Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, August 19, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி பத்து

விவசாயம் செய்யும் பூமியில் அனேக களைகள் இருக்கும். களைகளை அகற்றி நீர்பாய்ச்சினால் நல்ல ஒரு அறுவடை கிடைக்கும். இல்லை என்றால் விழலுக்கு இறைத்த நீர் என கூறுவார்களே அப்படி ஆகிவிடும். செயற்கையாக கவனத்துடன் செயல்படும் பொழுதே இவ்வாறு அனேக களைகள் வந்துவிடும். இயற்கை காடு என்றால் களைகளுக்கு கேட்கவா வேண்டும்?

அது போலத்தான் திருவண்ணாமலையில் ஆதி குரு முதல் அனேக ஜீவன் முக்தர்கள் தோன்றினார்கள். தோன்றி வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு இடையே சில களைகளும் உண்டு. அவற்றை கண்டுணர்ந்து அகற்றிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஞான அறுவடையில் அதிக மகசூல் கிடைக்கும்.
அண்ணாமலையார் கோவிலில் ஒரு சாது

தென் பாரத திருநாட்டில் ஸ்ரீ சைலத்திற்கு பிறகு திருவண்ணாமலையில் தான் சாதுக்களும், யோகிகளும் கூட்டம் கூட்டமாக வாழ்கிறார்கள். எந்த பொருளும் கையில் இல்லாமல் பறவை போல சுற்றி திரியும் சாதுக்களை காண்டால் எனக்கு ஆன்மீக நிலையையும் தாண்டி வரைமுறையில்லாமல் பொறாமை ஏற்படும்.

ரமணாஸ்ரமத்தில் தினமும் காலை 11 மணிக்கு நாராயண சேவை என்ற ஒரு நிகழ்வு உண்டு. திருவண்ணாமலையில் இருக்கும் அனேக சாதுக்களும் இங்கே கூடிவிடுவார்கள். அவர்களை வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் ரமணாஸ்ரமத்தில் உணவு வழங்குவார்கள். சாதுக்கள் ருசிக்காக சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு பசிக்கும் பொழுது ஏதோ ஒருவகை சோறு வேண்டும். அவ்வளவுதான். சிலர் இரு கையையும் குவித்து அன்னம் பெற்று சில அடிகள் தள்ளி சென்று உண்பார்கள். பிறகு அங்கே இருக்கும் குழாயில் கைகளை கழுவி விட்டு சென்றுவிடுவார்கள். அவ்வளவுதான்...

தினமும் உணவு உண்ண மாட்டார்கள். உணவு வாங்க பாத்திரம் கூட வைத்திருக்கமாட்டார்கள். இவர்கள் வாழும் பட்டினத்தார்கள். அந்த பாத்திரத்தால் வாழ்க்கையில் ஒட்டுதல் இருக்க கூடாது என்பது அவர்களின் சித்தாந்தம்.நாராயண சேவை என்ற இந்த இலவச உணவு முறை தினமும் தடையில்லாமல் செய்கிறார்கள். குறைந்தபட்சம் இருநூறு சாதுக்களாவது உண்பார்கள்.

திருவண்ணாமலை செல்லும் சமயங்களில் காலை பதினோரு மணிக்கு அங்கே
நடக்கும் இந்த அன்ன வேள்வியை கண்டு ஆனந்தமடைவது என் வாடிக்கை. எவ்வளவு பார்த்தாலும் அடங்காத ஆனந்தம்.

ரமணாஸ்ரமத்தில் நாராயண சேவை

சாதுக்கள் தவிர்த்து பிச்சைக்காரர்களும் உணவு உண்ண வருவதுண்டு. அவர்கள்
பிளாஸ்டிக் பையில் அல்லது பாத்திரத்தில் வாங்கிசெல்லுவார்கள். காவி உடை போட்ட காரணத்தால் அவர்கள் சாதுக்கள் என சிலர் எண்ணி ஏமாந்துவிடுவதுண்டு.

சாதுக்களின் முகம் மற்றும் உடை அவர்களின் தனித்தன்மையை காட்டும். சாதுக்கள் என்பவர்கள் அனேக ஆன்மீக முன்னேற்றம் கொண்டாலும் கூரையின் கீழ் தங்காமல் எந்த பொருளையும் சேர்க்காமல் இருப்பவர்கள். யாராவது யாசகம் கொடுத்தால் பெற்றுக்கொள்ளுவார்கள். யாரிடமும் காசு கொடுங்கள் என யாசகம் கேட்க மாட்டார்கள்.

பிச்சைக்காரர்களுக்கும் சாதுக்களுக்கும் எப்படி வித்தியாசம் தெரியாமல் இருக்கிறோமோ அது போலவே சிலர் திருவண்ணாமலையில் நம்மை ஏமாற்ற “ஞானிகள்” வேஷம் போடுவதுண்டு. சின்ன சின்ன சித்து வேலைகள் கற்றுக்கொண்டு இவர்கள் செய்யும் சுட்டித்தனங்கள் தாங்க முடியாது.

அதிசயம் செய்பவர்களை கடவுளாக நினைக்கும் மக்கள் இவர்களிடம் நம்பி ஏமாந்துவிடுவார்கள். அருணகிரி நாதர் துவங்கி ரமணர் வரையும், அதன் பிறகு வந்த யோகி ராம்சூரத் குமார் போன்றவர்களும் அதிசயங்கள் எதையும் நிகழ்த்தி காட்டியதில்லை. அவர்கள் சொன்ன கருத்தால் மனிதர்களின் மனங்களில் அதிசயம் நிகழ்தது.

தெரியாமல் உங்கள் முழங்கை எதிலாவது முட்டினால் ஒருவித மின்சாரம் பாயும் அனுபவம் வரும் அல்லவா? அது போல பிறரை தொட்டால் மின்சார உணர்வு உண்டாக்கும் ஒரு சித்து இருக்கிறது. சில பிராணாயம பயிற்சிகளால் எளிதில் பெறமுடியும். இத்தகைய தேவையற்ற சித்துக்களை வைத்துகொண்டு வருபவரிடம் உனக்கு குண்டலினி ஆட்டிவிக்கிறேன் குந்துமணி விற்கிறேன் என சிலர் ஏமாற்றுவதுண்டு.

அவர்கள் முதுகை தொட்டதும் மின்சாரம் பாய்ந்தது போல இருக்கும். அவ்வளவுதான். நானும் குண்டலினி அனுபவம் பெற்றுவிட்டேன் என அந்த நபர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியாது. இந்த சித்துக்களை வைத்துகொண்டு சிலர் உலக புகழ் (போலி) யோகிகளானதும் உண்டு.

எனது வெளிநாட்டு மாணவியுடன் மலைமேல் ஒரு சம்பவம் நடந்ததாக சொன்னேன் அல்லவா? அதற்கு அடுத்த நாள் காலை 4 மணிக்கு தியானம் செய்ய நான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து ரமணாஸ்ரமத்தின் தியான மண்டபத்திற்கு செல்ல தெருவில் நடந்துகொண்டிருந்தேன்.

தெருவில் சில சாதுக்கள் படுத்துதூங்கி கொண்டிருந்தனர். அதில் ஒரு சிலர் மட்டும் தூங்காமல் உற்கார்ந்து இருந்தனர். நான் அவர்களை கடக்க முயலும் பொழுது அதில் ஒருவர் சப்தமாக “டேய்....” என்றார்.

நான் திரும்பவில்லை. இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தேன்.

“டேய் உன்னைத்தாண்டா”.. என்றார்.

நான் நிதானத்துடன் நடந்தேன். ஆனால் திரும்பவில்லை. இன்னும் சில அடிகள் எடுத்து வைத்திருப்பேன்.

“டேய் ஓம்காரு உன்னத்தாண்டா..” என்றார்.

நினைத்து பாருங்கள் ஒருவர் உங்களின் பெயரை சொல்லி காலை 4 மணிக்கு கூப்பிடுகிறார். அவருக்கு உங்களின் பெயர் தெரிந்திருக்கிறது....! ராம சாமி, குப்பு சாமி என குத்துமதிப்பாக அடித்துவிடவில்லை. ஸ்பொஷ்டமாக “ஓம்கார்” என்கிறார்.

நான் நின்றேன். திரும்பி அவரை பார்த்தேன்.

“உன் பேரு மட்டுமில்லை நேத்து மலைக்கு மேல என்ன நடந்துனும் எனக்கு தெரியும்” என்றார்.

நானும் எனது மாணவியும் மலைக்கு மேல் சென்றதும் இவருக்கு தெரிந்திருக்கிறது.

அவரிடம் நான் கேட்டேன், “அதுக்கு இப்ப என்ன? உங்களை நமஸ்காரம் பண்ணனுமா?” என்றேன்.

அவ்வளவுதான்..

அவர் அமைதியாகிவிட்டார். நான் ரமணாஸ்ரமத்திற்கு தியானம் செய்ய சென்றேன்.

இவ்வாறு சித்துக்களை காட்டி நாம் வாய்பிளந்து நிற்கும் பொழுது நமக்கே வாய்க்கரிசி போடும் பித்தர்கள் இங்கே அதிகம். நீங்கள் இதை பெரிதுபடுத்தாமல் ஒதுக்கிவிடவேண்டும். மாயையை விலக்க திருவண்ணமலை வந்து மாயையில் விழலாமா?

முழுமையானவர்கள் என்றும் உங்களிடம் அதிசயம் காட்டமாட்டார்கள். உங்களை அறியாமல் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்துகொண்டிருப்பார்கள். அதற்கு விளம்பரம் தேடமாட்டார்கள்.

பலாப்பழத்தை திருடிய திருடன் எவ்வளவு நாள் தான் அதை தனது நாற்காலிக்கு கீழே மறைத்துவைக்க முடியும்? அது போல ஞானிகள் தங்களை பற்றி யாரிடமும் கூறுவதில்லை. அவர்களின் இருப்பு எப்படியோ அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது.

பகவான் சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு பரதேசியாக சஞ்சரித்தவர். அனைத்து வேதங்களையும் இளவயதில் கற்றவர் என்றாலும் இருபது வயதில் அவதூதராக அப்படியே திருவண்ணமலைக்கு வந்துவிட்டார். எங்கும் தங்கமாட்டார்.
ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்

திருவண்ணாமலையை சுற்றி சுற்றி வருவார். திருவண்ணாமலையில் இருக்கும்
அண்ணாமலையார் கோவிலின் உள்ளே இருக்கும் முருகன் சந்நிதியில் அமர்ந்திருப்பார். இவர் எப்படி பட்டவர் என யாருக்கும் தெரியாது. ஊரை சுற்றி வரும் பொழுது ஏதாவது கடையில் நிற்பார். அந்த கடைகாரர்கள் ஏதாவது அவருக்கு கொடுப்பார்கள். சென்றுவிடுவார். யாரிடமும் பேச்சுக்கிடையாது..!

நாள் முழுவதும் அந்த கடையில் வியாபாரம் தூள் பறக்கும. என்றைக்கும் இல்லாத வியாபாரம் நடக்கும். இது படிப்படியாக மக்கள் உணர ஆரம்பித்தார்கள்.சேஷாத்திரி ஸ்வாமிகள் என்றும் இதை சொன்னது கிடையாது. அவருக்கு பிச்சை போட்டவர்கள் உணர்ந்தார்கள். சேஷாத்திரி ஸ்வாமிகளும் எத்தனைநாள் தான் அவரின் ஆன்மீக பலாபழத்தை மறைக்க முடியும்?

இப்படித்தான் அனேக சாதுக்களும், அவதூதர்களும், ஞானிகளும், மஹான்களும் பார்க்க எளிமையாக இருந்தாலும் உள்ளே மஹாஉன்னத நிலையில் இருக்கிறார்கள். அதனால் அதிசயம் நிகழ்த்துபவர்களை நான் எப்பொழுதும் நகைச்சுவையுடனே அனுகுவேன்.

அருணாச்சல மலையில் வேறுயாரும் இல்லாத இடத்தில் நான், என்
மாணவி மற்றும் மற்றொருவருடன் நிகழ்ந்த நிகழ்வை ஒருவர் சொன்னார் என்றவுடன் அவரிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு தோன்றவில்லை மாறாக ஏளனமே தோன்றியது. சின்ன சித்துக்கள் வைத்து என்ன செய்துவிட முடியும்? சித்தமில்லாமல் இருப்பவருக்கு சித்துகள் எதுக்கு?

அது சரி. மலையில் என்ன நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்? தெருவில் உற்கார்ந்து இருக்கும் ஒரு சாதுவிற்கு தெரிந்தது உலகத்தையே விரல் நுனியில் உலாவும் உங்களுக்கு தெரியாதா?

எதற்கு தர்க்கம் சொல்லிவிடுகிறேனே...

நானும் எனது மாணவியும் காலை ஏழு மணிக்கு மலை ஏறத்துவங்கினோம்,...

(தொடரும்)

Tuesday, August 18, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஒன்பது

யோகிகளும் மஹான்களும் கிரிவலம் செல்லும் பொழுது இடப்பக்கமாக செல்லுகிறார்கள். காரணம் உலகவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் வலப்பக்கம் சுற்றி பரமனுடன் தங்களை பிணைத்துக்கொள்ளுகிறார்கள். முக்திஅடைதல் என்ற மஹாத்தத்துவதில் இயங்கும் யோகிகள் இடபக்கம் சுற்றுவது கூட நன்மைக்குதான். காரணம் அப்பொழுது தானே நாம் வலப்பக்கம் சுற்றும் பொழுது நேருக்கு நேர் சந்திக்க முடியும்?

எனது பரதேசி பயணத்தில் சில உறுதிமொழியை எனக்குள் எடுத்திருந்தேன். எங்கும் யாசகம் கேட்க கூடாது. யாரிடமும் உதவி பெறக்கூடாது என்பது போன்ற வைராக்கிய கணக்குகள் என்னுள் இருந்தது. பணம் இல்லாமல் திருவண்ணாமலை வந்து செல்லுவது சிரமம் இல்லை என பலர் நினைக்கலாம்.

உணவுக்காக கையேந்தி நின்றால் என்ன கவலை? யாராவது ஒருவராவது உதவ மாட்டார்களா? இல்லை ஒரு ஆசிரமத்தில் தங்கினால் அவர்கள் உணவு இடமாட்டார்களா? வேலை எளிதாக முடியும் அல்லவா? எனது பயணத்தில் காசில்லாமல் சென்று திரும்ப வேண்டும் என்று மட்டுமே என நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அத்துடன் எங்கும் தங்கக் கூடாது. உணவுக்காக யாரிடமும் கேட்க கூடாது என்ற வைராக்கியம் வளர்த்துக்கொண்டேன்.

என் மனதுக்குள் இருந்த வைராக்கியம் என்னவென்றால், “இறைவன் அனைவருக்கும் உணவு வழங்குவான் என்றால் நான் இருக்கும் இடத்திற்கு கேட்காமலே உணவை வழங்க வேண்டும் அல்லவா?”. ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். வைராக்கியத்தை காட்டிலும் ஆணவமே அதிகமாக எனக்குள் இருந்தது.

பிரம்மனின் ஆணவமே காணாமல் போன இடம் இது. நான் எல்லாம் ஒரு காசுக்கு ஆவேனா.? சக்தி வாய்ந்த இடங்களில் நமக்கு ஆணவம் தோன்ற காரணம் அந்த தலத்தின் சக்தியை நாம் உணரத்தான்..! இல்லையென்றால் மரக்கட்டை போல அங்கு சென்று வந்தால் என்ன உணர்வு இருக்க முடியும்?

திருவண்ணாமலையில் ஆற்றல் வாய்ந்த இடம் எது என கேட்பது மல்லிகையில் எந்த பகுதி மணக்கும் என கேட்பதை போன்றது. திருவண்ணாமலையே ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் பொழுது அதன் அருகில் எது நிற்க முடியும்? திருவண்ணாமலையின் மையத்தில் இருந்து மூன்று யோஜனை தொலைவில் இருக்கும் அனைவருக்கும் திருவண்ணாமலை அருளாற்றலை வழங்குகிறது என அருணாச்சல புராணம் திடமாக கூறுகிறது.



அது என்ன மூன்று யோஜனை என உங்களுக்கு யோசனையா? ஒரு மாட்டுவண்டியில் பிணைக்கப்பட்ட மாடு தளர்வடையாமல் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அந்த தொலைவு ஒரு யோஜனை. இது சராசரியாக 8 கிலோமீட்டர் என கூறலாம். ஆக திருவண்ணாமலையை சுற்றி 25 கிலோமீட்டருக்கு அருணாச்சல கிரி தனது ஆற்றலை வெளிப்படுத்திவருகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். அத்தகைய திருவண்ணாமலையில் முக்கியமாக அனுபவிக்க வேண்டிய இடங்கள் சில உண்டு.


கவனிக்கவும் பார்க்க வேண்டிய இடங்கள் அல்ல. அனுபவிக்க வேண்டிய இடங்கள்..!

நான் விவரிக்க போகும் இடங்கள் எல்லாம் எனக்கு பிடித்த இடங்கள். சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம். தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சுற்றுலா அழைத்துவருகிறார்கள். அவர்கள் பார்க்கும் இடத்தை நான் கூறப்போவதில்லை. நாம் என்ன இன்பச் சுற்றுலாவுக்காகவா இடம் தேடுகிறோம்? அதனால் எனது பட்டியலை ஆன்மீக தலைப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.

தெற்கு பகுதியில் நான் நடக்க துவங்கிய கிரிவலப்பாதையில் இருக்கும் அடுத்த முக்கிய இடம் பச்சையம்மன் கோவில் மற்றும் கெளதமர் ஆசிரமம். இங்கே பார்வதி தேவி கெளதம முனிவரின் ஆசிரமத்தில் தவம் இருந்ததாக கூறுகிறார்கள். தற்சமயம் இந்த இடம் சிதிலம் அடைந்து வருகிறது. நேர் அண்ணாமலை என திருவண்ணாமலை கோவிலுக்கு நேராக மலைக்கு பின்புறம் இருக்கும் இடம் இந்த நேர் அண்ணாமலை கோவில்.

அதிலிருந்து ஒரு ஐந்து கிலோமீட்டரில் வருவது திருவண்ணாமலையில் எனக்கு மிகவும் பிடித்த இடம். முக்கிய நகரங்களின் மையப்பகுதியை ஹார்ட் ஆப்த சிட்டி என்பார்கள். திருவண்ணாமலையின் ஹார்ட் அதாவது ஆன்மீக இதயமாக செயல்படு இடம் அடி அண்ணாமலை.

இந்த கோவிலுக்கு பெளர்ணமி தவிர பிற நாட்களில் சென்றீர்கள் என்றால் நீங்களும் இறைவனும் மட்டும் தான் இருப்பீர்கள். அத்தனை (அத்துணை..!) அமைதி இருக்கும் கோவில். அடி அண்ணாமலை கோவில்தான் முதன் முதலாக திருவண்ணாமலையில் கட்டபட்ட கோவில்.
இக்கோவிலின் உண்மையான பெயர் “ஆதி அண்ணாமலை”.


அடி அண்ணாமலை கோவிலின் வடக்கு சுவர் முழுவதிலும் கிளிகள் மற்றும் புறாக்கள் வரிசையாக அமர்ந்திருக்கும் இருக்கும். நினைத்து பாருங்கள் பச்சையும்,சாம்பலும் மற்றும் வெள்ளையுமாக கோவிலின் சுவரில் பறவைகள் அமர்ந்திருக்கும் இயற்கையின் வண்ண விளையாட்டு எப்படி இருக்கும் என்று..... மாணிக்கவாசகர் இந்த கோவிலில்தான் முதன் முதலில் திருவாசகம் பாடினார். அடி அண்ணாமலைக்கு அருகில் மாணிக்க வாசகருக்கு ஒரு தனிக்கோவில் இங்கே மட்டுமே காண முடியும். அடி அண்ணாமலை கோவிலும் அதன் சுற்றுபுறமும் கண்டால் நமக்கே நமச்சிவாய வாழ்க..நாதன் தாழ் வாழ்க என பாடத்தோன்றும்.!

அடிஅண்ணாமலைக்கோவிலில் இருக்கும் தக்‌ஷிணாமூர்த்தி அம்சம் மிகவும் வித்தியாசமானது. அதைவிவரிக்க தமிழில் வார்த்தையை தேடிவருகிறேன். ஒருநாள் கண்டிப்பாக விவரிக்க முயற்சி செய்கிறேன்.... மெளன ரூபனை வார்த்தைகளால் விவரிக்கும் நாள் என்னாளோ?

எனக்கு தெரிந்தவரையில் ஆற்றல் மிகுந்த கோவில்களில் மூல ஆற்றலை ஒரு இடத்தில் சேமித்து வைத்திருப்பார்கள். அந்த மூல ஆற்றல் கோவிலின் கருவரைக்கு சென்று விக்ரஹத்தை சக்தியூட்டும். மூல ஆற்றல் இருக்கும் இடம் ரகசியமாகவே வைக்கப்படும். கோவில் சிதைக்கபட்டாலும் மூல ஆற்றல் இடங்கள் மூலம் மீண்டும் அவற்றை உயிர்ப்பிக்கலாம். ஆன்மீக ஆற்றல் உள்ளவர்களால் மூல ஆற்றல் கேந்திரங்களை கண்டறிய முடியும்.

திருவண்ணாமலை சக்திவாய்ந்த இடத்தின் மூல சக்தி இரு இடங்களில் மட்டும் அதீதமாக இருப்பதாக எண்ணுகிறேன். ஒன்று அடி அண்ணாமலை மற்றொன்று முடி அண்ணாமலை.

அடி அண்ணாமலை இந்த இடம் என்றால் முடி அண்ணாமலை என்பது மலையின் சிகரம். திருவண்ணாமலையின் உச்சி பகுதி மிகவும் சக்தி வாய்ந்தது. சிறு வயதிலிருந்து பல மலைகளை ஏறிய அனுபவம் உண்டு. மலையேறுபவர்களே சிரமம் கொள்ளும் வெள்ளிங்கிரி மலைக்கு கூட எளிமையாக ஏறிவிடுவேன். ஆனால் முடி அண்ணாமலையானை காண ஏறினால் மட்டும் என்னால் முடியாது..!

மிகவும் செங்குத்தான பாதை. ஸ்ரீ சக்ர புரி என்பதற்கு இணையாக சிறிது ஏற்றம் பிறகு சமமான பாதை என படிபடியாக உச்சியில் குறுகிய முனையாக இருக்கும். உச்சியில் 20 அடி சுற்றளவு மட்டுமே இருக்கும். ஏறும் பாதையில் அனேக குகைகள் உண்டு. அதில் சிறிது நேரம் அமர்ந்து கண்களை மூடினால் ஓம்கார மந்திரம் கேட்கும்.

வருடத்தில் பல முறை திருவண்ணாமலை சென்றாலும், குறைந்தபட்சம் இருமுறையாவது முடி காணாமல் வரமாட்டேன். நான் என்னுடன் வந்த வெளிநாட்டு மாணவியுடன் சில வருடம் முன் மலையேறும் பொழுது நடந்த சம்பவம் நீங்கள் மலையேறும் பொழுதும் நடக்கலாம்.


அது .......

(தொடரும்)


Saturday, August 15, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி எட்டு


ரமண மகரிஷியை ஒருவர் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செய்ய அழைத்தார்.மகரிஷி சிரித்துகொண்டே ஒன்றும் தெரியாதவர் போல அங்கே அப்படி என்ன விஷேஷம் என்றார். கைலாய மலை சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான் பூதகனங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம் கைலாயம் என்றார். கைலாயம் சிவன் வசிக்கும் ஸ்தலம் ஆனால் திருவண்ணாமலை என்பது சிவனே தான். சிவன் இங்கே இருக்க அவரின் வீட்டை போய் பார்த்துவருவானேன்? என ரமணர் கூறினார்.

தனது பதினாராம் வயதில் மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு
வந்தவர் பிறகு எங்கும் சென்றதில்லை. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். அந்த மலையை தனது குருவாவும், ஞான சுடராகவும் கொண்டார் மகரிஷி. தனக்கும் அருணாச்சல கிரிக்கும் வித்தியாசம் இல்லாமல் அத்துடன் வேறுபாடு இன்றி கலந்தார். இத்தகைய மாமுனிவர்களும், மஹான்களும், ஞானிகளும் வாழ்ந்த இடமாக திருவண்ணாமலையில் பல நூற்றாண்டுகளாக இருக்கிறது. இவர்களின் தன்மையை விமர்சிக்கவோ, இவர்கள் ஞானி என சொல்லவோ எனக்கு தகுதி இல்லை.

கண்களை திறந்து கொண்டு தியானம் செய்ய முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் காசி படித்துரையில் கங்கையில் ஓட்டத்தை பார்த்தவாறு இருப்பது, திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமர்ந்து மலையை பார்த்தவாறு இருப்பதும் ஒருவகை தியானம் தான். காசியில் அசைந்து தியானத்தை கொடுக்கும் கங்கை, இங்கே மலை அசையாமல் நம்மை ஆழ்த்திவிடும்.

அஷ்ட என்ற வடமொழி வார்த்தை எட்டு என்ற எண்ணை குறிக்கும். ஐரோப்பிய மொழிகளில் ஆக்டா என்பது எட்டு என்பதை குறிக்கும். எட்டு திக்கிலும் இருக்கும் லிங்கம் திசையை சரியாக குறிக்க அமைக்கபட்டுள்ளது. சக்தியை கொடுக்கும் இடமாகவும் இருக்கிறது. கிரிவலம் வரும் சமயம் ஒவ்வொரு லிங்கத்தையும் வணங்கி அவ்விடத்தில் சிறிது நேரம் அமர்ந்து திருவண்ணாமலையை கவனியுங்கள். மலை பேசும்...!

கடந்த ஒன்பது வருடங்களாகத்தான் அஷ்டலிங்க கோவில்கள் புது பொலிவுடன் இருக்கிறது. அதற்கு முன் ஒரு பத்துக்கு பத்து அறையில் ஒரு லிங்கம் இருக்கும். சில நேரங்களில் ஆடு லிங்கத்தின் மேல் இருக்கும் மலர் மாலையை சாப்பிட்டுக்கொண்டிருக்கும். இது தான் நிலை. ஆனால் தற்சமயம் மக்கள் கூட்டம் வருவதால் செப்பனிட்டு விரிவடைந்துள்ளது. மேலும் அஷ்டலிங்கத்தில் குபேர லிங்கம் மட்டும் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழியும். முக்தி கொடுக்கும் ஸ்தலத்தில் இவர்கள் பணத்தை தேடுகிறார்கள்.
அஷ்ட லிங்க கோவிலின் மேல் கூறையில் வரையப்பட்ட அருணாச்சல கிரிவல படம்

அருணாச்சல கிரி எனும் பொக்கிஷம்
பிரம்மாண்டமாய் முன்னிருக்க இவர்கள் குபேரலிங்கத்திற்கு 'மட்டும்' பூஜை செய்வது வேடிக்கைதான். கிரிவலம் போகிறவர்கள் கையில் சில்லரை நாணயத்துடன் அங்கே இருக்கும் சாதுக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் தர்மம் செய்தவாறே செல்லுவார்கள். ஆனால் குபேர லிங்கத்திற்கு வெளியே மட்டும் செய்ய மாட்டார்கள்.இவர்களின் செல்வம் அவர்களிடம் போய்விடுமாம். இந்த புத்தி இருப்பவர்கள் செல்வ நிலையில் சீமானாக இருக்கலாம் ஆனால் ஆன்மீக நிலையில் பிச்சைகாரனாகவே இருக்க முடியும்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஒவ்வொரு திக்கிலும் அருணாச்சல கிரி ஒவ்வொரு வடிவமாகவும், வேறு பட்ட நிறத்திலும் தெரியும். நந்தி வடிவம், சிவசக்தி வடிவம் மற்றும் பஞ்ச முக வடிவம் என மலையை நம் பார்வைக்கு ஏற்ப அருணாச்சலம் வெவ்வேறு வடிவில் இருக்கிறது.

அருணாச்சல கிரி வெவ்வேறு வடிவில் இருப்பதை போல இங்கிருக்கும் ஆன்மீகவாதிகளும் வெவ்வேறு வடிவில் இருக்கிறார்கள். சிலர் உணர் வடிவிலும் சிலர் உணர்வுக்கு அப்பாலும் இருக்கிறார்கள்.

மணலை எடுத்து மூக்கு பொடி போல பயன்படுத்தும் மூக்கு பொடி சாமி, உடலில் சணல் துணியையும் வெளிநாட்டுகாரர்கள் பயன்படுத்தி உடைந்த ஓட்டை குளிர்கண்ணாடியும் அணிந்து அழகிப்போட்டிக்கு போவது போல இருக்கும் சாக்கு சாமி, ராணுவ சட்டையும் காவி வேட்டியுடன் இருக்கும் மிலிட்டிரி சாமி, பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பண்ணாட்டு நிறுவனத்தில் உயர்பதவியை விட்டுவிட்டு இங்கே பரதேசியாக இருக்கும் வெள்ளைச்சாமி என அவதூத நிலையில் இருக்கும் ஆன்மீகவாதிகள் அதிகம்.

அவதூத நிலை என்றால் இலக்கில்லாமல் ஒரு வட்டத்திற்குள் சிக்காதவர்கள். நடந்து கொண்டோ அல்லது மரத்தின் அடியில் உற்கார்ந்து கொண்டோ இருப்பார்கள். அவர்கள் பேசுவது புரியாது. திடிரென தெளிவாக பேசுவார்கள். அவர்கள் இது தான் செய்வார்கள் என நாம் கணிக்க முடியாது. உடை மற்றும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். மொத்தத்தில் அவர்கள் தங்களின் உலகில் ஆனந்தமாக இருப்பவர்கள். சீரடி சாய்பாபா மற்றும் சேஷாத்திரி ஸ்வாமிகள் இவர்களின் தன்மை கொண்டவர்கள் என வெளி நிலைப்பாட்டை கொண்டு முடிவு செய்யலாம்.

இப்படிபட்ட அவதூத சாக்கு சாமியிடம் தான் அன்று நான் மாட்டிக்கொண்டேன். சைக்கிளில் நானும் அவரும் பயணிப்பதை அனைவரும் விசித்திர பார்வையோடு பார்த்தார்கள். காரணம் சாக்கு சாமி வாகனத்தில் பயணித்தது இல்லை. மேலும் பார்க்க பைத்தியகார பாவனையில் இருப்பார். அவரை வைத்து நான் சைக்கிள் ஓட்டினால் வேறு எப்படி பார்ப்பார்கள்?

அரைகிலோமீட்டர் மிதித்திருப்பேன். நானும் பேசவில்லை அவரும் பேசவில்லை. நீச்சல் அடிப்பது போல கால்களை ஆட்டிக்கொண்டே வந்தார்.

எங்கோ யாருக்கோ பார்த்து சொல்லுவது போல வானத்தை பார்த்து “பம்பரத்தை சுத்தனும்னா கயிர வலபக்கம் சுத்தனும், உன்னை மாதிரியும் என்னை மாதிரியும் சுத்தாத பம்பரத்திற்கு கயிர இடபக்கமாதாண்டா சுத்தனும். எல்லாம் கழண்டுக்கும் கழண்டுக்கும்” என்றார்.

“கீறீச்...” என சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்தினேன். எகிறி குதித்து ஆடியபடியே மலைக்கு மேல் சென்று மறைந்தார். அவர் வந்த வேலை முடிந்தது.

(தொடரும்)

Thursday, August 13, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஏழு

நான் பிரம்ம முஹுர்த்த வேலையில் தென்பகுதியில் இருந்து கிரிவலம் செய்ய துவங்கினேன். செங்கம் என்ற ஊருக்கு செல்லும் சாலையும் கிரிவலப்பாதையும் இணையும் இடம் ஆங்கில எழுத்து “Y" போல இருக்கும். அங்கே சென்று கொண்டிருக்கும் பொழுது செங்கம் ரோட்டில் திருவண்ணாமலையை நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று தள்ளாட்டத்துடன் வந்து கொண்டிருந்ததை கண்டேன். நின்று அந்த வாகனத்தை கவனித்தேன்.அதிவேகத்துடன் தள்ளாடியபடி வந்த கார் நேராக என்னை நோக்கி வந்தது.

இந்த தருணத்தில் கிரிவலம் பற்றி விளக்கி விடுகிறேன். கிரி வலம் என்ற வார்த்தையே இச்செயலை விளக்கிவிடும். மலையை வலப்புறமாக வட்டமிடுமாறு வருவது கிரிவலம். தென்னிந்திய புனித ஸ்தலங்களில் திருவண்ணாமலையில் மட்டுமே கிரிவலம் வரும் தன்மை உண்டு.வட இந்தியாவில் பிருந்தாவனத்தில் கோவர்த்தன மலையை மக்கள் வலம் வருகிறார்கள். மேலும் சில மலைஸ்தலங்களில் வலம் வருவதுண்டு.

தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பிரபலமான விஷயம் ஆகிவிட்டதால் பல தென்னிந்திய மலைக்கோவில்களில் பின்பற்ற துவங்கிவிட்டார்கள். பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது என்பது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.

கிரிவலம் வருவதால் நம் உடல் மனம் மற்றும் ஆன்மா இனம் புரியாத உயர் நிலைக்கு அழைத்துசெல்லப்படுகிறது. அவ்வாறு கிரிவலத்தில் மேன்மையை உணர வேண்டுமானல் கிரிவலம் வருவதற்கான சரியான முறையை தெரிந்து கொள்வது அவசியம். சிரசாசனம் என்ற யோக பயிற்சியை யோகிகள் செய்வார்கள். வவ்வால் எப்பொழுதும் சிரசாசன நிலையிலேயே இருக்கிறது. அதற்காக வவ்வாலை யோகி என சொல்ல முடியுமா? அது போல மலையை சுற்றி வலம் வந்தவர்கள் எல்லாம் மேன்மையான ஆன்மீக உணர்வு அடையமாட்டார்கள்.

அருணாச்சல மஹாத்மியத்தில் கிரிவலம் பற்றி ஒரு கதை உண்டு. ஒரு ராஜா வேட்டைக்காக திருவண்ணாமலை பகுதிக்கு வந்தார். அந்த காலத்தில் அது வனப்பிரதேசமாக இருந்தது. ஒரு காட்டுபூனையை கண்டு அதை வேட்டையாட துரத்தினார். பூனையும் தன்னைக் காத்துக்கொள்ள ஓடத்துவங்கியது. துரத்திய ராஜாவும், துரத்தபட்டப் பூனையும் தங்களை அறியாமல் மலையை வலம் வந்தனர். ஒரு முறை சுற்றி முடிந்ததும் ராஜா திடீரென கீழே விழுந்தார். காரணம் மலையை சுற்றிவந்ததால் ராஜாவின் குதிரையும், காட்டுபூனையும் மோட்சம் அடைந்து மேல் லோகம் சென்றதாம். ஆனால் ராஜா செல்லவில்லை காரணம் ராஜா வேறு சிந்தனையில் சுற்றினாராம் பூனையும் தன்னை காக்க வேண்டும் என இறைவனை வேண்டியும், குதிரை மன எண்ணம் இல்லாமலும் சுற்றியது என்பதால் மேட்சம் அடைந்ததாக சொல்லுகிறார்கள்.
உள் கிரிவலப்பாதையில் சாது

தற்காலத்தில் கிரிவலம் வருவது ஒரு பொழுது போக்கு அம்சமாக ஆகிவிட்டது. ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் 30 நிமிடத்தில் கிரிவலம் வந்து அனைத்து கோவிலிலும் ஒரு வணக்கம் வைக்கலாம். எத்தனை ஆட்டோக்கள் மோட்சம் அடைந்ததோ தெரியவில்லை.

கிரிவலம் வரும் பொழுது மிகவும் மெல்ல நடக்கவேண்டும். இறைசிந்தனையோ, நாம ஜபமோ இருந்தால் நல்லது. கர்ப்பிணி பெண் போல நடக்க வேண்டும் என்பார்கள். எப்பொழுதும் தன் வயிற்றில் இருக்கும் சிசுவின் மேல் கவனம் இருப்பது போல மந்திரத்தில் கவனமும், சீரான நடையும் இருக்க வேண்டும். நீர்ம பொருளை தவிர வேறு எதையும் உட்கொள்ளகூடாது. எளிய உணவு, குறைந்த அளவில் உட்கொள்ளலாம்.

ரமண மகரிஷி மற்றும் அவரின் அடியவர்கள் இரண்டு நாட்கள் கிரிவலம் வருவது வாடிக்கை. உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு ஆங்காங்கே சமைத்து உண்டு மெல்ல நடப்பார்கள். இதற்கு பூரண கிரிவலம் என பெயர். தற்காலத்தில் பூரண கிரிவலம் வரும் ஆட்கள் குறைவு. துரித உணவால் வாழ்க்கையும் துரிதமாகிவிட்டது.

14 கி.மீ நீளம் கொண்ட சாலை கிரிவலப்பாதை. முன்பு மண் ரோடாக இருந்ததால் வெறும் காலில் நடந்து செல்லுவது இதமாக இருந்தது. கடந்த சில வருடங்களில் தார் சாலைகள் போட்டும் நடை மேடை அமைத்தும் நெடுஞ்சாலைத்துறை கிரிவலப்பாதையை மேம்படுத்தி உள்ளது. ஆனாலும் நம் கால்களுக்கு மண் பகுதிகளே நன்மையை கொடுக்கும். கிரிவலப்பாதை என்பது மூன்று உண்டு. மக்கள் பயன்படுத்துவது வெளிசுற்றில் இருக்கும் தார்சாலையைத்தான்.

மலையை ஒட்டி ஒரு காட்டுவழிச்சாலை இன்றும் உண்டு. தகுந்த வழிகாட்டியுடன் சென்றால் சொர்க்கத்தின் பாதை எது என புலப்படும். மிகவும் இயற்கை அன்னையின் இருப்பிடம் இந்த உள்வழிப்பாதை. அது போல மலையின் மேல் பகுதியில் ஒரு கிரிவலப்பாதை உண்டு.ஒரு சிவலிங்கத்தை கவனித்தீர்கள் என்றால் மேல்பகுதியிலிருந்து கீழ் பகுதி வரை மூன்று வட்டப்பகுதிகள் இருக்கும். லிங்கப்பாதை என்ற இந்த தன்மையைதான் இந்த மூன்று கிரிவலப்பாதையும் குறிக்கிறது.

பெளர்ணமி அன்று 15 லட்சம் பேர் கிரிவலம் வருகிறார்கள். பெளர்ணமிக்கு அடுத்த நாள் கிரிவலப்பாதையை பார்த்தால் அவர்களின் பக்தி புரியும். முன் காலத்தில் விளக்கு வசதி இல்லை அதனால் காட்டுப்பாதையாக இருந்ததால் பெளர்ணமி அன்று மட்டும் வலம் வந்தார்கள். தற்காலத்தில் நவீன மின்வசதிகள் உண்டு அதனால் எல்லா நாட்களிலும் வலம் வரலாம். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை அங்கே கிரிவலம் வர நாள்கிழமை பார்க்க வேண்டுமா?

இப்படித்தான் நாள் நேரம் பார்க்காமல் துவங்கிய எனது கிரிவலத்தில் அந்த கார் என்னை நேராக மோதுவதற்கு வந்தது. நான் அசையாமல் செய்வதறியாமலும் நின்றேன். எனக்கு முன்பாக சில அடி தூரத்தில் சட்டென வலபுறமாக திரும்பி ஒரு மரத்தில் மோதி நின்றது. ஓடி சென்று பார்த்தேன். அதில் ஒரு குடும்பம் பயணித்து வந்திருக்கிறார்கள். வாகன ஓட்டி இரவு ஓட்டியதால் களைப்பில் தூங்கிவிட்டார். வாகன ஓட்டிக்கு மார்புக்கூட்டில் நல்ல அடி. காரின் முன்பகுதி நல்ல பாதிப்பு. பிறருக்கு எதுவும் ஆகவில்லை.

திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு மருத்துவமனையின் தொலைபேசி எண் தெரியும் என்பதால் அவர்களுக்கு தொலைபேசியில் அழைக்க எண் கொடுத்துவிட்டு கிரிவலத்தை தொடர்ந்தேன்.

இப்படி அடிக்கடி நடக்கும். விபத்தை சொல்லவில்லை. கிரிவலம் செல்லுபவர்கள் ஒரு சக்தியால் காக்கப்படுகிறார்கள். அந்த விபத்தை நீங்கள் நேரில் பார்த்திருந்தால் புரிந்திருக்கும். அந்த காரின் வேகத்திற்கு நிச்சயம் அங்கே சில உயிர் போயிருக்க வேண்டும். எமன் என்னுடன் கிரிவலம் அல்லவா சென்று கொண்டிருந்தார்...! அதனால் கடமையை கவனிக்க முடியவில்லை என நினைத்துக்கொண்டேன்.
திருவண்ணாமலை செல்லும் சமயங்களில் ஒரு முறை நடந்து கிரிவலம் வருவேன். பிறகு வாடகைக்கு ஒரு சைக்கிள் அமர்த்திக்கொண்டு வலம் வருவேன். சைக்கிளில் வலம்வருவது ஒரு சுகானுபவம். என் மாணவர்களுடன் செல்லும் பொழுது சைக்கிளில் வலம்வருவதுண்டு. பல கோவில்களுக்கு கிரிவலப்பாதையில் சைக்கிளில் பயணிப்பது அருமையாக இருக்கும். வேடிக்கையாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு தெரிந்து பல சைக்கிள்களுக்கு இவ்வாறு மேட்சம் வழங்கியது உண்டு.

சிலவருடம் முன் சைக்கிளில் கிரிவலம் செல்லும் பொழுது என் மனதில் இருந்த கிரிவல சிந்தாந்தத்தை உடைத்து தெளிவாக்கியது ஒரு சம்பவம். கிரிவலம் செல்வதை பற்றி எனக்கு ஆணம் இருந்திருக்குமோ என்னவோ இறைவனின் அருளால் அதுவும் நொருங்கியது.

ரமணாஸ்ரமம் முன்பிருந்து சைக்கிளில் கிரிவலத்திற்கு தயாராகி மிதிப்பானை மிதித்தும் வண்டி நகரவில்லை. காரணம் சைக்கிளின் பின் புறம் கைகளால் பிடித்திருந்தார் “ சாக்கு சாமி ”.

இது தான் சாக்கு என அவரைப்பற்றி விளக்கி விடுகிறேன். சாக்கு சாமி என்றவர் திருவண்ணாமலையில் இருக்கிறார். அவதூத நிலையில் இருப்பவர். அங்கும் இங்கும் திரிந்து சாக்குதுணியை ஆடையாக கட்டிக்கொண்டு நிற்பவர். மார்பிலிருந்து தொடைப்பகுதி வரை ஒரே சாக்கு துணியை சுற்றி இருப்பார். தலை முடி சடைசடையாக இருக்கும்.

சைக்கிளின் முன்பகுதியில் வந்து உட்கார்ந்து கொண்டு 'நானும் வரேன்' என்றார். நான் ஒன்றும் பேசவில்லை. சைக்கிளை மிதித்து சில அடி சென்று இருப்பேன். “.... நிறுத்து நிறுத்து என்ன இப்படி கிரிவலம் போறே? தப்பு தப்பு வண்டிய திருப்பி பின்னால விடு” என்றார்.

கிரிவலம் தானே கேள்விப்பட்டிருப்பீர்கள். சாக்கு சாமியுடன் நான் சென்றது கிரி இடம்...! காரணத்தை அவரே பயணத்தின் பொழுது விளக்கினார்.. அது என்னெ வென்றால் ....

(தொடரும்)