ஆன்மீகம் வியாபாரமாக மாறி கடைவீதிக்கு வந்ததும் முதன் முதலில் வியாபார பொருளான விஷயமும் அதிகம் விற்கும் பொருளின் பெயர் என்ன தெரியுமா? - குண்டலினி.
ஹேமாமாலினியையும், ஜெயமாலினியையும் தெரியாதவர்கள் கூட நம் ஊரில் இருப்பார்கள். ஆனால் குண்டலினியை பற்றி தெரியாதவர்கள் மிகக்குறைவு.
நம் கலாச்சாரத்தில் ஆறுவிதமான ஆன்மீகப்பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோக பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு உள் பிரிவுகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம் என ஐம்பெரும் பிரிவுகளாக இப்பிரிவுகள் வகைப்படுத்தப்படுகிறது.
ராஜ யோகம் என்ற யோக பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் இருக்கிறது அதன் செயலால் ஞானம் ஏற்படும் என்பதை விவரிக்கிறது.
குண்டலினி என்ற சக்தி மூலாதாரம் என்ற இடத்தில் முக்கோண பெட்டகத்தில் இருக்கிறது. பாம்பின் வடிவில் மூன்று சுற்று சுற்றி மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை தலையின் உச்சியில் இருக்கும் சகஸ்ராரம் என்ற சக்ரத்திற்கு உயர்த்தினால் ஞானம் பிறக்கும் என்பது குண்டலினி யோகத்தின் அடிப்படை.
பதஞ்சலியின் யோக சூத்திரம் என்ற நூல் ராஜ யோகத்திற்கு ஆதாரமாக கொள்ளப்படுகிறது. குண்டலினியை பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் பதஞ்சலியை துணைக்கு கூப்பிடுவார்கள். அவரின் சிலையை வைத்து வழிபடுவார்கள். இதில் வேடிக்கையான விஷயம் பதஞ்சலி விக்ரஹத்தை பாம்பு வடிவில் சித்தரித்து இருப்பார்கள். குண்டலினி பாம்பு வடிவில் இருப்பதாக நம்புவதால் அச்சக்தியை குறிக்கும் வகையில் பதஞ்சலி பாம்பாகிவிட்டார். உண்மையில் பதஞ்சலி நேரடியாக குண்டலினியை பற்றியோ ஆதார சக்ரங்களை பற்றியோ கூறவில்லை...!
முன்பு ராஜயோகத்தை பயில்பவர்கள் குருவை நாடி தங்கள் முயற்சியை ரகசியமாக மேற்கொள்வார்கள். யோகத்திற்கெல்லாம் முதன்மையானது தலையானது என்பதால் இதற்கு ராஜயோகம் என பெயர். மேலும் ரகசியமாக பயிற்றுவிக்கப் பட்டதாலும் இது ராஜயோகம் என பெயர் பெற்றது. அரசாங்க (ராஜாங்க) விஷயங்கள் எப்படி அனைவருக்கும் தெரியக்கூடாதோ அதுபோல ராஜ யோக விஷயங்கள் தெரிய வேண்டியவர்களுக்கு தெரிந்தால் போதுமானது. ஆனால் தற்சமயம் ராஜயோகம் நடைபாதையில் விற்கும் மலிவு சரக்காகிவிட்டது.
எல்லோரும் கற்றுக்கொள்ளக் கூடாதா? இதுக்கும் ரகசியமா? ஏதாவது ஜாதி சார்ந்த கட்டுப்பாடுகள் உண்டா என நினைத்தால் அது தவறு..!
குண்டலினி யோகம் என்பது ஒருவர் மற்றொருவருக்கு கற்று தரும் விஷயமல்ல. இது குரு சிஷ்யன் என்ற இருவருக்கும் ஏற்படும் அனுபவம். அதனால் அவர்களால் அதை விவரிக்க முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும்.
ஆனால் தற்சமயம் குண்டலினி யோகத்தை ஒருவர் பல நூறு நபர்களுக்கு ஒரே வகுப்பாக எடுப்பது வியாபாரத்தின் அடையாளம் எனலாம்.
பல்வேறு ராஜயோகிகள் குண்டலினி அனுபவத்தை கலவி இன்பத்துடன் ஒப்பிட்டு சொல்லுவார்கள். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்படும் தாம்பத்திய உறவு இயல்பானது இதற்கு கடினமான பயிற்சிகள் தேவையில்லை. இருவருக்கும் என்ன நிகழ்ந்தது என நமக்கு தெரிந்தாலும் , அவர்களிடம் உங்களுக்குள் நடந்த விஷயத்தை படிப்படியாக கூறுங்கள் என கேட்பது எப்படி அபத்தமான விஷயமோ அது போன்றது குண்டலினி அனுபவத்தை விவரிக்க சொல்வதும் என்பது என் கருத்து.
மேலும் கணவனோ மனைவியோ பொது இடத்தில் தங்களுக்குள் நிகழ்ந்ததை ஒவ்வொன்றாக விளக்கினால் நாம் முகம் சுளிப்போம் அல்லவா? அதனால் தான் சொல்லுகிறேன், இது நிகழவேண்டியது அல்ல அனுபவமாக உணர வேண்டியது.
தற்சமயம் ஒரு எழுத்தாளர் கூட தன் குரு தனக்கு கொடுத்த குண்டலினி அனுபவத்தை மேடைக்கு மேடை விளக்குகிறார். இவரை பார்த்து பிற ஆன்மீகவாதிகள் நெளிவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்?
குண்டலினி சக்தி என்பது உண்மை, அதனால் ஏற்படும் அனுபவங்கள் உண்மை. ஆனால் அதற்காக தற்சமயம் கொடுக்கும் பயிற்சிகளே போலியானது. உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி அல்ல வேறு எதுவுமே நிகழாது.
சில யோக கழகங்கள் கார்ப்பரேட் மேனேஜர்களுக்கான குண்டலினி யோகம், குடும்ப பெண்களுக்கான குண்டலினி யோகம் என நடத்துகிறார்கள். இன்னர் மெடிக்கல், எஞ்சினியரிங் , லா என்றல்லாம் பயிற்சிகள் குண்டலினியின் பெயரால் நடக்கிறது. இதில் கலந்துகொள்பவர்கள் யார் தெரியுமா?
தினமும் வீட்டிலும், வாரம் ஒரு முறை கம்பெனியின் பார்டியில் மது அருந்துபவர்களும், தினமும் புகைப்பிடிப்பவர்களுக்கும், தங்களின் உடலை சிறு அசைவு கூட செய்யாமல் ஏஸி அறையில் வைத்திருக்கும் கார்ப்பிரேட் அதிகாரிகள். இவர்களுக்கு ஏழு நாளில் குண்டலினி உயர்த்திகாட்டுகிறார்களாம் இந்த யோக கழகங்கள்.
இது போன்ற குண்டலினி பயிற்சி பெறும் எவரும் தங்களுக்கு அவ்வனுபவம் ஏற்படவில்லை என கூற மாட்டார்கள். பயிற்சியில் என் சக்கரங்கள் அப்படி ஆனது இப்படி ஆனது என கூறுவார்கள். இது எப்படி நிகழ முடியும்?
ஒரு ஏமாற்று பேர்வழி பலரிடம் பணம் பறிக்க கடவுளை காட்டுகிறேன் என அனைவரிடமும் பணம் வசூலித்து மலை உச்சிக்கு கூட்டு சென்றானாம். அங்கே கடவுள் தெரிகிறார். அவர் பத்தினி கணவனின் கண்களுக்கே தெரிவார் என சொன்ன கதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது போன்றதே இந்த குண்டலினி அனுபவமும். ஆயிரக்கணக்கான ரூபாய் செலுத்தி பயிற்சிக்கு வந்தாகிவிட்டது. தன் அருகில் இருப்பவனோ பாம்பு போல நெளிகிறான். நாம் சும்மா இருந்தால் நம்மை ஏளனமாக பார்ப்பார்களோ என தங்களை தாங்களே பலர் ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
ராஜ யோகிகள் குண்டலினி அனுபவத்தை கலவியோடு ஒப்பிட்டார்கள் என்றேன் அல்லவா? ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு கலவி பற்றி கற்றுக்கொடுத்தால் அவனால் அதற்குரிய அனுபவம் ஏற்படுமா என சிந்திக்க வேண்டும். அவனுக்கு உடலாலும், மனதாலும் வளர்ச்சி ஏற்பட்டால் ஒழிய கற்றது பயன்படாது. அது போன்றதே ராஜ யோகம் என்பதை உணருங்கள்.
ராஜயோகம் பயிலும் பொழுது பல்வேறு உடல் மற்றும் மன உபாதைகள் வரும். அதை சரியான குருவின் வழிகாட்டுதலால் மட்டுமே களைய முடியும். அப்படி என்ன உபாதைகள் வரும் என கேட்கிறீர்களா?
(குண்டலினி எழும்..)
14 கருத்துக்கள்:
சுவாமிஜி,
குண்டலினி பற்றிய பதிவு மிகவும் அருமையாகவும்
பயனுள்ள பல தகவல்கள் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.
அடுத்த பதிவை மிக மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நன்றி,
மு. சுப்பிரமணியன் (மதுரை)
:))
பொதுவாக அமைப்பு முறையில் பல நன்மையையும் உண்டு ,பல தீமையும் உண்டு....
எதை செஞ்சாலும் ஒரு நேர்மை வேணும்
இன்னுமா இந்த உலகம் அந்த மனிதரை நம்புது..What a pitty :)
சுவாமி,
அருமையான தொடரை ஆரம்பித்து இருக்குறீர்கள். இந்த குண்டலினியை பற்றி தெரிய என்றுமே ஆவல் இருந்தது.
தாங்கள் குறிபிட்டது போல, ஆறு வகையான ஆன்மீக பாதைகள் எவை சுவாமி?
நன்றி.
very good article "SwAMI"
நிறைய தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன் ஸ்வாமி! :))
அந்த கண்றாவி வகுப்பைப் பார்த்தபோது நான் நினைத்ததும் குண்டலினியை கூறுகட்டி வித்தாச்சா என்று.
ஏதோ "நீயா" படத்தில் பாம்பு டான்ஸ் பார்ப்பது போல இருந்தது. மஹா அறுவெறுப்பு :(
// உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி அல்ல வேறு எதுவுமே நிகழாது.//
சரியாய் சொன்னீர்கள் சுவாமிஜி.
யம நியமங்களைக் கடைப்பிடிக்காமல் குண்டலினி, முத்ரா என்று கூத்தடிக்கிறார்கள். நாடிகள் நூறு சதவீதம் சுத்தியடையாமல் குண்டலினியோ அல்லது ஆதார சக்கரங்களோ அல்லது முத்திரைகளோ எவ்வாறு செயல்படும்? இதைப் பற்றியும் உங்கள் தொடரில் விளக்கமாக சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.
சுவாமி, வணக்கம், புவியிர்ப்பு சக்தியை மீறி அந்தரத்தில் பறந்த காட்சியை, தொலைக்காட்சியில் பார்த்தவுடன், அதற்கு சரியான விளக்கம் தங்களால் தந்து தெளிவுபடுத்துவீர்கள் என எண்ணி காத்துகொண்டிருந்தேன்.
எண்ணம் வீண் போகவில்லை, எழுதுங்கள் தெளிவுபடுத்துங்கள். நன்றி
LSD nnu onnu irukku sami. Saptakka summa Kundalini ellam picha vanguma...
Konjam google panni parunga..
Enda kashtamum illa sitha nila :-)
நித்தி கூட குண்டலினியை எழுப்பி உங்களை ஆகயத்துக்கு தூக்குகிறேன் என்று கூறி பெண்களை எம்பி எம்பி குதிக்கச் சொல்லி இருக்கிறார். பின்னாடி எல்லோருக்கு பலத்த அடியாம், வெறெதுவும் நடக்கவில்லை
கருத்து பகிர்ந்த அனைவருக்கும் என் நன்றிகள்.
திரு பட்டரை பாண்டி,
ஆறு தரிசனங்கள் என அழைக்கப்படும் இந்திய கலாச்சாரத்தில் ஆறு பாதைகளை பற்றி விவரிக்க இடம் போதாது.
சில நாட்களுக்கு முன் நான் எழுதிய சாங்கிய தத்துவம் இதில் ஒன்று.
இணையத்தில் பல தகவல்கள் இதை பற்றி உண்டு.
விக்கியின் குறிப்பு இதோ http://en.wikipedia.org/wiki/Hindu_philosophy
அண்ணனுக்கு வணக்கம் ....
நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல , உபயோகமான , அனைவரும் கற்று உணர்ந்துகொள்ள வேண்டிய தலைப்பை எடுத்துள்ளீர்கள் . வாழ்த்துக்கள் .
சுவாமிஜி... இந்த எழுத்து நடை எப்படி நீங்கள் கைவரப் பெற்றீர்கள்... வரப்போகும் காலத்துக்கேற்ற அபாரமான ஸ்டைல்... சந்தர்ப்பம் கிடைக்கும்போது உங்களைச் சந்திக்க மிக ஆவலாக இருக்கிறேன்.
Post a Comment