நல்உள்ளங்களுக்கு நன்றி
ஆன்மீக கல்வியை சிறந்த முறையிலும் பொருளாதார சுமை இல்லாமலும் கொடுக்க வேண்டும் அதற்கு உதவுங்கள் என கேட்டிருந்தேன். சின்ன அளவில் கோரிக்கை வைத்ததற்கே பலர் உதவ முன் வந்தார்கள். அதன் சுட்டி இங்கே : உதவி
வெளிநாட்டிலிருந்து உதவி செய்த சிவப்பிரகாசம், ஞானவேல், வித்யா, கீதா, ஆனந்த் ஆகியோருக்கு என் பேரன்பையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொருளாதார ரீதியாக உதவி செய்தவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருப்பவர்கள் என்பதே இதில் குறிப்பிட வேண்டிய விஷயம். மேலும் ஐரோப்பா, அமெரிக்காவில் பயிற்சி நடத்த வாருங்கள் என அழைக்கிறார்கள். இந்தியாவில் யாரும் பயிற்சி நடப்பதற்கோ அல்லது வேறு உதவிகளையோ இன்னும் செய்யவில்லை. மேலோட்டமாக விசாரித்ததுடன் சரி...!
உள்நாட்டில் இருப்பவர்களிடம் உதவி பெறும் யோகம் என்னிடம் இல்லை என நினைக்கிறேன். இதற்காக நான் வெளிநாட்டில் வசித்து பிறகு இங்கே இருப்பவர்களிடம் உதவி பெறலாம் என நினைக்கிறேன்...!
பயிற்சி கொடுத்தால் கட்டணம் என்கிறார்கள். இலவசமாக கொடுத்தால் யாரும் அதற்கு உதவவில்லை... என்ன செய்ய? வள்ளலார் கடை விரித்தே கொள்வாரில்லை.. நான் எல்லாம் எம்மாத்திரம்..?
--------------------
பிணத்தீட்டு
திருவண்ணாமலைக்கு தென் திசை முழுவதும் சுடுகாடாக இருந்தது. இப்பொழுதும் அப்படித்தான். சுடுகாட்டிற்கு மத்தியில் தான் ரமணாஸிரமம் அமைந்திருந்தது. ஊரில் யாராவது இறந்துவிட்டால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்பகுதிக்கு எடுத்து வந்து அவர் அவர் குல வழக்கப்படி எரிக்கவோ புதைக்கவோ செய்வார்கள்.
அந்தகாலத்தில் வாகன வசதியில்லாததால் பிணத்தை சுமக்க சிலர் இருப்பார்கள். இவர்கள் ஈமக்கிரியை முடிந்ததும் ரமணாஸ்ரமம் வந்து இளைப்பாரிவிட்டு செல்வார்கள். ஒரு நாள் ஆசிரமத்தில் இருக்கும் ஒருவர் இரண்டு வெளிநபர்களுடன் வாக்குவாதம் செய்வதை ரமணர் கண்டார். அவர்களுக்கு அருகே சென்று வெளிநபர்களிடம் என்ன என விசாரித்தார்.
தாங்கள் பிணம் சுமந்து வந்தோம், உச்சி வேளை என்பதால் மிகவும் களைப்பாக இருக்கிறது, உணவுக்கு ஆசிரமத்தில் மணி அடித்தார்கள். சாப்பிடலாம் என உள்ளே நுழைந்தால் இவர் தீட்டு என எங்களை உள்ளே விடவில்லை என்றனர். ரமணர் அவர்களை சாப்பிட உடனே உணவு கூடத்திற்கு போகச் சொன்னார்.
பிறகு ஆசிரமவாசியிடம், “தினமும் நாம நம்ம உடம்புங்கிற பிணத்தை தூக்கிட்டு இருக்கோம். அதுவே தீட்டு தானே? நானும் நீயும் தீட்டான ஆட்கள் தான்” என்றார்.
-----------------------------------------------------------
அழகிய தமிழ் மகன்
சில மாதங்களுக்கு முன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். நடுவில் ஒரு நிறுத்தம் வந்ததும், வெளியே சென்று சில நிமிடம் நிற்பதற்காக இறங்கினேன். மீண்டும் ரயில் கிளம்பும் பொழுது வண்டியில் ஏறுவதற்கு வாசல் படிக்கு அருகே சென்றால் வழியை அடைத்துக்கொண்டு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
“எக்ஸ்க்கியூஸ்மீ...” என சொல்லிவிட்டு வழிவிடுவார் என நினைத்தால் அவ்வழியே அடைத்துக் கொண்டு கண்களை உருட்டி என்னை பார்த்துக் கொண்டிருந்தார். “நீங்க தமிழில் பேசமாட்டீங்களோ?” என்றவரை கவனித்தால்... கலைந்த தலை, பலநாள் தாடி, நீல நிற ஜீன்ஸ், கருப்பு டீ-சர்ட்டில் சேக்குவாரோ படம் என அவர் இருந்த நிலையை பார்த்ததும் இன்னைக்கு இவரிடம் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது.
“தமிழன் கிட்ட தமிழ்ல பேசுங்க.. அமெரிக்காவிலா இருக்கீங்க? தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கறதே உங்கள மாதிரி எக்ஸ்க்கியூஸ்மீ ஆட்கள் தான்..” என்றார்.
அதற்குள் ரயில் நகரத்துவங்கியது அதனுள் ஏறியபடியே அவருடன் பேசத்துவங்கினேன், “ஐயா, தமிழ் கலாச்சாரம்னு சொல்றீங்களே... எந்த தமிழன் டீ-சர்ட்டும், ஜீன்ஸும் போட்டிருந்தான்? கிராப்பு வெட்டி இருந்தான்? என்னை பாருங்க மேல ஒரு வேட்டி கீழ ஒரு வேட்டி, தலை மழிச்சிருக்கேன். காதில் கடுக்கன் போட்டிருக்கேன். நாக்கில் மட்டும் தமிழ் இருந்தா பத்தாது தம்பி, கலாச்சாரம் நம்மளோட எல்லா செயலிலும் இருக்கனும். நீங்க ஜீன்ஸ், டீசர்ட் போடலைனா நான் ஏன் உங்க கிட்ட ஆங்கிலத்தில பேசப் போறேன்? தமிழ் கலாச்சாரத்தை மொழியில் மட்டும் கடைபிடிக்கனும்னு யாரோ உங்களுக்கு தப்பா சொல்லி தந்திருக்காங்க. கலாச்சாரம் மொழியில் மட்டும் அல்ல, உடை, உணவு அப்புறம் நம்ம செயல் இதில் எல்லாம் இருக்கு” என என் பிரசங்கத்தை முடித்தேன்.
“சாமி நீங்க சொல்லும் போது தான் கலாச்சாரம் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி” என சொல்லி திரும்பி நடக்கத் துவங்கினார். அப்பொழுது என் மொபைல் போன் ”பிரம்மம் ஒக்கட்டே...” என்று சுந்திர தெலுங்கு ஒலிக்கத் துவங்கியது. அவர் திரும்பி முறைக்கும் முன் மாயமானேன், :)
------------------------------
எல்லாம் உங்க புண்ணியம்
என்னிடம் சிலர் நலமா என கேட்டால், “எல்லாம் உங்க புண்ணியத்தில நலமா இருக்கேன்” என்பேன். உடனே “எனக்கு எங்க புண்ணியம்..” என அலுத்துக்கொள்வார்கள். தங்களின் புண்ணியத்தை கூட பிறருக்காக கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அதனால் மேலும் புண்ணியம் தானே ஏற்படும்? ஆன்மீகத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஒரு புண்ணியமும் கிடையாது. காரணம் இறைவன் என்னை இயக்குகிறான் என்னால் எதுவும் நடப்பதில்லை என்ற சரணாகதி நிலையில் இருப்பதே ஆன்மீகம். எதையும் நான் செய்கிறேன் என இல்லாத நிலையில் எனக்கு எப்படி பாவமும் புண்ணியமும் வரக்கூடும்? ஆனால் என்னிடம் நலமா என கேட்பவர்கள் இறைவனின் வடிவமாக நினைத்து எல்லாம் உங்க புண்ணியம் என்கிறேன். ஆனால் அவர்கள் புண்ணியத்தை தர மறுக்கிறார்கள்.
இப்ப சொல்லுங்க இது பாவமா புண்ணியமா?
--------------------------------------
ஜென்
கண்களின் கண்கவர் காட்சியும்
நாசியின் நல்நறுமணமும்
காதில் விழும் இன்னிசையும்
உண்ட உணவின் அற்புத ருசியும்
மனையாளின் ஸ்பரிசமும்
அனுபவிக்கும் ஷணத்தில்
அனுபவம் வெளியில் இருந்து கிடைப்பதில்லை
அனைத்தும் உள்ளிருந்தே கிளர்ந்தது என
உணர்ந்து என்னையே காணவும்,
முகரவும், கேட்கவும், சுவைக்கவும்
துவங்கி ஸ்பரிசித்து வருகிறேன்.
8 கருத்துக்கள்:
அனைத்தும் உள்ளிருந்தே கிளர்ந்தது என
உணர்ந்து என்னையே காணவும்,
முகரவும், கேட்கவும், சுவைக்கவும்
துவங்கி ஸ்பரிசித்து வருகிறேன்.
விண்ணை பார்த்தேன் விண்ணாகி விட்டேன் . மண்ணை பார்த்தேன் மண்ணாகி விட்டேன் உன்னை பார்த்தேன் உன்னில் என்னை பார்த்தேன் நன்றிக்கு ஒரு நன்றி மோகன்குமார்
நீங்க ரொம்ப புண்ணியம் பண்ணினவங்க. அதனால தான் ஜாலியா (சும்மா இரு. சொல்லற)இருக்கீங்க
nalla pathivu
கடை விரித்தேன் கொள்வாரில்லை. அந்த linkஐ (http://vediceye.blogspot.com/2011/07/blog-post_25.html.) கிளிக் செய்தேன் ... Page not found என்று வந்தது. மற்றபடி, இந்த பதிவும் நன்னா இருந்துச்சு ..
ரமணர் - 'கிளாசிக்'.
ஸ்வாமி, மத்தவங்களுக்கு கொடுப்பினை இல்லை. நீங்க உங்க சமாசாரத்தை பாத்துக்குங்க...
இலவசமா கிடைக்கிறதுக்கு மதிப்பே கிடையாது. செலவுக்கு கட்டணம் வாங்கிக்கொண்டு செய்யுங்க, தப்பே இல்லை!
சந்திக்கும் நாள் எப்போது என்பது எனது எதிர்பார்ப்பு . இருப்பினும் 30 ஆம் தேதி வரை இல்லை என்பது உறுதி . சரி பார்ப்போம். ஹி ஹி உங்ககிட்ட நெறைய எதிபார்க்கிறோம் நே !!!
Post a Comment