ஆசை அறுமின்
- புத்தனாக ஆசைப்படு.
ஆசைப்படுதல் என்பது தனி மனிதனின் உரிமை. பிறந்து சுவாசம் துவங்கியது முதல் சுவாசம் நின்று இறக்கும் வரை ஆசை மற்றும் எதிர்பார்ப்பு மட்டுமே மனிதனை வளர்ச்சி அடையச்செய்கிறது. ஆசைப்படுவது குற்றம் என சிலரும், அத்தனைக்கும் ஆசைப்படு என சிலரும் மனிதனை மனக்குழப்பத்திற்கு தள்ளுகின்றனர்.
தற்சமயம் நமது சமுதாயம் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. பணம் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு வாழ்கிறார்கள். பணம் இருந்தால் அனைத்தை யும் அடையலாம் எனும் எண்ணம் மேலோங்கியிருக்கிறது. பணத்தால் புதிய உயிரை வாங்க முடியுமா என்று, பல வருடங்களாக குழந்தை இல்லாத செல்வந்தரை கேட்டுப்பாருங்கள்.
தேசிய நெடுஞ்சாலையில் பல லட்ச ரூபாய் கொண்டு செல்லும்பொழுது விபத்தில் சிக்கி உயிர் இழந்தவரின் குடும்பத்தை கேழுங்கள், பணம் உயுர்காக்குமா? என்று. பணத்தால் ஆசையை பூர்த்தி செய்ய ஓர் எல்லை உண்டு. பணத்தை மட்டுமே நம்பினால் பல தொல்லை உண்டு. உங்கள் ஆசைகள் எதிர்பார்ப்புகளாய் மாறி அதை அடைய திட வைராக்கியத்துடன் செயல்பட்டால் அந்த ஆசையே லட்சியம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. விதை மரமாக வளரவும் , மொட்டு மலராக மலரவும் அதன் கருவில் இருக்கும் ஆசையே காரணம்.
ஆசைப்படுவதற்கு அனைவருக்கும் உரிமை இருந்தாலும் ஆசையை பற்றி முழுமையாக தெரிந்தபின் ஆசப்படுவது சிறந்தது. ஆசை என்பதை இருவகையாக பிரிக்கலாம். புத்திசாலித்தனமான ஆசை மற்றும் முட்டாள் தனமான ஆசை என கூறலாம்.
இரு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு செல்வ கடவுளான மஹாலஷ்மியை சந்தித்து தமது வறுமையை போக்கிக்கொள்ளவேண்டும் என்பது ஆசை. முதல் நபர் ஓர் ஆன்மீக குருவின் இடத்தில் மஹாலஷ்மி மந்திரம் பெற்று நெடுங்காலம் தவம் செய்தார். மஹாலஷ்மி வரவே இல்லை. இரண்டாமவரோ அதே ஆன்மீக குருவினிடத்தில் மூதேவியை காண மந்திரம் பெற்று தவம் செய்தார்.
தன்னை யாரும் அழைக்காத பொழுது வைராக்கியத்துடன் தன்னை அழைக்கும் பக்தனிடத்தில் மூதேவி ஓடிவந்தாள். ' என்ன வரம் வேண்டும் பக்தா! ' எனக் கேட்டாள். ' என்னை விட்டு எப்பொழுதும் விலகியே இரு. இதுவே எனது வரம் ' என்றான் மூதேவியை தவம் செய்தவன். மூதேவி இல்லாத இடத்தில் லஷ்மி முழுவதும் நிறைந்தாள். புத்திசாலிகள் ஆசையை தனது காலடியில் விழ வைப்பார்கள். முட்டாள்கள் ஆசையின் காலடியில் விழுந்துகிடப்பார்கள்.
முட்டாள் தனமான ஆசைகூட விபரீதமானதன்று. இது போன்ற ஆசை மன விரக்தியைத்தான் கொடுக்கும். ஆனால் மனதை சமநிலையில் வைக்காமல் ஆசைப்படும் பொழுது விபரீதத்தைக் கொடுக்கும். அனைவருக்கும் தெரிந்த நாடோ டி கதையை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். ஒரு வழிப்போக்கன் அடர்ந்த காட்டின் ஓர் மரத்தடியில் இளைப்பாற அமர்ந்தான். கேட்டதை கொடுக்கும் கல்பக விருஷம் அந்த மரம் என்பது அவனுக்கு தெரியாது. இளைப்பாறும் பொழுது சிறந்த நீரும் , உணவும் கிடைத்தால் நன்றாக இருக்குமே என எண்ணினான். உடனே அறுசுவை உணவும், குளிர்ந்த நீரும் அவன் முன் இருந்தது. உணவை சாப்பிட்டதும் உறக்கம் அவனை தாலாட்டியது. படுத்து உறங்க பஞ்சுமெத்தையும், காலகளைப்பிடித்துவிட சேவகர்களும் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தான்.
உடனே அவன் பஞ்சுமெத்தையில் படுத்திருந்தான். இருவர் அவன் கால்களை பிடித்த வண்ணம் இருந்தனர். இதை உணர்ந்த வழிப்போக்கன் நகை, ஆடம்பர ஆடைகள் என பல விஷயங்களை பெற்றான். இந்த வனவிலங்குகள் நிறைந்த காட்டில் திடீரென புலியோ, சிங்கமோ தன்னை கொண்றுவிட்டால் என்னவாகும் என எண்ணினான். உடனே பல திசைகளில் பாய்ந்துவந்த வனவிலங்குகள் அவனை கொன்றுதின்றன.
சமநிலையற்ற மனதுடன் ஆசைபடும் பொழுது ஏற்படும் விபரீதத்திற்கு இந்த கதை சிறந்த உதாரணம். சமநிலையில் உள்ள யோகிகள் ஆசைப்படுவதை விட்டு விலகியிருப்பார்கள். மனம் இருந்தால் மட்டுமே ஆசை உண்டு. மனமற்ற யோகிக்கு ஆசை என்பதே இல்லை. அப்படிப்பட்ட யோகிகளின் அருகில் அமர்ந்து தீர்க்கமாக நமது எண்ணத்தை குவித்தால் விரைவில் அதை அடையலாம். ஆனால் அவர்களிடத்தில் அமரும் பொழுது மனம் லயமடைந்து எண்ணங்கள் எழாது. யோகியானவன் தன்னை மட்டுமின்றி தன்னை நாடி வருபவர்களின் மனதையும் தூய்மையாக்குகிறான்.
நான் பயிற்சி அளிக்கும் யோக முறை இது போன்ற மனமற்ற நிலையை அடைய வழிவகுக்கும். சில மாணவர்கள் மனமில்லாமல் எப்படி வாழ்வது என குழப்பம் அடைவார்கள். முழு விழிப்புணர்வு நிலையில் இருக்கும் பொழுது மனம் செயல்படாது. நிர்விகல்ப சமாதி எனும் உணர்வு ஆன்மநிலை அடையவும் மன சிதறல்கள் இன்றி விழிப்புணர்வில் பிரகாசிக்கவும் இந்த யோகப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறிது நேரம் மனமற்ற நிலையில் இருந்து பார்த்தால் அதன் ஆனந்தம் புரியும். மன எண்ணங்களே ஆசையாக மாறுகிறது என கூறினேன். இவை மனதில் 'சம்ஸ்காரங்கள்' எனும் எண்ண படிவங்களாக பதிந்துவிடுகிறது.
ஆன்மாவில் பதிந்த இந்த சம்ஸ்காரங்கள், ஆன்மாவை பல பிறவிகள் எடுக்கத் தூண்டுகின்றன. இதை கர்போபனிஷத் , பிரசன்ன உபநிஷத் எனும் வேத பகுதிகள் உறுதி செய்கிறது. இதையே கீதை ' எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' எனும் வாசகத்தால் உணர்த்துகிறது.
பல பிறவிகள் ஏற்படும் தத்துவத்தை 'யோக வாஸிஷ்டம்' எனும் நூல் சிறிய கதை மூலம் சிறப்பாக விளக்கும். ஈஸ்வரன் தவ நிஷ்டையில் இருக்கும் சமயம் ஓர் தேனீ அவரை சுற்றி ரீங்காரம் செய்தது. ஈஸ்வரன் சமாதி நிலையிலிருந்து வெளிவந்து தான் தேனீயாக இருந்தால் எப்படி இருக்கும் என எண்ணினார். உடனே அவர் தேனீயானார். தேனீ பூக்களுக்கு சென்று தேன் சேகரித்தது. அப்பொழுது தேன் கொண்ட பூவானால் எப்படி இருக்கும் என நினைத்தது. தேனி பூவாக பிறந்தது. பூவைப்பறித்து அந்தனர்கள் பூஜை செய்தனர். கடவுளின் விக்ரகத்தில் பட்டவுடன் கடவுளாக மாற ஆசைப்பட்டது. பூ மீண்டும் ஈஸ்வரனாக நிஷ்டையில் ஆழ்ந்தது.
எவ்வாறு ஈஸ்வரன் பல வடிவங்கள் எடுத்து மீண்டும் தன்னிலைக்கு வருகிறான் என்பதை எளிமையாக உணரலாம். நமது சம்ஸ்காரமே அடுத்த பிறவிக்கும், முற்பிறவிக்கும் - ஏன் பலகோடி பிறவிகளுக்கும் காரணம் என்பதை உணரலாம். இதை படித்துக்கொண்டிருக்கும் சமயம் சிறிது கண்களை மூடி, இன்று காலை முதல் இந்த நிமிடம் வரை எத்தனை விஷயங்களுக்கு ஆசைப்பட்டோ ம் என்பதை எண்ணிப்பாருங்கள். முடிவற்ற சம்ஸ்காரத்தின் கிடங்காக வலம்வந்து கொண்டிருக்கிறோம். நாம் ஈசனாக மாறுவது எப்பொழுது ? சம்ஸ்காரத்தை விட்டொழித்தால் அடுத்த நிமிடம் நீங்களும் ஈசன் தான். முன்பு கூறிய கதையை போல ஈசனாக மாற எண்ணுங்கள். உங்கள் சம்ஸ்காரம் உங்களை விரைவில் பரமாத்ம நிலைக்கு உயரச்செய்யும்.
என்னிடதில் ஜோதிடம் கேட்க வந்தவர்களும் , ஆன்மீக பயிற்சி பெற வந்தவர்களும் ஜாதகத்துடன் வந்து பல ஆசைகளை முன் வைப்பதுண்டு. மூன்று ஆண்டுகளில் முற்பதுகோடி சம்பாதிக்க முடியுமா? சிறந்த தொழிலதிபராக முடியுமா? நான் ஆசைப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய முடியுமா? என பல ஆசைகள். ஆனால் யாரும் நான் ஞானம் அடைவேனா? என் உள்நிலையை உணர்ந்து பரமானந்தம் அடைவேனா? என கேட்டதில்லை. உடல் இச்சை, பொருளாதாரம் மட்டுமே இவர்களின் ஆசையாக இருக்கிறது. புலன்கள் கடந்து ஆசைப்பட அவர்கள் தயாராக இல்லை.
ஒருவர் எவ்வாறு ஆசைப்படுவார் என அவரின் பிறப்பு ஜாதகம் காட்டும். என்னிடத்தில் ஜோதிடஆலோசனை கேட்டு வருபவர்கள் ஆசையை கூறியவுடன், அதை அவர்களின் ஜாதகத்துடன் ஒப்பிட்டுப்பார்ப்பேன். ஆசைகள் பல விதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என கூறுவார்கள். உண்மையில் ஜாதகங்கள் பல விதமாக இருக்க அதில் ஆசைகளும் பல விதங்களாக இருப்பதை உணர்ந்தேன்.
ஆசைப்படுவது தவறா? எவ்வாறு ஆசைப்படுவது என பல விஷயங்களை ஆராய்ந்தோம். எப்படி ஆசைப்பட வேண்டும் என்பதும் ஓர் ஆசைதானே, என சிலர் கேட்பதுண்டு. ஆசையை துறக்க வேண்டும் என புத்தர் கூறினாலும் அதை ஆசையாக மனதில் கொள்வது தவறா? எனும் எண்ணம் பலருக்கு உண்டு. இதற்கு திருமூலர் ஓர் சிறப்பான பதில் தனது திருமந்திரம் மூலம் அளிக்கிறார்.
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
ஈசன்மேல் கொண்ட ஆசையையும் துறந்தால் ஆனந்தம் அடையலாம் என அவர் கூறுவது மனமற்று இருக்கும் மார்க்கத்தை உணர்த்தவே ஆகும். புலன் கடந்த ஆசை ஆனந்தத்தையும் , புலனுக்கு உட்பட்ட ஆசை துன்பத்தையும் அளிக்கும். ஆசைப் படுவதை ஆராய்ந்து ஆசைப்படுங்கள். புத்தரும் திருமூலர் வழியில் நானும் உங்களுக்கு கூற ஆசைப்படுவது,
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
புலனுடன் கூடிய ஆசை அறுமின்கள்
ஏப்ரல் 2007 சித்திரை
22 கருத்துக்கள்:
நல்ல இடுகை.
ஆசை நூறுவகை வாழ்வில் நூறு சுவை வா ! ன்னு பாபாவே பாடி இருக்கார் :)
சிலர் அறிவாளிகள் போல ஆசைப்படக் கூடாது என்பதும் ஆசை தானே என்பார்கள்.
அன்றாடத் தேவையையும் அதை இயல்பாக அடைவதையும் ஆசையாக நினைப்பவர்களை என்னச் சொல்ல ?
திரு கோவி.கண்னன்,
உங்கள் வருகைக்கு நன்றி.
//அன்றாடத் தேவையையும் அதை இயல்பாக அடைவதையும் ஆசையாக நினைப்பவர்களை என்னச் சொல்ல ?//
Mr.NO விடம் கேளுங்கள் அவர் உங்களுக்கு மேலும் விளக்குவார் :))
ஆசையை அறுக்க வேண்டும் என்று ஆசைப்படுவது ஆசையாகக் கருதப்படுமா.... வைராக்கியமாகக் கருதப்படுமா?
யார் யார் எதைத் தேடுகிறார்களோ அதையே அடைவார்கள்,அறிவுரையிலும் கூட.என்னைப் பொருத்தவரை பொதுவான் உபதேசம் என்பதே பொய்.
பசியில் பறப்பவனிடமும்,வலியில் துடிப்பவனிடமும்,உடலே மாயை என்னும் உபதேசம் என்ன பயனளிக்கும்,ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும்.
படிக்கப் படிக்க எழுத்து நடை ஆசையா இருந்துச்சு
:)
வணக்கம் ஸ்வாமி
கடவுள் தான் படைத்தத்தை இலவசமாக மனிதனுக்கு கொடுத்துவிட்டான்
காற்று , மரம் சேடி கோடி .பூமி , வெளிச்சம் , வெப்பம் , ஆனால் மனிதன்
தான் உருவாக்கியத்தை பிறருக்கு இலவசமாக கொடுத்துவிடுவான என்ன.
அதற்கு ஒரு விலையை நிர்மனம் செய்கிறான்.இந்த செயற்கை வாழ்கயில்
வெற்றி பெறாததான்.இத்தனை பாடு.
வணக்கம் சுவாமிஜி
நல்ல பதிவு
பேராசை பெருநஷ்டம்
அன்புடன்
செல்லி
திரு மகேஷ்,
ஆசையாகவோ வைராகியமாகவோ கருதப்படாது.
புலன் தாண்டி கொள்ளும் ஆசை கர்மாவை ஏற்படுத்தாது.
திரு ஷண்முகப்ரியன்,
சீரியசான பதிவு கேட்டதால் இதை பதிவிட்டேன் :).
//யார் யார் எதைத் தேடுகிறார்களோ அதையே அடைவார்கள்,அறிவுரையிலும் கூட.என்னைப் பொருத்தவரை பொதுவான் உபதேசம் என்பதே பொய்.
பசியில் பறப்பவனிடமும்,வலியில் துடிப்பவனிடமும்,உடலே மாயை என்னும் உபதேசம் என்ன பயனளிக்கும்,ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும்.
//
நமது வலைபதிவில் படிப்பவர்கள் பட்டினியோ, வறுமையோ கொள்ளாதவர்கள் என நினைக்கிறேன்.
நான் எனது அனுபவத்தை விவரிக்கிறேனே தவிர அறிவுரை சொல்லுவதில்லை. காரணம் யாரின் அறிவுரையும் நான் ஏற்பதில்லையே :)
உங்கள் வருகைக்கு நன்றி
திரு சுந்தர்,
திரு செல்லி,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஓர் நாய் சுடு காட்டிற்குப் போயிற்று.சதைப்பற்று முழுவதும் எரிந்துபோய் மிஞ்சிக் கிடக்கும் கூரிய எலும்பு ஓன்றை அது கவ்விக்கொண்டு வந்த்து அதை வாயிலிட்டு பற்களால் பலமுறை கடித்துப் பார்த்த்து எலும்பு நாயின் வாயில் குத்தி இரத்தம் வடிய ஆரம்பித்த்து இரத்தம் தோய்ந்த அவ் வெலும்பை நாய் கீழே போட்டுப் பார்த்த்து எலும்பின் மேற்புறம் இரத்தம் காணப்படுவதைக் கொண்டு ஓகோ கடிக்க்க் கடிக்க எலும்பினுள்ளிருந்து இரத்தம் வருகிறது,என்று நினைத்து,அவ்விரத்த்தை நக்கிக் குடித்த்து மறுபடியும் வாயிலிட்டு முன்னிலும் பன்மடங்கு அதிக பிரயாசையோடு கடித்த்து தன் வாயில் மேலும் புண்கள் உண்டாகி இரத்தம் எலும்பின் மேற் பெருகிற்று. மிண்டும் நாய் எலும்பை கீழே போட்டு இரத்த்தை குடிப்பதும் மீண்டும் எலும்பை கடிப்பதுமாகவேலை செய்து கொண்டிருந்த்து உன்மையில் இரத்தம் எலும்பிலிருந்து வரவில்லை,தன்வாயினின்றே வருகிறது என்பதை அந்த நாய் உணரவில்லை.
இதுபோலவே,மனிதன் வெளிப் பொருள்களை அனுபவிக்கும் போது தன்னுள்ளுள்ள சுகத்தையே சிறிது பெருகிறான் ஆனால் அறியாமையால், அப் பொருள்களிலிருந்தே சுகம் வருவதாக்க் கருதுகிறான்! கதையிற் கண்ட நாயைப் போல நடந்துகொள்கிறான் அதனால், மீண்டும் மீண்டும் எலும்பையே கடித்த நாயைப் போல மீண்டும் மீண்டும் வெளிப் பொருள்களைத் தேடுவதிலேயே அதற்காக உழைப்பதிலேயே, வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறான்!. அந்தோ! அதன் பயனாக என்ன விளைகிறது ? கணக்கற்ற
துன்பக் குவியலும், பகைவுணர்வுகளுமே மிச்சம்!, இதுவே அறியாமை அல்லது மாயை,!!
உலக சரித்திரம் கூறுகின்ற கற்கால மனிதர்களிலிருந்து தற்கால அணு வாராய்ச்சியாளர்கள் வரை உண்டான மனித சமூகம்.அறிவுத்துறையில் ஆராய்ந்தாராய்ந்து உழைத்த பாடுக ளெல்லாம்,திரும்பத் திரும்ப எலும்பைக் கடித்த நாயின் முயற்சியே யாயிற் றல்லவா ஓளிக்காமல் சொல்லப்பட்டால் உண்மை இதுவே ஏனெனில் வெளிப் பொருள்களாகின்ற பஞ்சேந்திரிய சுக சாதனங்களைத் திரட்டுவதைத் தவிர இன்று உலகிற் காணப்படும் முன்னேற்றம் வெறென்ன நிகழ்திருக்கிறது சொல் உலகின் இத்தனை வித முயற்சிகளுக்கும் அடிப்படைக் கருத்தாவது சுகம் வெளிப் பொருள்களிருந்து வருகிறது என்ற தப்புக் கொள்கையே தான் வேறொன்று மில்லை எலும்பிலிருந்துதான் இரத்தம் வருகிறது என்ற எண்ணிய நாய்க்கும் இகத்தின் பாக்கியங்களாகிய வெளிப் பொருள்களைப் பெருக்கிக் குவிக்கும் நவீன பௌதிக விஞ்ஞான ஆராய்ட்சி முன்னேற்றத் தால்தான் உலகம் சுகமடையும் என்று எண்ணுகின்ற மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறு சொல் ஓன்றுமேயில்லை யன்றோ.
சுவாமி!
உங்களுடன் சேர்த்து ஆயிரம் பேர் ஆசையைப் பற்றி அழகாக சொல்லிவிட்டார்க்ள்.செவிடன் காதில் சங்குதான்..........
கேவி.உருத்திரா.
உங்கள் சென்னை வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஸ்வாமிஜி.அந்தப் பதிவில் ஏதோ சிக்கல்.பதியவில்லை.அத்னால்தான் இங்கே.நன்றி ஸ்வாமிஜி.
அருமையான பதிவு, எனக்கொரு ஆசை ????!!!!
யோகம் இருந்தால் சந்திக்கலாம் , அது வரை வலை பதிவுகளின் மூலமாவது உரையாடலாம்.
( அப்படிப்பட்ட யோகிகளின் அருகில் அமர்ந்து தீர்க்கமாக நமது எண்ணத்தை குவித்தால் விரைவில் அதை அடையலாம். ஆனால் அவர்களிடத்தில் அமரும் பொழுது மனம் லயமடைந்து எண்ணங்கள் எழாது.)
சில அல்லது பல சமயங்களில் , கோவிலில் ஆண்டவனை தொழும் பொழுது , நாம் கொண்டு போன கோரிக்கைகளை மறந்து , வெறும் தரிசனம் மட்டுமே கண்டு அந்த ஆனந்த நிலைக்கு போனதுண்டு. ஆனால் சில சமயம், நமது மனம் கோரிக்கையை வாசித்து கொண்டிருக்கும் , தரிசனம் அவ்வளவு தான்
good blog. try to write like this.
unknown persons lets taste somethings.
time will tell which blogs withstand.
i expecting like this than astrology,
உங்களுடைய அடுத்த பதிவு எப்ப வரும் அதை படிக்கனுமுன்னு ஆசை.
//ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
புலனுடன் கூடிய ஆசை அறுமின்க//
மனமும் புலந்தானே?
// ஷண்முகப்ரியன் said...
உங்கள் சென்னை வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஸ்வாமிஜி //
ஸ்வாமிஜி சென்னை வரபோறிங்களா எப்ப? எங்க?
எனக்கு சில நாட்களாக ஒரு சின்ன ஆசை சுவாமிஜி! ஒரு யோகியை சந்தித்து அவருடன் மௌனமாக சில நேரம் அமர்ந்திருக்கவேண்டும்! யோகியிடம் நான் எதையும் பேச மாட்டேன், காரணம் பேசுவதற்கு ஞானம் இன்னும் அறியவில்லை மற்றும் நான் பேசித்தான் என்னை பற்றி அவருக்கு தெரிய வேண்டும் என்று இல்லை. இது மட்டும் நடந்தால் அதுவே பெரிய பாக்கியம்! ஆசையை பற்றி அருமையான பதிவு. ஒருவரின் ஜாதகத்தை எப்படி ஆராய்ந்து அவர் ஆசைகளை கண்டுபிடிப்பது என ஒரு பாடம் நடத்தவேண்டும் என்று வேண்டிகொள்கிறேன்.
//ஆனால் யாரும் நான் ஞானம் அடைவேனா? என் உள்நிலையை உணர்ந்து பரமானந்தம் அடைவேனா?//
ஆன்மீகத்தை பற்றி படிக்க படிக்க சிறிது நாட்களாக இந்த ஆசை எனக்கு வருகிறது. நிஜமாகவே கேட்கிறேன், ஒருவரின் ஜாதகத்தை வைத்து இதை கூறமுடியுமா?
என் தாழ்மையான அபிப்பிராயம்!
"ஆசை அறுமின்" வெறும் அலங்கார வார்த்தை.
காவிகட்டி சன்யாசி என்றவர்கள் எல்லாம் இந்த,அந்த
ஆசையில் பட்ட பாட்டை பார்த்தோம்.
உங்கள் பங்குக்கு நீங்களும் சொல்லியுள்ளீர்கள்.
எந்த வகையிலும் உலகில் எவருமே கைக்கொள்ள முடியாத,தத்துவம்.
ஏதோ ஒரு ஆசையுடன் தான், உயிரோட்டம் அமைகிறது.
இதை வென்றவர்கள் உலகில் இருக்க மாட்டார்கள்.
Post a Comment