிளையாடல் நடக்கும்.? எந்த அசுரனையும் வதம் செய்யாலம் அவனுக்கு வரம் மட்டுமே தருபவர் அல்லவா ஈசன்?

புராண கதைகள் அனைத்தும் கூறப்பட்டது உங்கள் மனதில் கணபதியின் உருவம் பதியவேண்டும் என்பதற்கும் உங்களின் பக்தி பெருகவேண்டும் என்பதற்குமே. ஆனால் நாத்திக வாதம் பேசும் சிலர் கணபதியின் உருவை கேலிக்கூத்தாக்குகிறார்கள்.

ஒரு வேடிக்கை கதை ஒன்று உண்டு. ஒரு நாத்திகரும், ஆத்திகரும் நண்பர்கள். தினமும் காலையில் ஒன்றாக நடைபயிற்சி செய்பவர்கள். நாத்திகர் கையில் தனது செல்ல நாய் குட்டியை பிடித்தபடி வருவது வழக்கம். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் கொள்கையில் வேறுபட்டவர்கள்.


ஆத்திகர் நடைப்பயிற்சியின் இடையே வந்த அரச மர விநாயகரை வழிபட்டு விட்டு நடையை தொடர்ந்தார். அப்பொழுது நாத்திகர் வேடிக்கையாக “நண்பரே இது என்ன முட்டாள் தனம் தினமும் இந்த கல்லை வணங்கலாமா? அதற்கு பதில் உயிர் உள்ள இந்த நாய் குட்டியை வணங்கலாமே. இது தான் என் சாமி..!” என்றார் கிண்டலாக. ஆத்திகர் புன்சிரிப்புடன், “நண்பரே .. உங்கள் நாய் குட்டியை என் சாமி மீதி போடுங்கள். என் சாமியை உங்கள் நாயின் மீது போடுகிறேன். எது சக்தி வாந்தது என தெரியும். சக்தி எதில் இருக்கிறது என முடிவு செய்ய வேண்டியது நாம் தான்..!” என்றார். கடவுளை எந்த பொருளிலும் காணலாம். ஆனால் இதில் தான் நீ காணவேண்டும் என சொல்லுவது அஹங்காரத்தின் அதிகாரமே தவிர வேறொன்றும் அல்ல.

வேடிக்கை கதைகள் இருக்கட்டும் கணபதியின் உருவம் ஏன் அப்படி இருக்கிறது?


விக்னேஷ்வரர் சாக்‌ஷாத் பிரணவத்தின் ரூபமானவர். பிரணவம் என்றால் ஓம் எனும் நாதம். ஓம் எனும் இந்த பிரபஞ்ச ஒலி மூன்று உள் பிரிவாக இருக்கிறது என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ரணவ மந்திரம் அ - உ - ம் எனும் மூன்று சப்தங்களின் கூடல் என்பதால் இந்த மூன்று சொல்லின் சப்த அளவை கருத்தில் கொண்டு அவரின் உடல் அமைந்துள்ளது. அ என்ற அகண்ட தலைபகுதி, உ என்ற வீங்கிய உடல் பகுதி, ம் என்ற சிறிய கால் பகுதி. இந்த மூன்று சப்தங்களையும் கூறிக்கொண்டே கணபதியின் உருவை நினைத்துப்பாருங்கள்.


ப்ரணவ மந்திரம் என்பது அனாதி, அதாவது தோற்றமும் முடிவும் அற்றது. அது போல விக்னேஷ்வரரும் தோற்றமும் முடிவும் அற்றவர். ப்ரணவ மந்திரம் போன்று உருவமற்றவர். அதனால் மஞ்சளில் பிடித்தாலும் பிள்ளையார்தான், அரிசியில் பிடித்தாலும் பிள்ளையார்தான் , சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான் மற்றும் விக்ரஹம் ஆனாலும் பிள்ளையார்தான். உருவமற்றவரை எவ்வுருவில் அமைத்தால் என்ன?
நான் கடவுள் படத்தை பகடி செய்து நான் உருவாக்கிய நான் விநாயகர்

அதனால் தான் அவருக்கு குழந்தை இல்லை. சம்சாரம் இல்லை என்கிறார்கள். கணபதி என்ற பெயருக்கு கணங்களுக்கு அதிபதி அதனால் கணபதி என்பார்கள். காணாதிபதே என்றால் கணங்களின் அதிபதி எனலாம். உண்மையில் கணம் என்றால் காலத்தின் அளவு கோல். அதனால் காலத்தை முடிவு செய்பவன் கணபதி காலத்திற்கு அதிபதி எனக்கூறலாம். விக்னேஷ்வரர் என்றால் விக்னம் - தடைகளை ஏற்படுத்துபவரும் நீக்குபவரும் என பொருள்படும்.

காலத்தை அனுசரித்து ஒரு விஷயத்தை செய்தால் அவை தடைபடாது. காலத்தை கடந்து செய்தால் எவ்விஷயமும் தடையாகிவிடும் என்பதை அவரின் இரு பெயர்களும் கூறுகிறது.


ஞானத்தின் வடிவானவர் விநாயகர். எந்த ஒரு பொருள் முழுமையான முக்தி நிலையில் இருக்கிறதோ அதை தான் விக்னேஷ்வரருக்கு படைக்கிறோம்.
கணபதிக்கு படைக்கும் பொருளின் தாத்பர்ரியம் மேற்கண்ட கருத்தை கொண்டே அமைந்திருக்கிறது, அருகம் புல் விதைப்போட்டு வளரக்கூடியது அல்ல. அதை விவசாயம் செய்ய முடியாது. வெள்ளெருக்கும் அத்தகையதே. அருகம்புல்லுக்கு காய் கனி விதை என்ற நிலை கிடையாது. தன் இனத்தை பெருக்காது. ஆகவே சுயம்பு தாவரமான அருகம்புல் முக்தியின் ரூபமான விநாயகரின் ரூபமாகும்.

மோதகம் ஞானத்தின் சின்னம். முழுமையான ஞானி தன்னுள் பூர்ணத்துவம் பெற்று இருப்பார். அவரின் வெளித்தோற்றம் சாதாரணமாக இருக்கும் என்பதையே மோதகம் காட்டுகிறது. ஞானிகள் எப்பொழுதும் விக்னேஷ்வரரின் கைகளில் இருப்பார்கள் என்பதையும் அல்லவா காட்டுகிறது !

பிள்ளையாருக்கு
பிரம்மனின் புதல்விகள் சித்தி புத்தி ஆகியோரை திருமணம் செய்து வைத்ததாக புராணம் கூறுகிறது. பிரம்மா எனும் நிலை படைத்தலை காட்டுகிறது. ஒருவர் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமானால் சித்தமும், புத்தியும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும். அவர்களை ஏன் விநாயகருடன் இணைக்க வேண்டும்? ஒரு உருவாக்கம் செய்ய தடை சித்தத்திலும் புத்தியிலும் இருக்கக்கூடாது.

நாடியும் விநாயகரும் :

ஆன்மீகத்தில் இருக்கும் மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே கூறுகிறேன். உடலின் வலது பகுதி மூளையின் இடது பக்கதிலும் ; இடப்பகுதி வலது மூளையாலும் கட்டுபடுத்தப்படுகிறது என்கிறது விஞ்ஞானம். இதையே நம் சாஸ்திரம் நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.


நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் அமைந்திருக்கிறது.


கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள். விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முயற்சி செய்து விட்டு விநாயகரின் விக்ரஹ மகிமையை கூறவும். விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு இத்தகைய ஆற்றல் உண்டு.

விக்னேஷ்வரர் உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்டவர் அதனால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள். பிராணன் இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அரசமரம் மூலம் சுத்தப்படுத்துகிறோம்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை அதனால் தான் இது விநாகயர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை. விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுவோம். வாருங்கள் ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.