Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, January 20, 2014

அன்புடன் அர்ஜண்டினாவிலிருந்து - 9

இந்தியாவில் உள்ள இமாலய மலை தொடர்களில் நிறைய வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. குளிரின் நடுவே அத்தகைய வெந்நீர் ஊற்றுக்களில் குளித்தால் ஏற்படும் அனுபவம் சுவையானது.

ஆனால் இங்கே ஆண்டிஸ் மலைத்தொடரில் இருக்கும் வெந்நீர் ஊற்றை காண சென்ற எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த வெந்நீர் ஊற்றுக்கள் கந்த அமிலத்தால் ஆனது. கந்த அமிலத்தின் புகையும் அதன் கரைசலும் பாறைகளில் கலந்து ஓடிவருகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு இதில் மக்கள் குளிக்கும் வண்ணம் இந்த கந்தக ஊற்று குகையில் ஓர் ஹோட்டல் வைத்திருந்தார்கள் என கேள்விப்பட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

கந்தக நீர் ஊற்றுக்கு அருகே கந்தக படிமங்களால் ஆன ஓர் பாலம் இருக்கிறது. இந்த பாலத்தில் முன்பு மக்கள் நடந்து சென்று குகையை அடைந்திருக்கிறார்கள். ஆனால் தற்சமயம் அதன் பலம் குறைந்ததால் அதன் மேல் மக்கள் நடக்க அனுமதி இல்லை. இந்த வெந்நீர் ஊற்றின் அருகே வாழும் உயிரினங்கள் தங்கள் இயற்கையான குணத்தை மாற்றிக் கொண்டு வெப்பத்தை தாங்கும் வண்ணம் இயல்பை மாற்றிக்கொண்டிருக்கின்றன. இச்செயலை டார்வின் கண்டறிந்து பரிணாம கொள்கையை கண்டறிந்திருக்கிறார்.

சார்லஸ் டார்வின் என்றவுடன் பலர் அவரை ஓர் விஞ்ஞானியாகவே கருதுகிறார்கள். அவர் ஓரு கிருஸ்துவ மத ஆய்வாளராக பணியாற்றியவர். பரிணாம கொள்கை அவர் இருந்த மதத்திற்கு எதிரானதாக கருதி அவரை மதத்தை விட்டு விலக்கி வைத்தனர். அவர் ஓர் சிறந்த ஓவியரும் கூட. இந்த இயற்கை சூழலை தன் கைப்பட வரைந்தும் இருக்கிறார். அவர் வரைந்த ஓவியம் அருகே இருக்கும் ஓர் தங்கும் விடுதியில் இருந்தது. அதை கண்டு களித்தோம். அவர் வாழ்ந்த காலத்தில் புகைப்பட கருவி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் அவர் கண்ட காட்சிகளை எல்லாம் அவர் ஓவியமாக பதிவு செய்தார். 

இப்படி சுவாரசியமாகவும் அறிவு தளத்திலும் பயணம் சென்றுகொண்டிருந்தது. அடுத்து நாங்கள் வான ஆராய்ச்சி நிலையத்திற்கு செல்ல வேண்டும். நாங்கள் இருக்கும் இந்த இடத்திலிருந்து ஜஸ்ட் 300 கி.மீட்டர்தான் என்றார்கள். வழக்கம் போல GPS-ல் வழித்தடத்தை சரி செய்துவிட்டு நான் ஓட்டத்துவங்கினேன்.

செல்லும் வழியில் ஓர் செக் போஸ்ட் எதிர்பட அங்கே இருந்த காவலர் வண்டியை ஓரங்கட்டினார். இந்தியாவில் இப்படி ஓரம் கட்டினால் நாம் இறங்கி அருகே இருக்கும் மரத்தின் பக்கம் சென்று யாருக்கும் தெரியாமல் காந்தி படத்தை அளித்தால் காவலரும் நாட்டுப்பற்றுடன் தேச தந்தையை வணங்கி வழியனுப்பி வைப்பார். அர்ஜண்டினாவில் என்ன சம்பிரதாயம் என தெரியவில்லை. நான் குழப்பத்தில் இருக்க அவர் அருகே வந்து செம்மொழியாம் ஸ்பேனிஷ் மொழியில்  “ஏதேனும் பழங்கள் வைத்திருக்கிறீகளா?” என கேட்டார்.

இவர் ஏன் பழங்களை பற்றி கேட்கிறார். இவங்க ஊரில் இது ஏதோ லஞ்சம் கேட்கும் சங்கேத பாஷையோ என நினைத்து, என் மாணவி ராமதாஸியை கேட்க, அவர் எனக்கு விளக்கம் அளித்தார். அர்ஜண்டினாவின் மாநிலங்கள் சுயாட்சியில் இயங்குவதால் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு பழம் காய்கறிகளை தனி நபர்கள் கொண்டு செல்லுவதற்கு தடை செய்து இருக்கிறார்கள். மேலும் சுகாதரம் கருதியும் சில நோய் தடுப்பு காரணத்தால் இந்த தடை அங்கே விதிக்கப்பட்டிருக்கிறது என விளக்கினார். அந்த போலீஸ்காரரரிடம் சுப்பாண்டியை காண்பித்து இந்த ஞானப்பழம் தவிர வேறு எதுவும் இல்லை என்றேன். 

காரின் உள்ளே சோதனை செய்துவிட்டு ரெண்டு அடி திரும்பி நடந்தவர், மீண்டும் திரும்பி.... கார் ஓட்டிக்கொண்டிருக்கும் என்னை பார்த்து, இவரை பார்த்தால் நம் நாட்டுக்காரர் போல தெரியவில்லையே, லைசன்ஸ் இருக்கா? என்றார். நான் சுப்பாண்டியை பார்க்க சுப்பாண்டி என்னை பார்க்க, நிலமையை புரிந்து கொண்டது போல ராம தாஸியும் காரைவிட்டு இறங்கி போலிஸ்காரரை தனியாக  கூட்டு சென்று ஏதே ஸ்பேனீஷில் விளக்கி கொண்டிருந்தார்.

சில நிமிடம் கழித்து ஒன்றும் புரியாமல் நான் ராமதாஸியிடம் விபரம் கேட்க, உங்களிடம் லைசன்ஸ் இல்லை, ஆனால் இவர் ஒரு பெரிய ஸ்வாமி, அதனால் லைசன்ஸ் கேட்காதீர்கள் என விளக்கி கொண்டிருந்தேன் என்றார். நான் புன்சிரிப்புடன் என் பையில் இருந்து இண்டர்நாஷனல் ட்ரைவிங் லைசன்ஸ் எடுத்து காண்பித்தேன். உலகின் குடியரசு மொத்தம் 249 குடியரசு நாடுகளில் 210 நாடுகளில் வாகனம் ஓட்டும் அனுமதி வாங்கி இருப்பார் என அந்த போலீஸ்காரர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ராமதாஸியும் மகிழ்ச்சியுடன் இவரிடம் லைசன்ஸ் இருப்பது எனக்கு தெரியவில்லை என போலீஸ்காரரிடம் கூறி அவரிடம் இருந்து விடைபெற்று கிளம்பினோம்.

மீண்டும் பயணத்தை தொடர்ந்தோம், “என்னிடம் லைசன்ஸ் இருக்கிறதா இல்லையா என தெரியாமல் எப்படி என்னை கார் ஓட்ட அனுமதித்தீர்கள்?” என ராம தாஸியிடம் கேட்டேன்.  “நீங்கள் என் குரு, உங்களுடன் பயணம் செய்வது என்பது மட்டுமே என் எண்ணம், எல்லாம் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என வந்துவிட்டேன்.  நான் அந்த போலீஸ்காரரிடம் பேசும் பொழுது கூட என்னை சட்டத்திற்கு புறம்பாக செல்ல விடாமல், லைசன்சுடன் நீங்கள் நிற்கிறீர்கள் பார்த்தீர்களாஸ்வாமிஜி...என்றார்.  

இப்படி ஓரு சரணாகதி நிலையில் எனக்கு ஒரு சிஷ்யையா? என்ன சொல்லுவது என தெரியாமல் பயணத்தை தொடர்ந்தேன்.

சில கி.மீட்டர் பயணித்திருப்போம், 

“ஸ்வாமிஜி இத்தனை நாள் ஓம்-காரா இருந்த நீங்க இப்ப அர்ஜண்டினாவில் அப்கிரேட்யிட்டீங்களே” என சுப்பாண்டி காட்டிய திசையில் பார்த்தால் அங்கே ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. அதன் பெயர்....ஓம் பஸ்...!



இப்படியாக எங்கள் பயணம் நகைச்சுவையுடன் நகர்ந்தாலும் இனி சில கிலோமீட்டர்களில் கலவரம் காத்திருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது...

(அன்பு பெருகும்) 

4 கருத்துக்கள்:

VIKNESHWARAN ADAKKALAM said...

ஒவர் சஸ்பென்ஸ் பிளாகுக்கு ஆகாது சாமியோவ்...

இராஜராஜேஸ்வரி said...

சரணாகதி நிலையில் ஒரு சிஷ்யை ..!

சுவாரஸ்யமான பயண பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

வணங்காமுடி...! said...

Great narration and very interesting to read. I am eagerly waiting for the next post.

Amuthan Sekar said...

சுவாமி ஜி,

அற்புதமான பதிவு. தயவு செய்து தொடரவும்.

நன்றி,
அமுதன் சேகர்