முழுமையான ஞானிக்கும், இறைவனை பற்றி தெரியாமல் இருக்கும் அறியாமை கொண்டவர்களுக்கு கடவுளை பற்றிய கவலை இருக்காது. முன்னவர் உணர்தவர், பின்னவருக்கு அதைப் பற்றி கவலை இல்லை.
அறியாமையில் இருக்கும் மக்களை விட கொஞ்சம் அறிந்தவர்களின் நிலை மிகவும் வேடிக்கையானது. எளிமையாகச் சொன்னால் நிறைகுடமும் காலி குடமும் தழும்பாது..!
பாதி நிறைந்த குடமான இவர்களின் அல்லாட்டம் இருக்கிறதே சொல்ல சொல்ல நிறைவடையாதது. இந்த பாதி நிறை குடங்களை அடையாளம் காண்பது எளிது. :)
கடவுளை பற்றி பேசினோமானால் உடனே ஒரு ரெடிமேட் டயலாக் வைத்திருப்பார்கள். “கடவுள் நமக்கு உள்ளேதான் இருக்கிறார், அவரை வெளியே தேடி என்ன பிரயோஜனம்?”
இவர்கள் இப்படி சொல்லுவதை கேட்பவர்கள் மெளனமாக இருந்தால் இவர்கள் பிழைத்தார்கள். அப்படி இல்லாமல், “நமக்குள்ள கடவுள் இருக்காருனு சொல்றீங்களே எங்க இருக்காரு? சுண்டு விரலிலையா? என் தலைக்குள்ளையா?” என கேட்டால், விதாண்டாவாதம் செய்யாதீங்னு சொல்லிவிட்டு இடத்தை காலி செய்வார்கள். இவர்களும் தம்முள்ளே இறைவன் எவ்வடிவில் இருக்கிறான் என ஆராயமாட்டார்கள்.
சிலர் கடவுள் மனசில் இருக்கிறார், அதனாலத்தான் “கட+உள்” என சொல்லுகிறோம் என மெய்சிலிர்க்க வைப்பார்கள். கடவுள் அன்ம வடிவில் இருக்கிறார் என தாங்கள் எங்கோ படித்ததை அவிழ்த்துவிடுவார்கள்.
“நட்டகல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்” எனும் சிவவாக்கியர் என்ற மெய்ஞான சித்தரின் பாடல் இவர்களிடம் சிக்கி படும்பாடு இருக்கிறதே என்னவென்று சொல்ல? நாதன் நம்முள்ளே இருக்கார் என சொல்ல இப்பாடலை சொல்லியாகிவிட்டது. நாதன் நம்முள்ளே எங்கே எதுபோல இருக்கிறார் என ஆராய்ந்ததுண்டா? நம்மில் வியர்வையாக? இரத்தமாக? சீழாக? மலமாக நம்முள் என்னவாகத்தான் இருக்கான் அந்த நாதன்? இவ்வாறு அழுத்திக்கேட்டால் இவர்கள் சொல்லும் பதில் “இப்படி பேசாக்கூடாது.உம்மாச்சி கண்ணக்குத்தும்”- தானும் ஆராயாமல், பிறரையும் ஆராயவிடாமல் இருக்கும் இவர்களுக்கு சரியான வழிகாட்டுதலே சாங்கிய தத்துவம்.
நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான இறைத்தத்துவங்கள் உண்டு. அதில் முதன்மையானதும் அற்புதமான தத்துவம் சாங்கியம். கபிலர் என்ற முனிவர் இத்தத்துவத்தை தோற்றுவித்தார் என் கூறப்பட்டாலும், சாங்கிய தத்துவத்தின் வரலாறு குழப்பமாகவே உள்ளது. கபிலர் இந்தியர் எனவும், இல்லை அவர் வெளிநாட்டினர் என்றும் பல கதைகள் உண்டு. கபிலர் பிறந்த இடம் காலிபோர்னியா என சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.
ஆன்மீக தத்துவத்தை கண்டுபிடுத்தவரை விட நமக்கு தத்துவம் தானே முக்கியம்? சாங்கிய தத்துவத்தை எளிமையாக சொல்ல முயல்கிறேன்.
“நான் என்ற இருப்பே உண்மை. மற்றவை எல்லாம் பொய்.” இதுவே சாங்கியத்தின் ஆதார வரிகள்.
நீங்கள் பார்க்கும் உலகம், இந்த வரிகள், கம்ப்யூட்டர் என அனைத்தும் பொய். இது நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளும் மாய தோற்றம். உண்மையில் நீங்கள் இருப்பது மட்டுமே நிஜம்..!
இக்கருத்தை உதாரணத்துடன் புரிந்துகொள்வோம்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம். அப்பொழுது இந்த உலகமும் அதன் இருப்பும் எங்கே சென்றது?
அதே போல கனவில் பல இடங்களையும் மனிதர்களையும் காண்கிறோம். முழித்தவுடன் அவை எங்கே சென்றன?
ஆக நம் உறக்கத்திலும், விழிப்பிலும் காண்பது உண்மையல்ல. நாம் இருப்பது மட்டும் தானே நிஜம்?
இயல்பாகவே பொய்யை பற்றி தெரிந்துகொள்வதில் நமக்கு ஆர்வம் அதிகம். மெய்யை பற்றி தெரிந்துகொள்ள கசக்கும்..!
பாருங்கள் தமிழில் கூட நம் உடலுக்கும் உண்மைக்கு ஒரே சொல், “மெய்”. ஒரு சித்தரின் பெயர் கூட மெய்கண்டார். இவர் கண்ட மெய்யை நாமும் கண்டுகொள்ளப் போகிறோம்.
இதுவரை நாம் மேலோட்டமாக பார்த்த விஷயங்கள் எளிமையாக தோன்றலாம். இனிவருவது கதை படிப்பதை போல படித்தால் புரியாது. அடுத்த பகுதியை படிக்க அமைதியான சூழலும், கவனம் தேவை...!
அதுவரை வேதமந்திரத்தின் ஒருவரியை கூறிக்கொண்டிருங்கள்.
அசத்தோமா சத்கமைய.....
பொய்மையிலிருந்து மெய்மை அடைய வேண்டும்.. பெய்மையான புறத்தைவிட்டு மெய்யான அகத்தை காண வேண்டும்...!
(வினைத்தொடரும்)
6 கருத்துக்கள்:
//அறியாமையில் இருக்கும் மக்களை விட கொஞ்சம் அறிந்தவர்களின் நிலை மிகவும் வேடிக்கையானது.// உண்மை சுவாமி
soopperr......
apologies for correcting.... nothing intentional... it is actually असतोम सद्गमय (asatoma sadgamaya)
திரு ராபர்ட் க்ளைவு,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு மகேஷ்,
எதில் என்ன அப்பாலஜி? ஒலிமட்டுமே கொண்டவறை வரிவடிவில் வரும் பொழுது நேருவது தானே இது. மேலும் நான் தமிழிலேயே ததிங்கினதோம்..இதில் வேத மந்திரத்தை எழுத சொன்னால் ? :)
மிக்க நன்றி.
சுவாமி நிச்சயம் உங்களது எதிவரும் பதிவுகள் நிறைய மாற்றங்களை , உங்களை தொடர்பவர்களிடம் ஏற்படுத்தும் என சொல்லுவதோடு , உங்கள் சேவை தடையின்றி தொடர இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் .
பொய்மையிலிருந்து உண்மைக்கு என்னை அழைத்துச் செல்வாயாக....
பொய்மையிலிருந்து உண்மைக்கு என்னை அழைத்துச் செல்வாயாக....
பொய்மையிலிருந்து உண்மைக்கு என்னை அழைத்துச் செல்வாயாக....
Post a Comment