Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Friday, June 5, 2009

ப்ராண சக்தி - பகுதி 2

ப்ராணா என்பது ஏதோ ஒரு வஸ்து என எண்ணிடலாகாது. அது நமது உயிர்சக்தி என புரிதல்வேண்டும். உலகில் அசையும் பொருளுக்கும் அசையா பொருளுக்கும் ப்ராணனின் இருப்பே வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. உயிரின் மூலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்கள். அவர்கள் ப்ராணனை தொடர்ந்தால் சில தகவல்கள் கிடைக்கலாம்.

ப்ராணா என்பது உயிர்சக்தி என்றேன். இந்த உயிர்சக்தியை ரிஷிகளும், வேத சாஸ்திரிகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலை நிறுத்தவும், தேவையான பொழுது எடுத்து பயன்படுத்தவும் தெரிந்தவர்களாக இருந்தார்கள். நிலைநிறுத்தும் செயலுக்கு ப்ரதிஷ்டா என பெயர். ப்ராணனை நிலைநிறுத்துதல் என்பதை ப்ராண பிரதிஷ்டா என்றனர்.


ப்ராண சக்தியின் வகைகளை தெரிந்து கொள்ளும் முன் ப்ராணாவின் உண்மை நிலையை கூறும் வேத மந்திரத்தை பற்றி காண்போம். ப்ராணனை ஒரு குறிப்பிட்ட 'இடத்தில்' நிலைநிறுத்த பயன்படும் மந்திரம் ப்ராணாவின் சிறப்பை கூறுகிறது.

ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரஹ்ம் விஷ்ணு மஹேஸ்வரா: ரிஷய: ருக் யஜூஸ் ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி ||
ஸகல ஜதத் ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹார காரிணி ப்ராண ஸக்தி:
பரா தேவதா |


பொருள் :
பிரம்மா,விஷ்ணு சிவனாகவும், வேத மந்திரங்களாகவும், பிரபஞ்சத்தில் அனைத்து தோற்றத்திற்கும், செயலுக்கும், அழிவுக்கும் (ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸ்ம்ஹாரம்) காரணம் ப்ராண சக்தியே.. அதுவே தெய்வ நிலையில் உன்னதமானது.

இதற்கு மேல் ஏதாவது ப்ராண சக்தியை பற்றி சொல்லவேண்டுமா? ப்ராணனின் வகைகளை பார்ப்போம் வாருங்கள்.

உதானன் :

தலை உச்சியிலிருந்து கழுத்து பகுதியின் மையம் வரை உதாணனின் இருப்பிடம். நெருப்புக்கு இணையான சக்தி கொண்டது. நவ கிரகத்தில் சூரியன் இதை ஆட்சி செய்கிறார். அதிகமாக சிந்திக்கும் பொழுதும் கோப உணர்வு ஏற்படும்பொழுதும் தலை பகுதி சூடாவது உதானனின் எதிர்செயலாகும். ப்ராண சக்தியால் உதானனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளவர்கள் நெருப்பின் மேல் ஈர்ப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். தீபம் மற்றும் புனிதவேள்வி நெருப்பு இவர்களை கவரும் செயலில் தளர்வாகவும், பேச்சில் விரைவாகவும் இருப்பார்கள்.


ப்ராணா:


கழுத்தின் மையத்திலிருந்து மார்பு பகுதிவரை ப்ராணனின் இருப்பிடம் . பலர் ப்ராணன் என்பது மூச்சு என தவறாக உருவகிக்கிறார்கள். பிராணன் பிரபஞ்சத்திலிருந்து உடலுக்குள் வருவதற்கும், உடலிலிருந்து வெளியேறுவதர்க்கும் சுவாசத்தை வாகனமாக பயன்படுத்துகிறது. சிலருக்கு இது வியப்பான மற்றும் புதிய தகவலாக இருக்கலாம். மயக்கமுற்ற நிலையில் இருப்பவர்களுக்கு செயற்கை முறையில் சுவாசம் கொடுப்பதை பார்த்திருக்கலாம் மயக்கமுற்றவர் சுவாசம் எடுக்க முடியாவிட்டாலும் ப்ராணன் வெளியிலிருந்து செயற்கை சுவாசம் மூலம் உள்ளே செல்கிறது. இதே செயற்கை சுவாசத்தை இறந்த உடலில் பொருத்தினால் ஏன் இறந்த உடல் சுவாசம் எடுப்பதில்லை. காரணம் இறந்த உடலில் பிராணன் இல்லை. இதன் மூலம் ப்ராணன் வேறு, மூச்சு வேறு என உணருங்கள்.


இதை உணர்பவர்கள் இனிமேலாவது ப்ராணாயாமம் என்பதை மூச்சுப்பயிற்சி என மொழிபெயர்க்க மாட்டார்கள் என நினைக்கிறேன். பஞ்ச பூதத்தில் காற்றின் செயலை செய்கிறது ப்ராணன். நவ கிரகத்தில் சந்திரன் மற்றும் புதன் இதை குறிக்கிறது. உடலுக்குள் செல்லும் ப்ராணன் சந்திரனின் ஆதிக்கமும், உடலுக்குள் இருந்து வெளியே செல்லும் ப்ராணன் புதனின் ஆதிக்கமும் கொண்டது. அதிக எண்ணங்கள் மனதில் ஏற்படும் பொழுது சுவாசம் அதிகமாக வருவதும், எண்ணங்களற்ற நிலையில் குறைந்து இருப்பதும் ப்ராணனின் செயலை குறிக்கும். காற்றின் மேல் மோகம் கொண்டவர்களாக ப்ராணனின் ஆதிக்கம் கொண்டவர்கள் இருப்பார்கள். நெருக்கமாக இருப்பதும், ஒரே இடத்தில் இருப்பதும் இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் எண்ணங்களில் வேகம் கொண்டவர்கள். அலைகடல் மற்றும் நந்தவனத்தில் பூத்து குலுங்கும் மலர்கள் இவர்களை கவரும்.


சமானா :


மார்பின் மையத்திலிருந்து நாபி பகுதிவரை சமானனின் இருப்பிடமாக விளங்குகிறது. நீர் என்னும் பஞ்ச பூதத் தன்மையை சார்ந்தது. நீர் எவ்வாறு சமதளத்தை நோக்கி சென்று சமநிலை அடையுமோ அது போன்ற செயலை உடலுக்கு வழங்குகிறது. உடலின் சுவாசம், ஜீரணம், இன பெருக்கம் போன்ற செயல்கள் சிறப்பாக இருக்க இதன் செயல் பேருதவியாக இருக்கும். அஜீரணம் ஏற்படும் பொழுது செரிக்கப்படாத உணவை உணவுக்குழாய் மூலம் மேல்நோக்கி அதிக விசையுடன் செலுத்தும் பணி சமானனுடையதே ஆகும். செரிக்கப்படாத உணவை உடலைவிட்டு வெளியேற்றி உடலை சமநிலைபடுத்துவது போல பல உடல் செயல்களில் சமானனின் பங்கு உண்டு. நவ கிரகத்தில் சனியின் தன்மையாக செயல்படுகிறது. ப்ராணனில் சமானனின் ஆதிக்கம் கொண்டவர்கள் நேர்மையானவர்களாகவும், யாருக்கும் பாரபட்சமின்றி முடிவெடுப்பவர்களாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பு செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். அருவிகள் , ஆறுகள் இவர்களை கவரும் இயற்கையான விஷயங்களாகும்.


அபானா:

நாபிப்பகுதியிலிருந்து மர்மஸ்தானத்திற்கும் ஆசனவாயிற்கும் இடைப்பட்ட பகுதிவரை அபானாவின் இடமாகும். பஞ்ச பூதத்தில் மண் தன்மையையும், நவகிரகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனையும் குறிக்கும். நுரையீரல் சுவாசித்தல், உடலில் கழிவுப்பொருட்கள் வெளியேறுதல் போன்றவற்றிற்க்கும் காரணமாக இருப்பது அபானன். இனப்பெருக்கத்திற்காக மனதிலும், உடலும் ஓர் மாற்றத்தை உண்டாக்குவதில் அபானனின் பங்குஅதிகம். மனிதன் பிறந்து வளர்ச்சி அடையும் பொழுது பிற ப்ராணன்களை காட்டிலும் அபானன் அதிக அளவில் செயல்படுகிறது. புதிய சிந்தனை - கவிதை - ஓவியம் நாட்டியம் - சமூக புரட்சி போன்றவை அபானனின் ஆதிக்கம் கொண்டவர்களின் செயல்களாகும். காடுகள் இவர்களை கவரும் இயற்கை தன்மைகள் ஆகும்.

வியானா:

உடல் எங்கும் வியாபித்து இருப்பதால் இது வியானா என அழைகப்படுகிறது. தலை முதல் பாதம் வரை வியானா செயல்படுகிறது. ப்ராணனின் பிற பிரிவுகளுக்கு ஆற்றலை கடத்தும் பொருளாகவும், ப்ராண சக்தியை சமநிலையில் வைத்திருப்பதும் இதன் பணிகளாகும். தாயின் வயிற்றில் கரு உருவாகும் பொழுது முதலில் தோன்றும் ப்ராணவகை வியானாவாகும். இதற்கு பிறகுதான் பிற நான்கு பிரிவுகளும் உருவாகிறது. இறக்கும் சமயத்தில் ப்ராணா வெளியேறிய உடன் உடல் செயல் முடிவடைகிறது. இறப்பிற்கு பின் குறைந்தது 48 மணி நேரத்திற்கு பிறகுதான் வியானா வெளியேறும். முதலில் உடலில் நுழைவதும் கடைசியில் உடலை விட்டு நீங்குவதும் வியானாவின் தன்மையாகும். பஞ்ச பூதத்தில் ஆகாயத்தின் தன்மையும், நவகிரகத்தில் குருவும் வியானாவை பிரதிபலிக்கிறார்கள்.

அமைதியான மனநிலையும், எந்த சூழ்நிலையிலும் தடுமாற்றமற்ற மனநிலையும் வியானா ஆதிக்கம் கொண்டவர்களின்நிலையாகும். வியானா முழுமையான செயல் நிலையில் இருப்பவர்கள் உடல் ஒளிரும் தன்மையில் இருப்பதையும் அவர்களுடன் இருக்கும் நேரத்தில் ஆனந்தத்தையும் உணர முடியும். வெண்மேகங்கள் இல்லாத நீலவானம், மழைநின்றவுடன் இருக்கும் புதிய சூழ்நிலை போன்றவை வியானாவின் ஆதிக்கத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த இயற்கை விஷயங்கள்.


பஞ்ச ப்ராணன்கள் பற்றிய விளக்கம் உங்களை பல சிந்தனைக்கு கொண்டு செல்லும் என நினைக்கிறேன். ப்ராணனின் ஆதிக்கத்திற்கு ஏற்ப மனிதர்களின் குணமும் , செயலும் வேறுபடுவதை உணரலாம். ஆன்ம விழிப்புணர்வு பெற்ற ஞானிகள் பஞ்ச பிராணன்களை சமநிலையில் வைத்திருப்பார்கள். அவர்கள் இயற்கை சூழ்நிலையான கடல், மலை, வானம் மற்றும் ஆறுகளின் அருகில் வசிப்பதை விரும்புகின்றார்கள். இவர்களுக்கு வியானன் சிறப்பாக செயல்படுவதால் கண்களிலும், உடலிலும் ஒளிவீசும் தன்மை ஏற்படும். இதைக் கொண்டு அவர்களின் ப்ராண நிலை சமநிலையில் இருப்பதை உணரலாம்.


ஹட யோகத்தில் ப்ராணனை நல்வழிப்படுத்தும் பயிற்சியே ப்ராணாயாமம் எனப்படுகிறது. யாமம் என்பதற்கு செம்மையாக்குதல் - நிலைப்படுத்துதல் எனப்பொருள். நாடி, சுத்தி, ஷண்முகி முத்ரா ப்ராணாயாமம் மற்றும் பல உயர்நிலை ப்ராணயாம பயிற்சிகள் ப்ராணனை நெறிப்படுத்த உதவுகிறது. நவக்கிரக தியானம் ப்ராணனை, பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்து உயர்நிலைக்கு உயர்த்துகிறது. என்னிடம் யோக பயிற்சி கற்றவர்கள் ப்ராணனின் தன்மையை சிறிதேனும் உணர்ந்திருப்பார்கள்.

ஹடயோகம் மட்டுமல்ல கர்மயோகமும், பக்தியோகமும் ப்ராணனை நல்வழிப்படுத்தும் சிறந்த வழிகளாகும். ப்ராணனின் நாத வடிவமான ஒளி வடிவமே 'ஓம்' எனும் ப்ரணவ மந்திரம். இதிலிருந்துதான் பிரபஞ்சமும் நாமும் உருவானோம் என்கிறது மாண்டூக்ய உபநிஷத். ப்ராண சக்தியை பற்றி கூறுவதை காட்டிலும் அதை உணர்ந்தால் பிறவிப் பயனை அடையலாம். அனைத்து மதத்தின் சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகள் ப்ராண சக்தியை மையப்படுத்தியே இருக்கிறது. ப்ராணாவை பற்றி தெரிந்து கொள்ளாமல் அதை உணர முயற்சிப்பது. கண்ணில்லாதவன் ஒளியை வர்ணிப்பதாக சொல்லவேண்டும்.

இத்தகைய ப்ராணனை உணர என்ன செய்யவேண்டும்?


" ப்ராண சக்தியை உணர
ப்ரணவ சக்தியை உச்சரி
ப்ராணனும் ப்ரணவமும் உன்னுள் உறைய
ஓம்காரம் எனும் நாதத்தை உணர்ந்த
ஓம்கார நாதனாவாய்"

6 கருத்துக்கள்:

நிகழ்காலத்தில்... said...
This comment has been removed by the author.
நிகழ்காலத்தில்... said...

ப்ராணனைப் பற்றி மேலோட்டமாகவே அறிந்திருந்தேன்., விவரமாக தந்தமைக்கும்/தருவதற்கும் நன்றி

yrskbalu said...

before starting any work do some prana exercise - you can feel difference .

our mahans also advice us before starting diyana do some prana exercise.

atleast this can help to mind steadyness.

i expecting omkarji will write some of the prana exercise

yogi said...

***ப்ராண சக்தியை உணர ப்ரணவ சக்தியை உச்சரி
ப்ராணனும் ப்ரணவமும் உன்னுள் உறைய
ஓம்காரம் எனும் நாதத்தை உணர்ந்த
ஓம்கார நாதனாவாய்***

????????

Anonymous said...

உங்கள் பெயர்காரணம் இப்பொழுது புரிகிறது சுவாமி! ஒரு வேளை இதற்காகத்தான் அகோரி பாபாக்கள் சுடுகாடு சென்று த்யானம் செய்து நாற்பத்திஎட்டு மணி நேரத்தில் இறந்தவர்களின் வியான பிராண சக்தியை உணர்ந்து சமநிலை படுத்தி கொள்கிரர்களோ? அருமையான விஷயம் சுவாமி! பிரானாவை பற்றி மேலும் மேலும் தெரிந்து கொள்ள ஆசை!

Sanjai said...

தினமும் ஒரு முறையேனும் "PK" செய்யவேண்டும் :)