Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, May 30, 2011

ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 7

சங்கிய தத்துவத்தின் அடிப்படை கட்டமைப்புகளை சென்ற பகுதியில் விளக்கினேன்.


மனிதனின் உள் நிலையின் பகுதிகளே சாங்கியம் விளக்குகிறது. உனக்குள் இருப்பது மட்டுமே உண்மை நிலை என்கிறது சாங்கியம். ராமாயணம் மற்றும் மஹாபாரதங்கள் சாங்கிய தத்துவத்தின் கட்டமைப்பை கதாப்பாத்திரங்களாக கொண்டவை என்பதே உண்மையாகும். ஏதோ சில கதாசிரியரின் கற்பனையில் தோன்றியவை அல்ல. இது சாங்கிய தத்துவத்தின் விளக்க வடிவம்.

சாங்கிய வரைபடத்தில் கூறப்படும் அறிவு என்பது என்ன? ஸாத்வ குணம், ரஜோ குணம் மற்றும் தமோ குணம் என்றால் என்ன? என கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால் சாங்கிய தத்துவத்தை புரிந்துகொள்ள முடியாமல் வேறு திசையில் பயணிக்க வேண்டி வரும். ஆனால் சாங்கியத்தை நாம் கதைவடிவிலும் கதாப்பத்திரத்தின் செயல் வடிவிலும் புரிந்துகொள்வது எளிது.

உதாரணமாக ராமாயணத்தில் தசரதனின் இடத்திலிருந்து ராம கதை துவங்குகிறது. தசரதனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் புத்திரன் கிடைக்க யாகம் செய்கிறார். தசரதனுக்கு மூன்று மனைவிகள் மற்றும் அறுபதனாயிரம் துணைவிகள்.

தசரதன் என்ற பெயரை கவனியுங்கள். பத்து ரதத்தையும் கட்டுப்படுத்த தெரிந்தவன் என அர்த்தம். ஞானேந்திரியம் மற்றும் கர்மேந்திரியத்தை சேர்த்து பத்து முக்கிய இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் தசரதன். அவனுக்கு ஸாத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் கொண்ட மூன்று மனைவிகள் முறையே கெளசல்யா, கைகேயி, சுமித்ரா. ஞானேந்திரியம், கர்மேந்திரியம், தன்மத்திரைகள் மற்றும் பஞ்சபூதம் ஆகிய இருபதும், மூன்று குணத்துடன் ஆயிரம் முறை இணைவதல் (20X3X1000) அறுபதனாயிரம் துணைவிகள்.

ஸாத்வ குணம் என்பது ஆன்மீக நிலை மற்றும் மேன்மையான குணம் என்பதால் கெளசல்யாவிற்கு ராமர் என்ற ஆன்மா ரூபம் குழந்தையாக பிறக்கிறது. கைகேயி ரஜோகுணம் கொண்டவள் என்பதால் அவளுக்கு பரதன். ரஜோகுணம் பதவி மற்றும் போக நிலையில் வாழ்தலை குறிக்கும். இதனால் கைகேயி பரதனுக்கு முடிசூட்டவேண்டும் என கேட்கிறாள். சுமித்ரா என்ற தமோநிலையில் இருப்பவளுக்கு லட்சுமணன் மற்றும் சத்ருகன் பிறக்கிறார்கள். கோபம் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் என்பது தமோநிலை குணங்களாகும். அதனால் லட்சுமணன் எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவனாகிறான்.

சீதா என்ற கதாபாத்திரத்தின் தோற்றம் மனித பிறப்பு போல இல்லாமல், மண்ணுக்குள் இருந்து கிடைக்கிறாள். ராமாயணத்தின் முடிவில் சீதா மண்ணுக்குள்ளேயே சென்றுவிடுகிறாள். சீதா பிருகிரிதி ரூபமாக காட்சி அளிக்கிறாள். இயற்கையே வடிவானவள். அதனால் பொறுமையின் சிகரமாகவும், இராவணனிடம் கோபம் கொண்ட சீற்றமாகவும் காணப்படுகிறாள்.ஆன்மா என்ற புருஷார்த்த நிலையில் இருக்கும் ராமர், தன் சுய தன்மையையும் பிரகிருதி சீதையை விட்டு விலகி நிற்கும் நிலை ஏற்படுகிறது. ப்ராண சக்தி என்ற அனுமான் (வாயு புத்ரன்) மூலம் மீண்டும் இணையும் தன்மையே ராமாயணம்.

நம்முள்ளும் ஆன்ம ரூபமாக இருக்கும் ராமர், ப்ரகிருதியினால் விலகி தன்னை உடலாகவும் உடல் உறுப்பாகவும் கருதுகிறது. உங்களின் உள்ளே ராமர் சீதையை விட்டு விலகிவிட்டார்..! வாயுவால் பிறந்த வாயுபுத்ரன் என்கிற ஆஞ்சநேயரால் (சுவாசத்தால்) இருவரையும் இணைத்தால் மீண்டும் ராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். நீங்கள் ஆன்மா என்கிற தன்மையை உணர்ந்து ஆன்மாவாகவே இருப்பதை பட்டாபிஷேகம் என்கிறேன்.

உங்கள் சுவாசத்திற்கே தெரியாது அதற்கு எத்தனை விஷயங்கள் செய்ய முடியும் என்பது. அது போலத்தான் ஹனுமானுக்கு தன் சுயபலம் தெரியாது. வேறு ஒருவர் சொல்லுவதை கொண்டே தன் பலத்தை உணர முடியும் என்கிறது ராமாயாணம். குரு கூறும் ப்ராணாயம முறைகளை கொண்டு உங்களின் சுவாசத்தை சரி செய்தால் நீங்களும் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்பதே இதன் பின்னால் உள்ள கருத்து.

இவ்வாறு விளக்க துவங்கினால் ராமாயணத்தில் அனைத்து கதாப்பாத்திரங்களையும் நம்மால் முழுமையாக உணர முடியும். சாங்கிய கருத்தை வெவ்வேறு கதாப்பாத்திரம் வாயிலாக கூற முனைவதே இதிஹாசங்கள்.

சாங்கிய கட்டமைப்பையும் அதனால் ஏற்படும் இதிஹாச தொடர்பையும் உணர்ந்தீர்கள் அல்லவா? இப்பொழுது நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் எளிமையாக பதில் கூறமுடியும்.

இராவணன் ஏன் பத்து தலையுடன் இருக்கிறான்?
இராவணன் அவனுடைய சகோதரர் இருவர் இணைந்து ஏன் மூன்று நபர்கள் மட்டும் இருக்கிறார்கள்?
விபீஷணன் எனும் இராவணனின் சகோதரர் ஏன் நல்ல பண்புடன் இராமனை பின்பற்றுகிறார்? மற்றொரு சகோதரர் கும்பகர்ணன் ஏன் தூங்கிக்கொண்டே இருக்கிறார்?

இதற்கெல்லாம் உங்களால் உடனுக்குடன் பதில்கூற முடிகிறது என்றால் நீங்கள் சாங்கிய கட்டமைப்பை ஓரளவேனும் புரிந்துகொண்டீர்கள் என அர்த்தம்.

இப்பொழுது சொல்லுங்கள் ராமாயணம் உண்மையா? நடந்த கதையா? இல்லை நடக்கின்ற கதையா?

(வினை தொடரும்)

13 கருத்துக்கள்:

subramanian said...

சுவாமிஜி,

கட்டுரை பதிவு மிகவும் அருமை.
ஆராய்ச்சியை தூண்டும் விறுவிறுப்பான தொடர்.

- சுப்பிரமணியன் (மதுரை)

MANI said...

///நம்முள்ளும் ஆன்ம ரூபமாக இருக்கும் ராமர், ப்ரகிருதியினால் விலகி தன்னை உடலாகவும் உடல் உறுப்பாகவும் கருதுகிறது. உங்களின் உள்ளே ராமர் சீதையை விட்டு விலகிவிட்டார்..! வாயுவால் பிறந்த வாயுபுத்ரன் என்கிற ஆஞ்சநேயரால் (சுவாசத்தால்) இருவரையும் இணைத்தால் மீண்டும் ராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். நீங்கள் ஆன்மா என்கிற தன்மையை உணர்ந்து ஆன்மாவாகவே இருப்பதை பட்டாபிஷேகம் என்கிறேன்.///

மிக அருமையான விளக்கங்கள் ஸ்வாமி. ஆனால் நீங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு விளக்கம் எனக்கு தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்களேன்.

Pattarai Pandi said...

சுவாமி,
புரிந்த வரை முயற்சிக்கிறேன்...

இராவணன் ஏன் பத்து தலையுடன் இருக்கிறான்?
ரஜோ குணத்துடன் ஞான & கர்ம இந்திரங்களை கட்டுக்குள் வைத்திருபதால் 10 தலை உள்ளது.

இராவணன் அவனுடைய சகோதரர் இருவர் இணைந்து ஏன் மூன்று நபர்கள் மட்டும் இருக்கிறார்கள்?
மூன்று குணங்களை குறிபதற்கு

விபீஷணன் எனும் இராவணனின் சகோதரர் ஏன் நல்ல பண்புடன் இராமனை பின்பற்றுகிறார்? மற்றொரு சகோதரர் கும்பகர்ணன் ஏன் தூங்கிக்கொண்டே இருக்கிறார்?
விபீஷணன் - ஸாத்வ குணம்; கும்பகர்ணன் - தமோ குணம்;

அருமையான தொடர். எனது சந்தேகங்களை பொறுத்திருந்து பின்பு கேட்கிறேன்.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சுப்ரமணியன்,
திரு மணி,
திரு பட்டரைபாண்டி,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

திரு பட்டரைபாண்டிக்கு 100 மதிப்பெண்கள் :) சரியான விடை..!

jagadeesh said...

ஸ்வாமி, இப்படி ஒரு தத்துவத்தை, புராண வடிவில் கொடுத்தால் மக்கள் புரிந்து கொள்வார்கள் என நினைத்தனரோ. கஷ்டமாச்சே. இதற்க்கு அவர்கள் பல மடங்களை நிறுவி, சீடர்கள் வழியில் யோகத்தை அனைவருக்கும் போதிதிருக்கலாம். இந்த தத்துவத்தை பாமர மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள் என நினைத்தனரோ. பக்குவப் பட்ட ஆன்மாக்களுக்கு தானே புரியும் இதெல்லாம். உலகியலில் இருப்பவர்கள் எப்படி ஸ்வாமி?

Senthil said...

கட்டுரையும் கதாபத்திர விளக்கங்களும் கனகச்சிதம். இதிகாசங்களை இப்படி ஒரு கருத்து நிலையில் வைத்து பார்க்கும் ஒரு அனுபத்தை தந்ததற்கு நன்றி ஸ்வாமி.

இதன் சாராம்சம் சிறிது விளங்கினாலும், இந்த தத்துவத்தை விளக்க இப்படி ஒரு கதையாக்கம் உண்மையில் மக்களிடம் குறிபாய் சேர்க்க வேண்டிய விஷயத்தை செய்ததாக தெரியவில்லையே ஸ்வாமி.

மாறாக நற்குணம் வேண்டும், அதர்மம் தோற்கும் போன்ற மேலோட்டமாய் தெரிகிற கருத்தே நிறைவாய் சேர்ந்துள்ளது.

Sanjai said...

ராமாயணத்துக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா ...
அருமையோ அருமை !!
நான் லேட்டா வந்தேன் ... அதற்குள்ளாகவே பதில் வந்துவிட்டது :)

Siva Sottallu said...

// மூன்று குணத்துடன் ஆயிரம் முறை இணைவதல் (20X3X1000) அறுபதனாயிரம் துணைவிகள்.//

ஸ்வாமி, குறிப்பாக ஆயிரம் முறை என்று சொல்வதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கின்றதா?

Mahesh said...

very interesting perspective....

KARIKALVALAVAN said...

Entirely a different approach swami

ஸ்வாமி ஓம்கார் said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்.

திரு சிவா,

//ஸ்வாமி, குறிப்பாக ஆயிரம் முறை என்று சொல்வதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கின்றதா?//

10^3 என்பதே ஆயிரம். முக்குணங்கள் பத்து இந்திரியங்களுடன் இணைவதால் ஏற்படுவது.

யாரும் கேட்கவில்லையே என நினைத்தேன். அக்குறையை தீர்த்து வைத்தீர்கள் :)

ADMIN - அனுபவம் புதுமை said...

நிறைவான விளக்கம் உங்கள் பனி இன்னும் தொடர்ந்து மங்கிப் போய்க்கொண்டிருக்கும் மக்கள் விழிப்பு பெற வேண்டும்.

suji said...

சுவாமி ,
இன்று தான் முதல் முறையாக உங்கள் பக்கத்துக்குள் பிரவேசித்தேன் .அற்புதம் ! இவ்வளவு எளிமையாக விளக்குகின்றீர்களே ,என் தாகம் இன்னும் நிறைவடையவில்லை . தொடர்ந்து எதிர்பார்கின்றேன் .