சபரிமலை விரதம் இருப்பது துறவு நிலையின் சின்ன சேம்பிள் என்றேன் அல்லவா? அப்படிப்பட்ட துறவு நிலையை பலர் புரிந்து கொண்ட விதம் மிக தவறாக உள்ளது.
துறவின் அடிப்படையே எளிமை. குறைவான பொருட்களை தன்னிடம் வைத்திருப்பது. அதிக பணம் மற்றும் பணம் மூலம் கிடைக்கும் சுகபோகங்களை விடுவது என்பது மிக அவசியம்.
ஆனால் நடைமுறையில் சபரிமலை செல்லும் அனேகரிடம் எளிமை கிலோ என்ன விலை என கேட்க வேண்டி இருக்கிறது. சபரிமலைக்கு செல்லும் வாகனம் துவங்கி அவர்களின் உணவு முறை வரை அனைத்திலும் ஆடம்பரம். உடை கூட மூன்றுக்கு மேல் இருக்க கூடாது என விரதம் இருப்பதே சாஸ்தா விரதம்.
ஆனால் கட்டுநிறை என்ற பெயரில் அவர்களின் ஆடம்பர திருவிழா எங்கும் நடைபெறுகிறது. அது போக அன்னதானம் என்ற பெயரில் எளிய உணவு அளிக்காமல், ஏதோ நட்சத்திர ஹோட்டலின் மெனுவை போட்டு தாங்கள் பெரிய ஆடம்பர பிரியர்கள் என்ற ஆணவத்தையும் காட்டுகிறார்கள்.
உண்மையில் கட்டுகட்டி செல்லும் பொழுது அதில் தேங்காய்களும் அதில் நெய் நிறைத்து எடுத்து செல்லுவது போன்ற நிகழ்வுகள் எதற்காக?
சபரிமலை கட்டுகட்டி செல்லுவதில் எடுத்து செல்லும் அனேக பொருட்கள் உலர் பழ வகையை சார்ந்தது. சபரி மலை முன்பு மிகவும் காடு சார்ந்த இடமாக இருப்பதால் சபரிமலைக்கு செல்லுபவர்கள் எத்தனை நாட்கள் காடுகளில் இருந்தாலும் உணவு தேவையை சமாளிக்கவே உலர் பழவகைகளை( Dry Fruits) கட்டுகட்டும் பொழுது அதில் இணைக்கிறார்கள்.
காடு அல்லது மலைப்பயணத்தில் செல்லும் பொழுது உலர் பழவகைகளை எடுத்து சென்றால் எடை குறைவாகவும் அதே நேரம் அதிக நாட்கள் வைத்து உண்ணக்கூடிய வகையிலும் அமையும்.நெய், தேன் ஆகியவை மிகவும் முக்கிய பொருளாக ஆயுர்வேத மருத்துவத்திலும், பூஜை பொருட்களிலும் இருப்பதற்கு காரணம், இப்பொருட்கள் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப்போகாது.
அரிசி, தேங்காய், உலர் பழங்கள், நெல் பொரி,நெய் மற்றும் தேன் ஆகியவை பள்ளிக்கட்டில் சேர்ப்பதற்கு காட்டுவழி பயண முறைகளே காரணம். நாம் நடுவழியில் மாட்டிக்கொண்டாலும் இப்பொருட்களை உண்டு பலநாட்கள் தாக்குப்பிடிக்க முடியும். மேலும் இவற்றை தூக்கி பல கிலோமீட்டர் நடப்பதில் சிரமமும் இருக்காது.
இவ்விஷயங்கள் அனைத்தும் பெருவழி பயணம் செல்லுபவர்களுக்கே பொருந்தும். பம்பை வரை வாகனத்தில் சென்று அங்கே இட்லி தோசை சாப்பிட்டு உடல் வளையாமல் 4 கிலோமீட்டர் பயணம் செய்பவர்களுக்கு எதற்கு உலர் பழங்கள்?
4 கிலோமீட்டரில் காட்டில் தொலைந்தாலும் அங்கே ஏகப்பட்ட கடைகள் உணவு வழங்குவதற்கு இருக்கிறதே? இன்னும் ஏன் முட்டாள்தனமாக கட்டு கட்டுகிறேன் என அனைத்தையும் தூக்கிக்கொண்டு செல்லுவது? எத்தனை பொருட்களை கொண்டு சென்றாலும் சபரிமலையில் நெய்யை மட்டுமே அபிஷேகப்பொருள் எனும் பொழுது நாம் ஏன் அனைத்தையும் சுமந்து கொண்டு செல்ல வேண்டும்?
சபரி பீடம் எனும் சாஸ்தா கோவில் இருக்கும் இடம் வரை மசால் தோசை கிடைக்க இவர்கள் இன்னும் கட்டுக்கட்டி செல்லுவதை பார்த்தால் எத்தனை முட்டாள் தனமாக இவர்கள் செல்லுகிறார்கள் என்பதை உணரலாம். கேரளாவில் இருந்து சபரிமலை வருபவர்கள் சின்ன துண்டில் ஒரு தேங்காயை முடிந்துகொண்டு வருவதை சபரிமலை சென்றவர்கள் பார்த்திருக்கலாம். மிக எளிமையாக வருவார்கள். ஆனால் தமிழகம் மற்றும் பிற ஊரிலிருந்து வரும் ஆட்கள் ஒரு சின்ன தேங்காய் மண்டியை தலையில் சுமந்து வருவார்கள்.
அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ நெய்யை ஒரு இருமுடி துணியில் கட்டி எடுத்து சென்று அபிஷேகம் செய்து வருவது சரியான புத்திசாலி பக்தனுக்கு அழகு.
இவர்கள் செய்யும் செயல் எப்படி இருக்கிறது என்றால் வேற்றுகிரகத்திற்கு செல்லும் பொழுது ஆக்ஸிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு விண்வெளி வீரர்கள் செல்லுகிறார்கள், அந்த கிரகத்தில் பூமியை போல ஆக்ஸிஜன் இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட பிறகும் சிலிண்டரை கட்டிக்கொண்டு செல்லலாமா? நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
நெய் அபிஷேக ப்ரியன் என சாஸ்தாவை கூற காரணம் என்ன? நெய் என்பது முக்தி என்ற நிலையை குறிக்கிறது. பால் என்ற நிலையில் இருந்து தயிராகி, வெண்ணை என்ற நிலை அடைந்து நெருப்பால் உருக்கப்பட்டு நெய் என்ற நிலையை அடைந்த பிறகு மாற்றம் அடையாமல் நிலைத்திருப்பது நெய்யின் குணம்.
பால் போன்ற பக்தன் தன்னை பக்தியால் செம்மையாக்கி நெய் என்ற முக்தி நிலைக்கு உயர்த்த வேண்டும். அப்பொழுது பிறவாநிலையை அடையலாம் என்ற உயர் தத்துவத்தை சபரிமலை பள்ளிக்கட்டு உணர்த்துகிறது.
இக்கருத்தை உணர்ந்து நெய் கொண்டு அபிஷேகம் செய்பவர்கள் விரைவில் தாங்களே முக்தி எனும் நெய்யாகிவிடுவார்கள் அன்றோ?
அது எல்லாம் சரி... சபரிமலை இந்த இருக்கு இதற்கு செல்ல குருசாமி அவசியமா? அது என்ன குருசாமி? மாலை போட்டவர்களை எல்லாம் சாமி சாமி என சொல்ல வேண்டும் என கட்டளை வேறு..
நேற்று வரை பொய் சொல்லி கெடுதல் செய்து திரிந்துகொண்டு இருந்தவன் எல்லாம் இன்று மாலை போட்ட காரணத்தால் அவனை சாமி என கூப்பிட வேண்டுமா? என்ன கொடுமை இது?
(சரணம் தொடரும்)
13 கருத்துக்கள்:
நடைமுறையில் நீங்கள் சொல்லக்கூடிய கருத்துகளை செயல்படுத்த, எந்த மாதிரியான வழிமுறைகள் பொருத்தமாக இருக்கும் என சொன்னால் ஆர்வமுடையவர்களுக்கு பயனாகும் என நினைக்கிறேன்....
Its very useful and you are right..
அதில் உள்ள தத்துவங்களை யாரும் புரிந்து கொள்வார் இல்லை.
கொஞ்ச நாளா ஆள காணுமே “ஸ்வாமி” ரொம்ப பிசியா?
அனைத்தும் சரியான கேள்விகள்! சபரிக்கு செல்லும்போது பக்தியை விட, சடங்குகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவது தெளிவாகத் தெரியும்!
நான் சென்ற போது கண்ட காட்சிகள், ஒரு சில:
1.தமிழக/ஆந்திர பக்தர்கள் தான் கூட்டமாக, ஆர்ப்பாட்டமாக வருகிறார்கள்! கேரள பக்தர்கள் பெரும்பாலானோர் தனியாகவோ, தங்களின் ஆண் சொந்தங்களுடனோ தான் ,எளிமையாக, ஆர்ப்பாட்டமில்லாமல் அரசு வாகனங்களில் வந்து செல்கிறார்கள்!
2.கேரள பக்தர்களில் சிலர் ரப்பர் செருப்புகளுடன் மலை ஏறுகின்றனர்!
3. வயது குறைவான, கேரள பெண்களும் மலை ஏறி வந்தனர்!
(பங்குனி மாதம்)
4.புகையிலைப் பொருட்கள் கோவிலைச் சுற்றியுள்ள கடைகளில், கேட்டால் கிடைக்கின்றன!
5.மேல் சாந்தி, பக்தர்களிடம் 10 ரூபாய், பெற்றுக் கொண்டு ஆசீர்வாதம் செய்கிறார்! (கட்டாயம் இல்லை!)
ஆனாலும், சந்நிதியின் அழகும், அனைவரும் சமநிலையும், கோவில் வளாகத்தில் நாம் அடையும் பரவச நிலையும், சொல்லில் அடங்காதது!
எளிமையே சபரியின் அடையாளம்! எளிமையாகவே சபரி செல்லுவோம்!
மகரசோதி எரிவது ஆசாமிகளால் தான். உண்மையா பொய்யா ? ஸ்ட்ரெய்ட் ஆன்ஸர் ப்ளீஸ்
சபரிமலை உண்மைகள் பகுதி மிகவும் உபயோகமாக உள்ளது.
நன்றி.
மாலை போட்டவர்களை சாமி என்று கூப்பிட எனக்கு இஷ்டமில்லை.காரணம் அவர்கள் தினசரி செய்யும் எந்த வேலைகளையும் அவர்கள் நிறுத்துவதில்லை(எங்கள் பகுதியில் இளைஞர்கள் மாலைபோட்டிருப்பார்கள் ஆனால் பான்பராக் போடுவார்கள்,பஸ்படியில் தொங்கிக்கொண்டே வீர சாகசம் செய்வர்,பஸ்சில் பெண்களை கிண்டல் செய்வது,ரூட் விடுவது,அரட்டை அடிப்பது....இப்படி)ஆக தன் தினசரி வாழ்வில் செய்கின்ற அனைத்து ஒவ்வாத விஷயத்தையும் செய்கின்ற ஒருவன் காலையில் குளித்து:-) பொட்டிட்டு,ருத்ராட்ச மாலை போட்ட ஒரே காரணத்திற்காக அவனை சாமி என்று கூறமுடியுமா?
Swamiji, I'm not joking - seriously, after reading about our folly makes me fall "Swamiye Saranam".
Only two things are infinite, the universe and human stupidity, and I am not sure about the former-EINSTEIN
திரு நிகழ்காலம் சிவா,
//கருத்துகளை செயல்படுத்த, எந்த மாதிரியான வழிமுறைகள் பொருத்தமாக இருக்கும் என சொன்னால் ஆர்வமுடையவர்களுக்கு பயனாகும்//
செயல்படுத்த தனியாக போதனைகள் அவசியமா? ஆட்டு மந்தையை போல கண்மூடித்தனமாக செயல்படாமல் விழிப்புணர்வுடன் நம் செய்கையை கவனித்தால் ஐயப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் திருந்துவார்கள்.
திரு ஜெகதீஷ்,
திரு கிருபா,
திரு ரம்மி,
திரு ஆகமக்கடல்,
திரு தனிக்காட்டுராஜா,
சகோதரி மாதங்கி,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
திரு செந்தழல் ரவி,
//மகரசோதி எரிவது ஆசாமிகளால் தான். உண்மையா பொய்யா ? ஸ்ட்ரெய்ட் ஆன்ஸர் ப்ளீஸ்
//
இதுக்கு ஸ்ட்ரெய்ட் மட்டுமல்ல ஆல் சைட் ஆன்ஸர்ஸ் பகுதி 4ல் சொல்லிவிட்டேன். பின்னூட்டம் போடும் முன் அனைத்து பகுதியையும் படிக்கவும்.
நன்றி.
True Swami. But my question is, is it necessary to go to temple to see the God? One can realize from his own heart right?
Post a Comment