முழங்கால் அளவு இருக்கும் பெரிய காலணிகள். கயிறுகள் மற்றும் உலர் பழங்கள் என நானும் சுப்பாண்டியும் எங்கள் பையில் திணித்துக் கொண்டோம்.
உலகின் இரண்டாவது பெரிய சிகரம் மற்றும் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய சிகரம் என்றால் சும்மாவா? மலையேற்றங்களும் பாறையில் லாவகமா ஏறுவதை பயிற்சி செய்திருப்பதால் சமாளித்துவிடலாம் என நினைத்து கிளம்பினோம்.
வில்லிபுத்ரர் எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு அவரின் ஆசிரியர் பணிக்கு சென்றுவிட்டார். மலைச்சிகரம் மிக அருகே என்றார்கள். விசாரித்ததில் 150கி.மீ. தூரம். இங்கே 200 , 300 கி.மீ எல்லாம் அருகே என்கிறார்கள். அரை மணி நேர பயணம் தான் என அவர்கள் குறிப்பிட்டாலே 200 கிமீ. என புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஞானம் பின்னர்தான் கிடைத்தது. சென்னைக்கு மிக அருகே என விளம்பரப்படுத்தும் ரியல் எஸ்டேட்காரர்களுக்கு கொஞ்சமும் சளைக்காதவர்கள்.
மலைஏற்றம் என்பதால் இம்முறை ராமதாசியை கார் ஓட்ட சொல்லிவிட்டு நானும் சுப்பாண்டியும் பின் சீட்டில் அடைக்கலமானோம். பின்ன இரண்டாவது சிகரம் ஏறுவதற்கு ஆற்றலை சேமிக்க வேண்டாமா? கார் ஓட்டி வீணாக்கினால் அப்புறம் மலை ஏற ஆற்றல் வேண்டாமா?
சுற்றிலும் பல்வேறு வண்ணங்களில் மலைத்தொடர்கள். அகண்ட சாலைகள் , தூய்மையான காற்று என பயணம் துவங்கிய சில மணி நேரத்தில் நானும் சுப்பாண்டியும் தூங்கிப்போனோம்.
சில மணி நேர பயணத்திற்கு பின் வாகனம் நின்றது. நாங்களும் கண் விளித்தோம். அவசர அவசரமாக தூக்க கலக்கத்துடன் எழுந்த எங்களை ராமதாசி அசுவாசப்படுத்தினார். பின்னர் காரின் வலதுபக்க கண்ணாடியை இறக்கி ஸ்வாமி இதோ நாம் சிகரத்தின் அருகே வந்துவிட்டோம் என ஜன்னல் வழியாக கண்பித்தார்.
சிகரத்தின் அருகே சென்று பார்க்கும் வரை சாலைகள் அமைத்திருக்கிறார்கள். மலை ஏறவோ பாறைகளில் கயிறு கட்டி ஏறவோ தேவையில்லை...! சிகரத்தை கண்டு ரசிக்கவும் அதன் மேல் செல்லவும் கேபிள் கார்கள் உண்டு. கார் நிறுத்தும் இடத்தில் நாம் பசியாற பிசா முதல் அனைத்து உணவும் கிடைக்கும் வகையில் உணவகங்களும் உண்டு. மலையேற்றத்திற்கு நாங்கள் கொண்டுவந்த கயிறையும் உலர் பழங்களையும் நைசாக மறைத்துவிட்டு...ராமதாசியுடன் சென்றோம். நாம் அசிங்கப்படுவது இது முதல்முறையா என்ன? :))
கேபிள் கார் பவனி வரும் இடம்.
மலையின் உச்சியை அடையும் ஒற்றையடி பாதை. (படத்தை க்ளிக் செய்து பெரிதாக பார்த்தால் ஒரு ஆரஞ்சு கலர் உடையுடன்
பொடியாக ஒர் உருவம் தெரியும்)
பொடியாக ஒர் உருவம் தெரியும்)
அர்ஜண்டினாவின் உணவில் மாமிசம் இல்லாமல் பெற்றுக்கொண்டு, உணவகத்தின் வாசலில் அமர்ந்து சிகரத்தை ரசித்தவாறே சாப்பிட்டோம். பிறகு மெல்ல நடந்து சிகரத்தின் அருகே சென்று கண்டு களித்தோம். பிரம்மாண்ட மலைக்கு அருகே நம்மை கொண்டு செல்லும் பொழுது நாம் சிறு துரும்பு நம்மை நினைக்க வைக்கிறது இயற்கை. ஆணவம் அழிந்து பிரபஞ்ச துகளாக நாம் நம்மை அறியும் தருணம் அது.
அடுத்து நாங்கள் செல்ல திட்டமிட்ட இடம் மிகவும் முக்கியமானது. பரிணாம கொள்கையை ஆய்வு செய்ய சார்லஸ் டார்வின் தென் அமெரிக்காவின் பல இடங்களில் முகாம் அமைத்தார். அதில் ஓர் வென்னீர் ஊற்றுக்களுடன் இருக்கும் இயற்கை சூழ்ந்த இடம் அது. அங்கே செல்லும் வரை ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர் மட்டுமே என நினைத்திருந்த டார்வினின் வாழ்க்கையை புரிந்துகொள்ள ஓர் வாய்ப்பாக அமைந்த பயணம் அது.
சிகரத்தின் உச்சியில்...
(அன்பு பெருகும்)
2 கருத்துக்கள்:
அருமையான பயணம்
தொடருக!
கட்டுரையுடன் இயற்கை அன்னையை மிக ரசித்தேன், 'அன்னையை' விவரிக்க வார்த்தை இல்லை...கட்டுரைக்கும் அருமையான படங்களுக்கும் மிக மிக நன்றி...
Post a Comment