Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, July 7, 2010

மாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி

என் நண்பனின் கட்டாயத்தால் அந்த இடத்திற்கு சென்றிருந்தேன். அமைதியான இடங்களை ஏன் மயான அமைதி என சொல்லுகிறார்கள் என அன்று தான் புரிந்தது. காரணம் நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் மயானம்.

இரவு சுமார் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. திடீரென சலங்கை சத்தம் கேட்கத்துவங்கியது. வயதான தோற்றம் கொண்ட ஒருவர் நீண்ட தலை முடியும் முன் வழுக்கையுமாக வந்துகொண்டிருந்தார். அனைவரும் அடக்கத்துடன் கைகட்டி நின்றிருந்தனர்.

அவர் தான் மாந்திரீக மேதை குடமுருட்டி குப்புசாமி..!

கையில் இருந்த பெரிய அரிவாள் ஒன்றை வைத்துக்கொண்டு ஆவேசம் வந்தவராக ஆடினார். சில நிமிடங்கள் ஆட்டம் ஆடி ஓய்து அமர்ந்தார். அவருக்கு எனர்ஜி டிரிக்காக ஏதோ ஒரு மிருகத்தின் ரத்தம் கொடுக்கப்பட்டது.

“டேய் வாங்கடா வாங்க என்ன பிரச்சனைடா உங்களுக்கு...” என வெற்றிலை போடாமலே சிவந்த வாயால் கர்ஜித்தார்.

எனக்கு முன்னால் இருந்த நண்பன் மூன்றடி உயரம் குறைந்து பென்குயின் போல் நடந்து அவர் முன் சென்றான். அவ்வளவு அடக்கமாம்..!

“சாமி..அது வந்து தொழில்ல.....”

நிறுத்து என்பது போல கை காட்டிவிட்டு தன் பக்கம் இருந்த ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் கருப்பு மையை வட்டமாக வரைந்தார். அதை உற்றுபார்த்தார்..

“உன் தொழில்ல போட்டி இருக்கு. உங்கூட இருக்கறவன் எதிராளிக்கு சாதகமா இருக்கான்.

சொல்லு அவனை என்ன செய்யலாம்? ஒரு கை விளங்காம போக கட்டிடுவோமா? 150 ரூபாய் வெட்டு..” என பொரிந்தார்.

“அதெல்லாம் நானே பாத்துக்கறேன் சாமீ...” என அவர் முன் சில நூறு ரூபாய்களை வைத்தான். நானும் அவனும் திரும்பி நடக்க துவங்கினோம்.

“டேய்.. நில்லுங்கடா... உன் கூட வந்தவனுக்கு என்ன பிரச்சனை” என என்னை பார்த்தவாரே நண்பனிடம் கேட்டார்.

“அவனுக்கு ஒன்னும் இல்லை சாமீ..எங்கூட சும்மாத்தான் வந்தான்” என்றான் அடக்கவாதி.

“அவனை பார்த்தா ஏதோ கேட்பான் போல இருக்கு...நீ அவனை கேக்க சொல்லு...” என்றார் குடமுருட்டி..

கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும்... “சாமீ எனக்கு ரெண்டே கேள்வி தான். கேட்கட்டுமா?” என்றேன்.

“ம்ம்ம்..” என்றார் மா.மே.கு.குப்புசாமி.

“இன்னைக்கு (7-ஜூலை) ஜெர்மனி- ஸ்பெயின் மோதும் அரையிறுதி போட்டியில யாரு ஜெயிப்பாங்க?”

மீண்டும் புதிய மையை கண்ணாடியில் தடவி என்னையும் கண்ணாடியையும் மாறி மாறி பார்த்தார். தனது எனர்ஜி டிரிங்கை ஒரு மடக்கு குடித்துக்கொண்டார்...

“என்னவிட இவனுங்க நல்லா ஆடுவாங்கடா...ஆடுவாங்க... சரியான போட்டி.. சமமா விளையாடுவானுங்க. மறக்காம பாரு..ஆனா ஜெர்மனிக்கு கஷ்டகாலம்.எவனோ குட்டிச்சாத்தனை ஏவி விட்டுருக்கான். அவனுங்களுக்கு மந்திரிச்சு கட்டினா சரியாயிடும். விளையாட்டு மைதானத்தில பலி கொடுத்து பூஜை செஞ்சா ஜெயிப்பானுங்க... இல்லைனா தோத்து போயி ரத்தங்கக்கிடுவானுங்க...” என்றார்.

“சாமி விளையாட்டு நடக்கிறது வெளிநாட்டுல உங்களை கூட்டிகிட்டு போக நேரம் இல்லை” என்றான் என் நண்பன். இவன் அடக்கத்திற்கும் கடமை உணர்ச்சிக்கும் அளவே இல்லையா என்பது போல பார்த்தேன்.

“ஒன்னோட ரெண்டாவது கேள்வி என்ன?” என்னை பார்த்து கேட்டார்.

“சாமி கண்ணாடியில மை தேச்சு எல்லாத்தையும் பார்க்கறீங்களே, நானும் வீட்டுக்கு போயி எங்க வீட்டு கண்ணாடியில மை போட்டா இது எல்லாம் தெரியுமா? எனக்கு இந்த மை எப்படி செய்யறதுனு சொல்லி கொடுங்களேன்..”

“டேய் இது எல்லாம் சாதாரண விஷயமில்லை... சித்திரை மாசம், பெளர்ணமிக்கு மழையில்லாத நாளில் கொல்லி மலைக்கு மேல போயி அங்கே கர்ப்பமா இருக்கிற குரங்கோட உச்சி தலைமுடியை எடுத்து வந்து நாற்பத்தி ஐந்து நாள் மந்திர உரு ஏத்தி அதை கருக்கி செஞ்ச மை இது. அப்படி நீயும் செஞ்சா எல்லாம் இதில் தெரியும்.”

“இதுக்கு ஒரே வார்த்தையில முட்டாப்பயலே எதுனா இருந்தா என்கிட்டையே வந்து கேளுனு சொல்லி இருக்கலாம்” என மனதுக்குள் நினைத்தவாறே கிளம்பினோம்.

18 கருத்துக்கள்:

வடுவூர் குமார் said...

:-)))

Anonymous said...

இதன்மூலம் தாங்கள் தெரிவிக்க விரும்புவது?

Anonymous said...

எல்லாம் சரி.
தங்களின் KP ஜோதிடம் என்ன சொல்லுது?

Mahesh said...

ஆக்டோபஸ் சொல்லிடுச்சு.... ஸ்பெயிந்தானாம்.... குடமுருட்டியார் மை டப்பா அதுக்கு எப்பிடி கிடைச்சுது?

செங்கோல் said...

எனக்கென்னவோ இந்த கிளிஜோசியம்,ஜக்கம்மா,குடமுருட்டி குப்புசாமி இவர்கள் மூலம் தங்கள் ஜோதிட கணிப்பை மறைமுகமாக சொல்கிறீரோ என்ற சந்தேகம்.இதை குடமுருட்டி கோகிலாவிடம் கேட்கலாமா!!!

Sitrodai said...

சுவாமி, குடமுருட்டி குப்புசாமி சொன்னதும் நடந்துடுச்சு. அடுத்து மலையாள மந்த்ரவாதியா?

Siva Sottallu said...

வாழ்த்துக்கள் ஸ்வாமி. குப்புஸ்வாமி சொல் பலித்துவிட்டது.

//ஆனா ஜெர்மனிக்கு கஷ்டகாலம்.எவனோ குட்டிச்சாத்தனை ஏவி விட்டுருக்கான்.//

அந்த குடிச்சாத்தான்னை பார்த்தேனே, ஆட்டம் ஆரம்பித்ததுடன் மைதான நடுவில் ஓடியது.

Subbaraman said...

ம்ம்..ஸ்வாமி, நெதர்லாந்து-ஸ்பெயின் மேட்ச்-ல யாரு ஜெயிப்பாங்க?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வடுவூர் குமார்,
உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஆகமக்கடல்,

//இதன்மூலம் தாங்கள் தெரிவிக்க விரும்புவது?
//

நான் என்ன நீதிக்கதையா கூறினேன் :)
புனைவு என்பதை படித்து இன்புறவேண்டும். அதில் நீதியை தேடக்கூடாது :)

//தங்களின் KP ஜோதிடம் என்ன சொல்லுது?//

எனக்கு அவ்வளவு பத்தாது...

ஸ்வாமி ஓம்கார் said...

திரு மகேஷ்,

//ஆக்டோபஸ் சொல்லிடுச்சு.... ஸ்பெயிந்தானாம்.... /

பகுத்தறிவாளிகள் என தங்களை கூறிக்கொள்பவர்கள், மேல் நாட்டுக்காரனை காட்டி அப்படி முன்னேறு என்பார்கள். அவர்களோ.. நம் கிளி ஜோதிடத்தைவிட காமெடி செய்கிறார்கள். :)

உங்கள் வருகைக்கு நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு செங்கோல்,

/எனக்கென்னவோ இந்த கிளிஜோசியம்,ஜக்கம்மா,குடமுருட்டி குப்புசாமி இவர்கள் மூலம் தங்கள் ஜோதிட கணிப்பை மறைமுகமாக சொல்கிறீரோ என்ற சந்தேகம்.இதை குடமுருட்டி கோகிலாவிடம் கேட்கலாமா!!!
//

நீங்க அப்படியா நினைக்கிறீங்க..? என் மேல ஏன் வீண அபாண்டமான குற்றச்சாட்டு. :) நானே ஏதோ கதை எழுதிக்கிட்டு இருக்கேன்...

குடமுருட்டி கோகிலா- பெயர் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த பெயரில் கதாப்பாத்திரம் கொண்டு நான் கதை எழுத முடியாது. :) ஏதேனும் பின்னவீனத்துவ எழுத்தாளரிடம் கூறினால் அவர் எழுதுவார்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு சிற்றோடை,
திரு சிவா,
திரு சுப்புராமன்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Cable சங்கர் said...

//எனக்கு முன்னால் இருந்த நண்பன் மூன்றடி உயரம் குறைந்து பென்குயின் போல் நடந்து அவர் முன் சென்றான். அவ்வளவு அடக்கமாம்//


சிரிச்சு மாளலை.. :)))))))))))))

Ganesan said...

கு , குப், குப்ப்ப், குபுக் என சிரித்தேன்

ஜெய்லானி said...

:-))

முடிவிலி said...

இவனுங்க [ மயான மந்திரவாதிகள் ] அழும்பு தாங்க முடியல ......... :( ... நல்ல பகடியுடன் கூடிய எழுத்து நடை ......... :)

bogan said...

கர்ப்பமான குரங்குன்னா கொண்டுவரமுடியாதா..இப்படித்தான் திருநெல்வேலில எங்க வாத்தியார் பொண்ணுங்களை வசியம் பண்ணறதுக்கு சிங்கத்தின் சிறுநீர் வேணும்னு பிலிம் காட்டிட்டு இருந்தாரு..ராவோட ராவா பஸ் ஏறி திருவனந்தபுரம் மிருககாட்சிசாலைக்கு போயி அங்கிருந்த வாட்ச்மேனுக்கு பத்து ரூபா கொடுத்து சிங்கம் உச்சா போகும்போது பிடிச்சுட்டு வந்து கொடுத்து கலங்க அடிச்சோம்.நரிக் கொம்பு கூட சீனாவில இருந்து இம்போர்ட் பண்ணிடுவோம்.ஜாக்கிரதை.