Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, October 14, 2010

சக்தி பொங்கும் நவராத்திரி

உலகின் எந்த கலாச்சாரத்திற்கும் இல்லாத சிறப்பு தன்மை பாரத கலாச்சாரத்திற்கு உண்டு. பாரதத்தில் கொண்டாடப்படும் விழாக்களும் பண்டிகைகளும் பொழுது போக்குக்காக கொண்டாடப்படுவதில்லை. அனைத்து விஷேஷ நாட்களும் பின்புலத்தில் ஆழமான காரணத்தாலேயே கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டின் உணவு முறை, சீதோஷணம், ஆன்மீகம் இவை அனைத்தும் நம் கொண்டாட்டத்தின் காரணிகளாக இருக்கிறது. மேற்கண்ட மூன்று விஷயங்களும் பாரத தேசம் முழுவதும் ஒரே போல இருப்பதில்லை. நாம் சாப்பிடும் உணவும், வடநாட்டினர் சாப்பிடும் உணவும் வேறுபடுகிறது.


ராஜஸ்தானில் பாலைவனம், கல்கத்தாவில் அதிகப்படியான நீர், காஷ்மீரில் குளிர், தென்னகத்தில் சமமான வானிலை என சீதோஷணம் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு நிலையில் இருக்கிறது. இவ்வாறு வேறுபட்டு இருந்தாலும் ஆன்மீகத்தில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.


வடக்கிலிருந்து தெற்கு வரை வழிபாட்டுமுறை மாறினாலும் வழிபடும் தெய்வங்கள் மாறுவதில்லை. நம் கலாச்சாரத்தின் மேன்மைகள் இவ்வாறு இருந்தாலும், நாகரீக முன்னேற்றம் என்ற மயக்கத்தால் பலர் நம் கொண்டாடும் விஷேஷங்களின் ஆழ்ந்த கருத்தை அறிவதில்லை. அப்படி மறக்கப்பட விஷேஷங்களில் நவராத்திரியும் ஒன்று.


வசந்த காலத்தை வரவேற்கும் நோக்கில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி.


அது ஏன் ஒன்பது இரவுகள் மட்டும் கொண்டாடவேண்டும்?


இறைநிலை சூன்யமாக இருந்து அதிலிருந்து வெடித்து சக்தி ரூபமாக வெளிப்படும் பொழுது பத்துவித சக்தியாக வெளிப்படுகிறது. ஆற்றல் மிகுந்த ஒரு கோளம் வெடித்து சிதறுவதாக கொண்டால் எட்டு திசைகளிலும், மேல் மற்றும் கீழ் பகுதிகள் ஆகியவற்றை கணக்கிட்டால் மொத்தம் பத்து பகுதிகள் கிடைக்கும்.


இப்படியாக தோன்றிய நம் பேரண்டத்தில் ஒவ்வொரு நிகழ்வும் இதே போன்ற சக்தி ரூபமாகவே இருக்கிறது. இவ்வாறாக எந்த ஒரு சக்தியின் வெளிப்பாடும் பத்து நிலையில் இருக்கிறது. அண்டத்தில் இருப்பது இந்த பிண்டத்திலும் இருக்கிறது என்பதற்கு ஏற்ப பத்து விதமான சக்தி ரூபம் நமக்குள்ளும் இருக்க வேண்டுமே? இந்த பத்து நிலையில் இருக்கும் சக்தி ரூபத்திற்கு தசமஹா வித்யா என்று பெயர்.



தசம் என்றால் பத்து என்பது நமக்கு தெரியும். பத்து நிலையில் இருக்கும் மஹா சக்தியை பற்றிய அறிவு தசமஹா வித்யா என அழைக்கப்படுகிறது. செளந்தர்யலகரி,தேவி பாகவதம், ஸ்ரீவித்யா உபாசகம் ஆகிய ஆன்மீக அமுதங்களில் தசமஹா வித்யா முழுமையாம விவரிக்கப்பட்டுள்ளது.



தசமஹா வித்யாவின் ரூபமே ஸ்ரீமன் நாராயணனின் தசாவதாரமாக உருவாகி அதர்மத்தை அழித்தது. நம் கர்மவினையை செயல்படுத்தும் நவக்கிரகமாக சுழலுகிறது. தசமஹா வித்யா ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டிய பெரும் கருத்து, இதை பற்றி வேறு ஒரு தருணத்தில் விரிவாக பார்ப்போம்.


நவராத்திரி என்றாலே ஒன்பது இரவு எனும் பொழுது பத்து நிலையில் இருக்கும் சக்திக்கு ஏன் ஒன்பது இரவுகள் கொண்டாட வேண்டும்? பத்தாக அல்லவா இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்.


வெளிநாடு சுற்றுலா விளம்பரங்களில் பார்த்தால் மூன்று இரவுகள் மற்றும் நான்கு நாட்கள் என கூறுவார்கள். அது போல பத்து சக்தி ரூபத்திற்கு பத்து நாட்கள் அதனால் ஒன்பது இரவுகள்...!


“அஷத்தோமா சத் க்ரமய” - இருளில் இருந்து ஒளிக்கு செல்லுவது என வேதாந்தம் அறியாமையில் இருப்பதை இருள் நிறைந்த தன்மைக்கு ஒப்பாக் கூறுகிறது. இரவு இன்பது அறியாமையில் குறியீடு. அதிலிருந்து வெளிப்பட மாலை நேரத்தில் தசமஹா சக்திகளை வழிபட்டு ஒளி மிகுந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதை நவராத்திரி சுட்டிக்காட்டுகிறது.


வசந்தகாலத்தின் துவக்கமான அமாவாசை துவங்கி தசமி திதி வரை பத்து தினங்கள் நவராத்திரி கொண்டாடப்பட வேண்டும். இதில் நவ என்பது ஒன்பது என்ற என்னை மட்டும் குறிப்பதில்லை. நவ என்பது புதிய, நவீன என்றும் பொருள்படும். நவயுகம் என கூறுகிறோம் அல்லவா? அது போல நவ-ராத்திரி என நம் முன்னோர்கள் நம்மை ஞானத்திற்கு இட்டுச் செல்ல அமைந்த நவீன யுக்தியே நவராத்திரி.


அம்பாளை வழிபடுபவர்கள் மட்டும் நவராத்திரி கொண்டாடுவார்கள் என்ற தப்பான கருத்து தற்காலத்தில் நிலவுகிறது. திருப்பதியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்வதும், சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் இருப்பதும் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வைபவம் என்பதை குறிக்கிறது.


நவராத்திரி எப்படி கொண்டாட வேண்டும்?


வடநாட்டில் ராமாயணத்துடன் தொடர்பு கொண்டு கொண்டாடுகிறார்கள். ஸ்ரீராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடைபெற்ற பத்து நாள் போரை இதற்கு இணையாக கூறுவார்கள். ஸ்ரீராமன் அதர்மத்தை வென்ற நாளாக விஜயதசமியை [தசரா] கொண்டாடுவார்கள். ராவணனின் உருவ பொம்மை செய்து அதை தீயிடுவது மிகவும் பெரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். அறியாமை அழிந்து தெய்வீகம் குடிபுகும் நாளாக நவராத்திரி கருதுகிறார்கள்.


தென்னகத்தில் ஒன்பது இரவுகளும் ஒவ்வொரு சக்தியின் ரூபமாக கொண்டாடுகிறோம். சக்தி நிலை நம்மை அறியாமையிலிருந்து மேம்படுத்தும் என்பது நோக்கமாக இருக்கிறது. வடநாடோ தென்னாடோ வழிபாட்டின் அடிப்படை நோக்கம் ஒன்றாக இருப்பதை கவனியுங்கள்.


மூன்று முதல் பதினொன்று படிகள் அமைத்து அதில் பொம்மைகளை வந்து அழகுபடுத்துவதன் பின்னால் ஆழ்ந்த கருத்துக்கள் உண்டு. கீழ் படியில் தாவரங்கள் பூச்சிகள் துவங்கி கடைசி படியில் இறைவனை வைத்து, உயிர்கள் படிப்படியாக பரிணாமம் அடைந்து இறைவனுடன் கலப்பதை நவராத்திரி கொலு பொம்மைகள் குறிப்பிடுகிறது.


பன்னிரெண்டு வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை அம்மனாக கருதி ஒரு நாளுக்கு ஒரு குழந்தை என அலங்கரித்து வணங்கி வருவது நம் மரபு. இதனால் குழந்தைகளுக்கும் ஆன்மீக முக்கியத்துவமும், பெரியவர்களுக்கு சமமான ஈடுபாடும் உண்டாகும்.


நவராத்திரி அன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பிரசாதங்கள் செய்வதும் அந்த தானியங்களில் இருக்கும் தசமஹா சக்திகள் நம் உடலில் மேம்படுவதற்காகத்தான். மாலை நேரத்தில் அனைவரையும் அழைத்து பிரசாதம் வழங்கி இசை மற்றும் நாட்டியத்துடன் நவராத்திரியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இதனால் மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவை மகிழ்கிறது.


நடைமுறையில் நவராத்திரி எப்படி இருக்கிறது?


பாரம்பரியம் மிக்கவர்கள் நவராத்திரியின் மகத்துவத்தை உணர்தே இருக்கிறார்கள். அதனால் அவர்கள் நவராத்திரியை தவிர்ப்பதில்லை. நவராத்திரி பெண்களுக்கான விழா. பெண்கள் மட்டும் கொண்டாடும் விழா என கூறவில்லை. நம் குடும்பத்திலும் சமூகத்திலும் இருக்கும் சக்தி நிலையில் இருப்பவர்கள் பெண்கள். சக்தியின் விழாவாக நவராத்திரி கொண்டாடவேண்டும்.


முன்பு பெண்கள் தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தவும், பிறருடன் நட்பும் உறவு முறையை கொண்டாடவும் நவராத்திரி பயன்பட்டது. தற்காலத்தில் பெண்கள் நவநாகரீகம் என்ற பெயரில் இழந்தவைகளில் நவராத்திரியும் உண்டு. இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.


முன்பு ஆட்டுக்கல்லில் மாவாட்டும் பொழுது கீழ்பாகம் நிலையாக இருக்கும் மேல் பாகம் அசையும். கிரைண்டர் கண்டுபிடித்த பிறகு மேல் பாகம் நிலையாக இருக்கும் கீழ் பாகம் அசையும். விஞ்ஞானம் நம் குடும்பத்திற்குள் நுழையும் பொழுது இந்த தலைகீழ் மாற்றம் நிகழுகிறது. இந்த விஷயம் நவராத்திரி கொண்டாட்டத்திலும் நடந்துவிட்டது...!



முன்பு வீட்டின் முன் அறையில் கொலு பொம்மைகள் வைத்து அதன் முன் ஆடிப்பாடுவார்கள். தற்சமயம் டிவி ஆடிப்பாடுகிறது, மக்கள் அதன் முன் கொலு பொம்மையாக அமர்ந்திருக்கிறார்கள்.


சிறுக சிறுக பெண்களிடையே ஏற்படும் அவசர யுக தாக்கமும், சோம்பேறித்தனமும் நவராத்திரிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. பக்கத்துவீட்டில் இருப்பவர் யார் என தெரியாமல் வாழும் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் பிறர்களுடன் உறவாடும் நவராத்திரியை இவர்கள் சிந்திப்பார்களா? மெகாசீரியல் பார்க்க நேரம் இருக்கிறது, பொருளை விரையம் செய்ய ஷாப்பிங் போக நேரம் இருக்கிறது. வருடத்தில் ஒன்பது மாலை நேரத்தை மட்டும் செலவு செய்ய முடியவில்லை என்பது எப்படிப்பட்ட தவறு என்பதை எப்பொழுது புரிந்துகொள்வார்கள்?


வருமானத்தை சுட்டிக்காட்டி சிலர் நவராத்திரி கொண்டாட இயலவில்லை என்கிறார்கள். நவராத்திரி பிரம்மாண்டமாகத்தான் கொண்டாட வேண்டும் என்பது அவசியம் இல்லை. நம் வீட்டில் இருக்கும் சிறிய மேஜையில் சில பொம்மைகளை வைத்து எளிய பிரசாதங்களை இறைவனுக்கு படைத்து செய்யலாம்.


சிலர் பாரம்பரியமாக தாய் வீட்டிலிருந்து கொலு வைக்கும் தன்மை வர வேண்டும். எங்கள் பாரம்பரியத்தில் கொலுவைப்பதில்லை என சுட்டிக்காட்டுகிறார்கள். உண்மையில் இரு தலைமுறைக்கு முன் அனைவரும் கொலு வைத்து பரஸ்பரம் உறவையும் ஆன்மீகத்தையும் வளர்த்துக் கொண்டார்கள். அந்த தொடர்ச்சி விட்டுப்போனது. மீண்டும் நாம் துவங்கி நம் குழந்தைகளை தொடரச்செய்வோமே என்ற எண்ணம் நமக்கு இல்லை.


நீங்கள் உங்களின் பரம்பரையில் நவராத்திரியை துவக்கிய பெருமையை கொண்டவர்களாக இருங்களேன், இன்றே நவராத்திரியை எளிய முறையில் கொண்டாட திட்டமிடுங்கள்.


நவராத்திரி கொண்டாடாமல் இருக்க வருமானம், தாய் வழியில் நவராத்திரி இல்லை என ஆயிரம் காரணம் கூறலாம். கொண்டாடி நம் வாழ்க்கையை வளப்படுத்தும் எண்ணம் இருந்தால் காரணங்கள் எதுவும் இருக்காது. நவராத்திரி கொண்டாடும் குடும்பங்கள் சிறப்பாகவும் செழித்தும் இருப்பது கண்கூடாக பார்க்கலாம். நம் குடும்பங்கள் அப்படி இருக்க வேண்டாம என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்..!


நவராத்திரி தனிப்பட்ட ஆன்மீக முன்னேற்றம் மற்றும் இன்றி ஆன்மீக அன்பர்கள் கொண்ட சமுதாயத்தை உருவாக்கவும் பயன்பட்டது. உங்கள் வீட்டில் நவராத்திரி கொலு வைக்க முயலுங்கள், இதனால் பலர் உங்களுடன் நட்புறவு கொள்வார்கள். சமுதாய நல்லிணக்கம் ஏற்படும். இதை குடும்ப விழாவாக இல்லாமல் சமுதாய விழாவாகவும் கொண்டாடலாம்.


நம் வசிக்கும் குடியிருப்பு அல்லது அடுக்குமாடி பகுதியில் ஒரு பொதுவான இடம் தேர்ந்தெடுத்து அதில் அனைத்துக் குடும்பமும் இணைந்து நவராத்திரி கொலு வைக்கலாம். அனைவரும் ஒரே குடும்பமாக செயல்படும் பொழுது அதில் ஏற்படும் அன்பும், மேம்பாடும் மிக உயர்ந்ததாக இருக்கும்.


நவராத்திரி கொண்டாட நீங்கள் முடிவு செய்தால் அருகில் இருக்கும் பெரியோர்களையோ, ஆன்மீக அன்பர்களையோ கலந்து எளிமையாக துவங்குங்கள். இந்த வருடத்திலிருந்து சிறப்பாக நவராத்திரியை கொண்டாட உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். நவராத்திரி கொலு வைத்து கொண்டாட துவங்கியதும் உங்களின் வாழ்க்கை மேம்படுவதை பாருங்கள்.


எங்கும் பரிபூரணமாக இயங்கும் தசமஹா சக்தி நவராத்திரி அன்று உங்கள் வாழ்க்கையில் பரிபூரணத்தை உண்டாக்கட்டும்.


சுபவரம் (அக்டோபர் 2010) ஆன்மீக பத்திரிகையில் வெளியான கட்டுரை

12 கருத்துக்கள்:

துளசி கோபால் said...

நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கீங்க ஸ்வாமிஜி.

நம்வீட்டில் நவராத்திரி & தசராவை முடிந்தவரையில் சிறப்பாகவே கொண்டாடுகிறோம்.

விஜயதசமிக்கு நண்பர்களையெல்லாம் அழைத்து பூஜைகள் நடத்தி இரவு டின்னரோடு கொண்டாடுவோம்.

உடனே கொலுவைக் கலைத்திடாமல் ரெண்டு மூன்று வாரங்களும் கூட வைத்து தினசரி வழிபாடு நடத்துவேன் நியூஸியில். தொலைவில் இருந்து வரும் தோழிகள் வர நேர்ந்தால்.... இப்படி ஒரு ஏற்பாடு.

இப்போது இந்தியாவில் இருக்கும்போதும் இது தொடர்கிறது. இந்த முறையும் சென்னையிலிருந்து தோழி நவம்பர் 11 தேதிக்கு வருகிறார்கள். அதுவரை கொலுவைக் கலைக்காமல் வைக்கலாமான்னு ஒரு யோசனை.

சாஸ்த்திரம் என்ன சொல்லுதோ தெரியாது. ஆனால் இது அன்பையும் நட்பையும் வளர்க்கும் பண்டிகை என்பதால் இப்படி.....

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்வாமிஜி.

MarmaYogi said...

Respected Swamiji

Article was fine. In our family traditionally we are celebrating "GOLU". This time my mother bought NINE sarees to give Nine Poor ladies. But unfortunately She passed away on Friday (8-10-10) the First day of Navarathiri. For this Do we have to do any Parikaram. Because for he last 25 years we have been celebrating Navarathiri with GOLU

Jayashree said...

ஆன்மீகம் வாழ்க்கைக்கு வெளியில் இல்லை வழ்க்கையினுள்ளே தேடுவது என்பதை அழகாக சொல்லீருக்கிறீர்கள். நவராத்திரி வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

மர்மயோகி,

உங்கள் தாயின் மறைவுக்கு வருந்துகிறேன். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வீட்டில் வயதான பெரியவர் இருக்கிறார் ’நம்மை வழி நடத்திச் செல்ல’ என்கிற
உணர்வு ஏற்படுகிறது, இதைப் படித்ததும்!
இன்று எத்தனை பேர் வீட்டில், அப்பா,அம்மா, தாத்தா, பாட்டி இருக்கிறார்கள், இதை எல்லாம் சொல்வ்தற்கு?

விஜி said...

ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க, எனக்கும் கூட அம்மாவீட்டில் வைத்து பழக்கமில்லை, ஆனால் இங்க வந்ததும் இவரின் பாட்டி ஆரம்பித்து வைத்தார், துளசி டீச்சர் சொல்லுவது மாதிரி இது பற்றி தெரியாத என் நட்புகள் வரும் வரை நானும் வைத்திருப்பேன்.

ஸ்வாமி ஓம்கார் said...

துளசி அம்மா,

உங்களை போன்ற சிலர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

நன்றிகள் பல

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வல்லிசிம்ஹன்,
சகோதரி ஜெயஸ்ரீ,
திரு ஆரண்ய நிவாஸ்,
சகோதரி விஜி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மர்மயோகி,

உங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியுடன் இணையட்டும்.

சிறப்பு மிக்க வாழ்க்கை வாழ்ந்ததால் தான் உங்கள் தாயார் நவராத்திரி எனும் சுப காலத்தில் தன் உடலை விட்டுள்ளார்.

நவராத்திரி இந்த வருடம் கொண்டாட கூடாது என்றாலும், இனி வரும் வருடங்களில் உங்கள் தாயின் நினைவுடன் இணைந்து கொண்டாடுங்கள்.

தாயாரின் சங்கல்பமான புடவை வழங்குதலை, தாயாரின் பத்தாம் நாளுக்கு பிறகு வழங்கவும்.

நன்றி

MarmaYogi said...

///திரு மர்மயோகி,

உங்கள் தாயாரின் ஆன்மா சாந்தியுடன் இணையட்டும்.

சிறப்பு மிக்க வாழ்க்கை வாழ்ந்ததால் தான் உங்கள் தாயார் நவராத்திரி எனும் சுப காலத்தில் தன் உடலை விட்டுள்ளார்.

நவராத்திரி இந்த வருடம் கொண்டாட கூடாது என்றாலும், இனி வரும் வருடங்களில் உங்கள் தாயின் நினைவுடன் இணைந்து கொண்டாடுங்கள்.

தாயாரின் சங்கல்பமான புடவை வழங்குதலை, தாயாரின் பத்தாம் நாளுக்கு பிறகு வழங்கவும்.

நன்றி//

Dear Swamiji
Your answer gave me full satisfaction. As per your advice all the 10 sarees were distributed to the poor ladies who are nearby. With my mother's blessings, we believe that We will continue this practice in future

mathi said...

ஹரி ஓம் சுவாமி!சறகுரு ஒருவர் இந்த நவராத்திரிதினங்களில் அன்ன-ஆகாரமின்றி தியானத்தில் அமர்ந்து விடுவாராம்.இதன் பலன்/தாத்பரியம் என்ன?தயைக்கூர்ந்து விளக்கவும்