Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, July 10, 2009

பழைய பஞ்சாங்கம் 10-ஜூலை-2009 - சுப்பாண்டி ஸ்பெஷல்..!

இது சுப்பாண்டி ஸ்பெஷல். சுப்பாண்டியை பற்றி தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள அவசியம் இல்லை. காரணம் அவனை பற்றி படித்தாலே அவனை தெரிந்து கொள்ளலாம். அப்படி இருந்தும் நீங்கள் விருப்பப்பட்டால் இந்த சுட்டியில் அவனை பற்றி படியுங்கள்.
------------------------------------------------------------------------------------

ருசிக்காக சாப்பிடாதீங்க


ஒரு வெளிநாட்டு பெண்மணியின் வீட்டில் நானும் சுப்பாண்டியும் பேசிக்கொண்டிருந்தோம். தனது உடல் பருமன் நாளுக்கு நாள் கூடிவருகிறது என வருத்தப்பட்டார் அந்த பெண் மணி. அவர் வருத்தப்பட்டு முடிக்கும் முன் சுப்பாண்டி தனது நீண்ட பிரசங்கத்தை ஆரம்பித்தான். உணவு என்பது உடலில் உயிர் தங்குவதற்கு தான் சாப்பிடவேண்டும். நாக்கு ருசிக்காக சாப்பிட கூடாது. உயிருக்காக சாப்பிடால் உடல் பருமன் வராது. அவனது பிரசங்கம் எனக்கே தாங்க முடியவில்லை.

ஆனந்தமாக இருப்பதை பற்றி சில
ஆன்மீகவாதிகளின் பிரசங்கத்தை ஒத்து இருந்தது.தனது வாழ்க்கையில் பயன்படுத்தாத ஒன்றை பற்றிய வறட்டு அறிவுரையாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பெண் எங்களுக்கு உணவை பரிமாறினார். மேற்கத்திய பாணியில் பாஸ்தாவும், குழம்பும் கொடுத்தார்.

மிக அருமையான சுவையில் இருந்தது. அதை கூற சுப்பாண்டி பக்கம் திரும்பினால், அவன் பாத்திரத்திற்குள் தலையை விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அந்த பெண்மணிக்கு தெரியாமல் அவனை கூப்பிட்டு, “சுப்பு, ருசிக்காக சாப்பிடக்கூடாதுனு சொன்னியே...” என கேட்டேன். என் பக்கம் திரும்பாமலேயே சுப்பாண்டி கூறினான்.. “ஸ்வாமி.. பாஸ்த்தான எனக்கு உசிறு..”
------------------------------------------------------------------------

மெளனவிரதம்

மாணவர்களுடன் திருவண்ணாமலை பயணம் செல்லும் சமயங்களில் ஒரு நாள் முழுவதும் மெளனமாக இருப்பது வழக்கம். மெளனவிரதம் அல்ல. தங்களை ஜடப்பொருளாக பாவித்து சைகையோ, பேச்சோ இல்லாமல் இருப்பது. அதனால் ஏற்படும் பலனை பின்பு ஒருநாள் கூறுகிறேன். மெளனவிரதம் இருந்த பிறகு அடுத்த நாள் சுப்பாண்டி எண்ணிடம் வந்து ஒரு அழகிய விளக்கை காண்பித்து, “ஸ்வாமி நன்றாக இருக்கிறதா? ஆசிர்வதித்து கொடுங்கள்” என்றான். அந்த விளக்கின் அழகில் மயங்கி கேட்டேன்..

“விலை அதிகமா இருக்கும் போல இருக்கே..எப்போ வாங்கினே?”. சுப்பாண்டி கிசுகிசுப்பான குரலில் சொன்னான். “நேத்து மெளனவிரதம் இருந்தோம் இல்லியா? அப்போ விலை'பேசி' வாங்கினேன்.”
-------------------------------------------------------------------------

டிஜிட்டல் ஐ


சுப்பாண்டிக்கு உலகில் பிடிக்காத விஷயம் ஒன்று உண்டு என்றால் அது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள். அதில் இருக்கும் பொத்தான்கள் மற்றும் அமைப்புகளை பார்த்தாலே ஒருவித மன பிரயாசையில் இருப்பான்.

எந்த விஷயத்தையும் வேண்டாம் என
ஒதுக்காதே. அவ்வாறு ஒதுக்கினால் அவை மீண்டும் மீண்டும் உன் முன்னால் வரும். அதை உள்வாங்கிக்கொள்ள முயன்றுபார். அதை வாழ்க்கையில் கடந்துவிடலாம் என அறிவுரை சொன்னேன்.

ஒரு விழாவிற்கு என்னுடன் வந்தவன், நவீன டிஜிட்டல் புகைப்பட கருவியை கையில் எடுத்துக்கொண்டான். புகைப்படம் எடுப்பவர் எவ்வளவோ கூறியும். தான் முயற்சிப்பதாக கூறிவிட்டானாம். ( பாருங்கள் என் அறிவுரை வேலை செய்கிறது).

விழா முடிந்ததும் எடுத்த புகைப்படங்களை பார்த்தால் அனைத்திலும் சுப்பாண்டியுன் கண்கள் தெரிகிறது. டிஜிட்டல் கேமராவின் டிஸ்பிளே பகுதியில் தான் புகைப்படம் பதிவாகும் என எண்ணி சுப்பாண்டி பெருந்தகை அவ்வாறு எடுத்திருக்கிறது. போக்கஸ் பகுதியில் கண்களை வைத்து படம் எடுத்தால் வேறு எப்படி வருமாம்?
------------------------------------------------------------------------
ஜென் கவிதை

என் சமஸ்காரம்
------------------------
நான் ஒர் ஓவியம் வரைந்தேன்.
அந்த ஓவியத்தில் நான் என்னை வரைந்தேன்.
அந்த ஓவியத்திலும் நான் என்னையே வரைந்தேன்.
நான் வரைந்த ஓவியத்திலும் நான் என்னையும் வரைந்தேன்.
நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்? ஓவியத்திலா?
ஓவியம் வரைவதிலா?

19 கருத்துக்கள்:

Subbiah Veerappan said...

/////ஆனந்தமாக இருப்பதை பற்றி சில ஆன்மீகவாதிகளின் பிரசங்கத்தை ஒத்து இருந்தது.தனது வாழ்க்கையில் பயன்படுத்தாத ஒன்றை பற்றிய வறட்டு அறிவுரையாக இருந்தது.////

சரியாகச் சொன்னீர்கள் ஸ்வாமிஜி!
நன்றி!

நிகழ்காலத்தில்... said...

\\எந்த விஷயத்தையும் வேண்டாம் என ஒதுக்காதே. அவ்வாறு ஒதுக்கினால் அவை மீண்டும் மீண்டும் உன் முன்னால் வரும். அதை உள்வாங்கிக்கொள்ள முயன்றுபார். அதை வாழ்க்கையில் கடந்துவிடலாம்\\

நுணுக்கமான விசயம், வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

எந்த விஷயத்தையும் வேண்டாம் என ஒதுக்காதே. அவ்வாறு ஒதுக்கினால் அவை மீண்டும் மீண்டும் உன் முன்னால் வரும். அதை உள்வாங்கிக்கொள்ள முயன்றுபார். அதை வாழ்க்கையில் கடந்துவிடலாம்\\


உண்மை சாமி, எங்கவூட்டம்மா போன் பண்ணயில எந்த மீட்டிங்கா இருந்தாலும் எடுத்து பேசிட்டா அன்றைக்கு அந்த ஒரு ஃபோனோட தப்பிச்சுடலாம். எடுக்காட்டி அன்று நூறு ஃபோன் வரும்.

:))

எம்.எம்.அப்துல்லா said...

சாமி உங்களுக்கு ஒரு ஃபார்சல் அனுப்பி இருக்கேன். பார்த்துட்டு சொல்லுங்க.

(பிரியாணியான்னு கேட்டு என்னைய டென்ஷன் பண்ணிறாதீங்க)

:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்பையா,
திரு நிகழ்காலம்,

உங்கள் வருகைக்கு நன்றி.


இருவரும் நகைச்சுவையின் உள்ளே இருக்கும் மெல்லிய கருத்தை கண்டுபிடித்துவிட்டீர்கள். நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..


மீட்டிங்னு பேருல நம்ம புருஷன் யார்கிட்டையாவது அடிவாங்கிடுவாரோனு ஒரு பயம்.

அவங்க அவங்க பிரச்சனை அவங்க அவங்களுக்கு :) உங்க ஊட்டம்மவை சொன்னேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

//(பிரியாணியான்னு கேட்டு என்னைய டென்ஷன் பண்ணிறாதீங்க)
//

கேட்க மாட்டேன். :) என் மேல இருக்கிற வெறுப்பில் பார்சல் குண்டா?
:)

எம்.எம்.அப்துல்லா said...

//

கேட்க மாட்டேன். :) என் மேல இருக்கிற வெறுப்பில் பார்சல் குண்டா?
:)


//

க்கும்...இதுக்கு பிரியாணியே பரவாயில்லை.

(உங்க பதில் கமெண்ட்டை படிச்சு கண்ணில் நீர்முட்ட சிரித்தேன் சாமி)

:)))))))))))))))))

Mahesh said...

//நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்?//

மொதல்ல "நான்" யாரு? அப்பத்தான் சொல்ல முடியும் எங்க இருக்காருன்னு..
:)))

நீங்களும் அப்துல்லாவும் விளையாடற விளையாட்டு நல்லா இருக்கு :)))))))

கோவி.கண்ணன் said...

//நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்? ஓவியத்திலா?
ஓவியம் வரைவதிலா? //

வரையும் போது எங்கே இருந்தீர்களோ அங்கே தான் இருந்திருப்பீர்கள்.
:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்? ஓவியத்திலா?
ஓவியம் வரைவதிலா?//

மற்றவருக்கு - நீங்கள் ஓவியத்தில் இருக்கிறீர்கள்!
உங்களுக்கு - நீங்கள் ஓவியம் வரைவதில் இருக்கிறீர்கள்!

நீங்களே உங்களுக்கு மற்றவர் ஆனால்? - நீங்கள் ஓவியத்தில் இருக்கிறீர்கள்!

Subramaniam said...

//நான் இப்பொழுது எங்கே இருக்கிறேன்? ஓவியத்திலா?
ஓவியம் வரைவதிலா? //

சலூன் கடைல முடி வெட்டும்போது கண்ணாடி பார்க்கறது போலனு சுருக்கமா சொல்லுங்க!

Anonymous said...

சுப்பாண்டி சூப்பர்! ஜென் கவிதை அற்புதம்! எனக்கு என்னமோ சுப்பாண்டி ஞானம் அடைந்த ஜென் மாஸ்டர் என்று தோன்றுகிறது!

//எந்த விஷயத்தையும் வேண்டாம் என ஒதுக்காதே. அவ்வாறு ஒதுக்கினால் அவை மீண்டும் மீண்டும் உன் முன்னால் வரும்.//
ஆகா! இப்போதான் புரியுது. மாமியார் வீட்டிற்கு போயி சாப்பிடும் போது, இனிப்பு வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால், அவர்கள் மேலும் மேலும் வித விதமாக வாங்கி வந்து கொடுப்பார்கள்! வாங்கி வந்த இனிப்பு ஒரு தடவை சாப்பிட்டால் முடிந்திருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

பரவாயில்லையே ஜென் கவிதையை சகிச்சுக்க பழகிட்டீங்க போல...

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி. கண்ணன்,

வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கண்ணபிரான் ரவிசங்கர்,

பரிமேல் அழகர் போல என் ஜென்கவிதைக்கு உரை எழுதியதற்கு நன்றி. :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு S,

//சலூன் கடைல முடி வெட்டும்போது கண்ணாடி பார்க்கறது போலனு சுருக்கமா சொல்லுங்க!//

அருமையான உதாரணம். நமக்கு அந்த இடம் பழக்கம் இல்லை.:)

//கடைல முடி வெட்டும்போது//
நீங்க கடை வைச்சுரிக்கீங்களா?

தமிழ் நுணுக்கமான மொழி.

கடைல முடி வெட்ட போகும் பொழுதுனு சொல்லுங்க..! சும்ம தமாசுக்கு :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதுரைவீரன்,

உங்கள் வருகைக்கு நன்றி

அது ஒரு கனாக் காலம் said...

நானும் நேத்திக்கு பாஸ்தா சாப்பிட்டேன், வீட்டுல செய்ஞ்சது ... உப்பு, மசாலா, வெங்காயம் எல்லாம் போட்டு ..அதை உப்பாஸ்தா ன்னு சொல்லலாம் !!!!!!

நிறைய சொல்றீங்க , கொஞ்சம் விளங்குது ... நிறைய ...ஹி! ஹி!.... உப்பாஸ்தா நன்னா இருக்கு !!!!