Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Featured Posts

Tuesday, July 8, 2014

புரபசர் லூஸ்னோஸ்கியும் அரை இறுதி கால்பந்தாட்டமும்

ஜெர்மனியின்  தென்பகுதியில் உள்ள சிறிய கிராம பூங்காவில்  மாலைநேர இருளில் கைகளை இறுக கட்டிக்கொண்டு நடந்து கொண்டிருந்தேன். கோடைக்காலம் என்றுதான் பெயர் குளிர் எலும்பை அசைத்துப்பார்த்தது.

ஏதோ யோசனையில் பூங்காவின் கடைசி பக்க புல்வெளிக்கே வந்துவிட்டேன். திரும்ப வீடுவரை செல்ல ஐந்து கி.மீ நடக்க வேண்டும். குறுக்கு வழி என்றால் பக்கவாட்டில் உள்ள மலைகுன்றை தாண்டினால் போதும் இரண்டு கி.மீ சென்றுவிடலாம். மெல்ல மலைக்குன்றில் ஏறத்துவங்கினேன்.

இதயம் வாய்க்கே வந்துவிடும் அளவுக்கு மூச்சுவாங்கியது. எப்பொழுதும் குறுக்குவழியில் பாதி வந்தவுடன் தான் நேர்வழியே தேவலாம் என தோன்றும். கொஞ்சம் தளர்வாகி நடக்கலாம் என சுற்றும் நோட்டம் விட்டேன்.

குன்றின் மேல் ஒரு கருப்பு நிற பழைய கோட்டை கண்ணில்பட்டது. பாதி செதிலம் அடைந்து உட்புற கற்கள் தெரிய ஒரு திகில் உணர்வுடன் காட்சி அளித்தது.  அந்த கோட்டையை உள்ளே பார்க்கும் நோக்கில் சென்றேன்.

வவ்வால் எச்ச நாற்றமும் கருகிய முடியின் வாசனையும் கலந்த மணம் கோட்டையில் பரவி இருந்தது. மெல்ல சுற்றியும் நோட்டம் விட்டேன். எங்கும் மாலை நேர அரை இருள் கவ்வி இருந்தது. பக்கவாட்டில் உள்ள அறையில் மங்கிய வெளிச்சம் தெரியவே பழைய கோட்டையில் யாராக இருக்கும் என தூணில் மறைந்து கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தேன்.

பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்நியன்பட பாணியில் கருப்பு அங்கி அணிந்து சிலர் கையில் துடைப்பம் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களின் முகம் சரியாக தெரியாத வண்ணம் அங்கி மறைத்து இருந்தது. அறை தீப்பந்தத்தால் ஒளி ஊட்டப்பட்டு இருந்தது.

அறையின் மறு பக்க திறப்பில் சலசலப்பு கேட்டது. அறையில் அங்கி அணிந்த அனைவரும் "புரபசர் லூஸ்னோஸ்கி" என கோஷ்மிட்டார்கள்.

சாலையை கூட்டும் துடைப்பத்தை ஸ்கூட்டர் போல  காலுக்கு இடையே வைத்து காற்றில் பறந்துவந்தார் புரபசர் லூஸ்னோஸ்கி.

அனைவரையும் பார்த்து கையசைத்துவிட்டு "இன்று நான் நம் மாய மந்திர உலகிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். இன்று நடக்கும் (ஜூலை 8) பிரேசில் - ஜெர்மனி கால்பந்தாட்ட போட்டியில் ஜெர்மனி தோல்வி அடையும். இரண்டாம் பகுதியில் முல்லர் அடிக்கும் கோல் வீணாக போகும்.  நாளை (ஜூலை 9)நடக்கும் போட்டியில் அர்ஜண்டினாவின் அதிரடியை காணலாம்.மிஸ்ஸி மிஸ் செய்வதில்லை" என சொல்லி துடைப்பத்தில் அமர்ந்து பறந்தார். அறையில் இருந்த அனைவரும் திசைக்கு ஒருவராக துடைப்பத்தில் பரந்தனர். தீப்பந்தம் தானாக அணைந்தது.

வேக்குவம் க்ளீனர் கண்டறிந்த விஞ்ஞான காலத்திலும்  துடைப்பத்தில் பறக்கும் இவர்களை நினைத்து சிரித்துக் கொண்டே வீடுவந்தேன்.

Wednesday, June 18, 2014

குரு பூர்ணிமா அழைப்பிதழ் 2014

குருவின் அருள்பெற்று ஆன்மீக உயர்நிலை பெற 
அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்

Tuesday, May 13, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 11

வெறுமை. என்னை சுற்றி உள்ள பாலைவன சமவெளியில் மட்டுமல்ல. என் உள்ளேயும் வெறுமை. வாழ்வின் விளும்பில் நிற்கிறோம். உதவி செய்ய ஒரு சிறு எறும்பு கூட கண் முன் இல்லை.

ஆண்டவா என்னை காப்பாற்று என கதறலாம். ஆனால் அப்படி ப்ரார்த்தனை செய்து பழக்கமற்றவன். சுயநலமாக எதற்கும் இறைவனை வேண்டியது இல்லை. அதனால் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் காப்பாற்று என எப்படி வேண்டுவது? அப்படி கேட்டு செய்வதாக இருந்தால் அது என்ன இறைவன்? நான் இறை ஆற்றல் துணையில்லாமல் இங்கே வர முடியுமா? அப்படி இருக்க நான் வேண்டி தான் அவர் என்னை காக்க வேண்டுமா? இப்படி பல தர்க்கங்கள் ஏழுந்து பிறகு அடங்கி மனம் வெறுமையானது. இது தான் ஜென் நிலையோ? 

காரின் முன் புறம் ஏறி அமர்ந்துவிட்டேன். சுப்பாண்டி கற்களை எடுத்து தூர வீசி கொண்டிருந்தான். ராம தாசி செய்வது அறியாது எங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

நேரம் கருப்பு சர்ப்பம் போல மிக மெதுவாக ஊர்ந்து சென்றது. முழுமையான இருள் கவிழ்ந்தது. மெல்லிய குளிர் உடலை துளைக்க துவங்கியது. கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு கார் டயரில் உடலை வெப்பத்திற்காக அணைத்து உட்கார்ந்திருந்தான் சுப்பாண்டி. பார்க்க பரிதாபமாக இருந்தது.

சில நிமிடங்கள் கடந்திருக்கும், காரின் உள் கூரையில் இருக்கும் சிறிய விளக்கின் ஒளி மட்டுமே இருந்தது. வேறு சலனங்கள் இல்லை. 

“சாமீ...அங்க பாருங்க...” என்றான் சுப்பாண்டி.

தூரத்தில் இரண்டு வெளிச்சப்புள்ளிகள் தெரிந்தது. சில நிமிடங்களில் அது பெரிதாக தெரிய துவங்கியது. அருகே வர வர அது பெரிய ட்ரக் என்பது புரிய துவங்கியது.

அந்த வண்டியின் வெளிச்சத்தை விட சுப்பாண்டியின் முகத்தில் வெளிச்சம் அதிகமாகியது. மிக அருகே வந்து அந்த வாகனம் நின்றது.

அர்ஜண்டினாவின் அதிக மின் அழுத்த கேபிள் இணைப்பு வழங்கும் மின்சார இலாகாவின் வாகனம். அதிலிருந்து இரண்டு பேர் இறங்கி வந்து இராமதாசியுடன் ஸ்பானீஷித்தார்கள்.

பாலைவனத்தின் ஓரத்தில் மின்சார கோபுரம் அமைத்து வேலை செய்யும் பொழுது தூரத்தில் ஒரு வெளிச்சப்புள்ளி சமவெளியின் நடுவே தெரிவதை கண்டு ஏதேனும் அதிசயம் இருக்கும் என நினைத்து 80 கி.மீ பயணித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்ததோ பிரபஞ்ச அதிசயமான நான், ராமதாசி பின்னே சுப்பாண்டியும்...!

அந்த வண்டியின் பின்னால் இந்த வண்டியை கட்டி இழுத்து செல்ல துவங்கினார்கள். பல கேள்விகளுடன் என்னை சுப்பாண்டி பார்த்துக்கொண்டே இருந்தான். ஆனால் கேட்கவில்லை. நானும் ஏதும் பேசும் நிலையில் இல்லை.

வண்டி எங்களை இழுத்துக்கொண்டு 40 கி.மீ சென்று இருக்கும். திடீரென முன் சென்ற வாகனம் சமிக்கை செய்து நின்றது. வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த ராம தாசி வண்டியை பிரேக் பிடித்து நிறுத்த, மின் இலாகா வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி எங்கள் அருகே வந்தார். அவர் பேசியதை மொழிபெயர்த்தார் ராமதாசி.

“மன்னிக்கவும், நீங்க எல்லாரும் சாப்பிடாமல் ரொம்ப நேரம் பாலைவனத்தில் இருந்திருப்பீங்க. சாப்பிடறீங்களா தண்ணி வேணுமானு கேக்காம உங்களை கூப்பிட்டு வந்துட்டோம். இந்தாங்க தண்ணீர் பாட்டில். நீங்க நல்ல பசியில் இருப்பீங்க. எங்க கிட்ட நல்ல மாமிசம் இருக்கும் உணவு எதுவும் இல்லை. நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்குவீங்கன்ன என்னிடம் வெஜிட்டபிள் சாண்ட்விச் இருக்கு. தரட்டுமா?”

ஆ..வ்வ்வ்........பெருங்குரல் எடுத்து சுப்பாண்டி அழுக...நான் கைகளால் தொழுக... ராமதாசி உணவு பெற்றுக்கொண்டு வந்தார். பச்சை தண்ணீர் கேட்டால் கூட அதில் இரண்டு மாட்டு மாமிச துண்டுகளை இட்டு கொடுக்கும் அர்ஜண்டினாவில் , சைவ உணவு பார்ப்பதே அரிது. வெளி இடங்களில் இல்லை என்றே சொல்லலாம். அப்படி இருக்க பாலைவனத்தில் அதுவும் வேறு ஒருவர் சைவ உணவை எங்களுக்கு அளிக்கிறார். இதை என்னவென்று சொல்ல ? 

காரில் இருந்த சிறிய விளக்கு 80 கி.மீட்டர் தூரம் தெரிந்திருக்குமா? அப்படி தெரிந்தாலும் யாராவது வந்து பார்க்க முயற்சிப்பார்களா? இது எப்படி சாத்தியமாயிற்று ? இப்படி பல கேள்விகள் மனதில்...

அன்றைக்கு அந்த ரொட்டியில் எங்கள் எழுதி இருந்தது...! வேறு என்ன சொல்லி கேள்வி அம்புகள் கொண்ட மனதை சமாதனம் செய்வது?

இப்படியாக நாங்கள் உயிர்த்தப்பி மீண்டும் முக்கிய சாலைக்கு வந்து அந்த மின்சார இலாக்கவினர் விடைபெற்றனர். இன்னும் என்னால் நம்பமுடியவில்லை. எப்படி இது சாத்தியம் என சுப்பாண்டி என்னை இன்னும் கேட்கப்படாத கேள்வியாக கண்ணில் அந்த கேள்வியை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறான்.

மீண்டும் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஜிபிஎஸ் துணையுடன் பயணம் தொடர்ந்தது...

(அன்பு பெருகும்)