Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, July 13, 2024

மஹா கும்பமேளா 2025

அஞ்ஞானத்தை உதாரணமாக கூற கண்ணில்லாதவர்கள் யானையை பார்த்த கதையை சொல்லுவார்கள். ஒருவன் முறம் என்றான் மற்றொருவன் தூண் என்றான் காரணம் அவர்களுக்கு கண்கள் இல்லை. இதுபோலவே ஞானத்திற்கு உதாரணம் சொல்லுவதானால் இறைவன் ஒருவனாக இருந்தாலும் ஞானிகள் இறைவனை பல்வேறு தளத்தில் கண்டார்கள்.


ஒருவர் எனக்கு கடவுள் எஜமானன் என்றார் மற்றொரு ஞானி ஒளி வடிவமானவர் என்றார். இன்னும் சில ஞானியரோ நானே அது என்றனர்.

ஞானம் கொண்டவர்களும் இறைவனை பல்வேறு பாவனையில் உணர்கிறார்கள். அதுபோல கும்பமேளா என்ற மகத்தான நிகழ்வு பல்வேறு வடிவில் பார்க்கப்படுகிறது.




புராணம்

நமது கலாச்சாரத்தில் உருவாகிய புராணங்கள் என்பது விஞ்ஞான மற்றும் மெய்ஞான கருத்துக்களை எளிய வடிவில் புரிய வைக்கும் கருவியாக இருக்கிறது. பதினெட்டு புராணங்களில் பல இடங்களில் ஒரே கூற்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டு இருக்கிறது. அது பால் கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் சம்பவம்.

பால்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் பொழுது அதில் இருந்து சில துளிகள் பூமியில் விழுந்தது. அந்த அமிர்த துளிகள் விழுந்த இடங்கள் கும்ப மேளா நடக்க காரணமாக இருக்கிறது.

ஹரித்துவார், நாசிக், உஜ்ஜயின் மற்றும் ப்ரயாகை ஆகிய இடங்களில் அமிர்த துளிகள் விழுந்ததாக கருதப்படுகிறது. பால் கடலை கடைந்து எடுத்த அமிர்த துளிகள் விழுந்த பின் மூன்று வருடத்திற்கு ஒரு முறை அமிர்த துளிகள் குறிப்பிட்ட நாளில் மேலோங்கி இருக்கிறது. அத்தருணத்தில் நதிகளில் புனித நீராடினால் அந்த அமிர்தத்தை நாமும் அடையலாம் என்கிறது புராண குறிப்புகள்.

புராணத்தில் குறிப்பிடப்படும் அம்ரிதம் என்றால் என்ன என தெரிந்து கொள்வோம். மிருதம் என்றால் இறப்பு. அமிர்தம் என்றால் இறப்பற்ற நிலை.  பாவ புன்ணியங்களை கடந்து இறப்பற்ற நிலைக்கு செல்லுவதற்கு கும்பமேளாவில் நீராடவேண்டும் என்பது பாரத தேசத்தில் பலருக்கும் நம்பிக்கையாக இருக்கிறது.

ஹரிதுவார், நாசிக் மற்றும் உஜ்ஜயினில் நடைபெறும் நிகழ்வு கும்பமேளா என்றும் ப்ரயாக் ராஜ் என்ற இடத்தில் நடைபெறுவது மஹா கும்ப மேளா என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் திருவேணி சங்கமம் என அழைக்கப்படும் கங்கா யமுனா மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடம் ப்ரயாகையில் மட்டுமே உண்டு. பிற கும்ப மேளா இடங்களில் நதிகள் உண்டு புண்ணிய நீராடுவதற்கு ஆனால் திருவேணி சங்கமம் ப்ரயாகையில் மட்டுமே இருப்பதால் இங்கே நடைபெறும் கும்ப மேளா , மஹா கும்ப மேளா என அழைக்கப்படுகிறது.

யஜுர் வேதம் மற்றும் இதிகாசங்களில் கும்பமேளா பற்றிய குறிப்புகள் உண்டு. சனாதன தர்மம் மற்றும் அல்லாமல் புத்த மதம், ஜைன மதம் மற்றும் சீக்கிய மதங்களில் கும்பமேளா குறிப்புகளை காணலாம். பல மதங்கள் ஒன்றாக உணர்ந்த நிகழ்வு என்பதற்கு இது ஒர் சான்று.

கும்ப மேளா என்பது மூன்று வருடத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட இடங்களில் வரும் நிகழ்வு. ஆனாலும் கூட ஒவ்வொரு வருடமும் நான்கு முக்கிய இடங்களிலும் தை மாசி மாதங்களில் மகா மேளா என வைபவம் கொண்டாடப்படுகிறது.

புராண குறிப்புகள் தவிர உலக பயணிகள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு உட்பட்ட ஐநூறு வருட கால குறிப்புகள் கும்ப மேளா பற்றிய வரலாற்று பதிவுகள் தற்சமயம் உண்டு.

புராண ரீதியாக கும்பமேளாவின் தொன்மையை உணர்ந்தோம்.

சாஸ்திரங்களில் முக்கியமான சாஸ்திரமான ஜோதிட மற்றும் யோக சாஸ்திரத்தின் வழியில் கும்பமேளாவை தெரிந்துகொள்வோம்.

(தொடரும்)

0 கருத்துக்கள்: