Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, July 23, 2024

கும்பமேளா 2025

உலகில் நடக்கும் பெரும் ஆன்மீக கொண்டாட்டம் பற்றி பல்வேறு பரிமாணங்களில் பார்த்து வருகிறோம். புராணங்கள், ஜோதிடம் மற்றும் யோக சாஸ்திரத்தின் வாயிலாக ஓரளவு புரிந்துகொள்ள முடியும். கும்பமேளாவின் வரலாறு பற்றி நாம் தெரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

மஹா கும்பமேளாவின் விதை யார் போட்டது? அதன் துவக்கம் என்ன ? அதன் பின் வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் மேலோட்டமான வரலாறு போதாது.

வரலாறு தெரிந்துகொண்டாலும் அது நமக்கு முற்றிலும் புரியாது…!

ஒரு கிராமத்தில் அல்லது நதிக்கரை ஓரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்றால் அங்கே ஒரு கோவிலோ அல்லது கலாச்சாரமோ இருக்க வேண்டும். உதாரணமாக ஆடி அமாவாசை அன்று இராமேஸ்வரம் சென்றால் மக்கள் கூட்டமாக நீராடுகிறார்கள். அங்கே கோவிலும், சனாதன தர்மத்தின் கலாச்சாரமான நீர்த்தார் கடன் செலுத்துவதையும் காணலாம். ஆடி அமாவாசைக்கு இராமேஸ்வரத்தில் ஏன் கூட்டம் எனக்கேட்டால் எளிமையாக பதில் அளித்துவிடலாம்

பெளர்ணமிக்கு ஏன் திருவண்ணாமலையில் கூட்டம் வருகிறது? சனிப்பெயர்ச்சி அன்று திருநள்ளாருக்கு ஏன் கூட்டம் வருகிறது என கேட்டு வரலாறு புரிந்துகொள்ள முயற்சித்தால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும்

கோவில் இல்லாத இடத்தில், தங்கும் வசதிகளோ, கலாச்சார பின்னனிகளோ இல்லாத நதிகள் மட்டும் இருக்கும் மணல் வெளியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆயிரக்கணக்காணோர் கூடுகிறார்கள் என்றால் எது அவர்களை ஒருங்கிணைத்தது?  

குறிப்பிட்ட மதம் அல்லது இறைவழிபாடு செய்பவர்கள் தான் செல்வார்களா எனப்பார்த்தால் சைவம் மற்றும் வைணவம் துவங்கி அனைத்து கலாச்சாரத்தினரும் பாகுபாடு இன்றி கூடுகிறார்கள். இது என்ன வகையான கூட்டம்? எதற்காக கூடுகிறது? இந்த இடம் சைவர்களுக்கு சிவன் கோவிலோ, வைணவர்களுக்கு திவ்ய தேசமோ இல்லை. சாக்தர்களுக்கு அங்கே சக்திபீடமும் கிடையாது. ஜைனர்கள் மற்றும் சீக்கியர்களின் குருமார்களுக்கும் திரிவேணிக்கும் சம்பந்தம் இல்லை

பல வெளிநாட்டு வரலாறு மற்றும் மானுடவியல் அறிஞர்கள் குழப்பத்தில் கொண்டு சேர்த்தது இத்தகைய கேள்வி. ஏன் இவர்கள் கூடுகிறார்கள். வேற்றுமை கொண்ட கொள்கை உடையவர்கள் எப்படி ஒன்றாக நீராடி இரண்டு மாதங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக கொண்டாட முடிகிறது? பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூடுவதற்கு கூட கிரகங்களின் அமைப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் திரிவேணி சங்கமத்திற்கு எது இவர்களை ஈர்க்கிறது? முடிவில்லா விடையின் முடிவு தெரிந்துகொள்ள நாம் நமது உண்மையான வரலாறை தெரிந்துகொள்ள வேண்டும்.

கும்பமேளாவின் துவக்கப்புள்ளி உத்திரப்பிரதேசத்தில் உள்ள திரிவேணி சங்கமம் எனும் இடத்தில் துவங்கவில்லை. இந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மை.

 சரஸ்வதி நதி நாகரீகம்

இந்தியாவின் அகழ்வாராய்ச்சி வரலாறுகள் இந்திய பாரம்பரியத்தை பற்றி உணராத வெளிநாட்டினரால் உருவாக்கப்பட்டது. மேலும் சிந்து சமவெளி நாகரீகம் பற்றிய குறிப்புகள் அரசியல் சார்ந்து உருவாக்கப்பட்டது. இத்தகைய அகழ்வாராய்ச்சி வரலாற்றுக்கிடையே நம்மிடம் இருந்து விட்டுபோன வரலாறு சரஸ்வதி நாகரீகம் என்பதாகும்.

சரஸ்வதி நதி பள்ளத்தாக்கில் முதன் முதலில் வேதகால வாழ்க்கை முறை துவங்கியது. தற்சமயம் ராஜஸ்தான் என்ற மாநிலத்தில் இருக்கும் பெரும் பாலைவனம் ஒருகாலத்தில் நீர் மிகுந்த ஆற்று படுகையாக இருந்தது. அங்கே ஆன்மீக ஆற்றலுடன் ஓடிக்கொண்டிருந்தாள் சரஸ்வதி.

ரிக் மற்றும் யஜூர் வேதங்களில் சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது. சரஸ்வதி நதியின் கரையோரத்தில் மனித குலத்தில் மேன்மை பொருந்திய குழுவினர் வாழ்ந்து வந்தனர்.

அக்குழுவினரின் வேளாண்மை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவை உலகில் வாழ்ந்த மற்றும் தற்சமயம் வாழ்கின்ற மனிதர்களை விட மிகவும் மேம்பட்ட நிலையில் இருந்தது.

சரஸ்வதி பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் இல்லை. பாரத தேசத்தின் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்டவர்கள் இடப்பெயர்ச்சி அடைந்து அங்கே குழுவாக வாழ்ந்தார்கள்.

இக்குழுவினர்களாலேயே வேதம் மற்றும் சாஸ்திரங்கள் வலிமை பெற்று அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டது.

வேதம் என்பது ஒரு சொல் வார்த்தையான ஓம் என்ற சப்தத்தில் இருந்து வந்தது என்பதை போல இவர்கள் பல்வேறு பின்புலம் கொண்டவர்களானாலும் ஒரே வார்த்தையால் அடையாளப்படுத்தப்பட்டனர்.

நாதர்கள்….!

சரஸ்வதி நதியின் நாகரீகத்தில் செழிப்புடன் வாழ்ந்த நாதப் பாரம்பரிய மனித குழுவே நாதர்கள் என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் மேன்மையாக வாழ்ந்த இடம் இப்பொழுது பாலைவனமாக இருக்கிறது. அந்த சரஸ்வதி நதிக்கு என்ன ஆயிற்று? நாதர்கள் இப்பொழுது எங்கே?

 

 (தொடரும்)

0 கருத்துக்கள்: