Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, November 9, 2011

www.அகஸ்திரை பாரு.com

சுப்பாண்டி சில நாட்களாக என்னை கண்டும் காணாதது போல இருந்தான். அவனின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு கேட்டதில் அதிர்ச்சி தகவலை தந்தான் சுப்பாண்டி. இண்டர்நெட்டில் ஏதோ தேடிக்கொண்டிருக்கும் பொழுது அகஸ்தியரை நேரில் காணும் மந்திரம் ஒரு வெப்சைட்டில் இருந்ததாகவும் அது எப்படி சொல்ல வேண்டும் என்ற வழிமுறையும் கொடுக்கப்பட்டுருந்தது என்றான். நானும் சுவாரசியம் அடைந்து, என்ன மந்திரம் அது என கேட்க, முகத்தை ஏதோ சீக்கு வந்த கோழி போல வேறு பக்கம் திருப்பிக்கொண்டான். ஏனப்பா என்னாச்சு என்றேன்...சும்மா கேட்டா சொல்லிடுவோமா? அதுக்கு எல்லாம் தட்சணை தரணும் என்றான்.

என்ன கொடுமை என தலையில் அடித்துக்கொண்டு என்ன தட்சணை என கேட்க, 101 ரூபாய் என்றான். நானும் அவன் கையில் கொடுத்துவிட்டு இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பவ்வியமாக மந்திர உபதேசம் கேட்க தயாராக நின்றேன். என் காதின் அருகே வந்து....

டபிள்யூ டபிள்யூ டபிள்யூ அகஸ்தியரை பாரு டாட் காம் என கூறிவிட்டு சென்றான். அவன் கூறிய வெப்சைட்டில் இருந்த மந்திரம் சுமாராக இப்படி இருந்தது... “அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வா வா” என துவங்கி கொஞ்சம் டெரரான மந்திரமாக இருந்தது. மந்திரம் 1008 முறை தினமும் கூறிவர வேண்டும். 41 நாள் சொல்ல வேண்டும், இப்படி பத்தியம் இருக்க வேண்டும் என பல கன்டிஷன்களுடன் கொடுக்கப்பட்டிருந்தது. இது பத்தாது என்று அகஸ்தியர் 41ஆம் நாள் முடிவில் நம் முன் தோன்றும் பொழுது எப்படி இருப்பார் என அவரின் அங்க லட்சணத்தையும் கூறி இருந்தார்கள்.

நமக்கு மந்திரம் சொல்லுவது, பத்தியம் இருப்பது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் என்பதால் நம்ம சீனியரிடம் அவரின் அனுபவத்தை கேட்க எண்ணினேன்.

சுப்பாண்டி நீ இந்த அகஸ்திய மந்திரத்தை சொன்னியா? 41 நாள் விரதம் எல்லாம் இருக்கனுமாமே? நீ அகஸ்தியரை பார்த்தியா? என கேட்டேன்.

தன் அகஸ்திய அனுபவங்களை கூற துவங்கினான் சுப்பாண்டி...
“ஓ முதல் நாள் தொடங்கி தினமும் பத்தியம் இருந்து காலையில் சூரிய உதயம் முன்னாடி அந்த மந்திரத்தை ஆயிரத்து எட்டு தடவ சொன்னேன். அதுவும் வாய்விட்டு - அங் சிங் மங் சிங் அகஸ்தியரே வாவா சொல்லும் பொழுது ஒரு வைப்பிரேஷன் தெரிஞ்சுது...” என்றான்.

அப்புறம் கடைசி நாள் அகஸ்தியர் வந்தாரா? - இது நான்.

“கடைசி நாள் நான் சொல்லி முடிச்சுட்டு மெல்ல கண் திறந்தா அங்கே இரண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்க..”

“சூப்பர் சுப்பு.. எப்படியோ ஸித்தி பண்ணிட்ட..”

“நீங்க வேற சாமி .....பஞ்சாப் சர்தார்ஜி ரெண்டு பேர் எம் முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தாங்க. யாரு நீங்கனு கேட்டேன். ஒருத்தர் அங் சிங்-காம், இன்னொருத்தன் மங் சிங்-காம்.” என சொல்லி தான் பெற்ற அனுபவத்தை கதறலுடன் முடித்தான் சுப்பாண்டி.

எனக்கு 101 ரூபாய் நஷ்டம்..!

------------------------------------------------------------
டிஸ்கி :

மந்திரங்கள் மற்றும் ஆன்மீக அனுபவங்கள் குருவழியில் பெறுவதே சிறந்தது. சில இணையதளங்கள் தவறாக வழிகாட்டுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இந்த பதிவு.

அகஸ்திரயை, வசிஷ்டரை காணும் மந்திரம் என கூறி அவர்கள் இந்த உயரம் இருப்பார்கள் தாடி வைத்திருப்பார்கள். கையில் கமண்டலம் இருக்கும். என விவரித்து இந்த மந்திரம் சொன்னால் அவர்கள் தெரிவார்கள் என கூறுவது தவறான வழிகாட்டுதல் ஆகும்.

மந்திரம் உபதேசிப்பவர்கள் மந்திரத்தை மட்டுமே கூறுவார்கள். அதன் விளைவை கூற மாட்டார்கள். கூறினால் நீங்கள் கற்பனையில் நடந்ததாகவே நினைப்பீர்கள் பிறகு ஆன்மீகத்தின் உண்மையை உணராமல் கற்பனை உலகில் வாழ்வீர்கள்.

அகஸ்தியரையும் பதினெட்டு சித்தர்களையும் காணும் மந்திரம் சொல்லுவதை விட, இவர்கள் எல்லாம் வணங்கிய ஒரு உயர் சக்தி இருக்கிறது. அதற்கான மந்திரத்தை சொல்லி அந்த உயர் பொருளை கண்டீர்களானால் பதினெட்டு சித்தர்களும் உங்களை காண வருவார்கள். நீங்கள் அவர்களை பார்க்க பத்தியம் இருக்க வேண்டியதில்லை..!

8 கருத்துக்கள்:

Sanjai said...

நன்று, அவர்களுக்கு ஒரு சவுக்கடி. ஆனால் மக்கள் குறுக்கு வழிகளில் செல்லாமல் திருந்தவேண்டும்.

சேலம் தேவா said...

//இவர்கள் எல்லாம் வணங்கிய ஒரு உயர் சக்தி இருக்கிறது.//

ஸ்வாமி..அது என் வெப்சைட்..?!

மதி said...

>>>ஆன்மீக அனுபவங்கள் குருவழியில் பெறுவதே சிறந்தது<<<

வாஸ்தவம்தான் ஆனால் ஒரு நல்ல குரு அமையனுமே......

Balaji Palamadai said...

"//அகஸ்தியரையும் பதினெட்டு சித்தர்களையும் காணும் மந்திரம் சொல்லுவதை விட, இவர்கள் எல்லாம் வணங்கிய ஒரு உயர் சக்தி இருக்கிறது. அதற்கான மந்திரத்தை சொல்லி அந்த உயர் பொருளை கண்டீர்களானால் பதினெட்டு சித்தர்களும் உங்களை காண வருவார்கள். நீங்கள் அவர்களை பார்க்க பத்தியம் இருக்க வேண்டியதில்லை..! // "


மேலே நீங்கள் குறிப்பிட்டு உள்ளபடி அந்த உயர் சக்தி மந்திரம் என்ன என்பதை தயவு செய்து கூறுமாறு கேட்டு கொள்கிறேன்

அன்புடன்,
பாலாஜி

Pattarai Pandi said...

சுவாமி,
நல்ல பதிவு. நன்றாக புரிந்தது. புரியாததும் புரிந்தது :)

geethasmbsvm6 said...

அருமையான அறிவுரை. உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்.

vanila said...

அந்த வசிஷ்ட மந்திரத்தையும் கூறி அருள்வீர்களானால் மகிழ்ச்சியடைவோம். அங் சிங் மங் சிங்.

Irai Kaathalan said...

நிறைய விடயங்களில் தெளிவு பெறச் செய்கிறது உங்களது தெளிவான விளக்கங்கள் .இந்த ஆத்மா என்றும் உங்களிடம் மன்றாடுவது ஒன்றே ஒன்று தான் ... " ஹி ஹி அது ஒன்னும் இல்லீங்க அடிக்கடி பதிவு போடுங்க" . உங்களது பணிச்சூழல் பற்றி இணையத்திலும் , உங்களது உரையாடல்களிலும் கண்டுள்ளேன் . இருப்பினும் இந்த ஆத்மாவை போல் எத்துனை ஆத்மாக்களோ ? இது போன்ற தெளிவான விளக்கங்கள் கிடைக்காதா என ஏங்குவது . ஆகையால் ப்ளீஸ் !!!