Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, January 11, 2013

கும்பமேளா - 10

தியானம் செய்ய இடையூராக இருக்கிறது என மனிதர்கள் இல்லாத இடத்தை நோக்கி பல முறை சென்று இருக்கிறார் அப்பு. ஆனால் இங்கே லட்சக் கணக்கான மக்கள் கூட்டத்தின் நடுவே இருந்தாலும் ஒரு வித தியான நிலை தொடர்வதை உணர முடிந்தது.

உணவு, உறக்கம் போன்ற உடல் எதிர்பார்ப்புக்கள் மிகவும் குறைந்து இருந்தது. ஒவ்வொரு நிமிடமும் குருஜி சோமுவுடன் கழிப்பதும், அவர் பேசுவதை கவனிப்பதுமாக சென்றது.

அன்று வழக்கத்தை விட இரண்டு பங்கு மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்தது. குருஜியிடம் கேட்க அவரை நோக்கி திரும்பினான், அவனை சைகையால் அமர்த்திவிட்டு, “இன்று முக்கியமான குளியல் நாள் அதற்காகத்தான் மக்கள் கூட்டமாக போகறாங்க” என கூறினார் குருஜி.

தன் மனதில் உதித்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் குருஜியின் தன்மை அப்புவுக்கு  பழக்கமாகி இருந்தது என்பதால் ஆச்சரியமாக இல்லை.

குருஜி தொடர்ந்தார், “ மஹா கும்பமேளா, சூரியன், சந்திரன் மற்றும் குரு கிரக இணைவால் வருவதாக சொன்னேன் இல்லையா? இந்த மூன்று கிரகங்களும் ஒன்றிணையும் நாட்கள் கும்பமேளாவின் மிக முக்கியமான நாட்களாகும். தமிழ் மாதங்களில் தை, மாசி, பங்குனி ஆகிய நாட்களில் நடைபெறும் கும்பமேளா எல்லா நாளும் அற்புதமான நாட்கள் தான் என்றாலும், பெளர்ணமி, அமாவாசை, ஏகாதசி, பஞ்சமி ஆகிய நாட்கள் மிக முக்கிய நாட்கள். அன்னைக்குத்தான் வானியல் ரீதியாக சூரியன், சந்திரன் குரு கிரங்கள் நெருங்கின தொடர்புல இருக்கும். அன்று ஸ்நானம் செஞ்சா 21 தலை முறைகள் முக்தி அடையும் என ஆதிநாத் ஆசிர்வதிச்சிருக்கார். அதனாலதான் பாருங்க மக்கள் எத்தனை பேரு கூட்டம் கூட்டமா வர்ராங்க..”

“ஓ இவ்வளவு விஷயம் இருக்கா  கும்பமேளாவில்?அப்ப நான் ஸ்நானம் செஞ்சுட்டு வரட்டுமா?” என்றார் அப்பு.

“இருங்க, நானும் உங்களோட வர்ரேன்” என சொல்லி அப்புவுடன் நடக்கத் துவங்கினார் குருஜி.

கூட்டத்தின் நடுவே பல்வேறு மனிதர்களையும், யோகிகளையும், ஞானிகளையும் கடந்து கங்கை,யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கும் இடத்துக்கு ஒரு படகில் ஏறி சென்றார்கள்.

அங்கே மையத்தில் இறங்கி குளிக்கத் துவங்கினார்கள். அப்பு இடுப்புவரை நீர் ஓடிக் கொண்டிருந்தது. குருஜிக்கு கழுத்துவரை நீர் ஓடிக்கொண்டிருந்தது.

இடுப்பில் ஒரு துண்டுடன் அளவுக்கதிகமான குளிரில் உடல் வெடவெடக்க அப்பு ஸ்நானம் செய்துகொண்டு ப்ரார்த்தனை செய்தான்.

அப்புவை படகில் ஏறி உட்கார சொல்லிவிட்டு, குருஜி மட்டும் நீரில் நின்று இருந்தார். 

நீரின் வேகம் அதிகமாக இருந்தது. ஆனாலும் அப்பு சோம்நாதரிடம் ஒன்றும் சொல்லவில்லை. அப்புவும் சோமுவின் அப்பா என்ற நிலையை கடந்திருந்தான்.

கண்களை மூடி மெல்ல நீரின் உள் சென்றார் குருஜி. சில வினாடிகள் சலனமே இல்லை. மெல்ல எழுந்து வெளியே வந்தார். அவர் கை உயர்த்தி பெரிய ருத்திராட்ச மாலையை அளித்தார்.

மீண்டும் உள்ளே சென்றார், சில வினாடிகளுக்கு பின் வெளியே வந்து வலம்புரி சங்கு ஒன்றை கொடுத்தார். மீண்டும் உள்ளே சென்றார், சில வினாடிகளுக்கு பின் வெளியே வந்து ஸ்ரீசக்ரம் ஒன்றை கொடுத்தார். 

மூன்று முறை முங்கி எழுந்து ஒவ்வொரு பொருளையும் அப்புவிடம் கொடுத்து பத்திரமாக வைக்க சொல்லிவிட்டு படகில் ஏறி அமர்ந்தார்.

ஆற்றலுடன் இருந்த மூன்று பொருட்களையும் பார்த்து குருஜியிடம்  “என்ன இதுவெல்லாம்?” என கேட்டான் அப்பு.

“முன்பு வேறு உடலில் இருக்கும் பொழுது என் யோக ஆற்றலை இதில் சேமித்து வைத்திருந்தேன். ஆதிநாதரிடம் இவை இருந்தது. அவரிடம் இருந்து இந்த உடலுடன் வாழ இதை மீண்டும் வாங்கினேன்” என்றார் குருஜி.

பல்வேறு கேள்விகளால் உந்தப்பட்டான் அப்பு.“இத்தனை நாள் யோக சக்தி இல்லாமலா இருந்தீர்கள்? இதிலிருந்து சேமித்து பிறகு பெற முடியுமா?”

“ஆம். முடியும். சூட்சமமான யோக சக்திகள் இதில் சேமித்து காலத்தினால் அழியாமல் பாதுகாக்க முடியும். இதை எடுக்கத்தான் நாம் மஹா கும்பமேளாவிற்கு வந்தோம்.. நீங்கள் பார்க்கும் சோமு வேறு, இந்த யோக ஆற்றலுடன் இருக்கும் சோமு வேறு விரைவில் அறிவீர்கள் ”

“ஓ..சரி. இந்த பொருட்களை எல்லாம் அளிக்க ஆதிநாதர் இப்பொழுது இங்கே வந்தாரா?”

“ஆதிநாதர் வர வேண்டியதில்லை. அவர் எப்பொழுதும் இங்கே இருக்கிறார். அவர் வந்து செல்லும் பயணி இல்லை. மஹா கும்பமேளாவை நடத்தும் முதன்மையானவர் இல்லையா? ”

“என்னால் பார்க்க முடியவில்லையே?”

“மீனுக்கு நீரை பார்க்க முடியுமா அப்பு? அது அதிலேயே மூழ்கி இருக்கிறது. அதுபோல ஆதிநாதர் எப்பொழுதும் இங்கே சூட்சமமாக இருக்கிறார்”

தத்துவார்த்தமான பதிலால் திருப்தி அடையாத அப்பு தலைகவிழ்த்தான்.

“ஏன் அவசரம்? நீங்கள் கண்டிப்பாக ஆதிநாதரை ஸ்தூலமாக சந்திப்பீர்கள்” என்றார் குருஜி.

இவ்வாறு இவர்கள் மஹாகும்பமேளாவில் மஹா உன்னதமாக இருக்கும் நேரத்தில் அப்புவின் அம்மா அப்புவின் வீடு நோக்கி புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

அப்பு அங்கு செல்வதாக சொல்லிவிட்டு தானே வந்திருந்தான்?

(மேளா தொடரும்)

8 கருத்துக்கள்:

Unknown said...

சுவாமி,

சோமு முங்கி எடுத்த பொருள்களில் எனக்கு ஏதாவது ஒன்றாவது கிடைக்காதா என்று ஏக்கமாக இருக்கிறது.

மிகவும் பிரமாதமாக வந்திருக்கிறது இந்த வாரம்.

கோ. நந்தகோபால்

Sivakumar said...

//சூட்சமமான யோக சக்திகள் இதில் சேமித்து காலத்தினால் அழியாமல் பாதுகாக்க முடியும். இதை எடுக்கத்தான் நாம் மஹா கும்பமேளாவிற்கு வந்தோம்// சாமான்யன் இவ்வாறெல்லாம் சேமிக்க முடியுமா?
//கங்கை,யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கும் இடத்துக்கு// கங்கைக்கும் யமுனைக்கும் நதி தவழும் செல்லும் இடங்கள் தெரியும். சரஸ்வதி நதி இங்கு கலக்கும் முன் எங்கிருந்து வந்தது.

DSP Family said...

Is it Live from Kumba Mela??

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிவக்குமார்,

//சாமான்யன் இவ்வாறெல்லாம் சேமிக்க முடியுமா?//

சாமான்யன் என யாரும் இல்லை. சூட்சமம் தெரிந்தவன் தெரியாதவன் என்றே இரண்டு வகை உண்டு.

நான் இரண்டாம் வகை :)

//சரஸ்வதி நதி இங்கு கலக்கும் முன் எங்கிருந்து வந்தது.//

முன்பு உள்ள பகுதிகளை படித்தால் புரியும். நாடிகளில் சுஷ்மனாபோல சரஸ்வதி இரண்டு நதிகளின் இணைவால் தோன்றுகிறது.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு CSRK,

இல்லை. இது எப்பொழுதோ நடந்த மஹாகும்பமேளா..!

geethasmbsvm6 said...

படிக்கையிலேயே சோம்நாத்தின் மஹிமையை உணர முடிகிறது. அற்புதமான பதிவு. இப்போதைய கும்பமேளாவும் நினைவில் வருகிறது. நாடிகளை உதாரணமாகக் காட்டியதும் அருமை.

Kazam_24 said...

ஸ்வாமிஜி கும்பமேளாவில் ஸ்நானம் செய்தால் 21 தலைமுறை முக்தி அடையும் எங்கிறீர்கள் அப்படியென்றால் நம்முடைய கர்மாக்கள் அனைத்தும் தீர்ந்து விடுமா.

Pattarai Pandi said...

"நீங்கள் பார்க்கும் சோமு வேறு, இந்த யோக ஆற்றலுடன் இருக்கும் சோமு வேறு விரைவில் அறிவீர்கள்"

- இதை அறிய ஆவலாக உள்ளது.