Pages

Subscribe:

Ads 468x60px

மனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.
"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் "

www.pranavapeetam.org

Monday, August 26, 2019

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2

முக்தி நாத் திருப்பயணம் - அனுபவங்கள் 2  - 


    அனுபவ பகிர்வு : விஜி ராம்


பயணம் வேறு யாத்திரை வேறு. பயணத்திற்கு நண்பர்கள் தேவை. யாத்திரைக்கோ குரு மிக அவசியம். புராண தலங்கள், ஆன்மீகதலங்கள் போன்றவை நண்பர்களுடன் செல்வதை விட நம்மை அறிந்த நாம் புரிந்து கொள்ள நினைக்கும் குருவுடன் செல்வது நம்முள் இருக்கும் அறியாமை இருளை நீக்கி, அந்தந்தத்தலங்களை இன்னும் அதிகம் அனுபவிக்க வழிவகுக்கும்.



நான் போக வேண்டும் என்று நினைத்த பெரும்பாலான தலங்கள் குரு மூலமே தரிசித்திருக்கிறேன். ஒரு முறை அவரிடம் நம் எண்ணத்தை சொல்லிவிட்டு மறந்து விடலாம், எப்படியேனும் நம்மை அழைத்து சென்றிடுவார். திருவண்ணாமலை, காசி, அலகாபத், கயா, ஹிமாலயாஸ், தேவப்ரயாகை, கும்பமேளா என்ற அந்த வரிசை இன்னும் அதிகம், 2015 வருடம் முக்திநாத் செல்லும் ஆர்வத்தை செயலாக்கும் போது பூகம்பத்தால் பயணம் தள்ளிவைக்கப்பட்டது. இதோ இந்த மேமாதம் முக்திநாத்தை தரிசிக்கும்  பாக்யம் பெற்றோம். 



முக்தி நாத்: 

நாத பரம்பரையின் பூமி, ஆதிநாதரின் ஆதிக்கபூமி. அங்கே செல்கிறோம் என்ற எண்ணமே மிக உவப்பானதாக இருந்தது. போகும் முன் பார்த்த , படித்த விசயங்கள் அனைத்துமே கொஞ்சம் பீதியளிப்பவையாகவே இருந்தது. ஆனால்  அதைப்பற்றி அதிகம் என்றுமே யோசித்ததில்லை, அழைத்துசெல்பவர் கண்டிப்பாக இவற்றை சரிபடுத்தி நல்ல தரிசனத்துடன் ஆனந்த பயணமாகவே ஆக்குவார். டெல்லி, காத்மாண்டு, போஹ்ரா, ஜோம்சம் என்று தினமுமே குறிப்பிட்ட தூரம்  பயணம்  செய்தே முக்திநாதரை அடைய முடியும். பயணத்திட்டம் நாம் தீட்டலாம், ஆனால் இயற்கையே இறுதி முடிவெடுக்கும். மழை, பனிப்புயல், நிலச்சரிவு, அடிக்கடி நடக்கும் விபத்துகள் என்று அனைத்தையும் தாண்டி இயற்கை நம் பயணத்தின் தன்மையை தீர்மானிக்கும்.  ஆதிநாதர் அனுமதித்து, இயற்கை விரும்பினால் மட்டுமே இது சாத்தியம். 

மே 21 நடு இரவு 1 மணி விமானத்தில் டெல்லிக்கு பயணித்து காத்மாண்டு விமானம் ஏறி  மதியம் 2 மணிக்கு காத்மாண்டு விமான நிலையம் அடைந்தோம். காத்மாண்டு நேபாள தலைநகர், மலைப்பிரதேசமே, ஊருக்கு நடுவில் விமான நிலையம், எங்கு சென்றாலும் அதனை சுற்றியே பாதைகள். எங்களுடய பயணமத்திட்டம்  தினமும் காலை ஆரம்பித்து 3வது  நாள் தான் முக்திநாத்தை அடையும்படியானது. 


காத்மாண்டு : ஊர் முழுதும் சாலையோர  ஊதாப்பூக்கள் சிந்தும் மரங்கள், சற்றே அழுக்கான நகரம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, பரபரப்பிலும் நிதானமான ஊர்.  காத்மாண்டு அடைந்து மற்ற மாணவர்களும் வந்த பின் மாலை முதலில் சென்ற இடம் பசுபதிநாதர் கோவில் . யுனெஸ்கோவின்  கீழிருக்கும் சின்னமாக அறிவித்திருக்கிறார்கள். பெரிய சுற்றுப்புறத்துடன் , வெறும் செங்கல் கட்டுமானத்துடன் கேரளாவை நினைவுபடுத்தும் கோவில். இந்த பயணம் முழுதும்   துளி வெயில் இன்றி, மழை மேகங்கள் சூழ, அவ்வப்போது மழை சாறலாகவும் பெருமழையாகவும் பெய்து ஆசிர்வதித்துக்கொண்டே இருந்தது. பசுபதிநாதர் கோவில் வலதுபுறத்தில் இருக்கும் புவனேஸ்வரியை தரிசித்து , பசுபதிநாதரை தரிசிக்க வரிசையில் இணைந்த போது மணி 6. 

பசுபதிநாதர்  , லிங்க வடிவில் இருந்தாலும் நான்கு புறமும் முகம் கொண்டு சதுர்முகனாக இருக்கிறார். வழக்கமாக ஒரு கதவு திறந்திருக்கும் தரிசித்து வரலாம், காலையில் 9.30 முதல் 12.30 வரையிலும் மாலை 6.30 மணி முதல் 8 வரையிலும் நான்கு கதவுகளும் திறந்திருக்கும் நாற்புறம் சுற்றி வந்து சிவனை தரிசிக்கலாம். நாங்களும் காத்திருந்து நாற்புறமும் சுற்றி  நாதரை தரிசித்து வரும் போது மழை தூறலாக ஆசிர்வதிக்க ஆரம்பித்திருந்தது. இரவு சிறிய அறிமுக உரையுடன் பிரிந்தோம்.


2 ஆம் நாள் :

 காலை பத்து மணிக்கே எங்களுக்கு போஹ்ரா விமானம். இங்கு கவனிக்க வேண்டியது விமானம் கிளம்ப எந்த குறிப்பிட்ட நேரமும் இல்லை, வரும்போது வரும், கிளம்பும் போது கிளம்பும், எனவே உங்களுக்கு சொல்லப்பட்ட நேரத்தில் விமான நிலையம் அடைந்து விடுவது நலம். காலை 6 மணிக்கு கோரக்கர் சன்னதிக்கு பயணம். பசுபதிநாதர் கோவிலின் இடதுபுறம் ஒரு சாலை பிரியும் அதில் சிறு குன்று உண்டு, பெரிய பெரிய படிகளில் அநேகம் பேர் ஓடிக்கொண்டும், உடற்பயிற்சி செய்தும் இருப்பார்கள், அந்த படிகளில் ஏறி சிறு குன்றின் உச்சியை அடைந்தால் அங்கே வசிக்கிறார் கோரக்கர்.  தலைவரின் அனுமதியுடன் தான் எந்தப்பயணமும் ஆரம்பிக்கவேண்டும், இதோ கோரக்கரை தரிசித்து, அனுமதிபெற்றுக்கொடிருக்கிறோம். மந்திர ஜெபமோடு அந்த சூழல் இன்னொரு முறை மீண்டும் வாய்க்க குருவருள் துணையிருக்கட்டும்.


விமான நிலையம் அடைந்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பின் போஹ்ரா அடைந்தோம். போஹ்ரா, அழகான சிறிய ஊர். காத்மாண்டு போல் கூட்டமில்லை, மிக மிக இதமான கால நிலை, அழகான ஏரியை சுற்றி அமைதியான பாதையும், ஒரு புறம் கடைகளும், நினைத்த பொழுது வானத்தை பிளந்த மழையும் தூரத்தில் வெள்ளிப்பனி மலையுமாக கண்நிறைந்த ஊர். மாலை சத்சங்கத்தில் முக்திநாத், ஏன் எதற்கு, நாத பரம்பரை, இன்னும் எங்களின் எத்தனையோ கேள்விகளுக்கு  பதிலுரைத்து அடுத்த நாள் பயணத்திற்கு மனதளவில் தயார் படுத்தப்பட்டோம்.



3-ம் நாள் = ஜோம்சம் பயணம் 

போஹ்ராவிலிருந்து 16 பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய ரகவிமானம், உங்கள் பெயர் அச்சிட்ட போர்டிங் பாஸ் எதுவும் இருக்காது. இங்கு வருவதற்கு முன்பே அன்னபூர்ணா மலையேற்றம் குறித்து அனுமதி வாங்கியிருந்தோம். தோராயமாக ஒருவருக்கு இந்திய ரூபாயில் 750 ரூபாய் ஆகும். காலை 6 முதல் 10 வரை மட்டுமே இயங்கும். நான்கு விமான கம்பனிகள், சிறிய வீடு போன்ற விமான நிலையம். வெறும் 16 நிமிட பயணமே, மண்ணால் ஆன மலைகள், பனிசிகரங்கள், காடுகள், சமவெளிகள், நதிகள், சூரியன் பட்டு ஜொலிக்கும் அன்னபூர்னா சிகரம் என்று வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பயணம் அது. கொஞ்சம் உயிர் பயத்தையும் காட்டியே ஜோம்சம்மில் நம்மை இறக்கிவிடுவார்கள். விட்டார்கள்,



 ஒரே ஒரு நீண்ட தெரு, அதில் இந்தக்கோடியில் விமானநிலையம் பாதி வழியில் ஹோட்டல், அந்தக்கோடியில் காளிகண்டகி நதி. 8 மணிக்கு  முக்திநாத் செல்ல தயாரானோம். இங்கிருந்து 21 கிலோமீட்டர் பயணம், ஆனால் 2 முதல் 3 மணிநேரம் ஆகும். சாலை என்பது கடைசி 10 கிலோமீட்டருக்கே அதுவரை தண்ணீர் வற்றிய கண்டகி நதியில் பஸ் பயணம். குலுங்கி  விலா எலும்புகள் இடம் மாறுகையில் பாதை தென்பட்டது. ஒரு திருப்பத்தில் நிறுத்தி புகைப்படும் எடுத்து மீண்டும் பஸ்ஸில் ஏறி இரண்டு கிலோமீட்டர் போனதுமே கவனித்தேன் என் ஹேண்ட் பேக் காணோம். பாஸ்போர்ட் முதல் கொண்டு எல்லாமே இருந்தது. ட்ரைவர் உடனே வண்டியை திருப்ப முடியாது என்று மீண்டும் ஒரு கிலோ மீட்டர் போய் வண்டியை திருப்பி நாங்கள் புகைப்படம் எடுத்த இடம் வந்த போது வைத்த இடத்திலேயே என் கைப்பை அநாதையாக கிடந்தது. அதுவரை அந்த ரோட்டில் ஒரு வண்டியோ மனிதனோ கடக்கவில்லை. 



முக்திநாத்  ஆட்டோ ஸ்டேண்ட் எனப்படும் வாகனங்கள் நிறுத்துமிடத்திலிருந்து நடக்க வேண்டும். 2 கிலோமீட்டர் மட்டுமே. நடக்க முடியாதவர்களுக்கு போனி எனப்படும் மட்டக்குதிரை சவாரியும், டோலி எனப்படும் நான்கு பேர் சேர்ந்து தூக்கிசெல்லும் வசதியும் ஹோம்சம்மிலிருந்து ஹெலிகாப்டர் வசதியும் உண்டு. அப்படி ஒன்றும் கடினமான பாதை அல்ல, கொஞ்சம் படிகள்  கரடுமுரடான பாதை என்று மொத்தமே 2 கிலோமீட்டர் தான். மெதுவாக ஏறலாம்.  கவனிக்க வேண்டியது இங்கு அனைத்து கடைகளும் காலை 6 மணிக்கு திறந்து மாலை 4 மணிக்கு மூடப்படும். எலுமிச்சம் பழம் கிடைக்காது. தண்ணீர் தேவைக்கு எடுத்து செல்லவும். குளிர் கொஞ்சம் அதிகம். . 



முக்திநாத்தை அடைகிறோம். ஐந்தாம் திருமொழியில் கூறப்படும் திருசாளக்கிராமம், 108 வைணவத்தலங்களுள் ஒன்றின் முன் நிற்கிறோம் என்பதே நம்பமுடியாத ஒன்றாக. அத்தனை உயரத்தில் தமிழைப்பார்த்ததும் வரும் உணர்வு வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது. இதே போல் தேவப்பிரயாகையிலும் தமிழை பார்த்த நினைவுவந்தது. இரண்டடுக்கு கோபுரம் கொண்ட கோவில் கோபுரம், சுற்றியும் 108 சுனைகளில் தீர்த்த நீர், முன்புறம் பாவ, புண்ணியக்குளங்கள். பிரம்மாண்டமான கோவில்களையே தமிழகமெங்கும் பார்த்த நமக்கு இது மிகச்சிறிய கோவில். கோவிலின் வலது புறம் கழிப்பறைவசதிகள், பெண்கள் உடைமாற்றும் அறை. 108 சுனைகளிலும், சந்திரசூரிய குளங்களிலும் நீராட ஆயுத்தமாகிறோம்.



சிறிய சுனைகள் , அழகாக கூட்டமில்லாமல் குளிக்கலாம் என்று முதல் சுனையில் தலையை நீட்டியதும் தான் உறைத்தது, இது  கொடும் பனிநீர் என்று. தலைக்குள் உறைந்து காது வழியாக வெப்பம் வருவதை உணர்ந்தேன். குளிர் அப்படின்னு சொல்லமுடியாத குளிர், கைகால்கள் நடுங்க, உடம்பே உறைந்த நடக்கமுடியாத குளிரில் உடம்பு நடுங்க வேகமாக வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து குறுகி உட்கார்ந்தேன். இவை அனைத்தும் 10 நிமிடத்தில் நடந்து முடிந்தது. அத்தனை குளிரை உள்வாங்கி உடம்பு உணர்ந்து சுவாசம் நன்றாகவே கால் மணி நேரம் ஆயிற்று. இன்னும் இரண்டு குளங்கள் இருக்கிறதே. மனசை தைரியப்படுத்தி இரண்டிலும் முங்கி குளித்து ஓடி உடைமாற்றி வந்து அரைமணி நேரம் கழித்தே  உடம்பில் வெப்பமும் சுவாசமும் சாதாரணமானது. முக்திநாதரை தரிசிக்க சென்றால் அங்கு பூஜை செய்பவர் ஒரு பெண்மணி. புத்தருக்கான கோவிலாக மாற்றியிருந்தாலும்  வைணவத்தலமாகவே இருக்கிறது.  மதியம் ஒரு மணிநேர நடை சாற்றல் சமயமானதால் கூட்டமும் இருந்தது. ஆனாலும் எங்கள் மாணவர்கள்   கூட்டத்தை ஒழுங்கு படுத்தி அனைவருக்கும் தரிசனத்தை சாத்தியமாக்கினர்.  மந்திர ஜெபமும், மஹாமிருத்யங்க யாகமும் முடித்து கொண்டு வந்த புளியோதரையை உண்டு சிறிது தூரத்தில் இருக்கும் பிரம்மாண்ட புத்தரையும் தரிசித்து கீழிறங்க ஆரம்பித்தோம். மீண்டும் காளி கண்டகிவழி விடுதி திரும்பி இரவை ஜோம்சம்மில்  பெருமழை சப்தத்தில் கழித்து காலையில் போஹ்ரா மீண்டும் கிளம்பினோம்.


காத்மாண்டு – போஹ்ரா தோராயமாக 200 கிலோமீட்டர் விமானத்தில் 20 நிமிடமும் வளைந்து நெளிந்த ரோட்டில் 10 மணிநேரமும் ஆகும். போஹ்ரா – ஜோம்சம் 180 கிலோ மீட்டர் விமானத்தில் 16 நிமிடங்களும் பாதை வழியில் 12 மணி நேரமும் ஆகும். பாதை வழியில் சென்றால் மனோ காம்னாக்யா தேவியை தரிசிக்கலாம். நாங்கள் விமானத்தில் சென்றதால் இம்முறை இயலவில்லை. அடுத்த முறை தேவி அருளட்டும்
போஹ்ரா, காலை விமானத்தில் போஹ்ராவை அடைந்ததும் ஆரம்பித்த  மழை  விடாமல் பெய்துகொண்டே இருந்தது. போஹ்ராவில் பார்க்கவேண்டிய இடங்களில் சில, பராஹி கோவில் ( வராஹி கோவில்) ஏரிக்கு நடுவில் அமைந்துள்ளது, படகில்  இந்திய மதிப்பில் போக வர 100 ரூபாய், அழகிய சிறு கோவில், இங்கு கோவில்களில் ஸ்டிக்கர் பொட்டு, கண்ணாடி வளையல் போன்றவைகளை ஸ்வாமிக்கு சமர்பிப்க்கின்றனர். 
குப்தேஸ்வர மஹாதேவ் கேவ் : குகைக்கோவில், தரையிலிருந்து  100 படிகள் வரை கீழிறங்கி சென்றால்  ஆயிரம் வருட பழமையான சிவன் கோவிலும் இன்னும் இறங்கினால் ஆர்பரிக்கும் அருவியையையும் பார்க்கலாம்..
குப்தேஸ்வரர் கோவிலுக்கு எதிர்புறம் உள்ளது டாவிஸ் அருவி. இந்த அருவிதான் குப்தேஸ்வரர் கோவிலுக்குள்ளும் விழுகிறது.
பிந்தியபாஷினி கோவில் : பழைய பஜார் பகுதியில் உள்ள பிந்தி பாஷினி கோவில் முக்கியமான துர்கை ஆலயம். சிவன், கிருஷ்ணர், பஜ்ரங்பலி என்று எல்லாருக்கும் சந்நதி உள்ளது. சிறு குன்று போன்ற இடம். லிப்ட் உண்டு, கட்டணமும் உண்டு.
இந்த இடங்களை பார்த்து , ஓய்வெடுத்து அடுத்த நாள் காத்மாண்டு பயணித்தோம்.

காத்மாண்டு. 
நினைத்ததை விட சுலபமாக, நிறைவான தரிசனம் முக்திநாத்திலும், போஹ்ராவிலும். நாங்கள் காத்மாண்டு அடைந்த பின்னரே அறிந்தோம் அன்றும் அதைத்தொடர்ந்து இரு நாட்களுக்கு முக்திநாத் சேவை பனிப்புயல், கடும் மழை காரணமாக நிறுத்தப்பட்டது என்று. ஆதிநாதரின் அருளின்று எங்கள் பயணம் இதுவரை இத்தனை சிறப்பாக இருந்திருக்காது. காத்மாண்டுவில் பார்க்க வேண்டிய சில இடங்கள்

ஸ்வய்ம்பு நாத் : முழுதான ஹிந்துக்கள் நாடாக நேபாளம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் புத்த மதமும் பரவியிருக்கிறது. ஸ்வம்புநாத் அதில் ஒன்று. சிறு குன்றின் மேல் இருக்கும் புத்த ஆலயம், அருமையான சிற்பக்கலைகளுடன் பெரிய கண்கள் வரையப்பட்ட ஸ்தூபியை வணங்குகின்றனர்.

ஜலநாராயணன் கோவில் : தண்ணீரில் துயில் கொள்ளும் பிரம்மாண்ட  விஷ்ணுவின் கோவில், அதன் சின்ன  அளவு சிலையை வைத்து தினப்படி யாகம் நடத்தப்படுகிறது.

கைலாத்நாத் கோவில் : ஊரைவிட்டு சிறிது தள்ளி இருக்கும் 140 அடி சிவன் கோவில்,, தனியாருக்கு சொந்தமானது.

டோலேஸ்வர் கோவில் : காத்மாண்டுவை சுற்றி பெரும்பாலும் ஹிந்து கோவில்கள், அதில் முக்கியமானது டோலேஸ்வர், மஹாபாரதக்கதைகளில் இடம்பெற்ற பழமை வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. 

சங்குநாராயணன் கோவில். மலைமேல் இருக்கும் விஷ்ணு கோவில், மிக மிக அழகான சிற்பங்களும் விஷ்ணுபுராண சிலைகளுமாக அழகான இடம்.

இந்த கோவில்கள் அனைத்திலும் ஆள் நடமாட்டம் குறைவு, நுழைவுக்கட்டணம் உண்டு, அனைத்துமே காத்மாண்டுவின் நான்கு திசைகளிலும் தள்ளி அமைந்திருக்கிறது.



காத்மாண்டுவை விட்டு கிளம்பும் நேரம்  வந்துவிட்டது. மீண்டும் பசுபதிநாதரை தரிசித்து, கோரக்கரிடம் நன்றிகூறி தியானித்து , யாத்திரையின் நிறைவு உரையாக ஸ்வாமி ஓம்கார் அவர்களிடம் சந்தேகம் தெளிந்து அருளாசி வாங்கி டெல்லியை நோக்கி பயணப்படுகிறோம்.
இது ஒரு பயணக்கட்டுரை அல்ல, ஆயிரம் பக்கம் எழுதினாலும் தீராத அனுபவங்கள் அவை. முக்திநாத் போகவேண்டும் என்று நினைப்போருக்கு  இப்படி இருக்கும் என்ற சிறிய வழிகாட்டி. நாதர்களின் பூமியின் அருளையும், அனுபவத்தையும் வார்த்தைகளில் எழுத முடியாது என்றாலும் , எப்போது  படித்தாலும் மீண்டும் அந்த இடங்களுக்கு கண்மூடி மனதளவில் பயணிக்கவும், காளி கண்டகியின் வழியில் முக்திநாதரை தரிசிக்கவும், கோரக்கரை அருகிருந்து உணரவும் ,, மறுபடியும் வாழ்வில் இன்னொரு முறை அவர்களை காணும்  வாய்ப்பினையும் வேண்டவும் ஒரு வழி. மீண்டும் குருஅருள் மனம் வைத்து கோரக்கரையும் நாதபுரியையும் தரிசிக்க அருள்புரியட்டும்.

0 கருத்துக்கள்: