Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, November 9, 2010

சத் - சித் - ஆனந்தம்

பத்தி எழுத்து (column writingg) என்பது இலக்கிய வழக்கில் மிகவும் பிரசித்தி. எதை பத்தியும் எழுத தெரியாதவர்கள் பத்தி எழுத வருவார்கள் என வேடிக்கையாக பலர் கூறுவார்கள். சுவையான செய்திகளை துணுக்காக இல்லாமல் ஆழமாகவும் அறிவுப்பூர்வமாகவும் வழங்குவதில் எழுத்தாளனுடைய ஆளுமை பத்தி எழுத்தில் வெளிப்படும்.

தமிழ் எழுத்துலகில் சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஞானி என பலர் வார இதழ்களில் இது போன்ற பத்தி எழுத்துக்களை எழுதினார்கள். சில புகழ்பெற்ற எழுத்தாளர் தன் வலை பக்கத்தில் “பழைய பஞ்சாங்கம்” என்ற பெயரில் பத்தி எழுத்து எழுதுவது உங்களுக்கு தெரிந்ததே..! :))

சுபவரம் என்ற ஆன்மீக மாத இதழில் ஆன்மீகத்தை பற்றி எழுதி கொண்டிருந்த நான், ஆன்மீக பத்தி எழுத துவங்கிவிட்டேன். சத்-சித்-ஆனந்தம் என்ற தலைப்பில் மூன்று முக்கியமான கருத்துக்களை எழுதுகிறேன். சென்ற மாதத்திலிருந்து இந்த பகுதி வெளியிடப்படுகிறது. உங்களின் பார்வைக்காக அந்த கட்டுரையை கீழே கொடுத்துள்ளேன். படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை கூறுங்கள். நான் பத்தி எழுத லாயக்கா என உங்கள் விமர்சனம் மூலம் அறிந்து கொள்கிறேன்.

-------------------------------------------
சத் - சித் - ஆனந்தம்

இறைவனின் முழுமையான சொரூபம் எது என்ற கேள்விக்கு சத் சித் ஆனந்த ரூபம் என்பார்கள். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு சத் சித் ஆனந்தம் என்றால் விளக்கம் தெரியும் ?

உண்மையில் சத் சித் ஆனந்தம் என்பதை இணைத்து சச்சிதானந்தம் என தமிழ் வழக்கில் கூறுவார்கள். பலருக்கு இயற்பெயர் கூட இவ்வாறு இருப்பதுண்டு. இக்கருத்தை விளக்க வேதத்தையும், வேதாந்தத்தையும் மேற்கோள் காட்டி பேசினால் மணிக்கணக்காக பேசலாம். முழுமையான இந்த சொல்லை விளக்க ஆயுள் போதாது. ஏன் தெரியுமா?

இறைவன் என்ற பிரம்மாண்டத்தை சில மணித்துளிகளில் விளக்க முடியுமா?

இது திருப்பதி லட்டுவை ஒரே வாயில் எறும்பு சாப்பிட முயற்சிக்கும் செயல் அல்லவா?அந்த எறும்பு ஒரே கவளமாக சாப்பிட முடியாவிட்டாலும் ஒவ்வொரு பருக்காக சுவைத்து உண்ண முடியும். அப்படி இனி வரும் இதழ்களில் சத்- சித் - ஆனந்தம் என்ற தெய்வீக ப்ரசாதத்தை சுவைத்து உங்கள் வாழ்க்கையில் ஒளிமையமாக்கி கொள்ளுங்கள்.

சத்
---

லிங்க ரூபம் என்பது பலருக்கு சிவனின் திருமேனி, இறைவனின் உருவம். ஆனால் வெளிநாட்டினரும், தொல்லியல் நிபுணர்களும் இது இனப்பெருக்க உறுப்பை குறிக்கிறது என்கிறார்கள். வெளிப்படையாக சொல்வதென்றால் பலர் லிங்கத்தை பார்த்து கேலி செய்வதும் உண்டு. உண்மையில் லிங்க ரூபம் ஆணின் இனப்பெருக்க உறுப்பை குறிக்கிறதா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக கேட்பதற்கோ பயம். காரணம் நாம் விரும்பி வணங்கும் இறைவனின் உருவை பற்றி கேள்வி கேட்டு, பிறகு ஆமாம் இது இனப்பெருக்க உறுப்பைத்தான் குறிக்கிறது என சொல்லிவிட்டார்களானால் என்ன செய்ய?
மருந்தை சாப்பிடும் பொழுது குரங்கை நினைக்காதே என சொன்ன கதையாக லிங்கத்தை பார்க்கும் பொழுதெல்லாம் இது ஞாபகம் வருமே? அப்பறம் எங்கே சாமி கும்பிடுவது என எண்ணுபவர்கள் பலர் நம்மிடையே இருக்கிறார்கள்.
கவனியுங்கள். லிங்க உருவம் ஆணின் இனப்பெருக்க உறுப்பை குறிப்பதில்லை. லிங்கம் என்ற வார்த்தை ஆணின் உறுப்பை குறிக்க தமிழில் பயன்படுத்தப்படுகிறதே தவிர இதற்கும் சிவ லிங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அப்படியானால் லிங்கம் என்பது என்ன?
பஞ்ச பூதத்தால் உருவாக்கப்படும் எந்த ஒரு பொருளின் அடைப்படை உருவமும் லிங்கம் என்கிற நீண்ட உருளை வடிவமாகும். கோழி முட்டையின் வடிவம், மழை துளியின் வடிவம், நம் சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்களின் வடிவம், தாவரத்தின் விதைவடிவம் என எந்த பொருளின் அடிப்படை கோள வடிவமாக இருக்கும்.

மனித உடலின் அடிப்படையாக ‘செல்’ இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு செல்லின் வடிவமும், அதன் உட்கருவின் வடிவமும் நீண்ட கோள வடிவமே. இவ்வாறு கோளவடிவில் இருக்கும் இறையாற்றல் கொண்ட லிங்க வடிவத்திற்கு பாண லிங்கம் என்பார்கள். சமஸ்கிருதத்தில் பாணம் என்றால் குண்டு அல்லது புல்லட் என பெயர். பாணம் தொடுப்பது,அம்பு எய்வது என கேள்விபட்டிருப்பீர்கள். பாண லிங்கம் என்பது பார்க்க கோழி முட்டையை போல நீண்டு முனைகள் குவிந்து இருக்கும்.

ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் இத்தகைய லிங்க ரூபங்களை காணலாம்.

அனேக கோவில்களில் இருக்கும் லிங்கம் பாண லிங்க ரூபமாக இல்லாமல் முழுமையான மூன்று பிரிவுகளுடன் இருக்கிறது. லிங்கம், ஆவுடையார் மற்றும் லிங்க பீடம் என இவற்றை விளக்கலாம்.

உருவமற்ற ப்ரணவ மந்திரமான ஓம் என்ற ஓசையின் உருவ நிலையே லிங்கம் என்கிறார் திருமூலர். ஓம் என்ற ப்ரணவ மந்திரம் அ-உ-ம என்ற மூன்று ஓசைகளால் ஆனது. அ என்பது லிங்க பீடத்தையும், உ என்பது ஆவுடையாரையும், மஎன்பது லிங்கத்தையும் குறிக்கிறது. லிங்கம் மூம்மூர்த்திகள் என்ற பிரம்ம விஷ்ணு மற்றும் மஹேஷ்வரனின் ரூபம் என விளக்குகிறார். இவ்விளக்கம் கொண்ட திருமந்திரத்தை பார்ப்போமா?

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.
- திருமந்திரம் - 1752

இனி லிங்கத்தை பற்றி யாராவது கேட்டால் உண்மையை விளக்குவீர்கள் தானே?
----
சித்
---
மிகவும் பிரசித்திபெற்ற கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கே மக்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. வரிசையில் இறைவனை வணங்க அனைவரும் போட்டா போட்டி நடத்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவ்வளவு அவசரம் இல்லை என்பதால் மெதுவாக ஒதுங்கி கூட்டம் குறையும் வரை காத்திருக்க துவங்கினேன்.

ப்ரார்த்தனை முடித்துவிட்டு வந்த சிறுவன் ஒருவன் கையில் இருந்த குங்கும பிரசாதத்தை தூணில் கொட்டினான். அவனை கூப்பிட்டு, “தம்பி ஏன் இப்படி செய்கிறாய்?” என கேட்டேன். “சாமி கும்பிட்டுட்டு எல்லாரும் இதைத்தான் செஞ்சாங்க அத்தான் நானும் செஞ்சேன்” என்றான்.

அவனின் பதில் சுளீர் என என்னுள் தைத்தது. தவறு அவனுடையது அல்ல என உணர்ந்து, “தம்பி உங்க பள்ளியில் தூய்மை பற்றி எதுவும் சொல்லித்தரலையா? உங்க வீட்டில் சாப்பிட்டது போக மீதம் இருந்தால் சுவர்,ஜன்னலில் கொட்டி வைப்பாயா? கோவில் என்பது நம் வீட்டை விட மேலான விஷயம் அல்லவா?” என கேட்டேன்.

ஏதோ புரியாத பாஷையில் பேசியது போல என்னை மலங்க மலங்க பார்த்து விட்டு ஓடிவிட்டான். கூட்டம் குறைய துவங்கியதும் நானும் தரிசனத்திற்கு சென்றுவிட்டேன். பிறகு பிரகாரம் சுற்றி வெளியே வரும் பொழுது கையில் சிறிய காகிதத்தையும், துணியையும் வைத்துக்கொண்டு தூண் மற்றும் தரையை சுத்தம் செய்துகொண்டிருந்தான் அந்த சிறுவன்....!

இந்த காலத்தில் பெரியவர்கள் தான் சித்தம் கலங்கி இருக்கிறார்கள்.

சிறுவர்களும், இளைஞர்களும் கூறும் வழியில் கூறினால் ஆக்கப்பூர்வமாக இருக்கிறார்கள் என புரிந்து கொண்டேன். இனிமேல் நாமும் கோவில் ப்ரசாதங்களை கண்ட இடங்களில் போடாமல் இருப்போமா?

ஆனந்தம்
-----------

மனிதன் ஒரு விசித்திரமான உயிரினம். ஏன் இப்படி கூறுகிறேன் தெரியுமா? மிருகங்கள் உணவை தேடும், பறவைகள் வாழிடத்தை தேடும் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இவையெல்லாம் தன்னிடம் இல்லாததை தேடுகிறது.

ஆனால் மனிதன் மட்டுமே தன்னிடம் இருப்பதையே தேடுவான். வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

ஆனந்தம் என்பது நமக்குள் எப்பொழுதும் இருந்தாலும் நாம் அதை தேடி ஓடுவோம். ஆணவம் என்பது ஆனந்தத்தை மறைக்கும் ஒரு திரையாக நம்மில் இருப்பதால் நம்மில் இருக்கும் ஆனந்தம் வெளியே எங்கோ இருப்பதாக நினைக்க வைத்து மனம் நம்மை ஏமாற்றிவிடுகிறது. நம்மில்

முழுமையாக ஆனந்தம் இல்லாத பொழுது ஆனந்தம் குறையும் இடத்தில் ஆணவம் நிறைந்து கொள்ளுகிறது.

சிலர் இதை புரிந்துகொள்ளாமல் இறைவனிடம் ஏதே ஒன்றை கொடுத்து அதற்கு பலனாக மற்றொன்றை பெற நினைப்பார்கள். சிதறு தேங்காய் உடைக்கிறேன், அபிஷேகம் செய்கிறேன் என துவங்கி ஆடு மாடு பலி இடுவது வரை செய்கிறார்கள்.

ஆசிரியர் ஆங்கில பாடம் கற்றுக்கொடுத்ததும் உங்களுக்கு காணிக்கையாக A முதல் Z வரை எழுத்துக்களை கொடுக்கிறேன் என ஒரு மாணவர் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படிபட்ட செயல் தான் இறைவன் படைத்ததையே இறைவனுக்கு வழங்குவதும் என பலருக்கு புரிவதில்லை.

ஒரு புகழ் பெற்ற ஞானியை பார்க்க அந்த ஊரின் செல்வந்தர் வந்திருந்தார். அதிக நீர் பொங்கி ஓடும் ஆற்றங்கரை அருகே இருக்கும் சிறிய பாறையில் கண்களை மூடி அமர்ந்திருந்தார் ஞானி. அவரின் முன் ஒரு பட்டுத்துணியை விரித்து இரண்டு வைர கற்களை வைத்துவிட்டு விழுந்து வணங்கினார் செல்வந்தர்.
மெல்ல கண்களை திறந்த ஞானி என்ன வேண்டும் என்பது போல பார்த்தார். உங்களுக்கு காணிக்கையாக விலை உயர்ந்த வைரங்களை கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு ஞானத்தை போதியுங்கள் என்றார்.

கண்களை மூடு என்பது போல சைகை செய்தார் ஞானி. கண்கள் மூடியபடி சில நிமிஷங்கள் கரைந்தது. செல்வந்தர் சிறிது நேரம் கழித்து கண்கள் மெல்ல திறந்து பார்த்தால் ஞானியின் முன் ஒரே ஒரு வைரம் மட்டுமே இருந்தது.

“ஞான குருவே இரண்டு வைரம் உங்களுக்கு கொடுத்தேன். ஒரு வைரம் காணவில்லையே எங்கே?” என கேட்டார் செல்வந்தர்.

ஞானியோ சைகையால் ஆற்றில் வீசி விட்டேன் என காண்பித்தார். அதிர்ச்சியடைந்த செல்வந்தர், “என்ன ஆற்றில் வீசிவிட்டீர்களா எங்கே எறிந்தீர்கள்?” என்றார்.

பதட்டமடையாமல் ஞானி மற்றொரு வைரத்தை எடுத்து ஆற்றின் மையத்தில் வீசி, “இங்கே தான்” என சுட்டிகாட்டினார்.

இந்த செல்வந்தர் பிரம்ம ஞானத்தை இரண்டு வைரக்கல்லில் விலை பேசியது போல நாமும் நம் வாழ்க்கையில் அடைய வேண்டிய பெரிய விஷயங்களுக்கு சில்லறைத்தனமான பொருட்களை கடவுளுக்கு கொடுக்கிறோம்.

இறைவன் நமக்கு அருள்வதையே தொழிலாக கொண்டவன் என்றும் நாம் இறைவனிடத்தில் பெருவதையே வாழ்வின் அடைப்படையாக கொண்டவர்கள் என்பதை உணர்ந்தோம் என்றால் என்றும் ஆனந்தம் தானே?
--------------------
- நன்றி சுபவரம் அக்டோபர் 2010

10 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...

நல்லா வந்திருக்கு, பத்திஎழுத்து சிவாரசியமாத்தான் இருக்குது..

லதானந்த் said...

ட்ரண்ட் செட்டர்கள்னு சில பேரு இருக்காங்க. அவிங்க ஆரமிச்சு வெச்சா அப்பறம் நெம்பப் பேரு பலோ பண்ணுவாங்க.

யாசவி said...

சத் - இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாம்

சித் - அடிபொலி

ஆனந்தம் - அடிபொலி

எழுதுங்க சாமி!! எழுதுங்க !! இந்த படிக்கிறவங்களே இப்படித்தான் எதாவது சொல்வாங்க.

Thirumal said...

சுவாமி, பெரிய விஷயங்களை எளிதாய், நீரோட்ட நடையில் விளக்கிச் செல்கிறீர்கள்..
தன்யரானோம்..

சுபவரத்தில் இந்த வைரக்கல் கதையும், வேறொரு பக்கத்தில் நீங்கள் சொல்லியிருந்த "இறைவன் மனிதனை வணங்கும் கதை"யும் என்றென்றும் மனதில் பதிந்திருக்கும்..
நன்றி..

வெங்கட் நாகராஜ் said...

சத்-சித்-ஆனந்தம்: நல்ல விஷயங்கள். கோவில்களில் உள்ள தூண்களில் விபூதி/குங்குமத்தினை கொட்டும் பெரியவர்களே பலர் இருக்கிறார்கள் - அவர்கள் ஒழுங்காய் இருந்தால்தானே சிறுவர்களுக்குச் சொல்லித்தர.

நல்லதொரு பகிர்வு. நன்றி.

pranavastro.com said...

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரம்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்து உள் வட்டம் நிறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே இதற்க்கு பொருள் தயவு செய்து கூறினால் நன்றாக இருக்கும்

virutcham said...

எல்லாம் தரும் கடவுளுக்கு நாம் என்ன கொடுத்து விட முடியும் என்பது உண்மை தான் என்றாலும் ,
கோவில் என்ற அமைப்பை சார்ந்து பலர் வாழ்கிறார்கள் இல்லையா? அதாவது வாசலில் செருப்பு கடை, அர்ச்சனை, பூசை பொருட்கள் கடை முதற்கொண்டு உள்ளே கருவறை வரை கோவில் சார்ந்த வாழ்வாதாரத்தை சார்ந்த மக்கள் வாழ வேண்டும் என்றால் கோவிலை நாடி வருபவர்கள் ஏதாவது வேண்டுதலோடு வருவதோ அல்லது ஒரு சிறு பொருளேனும் வாங்கி உள்ளே சாமிக்கு தருவதோ அவசியமாகிறது. ஆனால் இந்த புரிதலோடு அல்லாமல் சுயநலமோடு தான் ஆலயங்களுக்கு கூட்டம் வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

Mahesh said...

ஆனந்தம் - பரமானந்தம் !!!

எல் கே said...

பலவித பக்திகளில் பிரதிபலன் எதிர்பார்த்து , நான் உனக்கு இதை செய்கிறேன் நீ எனக்கு இதை தா என்பதும் ஒரு வகை அல்லவா ??

Killivalavan said...

பத்தி எழுத்து (colomn writing)
column
-------
காகிதத்தையும், துணையையும் வைத்துக்கொண்டு

துணியையும்
---------