Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Thursday, August 27, 2009

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 13

காண்கின்ற கண்ணொளி காதல்செய் ஈசனை
ஆண்பெண் அலிஉரு வாய்நின்ற ஆதியைப்
பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கைச் செயல்அணை யாரே.
--------------------------------------------திருமந்திரம் 434


இறைவனின் மஹாசொரூபங்களை கண்டுகளித்தவர்கள் பல்வேறு நிலையில் இறைவனை வடிவமைத்தனர். உருவமாகவும் அருவமாகவும் மேலும் அருவுருவமாகவும் பார்க்கும் தன்மைகள் நம் கலாச்சாரத்தில் உண்டு. அத்தகைய இறைவனின் குறிப்பிடத்தக்க சொரூபம் அர்த்தநாரீஸ்வர சொரூபம். இயற்கையின் படைப்பில் எப்பொழுதும் இரு முனைகள் இருக்கும். தோற்றம் - மறைவு, மலை - பள்ளம், இரவு-பகல் என்ற எதிர்மறை தன்மைகள் எப்பொழுதும் இருக்கும். இவை இரண்டாக இருந்தாலும் தனித்து வேலை செய்ய முடியாது.

மின்சாரத்தை கடத்தும் அயனியில் நேர் மறை மற்றும் எதிர்மறை முனைகள் உண்டல்லவா? கணிப்பொறி கூட 1,0 என்ற எண்ணின் அடிப்படையில் வேலை செய்கிறது. எதிலும் இரு நிலைகளைகாணலாம். ஆனால் அந்த இருநிலை இணைந்து வேலைசெய்தால் மட்டுமே உருவாக்கம் என்ற செயல் உண்டு.


அர்த்தநாரீஸ்வர் நிலை என்பது நம்மில் உடலில் இருக்கும் இரு தன்மைகளை காட்டுகிறது. இரு நிலைகளும் சரிசமமாக இருக்கவேண்டும் என்பதை தான் உடலின் வலது இடது பக்கங்கள் பிரித்து காண்பிக்கபடுகிறது. திருநங்கையின் நிலைக்கும் அர்த்தநாரீஸ்வர நிலைக்கும் வித்தியாசம் உண்டு. திருநங்கை தன்மை என்பது உடல் மற்றும் மனோநிலையில் சரிசமமாக பிரிவு இருக்காது. முக்கால் பங்கும் ஒரு பாலினமும், கால் பங்கு மற்ற பாலினமும் இருக்கும்.

நம் உடலில் இயங்கு தன்மை, இயக்கமற்ற தன்மை என இரு அமைப்புகள் உண்டு. அவை இரண்டும் சம நிலையில் இருந்தால் அது தெய்வ நிலை என உணரலாம். வெப்பம் மற்றும் குளிர்ச்சி என அடிப்படை உடல் வெப்ப நிலையை எடுத்துக்கொண்டோமானால் இரண்டும் சரியான அளவில்லை எனில் உடல் நலம் கெடும். இதே போல மனம் மற்றும் ஆன்மாவிற்கு வெவ்வேறு நிலைகள் இரு முனைகளாக செயல்படுகிறது.

ஆண் பெண் என இருநிலைகளும் அவை இணைந்த நிலைகள் என மூன்று நிலைகளையும் காணும் பொழுது தெய்வ சொரூபம் பாலின வித்தியாசத்தில் அடங்குவதில்லை என புலப்படும். அவன் அருளால் என்றோ , அவள் அருளால் என்றோ சொல்லுவதை விட, அதன் அருளால் அதன் தாழ் வணங்கி என்றுதானே கூறவேண்டும் ?

திருவண்ணாமலையில் இறைவன் பல்வேறு சொரூபமாக காட்சி அளிக்கிறார். உண்மையில் அனைத்து சொரூப தரிசனமும் அரூப தரிசனமும் முழுமையாக பெற்ற தலம் அருணாச்சலம். அதில் ஒன்றுதான் அர்த்தனாரீஸ்வரராக காட்சி அளிக்கும் திருக்கோவில்.

நகரின்
மையத்தில் இருந்தாலும் அனேகர் காண முடியாத இடத்தில் அர்த்தநாரீஸ்வர் இருக்கிறார். பவளக்குன்று என்ற இந்த சக்தி மையம் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு அருகில் நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது. வீடுகளும் பாதைகளும் மறைத்திருப்பதால் இந்த கோவில் நகரின் மையத்தில் இருந்தும் வெளியே தெரியாது.
பவள குன்றின் நுழைவாயில், பின்புறம் சிறியதாக குன்றின் மேல் கோவில் காணலாம்.

திருவண்ணாமலைக்கு சாதாரணமாக செல்லுபவர்கள் இந்த இடத்திற்கு செல்ல மாட்டார்கள். பலருக்கும் தெரியாது என்றும் சொல்லலாம்.
ஒரு 100 மீட்டர் உயரம் கொண்ட சிறு குன்று. அருணாச்சல மலையில் தொடர்ச்சியாக சிறு மலையாக காட்சி அளிக்கிறது.

அந்த பேராற்றலை நான் உணர்ந்த மூன்று தினமும் திருவண்ணாமலையின் இப்பகுதியில் அதிகம் கழித்தேன். இக்கோவில் காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை அரைமணி நேரம் மட்டுமே திறந்திருக்கும். பிற நேரங்களில் கோவிலின் கருவறை பூட்டபட்டிருக்கும்.

அங்கே யாரும் இருக்கமாட்டார்கள் இறைவனை தவிர...!
பவள குன்று கோவிலின் வெளி பிரகாரத்தில் இருந்து
அருணாச்சல கிரியின் ஒரு பகுதி தோற்றம்


பவளக்குன்றின் மேல் இருந்து பார்த்தால் அருணாச்சலேஸ்வர் கோவிலும், அருணாச்சல மலையும் பக்கவாட்டில் அருமையான காட்சியாக தெரியும். சில நூற்றாண்டுகளுக்கு முன் இது ரிஷிகள் மட்டும் வாழும் இடமாக இருந்த இந்த குன்றின் மேல் பின்பு சிறிய கோவில் கட்டப்பட்டது. அர்த்தநாரிஸ்வரர் என்றாலும் கோவிலின் உள்ளே லிங்க சொரூபம் தான் இருக்கும். மேலும் பக்கவாட்டில் அம்மனின் விக்ரஹமும் வேறு தனி சன்னிதியில் உண்டு. பவளக்குன்றின் பின்புறம் தொடர்ச்சியாக அருணாச்சல மலையை இணைக்கும்.

ரமணர் பூத உடலில் வாழ்ந்த காலத்தில் சிலகாலம் இங்கே தங்கி இருந்தார். கோவிலின் உள்ளே ரமணர் இருந்த குகை இன்றும் உண்டு. பாதாள லிங்கத்தில் தவம் இயற்றிவிட்டு அருணாச்சலேஸ்வர் கோவிலில் இருந்த ரமணர் பொதுமக்களின் தொந்தரவின் காரணமாக இங்கே வந்தமர்ந்தார். பகவான் ரமணர் தவத்தாலும் நிஷ்டையாலும் பல ஆண்டுகளாக மெளனத்தில் இருந்தார். அதன் பிறகு முதல் முதலாக உபதேசம் அளித்த இடம் பவளக்குன்றுதான். அந்த சம்பவம் சுவாரசியமானது.

வீட்டை விட்டு வந்த பிறகு ரமணரை அவர் தாயார் முதல் முதலாக பவளக்குன்றில் தான் சந்தித்து மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறார். எந்த பதிலும் சொல்லாமல் ஒருவார்த்தையும் பேசாமல் எங்கோ கண்களை நிலைபடுத்தி அமர்ந்திருக்கிறார் ரமணர். தினமும் காலை முதல் இரவு வரை தாயார் அவரை கேட்டுக்கொண்டே இருக்கிறார். இவ்வாறு ஒருநாள் இரண்டு நாள் அல்ல பதினைந்து நாள் கழிந்தது. தாயாருக்கோ அவர் வெளி நிலையில் மகனாக தெரிகிறார். ரமணரின் உள் நிலையோ முற்றிலும் ஞான சாகரமாக இருந்தது. கடைசியில் ஒரு சிறு காகிதத்தில் ரமணர் மஹாவாக்கியத்தை எழுதி தாயாரிடம் கொடுத்தார். அதை படித்ததும் தனது பிள்ளையின் உண்மை நிலையை உணர்ந்து கொண்டார் அந்த தெய்வத்தாய். அந்த மஹாவாக்கியத்தை பார்த்தால் ரமணர் தன் தாயாருக்காக சொன்னதாக தெரியவில்லை.

நீங்களே அதை படியுங்கள்....


அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.

வேறு உபதேசங்கள் வேண்டுமா? இவ்வரிகளை முற்றிலும் புரிந்துகொண்டோமானால் மனதில் பேரமைதி குடிகொள்ளும். இக்குன்று சக்திநிலையில் இன்றும் இருப்பதை அங்கு சென்று வழிபட்டாலே உணர முடியும். பல சித்தர்கள் மற்றும் யோகிகள் இங்கே சமாதி நிலையில் இருந்தார்கள் மற்றும் ஜீவ சமாதியாக இன்றும் இருக்கிறார்கள்.

பிறரால் தொல்லை கொடுக்காத இடம் என்பதால்
திருவண்ணாமலையில் அதிகமாக நான் இருந்த இடம் இது. அந்த மூன்று நாட்களில் இரவுகள் எனக்கு இங்கே கழிந்தது. பவளக்குன்று கோவிலின் முன் வளைந்த படிக்கட்டுக்கு அருகே இருக்கும் பெரிய பாறைதான் எனது மஞ்சம். என்னிடம் இருந்த துணி மூட்டையே தலையணை. கடந்த இரண்டு பகல் வேளையில் பல இடங்களுக்கு சென்றுவிட்டு பிறர் தானாக கொடுத்த உணவை உண்டு மகிழ்ந்து முழுமையான ஆனந்த நிலையில் இருந்தேன். அன்று வளர்பிறை ஏகாதசி. இன்னும் நான்கு நாளில் பெளர்ணமி வரும் ஆயுத்தமாக சந்திரன் தனது அழகைகாட்டிக் கொண்டிருந்தார்.

பவள குன்றின் முன்புறம் நான் படுத்திருந்த பாறை.

எனது தலைக்கு மேல் அருணாச்சல மலை நிலவொளியில் ஜொலித்தது,
வலது பக்கம் அருணாச்சலேஸ்வரர் கோவில் ஒன்பது வெண்குன்றுகள் போல காட்சி அளித்தது. இதமான காற்றும், பாறையின் குளிரும் அர்த்தநாரீஸ்வரின் மடியில் நான் இருக்கிறேன் என்பதற்கு சான்றுகளானது.

அப்பொழுது தான் என் ஆன்மீக வாழ்வில் அந்த முக்கிய சம்பவம் நிகழ்ந்தது.

(தொடரும்)
படங்கள் உதவி : http://richardarunachala.wordpress.com

25 கருத்துக்கள்:

கோவி.கண்ணன் said...

படத்தில் நீங்கள் கையைத் தூக்கி,

'ஜெய் ஹோ.......ஜெய் ஹோ' தானே சொன்னீர்கள் ?

Food Safety Solutions said...

சாமி
அருணசலத்தை பற்றி 1000 பகுதிகள் எழுதினாலும், இன்னும் எழுதுங்கள் என வேண்டிக்கொள்ள தோன்றும், ஆனல் அது என்ன மெகா சீரியல் போல நடந்தது என்ன? என்று தொடரை முடிப்பது ஏன்?

நிகழ்காலத்தில்... said...

//திருநங்கையின் நிலைக்கும் அர்த்தநாரீஸ்வர நிலைக்கும் வித்தியாசம் உண்டு. திருநங்கை தன்மை என்பது உடல் மற்றும் மனோநிலையில் சரிசமமாக பிரிவு இருக்காது. முக்கால் பங்கும் ஒரு பாலினமும், கால் பங்கு மற்ற பாலினமும் இருக்கும். //

தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்.,


பவளக்குன்றின் சிறப்பை தங்களைப்போன்றவர்களே சொல்ல முடியும்,

மற்றவர்கள் புலன்களால் உணர முடிந்த அளவே சிறப்பை விளக்குவார்கள், தாங்கள் உணர்வு நிலையில் இருந்து, உணர்ந்து எழுதுவது சரியானதாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது.

தொடர்ந்து எழுதுங்கள்., வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

//mano said...

சாமி
அருணசலத்தை பற்றி 1000 பகுதிகள் எழுதினாலும், இன்னும் எழுதுங்கள் என வேண்டிக்கொள்ள தோன்றும், ஆனல் அது என்ன மெகா சீரியல் போல நடந்தது என்ன? என்று தொடரை முடிப்பது ஏன்?
August 27, 2009 8:34 AM //

ரிப்பீட்டுறேன்.

ஆனந்தவிகடன், குமுதம் மர்மத் தொடர்ப் போல ஒரு ஆவலை ஏற்படுத்த முயற்சிக்கிறார், செயற்கையாக இருக்கு.

மாற்றிக் கொள்ளுங்க ஸ்வாமி !

ஷண்முகப்ரியன் said...

அடுத்த முறை திருவண்ணாமலை செல்ல வாய்க்கும் போது பவளக் குன்றினைத் தரிசிக்கிறேன் ஸ்வாமிஜி.

தொடர் என்று எழுதத் தொடங்கிய பின்னர் அதற்கான நியாயங்களைக் கற்பிக்கும் எண்ணத்தில்தான் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு சஸ்பென்
ஸ் வைத்து எழுதுகிறீர்கள் என்றெண்ணுகிறேன்.

பொருட்செறிவான இந்த விஷயங்களை எப்படி எழுதினாலும் சரியே.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன் மற்றும் மனோ,

வேண்டுமென்றே இதை திணிப்பதில்லை.

அடுத்த பகுதியில் எது பற்றிய விஷயம் வரப்போகிறது என முன்கூட்டிய அறிவிக்கும் முகமாக எழுதப்படுகிறது. அடுத்த பகுதிக்கு முன்னோட்டமாக இருக்கவே என நினைக்கிறேன்.

பகுதி 12ல் அந்த இடம் என்று முடிந்தது அதனால் பகுதி 13ல் ஒரு இடத்தை பற்றி கூறுவேன் என தயாராகலாம் அல்லவா? தவிர
சஸ்பென்ஸ் வைக்கவேண்டும் என்பது எண்ணம் இல்லை.

உங்கள் வருகைக்கும் வெளிப்படையான கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு நிகழ்காலம்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஷண்முகப்ரியன்,

ஸ்ரீ சக்ர புரியை எழுதினால் ஒரு பகுதியில் முடியகூடியது அல்ல என தெரியும். தொடராக எழுதி சஸ்பென்ஸ் ஏற்படுத்தி என்ன விளம்பரதாரரா உயரப்போகிறார்கள் :) ?

உங்கள் புரிதலுக்கு நன்றி

Umashankar (உமாசங்கர்) said...

வனக்கம் ஸ்வாமி ஜி,

ஸ்ரீ சக்ர புரி - பகுதி 1" முதல் ஸ்ரீ சக்ர புரி - பகுதி 13" வரை மிக அருமை. உங்களின் இந்த ஆன்மிக உணர்வு பரிமாற்றதிற்கு, நன்றி நன்றி நன்றி.

உமாசங்கர்.ஆ

sowri said...

"ஸ்ரீ சக்ர புரி அல்லது ஆன்மீக ரகசியங்கள் என்றே தலைப்பாக வைக்கலாம் போன்று இருக்கிறது. அற்புதமான பகிர்வுகள்.

தேவன் said...

///அவரவர் ப்ரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்///

ஞானத்தின் வெளிப்பாடு தான் என்ன அழகாக தெரிகிறது.

நன்றி ஐயா.

விஜய் said...

வணக்கம். ஒரு ஐயம் சுவாமி. கலியுகத்தில் இல்லறத்தில் இருந்து இறைபக்தியுடன் இருப்பதே மிக பெரிய தியானம் என்று கருதுகிறேன். இல்லறம் இல்லாமல் நேராக துறவறம் பூணுதல் ஷார்ட்கட் ஆக நினைக்கிறன். தங்களது கருத்தை எதிர் நோக்குகிறேன்.

நன்றி.

Siva Sottallu said...

பவள குன்றை எங்களுக்கு அறிமுகபடுதியதற்கு மிக்க நன்றி ஸ்வாமி.

பகவான் ரமணரின் மகாவாக்கியத்தை படிக்கும் பொழுது என் நினைவில் வந்த ஒரு திரைப்பட வரிகள் "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது , கிடைக்காம இருக்கிறது கிடைக்காது... "

இந்த வரிகள் ஒருவிதத்தில் நாம் எதையும் முயற்சி செய்வதற்கு கூட தடையாக இருக்குமோ என்று தோன்றுகிறது ஸ்வாமி. நாம் ஏன் வீணாக முயற்சி செய்ய வேண்டும், இது நடக்காது என்று இருந்தால் நாம் என்ன முயற்சி செய்தாலும் நடக்க போவதில்லை... இதை எப்பாடு எடுத்துகொள்வது ஸ்வாமி.

yrskbalu said...

தன்னம்பிக்கை பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள் - ஒரு மனிதனின் விடாமுயற்சி, உழைப்பு, திறமை, Positive approach மூலம் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று. இது சரியான கருத்தா? வெற்றி, தோல்விகளை நிர்ணயிப்பது ஜாதகத்திலுள்ள கிரகநிலைகளா? அல்லது மனிதனின் விடாமுயற்சி, திறமை, உழைப்பு ஆகியவையா?

குறும்பன் said...

திருச்செங்கோட்டில் மட்டும் தான் அர்த்தநாரீசுவரர் கோயில் இருப்பதாக இது வரை நினைத்துக்கொண்டுள்ளேன். அம்மையப்பன் என்பது அர்த்தநாரீசுவரர் தானே?

நிகழ்காலத்தில்... said...

\\அவர் அவர் ப்ராரார்த்த ப்ரஹாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது
என் முயற்சிக்கினும் நடவாது;
நடப்பது என் தடை செய்யினும்
நில்லாது. இதுவே திண்ணம்.
ஆதலின், மெளனமாய் இருக்கை நன்று.\\

நமச்சிவாய .. இதற்குள் ப்ராரார்த்தம் அடக்கம்தானே:))

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த வரிகள் ஒருவிதத்தில் நாம் எதையும் முயற்சி செய்வதற்கு கூட தடையாக இருக்குமோ என்று தோன்றுகிறது ஸ்வாமி. நாம் ஏன் வீணாக முயற்சி செய்ய வேண்டும், இது நடக்காது என்று இருந்தால் நாம் என்ன முயற்சி செய்தாலும் நடக்க போவதில்லை... இதை எப்பாடு எடுத்துகொள்வது ஸ்வாமி //

ஓட்டகத்தைக் முதலில் கட்டிப்போட்டுவிட்டு பின்பு தொலைந்துவிடாது இருக்க இறைவனைப் பிராத்தியுங்கள்.
-முகமது நபிகள்

கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
-இயேசுபிரான்

மிச்சத்த சாமி சொல்லுவாரு :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு உமாசங்கர்,

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஆல்பா,

//வணக்கம். ஒரு ஐயம் சுவாமி. கலியுகத்தில் இல்லறத்தில் இருந்து இறைபக்தியுடன் இருப்பதே மிக பெரிய தியானம் என்று கருதுகிறேன். இல்லறம் இல்லாமல் நேராக துறவறம் பூணுதல் ஷார்ட்கட் ஆக நினைக்கிறன். தங்களது கருத்தை எதிர் நோக்குகிறேன்.
//

இப்படித்தான் என சொல்லி ஆன்மீகத்தில் எந்த விதியும் கிடையாது. உங்கள் கர்மா என்ற ஆறு ஓடும் திசைக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக வாழ்க்கையை தேர்தெடுத்தல் நலம். ஆன்மீகத்தில் எதிர்நீச்சல் உதவாது..!

இந்த பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். அதன் நடுவில் எழுதிய ரமணரின் வரிகள் உங்களுக்கு பதிலாக அமையும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவா,

//பகவான் ரமணரின் மகாவாக்கியத்தை படிக்கும் பொழுது என் நினைவில் வந்த ஒரு திரைப்பட வரிகள் "கிடைக்கிறது கிடைக்காம இருக்காது , கிடைக்காம இருக்கிறது கிடைக்காது... " //

திரைப்படத்தில் வரும் பஞ்ச் டயலாக் எல்லாம் ஆன்மீக வார்த்தைகளால் ஆனது என்பது எனக்கு நீங்கள் சொல்லியே தெரிகிறது. :)

மாற்றி யோசி என்ற யுக்தியில் இனிமேல் சினிமாவை பார்த்தால் ஆன்மீகத்தை நினைத்துக்கொள்ளுங்கள்.


//இந்த வரிகள் ஒருவிதத்தில் நாம் எதையும் முயற்சி செய்வதற்கு கூட தடையாக இருக்குமோ என்று தோன்றுகிறது ஸ்வாமி. நாம் ஏன் வீணாக முயற்சி செய்ய வேண்டும், இது நடக்காது என்று இருந்தால் நாம் என்ன முயற்சி செய்தாலும் நடக்க போவதில்லை... இதை எப்பாடு எடுத்துகொள்வது ஸ்வாமி.//

நம் கண்ணோட்டம், அஹங்காரத்தின் நிலை இதுவே நம்மை இப்படி சிந்திக்க சொல்லும்.

நம் முயற்சி என்பது நமக்கு சாத்தியபட்ட விஷயத்தில் தான் இருக்க வேண்டும். அதுவே இதில் கூறப்பட்ட விஷயத்தில் அடிப்படை.
ஒரு குழந்தை தன் தந்தையின் இருப்பில் இருக்கும் பொழுது தானாக எதை செய்யவும் முயலுவதில்லை. அதுபோல இறைவனில் ஆற்றலில் மூழ்கி இருக்கும் பொழுது அஹங்காரம் இல்லாத காரணத்தால் சாத்தியமானவைகளையே முயலும் நோக்கம் ஏற்படும்.

எது சாத்தியமோ அதுவே நாம் செய்ய வேண்டும். நம் வாழ்க்கையில் அமைந்த விஷயங்களுக்கு முயலவேண்டும்.
அமெரிக்க ஜனாதிபதியாக நான் முயலக்கூடாது. நான் நானாக இருக்க முயலவேண்டும்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு yrskbalu,

//தன்னம்பிக்கை பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள் - ஒரு மனிதனின் விடாமுயற்சி, உழைப்பு, திறமை, Positive approach மூலம் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று. இது சரியான கருத்தா?//

மன மயக்கத்தில் இருக்கும் நவநாகரீக ஆசாமிகளுக்கு இந்த பயிற்சியாளர்கள் தேவைப்படுகிறார்கள். பயிற்சிகாலத்தில் நமக்கு ஒரு போலியான உத்வேகம் கொடுக்க அவர்கள் மனமயக்கம் செய்கிறார்கள் என்பதே உண்மை. தற்காலத்தில் சில கார்ப்ரேட் குருமார்கள் ஆன்மீக போர்வையில் இதையே செய்கிறார்கள்.

ஒன்று நீங்கள் சிந்திக்க வேண்டும். தன்னம்பிக்கை பயிற்சியில் ஈடுபட்ட அனைவரும் ஏன் வெற்றியாளர்கள் ஆவதில்லை? தன்னம்பிக்கை பயிற்சியாளர் ஏன் பயிற்சியாளராக இருக்கிறார்? அவர் ஒரு சிறந்த தொழிலதிபராக வெற்றியடைய கூடாதா?


// வெற்றி, தோல்விகளை நிர்ணயிப்பது ஜாதகத்திலுள்ள கிரகநிலைகளா? அல்லது மனிதனின் விடாமுயற்சி, திறமை, உழைப்பு ஆகியவையா?//

கிரஹங்கள் மனிதனின் சாத்தியங்களையும் கர்மாக்களின் தன்மையையும் கூறுகிறது.

விடாமுயற்சி, திறமை, உழைப்பு
இவை எல்லாம் ஒருவருக்கு இருக்குமா இல்லை சின்ன சங்கடமே அவரிடம் இருந்து இவற்றை குறைக்குமா என ஜாதகத்தில் தெரியும்.

ஆன்மீக நிலையில் இவற்றை உணர்ந்து கொண்டால் கர்மாவை அடுத்த நிலைக்கு இட்டு செல்ல வசதியாக இருக்கும்.

ஸ்வாமி ஓம்கார் said...

அப்துல்லா அண்ணே..

//
ஓட்டகத்தைக் முதலில் கட்டிப்போட்டுவிட்டு பின்பு தொலைந்துவிடாது இருக்க இறைவனைப் பிராத்தியுங்கள்.
-முகமது நபிகள்

கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
-இயேசுபிரான்
//

மேற்கண்ட வரிகள் ஆன்மீக கருத்துகள் நிறைந்தது. அதை மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தெரியும்.

உதாரணமாக அண்ணல்(ஸல்) அவர்களின் கருத்தில் இருக்கும் ஒட்டகத்திற்கு பதில் ‘மனம்' என்ற வார்த்தையை மாற்றி படித்துப்பாருங்கள்.

ஏசுவின் கருத்துக்களும் இது போன்றதுதான்.

நாம் மஹாவாக்கியங்களை குறுஞ்செய்தியாக அனுப்பும் அளவுக்கே உணர்கிறோம். :)


//
மிச்சத்த சாமி சொல்லுவாரு :)
//

உங்கள் கட்டளையை செவ்வன நிறைவேற்றிவிட்டேன் :)

அப்ரண்டிஸ்
ஸ்வாமி ஓம்கார் :))

krish said...

"ஒன்று நீங்கள் சிந்திக்க வேண்டும். தன்னம்பிக்கை பயிற்சியில் ஈடுபட்ட அனைவரும் ஏன் வெற்றியாளர்கள் ஆவதில்லை? தன்னம்பிக்கை பயிற்சியாளர் ஏன் பயிற்சியாளராக இருக்கிறார்? அவர் ஒரு சிறந்த தொழிலதிபராக வெற்றியடைய கூடாதா?"
Not all of them are material gurus. Think and Grow Rich is not for money richness only.

Siva Sottallu said...

திரு அப்துல்லா ,

// ஓட்டகத்தைக் முதலில் கட்டிப்போட்டுவிட்டு பின்பு தொலைந்துவிடாது இருக்க இறைவனைப் பிராத்தியுங்கள். //

உங்கள் கருத்துக்க மிக்க நன்றி. நீங்கள் சொல்ல வந்ததை நான் உணர்தேன் என்று நினைக்கிறன்.

First do your BEST, leave the rest to God.

தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஸ்வாமி.
// நம் முயற்சி என்பது நமக்கு சாத்தியபட்ட விஷயத்தில் தான் இருக்க வேண்டும். //

இந்த வரிகளே என் கேள்விக்கு விடை கொடுத்துவிட்டது.

// ஒட்டகத்திற்கு பதில் ‘மனம்' என்ற வார்த்தையை மாற்றி படித்துப்பாருங்கள் //

நன்கு ரசித்து மீண்டும் படித்து பார்த்தேன் ஸ்வாமி.

// தன்னம்பிக்கை பயிற்சியாளர் ஏன் பயிற்சியாளராக இருக்கிறார்? //
ஸ்வாமி இது " உலக கோப்பை வென்ற அணியின் பயிற்சியாளர் எத்தனை உலக கோப்பை வென்றார் என்று கேட்பது போல் உள்ளதே?"

தனது பயிற்ச்சியால் பிறருக்கு நம்பிக்கை ஊட்டி முன்னுக்கு கொண்டுவர முடியும் என்பதில் இவர் தன்னம்பிக்கை வைத்திருக்கலாம் இல்லையா ஸ்வாமி?

பிரகாசம் said...

நேற்று 29-08-2009 இந்தப் பவளக்குன்று ஆலயம் சென்றிருந்தேன்(தற்செயலாகத் தங்கள் பதிவுகளைப் படித்தபின்புதான் இந்த இடம் பற்றித்தெரியும்). தாங்கள் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை.

இங்கு காலை 7.30 மணி முதல் 1மணி நேரம் மட்டுமே ஆலயம் திறந்திருக்கும் என்றும் மாலையில் திறப்பதில்லை என்றும் தெரிவித்தார்.