வாஸ்துவுக்கு நீங்கள் தோஸ்து இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. வாஸ்து என்ற கட்டிடக்கலை மேல் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அதை வைத்து எதிர்கால பலன் கூறி இதில் வாழ்பவன் இப்படி இருப்பான் என சொல்லுவது முட்டாள் தனம் என்பதே என் கருத்து. காரணம் வாஸ்து விதிகள் ஆட்களுக்கு ஏற்ப மாறுவதில்லை. வீட்டின் தன்மை வாஸ்து அடிப்படையில் இருந்தால் அதில் வாழ்பவன் யாராக இருந்தாலும் பலன் இருக்கும் என கருத்து நிலவுகிறது. இந்த பொது தன்மை தான் வாஸ்து விதிகளுக்கு முரணாக இருக்கிறது.
முக்கியமாக வாஸ்து பார்ப்பதே பணம் சேர்க்கத்தான் என்பதை போல பெரும்பான்மையான வாஸ்துகாரர்களில் வழிகாட்டுதலும் இருக்கிறது. 2010ஆம் வருடம் வரை தென்னகத்தில் ஆந்திராவில் இருந்து வாஸ்து நிபுணர்களின் படை மேலோங்கி இருந்ததும், திருப்பதி வாஸ்து அடிப்படையான கோவில் அதனால் தான் அங்கே பணம் கொட்டுகிறது என்ற புரளியும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
திருமணம் தடை உள்ள வாஸ்து அமைப்பு, குழந்தை பாக்கியம் பெற வாஸ்து அமைப்பு, நோய் இல்லாமல் வாழ வாஸ்து அமைப்பு என சொன்னாலும் அடிப்படையில் செல்வம் சேரும் வாஸ்து அமைப்பு என வாஸ்து பார்ப்பதன் நோக்கம் முற்றிலும் பணம் சேர்க்கும் சுய நலம் தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த சுயநல தன்மையை வாஸ்து நிபுணர்கள் ஊதி பெரிதாக்கி நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
குரு கிடைக்க வாஸ்து அமைப்பு, ஆன்மீக முன்னேற்றம் செய்ய வாஸ்து அமைப்பு, தினம் தினம் ஆன்மீக பயிற்சி தடையில்லாமல் செய்ய வாஸ்து அமைப்பு, முக்தி அடைய வாஸ்து அமைப்பு உண்டா என உங்கள் வாஸ்து நிபுணரிடம் கேட்டு சொல்லுங்கள்...!
வாஸ்துவால் எனக்கு பொருள் வேண்டாம் ஐயா... வாஸ்துவால் இறைவனின் அருள் பெற செய்யுங்கள் அவரிடம் பொருள் கேட்டு கொள்கிறேன் என சொல்லிப் பாருங்கள். வாஸ்து நிபுணர் உண்மையாக மாயனை பின் பற்றுவார்..மாயமாகிவிடுவார்.
வாஸ்து கட்டமைப்புகள் கோவில்களுக்கும் உண்டு. ஸ்தபதிகள் வாஸ்துவை பின்பற்றுவதும் அதன் குறிப்புகள் தமிழ் ஆகம விதிகளிலும் இருப்பதை காணலாம். தற்காலத்தில் வாஸ்து நிபுணர்கள் மனையின் மையத்தில் கட்டிடம் கட்ட கூடாது, அது பிரம்ம ஸ்தானம் இறைவனுக்கான இடம் என்கிறார்கள். ஆனால் கோவில்களின் நில அமைப்பின் மையத்தில் கூட கட்டிடம் கட்டப்படுவதில்லை. இறைவனின் சன்னிதானத்தை கோவிலின் மையத்தில் நாம் வைப்பதில்லை. பணம் கொட்டும் திருப்பதி கோவில் கூட அப்படி அமையவில்லை என்பது தான் உண்மை..! (பார்க்க படங்கள்.)
திருப்பதி - ஆந்திர பிரதேசம்
மீனாட்சி அம்மன் கோவில் - மதுரை
அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் - திருவண்ணாமலை
ஆனால் பிற மதக்கோவில்கள் பிரம்ம ஸ்தானத்தில் கட்டபட்டுள்ளன. சீக்கியர்களின் தங்கக்கோவில், கம்போடியாவின் அங்கோர்வார்ட் கோவில் ஆகியவை இதற்கு உதாரணம்.
அங்கோர்வார்ட் - கம்போடியா
குருத்வாரா - பஞ்சாப்
தமிழ் கலாச்சாரத்தில் மனையடி சாஸ்திரம் என்ற வழக்கம் இருந்தது. இன்று கூட காலண்டரின் பின்பக்கம் 12க்கு 16 அடி என சொல்லி அதற்கு பலன் எழுதி இருப்பதை பார்க்கலாம்.
மனையடி சாஸ்திரம் அந்த காலத்தில் குழி என்ற கணக்கில் பயன்படுத்தப்பட்டது. எந்த குடும்பத்திற்கு வீடு கட்டுகிறோமோ அந்த வீட்டு தலைவனின் கால் அடியை (குழி கணக்கை) எடுத்து அளவுகோலாக கொண்டு கட்டிடம் கட்டினார்கள். இதனால் பாரம்பரிய வீடுகள் நிலைத்து அடுத்த தலைமுறைக்கு சென்றது. மேலும் வேறு குடும்பங்கள் அதில் வசிக்கும் பொழுது அளவீடுகள் மாறுவதால் அவர்களுக்கு ஒத்துவராது. தற்காலத்தில் கட்டிடகலை வல்லுனர்கள் மனையடி சாஸ்திரத்தை பின்பற்றினாலும் பொதுவான அளவையே வைக்கிறார்கள். அதனால் மனையடி வேலை செய்யுமா என ஆய்வு செய்ய வேண்டும்.
எளிமையாக சொன்னால் தையல்காரரிடம் நம் அளவுக்கு தைத்த ஆடை பிறருக்கு பொருத்தமாக இருக்காது அல்லவா அது போல மனையடி சாஸ்திரம் என்பதும் அப்படிப்பட்டதே ஆகும்.
வாஸ்து என்பது பழங்காலத்தில் இருந்து இருக்கிறது அதனால் பின்பற்ற வேண்டும் என கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டும் என்பது இல்லை. என் முப்பாட்டன் கிணற்றில் நீர் இறைத்து குளித்தார் என்பதால் நானும் கிணறு வெட்டி அதில் குளிக்க வேண்டுமா? ஆழ்துளை நீர் எடுத்து மோட்டார் மூலம் குளிக்கலாமா என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
16 நிலை கோபுரம், 11 நிலை கோபுரம் என கட்டிடம் கட்டிய கலை கொண்டவர்கள் தமிழ் மன்னர்கள். ஆனால் அவர்களின் அரண்மனையை பல்வேறு நிலை கோபுரம் போல கட்டிக்கொள்ளவில்லை. இது ஏன்? மனித உடல் பூமியின் இயக்கத்துடன் ஒட்டி இருக்க வேண்டும் என்பதே இதன் காரணமாகும். பலமாடி கட்டிடம் கட்டி அப்பார்ட்மெண்டில் இருப்பவர்கள் வாஸ்து பார்க்கலாமா என யோசிக்க வேண்டும்.
மேலும் கிழக்கு சென்று வடக்கு திரும்பும் படிக்கட்டு நல்லதா வடக்கு சென்று மேற்கு திரும்பும் படிக்கட்டு நல்லதா என பல மாடி கட்டிடம் கட்டுபவர்கள் வாஸ்து பார்க்கிறார்கள்.
வீட்டின் மேல்மாடி கட்டினாலும் அந்த இடம் பரண் என பொருட்கள் சேமித்துவைக்கும் இடமே தவிர வாழும் இடமாக பயன்படுத்தவில்லை. அதற்கு படிகட்டும் ஒரே நேர்கோடாக இருக்கும். தற்கால அப்பார்ட்மெண்ட் விளம்பரத்தில் கூட வாஸ்து சாஸ்திரம் அடிப்படையில் என விளம்பரம் செய்கிறார்கள். இக்கருத்து எல்லாம் பாரம்பரிய வாஸ்துவில் சேர்க்க முடியுமா?
50 ஆண்டுகளுக்கு முன்புவரை கழிவறை என்ற அமைப்பு இல்லை. சுகாதாரத்தின் காரணமாக நம் முன்னோர்கள் கழிவறையை வீட்டின் உள்ளே அமைத்ததில்லை. வாஸ்து நிபுணர்களோ மாயன் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிட்டபடி கழிவறையும் செப்டிக் டாங்கும் வீட்டில் எங்கே அமைய வேண்டும் என விளக்குகிறார்கள். மாயன் குறிப்பில் உங்கள் வெஸ்டன் டாய்லட் எந்த திசை பார்த்து இருக்கும் என எழுதப்பட்டிருக்கிறதா? அவர் அட்டாச்டு பாத்ரூம் எந்த மூலையில் அமைய வேண்டும் என்பதை எந்த ஸ்லோகத்தில் கூறுகிறார்? சுட்டிக்காட்டினால் நான் உங்களுக்கு கடமைப்பட்டவனாவேன்.
வாஸ்து நிபுணர்களிடம் நான் கேட்க விரும்புவது இது தான்.
1) நம் முன்னோர்கள் வசித்த வீட்டின் அமைப்பு பெரும்பாலும் தனி வீடு. பிற வீட்டின் சுவற்றுடன் இணைந்திருக்காது. தற்காலத்தில் நெருங்கிய அமைப்பில் வீடும், அப்பார்ட்மெண்டும் உள்ளது. அப்படியானால் அடுக்குமாடி வாஸ்து என்பது பாரம்பரியமாக உண்டா? ஆம் எனில் வாஸ்து சாஸ்திர நூலை சுட்டிக்காட்டுக. இல்லை எங்கள் அனுபவத்தில் ஆய்வு செய்தோம் என்றால் அந்த ஆய்வை வெளியிடுக.
2) கழிவறை வாஸ்து சாஸ்திரம் உண்டா? கழிவறையில் எந்த திசை பார்த்து மலம் கழிக்க வேண்டும் என சொல்லுவதும் வாஸ்து அடிப்படையிலா?
3) முற்றிலும் 100% வாஸ்து கொண்ட வீடு என ஒன்றை காட்ட முடியுமா?
4) அக்னி மூலையில் குறை உள்ள ஒரு வீட்டில் ஒருவர் குடி இருக்கிறார். அதனால் அவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என வைத்துக்கொள்வோம். அவர் காலி செய்த பின் மற்றொருவர் குடிவந்தால் அவருக்கும் அதே பாதிப்பு வருமா? எளிமையாக கேட்பதானால் வாஸ்து குறைபாடு ஒரு வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு இருப்பது போலவே அனைவருக்கும் இருக்குமா? அல்லது ஆளுக்கு ஆள் மாறுபடுமா?
5) ஊட்டி,கொடைக்கானல் போன்ற மலைவாழ் பகுதிகளுக்கும் இதே வாஸ்து விதிகள் தானா? மாயன் குறிப்பில் இதன் அடிப்படை ஏதேனும் உண்டா?
இச்சமயம் கேள்வி இவ்வளவு தான். வாஸ்து நிபுணர்கள் பதில் அளிக்கலாம். அல்லது நீங்கள் அவர்களிடம் கேட்டு கூறலாம்.
மேற்கண்ட கருத்தை எல்லாம் படித்து நான் வாஸ்து விரோதி என முடிவுகட்டிவிடாதீர்கள். வாஸ்து பயன்படுத்தலாமா? வாஸ்து குறைபாடு உள்ள வீட்டில் வசித்தால் என்ன செய்ய வேண்டும் என பல தகவல்களை விளக்குகிறேன்.
(வாஸ்து வளரும்)
5 கருத்துக்கள்:
அட! ரெண்டாவது போஸ்ட் வந்துடுத்தே!
மீண்டும் பார்முக்கு வந்து அடுத்த அடுத்த வாரத்தில் பதிவுகள் போட்டு அசத்துறீங்க சுவாமிஜி. பதிவுகள் அருமை! பதிவுகள் வளர, வாஸ்து அறியாமை அகல. உங்கள் பதிவுப்பணி தொடர விழைகிறேன். நன்றி ஜி :)
ஐயா
நெத்தியடி சவுக்கடி என்கிறார்களே அது இதுதானோ
எம்.திருமால்
பவளத்தானூர்
நான் படித்த அடிப்படை வாஸ்துவையே ஆட்டம் காண வைத்து விட்டீர்களே சுவாமிஜி.
////////////குரு கிடைக்க வாஸ்து அமைப்பு, ஆன்மீக முன்னேற்றம் செய்ய வாஸ்து அமைப்பு, தினம் தினம் ஆன்மீக பயிற்சி தடையில்லாமல் செய்ய வாஸ்து அமைப்பு, முக்தி அடைய வாஸ்து அமைப்பு உண்டா ///////////
அதானே? 'நச்' கேள்விகள்.
சபாஸ் சரியான போட்டி.
Post a Comment