Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, August 20, 2009

தெரிந்த விநாயகரும் தெரியாத ரகசியமும்

நமது கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சம் கணபதி. உயர் நிலையில் இருக்கும் ஞானி ஆகட்டும், சராசரி மனிதனாகட்டும் கணபதியை சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. உருவ நிலையிலும் சரி , பூஜா முறையிலும் சரி புரிந்து கொள்ள முடியாத ஒரு அதிசயம் விநாயகர். புராணங்கள் விநாயகரின் பிறப்பை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறினாலும், உள்ளார்ந்த ஞான நிலையில் கணபதியை புரிந்து கொள்ளும் நோக்கில் எழுதபட்டது தான் இந்த கருத்துக்கள்.

பாமரர்கள் புரிந்து கொள்ளுவதற்காக உருவகப்படுத்தபட்ட கதைதான் உமாதேவி தனது குளிக்கும் தருவாயில் விக்னேஷ்வரரை உருவாக்கினார் என்பது. அந்த கதையை உற்று நோக்கினால் சிவன் , சக்தியை காண வரும்பொழுது சிவனை தடுத்து போர் புரியும் பகுதி உண்டு. முடிவில் சிவன் விக்னேஷ்வரரின் தலையை கொய்து பிறகு யானையின் தலையை வைத்ததாக வரலாறு கூறுகிறது.

புராண கதையின் சுவையில் நாம் பக்தியுடன் இருப்பது தவறல்ல, ஆனால் அதை பற்றி சிந்திக்காத முட்டாளாக இருப்பது தவறு. ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். சக்தி உருவாக்கிய விக்னேஷ்வரர் சிவனை பிரித்தரியாத மூட படைப்பாக இருக்க முடியுமா?

இல்லை சக்தி தான் அவ்வாறு உருவாக்குவாளா? அண்ட சராச்சரத்திற்கும் நாயகனான சிவன் தன் முன் இருக்கும் பாலகன் யார் என தெரியாமல் போர் புரிவாரா? இவை எல்லாம் திருவிளையாடலுக்காக என கொண்டாலும் தலையை கொய்து போடும் அளவிற்கா திருவிளையாடல் நடக்கும்.? எந்த அசுரனையும் வதம் செய்யாலம் அவனுக்கு வரம் மட்டுமே தருபவர் அல்லவா ஈசன்?

புராண கதைகள் அனைத்தும் கூறப்பட்டது உங்கள் மனதில் கணபதியின் உருவம் பதியவேண்டும் என்பதற்கும் உங்களின் பக்தி பெருகவேண்டும் என்பதற்குமே. ஆனால் நாத்திக வாதம் பேசும் சிலர் கணபதியின் உருவை கேலிக்கூத்தாக்குகிறார்கள்.

ஒரு வேடிக்கை கதை ஒன்று உண்டு. ஒரு நாத்திகரும், ஆத்திகரும் நண்பர்கள். தினமும் காலையில் ஒன்றாக நடைபயிற்சி செய்பவர்கள். நாத்திகர் கையில் தனது செல்ல நாய் குட்டியை பிடித்தபடி வருவது வழக்கம். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும் கொள்கையில் வேறுபட்டவர்கள்.


ஆத்திகர் நடைப்பயிற்சியின் இடையே வந்த அரச மர விநாயகரை வழிபட்டு விட்டு நடையை தொடர்ந்தார். அப்பொழுது நாத்திகர் வேடிக்கையாக “நண்பரே இது என்ன முட்டாள் தனம் தினமும் இந்த கல்லை வணங்கலாமா? அதற்கு பதில் உயிர் உள்ள இந்த நாய் குட்டியை வணங்கலாமே. இது தான் என் சாமி..!” என்றார் கிண்டலாக. ஆத்திகர் புன்சிரிப்புடன், “நண்பரே .. உங்கள் நாய் குட்டியை என் சாமி மீதி போடுங்கள். என் சாமியை உங்கள் நாயின் மீது போடுகிறேன். எது சக்தி வாந்தது என தெரியும். சக்தி எதில் இருக்கிறது என முடிவு செய்ய வேண்டியது நாம் தான்..!” என்றார். கடவுளை எந்த பொருளிலும் காணலாம். ஆனால் இதில் தான் நீ காணவேண்டும் என சொல்லுவது அஹங்காரத்தின் அதிகாரமே தவிர வேறொன்றும் அல்ல.

வேடிக்கை கதைகள் இருக்கட்டும் கணபதியின் உருவம் ஏன் அப்படி இருக்கிறது?


விக்னேஷ்வரர் சாக்‌ஷாத் பிரணவத்தின் ரூபமானவர். பிரணவம் என்றால் ஓம் எனும் நாதம். ஓம் எனும் இந்த பிரபஞ்ச ஒலி மூன்று உள் பிரிவாக இருக்கிறது என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ரணவ மந்திரம் அ - உ - ம் எனும் மூன்று சப்தங்களின் கூடல் என்பதால் இந்த மூன்று சொல்லின் சப்த அளவை கருத்தில் கொண்டு அவரின் உடல் அமைந்துள்ளது. அ என்ற அகண்ட தலைபகுதி, உ என்ற வீங்கிய உடல் பகுதி, ம் என்ற சிறிய கால் பகுதி. இந்த மூன்று சப்தங்களையும் கூறிக்கொண்டே கணபதியின் உருவை நினைத்துப்பாருங்கள்.


ப்ரணவ மந்திரம் என்பது அனாதி, அதாவது தோற்றமும் முடிவும் அற்றது. அது போல விக்னேஷ்வரரும் தோற்றமும் முடிவும் அற்றவர். ப்ரணவ மந்திரம் போன்று உருவமற்றவர். அதனால் மஞ்சளில் பிடித்தாலும் பிள்ளையார்தான், அரிசியில் பிடித்தாலும் பிள்ளையார்தான் , சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான் மற்றும் விக்ரஹம் ஆனாலும் பிள்ளையார்தான். உருவமற்றவரை எவ்வுருவில் அமைத்தால் என்ன?
நான் கடவுள் படத்தை பகடி செய்து நான் உருவாக்கிய நான் விநாயகர்

அதனால் தான் அவருக்கு குழந்தை இல்லை. சம்சாரம் இல்லை என்கிறார்கள். கணபதி என்ற பெயருக்கு கணங்களுக்கு அதிபதி அதனால் கணபதி என்பார்கள். காணாதிபதே என்றால் கணங்களின் அதிபதி எனலாம். உண்மையில் கணம் என்றால் காலத்தின் அளவு கோல். அதனால் காலத்தை முடிவு செய்பவன் கணபதி காலத்திற்கு அதிபதி எனக்கூறலாம். விக்னேஷ்வரர் என்றால் விக்னம் - தடைகளை ஏற்படுத்துபவரும் நீக்குபவரும் என பொருள்படும்.

காலத்தை அனுசரித்து ஒரு விஷயத்தை செய்தால் அவை தடைபடாது. காலத்தை கடந்து செய்தால் எவ்விஷயமும் தடையாகிவிடும் என்பதை அவரின் இரு பெயர்களும் கூறுகிறது.


ஞானத்தின் வடிவானவர் விநாயகர். எந்த ஒரு பொருள் முழுமையான முக்தி நிலையில் இருக்கிறதோ அதை தான் விக்னேஷ்வரருக்கு படைக்கிறோம்.
கணபதிக்கு படைக்கும் பொருளின் தாத்பர்ரியம் மேற்கண்ட கருத்தை கொண்டே அமைந்திருக்கிறது, அருகம் புல் விதைப்போட்டு வளரக்கூடியது அல்ல. அதை விவசாயம் செய்ய முடியாது. வெள்ளெருக்கும் அத்தகையதே. அருகம்புல்லுக்கு காய் கனி விதை என்ற நிலை கிடையாது. தன் இனத்தை பெருக்காது. ஆகவே சுயம்பு தாவரமான அருகம்புல் முக்தியின் ரூபமான விநாயகரின் ரூபமாகும்.

மோதகம் ஞானத்தின் சின்னம். முழுமையான ஞானி தன்னுள் பூர்ணத்துவம் பெற்று இருப்பார். அவரின் வெளித்தோற்றம் சாதாரணமாக இருக்கும் என்பதையே மோதகம் காட்டுகிறது. ஞானிகள் எப்பொழுதும் விக்னேஷ்வரரின் கைகளில் இருப்பார்கள் என்பதையும் அல்லவா காட்டுகிறது !

பிள்ளையாருக்கு
பிரம்மனின் புதல்விகள் சித்தி புத்தி ஆகியோரை திருமணம் செய்து வைத்ததாக புராணம் கூறுகிறது. பிரம்மா எனும் நிலை படைத்தலை காட்டுகிறது. ஒருவர் ஒரு பொருளை உருவாக்க வேண்டுமானால் சித்தமும், புத்தியும் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும். அவர்களை ஏன் விநாயகருடன் இணைக்க வேண்டும்? ஒரு உருவாக்கம் செய்ய தடை சித்தத்திலும் புத்தியிலும் இருக்கக்கூடாது.

நாடியும் விநாயகரும் :

ஆன்மீகத்தில் இருக்கும் மிக ரகசியமான ஒரு விஷயத்தை இங்கே கூறுகிறேன். உடலின் வலது பகுதி மூளையின் இடது பக்கதிலும் ; இடப்பகுதி வலது மூளையாலும் கட்டுபடுத்தப்படுகிறது என்கிறது விஞ்ஞானம். இதையே நம் சாஸ்திரம் நாடிகள் என வரையறுக்கிறது. உடலின் செயல் வலது இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும். அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.


நாடி சாஸ்த்திரத்தை பற்றி விரிவாக காண்பதல்ல நம் நோக்கம். இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் அமைந்திருக்கிறது.


கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள். விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும். வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம். வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? முயற்சி செய்து விட்டு விநாயகரின் விக்ரஹ மகிமையை கூறவும். விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு இத்தகைய ஆற்றல் உண்டு.

விக்னேஷ்வரர் உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்டவர் அதனால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள். பிராணன் இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அரசமரம் மூலம் சுத்தப்படுத்துகிறோம்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை அதனால் தான் இது விநாகயர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை. விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுவோம். வாருங்கள் ஞானத்தின் வழியில் சென்று அவர் கையில் இருக்கும் மோதகமாவோம்.

38 கருத்துக்கள்:

Unknown said...

வினாயகர் அகவல் பற்றி ஒன்னும் சொல்லவில்லை ஏன்.

அவ்வையார் பற்றி எதேனும் எழுதுங்கள்

Kodees said...

சரியாகச் சொன்னீர்கள். இதேபோல் அனுமனைப் பற்றி எனது கட்டுரை
http://asktamil.blogspot.com/2009/02/blog-post.html

படித்துப் பார்த்து ஏதாவது தவறு இருப்பின் திருத்துங்கள்

Thirumal said...

//"மோதகம் ஞானத்தின் சின்னம். முழுமையான ஞானி தன்னுள் பூர்ணத்துவம் பெற்று இருப்பார். அவரின் வெளித்தோற்றம் சாதாரணமாக இருக்கும் என்பதையே மோதகம் காட்டுகிறது."//

அழகு........

///”ஞானிகள் எப்பொழுதும் விக்னேஷ்வரரின் கைகளில் இருப்பார்கள் என்பதையும் அல்லவா காட்டுகிறது”///
அழகோ அழகு.

sowri said...

nice article with new information. I haven't heard that your breathing pattern will change before him! Now the time to visit Thiruvannamalai please!:)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜெய்சங்கர் ஜகநாதன்.

விநாயகர் பற்றியும், ஒளவ்வையார் பற்றியும் 'தகவல்' தெரியும் அகவல் தெரியாது :)

விநாயகர் அகவலை ஒளவ்வையார் தான் எழுதினார் என உங்களுக்கு தெரியுமா?

ஆத்திசூடி எழுதிய ஒளவ்வையார் போல தமிழ் இலக்கியத்தில் அனேக ஒளவ்வையார்கள் இருக்கிறார்கள். முடிந்தால் விசாரித்து சொல்லவும்.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு திருமால்,

உங்கள் பின்னூட்டமே ‘அழகு'
மேலும் தவறுகளை சுட்டிக்காடியமைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செளரி,

//nice article with new information. I haven't heard that your breathing pattern will change before him! Now the time to visit Thiruvannamalai please!:)//

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயம் அருகே இரட்டை பிள்ளையார் கோவில் ஒன்று உண்டு. அங்கே சென்றால் எப்படி மூச்சு வரும் என சென்றுவந்து சொல்லுங்கள் :)

நிகழ்காலத்தில்... said...

சாமி, இடுகையில் இருக்கிற விநாயகரப்
பார்த்திட்டு சுவாசம் இடது நாடியில் ஓடுதே !

இத எப்படி எடுத்துக்கறது ?

--- பொன்னுச்சாமி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு பொன்னுச்சாமி :)
//
, இடுகையில் இருக்கிற விநாயகரப்
பார்த்திட்டு சுவாசம் இடது நாடியில் ஓடுதே !

இத எப்படி எடுத்துக்கறது ?

--- பொன்னுச்சாமி//

கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்து முகர்ந்து கொண்டிருந்தீர்களா :) நினைத்து பார்க்கவே அமர்க்களமா இருக்கு.

பதிவில் இருக்கும் வரிகளை கவனியுங்கள்..
//விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு இத்தகைய ஆற்றல் உண்டு.
//

கோவிலில் இருக்கும் விக்ரஹத்திற்கு மட்டுமே இந்த ஆற்றல் உண்டு. அல்லது பூஜாவிதி பிரகாரம் மந்திர உரு ஏற்றப்பட்ட விநாயகர் விக்ரஹத்திற்கு.

Unknown said...

ஒளவ்வையார் எழுதிய வினாயகர் அகவல் மற்றும் நக்கீரன் எழுதிய திருமுருகுஆற்றுப்படை பற்றி தெய்வத்தின் குரலில் எழுதியுருக்கிறார்.

ஒளவ்வையார் காலம் அதியமான் காலம்

ஒளவ்வையாரால் தமிழகத்தில் உள்ள 100க்கணக்கான வினாயகர் சிலைகள் பிரதிஷ்டை பண்ணப்பட்டன

கோவி.கண்ணன் said...

ஈ'சன்' சீசன் பதிவுக்கு வாழ்த்துகள் !

கோவி.கண்ணன் said...

இது நாத்திகன் எழுதிய இடுகை !
:)

நிகழ்காலத்தில்... said...

\\கோவிலில் இருக்கும் விக்ரஹத்திற்கு மட்டுமே இந்த ஆற்றல் உண்டு. அல்லது பூஜாவிதி பிரகாரம் மந்திர உரு ஏற்றப்பட்ட விநாயகர் விக்ரஹத்திற்கு.\\

சாமி நீங்க சொல்றது புரியுது, ஆனா மெய்யாலுமே இடுகை படத்தை பார்த்தவுடன் அப்படித்தான் இருந்தது.

அது தற்செயலா, விநாயகர் மகிமையோன்னு புரியாமத்தான் சாமி

நீங்க இப்ப சொன்னத வச்சுப் பார்த்தா தற்செயல்தான்.

எல்லாம் சாமியோட விளையாட்டு :))

---புரியாத பொன்னுச்சாமி

Anonymous said...

அருமையான பதிவு சுவாமி! இனி விநாயகர் கோவிலுக்கு போனால், இதுதான் தோன்றும்! மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில், அம்மன் சன்னதிக்கு செல்லும் முன்பு, இரட்டை பிள்ளையார் இருக்கும். ஆகா, இரட்டை பிள்ளையார் முன் இரு ட்வாரத்தில் மூச்சு வரும், சம நிலை வரும்! சரியா?

Siva Sottallu said...

ஸ்வாமி, விநாயகர் தனது ஒரு தந்தத்தை முறித்து கையில் வைத்துருபதற்கும், தனது காலடியில் மூஞ்சுறு / சுண்டலி இருப்பதற்கும் ஏதேனும் காரணம் உண்டா ஸ்வாமி?

Siva Sottallu said...

விநாயகரை வழிபடும் பொழுது உக்கி போடுவதும் நெற்றியில் கொட்டிகொல்வதற்கும் ஏதேனும் ஆன்மீக விளக்கம் இருந்தால் கூறும்படி தாழ்மையுடன் கேட்டிகொள்கிறேன் ஸ்வாமி?

உக்கி போடுவதன் பயனை விஞ்ஞான பூர்வமாக அறிந்திருக்கிறார்கள். அதற்கு "சூப்பர் பிரைன் யோகா" என்று வேறு பெயர் வைத்திருக்கிறார்கள் ஸ்வாமி.

"Super Brain Yoga - http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs"

எம்.எம்.அப்துல்லா said...

அப்பனே அல்லா! உன் பொருட்டும் விநாயகர் பொருட்டும் சண்டை நேராதிருக்க அருள் புரிவாயாக - இது என் போன்றோரின் புரிதல்.

அப்பனே அல்லா! உன்னோடு நீ ஓரு போதும் சண்டையிடுவதில்லை - இது ஸ்வாமி ஓம்கார் போன்றோரின் புரிதல்

Unknown said...

அதி வேகமாய் ஜோதிட பகுதி ஆரம்பித்தீர்களே?
இப்போ விநாயகர் துணை, முருகன் துணைன்னு எழுதறீங்களே? என்ன ஆச்சு அது?

மதி said...

தகவலுக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஜெய்சங்கர் ஜகநாதன்,

//ஒளவ்வையார் எழுதிய வினாயகர் அகவல் மற்றும் நக்கீரன் எழுதிய திருமுருகுஆற்றுப்படை பற்றி தெய்வத்தின் குரலில் எழுதியுருக்கிறார்.

ஒளவ்வையார் காலம் அதியமான் காலம்//

அதியமான் காலத்தில் வாழ்ந்த இந்த ஒவ்வையார் தான் விநாயகர் அகவலை எழுதியவரா?

சுட்டபழம் வேனுமா சுடாதபழம் வேனுமா என முருகனால் கேட்கப்பட்ட அதே ஒளவ்வையாரா?

குண்டலினி பற்றி விநாயகர் அகவலில் எழுதபட்டுள்ளது. அது போல வேறு யோக கருத்துகள் ஒளவ்வையார் எழுதி இருக்கிறாரா..?

இதையை கொஞ்சம் விசாரித்து சொல்லுங்கள்.

நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

//ஈ'சன்' சீசன் பதிவுக்கு வாழ்த்துகள் !//

இடுக்கை முழுவதும் படிக்காமல் போட்ட டெம்ளேட் பின்னூட்டமா?
பிறப்பு இறப்பு இல்லை என சொன்ன இடுக்கைக்கு ஈ சன் என பதிலா :)

இந்த நாத்திகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தினேஷ் பாபு,

நீங்கள் நினைத்தது சரிதான். ஆனால் இரட்டை பிள்ளையார் இருவருக்கும் துதிக்கை வெவேறு திசையில் இருக்க வேண்டும். இல்லை என்றால் சமநிலையில் சுவாசம் வராது.

உங்கள் வருகைக்கு நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா..

//ஸ்வாமி, விநாயகர் தனது ஒரு தந்தத்தை முறித்து கையில் வைத்துருபதற்கும், தனது காலடியில் மூஞ்சுறு / சுண்டலி இருப்பதற்கும் ஏதேனும் காரணம் உண்டா ஸ்வாமி?//

நம் இயல்புக்கு ஏற்றால் போல எப்படி வேண்டுமானாலும் உருவகப்படுத்தலாம். அவருக்கு உருவம் இல்லை என்பது தான் கட்டுரையின் நோக்கம்.

இந்திய கலாச்சார கடவுள்களுக்கு வாகனம் என ஒன்றை கொடுத்து உபசரிப்பது ஒரு வகை மரியாதையாக கருதுகிறார்கள். 16வகை உபசாரத்தில் வாகனமும் ஒன்று.

வெளிநாட்டுக்காரர்கள் செய்யும் முட்டாள் தனத்தில் சூப்பர் பிரைன் யோகாவும் ஒன்று. ஏதோ முழுவதும் தெரியாத விஷயங்களை இப்படி செய்கிறார்கள்.

நம்மாட்களும் வெளிநாட்டுகாரன் சொன்னால்தான் செய்வார்கள். சுயபுக்தி கிடையாது. வேதனையான விஷயம்.

ஸ்வாமி ஓம்கார் said...

அண்ணே அப்துல்லா..

//அப்பனே அல்லா! உன் பொருட்டும் விநாயகர் பொருட்டும் சண்டை நேராதிருக்க அருள் புரிவாயாக - இது என் போன்றோரின் புரிதல்.

அப்பனே அல்லா! உன்னோடு நீ ஓரு போதும் சண்டையிடுவதில்லை - இது ஸ்வாமி ஓம்கார் போன்றோரின் புரிதல்//

அறிஞரின் தத்துவம் இடம்மாறிடுச்சோ :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு C,

//அதி வேகமாய் ஜோதிட பகுதி ஆரம்பித்தீர்களே?
இப்போ விநாயகர் துணை, முருகன் துணைன்னு எழுதறீங்களே? என்ன ஆச்சு அது?//

விரைவில் ஜோதிட பாடம் உண்டு.

விநாயகர் துணை முருகன் துணை என எழுதுவது தான் என் முக்கிய பணி. ஜோதிடம் என்பது அதில் இருக்கும் சிறுபணி.

விநாயகர் துணை இல்லாமல் அதை எல்லாம் செய்ய முடியுமா... அதனால் முதலில் வேண்டுவோம் பிறகு ஜோதிடம் கற்போம்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மதி,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஷண்முகப்ரியன் said...

உங்கள் பதிவுகளிலேயே முழுக்க முழுக்கக் கவித்துவமாக நான் உணர்ந்த பதிவு ஸ்வாமிஜி.

சொல்லி உணர்த்த முடியாத உணர்வுகளைச் சொல்லும் முயற்சிதான் கவிதை என்றால் விநாயகப் பெருமானைப் பற்றிய அதி அற்புதமான உரைநடைக் கவிதை ஸ்வாமிஜி இது.

இதனைப் படிக்கும் பேற்றினை அருளிய உங்களினுள் வீற்றிருக்கும் கணபதிக்கு நன்றி.

? said...

//அருகம்புல்லுக்கு காய் கனி விதை என்ற நிலை கிடையாது.//

அருகம்புல் விதை உண்டு.

Unknown said...

சொல்லி உணர்த்த முடியாத உணர்வுகளைச் சொல்லும் முயற்சிதான் கவிதை என்றால் விநாயகப் பெருமானைப் பற்றிய அதி அற்புதமான உரைநடைக் கவிதை ஸ்வாமிஜி இது. என் கருத்தும் அதுவே. நன்றி.

Subramanian said...

//...காலத்தை அனுசரித்து ஒரு விஷயத்தை செய்தால் அவை தடைபடாது. காலத்தை கடந்து செய்தால் எவ்விஷயமும் தடையாகிவிடும் என்பதை அவரின் இரு பெயர்களும் கூறுகிறது//

அதெல்லாஞ்சரி.கோவி கண்ணனுக்கு ஒரே ஒரு பெயர் தானே.

கோவி.கண்ணன் said...

//இடுக்கை முழுவதும் படிக்காமல் போட்ட டெம்ளேட் பின்னூட்டமா?
பிறப்பு இறப்பு இல்லை என சொன்ன இடுக்கைக்கு ஈ சன் என பதிலா :)

இந்த நாத்திகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா...//

சத்தியமாக படிச்சிட்டு தான் போட்டேன்

ஈ'சன்' ஈசனோட சன் என்பதன் சுருக்கம் !

கோவி.கண்ணன் said...

//நிகழ்காலத்தில்... said...

சாமி, இடுகையில் இருக்கிற விநாயகரப்
பார்த்திட்டு சுவாசம் இடது நாடியில் ஓடுதே !

இத எப்படி எடுத்துக்கறது ?

--- பொன்னுச்சாமி//

விக்ரக(சிலை) வழிபாட்டுக்கும் நிகழ்காலத்துக்கும் என்ன தொடர்பு ?

பொன்னுச்சாமிக்கு தொடர்பு இருக்கிறதோ !
:)

ஜாம்பஜார் ஜக்கு said...

//சுட்டபழம் வேனுமா சுடாதபழம் வேனுமா என முருகனால் கேட்கப்பட்ட அதே ஒளவ்வையாரா?//

கரீட்டு! "நாடா கொன்றோ காடா கொன்றோ, நசையா கொன்றோ, மிசையா கொன்றோ..." ன்னு எழுதின அவ்வையாரும், " அறம் செய்ய விரும்பு" ன்னு சிம்பிளா எழுதின அவ்வையாரும், சுட்ட பழம் வேணுமான்னு மொதல் கடி ஜோக் சொன்ன அவ்வையாரும் ஒருத்தரா இருக்க சான்ஸே இல்ல தலீவா...

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Unknown said...

//கரீட்டு! "நாடா கொன்றோ காடா கொன்றோ, நசையா கொன்றோ, மிசையா கொன்றோ..." ன்னு எழுதின அவ்வையாரும், " அறம் செய்ய விரும்பு" ன்னு சிம்பிளா எழுதின அவ்வையாரும், சுட்ட பழம் வேணுமான்னு மொதல் கடி ஜோக் சொன்ன அவ்வையாரும் ஒருத்தரா இருக்க சான்ஸே இல்ல தலீவா...
//

ஒன்று மன்னர்கள் மற்றும் படித்தவர்களுக்காக .

இன்னொன்று சிறுவர்களுக்காக

? said...

//சுட்ட பழம் வேணுமான்னு மொதல் கடி ஜோக் சொன்ன அவ்வையாரும் //

இத சொன்னது அப்பன் முருகன் இல்ல???

Siva Sottallu said...

// பிள்ளையாருக்கு பிறப்பில்லை //
// விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ..!
ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுவோம். //

ஏன் சுவாமி குறிப்பாக ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக கொண்டாடுகிறோம். மற்ற மாதத்திலும் சதுர்த்தி திதி வருகின்றதே?

திவாண்ணா said...

யார் என்ன வேணா தத்துவம் சொல்லிட்டு போகட்டும் பிள்ளையார் நம்ம ஃப்ரெண்டு. அவ்ளோதான்!

Geetha Sambasivam said...

மின் தமிழில் விநாயக சதுர்த்தி குறித்தும் கிருஷ்ண ஜயந்தி குறித்தும் ஏகப்பட்ட வாத விவாதங்கள். பதில் எழுதணும்னு நினைச்சு வேண்டாம்னு விட்டுட்டேன். :) இந்தப் பதிவு முன்னரே ஏன் கண்களில் படலைனு தெரியலை. நல்ல அருமையான பதிவு. விளக்கங்கள் அனைத்தும் தர்க்க ரீதியானவை! பிள்ளையாரோட சண்டை எல்லாம் போடற மாதிரி மத்தவங்க கூடப் போடமுடியுமா! ரொம்ப ஃப்ரென்ட்லி பிள்ளையார் தான்.