Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, August 11, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி ஆறு


திருவண்ணாமலை ஒரு காந்தம் போன்றது. ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. மீண்டும் மீண்டும் உங்களை ஈர்க்கும். திருவண்ணாமலைக்கு ஒருமுறைமட்டும் தான் சென்றேன் என்பவர்கள் அரிது. ஒன்று போகாதவர்கள் இருப்பார்கள். இல்லை நிறைய முறை போனவர்கள் இருப்பார்கள். ஒரு முறை மட்டும் கிரிவலம் சென்றவர்கள் என யாரையும் காண முடியாது. கிரிவலத்திற்கு அப்படி ஒரு அசாத்தியமான காந்த சக்தி உண்டு.

சூரியன் வெடித்து சிதறி சூரியமண்டலமாக உருவாகும் பொழுது பூமி நெருப்பு கோளமாக இருந்தது. பிறகு கால மாற்றத்தால் குளிர்ந்து இறுகி பூமியாக மாற்றம் அடைந்தது. அப்படி உருவாகும் பொழுது முதலில் நெருப்பிலிருந்து உருவான இடம் திருவண்ணாமலை. அருணாச்சல மஹாத்மியம் எனும் புராணம் இதை விளக்குகிறது. நவீன காலத்தில் அருணாச்சல மலையை அகழ்வாராய்து மிகப்பழமையான கல் என உறுதி செய்திருக்கிறார்கள்.

அருணாச்சல மலை 800 மீட்டர் உயரம் கொண்டது. ஆனால் அதன் கீழ்பகுதி எவ்வளவு தூரம் ஆழம் செல்லும் என்பது கண்டறிவது கடினம். பிரம்மாவை போல இல்லாமல் ஆணவம் இன்றி செல்லுபவர்க்கு அருணாச்சலத்தின் முடி தெரிந்துவிடுகிறது. ஆனால் மஹாவிஷ்ணுவைப் போல அடியை இன்றும் யாரும் காண முடியவில்லை.

நான்கு யுகத்திலும் அருணாச்சல மலை வெவ்வேறாக காட்சி அளித்ததாம். கிருதா யுகத்தில் தங்கமாகவும், த்ருதாயுகத்தில் வெள்ளியாகவும், துவாபர யுகத்தில் செம்பாகவும், கலியுகத்தில் இரும்பாகவும் இம்மலை இருக்கும் என அருணாச்சல மஹாத்மியம் கூறுகிறது. இக்கருத்தை உண்மையாக்கும் வகையில் அருணாச்சல மலையின் சில கற்கள் ஈரக்காற்றில் துருப்பிடித்து இருப்பதை காண முடியும். நம் உடையில் காவியை பூசி முனிவராக்கும் இறைவனின் திருவினையோ என நினைக்கத் தோன்றும்.

அத்தகைய இறைவனின் இருப்பிடத்திற்கு எனக்கு இறைவன் அளித்த பணியாக பயணத்திற்கு தயாரானேன். இரண்டு ஜோடி வேட்டிகள் மற்றும் ஒரு புத்தகம் இது மட்டுமே எனது பையில் இருந்தது. எனது உடமைகள் முழுமையாக சோதனையிட்டு எண்ணிடம் பணம் இல்லை என்பதை எனது நண்பர்கள் முடிவு செய்து கொண்டார்கள். கோவை பேருந்து நிலையத்தில் என்னை இறக்கிவிட்டு சிறிது தூரம் இருக்கும் கடையில் நின்று என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

இறைவன் மேல் இருக்கும் ஆழமான விஸ்வாசத்தில் கிளம்பிவிட்டேன். இருந்தாலும் பேருந்து நிலையத்தில் படபடப்பு என்னை பற்றிக்கொண்டது. திருவண்ணாமலை சென்று விட்டால் பிரச்சனை இல்லை. அங்கே பரந்துவிரிந்த உலகம் ஏதாவது மரத்தடியில் இருந்துகொள்ளலாம். ஆனால் இங்கிருந்து அங்கே செல்ல வேண்டுமே? பேருந்தில் பணம் இல்லாமல் போக முடியுமா? எனக்கு குழப்பம் பற்றிக்கொண்டது. என்னை வழியனுப்ப வந்தவர்கள் தூரத்தில் நின்று வேடிக்கைபார்த்தது மேலும் ஒரு படபடப்புக்கு காரணானது.

மனதுக்குள் இறைவனை வேண்டிய படியே பேருந்துக்கு அருகில் சென்றேன். திடிரென ஒரு வயதானவர் குறிக்கிட்டு “சாமீ எங்க போறீங்க” என்றார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. திருவண்ணாமலைக்கு என்றேன். அப்படியா நான் சேலம் போறேன். உங்க ஆசிர்வாதத்தால என் பொண்ணு கல்யாணம் நடந்துச்சு , இவர்தான் என் மாப்பிளை என அவர் காட்டியது நான் ஏற இருந்த திருவண்ணாமலை பேருந்தின் நடத்துனரை. இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் விட்டு போனது. இறைவா என்னை அழைத்துவந்து அவமானபடுத்துகிறாயே.. என கலங்கினேன்.

என்னிடம் பணம் இல்லை என்பது தெரிந்து என்னை தவறாக நினைத்துவிடுவாரோ என்ற எண்ணம். பேருந்து தூரத்தில் இருந்தது. இந்த பெரியவரை தவிர்க்க இரண்டடி தள்ளி நின்று வேறு திசையில் வேடிக்கை பார்க்க துவங்கினேன். அந்த பெரியவரும் நடந்து வேறு திசைக்கு சென்றுவிட்டார். அந்த திருவண்ணாமலை பேருந்து மெல்ல ஊர்ந்து செல்ல துவங்கியது.

மீண்டும் வந்த அந்த பெரியவர் சாமீ பஸ்சு போகுது ஏறலையா? என்றார். இல்லை அடுத்த பஸ்ஸில போறேன் என்றேன். இல்ல சாமீ உங்களுக்காக டிக்கெட் போட்டுட்டேன் , இந்த பஸ்ஸிலயே போங்க என்றவாறே கையில் பேருந்து பயண சீட்டை திணித்தார். பேருந்து வேகம் எடுக்கவே ஓடி சென்று ஏறினேன். என்னை கையசைத்து வழியனுப்பினார் அந்த பெரியவர். தூரத்தில் என் நண்பர்கள் என்னை வியாப்புடன் பார்த்தவாறே இருக்க பேருந்து திருவண்ணாமலையை நோக்கி பயணித்தது. டிக்கெட்டை நடத்துனரிடம் காண்பித்து பிறகு நிம்மதியாக உறங்கிப்போனேன்.

காலை நான்கு மணிக்கு திருவண்ணாமலையின் தென்பகுதியில் ரமணாஸ்ரமம் முன் இறங்கினேன். நடத்துனரை பார்த்து ரொம்ப நன்றிங்க, உங்க மாமனாருக்கும் நன்றி சொன்னேனு சொல்லுங்க என்றேன். என்னை ஏற இறங்க பார்த்தவர். யாரு மாமனாரு? என் மாமனாரு எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே காலமாயிட்டாரு. ஏன் சாமி காலையில குழப்பறீங்க என்றார்.

அவருக்கு குழப்பமான விஷயம் எனக்கு புரிந்தது....

பேருந்து சென்றவுடன் அருணாச்சல மலையை பார்த்து நன்றியுடன் வணங்கினேன். திருவண்ணாமலையில் இது ஒரு சிறப்பு. நகரின் எந்த மூலையிலிருந்தும் இறைவனை தரிசிக்கலாம்.

ரமணாசிரமம் வாயிலில் இறங்கி வெளியில் இருந்தவாறே ரமணரை தொழுதேன். மெல்ல நடந்து அந்த பிரம்ம முஹூர்த்த வேளையில் அக்னி தீர்த்தம் எனும் குளத்திற்கு சென்று நீராடினேன்.

உலகின் எட்டு திக்கும் ஒவ்வொரு தேவதைகள் காப்பதாக புராணம் கூறுகிறது. அவர்களை அஷ்டதிக்கு பாலகர்கள் என்பார்கள். என்திசை தேவர் என்று பதிகங்களிலும் கூறுவர். திருவண்ணாமலையில் எட்டுதிசைக்கு உரிய தேவர்களையும் லிங்க ரூபமாகவே வைத்திருக்கிறார்கள். அது தவிர ஒன்பதாவது லிங்கமாக அருணாச்சல மலை நடுநாயகமாக நகரை சக்தியூட்டி வருகிறது.

அக்னி தீர்த்தத்தில் குளித்துவிட்டு அங்கே இருக்கும் அக்னி லிங்கத்தை வணங்கி எனது பிரம்ம முஹூர்த்த கிரிவலத்தை ஆரம்பித்தேன்.கிரிவலம் வர ஏற்ற காலம் எது என்றால் பிரம்ம முஹுர்த்தம் என்பேன். எட்டு திசையில் தென் திசை எமன் என்ற மரண தேவனால் நிர்வகிக்கப்படுகிறது. மெல்ல நடக்க துவங்கினேன்.

தென்திசைக்காவலர் எமனும் என்னுடன் கிரிவலம் வருகிறார் என்று அப்பொழுது எனக்கு தெரியாது.

(தொடரும்)

28 கருத்துக்கள்:

எம்.எம்.அப்துல்லா said...

//கலியுகத்தில் இரும்பாகவும் இம்மலை இருக்கும் //

புராணத்தில் இப்படி இருக்கின்றதா என்று ஆதாரப்பூர்வமாக எனக்குத் தெரியாது.ஆனால் நான் அறிந்த ஓரு உண்மையை இங்கு பதிய வேண்டியது நான் தொழும் அல்லாவின் கட்டளை. திருவண்ணாமலையின் மிக அருகில் அதாவது சுமார் 10 கி.மீ தொலைவில் அதன் தொடர்ச்சியாக உள்ள வேடியப்பன் மலையில் இரும்புத்தாது உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.அதன் f.e content 37% .அதாவது அம் மலையை உடைத்தால் அதில் 37% இரும்பு உள்ளது என்று அர்த்தம். இந்தியாவின் மிகப்பெரும் உருக்கு நிறுவனங்களில் ஓன்றான ஜிந்தால் கம்பெனி அங்கு இரும்புத்தாதை எடுக்கும் உரிமை கோரி அரசிடம் விண்ணப்பித்து அரசும் அனுமதி அளித்த நிலையில் அப்பகுதி மக்களின் எதிர்ப்பு காரணமாக தன் பணியைத் துவங்குவதில் சிறிது காலதாமதமாகிக் கொண்டு இருக்கின்றது.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே...

உண்மையை சொல்ல தூண்டிய உயர் உண்மைக்கு கோடிவணக்கங்கள்.

எனது விஞ்ஞான புக்திக்கு புராண தகவல் வேறுவிதமாக சிந்திக்க தோன்றுகிறது.

விஞ்ஞான ரீதியாக முதலில் தங்கம் உருவாக வாய்ப்பில்லை. நில அடுக்கு மாற்றத்தால் பல ஆண்டுகள் கழித்தே தங்கம் உருவாகும்.

முதலில் நெருப்பு பிளம்பாக இருந்ததால் பார்க்க தங்கமாக தோன்றி இருக்கும். அந்த அக்னி குளிர்ந்ததால் சாம்பல் நிறத்தில் வெள்ளி போன்றும்.

சாம்பல் உதிர்ந்து எரிந்த பகுதிகள் செம்மையாக செம்பு போன்றும் கட்சி அளித்திருக்கும். உண்மையாக இப்பொழுது தான் இம்மலை தனது இயல்பு நிலையில் இரும்பாக (முதல் தாது) இருக்கிறது.

என் விஞ்ஞான புக்தி கொஞ்சம் விதண்டாவாதமும் குயுக்தியும் கொண்டது.

இறைவன் என்னை காப்பாறாக. :)

நிகழ்காலத்தில்... said...

\\விஞ்ஞான ரீதியாக முதலில் தங்கம் உருவாக வாய்ப்பில்லை. நில அடுக்கு மாற்றத்தால் பல ஆண்டுகள் கழித்தே தங்கம் உருவாகும்.

முதலில் நெருப்பு பிளம்பாக இருந்ததால் பார்க்க தங்கமாக தோன்றி இருக்கும். அந்த அக்னி குளிர்ந்ததால் சாம்பல் நிறத்தில் வெள்ளி போன்றும்.

சாம்பல் உதிர்ந்து எரிந்த பகுதிகள் செம்மையாக செம்பு போன்றும் கட்சி அளித்திருக்கும். உண்மையாக இப்பொழுது தான் இம்மலை தனது இயல்பு நிலையில் இரும்பாக (முதல் தாது) இருக்கிறது.\\

இதா விதண்டாவாதம்.?

விளையாடுங்க, விளையாடுங்க:))

கோவி.கண்ணன் said...

ஸ்வாமி ஓம்கார்,

உங்கள் பின்னாடியே 'சோ'வும் வருகிறார் போல !
:)

கோவி.கண்ணன் said...

//நான்கு யுகத்திலும் அருணாச்சல மலை வெவ்வேறாக காட்சி அளித்ததாம். கிருதா யுகத்தில் தங்கமாகவும், த்ருதாயுகத்தில் வெள்ளியாகவும், துவாபர யுகத்தில் செம்பாகவும், கலியுகத்தில் இரும்பாகவும் இம்மலை இருக்கும் என அருணாச்சல மஹாத்மியம் கூறுகிறது. இக்கருத்தை உண்மையாக்கும் வகையில் அருணாச்சல மலையின் சில கற்கள் ஈரக்காற்றில் துருப்பிடித்து இருப்பதை காண முடியும். நம் உடையில் காவியை பூசி முனிவராக்கும் இறைவனின் திருவினையோ என நினைக்கத் தோன்றும்.//

தமிழகத்தில் வடமொழி நுழைந்த வரலாறே இரண்டாயிரம் ஆண்டுக்குட்பட்டதாகத்தான் இருக்கும், அதில் எப்படி இந்த புராணக் கதையை ஒட்ட வைத்துப் பார்ப்பது ? திருவண்ணா மலை ஓகே.....அருணாசலம் புராணக் கதையோடு பொருந்தும், ஆனா நிகழ்வுகள் வரலாற்றோடு பொருந்த வில்லையே ஸ்வாமி. வேதாரண்யம், மாயூரம் எல்லாம் ஒரு 16 ஆம் நூற்றாண்டு பெயர்கள் தானே ஸ்வாமி.

கோவி.கண்ணன் said...

//சாம்பல் உதிர்ந்து எரிந்த பகுதிகள் செம்மையாக செம்பு போன்றும் கட்சி அளித்திருக்கும். உண்மையாக இப்பொழுது தான் இம்மலை தனது இயல்பு நிலையில் இரும்பாக (முதல் தாது) இருக்கிறது.

என் விஞ்ஞான புக்தி கொஞ்சம் விதண்டாவாதமும் குயுக்தியும் கொண்டது. //

கோவியாருக்காகக் கொடுத்த சிறப்பு பின்னூட்ட விளக்கம் போல் இருக்கு.

நிகழ்காலத்தில்... said...

’சோ‘வை எமன் என்று சொல்லும் விதண்டவாத மொத்த குத்தகைதாரர் திருவாளர். கோவி. கண்ணன் அவர்களைக் கண்டிக்கிறேன்:))

கோவி.கண்ணன் said...

//நிகழ்காலத்தில்... said...

’சோ‘வை எமன் என்று சொல்லும் விதண்டவாத மொத்த குத்தகைதாரர் திருவாளர். கோவி. கண்ணன் அவர்களைக் கண்டிக்கிறேன்:))
//

உங்களுக்கு சோ மீது அப்படி ஒரு வெறி இருந்தது இப்பதான் என்மூலமாக வெளிப்படுது.
:)

எம்.எம்.அப்துல்லா said...

//உங்களுக்கு சோ மீது அப்படி ஒரு வெறி இருந்தது இப்பதான் என்மூலமாக வெளிப்படுது.
:)

//

ஹா...ஹா..ஹா...

அவர் போட்ட பிட்ட அவருக்கே போட்டீங்களேண்ணே :)))

ஸ்வாமி ஓம்கார் said...

//உங்கள் பின்னாடியே 'சோ'வும் வருகிறார் போல !
:)//
கோவியாரின் கருத்துக்கு விளக்க உரை தெரிய வேண்டியவர்கள் பதிவில் இருக்கும் இரண்டாம் படத்தை பார்க்கவும்.

அனைவருக்கும் கோவியாரின் பின்னூட்டத்தை புரிந்து கொள்ள முடியாது. அவர் பதிவை விட படத்தை கூர்ந்து பார்க்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. :)

கூர்நோக்கு பார்வை கொண்ட அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

ஷங்கரலிங்கம் said...

திருவண்ணாமலை ஆண்களின் தொண்டை மேடு ( லிங்கம் ) என்று அப்பா கூறுவார்கள்.

முதல் உதயம் புராணம், என்று சொல்வதாக நிகழ்வு.

முதல் உயிரும் பரிணாம வளர்ச்சியும், அங்கு நிகழ்ந்ததாக சொன்னதாக நினைவு.

முதல் அரிசியும் திருவண்ணாமலை அருகில் தான் பயிரிடபட்டதாம்...

சில காலமாக நிறைய படிக்கும் போது கண் முன் வருவது திருவண்ணாமலை. பெங்களூரிலும் அடிக்கடி பார்ப்பது, திருவண்ணாமலை பஸ். என்ன லீலை?

ஆமாம், ஏன் லிங்கத்தை வேறோடு ஒன்றில் நினைத்து ஒட்டவைத்து பார்கிறார்கள்... சிவபுராணம், ராமேஸ்வரம், விழுந்த உடல் பகுதி, பார்வதி பூஜை?

-ஷங்கரலிங்கம்

ஷங்கரலிங்கம் said...

திருவண்ணமலையில் சுற்றி இருக்கும் பல சித்தர்களை பற்றியும் ( முதலில் நீங்கள் சந்தித்த சித்தர்கள் ) அங்கு அவதாரம் எடுத்து குருக்கள், ஸ்வாமிகள் ( முதலில் இப்போது இருப்பவர்கள் ) பற்றியும் எழுதவும்.

அப்புறம் காலையில் இருந்து சாயந்திரம் வரை என்னவெல்லாம் அங்கு பார்க்க வேண்டும் என்பதையும் தனிபதிவாய் சொல்லுங்கள். நன்றி.

omvijay said...

வணக்கம் குருஜி
தங்களின் மெய்யறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது . தொடரட்டும் உமது சேவை

Siva Sottallu said...

// திருவண்ணாமலைக்கு ஒருமுறைமட்டும் தான் சென்றேன் என்பவர்கள் அரிது.//

//ஒரு முறை மட்டும் கிரிவலம் சென்றவர்கள் என யாரையும் காண முடியாது. //

நீங்கள் தேடும் அந்த அரிதான நபர் நானாக தான் இருக்க முடுயும் ஸ்வாமி. எனது வாழ்நாளில் இதுவரை ஒரு முறை தான் திருவண்ணாமலை மற்றும் கிரிவலம் சென்று வந்திருக்கிறேன்.

ஆனால் வாய்பு கிடைத்தால் மீண்டும் செல்ல காத்திருக்கிறேன் ஸ்வாமி.

//கிரிவலம் வர ஏற்ற காலம் எது என்றால் பிரம்ம முஹுர்த்தம் என்பேன்.//

பிரம்ம முஹுர்த்தம் நேரத்தை விளக்குமாறு கேட்டுகொள்கிறேன் ஸ்வாமி.

Rajagopal.S.M said...

//ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. மீண்டும் மீண்டும் உங்களை ஈர்க்கும்//
முற்றிலும் உண்மை..

yrskbalu said...

ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. மீண்டும் மீண்டும் உங்களை ஈர்க்கு\

totally true words.

when my turn is come i will also write arunachala leela .

one word i should mentioned here.

ARUNACHALA gives my guru to me.

nobody able to understand arunachala work expect ghanis.

yrskbalu said...

dear kovikannan, nigalkalam.

thanks for your comments.

i laughed several times.

both are not to take seriously.

i hope so

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷங்கரலிங்கம்(பெங்களூரு புதியவன்),

உங்கள் பின்னூட்டம் தந்தி வரிகள் போன்று உள்ளது.

உங்கள் இரண்டாம் பின்னூட்டம் புரிந்தது. இந்த தொடர் ஆன்மீக அன்பர்களுக்கு புதிய கோணத்தை அறிமுகப்படுத்தும் தொடர்.

சித்தர்கள் பற்றியும் மஹான்கள் பற்றியும் அனேக புத்தகங்கள் வந்துவிட்டன. அங்கே அனேகர் உண்டு யாரை பற்றி எழுத? வயல்காட்டில் எந்த நெல்மணி நல்மணி என கேட்பதை போல.


உங்கள் வருகைக்கு நன்றி

Anonymous said...

உங்கள் விஞான முறை விளக்கம் மிகவும் பிடித்தது. மேலும் வரும் கதைக்காக காத்திருக்கிறேன். தமிழ்நாட்டில் வேறு எந்த கோவில்கள் இந்த அளவு ஆன்மீக சக்தியுடன் இருக்கிறது என்பதை விளக்க ஒரு தனி கட்டுரை இட வேண்டும் என்று பணிவுடன் கேட்டு கொள்கிறேன் (நேரம் கிடைக்கும் போது).

essusara said...

சுவாமி ஓம்கார்,

உங்களுடைய கட்டுரையை படிக்கும்பொழுது தீவிரமான உங்களின் ஆன்மிகம் வெளிபடையாக தெரிகிறது. பொதுவாக தீவிரமான ஆன்மிகவாதிகள் ஜோதிடத்தை பொய் என்றே சொல்லி வந்துள்ளனர் .

ஆனால் நீங்கள் எப்படி சுவாமி ஜோதிடத்தையும் உங்களோடு இணைத்து கொண்டீர்கள் ?

இதை பற்றி வரும் தொடரில் எழுதுவிர்கள் என்று நம்புகிறேன்.

essusara said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

//விஞ்ஞான ரீதியாக முதலில் தங்கம் உருவாக வாய்ப்பில்லை. நில அடுக்கு மாற்றத்தால் பல ஆண்டுகள் கழித்தே தங்கம் உருவாகும்.
//

தனிமங்கள் தானே உருவானவை. உலகம் உருவானபோதே அவையும் உருவானது. அழுத்தத்தால் அல்ல.

sowri said...

looking forward. how do you manage your time swami? rekindling my urge to visit there!

omvijay said...

சுவாமி
தங்களை அனைவரும் பாராட்டுகிறார்கள். ஆகவே ஒரு மாற்றத்திற்கு நான் மட்டும் உங்களை திட்டிக்கொண்டு இருக்கிறேன். பொறுத்து கொள்ள வேண்டாம் .

ஷண்முகப்ரியன் said...

தங்கள் முதல் பஸ் பயணம் வழக்கம் போன்ற ஒரு ‘miracle'உடன் இறைபக்தியை இணைக்கிறது,ஸ்வாமிஜி.

அதிசயம் மட்டுமே ஆண்டவனது மொழி என்ற ஆன்மீக மார்க்கட்டிங்கின் உத்தி எனக்குச் சலித்து விட்டது.
ஏன் என்றால் திரைக்கதையில் எங்கள் தொழிலே,வாழ்க்கையின் அதிசயமான ஆச்சர்யமான கணங்களை மட்டுமே செயற்கையாக உருவாக்குவதுதான்.

ஒஷோவும்,யூ.ஜி யும்,ஜே.கே வும் சொன்னதைப் போல ஆன்மீகம் இயல்பான இறைநிலையினைக் காட்ட வேண்டும்.
உங்களுடன் முரண்பட்டால் மன்னிக்கவும்.

நிகழ்காலத்தில்... said...

\\Blogger எம்.எம்.அப்துல்லா said...

//உங்களுக்கு சோ மீது அப்படி ஒரு வெறி இருந்தது இப்பதான் என்மூலமாக வெளிப்படுது.
:)

//

ஹா...ஹா..ஹா...

அவர் போட்ட பிட்ட அவருக்கே போட்டீங்களேண்ணே :)))\\


வலையுலகில் இப்படி ஒரு அப்பாவியா?

அப்துல்லா உங்களைத்தான்:))

ஆன்மீகம் பேசும் எனக்கு, அதே ஆன்மீகத்தை தன் வழியில் விளக்கிக் கொண்டிருக்கும் சோ மீது எனக்கு எப்படி வெறி வரும்...

பகுத்தறிவு கொள்கைகளை முன்னிறுத்தும் கோவியாருக்கல்லவா
சோ மீது காண்டு இருக்கும். வெறி வார்த்தையாக வெளிப்பட்டுவிட்டது:))

அவரு பிட்டு போட்டதாக நினைத்து நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். எச்சரிக்கை, எச்சரிக்கை:)))

ஸ்வாமி ஓம்கார் said...

//ஆன்மீகம் பேசும் எனக்கு, அதே ஆன்மீகத்தை தன் வழியில் விளக்கிக் கொண்டிருக்கும் சோ மீது எனக்கு எப்படி வெறி வரும்.//

சோ ஆன்மீகத்தை விளக்கி கொண்டிருக்கிறார் என்பது எனக்கு புது செய்தி. பொன்னுச்சாமி :) இது போல பிற புதிய தகவலை கொடுக்கவும். :)

sakthi said...

திருவண்ணாமலை ஒரு காந்தம் போன்றது. ஒரு முறைமட்டும் சென்றுவிட்டு நிறுத்த முடியாது. மீண்டும் மீண்டும் உங்களை ஈர்க்கும்.

மறுக்கமுடியாத உண்மை

இது அனுபவத்தில் கண்ட உண்மை சுவாமிஜி