Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Tuesday, October 9, 2018

சபரிமலை மேலும் சில உண்மைகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதை தொடர்ந்து பெண்கள் சபரிமலைக்கு செல்லாமா என ஊடக விவாதம் நடைபெறுகிறது. ஐயப்ப பக்தர்கள் கேரளாவிலும் பல ஊர்களிலும் பேரணி செல்கிறார்கள். தேவஸ்வம் போர்டு அடுத்த மாதம் பெண் பக்தர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்வோம் என சொல்லி வருகிறார்கள். பூஜைகளில் இருக்கும் தந்திரிகள் பாரம்பரியம் அப்படி இல்லை என சங்கடத்துடன் பேட்டி அளிக்கிறார்கள். 

உண்மையில் சபரிமலை கோவிலை மையமாக வைத்து என்ன நடக்கிறது என்பதை கூற தேவையில்லை. சபரிமலை பெண்கள் செல்லலாம் என்ற விஷயம் இப்பொழுது நீதிமன்றம் தாண்டி அரசியல்வாதிகள் கையில் இருக்கிறது.

இப்படி நீண்ட குழப்பத்தில் இருக்கும் விஷயத்தில் என்ன உண்மையை நான் சொல்லிவிடப் போகிறேன் ?

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி சபரிமலை கோவிலுக்கு பெண்கள் சென்றால் என்ன ஆகும்?

வாருங்கள் ஆராய்வோம்.

முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது பெண்கள் செல்லலாமா இல்லையா என்பது இல்லை, சபரிமலை கோவிலின் விதிமுறைகள் பற்றியது.

நம் நாட்டின் கோவில்கள் இரண்டு வகையான கோவில் சட்ட விதிகளுக்கு உட்பட்டவை. முதல் வகை - மனிதர்கள்/அரசர்கள் வழிபாட்டு ஸ்தலம் உருவாக்கும் பொழுது அவை ஆகம விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட வேண்டும். ஆகமம் என்பது பல்வேறு ஆன்மீக உயர்நிலை கொண்டவர்களால் உருவாக்கப்பட்டது. கோவிலின் நிர்மாணம் முதல் கோவில் எப்படி செயல்படவேண்டும் என்பது வரை ஆகமத்தில் இருக்கிறது. 

இரண்டாம் வகை என்பது சித்தர்கள் - ஆன்மீகவாதிகள் அவர்களே உருவாக்கிய ஸ்தலங்கள். இவை ஆகம விதிகளுக்கு உட்படாதவை. ஆனாலும் ஆகம சாஸ்திரத்தை உருவாக்கிய பல ஞானிகள் தனிக்கோவில்கள் உருவாக்கி இருக்கிறார்கள் அப்படி இருக்க சித்த முறை கோவில்கள் ஆகமத்திலிருந்து பெரும் வேறுபாடு இருக்காது. ஆனாலும் சில சித்த புருஷர்கள் தங்கள் உருவாக்கிய கோவில்களுக்கு புதிய சட்டங்களை உருவாக்கி வைத்திருப்பார்கள்.

 உதாரணமாக பழனி பால தண்டாயுதபாணி கோவில் சித்த மஹாபுருஷர் போகர் உருவாக்கினார். அங்கே ஆகமத்தை செயல்படுத்தினால் சில குழப்பம் வரும். அதை நாம் சமீபகால செய்திகளில் பார்த்திருக்க முடியும்.

கேரள கோவில்கள் எதன் அடிப்படையில் இருக்கிறது என்றால் ஆகமவிதிகளில் இல்லை என்பதே பதில். பரசுராமரால் உருவாக்கப்பட்ட பூமியில் அவர் கோவில் நடைமுறைகளையும் பூஜா விதிகளையும் நிர்ணயம் செய்துவிட்டார். அதன் அடிப்படையிலேயே கேரள கோவில்கள் செயல்படுகிறது. இதற்கு பரசுராம பத்ததி என்று பெயர். 

பரசுராமர் கோவிலின் விதிகளை ஆகமம் போல  நூலாக எழுதிவைக்கவில்லை. பாரம்பரியமாகவும் செவிவழியாகவும் அவை பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படியானால் நாளடைவில் அவை மாறிவிடவோ அல்லது தவறு ஏற்படவோ வாய்ப்பு உண்டே என உங்களுக்கு தோன்றுகிறதா? நமக்கே தோன்றுகிறது என்றால் பரசுராமருக்கு தோன்றாதா? 

எதிர்காலத்தில் பரசுராம பத்ததியில் கோவில் செயல்படுகிறதா என்பதை சரிபார்க்க அவர் உருவாக்கிய முறைதான் தேவப்பிரசன்னம். கோவில் நடைமுறை அல்லது விதிபற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் நடுநிலையான ஜோதிட குழுவை கொண்டு தேவப்பிரசன்னம் பார்க்க வேண்டும். பிரசன்னத்தில் இறைவனே நேரடியாக வந்து தனது கருத்துக்களை கூறுவார். இறைவனே வந்து கூறும்பொழுது சுண்டைக்காய் மனித சட்டங்கள் என்ன செய்துவிட முடியும்?

[தேவப்பிரசன்னத்தை பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இங்கே செல்லவும் - தேவப்பிரசன்னம் ]

குருவாயூர் கோவிலில் பெண்கள் சல்வார் (கால்சட்டை) அணிந்து செல்லலாமா என கேள்வி எழுந்தவுடன், தேவப்பிரசன்னம் பார்க்கப்பட்டது. பிரசன்னத்தின் விளக்கமாக கூடாது என முடிவு செய்து இன்னும் பின்பற்றி வருகிறார்கள்.

மேற்கண்டவற்றை ஏன் சொல்லுகிறேன் என்றால், சபரிமலையில் தேவப்பிரசன்ன நடைமுறை எப்படி நடைபெறுகிறது என்பது ஊருக்கே வெளிச்சம். கோவிலின் நியமங்கள் பல கோளாருகள் பல வருடங்களாக இருக்கிறது. இறைவனின் சன்னிதியில் இருப்பவர்கள் நடுநிலையான பிரசன்னத்திற்கு தயராக இல்லை. அவர்கள் நோக்கம் ஒரு வருடத்திற்கு ஏலம் அதை பன்மடங்காக எப்படி திருப்பி எடுப்பது என்பதே..! 

தந்திரிகளும் அவர்களை இயக்கும் மந்திரிகளும் இப்படி முறையற்று இருக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தான் சாநித்யம் கெட்டுவிடும் என குதிப்பது முட்டாள்தனமானது.

கோவில் பொதுவான இடம். அங்கே ஒரு கட்டிடம் கட்டுவதற்கும் சில புதிய விஷயங்களை செய்வதற்கும் தேவப்பிரசன்னம் கேட்டுவிட்டே செயல்படுத்த வேண்டும். இப்படி செய்வது கேரளாவில் பல கோவில்களில் இருக்கும் நடைமுறையாகும். ஆனால் சபரிமலையில் தந்திரிகள் தேவஸம்போர்டு ஆகியவை போட்டிபோட்டுக் கொண்டு விதிகளை காற்றில் பறக்கவிடுவார்கள் என்பது நடைமுறை. இவர்கள் தேவப்பிரசன்னத்தில் ஐய்யன் அயப்பனின் கருத்து என்ன என கேட்க முயற்சிப்பதில்லை..! 

அப்படியானால் இறைவன் எப்படி தன் சாநித்தியத்தை நிறுவுவார்? மிக எளிது, யார் சொன்னால் இவர்கள் கேட்பார்களோ அவர்களை வைத்து சொல்வார். அல்லது சொல்ல வைப்பார் என அறிக.

இதற்கு ஒர் உதாரணம் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மகரஜோதி/விளக்கு தானாக தோன்றுகிறது என பல வருடங்களாக வதந்தி நிலவி வருகிறது. (இன்றும் சிலர் பரப்பி வருகிறார்கள்). தந்திரிகள் மற்றும் தேவசம் போர்ட்டின் கடமை, இது வதந்தி என கூறவேண்டும். இந்த பொய்யால் கூட்டம் வருகிறது என்பதால் அவர்களுக் கமுக்கமாக இருந்து விடுகிறார்கள். வழிபாட்டுக்கு இத்தனை ரூபாய் என பலகை வைக்கும் இவர்கள், மகரஜோதி என்பது எங்களால் ஏற்படுவது என கூறி ஒரு தகவல் பலகை வைக்கலாம் அல்லவா? செய்யமாட்டார்கள். காரணம் வருமானம். மேற்கண்ட விஷயம் உண்மை என்பதற்கு 1980க்கு பிறகு மகர விளக்கு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதை உதாரணமாக காட்ட முடியும்.

இறைவன் சும்மா இருப்பாரா? ஒரு பொதுநல வழக்கு உயர்நீதி மன்றத்தில் வந்தது. அதில் தேவசம் போர்டு மெம்பர்கள் மற்றும் தந்திரியே வாக்குமூலம் கொடுத்தார்கள். 

”இது மகர விளக்கு நாங்கள் ஏற்றுவது. முன்பு ஒரு காலத்தில் மகரஜோதி ஏற்பட்டது - அதை நினைவுகூறும் வகையில் செயல்படுகிறோம்” என்றார்கள். 

2010ல் சபரிமலை உண்மைகள் தொடரில் இது மனிதர்களால் உருவாக்கும் செயல் என சுட்டிக்காட்டி இருந்தேன். பலர் எதிர்வினை செய்தார்கள் , மேலும் சிலர் என்னை சந்தேகித்தார்கள். சில வருடங்களுக்கு பின் நீதிமன்ற வழக்கில் தெளிவுபெற்றார்கள். மேற்கண்ட கருத்தை தான் நான் சுட்டிகாட்டுகிறேன், நாம் சொல்லாவிட்டால் இறைவன் சொல்லவைப்பார் என்று..!

சில விஷமிகளால் சபரிமலைக்கு பெண்களே செல்ல முடியாது என்ற கூற்று சிலவருடங்களாக பரவி வருகிறது. அது தவறு என நிரூபிக்கவே இந்த வழக்கு. பெண்கள் செல்ல முடியும் என்று எனது சபரிமலை உண்மைகள் தொடரிலும் நான் எழுதி இருக்கிறேன். கருப்பை இல்லை என சான்றிதழ் அளித்தால் இப்பொழுதும் செல்ல முடியும். கருப்பை தூய்மை கெட்டது, பெண் அசுத்தமானவள் என விஷமிகள் பரப்பும் செய்தி. எந்த கோவிலுக்கும் மாத ஓய்வில் பெண்கள் செல்ல அனுமதி இல்லை , அதற்கு காரணம் சுகாதாரம் என்பதே தவிர அசுத்தமானவள் பெண் என்பது அல்ல. மேலும் ப்ராண சக்தியை பற்றி அறிந்துகொண்டால் பெண்மையின் அடிப்படையான கருப்பை செயல்பாடு புரியும். ஆழ்ந்த ஆன்மீக சார்ந்த புரிதல் இல்லை என்றாலும் நாம் சுகாதார சார்ந்து புரிந்துகொள்வோம். 

சபரிமலையில் பெண்கள் அனுமதி இல்லை என்பது தவறான கோட்பாடு என எப்படி நமக்கு அய்யப்பன் புரியவைப்பார்? சபரிமலையில் தேவப்பிரசன்னம் நடுநிலையாளர்களால் நடத்தப்பட்டால் புரியும். இல்லையேல் நீதிமன்றம் தலையிடவே செய்யும்...!

முதலில் நாம் உறுதியாக கோவில் நடைமுறையை பின்பற்றினால் யாரும் தலையிடமாட்டார்கள் என்பதை சபரிமலை கோவிலில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வைக்கப்படுவார்கள்.

பெண்கள் அனுமதிக்கப்படுவது பாரம்பரிய முறையில் குறைபாடுவரும் என கூறுபவர்களுக்கு நான் கேட்கும் கேள்வி இது தான்.

ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சரியான விரத அனுஷடானக்கள் பின்பற்றிய பின் தான் வருகிறார்களா?
ஒவ்வொரு ஊரிலும் குருசாமி நடைமுறையில் அவர்களை கண்காணித்து அனுப்பிவைக்க ஏதேனும் நடைமுறை உள்ளதா? கருப்பைக்கு சான்றிதழ் கேட்கும் இவர்கள் ஐயப்ப பக்தர்களின் விரதத்திற்கு சான்றிதழ் கேட்பதில்லை. விரத குறைபாட்டுடன் வரும் பக்தர்களால் பாரம்பரியம் குறையாதா?

பம்பை முதல் சரங்குத்தி வரை அதற்கு மேலும் கான்கிரீட் பாதை அமைக்கும் பொழுது பாரம்பரியம் குறையாதா?

30 வருடங்களால டோலி தூக்கி செல்லும் நடைமுறை இருக்கிறதே இது பரசுராமர் சொன்ன பாரம்பரியமா? இருமுடியுடன் வந்து மேலே செல்ல முடியாத முதியவர்கள் பம்பா கணபதியிடம் விளக்கு ஏற்றி பிற ஐயப்ப பக்தர்களிடம் இருமுடியை கொடுத்து அனுப்புவார்களே அவர்கள் பாரம்பரியம் காப்பவர்களா? பணத்தை வீசி டோலியில் சென்று விஐபி தரிசனம் செய்பவர்கள் பாரம்பரியம் காப்பவர்களா?

முன்பு சிலகாலம் பெண்கள் கோவிலில் அனுமதிக்கப்பட்டு பதினெட்டாம் படி வழி செல்லாமல் பின்வழியாக சென்று இருக்கிறார்களே அது ஏன் நிறுத்தபட்டது? தேவப்பிசன்னம் வைத்த பிறகா? இல்லை பாரம்பரியம் கருதியா?

ஜாதிகள், மதங்கள் என எந்த கட்டுப்பாடும் இல்லமால் அனைவரும் சமம் என உணரும் சன்னிதி அருள் நிறை ஐயப்பனின் சன்னிதி. அங்கே எப்படி ஆண் பெண் வித்தியாசம் இருந்திருக்க முடியும் என நாம் சிந்திக்க வேண்டும். நடுநிலை ஜோதிட குழுவை கொண்டு தேவப்பிரசன்னம் வைத்து பெண்கள் கருப்பையுடன் அனுமதிக்கலாமா என கேட்டு முடிவு செய்ய வேண்டும். அப்படி முடிவு செய்த தீர்ப்பை எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது. [ உதாரணம் குருவாயூர் கோவில் ].

பாரம்பரிய முறையை நிலை நிறுத்த பாரம்பரிய வழிமுறைக்கு செல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பை மாற்றகோரி மனுகொடுப்பது சரியான பாரம்பரியமா?

இப்படி கூறிக்கொண்டே போகலாம்... 
நிற்க..!

ஐயப்ப பக்தர்கள் என்பவர்கள் யார்?

விரதம் இருந்து இருமுடிகட்டி பதினெட்டாம் படி கடந்து ஐயப்பனை சந்திப்பவர்கள். நம் வாழ்க்கையில் ஏதேனும் சங்கல்பம் இருந்தால் இருமுடி சுமந்து இறைவனுக்கு நெய் அபிஷேகம் செய்தால் நிச்சயம் நடக்கும் என நம்புபவர்கள். சாமியே நமஹ என சொல்லாமல் சாமியே சரணம் என சரணாகதி தத்துவத்தை கோஷமாக கொண்டவர்கள்.

அப்படி இருக்க, இப்பொழுது நாம் ஏன் பேரணி செல்லவேண்டும்? போராட்டம் செய்ய வேண்டும்? பாரம்பரியம் காக்கவேண்டும் சாநித்யம் காக்கப்பட வேண்டும் என சங்கல்ப்பம் செய்து விரதம் இருந்து இருமுடியுடன் ஐயப்பனிடம் அல்லவா சரணடைய வேண்டும்? 

அதைவிடுத்து சபரிமலை உரிமையை ’நான்’ காக்க போராடுகிறேன் என்றால் சரண கோஷத்திற்கு என்ன மதிப்பு? யாரோ இவர்களை தவறான பாதையில் செலுத்துகிறார்கள் என உணர வேண்டும்.

பல்வேறு இயற்கை சீற்றத்தாலும் , கொள்ளையர்களாலும் கோவில் சேதமான வரலாறு கொண்டது சபரிமலை. மூல விக்ரஹமே உடைக்கபட்டது. அப்படி இருந்தும் சாநித்யம் குறைந்ததா? ஐயன் அயப்பன் அங்கே முழுமையாக இருக்க இவர்கள் யார் ஏது செய்தாலும் அவரை அசைத்துவிட முடியுமா?

அவன் அருளால் அவன் தாழ் வணங்கி நில்லுங்கள். அவன் சாநித்யத்தை அவனே காப்பான். நாம் சுயநலம் விடுத்து சரணடைந்தால் அவனின் செயல் பல அற்புதங்களை நிகழச்செய்யும்.


தொடர்புடைய கட்டுரைகள்


0 கருத்துக்கள்: