Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, January 26, 2013

கும்பமேளா 12


அற்புதமான காட்சியை கண்ட பரவசத்தில் இருந்தார் அப்பு. பல லட்சம் மக்களும் அப்புவாகவே இருக்க..எங்கும் அப்புவின் தோற்றம் தெரிய அனைத்தும் தாமாகவே இருக்கும் உணர்வை பெற்றார்.

தனது ஆனந்தத்தை வெளிப்படுத்த சோமநாதரை நோக்கி திரும்பினார் அப்பு. அங்கே சோமநாதர் இல்லாமல் அங்கும் அப்புவின் உருவமே தெரிந்தது. அனைத்தும் தானாகி அனைத்தும் அவனாகி நின்ற தருணம் அப்புவை ஆனந்தத்திற்கு அப்பால் செலுத்தியது.

சில ஷணங்களுக்கு பிறகு தன்னிலை திரும்பினார் அப்பு. கண்களில் கண்ணீர் பெருக சோமநாதரை விழுந்து வணங்கினார்.

மெல்ல சோமநாதரின் உருவம் மறைந்து பெரும் ஒளியாக காட்சியளித்தார். பூமியிலிருந்து வானம் வரை பெரும் பிரகாசமாக ஒளிப்பிளம்பாக சோமநாதர் மாறினார்.

அந்த ஒளி சிறிது சிறிதாக பெரிதாக அப்புவை சுற்றியும், அப்புவின் உள்ளும் பிரகாசிக்க ஒளிதுகள்களாக வெடித்து சிதறி அதனில் கலந்தான் அப்பு.

-------------------------------------

சூரியன் உதிக்கும் அதிகாலை நேரம்...

பரமானந்த அனுபவத்திற்கு பிறகு அப்புவிடம் அசைக்க முடியாத ஒரு உள்நிலை ஆனந்தம் ஓடியபடியே இருந்தது.

மஹா கும்பமேளா தன்னை பல்வேறு ஆன்மீக அனுபவங்களை ஏற்படுத்தியது என உணர்ந்தார் அப்பு. ஆனாலும் ஆதிநாதரை பார்க்காத கவலை எஞ்சி இருந்தது.

சோமநாதர் முன் சென்று, “குருவே உங்களுக்கு தெரியாத ஒன்றை நான் புதிதாக கேட்க முடியாது. பேரானந்த அனுபவங்களை அளித்த நீங்கள் எனக்கு ஆதிநாதரையும் காட்டி அருளுங்கள்” என கேட்டு அவரின் பாதங்களில் சரணடைந்தான்.

மெல்ல தன் பாதத்தை எடுத்து அப்புவின் மார்பில் வைத்தார் சோமநாதர்.

கூடாரத்தின் ஒவ்வொரு பகுதியும் பிரகாசமாக ஒளிரத்துவங்கியது. நீண்ட சங்கின் ஒலி கேட்க அங்கே பிரகாசமான ஒரு உருவம் தோன்றியது. கண்களால் காணமுடியாத பிரகாசமான ஒளி உருவை வணங்கினான் அப்பு.

மெல்ல ஒளி குறைந்து உருவமாக வெளிப்பட அங்கே அப்புவின் தோற்றத்தில் இருந்தார் ஆதிநாதர்...!

தலை மழிக்கப்பட்டு, காது மடல்களில் துளையிட்டு செப்பு வளையங்கள் அணிந்து கையில் வலம்புரி சங்குடன் இருந்தார்.  தன் உருவமாகவே இருந்த ஆதிநாதரை வியப்புடன் பார்த்தான் அப்பு.

“என் பிரிய அப்பு, எனக்கு உருவம் என்பது இல்லை. உன்னுள் இருக்கும் ஆவலை தீர்க்கவே இவ்வாறு உன் உருவில் காட்சி அளிக்கிறேன். உண்மையில் நான் எப்பொழுதும் எங்கும் உன்னுடனேயே இருக்கிறேன். ஆதிநாதனும், சோமநாதனும், அப்புவும் வேறுவேறு அல்ல. அனைத்தும் ஒன்றே..!” என கூறி...

இரண்டு அடிகள் நடந்து சோமநாதருடன் ஆதிநாதர் முழுமையாக கலந்தார்.
சோமநாதர் சில அடிகள் முன் வந்து அப்புவடன் கலந்தார்.

தன்னுள் அனைத்தும் ஒடுங்க இறைஒளி விளங்க பரமானந்தத்தில் திளைத்தார் அப்பு.

இறைவனும் குருவும் வேறுவேறல்ல என்பதையும், தானும் குருவும் வேறுவேறல்ல என்பதையும் உணர்ந்து எல்லைகள் இல்லா பேரானந்தத்தில் மூழ்கினார்

தன் உணர்வு பெரும் பொழுது சோமநாதர் தன் முன் அமர்ந்திருக்க, அவர் முன் அமர்ந்திருந்ததை உணர்ந்தார். அப்புவின் தலை மழிக்கப்பட்டு அவரின் காதுகளில் செப்பு வளையம் தொங்கிக் கொண்டிருந்தது. அன்று முதல் நாதப் பாரம்பரியத்தில் மற்றும் ஒரு நாத் மலர்ச்சி அடைந்தார்.

------------------------

சோமநாதர் மெல்ல நடந்து சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த வலம்புரி சங்கையும், ருத்திராட்ச மாலையையும் எடுத்தார். அவை ஒளியுடன் பிரகாசித்து துகள்களாக மாற்றி தன்னுள் ஐக்கியமாக்கினார்.

அதே நேரம் தாயாரின் வீட்டிலிருந்து அப்பு கிளம்பி சோமுவுடன் தன் வீடு நோக்கி பயணமானார்கள்.

--------------------

சோமநாதர் அப்புவின் உடலை மெல்ல தொட்டார். சோமநாதரின் தொடும் காரணத்தை உணர்ந்த அப்பு கண்களை மூடினார். இருவரும் அந்த மாநகருக்குள் இருக்கும் மலைக்கோவிலின் குகையில் இருந்தார்கள்.

சோமநாதரின் உதவியுடன் தன் உடலை பெற்றும் முழு உணர்வுக்கு திரும்பினார் அப்பு. அங்கே விட்டு சென்ற நிலையிலேயே உடல் இருந்தது. உடல் உணர்வு நிலைபெற்றாலும், சூட்சம உடலின் தோற்றமும் உணர்வும் மேலோங்கி இருந்தது.

சாதாரண ஜீவனாக சென்ற அப்பு ஜீவன் முக்தனாக சோமநாதருடன் திரும்பி வந்தான்.வீட்டில் இயல்பாக சென்று, தன் இருப்பையும் ஆன்மீக உயர் நிலையையும் வெளிப்படுத்தாமல் சாதாரண கணவனாகவும், குழந்தைகளுக்கு தந்தையாகவும் வாழ்ந்து வருகிறான்.

சோமநாதர் என்ற சோமு வழக்கமான குழந்தைகள் செல்லும் பள்ளிக்கு சென்று, அதிக மார்க் எடுக்கும் போட்டியில் போராடி வருகிறார்.

(மேளா நிறைவு பெற்றது)

6 கருத்துக்கள்:

arul said...

excellent post explaining prabancha thathuvam

திவாண்ணா said...

முற்றிலும் வித்தியாசமான 'கதை'. நமஸ்காரம்!

pranavastro.com said...

இன்னொரு ஜெயகாந்தன் உங்கள் கும்பமேலவுள் தெரிகிறது

Unknown said...

swamiji
somany sadhus are with us without revealing their identity. am i right?

Gopal said...

I thought Kumbamela just a event where everybody assemble to have dip the holy water as one of formalities of HINDUISM.
But i could understand the real reason/intention.

Thanks for sharing Swamy.

geethasmbsvm6 said...

அருமையான படைப்பு. ஆன்ம ஞானம் பெறுவதை எளிமையாகப் புரியும்படி சொல்லி இருக்கிறீர்கள். முடிவும் ஏற்கக் கூடியதாகவே உள்ளது. சமீபத்தில் கிட்டத்தட்ட இதே போன்றதொரு ஆன்ம ஞானம் பெறும் சாமானியன் ஒருவனைக் குறித்தும் படிக்க நேர்ந்தது. மிக நுணுக்கமான ஒன்றை எளிமையாகக் கையாண்டுள்ளீர்கள். வாழ்த்துகளும், வணக்கமும்.