Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, November 3, 2008

சிசரியன் பிறப்பும் - ஜோதிடமும்

கேள்வி : இன்றைய விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்த உலகில் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகள் அதிகமாகி விட்டார்கள். சில ஜோதிடர்கள் கூட அறுவை சிகிச்சைக்கு நல்ல கிரகநிலை பார்த்து கொடுக்கிறார்கள். அனைவரையும் அறுவை சிகிச்சை மூலம் நல்ல கிரகநிலையில் பிறக்கச் செய்வதால் இந்த உலகில் அனைத்து பிறப்புகளையும் மேம்பட்டவர்கள் ஆக்கலாம் அல்லவா?

உங்கள் பார்வையில் அறுவை சிகிச்சை மட்டும் தான் தெரிகிறது. செயற்கை கருதரித்தல் கூட நல்ல நேரம் பார்த்தே செய்யப்படுகிறது. அதற்கு பிறகு அறுவை சிகிச்சையும் ஜோதிடர் குறித்த நேரத்தில் செய்வதால் அக்குழந்தை சிறந்த வாழ்க்கை வாழும் என நம்புகிறார்கள்.

எனக்கு தெரிந்த ஓர் நபர் தனக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்பதை தெரிந்து கொண்டார். குழந்தை மகம் நட்சத்திரத்தில் பிறப்பு கொடுக்க வேண்டும் என வெளிநாட்டிலிருந்து பல ஆயிரம் ரூபாய் செலவளித்து மருந்துகள் இறக்குமதி செய்து தாய்க்கு செலுத்தினார்கள். அந்த மருந்துகள் எதற்கு தெரியுமா?

மருத்துவர்கள் எதிர்பார்த்த பிரசவ நாளுக்கு 2 நாள் கழித்தே மகம் நட்சத்திரம் வருகிறது. அதுவரை தாய் வலி உணராத வண்ணமும், சேய்க்கு பாதிப்பு வழங்காத வண்ணமும் இருக்கத்தான் விலை உயர்ந்த மாத்திரை. மக நட்சத்திரத்தில் என்ன அப்படி மோகம் என கேட்டேன். அதற்கு பெண் மக நட்சத்திரத்தில் பிறந்தால் எதிர்காலத்தில் முதலமைச்சராக வர வாய்ப்பு உண்டு என ஓர் அறிவுப்பூர்வமான தகவல்களை கொடுத்தார்.

அவ்வாறு அந்த குழந்தை முதலமைச்சர் ஆனால் தவறல்ல, அதற்கு முன் நடிகை ஆகுமே? தாயும் நடிகை ஆக வேண்டுமே? தந்தையான உனது பெயர் வெளிவராமல் இருட்டடிக்கப்படுமே? உன் சந்ததி தழைக்காதவண்ணம் அந்த குழந்தை “செல்வி” யாக மட்டுமே இருக்குமே? என நான் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க அவர் கலங்கிதான் போனார். அவரை எனது கேள்வியால் துன்புறுத்துவது எனது நோக்கம் அல்ல ஆனால் உண்மை கூட சில நேரம் கசக்கும்.

சரி. இவ்வாறு நல்ல கிரகநிலை பார்த்து குழந்தையை பிறக்க செய்வதால் அதன் தலைவிதியை நாம் முடிவு செய்கிறோமா - சரியாக வருமா என்றால் அதற்கு ஓர் புராணத்தில் உள்ள உதாரணம் பார்ப்போம். நவீன காலத்தில் மட்டும் தான் இத்தகைய செயல் இருப்பதாக நினைக்க வேண்டாம். அந்த காலத்திலும் இத்தகைய செயல் உண்டு. பெரிய புராணத்தில் செங்கண்ண நாயனார் வரலாறு இதற்கு சரியான உதாரணம்.

ஓர் மஹாராணிக்கு பிரசவ நேரம் நெருங்குகிறது, அரண்மனை ஜோதிடர்கள் பிரசவம் ஆகும் நாளின் கிரக நிலையை கணித்தார்கள். பிறகு இந்த குறிப்பிட்ட நாளிகையில் குழந்தை பிறந்தால் அவன் சன்யாச யோகம் அடைவான். இதுவே அடுத்த நாளிகையில் பிறந்தால் சக்கரவர்த்தி ஆவான் என பலன் கூறினார்கள். உடனே ராணி தன்னை ஒரு நாழிகைக்கு ( 24நிமிடம்) தலைகீழாக கட்டி தொங்க விட சொன்னார். சரியாக ஒரு நாழிகை முடிந்ததும் தன்னை கீழே இறக்க செய்து குழந்தையை பிரசவித்தாள். அதிக நேரம் அக்குழந்தை கருவறையில் இருந்ததால் அக்குழந்தைக்கு கண் மற்றும் உடல் முழுவதும் சிவப்பு நிறம் கொண்டதாக இருந்தது. ராணியும் உடல் நிலை மோசமடைந்து இறந்தாள். இறந்து போவதற்கு முன் தனது குழந்தை சிவப்பு நிற கண்கள் கொண்டதாக இருந்ததால் அதற்கு செங்கண்ணன் என பெயர் வைத்தாள்.


ஜோதிடர்களின் கருத்துகேற்ப தனது உயிரை கொடுத்து தனது மகனை பெற்றடுத்தாலும் , உண்மையில் மன்னன் செங்கண்ணன் சக்ரவர்த்தி என வரலாற்றில் இடம் பெறவில்லை. அதிக சிவன் கோவிலை கட்டிய மன்னன் என ஆன்மீக புகழ் அடைந்து நாயன்மார் வரிசையில் அனைத்து சிவன்கோவிலிலும் நிற்கிறார். ஜோதிடர் சொன்னது பலித்ததா? அல்லது ஊர் ஜோதிடர்களை பழித்ததா? நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.

இது செங்கண்ன நாயனாருக்கு மட்டுமல்ல கெளதம புத்தருக்கு கூட இதே தான் நடந்தது. உனது மகன் துறவி ஆவான் என சொன்னதும் அவனை சகல சுக போகத்தில் வெளி உலகம் தெரியாமல் வளர்த்தினார்கள். கடைசியில் என்ன நடந்தது துன்பத்தை ஒரு கணம் பார்த்தான் துறவியானான் சித்தார்த்தன். புத்தருக்கு மட்டுமல்ல யேசுநாதர் என பல உலக ஞானிகள் பிறக்கும் பொழுதெல்லாம் ஜோதிடர்கள் விளையாடி இருக்கிறார்கள் என்பதே உண்மை.

உண்மையில் பிறப்பும் இறப்பும் நிர்ணயம் செய்யபட்ட ஒன்று. இதை எக்காரணம் கொண்டும் யாராலும் மாற்ற முடியாது. ஜோதிடர்கள் குறித்து கொடுத்த நேரத்தில் தாங்கள் அறுவை சிகிச்சை செய்தோம் என்பது அறிவில்லாதவர்களின் வாதம். உண்மையில் இயற்கையாக அக்குழந்தை பிறக்கும் தருணத்தையே ஜோதிடர் கொடுக்க முடியும். இதை கணிக்கும் பொழுது ஜோதிடருக்கு அந்த நேரம் சரியானதாக தெரியும். உண்மையில் அந்த குழந்தை எந்த நேரத்தில் பிறக்க வேண்டுமோ அதில் தான் பிறக்கிறது. ஆணவம் கொண்ட இவர்கள் தான் , நான் குறித்த நேரத்தில் பிறக்கிறது என்கிறார்கள். இவர்கள் நேரம் குறித்தாலும் குறிக்காவிட்டாலும் அதே நேரத்தில் தான் பிரசவம் நடக்கும். இது இவர்களின் கற்பிதமே.

எனது ஆராய்ச்சிக்காக ஓர் பிரசவ மருத்துவமனையை அனுகி இதை ஆய்வு செய்த பிறகே இந்த கருத்துக்களை கூறுகிறேன். ஓர் குழந்தை பிறக்கும் நேரத்தை ஜோதிடர் இடத்தில் கணிக்க சொன்னேன். அதை மருத்துவருக்கும் அதன் பெற்றோருக்கும் கூறவில்லை. மருத்துவர் தாயிக்கு அறுவை சிகிச்சை செய்த பின் பார்க்கும் பொழுது இரண்டு நேரமும் சரியாக வந்தது.


சில நேரம் ஜோதிடர் நேரம் குறித்தாலும், தாயின் உடல்நிலை மாற்றத்தாலும் - மருத்துவரின் செயல்பாட்டாலும் அறுவை சிகிச்சை நேரம் மாற்றி அமைத்த சம்பவம் உண்டு. அதற்கு காரணம் நேரம் நாம் குறித்தாலும் அந்த குழந்தை பிறக்க வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை என்பதே இதற்கு காரணம். ஆக "நாம் செய்கிறோம்" என்பதே முட்டாள்தனத்தின் உச்சம்.

அப்படியானால் சிறந்த குழந்தைகளை பெற்று எடுக்க முடியாதா? என நீங்கள் கேட்பது புரிகிறது. பிறப்பு நிகழ்தல் என்பது ஓர் குழதைக்கு அதன் வாழ்க்கையில் முதல் செயலாக இருக்கலாமே தவிர, அக்குழந்தையின் உருவாக்கத்திற்கு அது முதல் செயல் அல்ல.


பெற்றோர்கள் நல்ல மன நிலையில் இருப்பது, சாத்வீக உணவுகளை உண்பது மற்றும் ஆன்மீக சிந்தனை ஆகியவற்றுடன் வாழ்ந்தால் சிறந்த குழந்தையை பெற்று எடுக்க முடியும். மேலும் தாய் கர்ப்பிணியாக இருக்கும் பொழுது நல்ல சூழ்நிலையில் வாழ வேண்டியது அவசியம். பக்த பிரஹல்லாதன் கதை இதற்கு சிறந்த உதாரணம். தினசரியில் வரும் கொலை, கொள்ளை மற்றும் தவறான உறவு முறை பற்றிய செய்திகளை படித்தும், மோசமான மெகா சீரியல்களை பார்த்தும் வளரும் குழந்தை ஜோதிடர் குறித்த நேரத்தில் பிறந்தவுடன் மஹாத்மாவாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமா?

கோலத்தை முதல் புள்ளியிலிருந்து துவங்குங்கள், கடைசி புள்ளியிலிருந்து அல்ல..

11 கருத்துக்கள்:

Unknown said...

நல்ல பதிவு திரு ஓம்கார்,..

என் பழைய (நியாமான) கேள்விக்கு பதில் வரவில்லையே..

உங்களின் உண்மையான பெயர்?

ஸ்வாமி என்பது உங்கள் பெயரின் ஒரு பாதியா?

உங்கள் உண்மையான வயது 108 ???

தியாகராஜன் said...

ஐயா,
உண்மையான கருத்துகளை கூறியுள்ளீர்கள்.
அடியேனும் இது போன்ற நிகழ்வினைப் பார்த்திருக்கிறேன்.
ஜோதிடர் குறித்திருந்த நேரத்திற்கு 1 நாள் முன்பாகவே பிரசவம் நடந்தது.

RAHAWAJ said...

அருமையான உண்மை பதிப்பு, ஒரு குழந்தை நல்ல முறையில் பிறப்பது தாய், தந்தையிடம் தான் உள்ளது. நாம் சாதாரணமாக நல்லது நடந்தால் நான் என்று செல்கிறோம், தீது நடந்தால் இறைவன் என்கிறோம், தீதும்,நன்மையிம் பிறர் தர வாரா என்பது முன்னோர் வாக்கு நல்ல தகவல் பாராட்டுக்கள் ஓம்கார் அவர்களே

ஸ்வாமி ஓம்கார் said...

திரு முத்து,

உங்கள் கேள்விகள் எனது பதிவினை பற்றியதாய் இருந்தால் உடனே பதில் அளித்திருப்பேன். நீங்கள் கேட்பது என்னை பற்றி, வயது எனும் எண்னைபற்றி :)

ஓர் இடத்தை அடைய நீங்கள் பயணிக்கும் பொழுது பயண இடத்தை கண்டறிய ஓர் வழிகாட்டியிடம் கேட்பீர்கள் அல்லவா? அவரை பற்றியோ அல்லது அவரின் சுய புராணத்தையோ கேட்காமல் அவரின் வழிகாட்டுதலை மட்டுமே உங்கள் கேள்வி நோக்கமாக இருக்கும் அல்லவா? அது போல உண்மை எனும் இடத்தை அடைய பயணிப்பவர்களின் வழிகாட்டி நான்.

இவ்வளவு கேட்பதால் சொல்கிறேன்.
ஆன்மீக வாழ்க்கையில் இருக்கிறேன்.
ஆன்மீக தொண்டும் , சாஸ்திர விழிப்புணர்வு கொடுத்தலும் எனது பணி. ஸ்வாமி என்பது எனது நிலை. பெயர் அல்ல.

எனது ஆன்மீக பெயரின் சுருக்கமாக அமைந்த வரிகளே ஸ்வாமி ஓம்கார் என்பது. எனது உடலுக்கு தான் வயதுண்டு. எனக்கல்ல. 108 என்பது மனித உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை.

குருகீதை எனும் எனது முதல் வலைதளத்தில் 108 குரு கதைகள் எழுதும் எண்ணம் உள்ளது. அதனால் அந்த எண்ணிக்கை.

நன்றி.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தியாகராஜன்,

உங்கள் பாரட்டுக்கு நன்றி.

உண்மையை கூறி இருக்கிறேன். அதற்கு சாட்சியாக நீங்கள் இருக்கிறீர்கள்.

ஸ்வாமி ஓம்கார் said...

திரு rahawaj,

உங்கள் பாராட்டுக்கு நன்றி.

Unknown said...

ஸ்வாமி ,

உங்கள் கருத்துக்கள் அருமை.

தம்பதிகள் ஓர் குறிப்பிட்ட நேரத்தில் இணைந்தால் நல்ல குழந்தை பிறக்கும் என்கிறார்களே?

உங்கள் கருத்து என்ன????

tamilraja said...

சமீப காலங்களில் நான் பார்த்த,படித்த வலைப்பக்கங்களில்!
இது முற்றிலும் வித்தியாசமாக,அறிவுப்பூர்வமாக இருக்கிறது!

அருமையான கருத்துக்களை ஆணியடித்தது போல் சொல்லியிருக்கிறீர்கள்!

வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் பணி!

ஸ்வாமி ஓம்கார் said...

திரு தமிழ்ராஜா,

உங்கள் பாரட்டுக்கும் உங்கள் வருகைக்கும் நன்றி.

krishdarwin said...

Sir

You have gone around the isuue. Can caesarian operation be performed at an appointed time to suit someone's jathagam. By the way, caesarian operation is not a modern method but was used to deliver Julius Caesar atleast 1500 years ago.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மிகவும் அருமையான பதிவு