குரு பூர்ணிமா
- பரமானந்த[ தின்] ரகசியம்.
மனித மனம் என்பது முகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது. அதில் தோன்றும் பிம்பங்கள் நிலையற்றது. பிம்பங்களின் இயக்கங்கள் அனைத்தும் நிலையற்றது என்றாலும், அந்த கண்ணாடி பிம்பங்களை பிரதிபலிப்பதை நிறுத்துவதில்லை. மனதும் நிலையற்ற பிம்பங்களை தோற்றுவிக்கும் மாயக் கண்ணாடியாகவே இருக்கிறது. மகிழ்சியின் உச்சம், துயரத்தின் உச்சம் என இரு துருவங்களை மனது அடைந்தாலும் இந்த உச்ச நிலை எனும் அளவு நிலையற்றது.
குழந்தையாக இருக்கும் பொழுது இனிப்புக்கும், வாலிபத்தில் எதிர் பாலினத்திடமும் மத்திய வயதில் பணத்தேடல் என்றும் மனித மனம் மகிழ்ச்சி எனும் ஒன்றை தானே கற்பித்துக்கொண்டு செயல்படுகிறது. இனிப்பை வழங்கியதும் மகிழ்ச்சியடையும் குழந்தை, அதற்குப்பிறகு இனிப்பு வேண்டாம் என சொல்வதில்லை. மேலும் பல இனிப்புகள் மற்றும் வெவ்வேறு சுவைகொண்ட இனிப்புகள் என குழந்தையின் மகிழ்ச்சியின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது. மகிழ்ச்சி எல்லை முடிவுற்று விரிவடைவது குழந்தைக்கு மட்டுமல்ல, அனைத்து வயதினருக்கும் அதற்கேற்ப அவர்கள் கற்பித்த மகிழ்ச்சிகரமான விஷயத்திற்கும் பொருந்தும். அளவுகடந்த மகிழ்ச்சியை பற்றி குறிப்பிடும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சி என குறிப்பிடுவதுண்டு.
உண்மையில் மகிழ்ச்சிக்கு எல்லையோ, எல்லையை கடந்த நிலையோ கிடையாது. மகிழ்ச்சி என்ற உணர்வு தற்காலிகமானது. இதற்கு காரணம் உண்டு. முழுமையற்ற பொருளினால் ஏற்படும் மகிழ்ச்சி தற்காலிகமானது.
முழுமையான பொருளால் ஏற்படும் மகிழ்ச்சி முழுமைபெற்று ஆன்மா வரை நிறைவை அளிக்கும். முழுமையான தன்மையால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஆனந்தம் என்று பெயர். ஆனந்த நிலையை உணரவேண்டுமானால் மாயை அற்ற மனதால் முழுமையான வஸ்துவால் மட்டுமே உணரமுடியும். ஆனந்த நிலை என்பதும் தற்காலிகமானது அல்ல. ஆனந்தம் பூர்ணமான வஸ்துவால் ஏற்படுவதால் ஆனந்தமும் பூர்ணமானதே.
பூர்ணத்துவம் பெற்ற பொருளால் ஏற்படுவது ஆனந்தம் என்றால் பூரணத்துவம் பெற்ற பொருள் எது என்ற கேள்வி எழும். எந்த பொருள் எப்பொழுதும் முழுமையாக இருக்கிறதோ, எந்த பொருள் நமது மாயையால் குறையாகத் தெரிகிறதோ, எந்த பொருள் எப்பொழுதும் தனது முழுமையை இழப்பதில்லையோ அதுவே பூரணமான வஸ்து. நிலவு எப்பொழுதும் முழுமையான நிலையிலேயே இருக்கிறது. நிதர்சனத்தில் தேய்வதோ, வளர்வதோ கிடையாது. பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழும்பொழுது சந்திரன் தேய்ந்து மறைவதுபோல் தோன்றுகிறது. பௌர்ணமி நிலவு தெரியும்பொழுது மனதுக்கு இனம் புரியாத ஆனந்தம் ஏற்படுகிறது. முழு நிலவு என்பதற்கு வடமொழியில் பூர்ணிமா என்பர். பூர்ணமான மதி என்பதே இதன் விளக்கம். இந்த சொல் மருவி தமிழில் பௌர்ணமி என வழங்கப்படுகிறது.
நிலவு எப்பொழுதும் முழுமையாகவே இருக்கிறது என்பதை அறிவோம். அவ்வாறு பார்த்தால் தினமும் நமக்கு பௌர்ணமியே என்பது உண்மை. நமது கண்களும், மனதும் மாயத் தோற்றத்தை நம்புவதால் எப்பொழுதும் முழுநிலவு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சூரிய மண்டலம் என்பதிலும் மனித தன்மை பிரதிபலிக்கிறது. சூரியன் ஆன்மா, சந்திரன் மனம், பூமி உடல் எனும் அமைப்பை ஒத்து இயங்குகிறது. பூமி எனும் உடல் மாயையால் இயக்கப்படுவதால் சூரியன் எனும் ஆன்மாவும், மனம் எனும் சந்திரனும் தோன்றி மறைவதைப் போல் தெரிகிறது. சூரிய - சந்திர கட்டமைப்பை ஆழமாக பார்த்தால் பல வேதாந்த உண்மைகள் தெரியும். சூரியன் என்றைக்கும் சந்திரனுக்கு ஒளி கொடுக்காமல் இருந்ததில்லை. அது போல ஆன்மா என்றும் தனது செயலை [ உண்மை நிலையை ] செய்யாமல் விட்டதில்லை.
ஆன்ம ஒளி எப்பொழுதும் செயல்பட்ட வண்ணம் இருந்தாலும் மாயை அந்த ஒளியை மறைத்து விடுகிறது. இருள் நிலை கொண்ட உள்நிலையை ஒளி உணரவைக்கும் தன்மைக்கு மாற்றுவது குருவின் செயலாகும். உண்மையான பூர்ண வஸ்து, மனதில் பேரானந்தத்தை வழங்கும் செயலை துவக்கி வைப்பவரை குரு என்போம். சத் [ உண்மை ] மூலம் பூர்ண ஆனந்தத்தை சித்தத்தில் [ மனதில் ] வழங்குபவர் சத்சிதானந்த சொரூபமாக விளங்கும் குரு ஒருவரே. அவரைத் தவிர வேறு எதுவும் ஆனந்தத்தை வழங்கமுடியாது. குருவின் கிருபை எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் தன்னை குருவிடம் ஒப்படைத்து சரணாகதி அடையும் நிலை மனிதனுக்கு குறைவாகவே இருக்கிறது. தனது கண்கொண்டும், புத்தக அறிவுகொண்டும் குருவை முடிவு செய்பவர்களே அதிகம். தங்களின் புத்திசாலித்தனத்தால் குருவை காணாமல் இருள்நிலையில் இருப்பவர்களின் பட்டியல் தயாரித்தால், உலகின்சுற்றளவை தாண்டிவிடும்.
குருவும் தெய்வநிலையும் வேறு வேறு அன்று. இறை தன்மையே குருவடிவம் தாங்கி நமக்கு அக ஒளியை வழங்குகிறது என்கிறது வேதம். குருவின் செயல், தன்மை, அவரின் வாழ்க்கை போன்றவற்றை ஆராய்வதும், விமர்சிப்பதும் கடவுள் தன்மையை விமர்சிப்பதற்கு ஒப்பாகும். குரு எப்படிப்பட்டவர் என்பது முக்கியம் இல்லை, எத்தகைய வழியை நமக்கு காட்டுகிறார் என்பதே முக்கியம்.
ஒரு ஊரில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவ்வூரில் அவனை பற்றி தெரிந்ததால், அவனால் திருட்டு தொழிலை செய்யமுடியவில்லை. வேறு ஊருக்கு சென்று திருட்டு தொழிலை செய்ய முடிவு செய்து பயணமானான். வெகுதூரம் பயணப்பட்டு ஓர் ஊரை அடைந்தான். திருடனுக்கோ அகோர பசி. உணவுக்கு எங்கு செல்வது என பார்க்கும்பொழுது பூசணிக்காய் தோட்டம் ஒன்று இருப்பதை கண்டு வேலியை தாண்டி குதித்து பூசணி பழத்தைத் திருடி உண்ண எண்ணினான்.
வெள்ளை பூசணி பழத்தை திருடும் சமயம் தோட்ட காவல்காரன், யாரோ ஒருவன் தோட்டத்தில் இருப்பதை பார்த்து கூச்சலிட்டான். சப்தம் கேட்டு மக்கள் கூட்டமும், தோட்ட காவல்காரனும் வருவதை கண்ட திருடன் மறைந்துகொள்ள இடம் தேடினான். பூசணி தோட்டத்தில் மறைந்து கொள்ள இடமா இருக்கும் ? உடனே சமயோஜிதமாக தனது ஆடைகளை கழற்றி விட்டு பூசணிக்காய் மேல் படந்திருக்கும் சாம்பலை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டான். திருடனை நெருங்கிய மக்கள் நீண்ட நாட்கள் பசியில் மெலிந்த உடல், சாம்பல் பூச்சு என அங்கு ஒரு சிவ தொண்டு புரியும் ஆன்மீக குரு இருப்பதாக நினைத்துகொண்டனர்.
திருடனின் சாம்பல் பூச்சு அவனை ஒரு முனிவனாக காட்டியது. தாங்கள் முனிவரை தவறாக எண்ணியதாக கூறி மன்னிப்பு கேட்டனர். ஊருக்கு வந்த புதிய முனிவரை காண பலரும் வரத் துவங்கினார்கள். ஞானத்தேடல் கொண்ட ஒருவன் இந்த முனிவரை சந்தித்தான். " ரிஷி புருஷரே என்னை சிஷ்யனாக ஏற்று உங்களைப் போல ஞானம் அடைய வழி சொல்லுங்கள் " என கேட்டான். பூசணி முனிவருக்கு ஞானம் என்றால் என்ன என்றே தெரியாது. வாய் திறந்து பேசினால் தனது சுயரூபம் தெரிந்துவிடும் என்பதால் சைகையில் பேச ஆரம்பித்தார்.
ஆசீர்வதிப்பதை போல கைகளை உயர்த்தி, பூசணிக்காய் போல கைகளை காட்டி தனது உடல் முழுவதையும் காட்டிவிட்டு கண்களை மூடினார் பூசணி முனிவர். " பூசணி திருட வந்த நான் இவ்வாறு ஆகிவிட்டேன்" என்பதையே சைகையில் முனிவர் கூறினார். வாலிபனோ தன்னை ஆசீர்வதித்து சிஷ்யனாக ஏற்றுக்கொண்டார் என்று நினைத்தான். மேலும் "உலகில் எதுவும் இல்லை, அனைத்தும் உன் உள்ளே இருக்கிறது " என குரு உணர சொல்வதாக எண்ணிக்கொண்டான்.
சிஷ்யனோ ஆனந்தமாக அவரை மூன்றுமுறை வலம் வந்து வணங்கி விடைபெற்றான். வருடங்கள் ஓடின. தீவிர தேடலில் சிஷ்யன் ஞானம் அடைந்தார். இந்த கதையின் மூலம் குருவின் தன்மையில் முக்கியமில்லை. குரு உங்களில் என்ன ஏற்படுத்துகிறார் என்பதே முக்கியம் என உணருங்கள்.
முழுமை நிலையில் இருக்கும் குரு தன்மையை உணர ஒவ்வோரு உயிருக்கும் பாக்கியமாக அமைந்த நாள் தான் "குரு பூர்ணிமா ". முழுமையை உணர்த்தும் பௌர்ணமி அன்று இருக்கும் உயிர் கூட இறைநிலையை நோக்கி உயர்த்தக் கூடியது இந்த திருநாள். குருவின் ஆற்றல் எல்லா நாளும் இருந்தாலும் குரு பூர்ணிமா தனி மனிதன் குருவின் வழிகாட்டுதலை துவங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று குரு தீட்சை பெறும் உயிர்கள் ஆன்மாவில் ஏற்றம் பெற்று விடுதலை அடைகிறார்கள்.
குருபூர்ணிமா அன்று பயிற்சியும், அன்று கிடைக்கும் குருவின் தொடர்பும் இப்பிறவியில் மட்டுமல்ல , பல பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும். நமது தேசத்தில் பல ஞானிகள் - ரிஷிகள், குரு இல்லாமல் தானாக ஆன்மீகத்தில் வந்ததாக தோன்றினாலும், உண்மையில் அவர்கள் ஏதோ ஒரு பிறப்பில் குரு பூர்ணிமா அன்று தூண்டப்பட்ட விளக்காக இருந்து இப்பொழுது ஒளிவீசுகிறார்கள் என்பதே உண்மை.
குரு பூர்ணிமா உண்மைகளை மேலும் தெரிந்து கொள்வோம்...
(தொடரும்)
15 கருத்துக்கள்:
//திருடனின் சாம்பல் பூச்சு அவனை ஒரு முனிவனாக காட்டியது. தாங்கள் முனிவரை தவறாக எண்ணியதாக கூறி மன்னிப்பு கேட்டனர். ஊருக்கு வந்த புதிய முனிவரை காண பலரும் வரத் துவங்கினார்கள். ஞானத்தேடல் கொண்ட ஒருவன் இந்த முனிவரை சந்தித்தான். " ரிஷி புருஷரே என்னை சிஷ்யனாக ஏற்று உங்களைப் போல ஞானம் அடைய வழி சொல்லுங்கள் " என கேட்டான். பூசணி முனிவருக்கு ஞானம் என்றால் என்ன என்றே தெரியாது. வாய் திறந்து பேசினால் தனது சுயரூபம் தெரிந்துவிடும் என்பதால் சைகையில் பேச ஆரம்பித்தார்//
இந்த கதையை குருகதையில் எழுதி இருக்கிங்க தானே ?
ஆமாம்.. குருகீ(க)தை எழுதி இருந்தேன்..
உங்கள் ஞாபக சக்தி அபாரம். :)
உண்மையில் மகிழ்ச்சிக்கு எல்லையோ, எல்லையை கடந்த நிலையோ கிடையாது. மகிழ்ச்சி என்ற உணர்வு தற்காலிகமானது. இதற்கு காரணம் உண்டு. முழுமையற்ற பொருளினால் ஏற்படும் மகிழ்ச்சி தற்காலிகமானது. //
நீண்ட நாள் கழித்து வந்தாலும் அருமையான விளக்கத்தைத் தந்து இருக்கிறீர்கள்,ஸ்வாமிஜி.
ஓஷோவும்,ஜே.கே வும் அடிக்கடி வலியுறுத்துவதைப் போல சில தேய்ந்து போன சொற்களை (மாயை,ஆன்மா,குரு,) மாற்றி விட்டு மேலே நான் எடுத்தாண்டிருக்கும் உங்கள் வரிகளைப் போலவே தற்கால நடைமுறைச் சொற்களிலேயே உங்கள் எண்ணங்களைச் சொல்லலாமே,ஸ்வாமிஜி.
உண்மை நித்தியமானதாக இருக்கலாம்.ஆனால் அதை விளக்கும் முறை புத்தம் புதிதாக இருக்கலாமே.
TRUTH MAY BE ETERNAL,BUT INTERPRETATION OF THE SAME SHOULD BE ALWAYS FRESH.
ஸ்வாமி ஓம்கார் அவர்களுக்கு.,
மிகவும் நன்றாக இருந்தது உங்கள் பதிவு.
சிஷ்யன் தயாரானால் குரு தோன்றுவார்.
அது போல குரு யார் என்பது முக்கியம் அல்ல.. சிஷ்யன் தயாராக உள்ளாரா ? என்பதே முக்கியம்.
குருவை தேடும் சிஷ்யனின் லக்ஷணம் என்ன என்பதை விளக்விர்கள சுவாமி? குரு பூர்ணிமா அன்று குறைந்தபக்ஷம் என்ன செய்ய வேண்டும் மற்றும் செய்யகூடதது என்ன - நன்றிகள் பல உங்களுடைய அறிவிபூர்வமான விளகங்களுக்கு.
gi.,
can you give reference where this explained.?
can you give examples?
simply telling will be no use for
readers.
நல்ல பதிவு குருவே
நல்ல பதிவு சுவாமி, தொடர்ச்சிக்காக காத்திருக்கிறேன்!
திரு ஷண்முகப்ரியன்,
உங்களின் கூர்மையான வாசிப்புக்கு நன்றி.
உங்களின் ஆலோசனையை தொடர முயற்சிக்கிறேன்
திரு சன்யாசி.
உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த பகுதியில் இருக்கிறது
திரு செளரி,
உங்களின் கேள்விக்கான பதில் அடுத்த பகுதியில் உண்டு என நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி
திரு பாபு,
/can you give reference where this explained.?
can you give examples?
simply telling will be no use for
readers.//
அனைத்துக்கும் சாட்சி இல்லை..
உங்களை சாட்சியாக கண்டீர்களானால் சாட்சிகள் இல்லா காட்சிகள் கிடைக்கும்.
நன்றி.
திரு சுந்திர ராமன்,
உங்கள் வருகைக்கு நன்றி
திரு மதுரைவீரன்,
உங்கள் வருகைக்கு நன்றி
தனது கண்கொண்டும், புத்தக அறிவுகொண்டும் குருவை முடிவு செய்பவர்களே
அதிகம்.
//
:)
Post a Comment