Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, January 2, 2013

கும்பமேளா - 8


திடீரென அறைக்குள் நுழைந்த அப்புவின் மனைவி, பிள்ளை முன் பணிவுடன் அமர்ந்திருக்கும் கணவனை பார்த்து அதிர்ந்து, “என்னங்க அவன் முன்னாடி ஏன் இப்படி உட்கார்ந்திருக்கீங்க?” என கேட்கவும், தன் மனைவி வந்ததையே அப்பொழுது தான் பார்த்த அப்பு செய்வது அறியாமல் தடுமாற்றத்துடன் திரும்பி மனைவியை பார்த்தார்

பிறகு சமாளித்து, “உம்பையன் மரியாதை தெரியாம வளந்திருக்கான். அப்படியே உன் அப்பன் மாதிரி. அதனால தான் பெரியவங்க கிட்ட எப்படி இருக்கனும்னு கத்து கொடுத்தேன்...”

“இந்தபாருங்க...வீணா எங்க அப்பாவை இழுக்காதீங்க.. நீங்க எங்களை விட்டுட்டு போனப்ப எங்களை வச்சு காப்பாத்தினதே அவர்தான். அதை மறந்துட்டு பேசாதீங்க...”

இப்படியாக குடும்ப சண்டை தொடர, அப்புவின் மனைவி தான் கண்ட காட்சியை மறந்தாள். இவற்றை பார்த்தவண்ணம் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார்  குருஜி சோம் நாத்...! 
---------------------------------------------
மறுநாள் காலையில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தான் எழுப்பப்படுவதை உணர்ந்து எழுந்தார் அப்பு.

தன் அருகே சோமு அமர்ந்திருந்தது கண்டு...எழுந்து அமர்ந்தார்...

தூக்க கலக்கத்தில் தன் பிள்ளையை குருஜி என அழைப்பதா அல்லது சோமு என அழைப்பதா என தெரியாமல் அந்த பிரம்ம முகூர்த்தத்தில் குழம்பி...எதுவும் அழைக்காமல்...

“என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா?” என கேட்டார் அப்பு.

“பிரச்சனை ஒன்னும் இல்லை.  நேத்து நாம பேசினதை முழுசா முடிக்கலை அதனால பேசலாம்னு கூப்பிட்டேன்” என்றார் குருஜி.

“ஒரு நிமிஷம்” என சொல்லிப்போய் பல நிமிஷங்களை செலவழித்து தன்னை தூய்மையாக்கிக் கொண்டு வந்தார் அப்பு.

சோம்நாத் குருஜியை ஒருமுறை பார்த்துவிட்டு “நேத்து உங்க அம்மா வந்தாளா அதனால பேச்சு தடைபட்டுப்போச்சு.... அவளை பேச்சு மாத்தி சமாளிக்கிறதுக்குள்ள...” என சொல்லி தொடர..

இடைமறித்த குருஜி... “அவங்க என் உடம்பை கொடுத்தவங்க. உங்க மனைவி. என் அம்மா என்றால் இறைவன் மட்டும் தான். என்னது நீங்க சமாளிச்சீங்களா?” என மையமாக ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து விட்டு... “நாம் இன்னைக்கு கும்பமேளாவுக்கு கிளம்பனும் உங்க மனைவியிடமும் மத்த எல்லாருக்கும் உங்க அம்மாவீட்டுக்கு போறதா சொல்லிட்டு கிளம்புங்க..”

“குருஜி, அப்படி என்னால கிளம்ப முடியாது. நான் குடும்பத்தைவிட்டு பிரிஞ்சு போனதிலிருந்து எல்லாரும் என் மேல சந்தேகமா இருக்காங்க. மனைவி இல்லாம தனியா எங்கையும் என்னை போகவிட மாட்டாங்க...”

“யாரு தனியா போக சொன்னா? என்னையும் கூட்டிக்கிட்டு உங்க அம்மாவீட்டுக்கு போயி சில நாள் தங்கிட்டு வரதா சொல்லுங்க..இன்னைக்கு மதியம் கிளம்பனும்” என சொல்லிவிட்டு அருகே இருந்த பூஜை அறையில் சென்று தியானத்தில் அமர்ந்தார் குருஜி.

தடுமாறத்துவங்கினார் அப்பு....! குடும்பத்தாரிடம் சொல்லுவது தொடங்கி ...பயணத்திற்கான பொருளாதார செலவுகளை எப்படி சமாளிப்பது என.. பல எண்ணங்கள் வந்து சென்றன...

காலை உணவு சாப்பிடும் பொழுது மனைவியிடம், “மனசு சரியில்லை, சோமுவை அழைச்சுட்டு அம்மாவை பார்த்துட்டு வரேன்..” கூறி சமாளித்தான். மதியம் உடைகளை தயார் செய்து அடுக்கி, சோமுவை அழைத்துக்கொண்டு வண்டியில் ரயில் நிலையம் நோக்கி பயணித்தான்.

அதுவரை மெளனமாக இருந்த குருஜி அப்புவை நோக்கி, “ரயில் நிலையம் வேண்டாம். மலைக்கோவிலுக்கு போங்க” என சொல்லவும்..விசித்திரமாக பார்த்துவிட்டு அந்த நகரில் இருக்கும் பிரசித்திபெற்ற மலைக்கோவிலுக்கு வண்டியை திருப்பினான்.

பல நூறு படிகள் கடந்து கோவிலின் பின்பக்க வழியில் பயணம் செய்தார் குருஜி. 

முதன் முறையாக இந்த இடத்திற்கு சோம் நாத் குருஜியை அழைத்துவந்தாலும் குருஜி முன் செல்ல அவரை பின் தொடர்ந்தார் அப்பு.

கோவிலுக்கு பின்புறம் உள்ள சித்தர் குகைக்கு போகும் வழியில் சென்று வலதுபுறம் திரும்பி கன்னிமார் சன்னிதிக்கு மேலே மலை உச்சிக்கு செல்லும் வழியில் ஏறத்துவங்கினார் குருஜி.

மணித்துளிகள் கரைய யாரும் இல்லாத மலைப்பாதையில் இருவரும் மெளனமாக பயணித்தார்கள். பழக்கப்பட்ட இடத்தில் நடமாடுவதைப்போல குருஜி நடந்து சென்று அங்கே இருக்கும் ஒரு பாறைக்கு அப்பால் திரும்பி நின்று அப்புவை அழைத்தார்.

அருகில் சென்றதும் பாறைக்கு பின்புறம் இருக்கும் சிறிய குகை போன்ற பகுதியை காட்டி அங்கே பயணத்திற்காக கொண்டுவந்த பையை வைக்க சொல்லிவிட்டு..அந்த பாறையின் மீது ஏறி அப்புவின் உயரத்திற்கு வந்து, அப்புவை அருகே அழைத்தார்.

அப்புவின் நெற்றியில் தன் கைகளை வைத்தார். கண்களை மூடி தன்னுள் செல்லும் குருவின் ஆற்றலை அனுபவித்த வண்ணம் இருந்தார் அப்பு.

“அப்பு கண்களை திற...” என்ற குருவின் ஓசை மிகத்தொலைவில் கேட்டது. சிறிது சிறிதாக அதே குரல் மிக அருகில் கேட்டவுடன் தன்னை சுதாரித்து கண் திறந்தான் அப்பு.

அங்கே சோம்நாத் குருஜி இல்லை... பதிலாக மழிக்கப்பட்ட தலையுடன் கருப்பு சால்வை போர்த்தி சங்கம் பாபா நின்றிருந்தார்....!

அதிர்ச்சியுடன் சுற்றியும் பார்த்தார் அப்பு.... சோமுவை காணவில்லை...!

அவன் இருந்த இடம்...அலஹாபாத் நகரில் உள்ள...

மஹா கும்பமேளா மைதானம்...!

(மேளா தொடரும்)

9 கருத்துக்கள்:

மதி said...

சுவாரசியமான மேளா தொடரட்டும்...

C Jeevanantham said...

Interesting....

pranavastro.com said...

கும்ப மேளா குடும்ப மேளா ஆகி கும்ப மேளாவாக ...... தொடருட்டும்


Mohankumar

Unknown said...

Swamiji the narration makes us visualise & fell that we are Appu

rajendran covai

Kazam_24 said...

ஸ்வாமிஜி என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியல. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்....

G.Nandagopal said...

சுவாமிஜி,

மிகவும் அற்புதமாக உள்ளது. இவ்வளவு சீக்கிரம் ஸ்ரீ சங்கம் பாபா அவர்கள் காட்சி தருவார் என்று நான்

எதிர்பாரக்கவேயில்லை.

நன்றி.

கோ. நந்தகோபால்

Unknown said...

என்ன சொல்வதென்றே புரியவில்லை ஸ்வாமி பதிவுக்கு நன்றி

Unknown said...

சுவாமிஜி,

ஒரு தொடருக்கும் இன்னொரு தொடருக்கும் போதிய இடைவெளி தேவைதான்

அதற்காக இப்படியா......................

கோ நந்தகோபால்

geethasmbsvm6 said...

ஆஹா, பாபா வந்தாச்சா?