கபில முனிவர் சாங்கிய தத்துவத்தை ஏதோ தனக்கு தோன்றிய கருத்து என விளக்கவில்லை. மிகவும் அறிவியல் ரீதியாக படிப்படியாக விளக்குகிறார். இங்கே அறிவியல் என நான் குறிப்பிடுவது நவீன அறிவியலை அல்ல. மெய்ஞானத்தை அறியும் விஞ்ஞானத்தை கபிலர் கையாண்டார் என்கிறேன்.
நம் உடல் என்பது எத்தகையது. அதன் இயக்கங்கள் தோற்றங்கள் ஆகியவற்றை அவர் விளக்கும் அமைப்பு அலாதியானது. சாங்கிய தத்துவம் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது அல்ல. குருபரம்பரை மூலமாக கூறப்பட்டும், தன்னகத்தே ஞானம் பெற்றவர்களால் உணரப்பட்டு விளக்கப்படுவதே சாங்கியம்.
நாம் தோற்றம் எங்கிருந்து வந்தது. நாம் எங்கே இருக்கிறோம். எங்கு செல்லப்போகிறோம் என கேள்விகள் மனிதனுக்கு தோன்றும் சமயம் சாங்கியம் அதற்கு பதில் அளிக்கிறது.
ஆன்மாவானது ப்ரகிருதி எனும் இயற்கை நிலையுடன் இணைந்து அறிவை தோற்றுவிக்கிறது. அவ்வறிவு அஹங்காரம் எனும் தன்முனைப்பை ஏற்படுத்துகிறது. எங்கே தன்முனைப்பு ஏற்படுகிறதோ அங்கே பிறப்பு நிகழுகிறது. முக்குணங்கள் பிறந்து அக்குணங்களின் தன்மைக்கு ஏற்ப நம் புலன்களும் இப்பிரபஞ்சமும் கண்முன் விரிகிறது.
இக்கருத்தை படமாக கீழே கொடுத்துள்ளேன். அதை பிரதி எடுத்து கையில் வைத்துக் கொண்டீர்களானால் இனி வரும் பகுதியில் நான் விளக்கும் பொழுது உங்களுக்கு தெளிவு பிறக்கும்.
படத்தின் மேல் அழுத்தி பெரிதாக பார்க்கலாம்
ஸாத்வ குணம் மூலம் தோன்றும் மனமே ஐபுலன்களை இணைக்கும் கருவியாக இருக்கிறது. மனம் என்பது நம் தோற்றம் அல்ல. மனம் என்பது நம்மில் ஒரு உறுப்பு ஆகும். எனவே இதில் நீங்கள் உணர வேண்டியது மனம் அற்ற நிலை என்பது சாத்தியம் உண்டு. மனம் இல்லையேல் அங்கே குணம் மட்டுமே உண்டு. புலன்கள் இல்லை.
இத்தகைய மனமே உங்களுக்குள் போலியான உலகை ஏற்படுத்துகிறது. ஸாத்வ குணம் மூலம் நினைவு நிலையில் ஓர் உலகையும், தமோகுணம் மூலம் கனவு நிலையில் ஒரு உலகையும், ரஜோ குணம் மூலம் பாதி விழிப்பு நிலையில் இரு தளத்திலும் பயணிக்க செய்கிறது.
மூன்று குணங்களுக்கும் அடிப்படையாக இருப்பது நான் என்ற அஹங்காரம். தன்முனைப்பு என்ற அஹங்காரமே நம் செயலுக்கு காரணமாக இருக்கிறது. உங்களுக்குள் நான் என்ற முனைப்பு எங்கே தோன்றுகிறது என பாருங்கள். அந்த பகுதியை பிடித்தீர்களானால் எளிமையாக அடுத்தடுத்த உயர்நிலைக்கு சென்று உங்களின் உண்மையான தோற்றமான ஆன்ம நிலையை அடைய முடியும்.
ஆன்மீகவாதிகள் தங்களின் உள் பயணிக்கும் பொழுது கர்மேந்திரியம் மற்றும் ஞானேந்திரியத்திலிருந்து படிப்படியாக மேல் நோக்கி பயணிக்கிறார்கள். அனைவரும் ஆன்மா என்ற நிலையை உணர்ந்தார்களா என தெரியாது. ஆனால் தாங்கள் கண்டவற்றை தங்களின் கலாச்சாரத்திற்கு விளக்கினார்கள். அதுவே மதமாக பரிணாமித்தது.
ஸாத்வ, ரஜோ மற்றும் தமோ குணம் தான் மேல் நாட்டில் பிதா, சுதன் மற்றும் பரிசுத்த ஆவியானது. சமணத்தில் ஸத்வ குணமும் அஹங்காரமுமே முடிவு நிலையானது. பல்வேறு அடிப்படை மதங்கள் ஸத்வ குணம் என்பதில் உள்ள அன்பை போதிக்கிறது. சிலர் ப்ரகிரிதியை பெண் வடிவம் கொடுத்து அம்மனாக வழிபடுகிறார்கள். சிலர் புருஷார்த்தம் என்ற நிலையை சிவனாக வழிபடுகிறார்கள். இவ்வாறு பல்வேறு இறைவழிபாட்டின் சுவடுகளுக்கு அடிப்படை காரணமாகவும் காரணியாகவும் இருப்பது சாங்கிய தத்துவமே ஆகும்.
ஆன்மாவானது ப்ரகிருதியுடன் இணைந்து அறிவு பெற்று அஹங்கார நிலை அடைந்ததும் ஆன்மா தன்னை மறந்துவிடுகிறது. ஆன்மா தன்னை உணராமல் அஹங்காரத்தாலும் முக்குணத்தாலும் தான் ஐபொறியாக எண்ணிக்கொள்கிறது. இதனால் ஆன்மாவானது தன்னை வேறொன்றாக நினைப்பதால் வரும் சிக்கலே இது.
குயவன் ஒருவன் பானையை செய்வதை பார்ப்போம். குயவன் பானையை செய்ய களிமண்ணை சக்கரத்தில் வைத்து சுத்தும் பொழுது சக்கரத்தை சுற்றி வெற்றிடம் இருக்கிறது. அவன் பானையை வடிவம் கொடுக்கும் பொழுது பானைக்குள் இருக்கும் வெற்றிடமானது பானை வடிவில் சிறைப்பட்டுள்ளது. பானை இருக்கும் வரை அதன் உள்ளே இருக்கும் வெற்றிடத்தில் யாருக்கும் கவனம் இல்லை. பானை உடைந்ததும் அந்த வெற்றிடம் முன்பிருந்த வெற்றிட நிலைக்கே கலந்துவிடுகிறது. கலந்துவிட்ட பின்னும் வெற்றிடத்தில் யாருக்கும் கவனம் இல்லை. அந்த வெற்றிடம் எதுவாக இருந்ததோ அதுவாகவே மாறிவிட்டது. இதையே ஆன்மா உருவாவதும் இல்லை, அழிக்கப்படுவதும் இல்லை என்கிறது சாஸ்திரம்.
ப்ரகிரிதியின் காரணமாக சிறைபட்ட புருஷார்த்தம் என்ற ஆன்மா தன் சுய வடிவினை இழக்கிறது. மீண்டும் தன் சுயத்தை பெறும் பொழுது அது ஞானம் என்றழைக்கப்படுகிறது.
இப்பொழுது சொல்லுங்கள், மனம் என்ற ஒரு உறுப்பால் உங்களின் ஐபுலன்களும் உந்தப்பட்டு நீங்கள் வாசிக்கும் இவ்வரிகள் உண்மையானதா? ஆன்மா என்ற சூரியனின் ஒளி , மனம் என்ற தார் சாலையில் விழும்பொழுது உண்டாகும் கானல் நீர்தானே உடல் உறுப்புகள் ?
உங்களின் மெய் என்ற உடலில் உள்ளே இருப்பது தானே மெய்? இதை நீங்கள் கண்டால் உங்களின் பெயர் மெய் கண்டார்..! உங்கள் ஐபுலனும் அஹங்காரமும் கொண்ட உடலுக்கே பெயர் உண்டு. அதை கடந்தவர்களுக்கு என்றுமே ஒரே பெயர். மெய் கண்டார்...!
ஆன்மா என்ற நிலையில் தான் நாம் இருக்கிறோம் என்ற உண்மையை உணர்ந்ததும் என்ன நிகழும்?
என் செல்ல எதிரி திருமூலர் எளிமையாக விளக்குகிறார் பாருங்கள்.
தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே
எம்பிரான் என்னும் ஆன்மாவை சந்தித்தால் என்ன நடக்கும் என புரிகிறதா?
நான் பல்வேறு வார்த்தைகளை பயன்படுத்தி இவ்வற்றை விளக்கினாலும் உங்களின் உள்ளே மாற்றம் நிகழும் பொழுதே இவற்றை உணர முடியும்.
சாங்கியத்தில் குறிப்பிட்ட விஷயங்களை நீங்கள் உணர வேண்டுமானால் நீங்கள் புலன்களில் இயங்கக் கூடாது. இது சொல்வது எளிது நாம் கடும் முயற்சி செய்தால் மட்டுமே புலன்களை விடுத்து மேல்நிலையான அறிவு, பிரகிருதி என செல்ல முடியும். நாம் புலனில் இயங்கக்கூடாது என கூறும் பொழுதே அதை படித்துக்கொண்டிருக்கும் இந்த கண்கள் ஒரு புலன் தானே?
நாம் அஹங்கார ரூபமாக வெளி உலகை கவனிக்கையில் இயற்கையே (ப்ரகிருதி) ஒரு நாள் நம்மை ‘பளார்’ என அடித்து ஆன்மாவை நோக்கி திருப்பும். அன்று விழும் அடி என்றும் மறக்காது. அன்று விழும் அடியால் அனைத்தும் புரிந்துவிடும். அனேகமாக ஞானம் பெற்ற பலருக்கு இவ்வனுபவம் இருக்கும். இத்தகைய நிலை ஏற்பட்டு அஹங்காரம் உடைத்தெரியப்பட்டு சூன்ய நிலையில் இருப்பார்கள். விரக்தியின் உச்சத்தில் இருப்பார்கள். அப்பொழுது தான் தான்முனைப்பு ஏற்பட்டு தன்னுள்ளே கவனிக்க ஆரம்பிப்பார்கள். ஞானம் பிராசிக்கும்.
கெளதம புத்தர் உலகியல் இன்பங்களில் நாட்டத்துடன் இருக்கும் ஒரு நாள் இறப்பு, மூப்பு நோய் போன்றவற்றை கண்டதும் தன் சூன்ய நிலைக்கு சென்று தன்னுள்ளே தேடத்துவங்கினார்.
வேட்டையாடி உலகியல் இன்பத்தில் நாட்டங் கொண்ட வேடன், முனிவர்களின் கேள்வியால் தன்முனைப்பு பெற்று தன்னுள்ளே தேடத்துவங்கி வால்மிகியானான்.
வெற்றிமட்டுமே போரில் சந்தித்த ஒரு அரசன், திடிரென தோற்று போனான். தன் நாட்டை இழப்பதை விட தன் வெற்றியை இழப்பது இழுக்காகப்பட்டது. அஹங்காரத்தில் அடிவிழுந்தது.
விரக்தியின் உச்சத்தில் சூன்ய நிலைக்கு சென்றான். பகைவரிடத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள குகையில் அடைபட்டவனுக்கு தன்முனைப்பு ஏற்பட்டது. ஞானம் பிறந்தது. பிறகு அவன் பகைவனை மட்டுமல்ல தன்னையே வெற்றிக் கொண்டான்.
இப்படி ஞானிகளின் வாழ்க்கை எங்கே ஞானம் பெறும் இயக்கம் துவங்கியது என பார்த்தால் அவர்களின் அஹங்காரத்தில் விழுந்த அடி என உணரலாம். அதனால் ஏற்பட்ட சூன்யமே அவர்களை தன் ஆய்வுக்கு இழுத்து சென்றிருக்கிறது.
ஸ்வாமி ராமாயணம் மஹாபாரதம்னு சொல்லி இப்ப எங்கையோ கூட்டிக்கிட்டு போறிங்களேனு நினைக்கிறீர்களா? :)
வால்மீகி தன்னுள் கண்ட சாங்கியத்தை வரிவடிவில் வடித்தது தான் ராமாயணம். வியாசர் தன்னுள் கண்டதை வரிவடிவில் வடித்தது தான் மஹாபாரதம். இரண்டும் சாக்கிய வரைபடத்தின் வெவ்வேறு பரிமாணங்கள். அடிப்படையில் அனைத்தும் ஒன்றே.
சாங்கிய வரை படத்தை கையில் அச்சிட்டு வைத்துக்கொள்ளுங்கள் அடுத்த பகுதியில் இராமாயண கதாப்பாத்திரங்களை அதனுடன் ஒப்பிட்டு நோக்குவோம்..!
(வினைத் தொடரும்)
9 கருத்துக்கள்:
இப்பவே தல சுத்துதே
//இப்பவே தல சுத்துதே//
உண்மை
We can understand us or our surroundings, only with the knowledge we possess. If "Anma" is beyond (or above knowledge as per the illustration), then how can we understand that? - Quarter filled pot :)
ஆன்மா எதற்கு அஹன்காரமாக மாறியது
//ஆன்மாவானது ப்ரகிருதி எனும் இயற்கை நிலையுடன் இணைந்து அறிவை தோற்றுவிக்கிறது.//
is aanmaa different from prakrti? And what prompts it to unite with prakrti? ichchaa or kaamaa??
திரு பிரணவாஸ்ட்ரோ,
திரு ராபர்ட்க்ளைவ்,
தலை சுற்றினால் நல்லது. படித்த பின் எந்த விளைவும் ஏற்படாவிட்டாலே கெடுதல்.
வருகைக்கு நன்றி.
திரு ராம் பிரஸாத்,
திரு மஹேஷ்,
வரும் பகுதியில் இதற்கான விளக்கம் இருக்கும்.
வருகைக்கு நன்றி
Thanks for this wonderful series - it has reached me in the right time - when I was pondering about so many related questions. The sub-title of your blog is truly being justified.
Thanks for this wonderful series. It has reached me in the right time - to answer some of my many questions. The sub-title of your blog has truly been justified.
Post a Comment