இந்த வருடம் பயணத்திற்கான வருடம் என என் தசா புக்தி சொன்னதோ என்னமோ..பெட்டியுடன் சுற்றியபடியே இருக்கிறேன்.
கும்பமேளாவில் துவங்கிய பயணம் டெல்லி, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா எங்கே நிற்கும் என தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். இதோ இப்பொழுது தென் அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள அர்ஜண்டினாவில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
கம்போடியாவை பற்றி ஒரு தொடர் எழுதவேண்டும் என எண்ணுவதற்குள் அர்ஜண்டினாவில் அடைக்கலமாகி விட்டேன்.
இந்தியாவிலிருந்து இங்கே வருவதற்கு மிக நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும்.
வட அமெரிக்காவை போல இது பொருளாதார செழுமையான நாடு அல்ல. மேலும் அதிக விமான போக்குவரத்தும் கிடையாது.
முழுமையாக இரண்டு நாட்கள் வெவ்வேறு நாடுகள் வழியாக சென்றால் தான் அர்ஜண்டினாவை வந்து அடைய முடியும்.
தென் அமெரிக்க கண்டம் பிரேசில், அர்ஜண்டினா, பெரு,சிலே, பொலிவியா, பரகுவே, உருகுவே, வெனிசுலா, கொலம்பியா ஆகிய நாடுகளை கொண்டது. இதில் பிரேசில் தவிர பிற நாடுகள் 200 வருடங்களுக்கு முன் ஸ்பெயின் மக்களால் ஆக்கிரமிக்கபட்டு ஸ்பெனீஷ் கலாச்சாரம் வேர் ஊன்றி நிற்கிறது. பிரேசில் போர்ச்சிகீசியர்களால் ஆளப்பட்டு போர்ச்சிகீஸ் மொழி பேசுப்படும் கலாச்சாரமாக இருக்கிறது.
நிற்க... இது என்ன விக்கிபிடியா பக்கமா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இருங்கள் விஷயத்திற்கு வருகிறேன்.
கோவையிலிருந்து...பயணம் துவங்கி டெல்லி, துபாய், ரியோடிஜனிரோ(பிரேசில்) பிறகு போனிஸ் ஏரிஸ் என்ற அர்ஜண்டினா தலைநகரத்திற்கு வந்து சேர்ந்தேன். படிக்கும் பொழுதே மூச்சு முட்டுகிறதா?
பயணித்தவனை நினைத்துப் பாருங்கள்.
இப்படிபட்ட அர்ஜண்டினாவுக்கு பயணம் செய்ய துவங்கும் பொழுது புதிய மக்கள் கலாச்சாரம் என ஒன்றும் தெரியாது. தமிழே நமக்கு தாளம் என்பதால் ஸ்பேனீஷ் பற்றி சொல்ல வேண்டாம். அர்ஜண்டினா செல்லும் பொழுது அவர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கம் எதுவும் தெரியாது.
கால்பந்து எனக்கு பிடித்த விளையாட்டு என்பதால் மரடோனாவும், நம் ஊர் புரட்சி புலிகளின் சட்டையில் பார்த்த சேகுவாரோவை மட்டுமே தெரியும்.
துபாய் விமான நிலையத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு ஐரோப்பியர் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். உணவகத்தில் பரத நாட்டியம் ஆடாத குறையாக சைவ உணவு கேட்டு வாங்கிவந்ததை பார்த்து எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார். அர்ஜண்டினா என்றேன். உலகின் சிறந்த நகைச்சுவையை கேட்டது போல புரண்டு சிரித்துவிட்டு, “அர்ஜண்டினாவில் அசையாமல் அமர்ந்திருந்தா உங்களையே பன்னுக்குள் வைச்சு பர்கர்னு சாப்பிருவாங்க.... அந்த ஊரில் சைவ சாப்பாட்டு பழக்கத்துடன் போய் என்ன செய்ய போறீங்க ” என பீதியை கிளப்பினார். இனி ஒரு மாதம் இருக்க வேண்டிய நாட்டை பற்றி நல்ல கருத்து இது என நினைத்துக்கொண்டேன்.
இப்படி பல முன் உரைகளை கடந்து அரைத்தூக்கத்துடன் அர்ஜண்டினாவில் நான் கால் வைக்கும் பொழுது தெரியாது அது பல சுவாரஸ்யங்களை எனக்காக புதைத்து வைத்திருக்கிறது என்று...
(அன்பு பெருகும்)
5 கருத்துக்கள்:
// நம் ஊர் புரட்சி புலிகளின் சட்டையில் பார்த்த சேகுவாரோவை
//
:))))
நடத்துங்க....
அர்ஜண்டினா பற்றி தெரிந்து கொள்ளலாம்..தொடருங்கள்...
அருமை ஐயா.
தங்கள் பயணம் மற்றும் கலாச்சார தேடல் சிறக்கட்டும்.
தொடரக் காத்திருக்கேன்.
Post a Comment