உலகில் எத்தனையோ உறவு முறைகள் உண்டு. உங்கள் ஆசைகளையும் கனவுகளை நிறைவேற்றும் உறவு முறைகள், உங்கள் கடமைகளையும் உரிமைகளையும் உணர்த்தும் உறவு முறைகள் என பல்வேறு உறவு முறைகள் இருந்தாலும் இவற்றிற்கு அப்பாற்பட்டு ஓர் உறவு நிலை உண்டு.
அது குரு சிஷ்ய உறவு என்பதாகும். உண்மையில் குரு சிஷ்ய இணைவு என்பது உறவு முறை என்று கூறக்கூடாது. இது உறவு முறை அல்ல உயிர் முறை. தன் உயிரின் மூலம் எங்கே இருக்கிறது என அறிய வழிகாட்டும் ஒருவர் குரு. அப்படி பார்த்தால் இது உயிர் முறை தானே? உங்கள் வாழ்க்கையில் இருக்கும் உறவு முறைகள் எதோ ஒரு சுய நலத்தின் அடிப்படையில் இயங்கும். சுய நலத்தின் சதவிகிதம் வேறுபடுமே தவிர தன்னலமற்ற உறவு இருக்கவே முடியாது. ஆனால் குரு என்பவர் தன்னலமற்ற கருணையை என்றும் பொழிபவராக இருக்கிறார்.
தற்காலத்தில் குரு சிஷ்ய உறவு முறை மற்றும் குருவின் தன்மை ஆகியவை கேலிக்கு உண்டான விஷயமாகிவிட்டது. சுயநல சிஷ்யர்கள் சுயநலமிக்க போலி ஆன்மீகவாதிகளை நாடி செல்லுவதால் இன்னிலை ஏற்படுகிறது. தங்கள் வாழ்க்கையின் சின்ன பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள ஆன்மீகவாதியை நாடும் இவர்கள் பிறகு இவர்களை குரு என நினைத்துக் கொள்ளுகிறார்கள்.
குரு தன்மை என்பதை பற்றிய போதிய அறிவில்லாததால் பார்ப்பவர்களை எல்லாம் குரு என்பார்கள் சிலர். பள்ளியில் கற்றுக்கொடுத்தவர்கள் ஆசிரியர்கள், அவர்களை கூட குரு என அழைப்பார்கள். குரு வேண்டுமானால் ஆசிரியராக இருக்கலாம். ஆசிரியர்கள் என்றும் குருவாகிவிட முடியாது.
என்ன குழப்பமாக இருக்கிறதா? ஆசிரியர் உங்கள் அறிவை வளர்ப்பவர். குரு உங்களின் உயிரை வளர்ப்பவர். உங்களின் உள்ளே ஒளியை வழங்கி அறியாமையை போக்குபவர். ஆச்சாரியன் என்ற வார்த்தை ஆசிரியரை குறிக்கும். மஹாபாரதத்தில் அர்ச்சுனனின் பாத்திரத்தை உணர்ந்தால் இக்கருத்தை புரிந்துகொள்ளலாம். வில்வித்தை கற்றுக்கொடுத்த துரோணாச்சாரியார் அர்ச்சுனனுக்கு ஆச்சாரியார், ஞானத்தை வழங்கிய ஸ்ரீகிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு குரு.
உங்களின் உலகப்பார்வையை மாற்றி உயிர்ப்பிக்கச் செய்பவர் குரு. இந்த உயிர்ப்பிக்கும் தன்மைக்கு தீக்ஷை என பெயர். வடமொழி சொல்லான தீக்ஷா என்ற வார்த்தை தமிழில் தீக்ஷை/ தீச்சை / தீட்டை என பல வழிகளில் அழைக்கப்படுகிறது.
குரு அனைவருக்கும் தீட்ஷை அளிப்பதில்லை. ஒரு ஆன்மா ஆன்மீக உயர் நிலை காண தயார் நிலையில் இருப்பதை கண்டு அதற்கு மட்டுமே குருவால் தீட்ஷை வழங்க முடியும். தீட்ஷை என்றால் என்ன என பலருக்கு தெரியாததால் பல்வேறு போலிகள் தீட்சை கொடுக்கிறேன் என ஏமாற்றுகிறார்கள்.
குரு தன் ஆன்மாவால் உங்கள் ஆன்மாவை தீண்டி உணரச் செய்வதை தீக்ஷை என கூறலாம். தீட்ஷையில் பல்வேறு முறைகள் மற்றும் வகைகள் உண்டு.
தீட்ஷை மூன்று வகையாக அளிக்கப்படுவதாக தத்தாத்ரேய புராணம் கூறுகிறது. அவை ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மோன தீட்சை என்பதாகும்.

குரு தன் உடல் அங்கங்களால் சிஷ்யனை தொட்டு கொடுப்பது ஸ்பரிச தீட்சை. பசு தன் கன்றை நாவால் தடவி பேனுவது இதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம்.

குரு தன் கண்களால் சிஷ்யனை முழுமையாக பார்த்து கொடுக்கும் தீட்சைக்கு நயன தீட்சை என பெயர். தாய் வாத்து தனது குழந்தைகளை வாயால் எதையும் கூறாமல் கண் பார்வையிலேயே வழி நடத்திச் செல்லுவது இதற்கு சரியான உதாரணம்.

சிஷ்யன் குருவிற்கு அருகில் இல்லாமல் வெவ்வேறு இடத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாலும் தன் ஞான பலத்தால் தீட்சை அளிப்பது மோன தீட்சை எனப்படும். ஆமை ஆழ்கடலில் உணவு தேடிக்கொண்டிருந்தாலும் அதன் நுட்பமான மனதால் கடற்கரையில்இருக்கும் குஞ்சுகளை தொடர்பு கொண்டிருக்குமாம். அவற்றிற்கான உணவு நேரம் வந்ததும் கடற்கரைக்கு வந்துவிடும் என்பார்கள். ஆமையின் தன்மையில் இந்த தீட்சை செயல்படுகிறது.
இவ்வாறு மூன்று நிலையில் அளிக்கப்படும் தீட்சை பல்வேறு தேவைகளுக்காக அளிக்கப்படுகிறது. மந்திர தீட்சை, யோக தீட்சை, ஆன்ம தீட்சை, ஞான தீட்சை, மெளன தீட்சை, சன்யாச தீட்சை என காரணங்கள் நீண்டு கொண்டே செல்லும்.
தற்சமயம் பத்திரிகைகளில் கடன் தொல்லை நீங்க, புதிய வேலை கிடைக்க, நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க என்ற பல்வேறு அற்புத காரணங்களுக்கு தீட்சை தருகிறார்கள். ஒன்று புரிந்துகொள்ளுங்கள்.... தீட்சை அக உலகுக்கு தரப்படுவது, புற உலகுக்கு அல்ல. உங்களுக்குள் பெரும் அணு குண்டு வெடிப்பு நிகழச்செய்யும் தீட்சையை விடுத்து இது போன்ற சின்ன காரியங்களுக்கு தீட்சை வழங்குபவர்கள் தரமானவர்களாக இருப்பார்களா சிந்தியுங்கள்.
தீட்சை வாங்க வேண்டும் என்றல்லாம் கட்டாயம் இல்லை. நாம் ஒருவரை அனுகி தீட்சை தாருங்கள் என கேட்க வேண்டியது அவசியமும் அல்ல. தீட்சை என்பது ஞானம் எனும் வேள்விக்கு ஊற்றப்படும் நெய்.
குரு அருள் அனைவருக்கும் கிடைக்கும் தன்மை உண்டு. அக்காலத்தில் குருவின் அருள் உங்களை தீட்சை பெறும் நிலைக்கு உயர்த்தும்.
தீட்சை சார்ந்து பல்வேறு நபர்களை நான் சந்தித்து உள்ளேன். நான் இவரிடம் தீட்சை வாங்கினேன், நான் ஒன்றுக்கு மேம்பட்ட நபர்களிடம் தீட்சை வாங்கினேன். இவர்கள் எல்லாம் ஆன்மீகத்தில் கொடிகட்டிப் பறப்பவர்கள் என தங்களின் தீட்சையை பெருமையாக கூறுவார்கள். தீட்சை அளிப்பது என்பது உங்களுக்கும் உங்கள் குருவுக்குமான தனிப்பட்ட விஷயம்.
இதை வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பது ஆணவமே. அப்படி வெளிப்படுத்தும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறது என்றால் நீங்கள் தீட்சை வாங்கும் அளவுக்கு முன்னேற்றம் அடையவில்லை என பொருள்.
இன்னும் சிலரோ உங்களுக்கு பணம் (டொனேஷன்) கொடுக்கிறோம் தீட்சை தாருங்கள் என கேட்பார்கள். அவர்களுக்கு தீட்சை என்பது ரூபாய்க்கு இரண்டு கிடைக்கும் பொருள். இவர்கள் எப்பொழுதும் திருந்தப் போவது இல்லை. எதிர்வரும் காலத்தில் குருவை கடத்தி கொண்டு போய் தீட்சை கேட்டாலும் கேட்பார்கள்.
சுயநலம் மற்றும் ஆணவம் என்ற விழித்திரை உங்களுக்கு இருக்கும் வரை குரு உங்களுக்கு தீட்சை அளிக்கமாட்டார். விழித்திரையின்றி முழுமையாக கண் திறக்க முயலுங்கள் குரு உங்களுக்கு முன் நிற்பது தெரியும்.
குருவருள் உங்களை வழிநடத்தட்டும்.
மந்திர தீட்சை பற்றிய குரு கதை படிக்க இங்கே சொடுக்கவும்.
17 கருத்துக்கள்:
தீக்ஷை பற்றிய அருமையான பதிவு.
ஸ்வாமிகளுக்கு ஒரு விண்ணப்பம். பதிவை யாராவது ஒருத்தரை விட்டு எழுத்துப் பிழைகளைக் களையச்சொல்லவேண்டும். இந்தக் கருத்து அதிகப் பிரசிங்கித்தனம் என்று கருதுவீர்களேயானால் மன்னிக்கவும்.
//தற்சமயம் பத்திரிகைகளில் கடன் தொல்லை நீங்க, புதிய வேலை கிடைக்க, நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க என்ற பல்வேறு அற்புத காரணங்களுக்கு திட்சை //
ஸ்வாமி, இடுகை எழுத ஐடியாவே கெடைக்க மாட்டேங்குது.இதுக்கு ஏதாவது தீட்சை குடுங்களேன்.
//எதிர்வரும் காலத்தில் குருவை கடத்தி கொண்டு போய் தீட்சை கேட்டாலும் கேட்பார்கள்.//
மேல கேட்ட தீட்சைய குடுக்கலன்னா உங்க ப்ளாக் ஹேக் செய்யப்படும்
Swamiji,
Intha kaliyugathil yaarai nambuvadhu enru theriyavillai. Ivar Guru ivaridam namakku nalla gnanam enra thiruvarul kidaikkum enru nambi emanthu ponathuthan mitcham.
'Theekshai' oru vizhippu.
Nandri,
thangal,
G.Munuswamy,
Chennai Thuraimugam.
திரு கந்தசாமி,
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//அதிகப் பிரசிங்கித்தனம்//
உங்களின் கருத்தை தாராளமாக பதியலாம், அதிக பிரசங்கித்தனம் எதுவும் இல்லை. பிரசங்கித்தனத்தில் மட்டுமே பிழை இருக்கிறது. :)
திரு அறிவிலி,
நீங்கள் இந்த தளத்தை முடக்கினால் பலர் உங்களுக்கு தீட்சை தர தயாராக இருப்பார்கள் :))
உங்கள் வருகைக்கு நன்றி
திரு முத்துசாமி,
//Intha kaliyugathil yaarai nambuvadhu enru theriyavillai. Ivar Guru ivaridam namakku nalla gnanam enra thiruvarul kidaikkum enru nambi emanthu ponathuthan mitcham.//
உங்கள் ஆதங்கத்தை பார்த்தால் நீங்கள் கதவை அகலமாக திறந்து காத்து வர காத்திருந்தீர்கள் என நினைக்கிறேன். :)
உங்களை தூய்மையாக்குங்கள், குரு உங்களை அடைவார்.
வாரா வாரம் பத்திரிகைகள்ல தீட்சை தரோம் வாங்க வாங்கன்னு கூப்படறாங்களே... நான் என்னமோ "நன்கொடை" குடுத்தா தீட்சை பொட்டலம் கட்டி குடுப்பாங்கன்னு நினைச்சேன்...
//தீட்சை வாங்க வேண்டும் என்றல்லாம் "கட்டையாம் இல்லை//
அப்படி குடுக்கிறவங்கலுக்கு இந்த கட்டைய கொண்டே அடிக்கணும்.
:)
//இதை வெளிப்படுத்த வேண்டும் என நினைப்பது அணவமே//
எழுத்தில் கூட ஆணவத்தை வெளிபடுத்தாத நீங்கள் ஞானி.
:)
திரு ராஜகோபால்,
எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் :)
எறும்பு ரொம்ப குறும்பு
”தீக்ஷை” பற்றிய உங்களது கட்டுரை, நிறைய பேருடைய சந்தேகங்களைத் தீர்க்கும். பகிர்வுக்கு நன்றி.
வெங்கட்.
இப்போதெல்லாம் தியானத்திற்கு ஒரு தீக்ஷை, மந்திர ஜபத்திற்கு ஒரு தீக்ஷை என்று அவர்கள் இஷ்டத்திற்குத் தருகிறார்கள்.
மேலும் ரெய்க்கி ஹீலிங், பிரானிக் ஹீலிங் தருபவர்களும் தீக்ஷை தருகிறார்கள்.
ஆனாலும் ஒரு வெறுமை இருந்து கொண்டே இருக்கிறது.
என் பாட்டி, அப்பா, பெரியப்பா ஆகியோர் மதுரையின்
முதல் ஆதின மடத்தில் சிவ தீக்ஷை பெற்றவர்கள். அதிலும்
மைக் ஸ்பீக்கர் இல்லாமல் நேரடியாக காதுகளில் மந்திர
உபதேசம் பெற்றவர்கள்...
ஹும்... அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்....
ஹோட்டலுக்கும் தீக்ஷை கடைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் ஹோட்டலில் சரக்கு உள்ளவரை கிடைக்கும் மற்றதிலோ சரக்கே இல்லாமலும் கிடைக்கும். இன்னொரு முக்கியமான வித்தியாசம் இங்கே ஒரு certificate கிடைக்கும். ஹோடேலில் பில் மட்டும் தான்.
சுவாமிகளுக்கு...வணக்கம்...
”பெரியோர் பாட்டில் பிழை சொல்லாதே” என்பதும் எமக்கு பெரியோர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது...
இருந்தாலும் இந்த இடுகை எனக்குள் சில கேள்விகளை உருவாக்குகிறது.
தீக்ஷை என்பது தமிழில் அதுவும் சித்தர் பாடல்களில் ”தீக்கை” எனவே எடுத்தாளப்பட்டுள்ளது.
அதாவது தீயைக்கைக் கொண்டவர் யாருக்கு வேண்டுமாயினும் ஆன்மத் தீயை மூட்டிவிட முடியும்.
ஒரு விளக்கின் ”தீ”ச்சுடரில் எத்தனை விளக்கையும் ஏற்றும் வல்லமை உள்ளவரே தீக்கை கொண்டவர்....
அவரிடம் மாத்திரமே தீக்கை பெற முடியும்
அன்னவர் ஒருவர் தீக்கை அளித்து விட்ட பின்பு அவர் வேறு... தாங்கள் வேறு அல்லர்...
அங்ஙனம் தீக்கை பெற்றவர் மற்றெவரையும் நாடுதல் தேவையிராது(நூறு பேரிடம் தீக்கை பெறுதல் என்பது நகைப்புக்கிடமாகும்)
உள்ளுயிரை அறிந்த பின்பு உலகில் எவரிடமும் தேடுதல் ஒடுங்கி விடும்.
இதற்கு ஒரு பதிவே எழுதவேண்டும் எனினும் தங்களைப்போன்றோர்க்கு கோடி காட்டுதல் என்பதும் அதிகப்பிரசங்கித்தனம்.
காதில் ஓதுவதும் கழுத்தில் கட்டுவதும் தீக்கை என எனக்கு உணரும் அறிவு கொஞ்சம் குறைவாதலால் நான் நம்புவதில்லை
அதற்காக மற்றோரின் நம்பிக்கையை நான் வீணாக்க விரும்புவதில்லை
பின்குறிப்பு:- இது போன்ற அதுவும் கற்றவரிடமே தங்களை உயர்த்திக் காட்ட முனையும் அதிகப்பிரசங்கிகளை சுவாமிகளே....மன்னிப்பீராக...
அறிவிலி(பாவி)களாகிய நாங்கள் செய்வது இன்னது என அறியாமல் இருக்கிறோம்.
சுவாமிகளுக்கு...வணக்கம்...
”பெரியோர் பாட்டில் பிழை சொல்லாதே” என்பதும் எமக்கு பெரியோர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது...
இருந்தாலும் இந்த இடுகை எனக்குள் சில கேள்விகளை உருவாக்குகிறது.
தீக்ஷை என்பது தமிழில் அதுவும் சித்தர் பாடல்களில் ”தீக்கை” எனவே எடுத்தாளப்பட்டுள்ளது.
அதாவது தீயைக்கைக் கொண்டவர் யாருக்கு வேண்டுமாயினும் ஆன்மத் தீயை மூட்டிவிட முடியும்.
ஒரு விளக்கின் ”தீ”ச்சுடரில் எத்தனை விளக்கையும் ஏற்றும் வல்லமை உள்ளவரே தீக்கை கொண்டவர்....
அவரிடம் மாத்திரமே தீக்கை பெற முடியும்
அன்னவர் ஒருவர் தீக்கை அளித்து விட்ட பின்பு அவர் வேறு... தாங்கள் வேறு அல்லர்...
அங்ஙனம் தீக்கை பெற்றவர் மற்றெவரையும் நாடுதல் தேவையிராது(நூறு பேரிடம் தீக்கை பெறுதல் என்பது நகைப்புக்கிடமாகும்)
உள்ளுயிரை அறிந்த பின்பு உலகில் எவரிடமும் தேடுதல் ஒடுங்கி விடும்.
இதற்கு ஒரு பதிவே எழுதவேண்டும் எனினும் தங்களைப்போன்றோர்க்கு கோடி காட்டுதலே போதும்.
பின்குறிப்பு:- இது போன்ற அதுவும் கற்றவரிடமே தங்களை உயர்த்திக் காட்ட முனையும் அதிகப்பிரசங்கிகளை சுவாமிகளே....மன்னிப்பீராக...
அறிவிலி(பாவி)களாகிய நாங்கள் செய்வது இன்னது என அறியாமல் இருக்கிறோம்.
சுவாமிஜி
எல்லோரும் நல்ல குருவை தான் தேடுகிறார்கள்
யாரும் நல்ல சிஷ்யனை இருக்க முற்படுவதில்லை
நல்ல சிஷ்யனாக(நமக்குள் நல்ல தேடல் ) இருந்தால் குருவே நம்மை தேடி வருவார்.
உதாரணம் : மாணிக்கவாசகர்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
Post a Comment