Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, July 13, 2024

மஹா கும்பமேளா 2025

அஞ்ஞானத்தை உதாரணமாக கூற கண்ணில்லாதவர்கள் யானையை பார்த்த கதையை சொல்லுவார்கள். ஒருவன் முறம் என்றான் மற்றொருவன் தூண் என்றான் காரணம் அவர்களுக்கு கண்கள் இல்லை. இதுபோலவே ஞானத்திற்கு உதாரணம் சொல்லுவதானால் இறைவன் ஒருவனாக இருந்தாலும் ஞானிகள் இறைவனை பல்வேறு தளத்தில் கண்டார்கள்.


ஒருவர் எனக்கு கடவுள் எஜமானன் என்றார் மற்றொரு ஞானி ஒளி வடிவமானவர் என்றார். இன்னும் சில ஞானியரோ நானே அது என்றனர்.

ஞானம் கொண்டவர்களும் இறைவனை பல்வேறு பாவனையில் உணர்கிறார்கள். அதுபோல கும்பமேளா என்ற மகத்தான நிகழ்வு பல்வேறு வடிவில் பார்க்கப்படுகிறது.




புராணம்

நமது கலாச்சாரத்தில் உருவாகிய புராணங்கள் என்பது விஞ்ஞான மற்றும் மெய்ஞான கருத்துக்களை எளிய வடிவில் புரிய வைக்கும் கருவியாக இருக்கிறது. பதினெட்டு புராணங்களில் பல இடங்களில் ஒரே கூற்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டு இருக்கிறது. அது பால் கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் சம்பவம்.

பால்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் பொழுது அதில் இருந்து சில துளிகள் பூமியில் விழுந்தது. அந்த அமிர்த துளிகள் விழுந்த இடங்கள் கும்ப மேளா நடக்க காரணமாக இருக்கிறது.

ஹரித்துவார், நாசிக், உஜ்ஜயின் மற்றும் ப்ரயாகை ஆகிய இடங்களில் அமிர்த துளிகள் விழுந்ததாக கருதப்படுகிறது. பால் கடலை கடைந்து எடுத்த அமிர்த துளிகள் விழுந்த பின் மூன்று வருடத்திற்கு ஒரு முறை அமிர்த துளிகள் குறிப்பிட்ட நாளில் மேலோங்கி இருக்கிறது. அத்தருணத்தில் நதிகளில் புனித நீராடினால் அந்த அமிர்தத்தை நாமும் அடையலாம் என்கிறது புராண குறிப்புகள்.

புராணத்தில் குறிப்பிடப்படும் அம்ரிதம் என்றால் என்ன என தெரிந்து கொள்வோம். மிருதம் என்றால் இறப்பு. அமிர்தம் என்றால் இறப்பற்ற நிலை.  பாவ புன்ணியங்களை கடந்து இறப்பற்ற நிலைக்கு செல்லுவதற்கு கும்பமேளாவில் நீராடவேண்டும் என்பது பாரத தேசத்தில் பலருக்கும் நம்பிக்கையாக இருக்கிறது.

ஹரிதுவார், நாசிக் மற்றும் உஜ்ஜயினில் நடைபெறும் நிகழ்வு கும்பமேளா என்றும் ப்ரயாக் ராஜ் என்ற இடத்தில் நடைபெறுவது மஹா கும்ப மேளா என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் திருவேணி சங்கமம் என அழைக்கப்படும் கங்கா யமுனா மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம் ப்ரயாகையில் மட்டுமே உண்டு. பிற கும்ப மேளா இடங்களில் நதிகள் உண்டு புண்ணிய நீராடுவதற்கு ஆனால் திருவேணி சங்கமம் ப்ரயாகையில் மட்டுமே இருப்பதால் இங்கே நடைபெறும் கும்ப மேளா , மஹா கும்ப மேளா என அழைக்கப்படுகிறது.

யஜுர் வேதம் மற்றும் இதிகாசங்களில் கும்பமேளா பற்றிய குறிப்புகள் உண்டு. சனாதன தர்மம் மற்றும் அல்லாமல் புத்த மதம், ஜைன மதம் மற்றும் சீக்கிய மதங்களில் கும்பமேளா குறிப்புகளை காணலாம். பல மதங்கள் ஒன்றாக உணர்ந்த நிகழ்வு என்பதற்கு இது ஒர் சான்று.

கும்ப மேளா என்பது மூன்று வருடத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட இடங்களில் வரும் நிகழ்வு. ஆனாலும் கூட ஒவ்வொரு வருடமும் நான்கு முக்கிய இடங்களிலும் தை மாசி மாதங்களில் மகா மேளா என வைபவம் கொண்டாடப்படுகிறது.

புராண குறிப்புகள் தவிர உலக பயணிகள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு உட்பட்ட ஐநூறு வருட கால குறிப்புகள் கும்ப மேளா பற்றிய வரலாற்று பதிவுகள் தற்சமயம் உண்டு.

புராண ரீதியாக கும்பமேளாவின் தொன்மையை உணர்ந்தோம்.

சாஸ்திரங்களில் முக்கியமான சாஸ்திரமான ஜோதிட மற்றும் யோக சாஸ்திரத்தின் வழியில் கும்பமேளாவை தெரிந்துகொள்வோம்.

(தொடரும்)

Thursday, July 11, 2024

மஹா கும்ப மேளா 2025

உலகில் நடக்கும் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழா…!!


ஒரு குழுவோ அல்லது மனிதர்களோ ஒருங்கிணைக்காமல் நடைபெறும் திருவிழா…!


கோவில்கள் இல்லாத இடத்தில் நடக்கும் ஆன்மீக கொண்டாட்டம்.


இறைத்தூதரோ அல்லது மதமோ சம்பந்தம் இல்லாத நிகழ்வு


பூமியில் அதிக மக்கள் கூடும் பெரும் விழா


வானில் ஏவிய செயற்கைக் கோள்கள் கூட இத்தனை மனித கூட்டமா என கவனிக்கும் நிகழ்வு


உலக வரலாற்றில் பெரும் போர்கள் நடக்கும் சமயத்தில் மட்டும் தான் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் அல்லது இடம் பெயர்வார்கள். ஓர் அமைதியான ஆன்மீக விழாவுக்கு கோடிக்கணாக மக்கள் அழைப்பிதழ் இன்றி கூடுவது உலக வரலாற்றில் இங்கே மட்டும் தான்.


வடக்கில் காஷ்மீரம், தெற்கில் தமிழகம், மேற்கில் ராஜஸ்தான் மற்றும் குஜராத், கிழக்கில் அசாம் என வெவ்வேறு மனிதர்கள் பல்வேறு கலாச்சார மொழி கொண்டவர்கள் வசிக்கிறார்கள். இத்தகைய இந்திய பெரும் நிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மொழி, இன, கலாச்சார பேதம் இன்றி மக்கள் அலை அலையாக வரும் ஓர் பெரும் நிகழ்வு.


பல நூற்றாண்டு காலமாக மேற்கண்ட முறையில் இடைவிடாமல் ஒரு நிகழ்வு அதுவும் பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுகிறது.


அது தான் மஹா கும்பமேளா….


கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கம் என்ற இடத்தில் ப்ரயாக் ராஜ் என்ற ஊரில் பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு தான் மஹா கும்பமேளா.


கும்பமேளா என்பது என்ன? 

உண்மையில் கும்பமேளா நமக்கு அவசியமான நிகழ்வா?

அது ஏன் உத்திர பிரதேசத்தில் ப்ரயாக் ராஜ் என்ற இடத்தில் நடைபெற வேண்டும்?

அடுத்த கும்பமேளா எப்பொழுது?


கும்பமேளாவின் வகைகள் மற்றும் சாஸ்திர பின்புலம் என்ன என வரும் பகுதிகளில் தெரிந்துகொள்வோம்.


(தொடரும்…)


Friday, May 10, 2024

ஐஸ்வர்ய திருமுடி

 

பொருள் தேடும் உலகில் பலருக்கு பொருள் தேவை இருக்கிறது.  இந்த உலகு பொருளை ஆதாரமாக கொண்டு சுழலுகிறது. அதனால் தான் பொருளாதார நிலை என்கிறோம்.

பொருளை தேடி போகாதே என சிலர் வறட்டு தனத்தை வாழ்க்கையில் உருவாக்குகிறார்கள்.மேலும் சிலரோ அத்தனைக்கும் ஆசைப்பட சொல்லி கிளறிவிட்டு குளிர்காய்கிறார்கள். மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என சொல்லுவதை போல பணம் வேண்டாம் என முடிவு செய்வதும், அத்தனை பணமும் எனக்கு வேண்டும் என சொல்லுவதும் வெவ்வேறு துருவங்கள், இரண்டுமே நமக்கு அவசியம் இல்லை. இதில் நமது வாழ்க்கை என்பது மையத்தில் இருக்கிறது. வெப்பமா குளிரா என கேட்டால் இரண்டும் வேண்டாம், இதமான தென்றல் வீசும் வானிலை தான் வேண்டும் என சொல்ல வேண்டும்.    

பொருளாதாரம் என்பது வாகனத்தில் இருக்கும் பெட்ரோல் போல ஒரு எரி சக்தியாகும். இது இல்லை என்றால் வாழ்க்கை என்ற வாகனம் இயங்காது. இதுவே மிகவும் அதிகமானால் அந்த வாகனமே எரிந்து போக வாய்ப்பு உண்டு.

சூரிய சக்தியை உதாரணமாக கொண்டால் தினமும் சூரிய ஒளி எல்லா இடங்களிலும் விழுகிறது. அந்த இடத்திற்கு தக்க விளைவை ஏற்படுத்துகிறது. தாவரத்தில் விழும் இடங்களில் அது தாவர சக்தியாக மாறுகிறது. இதுவே குப்பைகளில் விழும் பொழுது குப்பையை மக்க செய்து உரமாக மாற்றுகிறது. அதே சூரிய ஒளி நம் வைத்திருக்கும் சூரிய ஒளி தகடுகளில் விழும் பொழுது மின்சார சக்தியாக மாறுகிறது.

லஷ்மி அருள் என்றும் அனைத்து பொருளிலும் இருக்கிறது. அனைத்திலும் விழும் அருள் ஒளியானது அதற்கு ஏற்ப காரிய சித்தியை அளிக்கிறது. சூரிய ஒளி தகடுகளில் சூரிய ஒளியை மின்சாரமாக நமக்கு தேவைக்கு ஏற்ப மாற்றுவதை போல லஷ்மியின் அருளை நமது வாழ்க்கையின் அவசியத்திற்கு ஏற்ப சேமிக்க முடியுமா? அதற்கு ஏதேனும் கருவிகள் உண்டா? உண்டு வாருங்கள் லஷ்மி அருளை சேமிக்கும் ஒரு உன்னத பொருளை பற்றி கூறிகிறேன்.

பொருளாதார ஆகர்ஷணம் என்ற சூட்சமம் பலருக்கு புரியாத ஒரு விஷயம். லஷ்மியின் அருள் கொண்ட வலம்புரி சங்கு போன்ற பல ஆன்மீக பொருளை வீட்டில் வைத்திருந்தால் லஷ்மியின் அருள் கிடைக்கும் எனபது பலரின் நம்பிக்கை. வலம்புரி சங்கு போல பல விஷயங்கள் நமது சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ளது.

இயற்கையாக கிடைக்கும் ஆன்மீக பொருட்கள் சக்தியூட்டப்பட்ட நிலையில் அமைகிறதா என பலருக்கு தெரிவதில்லை. கடையில் அலங்கார பொருள் வாங்குவது போல வாங்கி வைத்துவிடுகிறார்கள். விளைவுகள் எதுவும் இல்லை என்றாலும் நம்பிக்கையின் காரணமாக வைத்து வழிபடுகிறார்கள்.

பொருளாதார ஆகர்ஷணத்திற்கு லஷ்மி அருளை சேமிக்கும் ஆற்றல் கொண்டது எது எனக்கேட்டால் ஐஸ்வர்ய திருமுடி என்பதே சரியான பதில் ஆகும்.

ஐஸ்வர்ய திருமுடி

ஓம்கார ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் யந்திரேஸ்வரி எனும் மஹா சக்தி இதற்கு அருள்செய்கிறது. மகா சக்தி அருள் ஸ்ரீ மேரு என்ற வடிவில் ஸ்ரீசக்ரத்தின் முப்பரிமாண ரூபமாக விளங்குகிறது. அஷ்ட லஷ்மியாகவும் மஹாவித்யாவின் வடிவிலும் பிரபஞ்ச அன்னை யந்திரேஸ்வரியாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை ஏழு மணிக்கு ஸ்ரீ மேரு பூஜை நடை பெறுகிறது. ஸ்ரீ மேரு பூஜையில் 108 தங்க முலாம் பூசப்பட்ட செப்புக்காசுகளை கொண்டு ஸ்ரீமேரு அர்ச்சனை செய்யப்படுகிறது.
 

108 திருக்காசுகளால் அர்ச்சனை செய்யப்பட்டதும் யந்திரேஸ்வரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. திருக்காசுகள் ஆர்ச்சனை செய்யப்பட்டதும் லஷ்மி அருளை ஆகர்ஷணம் செய்யும் கருவியாக மாறுகிறது. திருக்காசுகளை வீடு மற்றும் வியாபார ஸ்தலத்தில் வைத்திருக்கும் பொழுது, லஷ்மி ஆகர்ஷணமாக செயல்பட்டு நமது பொருளாதார நிலையை எப்பொழுதும் வளர்ச்சி நிலையில் வைத்திருக்கும்.

108 திருக்காசுகள் நாணய வடிவில் அமைத்திருக்கிறது. ஒரு புறம் கஜ லட்சுமி வடிவமும், மறு புறம் ஸ்ரீ சக்ரத்தையும் கொண்ட நாணயம் முழுமையான சக்தியை நிலை நிறுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது. ஸ்ரீ மேரு வடிவம் முப்பரிமாணம் என்றால் ஸ்ரீ சக்ர வடிவம் இரு பரிமாணங்களை கொண்ட யந்திர வடிவமாகும். ஸ்ரீ சக்ர வடிவில் லஷ்மியின் ஆற்றலை சேமிக்கும் கருவியாக நாணயங்கள் அமைகிறது.


108 திருக்காசுகளை ஒரு பேழையில் வைத்து வணங்கி வருவதன் மூலம் அதன் ஆகர்ஷண தன்மையை உணர முடியும்.கற்பக விருக்‌ஷம் என்ற கேட்டதை வரமாக அளிக்கும் தெய்வீக விருக்‌ஷத்தை அடையாளமாக கொண்ட பேழைகள் திருக்காசுகளை தாங்கி நிற்கிறது. 108 திருக்காசுகள் ஒருங்கிணைந்த பெட்டி ஐஸ்வர்ய திருமுடி என அழைக்கப்படுகிறது. யந்திரேஸ்வரியின் ஆற்றலை பிரதி எடுத்து நமது இல்லத்தில் வைப்பதற்கு சமமான செயல் ஐஸ்வர்ய திருமுடியை நாம் வைத்திருப்பதாகும். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் புதிய இல்லம் அல்லது வியாபார ஸ்தலங்களில் நாம் இதை பரிசாக கொடுப்பதன் மூலம் விளக்கமுடியாத வளர்ச்சி நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு கிடைக்கும்.

ஓம்கார ஆலயத்தில் இருக்கும் யந்திரேஸ்வரிக்கு வாரம் ஒரு முறை என வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பூஜை செய்யப்படுவதால் வருடத்திற்கு 52 ஐஸ்வர்ய திருமுடி மட்டுமே கிடைக்கும். முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.

ஐஸ்வர்ய திருமுடியை பெற விரும்பும் நபர்கள் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி  எண்  தத்த நாத் - +91 98401 87486


Thursday, June 8, 2023

செங்கோல்..! செங் - கோள்


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.


சிவனை வணங்கும் ஒருவருக்கு நவக்கிரகங்கள் கேடு செய்யாது என துவங்கும் கோளரு பதிகத்தை பாடி மதுரை ஆதீனகர்த்தா செங்கோலை பிரதமருக்கு வழங்கினார். செங்கோல் பெற்ற நாள் முதல் செம்மையான ஆட்சி மலர்ந்ததோ இல்லையோ பல சர்ச்சைகள் புறப்பட்டு வந்தவண்ணம் இருக்கிறது.


 தமிழ்நாட்டின் ஆதீனங்கள் ஒன்றிணைந்து சென்ற வாரம் பிரதமருக்கு அளித்த செங்கோல் தற்பொழுது சர்ச்சைக்கோலாக மாறி இருக்கிறது. அப்படி என்ன சர்ச்சை என்றால் செங்கோல் வழங்கப்பட்ட பிறகு இருநூறு பேரை பலி கொண்ட ரயில் விபத்து நிகழ்ந்தது. இதற்கு காரணம் அந்த செங்கோல் தான் என்கிறார்கள். விவாதங்கள் எத்திசையிலும் பறக்கிறது. 


பல ஜோதிடர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவர்களின் அறிவை தொலைக்காட்சி விவாதங்களில் சிதற விடுகிறார்கள். நிமித்தம் சரியில்லை, ஏதோ இறைவன் ரயில் விபத்தால் சொல்ல துடிக்கிறார். அடுத்த தேர்தலில் மோடி பிரதமராக மாட்டார் அதனால் செங்கோலை இனி அவர் கண்களால் பார்க்கக்கூடாது என இப்படி பலவகையான விவாதங்கள் மற்றும் வியாக்கியானங்கள்.


செங்கோல் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமா? கேரளாவில் ரயில் தண்டவாளத்தில் விரிசல், தனியார் சரக்கு ரயில் தடம் புரண்டது என ரயில் வண்டி பிரச்சனையாக கடந்த மூன்று நாட்களாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது. 


செங்கோலை பிரதமரிடம் கொடுத்தார்களா இல்லை ஏதேனும் ரயில் தண்டவாளத்தில் நெம்புகோலாக கொடுத்தார்களா என ஐயம் ஏற்படும் அளவுக்கு ரயில் விபத்து சர்ச்சைகளை சுமந்துகொண்டு இருக்கிறது செங்கோல்.


செங்கோல் என்பது இத்தகைய விளைவை ஏற்படுத்துமா என சாஸ்திரங்களின் வாயிலாக பார்ப்போம். முதலில் செங்கோல் என்பது ஆட்சியாளர்களின் அடையாளமாக இருக்கிறது. மன்னராட்சி காலத்தில் அதிகாரத்தின் அடையாளமாக, அரசன் செல்ல முடியாத சூழலில் செங்கோலை மன்னனாக பாவித்து முடிவுகள் எடுப்பார்கள். மக்கள் ஆட்சிகாலத்தில் மேயர் முதல் நீதிபதிகள் வரை அவர்களின் அடையாளச்சின்னமாக இருந்தாலும் அவர்களுக்கு இணையாக செங்கோலை பயன்படுத்த முடியாது.


தமிழ் நாட்டின் மேல் பற்றுக்கொண்ட பிரதமர் ஆதீனங்கள் கொடுத்த ஒரு மரியாதையை பெற்றுக்கொண்டார் என்ற அளவிலேயே இதை பார்க்க வேண்டும். பிரதமர் பதவி ஏற்கும் விழாவில் இத்தகைய செங்கொல் அளிக்கப்பட்டால் அதற்கு ஒருவகை முக்கியத்துவம் உண்டு என கருதலாம். புதிய பாராளுமன்றத்தில் இருக்கும் மற்றும் ஒரு அலங்காரப்பொருள் என்பதை தவிர செங்கோலுக்கு வேறு முக்கியத்துவம் எதுவும் இல்லை. 


பல கோவில்களில் மரியாதை ஏற்பதற்காக பரிவட்டம் கட்டியதால் ஊர் பெரியவருக்கு முடி உதிர்ந்து வழுக்கையானது என கிராமத்தில் பேசுவதற்கு சமமானது செங்கொல் நாட்டில் தீமைகளை ஏற்படுத்துகிறது என பேசுவது. கோவிலுக்கு செல்லும் ஊர் முக்கியஸ்தருக்கு செய்யும் மாலை மரியாதையை போன்றது செங்கோல் என்பதை தவிர அதில் அர்த்தம் கொள்ள ஏதும் இல்லை.


செங்கோல் ரயில் விபத்துக்கு காரணம் என பல ஜோதிடர்கள் விவாதிப்பதை பார்க்க முடிகிறது. மதுரை ஆதீனம் அவர்கள் கோளரு பதிகம் பாடி செங்கோலை பாரத பிரதமருக்கு வழங்குகிறார். ஜோதிடர்  கண்ணோட்டத்தில் பார்த்தோம் என்றால் கோளரு பதிகம் பாடிய பின் கோளாரு வந்திருக்க கூடாது. திருஞான சம்பந்தருக்கும் , சம்பந்தரின் வழிவந்த ஆதீன கர்த்தருக்கும் தெரியாத புதிய மெய்யறிவு ஜோதிடர்களுக்கு இருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.


ஜோதிட சாஸ்திரத்தில் முண்டேன் ஜோதிடம் என்ற ஒரு வகை உண்டு. இயற்கை சீற்றங்கள், குழு மரணங்கள் (group death) , பேரிடர் இவற்றை முன்பே கணிக்க உதவும் ஜோதிட வகையாகும். 


செவ்வாய் விபத்துக்கான கிரகம், சூரியன் அரசை குறிக்கும் கிரகம், குரு ஆட்சியாளர்களை குறிக்கும். இப்படி ஒன்பது கிரகங்களும் ராசிமண்டலத்தில் இருக்கும் அமைப்பை கொண்டு ஒரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிர்கால பலனை சொல்லும் தன்மை முண்டேன் ஜோதிடத்திற்கு உண்டு. 


புதன் என்ற கிரகம் ரயில் பெட்டி மற்றும் ரயில் போக்குவரத்தை குறிக்கும்.   ஜூன் இரண்டாம் தேதி  ராகு கேது என்ற தீய விளைவுகளை ஏற்படுதும் கிரகங்களுக்கு இடையே புதன் என்ற கிரகம் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறது. ராகு கேது மற்றும் புதன், சந்திரன் ஆகியவை மேஷ துலா ராசிகளில் ஒன்றிணைந்த காலத்தில் ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்தது. இத்தகைய கிரக சஞ்சாரம் செங்கோல் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நிகழும். 

 

ஜூன் 8ஆம் தேதி வரை ரயில் சார்ந்த விபத்து செய்தி நமக்கு கிடைத்த வண்ணம் இருக்கும். பெரிய விபத்துகளுக்கு சாத்தியம் இல்லை என்றாலும் புதன் மேஷ ராசியை விட்டு நீங்கும் வரை தண்டவாளம் பாதுகப்பு குறைந்தே இருக்கும். ஜூன் 13ஆம் தேதி முதல் சந்திரன் மீண்டும் ராகு கேதுவுக்கு இடையே நுழைகிறார். இந்த முறை புதன் மேஷ ராசியில் இருந்து நகர்ந்துவிடுவார் அதனால் ரயிலில் விபத்து நடக்காது. ராகு கேதுவுக்கு இடையே சந்திரனுடன் குரு அமர்வதால் விமான விபத்துக்கள் ஹெலிகாப்டர்கள் விபத்து நடக்கும் வாய்ப்பு உண்டு. அரசியல் தலைவர்கள் விபத்தில் சிக்க நேரலாம். இதற்கும் செங்கோல் காரணம் என கிடைத்த கேஸ் எல்லாம் எளியவர்கள் மேல் எழுதுவதை போன்றது இது.


இரவு பகல் எப்படி இயல்பானதோ அது போல கிரகங்களின் நல்ல மற்றும் தீய பலன்கள் சமூகத்திற்கு நன்மையும் தீமையையும் கலந்தே அளிக்கிறது. ஜோதிட ரீதியாக கிரகங்கள் என்ற நவகோள்கள் விபத்துக்கு காரணமே தவிர செங்கோல் அல்ல..! காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததை போல என்பார்கள் இது குருவி உட்கார பலாப்பழமே விழுந்தது போன்று இருக்கிறது.


தமிழக ஆதீனங்கள் கொடுத்த செங்கோல் டில்லியில் பிரதமார் வாங்கினார் என்றால் ஒடிசாவில் எப்படி விபத்து நடக்கும் என கொஞ்சம் சிந்திக்க வேண்டும். 

 

அரசியல் மற்றும் ஜாதீய காழ்புணர்வு ஆகியவையே இத்தகைய சர்ச்சைக்கு காரணமாக இருக்கிறது. செங்கோல் என்பது ஒரு காரணம் மட்டுமே. இதில் ஜோதிடர்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை.