
கேள்வி : பசித்திரு, தனித்திரு விழித்திரு என்ற வள்ளலாரின் கூற்றை பின்பற்றியதன் விளைவு, உடல் உபாதைகளுடன், உறவுகள் பிரிவுற்று, மனம் சமனிலை தவறி இருக்கிறேன். இந்த போதனையில் ஏதேனும் தவறு உண்டா?
பசித்திருக்க சொன்னதும் சாப்பிடாமல் இருந்து உடலையும், தனித்திருக்க சொன்னதால் அனைத்து உறவுகளிடம் இருந்தும் பிரிந்தும், விழித்திருக்க சொன்னதால் தூங்காமல் இருந்தும் உங்களை நீங்களே கேடு பாதைக்கு கூட்டி சென்றிருக்கிறீர்கள்.
இக்கருத்தை சொன்ன வள்ளலாரின் மேல் குற்றமல்ல, அதை நாம் பயன்படுத்தும் விதமே தவறு.
மனித உடல் என்பது ஐந்து நிலையாக உள்ளது. அதாவது மனித உடல் ஒன்றல்ல. மனிதனுக்கு ஐந்து உடல்கள். இதையே உபநிஷத் கோஷங்கள் என்கிறது. உணவால் உருவாகும் உடல், மனம் என்கிற உடல், ப்ராண சக்திகள் செயல்படும் உடல், நம் ஞாபக அடுக்குகளால் உருவான அறிவு உடல், ஆன்மா என்ற உடல் என ஐந்து உடல்கள் விவரிக்கப்படுகிறது. இதில் மனிதன் பிற நான்கு உடல்களை பற்றிய அறிவு இல்லாமல் தான் உணவால் உருவாகும் உடல் என்றே நினைக்கிறான்.
இங்கே தான் நீங்களும் வள்ளலாரின் கருத்தை தவறாக புரிந்துகொண்டீர்கள்.
அவர் ரத்தமும், சதையும் கொண்ட உடலுக்கு அதை சொல்ல வில்லை. உங்கள் அறிவுடலுக்கே அந்த கருத்தை போதித்தார்.
அறிவுக்காக பசித்திருங்கள், என்றும் ஞானத்தை அடைய பசியுடன் இருங்கள்.
அறிவுக்காக தனித்திருங்கள், என்றும் அனைவரும் செல்லும் பாதையிலேயே பயணிக்காமல் தனிப்பாதையில் முயலுங்கள்.
அறிவு பெற விழித்திருங்கள், ஞானம் எத்திசையிலிருந்து யார் மூலம் வருகிறது என தெரியாது எனவே விழிப்புணர்வுடன் இருங்கள்.
வள்ளல் சொன்னதை துள்ளலுடன் மீண்டும் நினைவு கூறுங்கள்
பசித்திரு, தனித்திரு விழித்திரு..!
--------------------------------------
கேள்வி : தூக்கத்திற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம்?
தூக்கம் என்பது உடல் மட்டும் இளைப்பாறுவது. தியானம் என்பது ஆன்மா இளைப்பாறுவது.
-------------------------------------
கேள்வி : நாள் என் செய்யும், வினை தான் என்செய்யும் என சான்றோர் கூறியது போல நாம் ஏன் ஜோதிடம், கிரகங்கள் இவற்றை பற்றி கவலைப்பட வேண்டும்?
உங்களின் கேள்வி உலக நகைச்சுவையில் ஒன்றாக வரிசைப்படுத்தலாம். ஐயாயிரம் ரூபாய் பொருள் வாங்கினால் முவ்வாயிரம் ரூபாய் பொருள் முற்றிலும் இலவசம்* என்பது போன்ற விளம்பரங்களை தற்கால பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். அதில் நட்சத்திர குறிக்கு அருகே condition apply என எழுதி இருப்பார்கள். நீங்கள் கூறிய வரிகளும் இத்தகைய விளம்பரங்களுக்கு சமமானவையே.
முழு வரிகளை கூறுகிறேன் கேளுங்கள்.
நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
கடைசி வரியை புரிந்துகொண்டீர்களா? இது தான் அந்த *Condition apply...!
உங்கள் முன் சிலம்பும் சதங்கையும், சண்முகமும் தோன்றினால் உங்களுக்கு நாளும் கோளும் வேலை செய்யாது..!
-------------
முந்தைய சத்சங்க பதிவுக்கு செல்ல இங்கே க்ளிக் செய்யவும் : ஸ்வாமி ஓம்கார் உடன் சத்சங்கம்
3 கருத்துக்கள்:
//பசித்திரு, தனித்திரு விழித்திரு..!//
விளக்கம் சிந்தனைக்குரியதாய் நன்றாக உள்ளது ......:)
//கடைசி வரியை புரிந்துகொண்டீர்களா? இது தான் அந்த *Condition apply...!
//
சூப்பர்
நிஸ்சல சித்தம், நிர்மோஹத்வம் வந்து ஜீவன் முக்தி கிடைக்குமா?
Post a Comment