Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Saturday, August 28, 2010

நாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே...!

சில விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கும் கூறுவதற்கும் எனக்கு தயக்கம் உண்டு. அதில் அதி முக்கியமானது சமாதி என்ற ஒரு விஷயம். சமாதி என்ற கருத்தை வெளிப்படுத்தும் பொழுது பலருக்கு இந்த கருத்து புரிவதில்லை. சமாதி பற்றி பேசவோ எழுதவோ என்றும் நான் விரும்பியது இல்லை. அதற்கு முக்கிய காரணம் விளக்குவதால் பலர் விளங்காமல் போகலாம். விளக்காமல் போனால் சிலர் வீணாகப் போகலாம். விவரித்தாலும் விவரிக்கவில்லை என்றாலும் அதனால் ஏற்படும் விளைவு ஒன்றே என்பது சமாதி என்ற கருத்தில் மட்டுமே இருக்கும் என நினைக்கிறேன்.

நம்மில் இருப்பவர்களில் இக்கருத்தை பற்றி அறிந்தவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஒரு சிலருக்கு சமாதி என்றால் இறந்த பின் வைக்கும் கல்லறை என நினைக்கிறார்கள். சென்னைக்கு செல்லும் நம் ஆட்கள் கூட அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி பார்க்கும் திட்டத்துடன் செல்லுவதுண்டு. இவர்களுக்கு கல்லறை என்பதை அந்தஸ்தாக கூறும் வார்த்தையே சமாதி. சமாதி என்பதை தெரிந்து கொள்ள முயலாமல் தங்களுக்கு தெரிந்த சமாதி என்பதே சரி என்பவர்கள் இவ்வகை.

இன்னும் சிலருக்கு சமாதி என்பது பல்வேறு ஆன்மீக நூலில் படித்த வாசகம் என்றோ அல்லது பெரிய ஆன்மீக உயர் நிலை என்றோ கருதுவார்கள். என்னிடம் யோகம் பயில வரும் சிலர் புத்தக குப்பைகளை அவர்களுக்குள் சுமந்து வருவார்கள். சமாதிகளையும் சமாதியின் வகைகளையும் இவர்கள் விலாவாரியாக பேசுவார்கள். ஆனால் அந்த நிலை அடைய ஒரு துளி கூட முயற்சி செய்ய மாட்டார்கள்.

மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் இந்த இரண்டு தன்மையையும் கடந்து இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாமல் உடுத்தி, உண்டு, உறங்கி இறந்துவிடுவார்கள்.

எங்காவது சமாதி என்ற வார்த்தையை கேள்விப்பட்டு விளக்கமாக தெரிந்து கொள்ளும் நோக்கில் இவர்களிடம் கேட்டால் எப்படி பதில் சொல்லுவார்கள் தெரியுமா?

முதல் வகை : தம்பி பார்த்து யோகா செய்யுப்பா. யோகா பண்ணி மூளை வெடிச்சு செத்துப்போகிறதைத்தான் சமாதினு சொல்லுவாங்க.
(இவ்வாறு தனக்கு தெரிந்ததை சரி என நினைத்து கொஞ்ச நஞ்ச ஆட்களையும் நஞ்சாக்கிவிடுவார்)

இரண்டாம் வகை : தம்பி சமாதினா சாதாரண விஷயமா? ஹிமாலயாவில ஒரு குருஜி இருக்காராம் அவர் முன்னூறு வருஷமா சமாதியில இருக்காராம். அதுக்கு குண்டலாமிக ஜிர்விஸ்தி சமாதினு பேராம். அதை பத்தி நேத்து தான் படிச்சேன்.
(இதை கேட்டதும் நம் ஆட்கள், ஓ இது பெரிய விஷயம் போல என ஒதுங்கிவிடுவார்கள்)

மூன்றாம் வகை : என்ன தம்பி யோகா அப்படி இப்படினு ஏதோ சொல்லிக்கிட்டு. சமாதினு சொன்னவுடன தான் எனக்கு நியாபகம் வருது, நம்ம வளர்மதிக்கு வர இருபதாம் தேதி கல்யாணம். உனக்கு பத்திரிகை வச்சாங்களா?
(இவர்களுக்கு சமாதி என்பது ஏதோ ஒரு அன்னிய மொழி)

மேற்கண்ட மூன்று நிலையில் கடைசி நிலையில் இருப்பவர்கள் மேம்பட்டவர்கள் என்பேன். முதல் இரண்டு நிலையில் இருப்பவர்கள் மிகவும் கொடூரமானவர்கள், இவர்களால் பலருக்கு தீங்க விளையும் என்பது உண்மை.

சமாதி என்ற விஷயத்தை பற்றி விளக்குவதற்கான விவரிப்பு அல்ல இது. விவரிப்பதால் யாதொரு பயனும் இல்லை. மொழியால் விளக்க முடியாத ஒரு விஷயம் தான் என்றாலும் சமாதியை பற்றி விளக்குவதை விட சமாதியில் இருப்பவர்களை பற்றி விளக்குவது இங்கே அவசியமாகிறது.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் சமாதி யோகம் என்ற விஷயம் ஆழமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மனம் மற்றும் ஐந்து வகையான உணர்வு உறுப்புகளை குவித்து தாரணை என்ற நிலையில் ஒருவர் இருந்தால் அதிலிருந்து த்யாணா என்ற நிலைக்கு செல்லலாம். அந்த த்யாணா (தியானம்) என்ற நிலை விரைவில் அவர்களை சமாதிக்கு இட்டுச்செல்லும். சமாதி நிலையில் இருக்கும் ஒருவருக்கு உடல் உணர்வு இல்லாமல் முழுமையாக அசைவற்று இருப்பார்கள். அவர்களின் சுவாசம் இல்லாமல் நாடி துடிப்பு இல்லாமல் ஒரு மரம் போல இருப்பார்கள். எளிமையாக சொல்ல வேண்டுமானால் இவர்கள் வாழும் பிணம்...!

இதைத்தான் திருமூலர் பின்வருமாறு கூறுகிறார்.

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்
சுத்தத் துரியம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு
செத்திட் டிருப்பார் சிவயோகி யார்களே.

இவ்வாறு ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் அடுத்த நிலை சமாதிக்குமாற்றம் அடைந்துவிடுவார்கள். இவர்கள் பார்க்க சாதாரணமான நம்மை போல வேலைகளில் ஈடுபடுவார்கள் ஆனால் உள்ளே ஆழ்ந்த சமாதி நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு கால தேச வித்தியாசம் இருக்காது. மேலும் சுவாசிக்கும் தன்மையிலும் உள் நிலையிலும் வித்தியாசமாக இருப்பார்கள்.

பூமியின் வட துருவத்திற்கு சென்று வந்த ஒருவர் அங்கே வீசும் பனிப்புயலை பற்றி எவ்வளவு தான் விளக்கினாலும் நமக்கு புரியாது. நாம் பனிப்புயலில் இருந்தால் தானே அது உணர முடியும். அது போன்றதே சமாதி பற்றிய விளக்கமும் என்பேன்.

இறைவனுடன் முழுமையாக கலக்கும் இந்த உயர் ஆன்மீக நிலையை பலர் தவறாக புரிந்துகொள்வதும், தவறாக பயன்படுத்துவதும் உண்டு. சில நாட்களுக்கு முன் ஒரு தவறான நபரின் விடியோ உலகை வட்டமிட்டது. அவர் தன்னை காப்பற்றிக்கொள்ள நான் சமாதியில் இருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது என்றார் என கேள்விபட்டேன். உலகில் சமாதியை இதைவிட வேறு யாரும் கேவலப்படுத்த முடியாது. இப்படியே போனால் நாளை திருமணம் முடிந்து ‘சமாதி’ முகூர்த்தத்திற்கு நாள் பார்க்க சொல்லுவார்கள்.

தான் சமாதி அடைந்தேன் என அதை விவரிப்பவர்கள் உண்மையில் சமாதி அடைந்திருக்க மாட்டார்கள் என்பது அறிக. இவர்களை போன்றவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள். முன்காலத்தில் ஆன்மீக வாதிகளின் போர்வையில் இருந்த பலர் தான் பெரிய யோகி என காட்டுவதற்கு, இந்த நாளில் இந்த நேரத்தில் ஜீவசமாதி அடையப் போகிறேன் என அறிவிப்பார்கள். அந்த நாளில் அவர்கள் இருக்கும் இடமும், ஊரும் திருவிழாக் கோலம் கொண்டு திகழும். மக்கள் இவர் சமாதி ஆவதை காண நேரில் வருவார்கள்.

சமாதி கட்டும் குழிக்குள் இந்த யோகி அமர்ந்திருப்பார் நேரம் செல்லும் ஆனால் உடலை விட்டு உயிர் பிரியாது. உண்மையான யோகிக்குதானே அதெல்லாம் முடியும்? இவரோ டம்மி பீஸ்...! நேரம் கடக்க கடக்க மக்கள் கொந்தளிக்க துவங்குவார்கள். இன்னும் தாமதித்தால் விபரீதம் என உணரும் சிஷ்ய கோடிகள் குருவுக்கு தீபாராதனை காட்டி அவரின் உச்சந்தலையில் நன்றாக முற்றிய தேங்காயால் ஒரே போடு...!

குருஜி கபால மோக்ஷம் அடைந்துவிடுவார். சொன்ன தேதியில் ஜீவ சமாதியான (ஆக்கப்பட்ட) யோகியின் புகழ் பரவும். இல்லையேல் மக்கள் குருவை நையப்புடைப்பார்கள் அவர் வேறு ஊரில் ஆசிரமும் தேடுவார். இது போன்று நடந்த சம்பவங்கள் ஏராளம். இவற்றை புரிந்துகொள்ளாத மக்கள் இன்னும் கூட ஆன்மீக உயர் நிலை அடைய தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளுவதுண்டு. இப்படிபட்ட (போலி)யோகிகளின் வழிகாட்டினால் இப்படி பட்டவர்களே தானே உருவாகும் சாத்தியம் உண்டு ?

ஏதோ திருமந்திரத்திலும் பதஞ்சலி யோக சூத்திரத்தில் மட்டும் இதை பற்றி கூறி இருப்பதாக நினைத்துவிடாதீர்கள். அனைத்து மத நூல்களிலும் இக்கருத்து மறைமுகமாக கூறப்பட்டுள்ளது.

ஏன் மறைமுகமாக கூறவேண்டும்? உழுத நிலத்தில் தானே விதைக்க முடியும்? இல்லை என்றால் பயிரும் களை என கூறுவார்கள் அல்லவா? அதனால் முழுமையான தெளிவு பிறக்கும் பொழுது மத நூல்களில் இருக்கும் மறை பொருட்கள் விளங்க துவங்கும்.

அப்படிபட்ட வாசகம் தான் பைபிளில் உள்ள “நாசியில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே” என்ற வாசகம்.

Isa 2:22
Cease ye from man, whose breath [is] in his nostrils: for wherein is he to be accounted of? (நன்றி bible.cc)

இதற்கு நேரடியான விளக்கம், சமாதியில் இருக்கும் தன்மை கொண்டவர்களை நம்பு உன்னை ஆன்மீக உயர் நிலை அடைய செய்வார்கள் என்பதே ஆகும். சமாதி நிலை கண்டு நாசியில் சுவாசமில்லா மனிதர்கள் முழுமையான ஞான நிலையை அடைந்தவர்கள். அதைவிடுத்து சாதாரணமாக உன்னை போன்று சுவாசிக்கும் மனிதனை வழிகாட்டியாக நம்பி விடாதே என எச்சரிக்கிறது. திருமூலர் கூறிய “செத்திட் டிருப்பார் ” என்ற பதத்தை இங்கே நினைவு கூறுங்கள்.

"i am that I am" போன்ற வசனங்கள் பழைய ஏற்பாட்டில் முழுமையான யோக நிலையை உணர்வதற்காக அமைந்திருக்கிறது. பைபிளில் மட்டுமல்ல இது போல குரானிலும், குரு கிரந்த சாகிப் என்ற சீக்கிய புனித நூலிலும், பெளத்த மற்றும் சமண நூலிலும் காணக்கிடைக்கிறது.

“நாசியில் சுவாசம் இருக்கும் மனிதனை நம்பாதே” என்ற வாசகத்தை ஒரு கற்று தெளிந்த ஆட்சியாளர் - யாரையும் நம்பாதே என்பதற்கு உதாரணமாக பத்திரிகை பேட்டியில் பேசியது கவலை அளித்தது. இது போன்ற அறிய கருத்துக்களை ஆராயாமல் இருக்கலாம் தப்பில்லை. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்தக் கூடாது.

நான் அனைத்து மத நூல்களையும் ஆழ்ந்து படித்தவன் அல்ல. எனக்கு தெரிந்தவற்றை அவ்வாசகத்துடன் தொடர்பு கொண்டு புரிந்துகொள்ள முயல்கிறேன். இவ்வாசகங்களை படித்தவுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என தோன்றியதை இங்கே விவரித்தேன். அவ்வளவே..!

சரி... சமாதி என்றால் என்ன என்று தானே கேட்கிறீர்கள்? நான் கேட்டதற்கு பின்வருமாறு திருமூலர் கூறினார்.

காரிய மான உபாதியைத் தாங்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
ஆரிய காரண மாய தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே

.............. என்ன புரிஞ்சுச்சா?

15 கருத்துக்கள்:

Mahesh said...

நான் இத்தனை நாளா சமாதில இருந்துட்டு இன்னிக்குதான் ப்ளாக் படிக்க வந்தேன்... :))))))

ஸ்வாமி ஓம்கார் said...

நானே பத்து நாள் சமாதியில இருந்துட்டுதான் பதிவே இன்னைக்கு போட்டேன் :))

உங்கள் வருகைக்கு நன்றி மகேஷ்

மருது said...

இந்த சமாதியில் இருக்குறது எல்லாம் சரி தான் சாமிஜி ..

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்..

இப்படி சமாதியில போக யோகா செய்தால் பசிக்குமா பசிக்காதா ?..

ஏன் கேக்குறேன்னா , இன்னைக்கு ஒரிசா , மத்தியபிரதேசம் , சட்டிஸ்கர் , மேற்குவங்கம் ,ஜார்கண்ட் மாநிலங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தில் தான் இருக்காங்க .. அவங்களுக்கு யோகா சொல்லிக் கொடுத்து பசியை போக்க முடியுமானு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன் .
இதை நீங்க எப்படியும் வெளியிட மாட்டிங்கனு நினைக்கிறேன் . இந்த கேள்வியை வெளியிட்டு அதற்கு பதிலும் சொன்னீங்கன்னா .. உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் சரியாகத் தான் இருக்குறீங்கனு அர்த்தம் .. இல்லைனா .. நீங்களே புரிஞ்சிக்கோங்க .

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மருது,

உங்களை போன்ற அனேக ஆட்களை கடந்துவந்துவிட்டுத்தான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன்.

//இன்னைக்கு ஒரிசா , மத்தியபிரதேசம் , சட்டிஸ்கர் , மேற்குவங்கம் ,ஜார்கண்ட் மாநிலங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் பஞ்சத்தில் தான் இருக்காங்க //

தமிழ்நாட்டில் எல்லோரும் முழுமையாக சாப்பிட்டுவிட்டு வெற்றிலைப்பாக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்களா?

ஏதோ இரண்டு புத்தகத்தை படித்துவிட்டு தோழர் புரட்சி என்றால் பஞ்சம் ஒழிந்துவிடாது....!

இங்கே உங்களின் நேரத்தை
வீணாக்குவதைவிட பஞ்சத்தை போக்க முயலுங்கள்.

உங்களை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் என்னை பற்றியும் என் மனசாட்சி பற்றியும் கவலைபடும்பொழுதே நீங்கள் முதலாளித்துவம் கொண்டவர்கள் கண்டறிந்த கணினியையும் இணையத்தையும் கொண்டு புரட்சி செய்யும் தோழர் என புரிந்துகொண்டேன்.

என்னை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு குறிப்பு கொடுக்கிறேன்...

நான் இடதோ வலதோ அல்ல... இருதயம் என்ற மையத்தில் இயங்குபவன். நீங்கள் புத்தகத்தில் படித்தவைகளை நடைமுறையில் செய்பவன். அதனால் உங்களின் புரட்சியை வேறு இடங்களில் காண்பிக்கவும்.

உங்கள் வருகைக்கு நன்றி.

Krubhakaran said...

ஏன்?

எறும்பு said...

அட அந்த பேட்டிய படிச்சுட்டு, கடைசீல எதுக்கு இந்த வாசகத்த quote பன்னிருக்காருன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். நீங்க இடுகை போட்டுடீங்க.
நீங்க பத்து நாள் சமாதில இருந்தப்ப என் எண்ணங்களை கிரகித்து கொண்டீர்கள்.
:)

SRI DHARAN said...

சுவாமிஜி எனக்கு இந்த விஷயம் புரியல, மனுஷங்க எல்லோருக்கும் நாசியிலதானே சுவாசம் வரும் அப்பா மனுஷங்களையே நம்பவேண்டாமா? சரி நாசியில சுவாசம் இருக்கும் யோகிகளை நம்ப வேண்டாம் என்றால் எல்லா யோகிகளுக்கும் சுவாசம் அங்கிருந்துதான வரும்? ஒரே குழப்பமா இருக்கு ( நா பின்னூட்டம் எழுத வேண்டாம்னுதான் இருந்தேன் பட்...... நீங்க என்னை திட்டினாலும் சரி இன்னும் கொஞ்சம் விளக்குங்கள் சுவாமிஜி ப்ளீஸ் )

வடுவூர் குமார் said...

க‌டைசியில் திருமூல‌ர் ஏன் இப்ப‌டி குழ‌ப்புகிறார்?
ப‌திவின் த‌லைப்பை நேற்று வின் டிவியில் ஒரு பாதிரியார் விள‌க்கிக்கொண்டிருந்தார்.

கோவி.கண்ணன் said...

//நான் அனைத்து மத நூல்களையும் ஆழ்ந்து படித்தவன் அல்ல. எனக்கு தெரிந்தவற்றை அவ்வாசகத்துடன் தொடர்பு கொண்டு புரிந்துகொள்ள முயல்கிறேன்.//

திருவாசகம் படிச்சிருக்கிங்களே போதாதா ?
:)

Anonymous said...

வெறும் வார்த்தையில் முழுமை இல்லை. அதை உணர்ந்து, அது தான் இந்த வார்த்தை என்று தெரிந்தால், அந்த வார்த்தையின் அர்த்தம் முழுமை அடையும் அல்லவா? வெளிநாடு சென்று முதல் முறை "Snowfall" அனுபவம் கொண்ட பொழுது "Snowfall" அர்த்தம் முழுமையாக புரிந்தது. சமாதி பற்றி நான் முதல் பிரிவில் இருந்தேன், பிறகு இரண்டாவது பிரிவு வந்தபோது, பல சமாதி வகைகள் ஒரே குழப்பமா இருந்துச்சு. அப்பறம் தான் புரிந்தது, எதையும் முழுமையாக உணராமல் எல்லாம் தெரிந்த மாறி நடிக்கக்கூடாது என்று. பதிவிற்கு மிக்க நன்றி.

வானவன் யோகி said...

நாசித்துளைகளூடாகச் சுவாசிக்காமல்,
அதாவது உட்சுவாசம்,நிசுவாசம் செய்யாமல் சீவித்திருப்பவரே,சமாதி நிலை அடையமுடியுமென்றும்,

அவரே குரு,யோகி என்றெல்லாம் சொல்லித் தந்த தங்களை ”பன்முகம் கொண்ட சண்முகம்” என்றே எண்ணுகிறேன்.

அதெல்லாஞ்....சரி.....
சமாதியிலிருப்பவர்கள்..
என்ன சாப்பிடுவார்கள்..

எப்ப..சாப்பிடுவார்கள் .. என கொஞ்சம் விளக்கினால் ரொம்ப...புண்ணியமாப்..போகுங்க...

நானும்..அதையெல்லாஞ் சாப்பிட்டு... சமாதி நிலை அடையத்தான்....

எப்படியும்...என்னை...
சீடகோடிகள்..சமாதி..வைப்பதற்கு
முன்

உங்களைவிட நான் மேல போயிருவேன்னு நெனச்சு அந்த ரகசியத்த...சொல்லாமப்...போனா...


அடுத்த பதிவுல... இருக்குதல்ல...


(சுவாமிகள்...மன்னிக்கோனும்)....
நாங்கொஞ்சம்..ஞானசூனியனுங்கோ...

Renga said...

//முதலாளித்துவம் கொண்டவர்கள் கண்டறிந்த கணினியையும் இணையத்தையும் கொண்டு புரட்சி செய்யும் தோழர் என புரிந்துகொண்டேன்//

Rightly Pointed out Swamiji....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தான் சமாதி அடைந்தேன் என அதை விவரிப்பவர்கள் உண்மையில் சமாதி அடைந்திருக்க மாட்டார்கள் என்பது அறிக//

நீங்க இப்படி அவரையும் சொல்லிடப் போறீங்களோ என்னமோன்னு பயந்து கிட்டுத் தான், திருமூலர், சமாதி நிலையை அந்தக் கடைசிப் பாடலில், ரொம்பத் "தெளிவாக" வரையறுத்து விட்டார்! :)

காரிய மான உபாதியைத் தாங்கடந்
=செயற்கையாகத் தத்தம் காரியங்களுக்காகச் செய்யும் உபாதி/உபாயங்களில் மூழ்கி விடாமல், அந்த உபாயங்களையும் தாமே கடந்து

தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
=அவை ஆர்த்து நிரம்பும் காரணத்தால், ஏழு வித்யா தத்துவங்களும் தன் அறிவால் வெறுமனே அறிய மட்டும் பெறாது, உணரவும் பெற்று...

வாரிய காரண மாய தவத்திடைத்
= வரும் காரணங்களான கர்ம வினைகளின் காரணமும் நீங்க (மாய), தவமாகிய யோகத்தால்...

தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே
= ஒழுங்கு தானே அமைந்து, தன்னிலேயே பரத்தினைச் சேர்தல் சமாதியே!

இன்னும் சுருக்கமா சொல்லணும்-ன்னா...அது சொல்லாகத் தான் போய் முடியுமே அன்றி, உணர்வாக முடியாதோ? :)

உபாயம்/பயன் இரண்டையும் கடந்து சென்று...
வினைகளையும் ஒழித்து, ஒழுங்கிற்குள் வந்து...
தன்னிலேயே பரத்தினை அடைந்து இருத்தல் = சமாதி!

தற்பரம், தற்பரம்-ன்னா என்னா-ன்னு சுவாமி ஓம்கார் தான் விளக்கணும்! :)

Unknown said...

இனிய கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள்

geethasmbsvm6 said...

நன்றி.