Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Wednesday, December 10, 2008

தர்மம் என்ன விலை ?

தர்மம் என்ன விலை

- அழித்து மகிழாமல் அளித்து மகிழ்.



நமது முன்னோர்கள் வாழ்வியல் கருத்துக்களை சிறப்பாகத் தொகுத்தார்கள். வாழ்க்கையின் பாதை எவ்வாறு அமையவேண்டும், அந்த பாதைக்கு உறுதுணையாக இருந்த கோட்பாடுகள் என்ன என்பதை உணர்ந்து வாழ்ந்தார்கள். இந்த வாழ்வியல் கோட்பாடுகளை எளிமையான முறையில் தர்ம, அர்த்த, காம, மோட்ச என வரிசைப் படுத்தினார்கள்.

முதலில் வரும் தர்மம் என்பது இங்கு பிறருக்கு கொடுக்கும் கொடைத் தன்மையை குறிப்பதில்லை. ஆனால் முழுமையாக குறிக்கவில்லை என்றும் கூற முடியாது. தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கையிலிருந்து வேறுபடாமல் கடைசி மூச்சு வரை அதற்காக போராடுவதை குறிக்கும்.அதனால் இதை தமிழில் அறம் எனக் கூறுகிறோம். இந்த அறத்தோடு இணைந்ததுதான் தானமும், தர்மமும். இந்த இரண்டு வார்த்தைகளும், ஒரே விஷயத்தை குறிப்பதில்லை.

தானம் என்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு கொடுப்பதை குறிக்கும். தர்மம் என்பது ஓர் குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்து கொடுப்பதை குறிக்கும். இதை எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மஹாபாரத புராணத்தில் கர்ணன் செய்தது தானம், யுதிஷ்ட்ரன் செய்தது தர்மம்.

ஒருவர் தானம் செய்யும் பொழுது ஆணவம் தலைதூக்கக்கூடாது.இதை எளிய மஹாபாரத கதை மூலம் உணரலாம். பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கு கர்ணனை விட, தான் அதிகமான தர்ம காரியங்களில் ஈடுபடுவதாக அகந்தை தோன்றியது. இதை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா தர்மனின் அகந்தையை வேர் அறுக்க எண்ணினார்.

தனது மாய சக்தியால் தங்கம் மற்றும் வெள்ளியைக் கொண்டு இரண்டு மலைகளை உருவாக்கினார் பஞ்ச பண்டவர்களை அழைத்து ஒரு நாளுக்குள் தானம் அனைத்தையும் தானம் செய்யுமாறு கூறினார். அகந்தையில் மிதந்த ஐவரும் உலோகத்தை அறுக்கும் கருவிகளைக் கொண்டு உலோகக் கட்டிகளாக மலையை வெட்டி நாட்டு மக்களை வரிசையாக நிற்க வைத்து தானம் செய்தார்கள். ஒரு நாள் முடியும் தருவாயில் இரண்டு மலைகளின் அளவும் முற்றிலும் குறையவில்லை. பஞ்ச பண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் ஆணையை நிறைவேற்ற முடியாத மனக்குமுறலுக்கு ஆளானார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் தனது மாய சக்தியால் தங்க மற்றும் வெள்ளி மலைகளை உருவாக்கி கர்ணனை அழைத்து ஒரு நளைக்குள் தானம் செய்யும்படி கூறினார். கர்ணன் ஒரு அந்தணரை அழைத்து இரு மலைகளையும் அவருக்கு உடனடியாக தானமாக கொடுத்தார். ஒரு நிமிடத்தில் அவனுடைய தர்ம காரியம் முடிவடைந்தது. இதைக்கண்ட பஞ்சபாண்டவரின் ஆணவமும் முடிவுக்கு வந்தது. எனவே அகந்தையுடன் தானம் செய்யும் பொழுது அது சிறப்படையாது என்பதை பஞ்சபாண்டவரின் செயல் மூலம் அறியலாம்.

இந்த வாழ்வியல் பாதையில் தான தர்மத்தை செய்ய முற்படாமல் மோட்ச பாதைக்கு முயற்சி செய்கிறார்கள். முதல்படியான தர்மத்தை கடைபிடிக்காத இவர்கள்சிகரமான மோட்சத்தை எதிர்பார்ப்பது வேடிக்கையான விஷயம். பல யோகப் பயிற்சிகள், பல நூல்களின் மூலம் ஏற்பட்ட அறிவு இவற்றைக்காட்டிலும் எளிமையான மோட்ச பாதையை அடையும் நுட்பம் தர்மத்தை செய்வதால் கிடைக்கும். இதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கர்மயோகத்தை கீதையில் கூறும் பொழுது எடுத்துரைக்கிறார்.

64 நாயன்மார்களும் பிறருக்கு சிவத்தொண்டு சிவலோகம் அடைந்தார்கள். இவர்களில் அனேகம் பேர் சிவனடியார்க்கு தர்மம் செய்தே ஜோதியில் ஐக்கியமானார்கள். என்பதை மறந்து விடக்கூடாது. ஆக சைவ வழியிலும், வைணவ வழியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்மை இந்த தர்மம். தற்சமயம் சமூகத்தில் மனித நேயத்துடன் தர்மம் செய்பவர்கள் குறைவு. சுய லாப நோக்கத்துக்கோ, தற்பெருமைக்காகவோ செய்யப்படுவதே அதிகம். ஒருவர் தானம் செய்ய அவர் மனதில் உள்ள சமஸ்காரங்கள் விருத்தி அடைவதாக யோக சாஸ்திரம் கூறுகிறது.

பதஞ்சலி மாமுனிவர் தனது யோக சூத்திரத்தில் 'ஆஷ்தேயா' என்று பொருள் சேர்க்காத தன்மையை வலியுறுத்துகிறார். பொருள் சேர்க்கமை என்றால் பொருள் மேல் பற்றில்லாமல் துறவு நிலையை குறிப்பதில்லை. தன்னிடம் உள்ள பொருளை பிறருக்கு கொடுத்து பிறரிடத்தில் இருக்கும் பொருளை எதிர்பார்க்காமல் வாழும் முறையை குறிக்கும். நவீன யுகத்தில் பலவிதமான பிரச்சனைகளும், மன விவகாரங்களும் ஏற்படுவதற்கு தர்மம் செய்யாமல் இருப்பதே காரணம்.

தானம் கொடுக்கும் பொழுது எதை கொடுக்க வேண்டும், எதை கொடுக்கக்கூடாது என மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது. தர்மத்தை கொடுப்பவன் அதிகாரி என அழைக்கப்படுகிறான். தன்னுடைய தொழிலைச் சார்ந்து அவன் தர்மம் செய்யக்கூடாது என்பது மனுதர்ம சாஸ்திரத்தின் அடித்தளம்.
உதாரணமாக ஆசிரியர் தொழிலில் இருபவர் இலவசமாக கல்வி போதனை செய்வது தர்மத்திற்க்கு எதிரான செயல்.

தர்மசாஸ்திரம் பசு தானத்தை அதிகமாக செய்யத் தூண்டுகிறது. ஓர் பசுவை தானம் செய்வதால் ஓர் குடும்பம் மட்டுமின்றி, ஓர் கிராமமே உயர்வடைகிறது. மேலும் இது போல பசு தானங்கள் செய்வதால் ஒரு நாடே வளமடைகிறது. பசுவை கொடுக்க அதிகமான பொருள் செலவு ஏற்படும் என எண்ணுபவர்கள், அதைவிட எளிய முறையில் தானம் செய்து பசு தானத்திற்கு சமமான பலனை அடையக்கூடிய முறையையும் தர்ம சாஸ்திரம் வரையறுக்கிறது.

தன் பொருளின் மேல் இருக்கும் பற்றை மக்கள் விடுவதாக இல்லை. ஒருமுறை இழந்தால் மீண்டும் அந்த பொருள் கிடைக்காது என்ற எண்ணமே தர்மத்தை தடை செய்கிறது. தான் அந்தப் பொருளை உண்டாக்கினோம் என்ற அஹங்காரம், இறைநிலை மேல் இருக்கும் நம்பிக்கை இன்மையும் தர்மம் செய்யாமல் தடுக்கிறது.

சாதாரண மனிதன் பொருள் நிறைந்த பெட்டியில் மீண்டும் மற்றொரு பொருளை வைக்க வேண்டும் என்றால் முன்பு இருந்த பொருளை வெளியில் எடுத்த பின்பு வைக்க முயல்கிறான். ஆனால் அறியாமையில் இருக்கும் மனிதன், தர்மம் மூலம் தன்னிடம் உள்ள பொருளை எடுத்து அதை விட உயர்வான பொருளை வைக்க இறைவன் முயச்சிக்கும் பொழுதுஅதை வெறுக்கிறான். தர்மம் செய்வதால் ஏற்படும் இத்தகைய பலனை உணர்ந்தவர்கள் ஈதல் இசைபட வாழ்தல் எனப் படினார்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் அவர் இசைபட வாழ்கிறாரா இல்லையா என அவன் ஈகை குணத்தை முடிவு செய்யும் கிரகத்தைக் கொண்டு முடிவு செய்யலாம். தான தர்மத்தைக் குறிக்கும் பாவம் 9ஆம் பாவம். 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதியின் தன்மையை பொறுத்து தானம் செய்யும் நோக்கு வேறுபடுகிறது. 9ஆம் பாவ உபநட்சத்திரம் 5,12 பாவங்களுடன் தொடர்பு பெற்றால் ஜாதகருக்கு தர்மம் செய்யும் பாக்கியம் உண்டு. 9ஆம் பாவம் குருவையும், ஆன்மீக முன்னேற்றத்தையும் குறிக்கும். குருவை தேடுபவர்கள் தான தர்மங்கள் செய்ய முற்படும் பொழுது அவர்களுக்கு உயர்வும் குருவின் கிருபையும் கிடைக்கும்.

* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி செவ்வாய் மற்றும் 4ஆம் பவ தொடர்பு இருந்தால் நிலம் தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி சுக்கிரன் மற்றும் 2ஆம் பாவ தொடர்பு பெற்று இருந்தால் பணமாக தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி சுக்கிரன்/ சந்திரன் மற்றும் 2, 4 பாவ தொடர்பு பெற்றால் அன்ன தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி புதன் மற்றும் 3 ஆம் பாவ தொடர்பு இருந்தால் புத்தகம் / நூல்கள் தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி குரு மற்றும் ரிஷப ராசியுடன் தொடர்பு பெற்றால் பசுதானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி செவ்வாய் லக்னம் தொடர்பு பெற்று மற்றும் நீர் ராசியுடன் இணைந்திருந்தால் இரத்த தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி 2, 12 ஆம் பாவம் மற்றும் சூரிய, சந்திர தொடர்பு இருந்தால் கண் தானம் செய்வார்.
* 9ஆம் பாவ உபநட்சத்திராதிபதி லக்னாதி பதியுடன் தொடர்பு பெற்று12 ஆம் பாவம் மற்றும் மிதுனம், துலாம், கும்பம், கன்னி ராசியில் 0-15 டிகிரியும் தனுசு ராசியில் 15-30 டிகிரியும் இணைவு பெற்றால் உடல் தானம் செய்வார்கள்.

இது போல பல தானங்கள் உண்டு. ஒருவரின் ஜாதகத்தை பொறுத்து அவரின் தானம் செய்யக்கூடிய தன்மை மாறுபடுகிறது. தானம் செய்வது என்றால் தன்னிடம் உள்ள விலை மதிக்க முடியாத பொருளையோ, உடல் உறுப்பையோ கொடுப்பது அல்ல. தன்னால் முடிந்த எந்த ஒரு விஷயத்தையும் குளிரும் படி செய்தலெ தானமாகும்.

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்குஒரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

எனத் திருமூலர் கூறுவது போல ஒரு கைப்பிடி உணவோ பசு மாட்டுக்கு இலையோ பிறருக்கு இனிய சொல்மூலமோ தானத்தை செய்ய முடியும்.


மஹாபரதத்தில் ஒரு அற்புதமான காட்சி:

அர்ஜுனனின் அம்பு மார்பினைத் துளைத்த நிலையில் தேர்ச்சக்கரத்தின் அருகில் கர்ணன் இறப்பை எதிர்நோக்கி வீழ்ந்து கிடந்தான். அவன் புண்ணியம் அவனின் உடலில் இருக்கும் வரை அவனின் உயிர் பிரியாது. என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உணர்கிறார். ஓர் அந்தணர் வேடத்தில் சென்று தானமாக கர்ணனின் அனைத்து புண்ணியத்தையும் கேட்கிறார்.

பரமாத்மா கர்ணன் அனைத்து புண்ணியங்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்யும் பொழுது "தானத்தால் ஏற்பட்ட அனைத்து புண்ணியங்களையும் உனக்கு அர்ப்பணிக்கிறேன். இதனால் ஏற்படும் புண்ணியத்தையும் உனக்கே அர்ப்பணிக்கிறேன்" எனக் கூறுகிறார். இத்தகைய உயர்ந்த நெறி நமது வாழ்க்கையில் பயன்படுத்த முடிவதில்லை என்றாலும் நம்மால் இயன்றதை பிறருக்கு செய்வோம். மற்ற வாழ்வியல் கோட்பாடுகளான பொருள், மற்றும் வீடு பேறு அடைவோம்.



2006 June.

7 கருத்துக்கள்:

ஸ்ரீதர்கண்ணன் said...

ஸ்வாமி ஓம்கார் அவர்களே மிக அருமையான பதிவு..

கோவி.கண்ணன் said...

தர்மமம் செய்த புன்னியத்தை தானம் செய்ததாக கர்ணன் கதையில் ஒரு நிகழ்ச்சி வரும், புன்னியத்தை தானம் செய்தவுடன், அவனுடைய புன்னியமெல்லாம் விலகி பலம் இழந்துவிடுவானாம், தர்ம தேவதைகளும் அவனைவிட்டுப் போய்விடுவார்களாம்.

இங்கே ஒரு லாஜிக் இடிக்குது, எதை தானம் செய்தாலும் புன்னியம் என்று சொல்லும் பலன், புன்னியத்தையே தானம் செய்யும் போது பலமடங்கு புன்னியமல்லவா கிடைத்திருக்க வேண்டும் ?

உங்கள் பேரும் புகழை வெளிப்படையாக துறக்கிறீர்கள், அப்படி செய்யும் போது பேரும் புகழையையுமே துறந்தவர் என்ற பெரும்புகழ் கிடைக்கதா ?

ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஸ்ரீதர்கண்ணன்

உங்கள் வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி

ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்.

பதிவேற்றம் செய்து 2 மணி நேரம் ஆகியும் இவரை காணவில்லையே என வருத்தப்படும் ”சமயம்” பார்த்து உங்கள் பின்னூட்டம் வந்தது.[உங்களை சமய பூர்வமாக தான் எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது ;) ]



மகாபாரத புராணத்தில் உள்ள கர்ணன் சம்பந்தபட்ட கதையை எனது பதிவில் கொடுத்திருக்கிறேன் பாருங்கள். தர்ம தேவதை கதை எல்லாம் ஏதோ வேலையற்றவர்கள் சொன்னது.

//தர்மமம் செய்த புன்னியத்தை தானம் செய்ததாக கர்ணன் கதையில் ஒரு நிகழ்ச்சி வரும், புன்னியத்தை தானம் செய்தவுடன், அவனுடைய புன்னியமெல்லாம் விலகி பலம் இழந்துவிடுவானாம்,//


கவனித்தீர்களா.. கர்ணன் புண்ணியத்தை தர்மம் செய்ததும் புண்ணியம் குறைந்து புன்னியம் ஆகிவிட்டது ;) ?

//உங்கள் பேரும் புகழை வெளிப்படையாக துறக்கிறீர்கள், அப்படி செய்யும் போது பேரும் புகழையையுமே துறந்தவர் என்ற பெரும்புகழ் கிடைக்கதா ?
//

பெரும் புகழும் தானே கிடைத்தது புண்ணியம் எங்கே கிடைத்தது?


துறப்பவன் பிறருக்காக துறந்தால் துறப்பதில் துறவில்லை என அர்த்தம்...!

(அப்பபா எத்தனை ”து”:)) )

தனக்காக துறந்தால் துறவால் ஏற்படும் விளைவை பற்றி கவலை அவனுக்கில்லை...!

krish said...

Nisargadatta Maharaj says I renounce the bed when sleeping. Dhanam is also renounciation of something. Good Day Swami.

வேலன். said...

தான தர்மம் பற்றிய அருமையான விளக்கம்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Subbaraman said...

ஸ்வாமிஜி, உபநட்சத்திராதிபதி யார் என்பது எப்படி அறிவது? உதாரணமாக, தனுசு ராசிக்கு 9-ல் குரு, செவ்வாய், சனி சேர்ந்து இருக்கிறார்கள்.இங்கு 9-ம் பாவத்திற்கு உரியவர் சூரியன்.உபநட்சத்திராதிபதி யார்?

நன்றி..