உண்மையாகவே இது பழைய பஞ்சாங்கம் தான். காரணம் கடந்த மூன்று மாதமாக எழுதாமல் அனைத்தையும் சேர்த்து இன்று எழுத போகிறேன். உங்கள் நேரம் அப்படி..!
மீனாச்சிபுரம்
வாகனத்தில் அந்த ஊருக்கு செல்ல பயணித்துக் கொண்டிருந்தேன். டிரைவர் ஊர் வந்து விட்டதாக சொன்னார். எனக்கு வந்ததே கோபம்,
“டிரைவர் என்னய்யா என்னை பார்த்தா காதில கடுக்கன் போட்ட ஆளா தெரியுதா? ஒரு போஸ்டரும் இல்லை பேனரும் இல்லை, இங்க என்னை இறக்கிவிட்டு மதுரைய்னு ஏமாத்த பார்க்கிரையா?” என்றேன். “நாங்க எல்லாம் மாறிட்டோமப்பு” என்றார் டிரைவர்.
மதுரையில் ஜோதிட வகுப்புக்காக கடந்த டிசம்பர் மாதம் சென்றிருந்தேன். மதுரை மக்களுக்கு ஜோதிட ஆர்வம் அதிகம் என்பது அவரிகளின் தொலைபேசி விசாரிப்பு மூலம் தெரிந்தது. 30 நபர்களுக்கான வகுப்பில் முன்பதிவு செய்தவர்கள் எழுபது நபர்களுக்கும் அதிகம். பிறகு அதில் தேர்ந்தெடுத்து முப்பது நபர்களுக்கு அனுமதித்தோம். இது தவிர வகுப்பு அன்று முன்பதிவு செய்யாமல் வந்தவர்கள் பலர் என மதுரை அதகளமான வரவேற்பை ஜோதிடத்திற்கு அளித்தது.
மதுரை வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள்
மதுரையில் பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முக்கியமாக சீனா ஐயாவின் வரவேற்பும், தருமி ஐயாவுடனான கலந்துரையாடலும், ஸ்ரீயுடனான பேச்சும் மிக சுவாரசியம். என்ன பேசினோம் என தெரிந்துகொள்ள இங்கே கிளிக்குங்கள்.
-----
ஸ்ரீசக்ர புரி
புனித பயணமாக ஸ்ரீசக்ரபுரிக்கு சென்றோம். எளிய குழு மற்றும் ஆர்வமிகு மக்கள் என பயணம் மிக சுவாரசியமாக இருந்தது. ஆன்மீக ஆற்றல் மிக்க இடங்களையும், குகைகளையும் கண்டு மகிழ்ந்தோம். மூன்று நாள் பயணமாக சென்ற எங்களுக்கு நான்காம் நாளாக பருவத மலைக்கு செல்லும் ஆசி கிடைத்தது. மூன்று நாள் பயணத்தை நான்கு நாட்களாக்கி அற்புத மலையான பருவத மலைக்கு சென்றோம். அனைவரும் தரிசிக்க வேண்டிய இடம் பருவதமலை. பயப்படாதீர்கள் கண்டிப்பாக இது பற்றி தொடர் எழுத மாட்டேன் :)
ஸ்ரீசக்ரபுரி பயணத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர்
--------
சபரிமலை
சபரிமலை தொடர் பலரை சென்று அடைந்தது மகிழ்ச்சி. பல்வேறு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் என்னை எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டியது. அரசியல் மற்றும் தொலைக்காட்சி துறையில் பல பிரபலங்கள் என்னை தொடர்பு கொண்டது அதிச்சியான விஷயம் கூட. விஜய் தொலைகாட்சியில் கடுகளவு பேட்டி, சில பத்திரிகையில் அழைப்பு என சபரிமலை அதிர்வுகளை உண்டாக்கியது என்பதை உணர்ந்தேன்.
அதே போல சிலர் “ஸ்வாமி நீங்க ஓவரா கண்டிஷன் சொல்றீங்க. இந்த வழி பின்பற்றினால் தான் சபரிமலை போகனும்னா, ஒரு பயலும் போக முடியாது” என்றனர். நீங்கள் விண்வெளி வீரராக இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் செல்லுவதை போன்றது நியதியை கடைபிடிக்க முடியாமல் விரதம் இருப்பதும் என விளக்கினேன்.
இவர்கள் இப்படி செல்வதால் அங்கே விபத்துக்கள் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 20 நபர்கள் சபரிமலை பயணத்தில் இறந்து விடுகிறார்கள் என அங்கே இருக்கும் மருத்துவ அதிகாரி கூறுகிறார். இந்தவருடம் கொஞ்சம் அதிகம். இவர்களை எல்லாம் ஐயப்பன் காப்பாற்றமாட்டாரா என நாத்திகம் கேட்கிறார்கள் சிலர். குடித்து விட்டு ப்ரேக் இல்லாமல் வாகனம் ஓட்டினால் போலீஸ் காப்பாற்ற மாட்டார்களா என்பதை போன்றதேஇக்கேள்வி...!
இங்கே துறவியாக ‘இறந்து’ உண்டால் அங்கே மீண்டும் இறக்க தேவையில்லையே..!
----------
புத்தக கண்காட்சி
சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். ஒரு இலக்கியவாதியாக ஃபார்ம் ஆயிட்டாலே இது போன்ற நிகழ்வுக்கு செல்ல வேண்டி இருக்கிறது :). புத்தக கண்காட்சி பற்றி தனி பதிவே போடலாம். அங்கே நண்பர்களையும் பல பதிவர்களையும் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சியை அளித்தது. பிரபல இலக்கிய செம்மல்களையும் சந்தித்தேன்.
அங்கே அனைத்து ஸ்டால்களையும் பார்வையிட்ட வண்ணம் செல்லும் பொழுது மாணவர்களுக்கான அறிவியல் கருவிகள் விற்கும் கடையை கண்டேன். ஒரு திசைக்காட்டியை வாங்கினேன். என் அருகே இருந்த பதிவர், “சாமி இது எதுக்கு வாங்கறீங்க ?” என கேட்டார். “அப்பத்தானே கிழக்கு பதிப்பகம் எங்கே இருக்கு என கண்டுபிடிக்க முடியும்” என்றேன். அதுவரை என்னுடன் வந்தவர் அவசர வேலை என சென்றுவிட்டார். :)
கோவை திரும்பியதும் தான் நான் நன்றாக ஏமாற்றப்பட்டது தெரிந்தது. திசைக்காட்டியில் முள் வடக்கு திசையை மட்டுமே காட்டுகிறது, மற்ற ஏழு திசைக்கு முள் நகர்வதே இல்லை..!
2 கருத்துக்கள்:
// திசைக்காட்டியில் முள் வடக்கு திசையை மட்டுமே காட்டுகிறது, மற்ற ஏழு திசைக்கு முள் நகர்வதே இல்லை
//
இறைவன் ஒருவனே :)))
Go North !!! only growth !!!
Enjoyed this post...
Post a Comment