அப்புவும் சோம நாத் குருஜியும், அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனை நினைவுபடுத்தினார்கள்.
சாதாரண குழந்தையாக இருந்த சோமு ஒரு நிமிடத்தில் குருவாக காட்சியளித்தது அப்புவுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அருகே இருந்த மேஜையின் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடியபடி வேத மந்திரங்களை ஜெபித்துவிட்டு, கண்களை திறந்து கூர்மையாக பார்த்தார் சோமநாத்.
“ நம் உடலில் 72000 நாடிகள் உண்டு என நீங்கள் படித்திருக்கலாம், அவை 108 புள்ளிகளில் உடலில் சங்கமிக்கிறது. அதில் முக்கியமாக பத்து நாடிகள் தச நாடிகள் என கூறுவார்கள். இந்த நாடிகள் நம்ம உடம்பின் அஞ்சு புலன் உறுப்புக்களையும், அதன் செயல்களையும் முடிவு செய்யுது. நம் சூட்சம உடலில் இந்த பத்து நாடிகளின் செயல் மிக முக்கியமானது. பத்து நாடிகளில் மூன்று நாடிகள் சூட்சம உடலின் ஆதாரமாக இருக்கிறது. அவை ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா நாடிகள். சூரிய நாடி, சந்திர நாடி- சூக்கும நாடி என தமிழில் சித்தர் பாடல்களில் கூட இதை நீங்கள் பார்க்கலாம்.
அனைத்து உயிரின் செயல்களும் இந்த மூன்று நாடிகளை மையப்படுத்தியே இருக்கிறது என கூறுகிறது யோக சாஸ்திரம். காரின் ஸ்டியரிங் எந்த பக்கம் திரும்புகிறதோ அந்த திசையில் கார் செல்லுவது போல, சூரிய நாடி, சந்திர நாடி செலுத்தும் திசையில் உயிர்களின் வாழ்க்கை செல்லுகிறது. சூரிய நாடி ஆக்க செயல்களுக்கும், சந்திர நாடி இயல்பான ஓய்வு செயல்களுக்கும் காரணமாக இருக்கிறது. உதாரணமாக விளையாட்டு, நடத்தல் போன்ற உடல் செயல்கள் அனைத்தையும் சூரிய நாடி முடிவு செய்யும். தளர்வடைதல், இசை கேட்பது போன்ற செயல்களை சந்திர நாடி முடிவு செய்கிறது. மூன்றாவது நாடியாகிய சுஷ்மணா - சூக்கும நாடி என சொல்லுவதற்கு காரணம், இயல்பாக இந்த நாடி செயல்படாது. இது சூரிய சந்திர நாடியின் இணைவால் இந்த நாடி செயல்பட துவங்கும் . சூரிய நாடி செயலும், சந்திர நாடி செயலும் இணைந்து செயல்பட்டால் மிகவும் சிறப்பான ஒரு நிலை வாழ்க்கை தன்மை ஏற்படும்.
இந்த நிலையே ஆன்மீக ஒருநிலை அல்லது யோகம் என்பார்கள். பல்வேறு ஆன்மீக பயிற்சிகளும், யோக முறைகளும் சுஷ்மணா நாடியில் இருப்பதற்கு வழிகளை கூறுகிறது.
ஒரு உயிரின் ஆன்மீக நிலை அவ்வுயிர் சுஷ்ணமா நாடியில் எத்தனை காலம் இருக்கிறது என்பதை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. வெளிநிலையில் சஞ்சரிக்கும் உங்களுக்கு நீண்ட தியானம் மன ஒருமைப்பாடு வரவில்லை என்றால் நாம் சுஷ்மணா நாடியில் இல்லை என அர்த்தம். உள்நிலையில் ஆழ்ந்து இருக்க இந்த சுஷ்மனா மிக அவசியம். சூக்ஷம உடலில் இந்த நாடிகள் இருந்தாலும், அவை நம் ஸ்தூல உடம்பில் புருவ மையத்தில் ஒன்றிணைகிறது.
இந்த மூன்று நாடிகளும் ஒன்றிணையும் இந்த புள்ளி நம் உடம்பின் ஆன்மீக மையமாக இருக்கிறது. இந்த இடத்தை சித்தாகாசம், சிற்றம்பலம் என பல்வேறு வகையில் அழைக்கலாம்.
புருவ மையத்தை ஆற்றல் மிகுந்த ஒருவர் தூண்டும் பொழுது நம் உயிரினுள் ஆன்மீக விதை விதைக்கப்படும். அது நம் வாழ்க்கையை கடந்தும் நம்மை இறைவனை நோக்கி கொண்டு செல்லும்.
நம் ஆன்மாவின் பயணம் அனைத்தும் இங்கே புதைந்திருக்கிறது. அதனால் தான் உன்னை உத்ரகாசியில் சந்திக்கும் பொழுது உன் புருவ மையத்தை தொட்டு நீ கடந்து வந்த பாதையை காட்டினேன்..” என நீண்ட மற்றும் விளக்கமான பதிலை கூறிவிட்டு தொடர்ந்தார் சோம நாத் குருஜி...
“இதற்கும் கும்ப மேளாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறாய் ? இந்த உலகை உடலாக கொண்டால், நிலப்பரப்பில் நதிகள் நாடிகளாக இருக்கிறது. நம் ஊண் உடம்பில் புருவ மையத்தில் மூன்று நாடிகளும் இணைந்து எப்படி ஆன்மீக நிலை ஏற்படுகிறதோ அது போல கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் இணையும் புள்ளி உலகின் சித்தாகாசமாக இருக்கிறது.
கங்கை சூரிய கலையாகவும், யமுனை சந்திர கலையாகவும், சரஸ்வதி என்ற கண்களுக்கு தெரியாத நதி சுஷ்மணாவாகவும் இருக்கிறது.
மூன்று நதியின் கூடல் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. நம் வசிக்கும் இந்த பூமியின் புருவ மையம் இது தான். அலஹாபாத் என்ற இந்த நகரில் கும்பமேளா நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பொழுது ஆன்மீக விழிப்புணர்வுக்கு தூண்டுதலாகவும், நம் சுஷ்மண நாடி அதிக காலம் தூண்டப்படுவதற்கும் காரணமாக அமையும்.” என சொல்லி நிறுத்திவிட்டு குருஜி அப்புவை பார்த்தார்.
தன் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டான் அப்பு...
“ குருஜி....கங்கையும், யமுனையும் எப்பொழுதும் அங்கே இணைஞ்சுட்டே இருக்கே? தினமும் இவ்வாறு தானே நடைபெறுகிறது? அப்படி இருக்க ஏன்
கும்பமேளா காலத்தில் மட்டும் முக்கியத்துவம்?”
புன்புறுவலுடன் அப்புவை பார்த்தார் சோம் நாத், “ உலகின் நாடிகள் இணையும் புள்ளி அலஹாபாத்னு சொன்னேன். இந்த சூரிய மண்டலத்தில் சூரியன், சந்திரன் அப்புறம் குரு இந்த கிரகங்கள் ஈடா,பிங்களா மற்றும் சுஷ்மணாவா இருக்கு.
இவை ஒரே மையக்கோட்டில் இணைந்து வரும் காலம் மிக முக்கியம். சூரிய மண்டலத்தின் நாடியும், பூமியின் நாடியும் நம் உடலின் நாடியும் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்தால் அங்கே ஆன்மீக பெரு நிகழ்வு நடக்கும்.
பூமியில் நதிகள் சங்கமித்தவண்ணம் இருக்கு, நம் உடம்பில் சுக்ஷ்மண நாடிகளை தூண்டும் யோக முறை நமக்கு தெரியும். ஆனா சூரிய மண்டல கிரகங்களை நம்மால் இணைக்க முடியுமா? அந்த கிரகங்கள் தன் சுழற்சியில் இயல்பா ஒன்றிணையும் காலம் 12 வருடத்திற்கு ஒரு முறை தான் நடக்கும். இப்படி 12 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் காலத்தை மஹா கும்ப மேளானு சொல்லுவாங்க. இந்த நாட்களுக்காக ஆன்மீகவாதிகள் காத்துகிட்டு இருப்பாங்க...”
(மேளா தொடரும்)
14 கருத்துக்கள்:
இந்த வருடம் ஆரம்பம் அலஹாபாத் திரிவேணி சங்கமிக்கும் இடத்துக்கு போயிருந்தேன் ஆனால் இப்போதுதான் உணர முடியுது அந்த இடம் எவ்வளவு மகத்துவம் வாய்த்தது என்று....
உம், அப்புறம்?
Very interesting way of story and its concept.
சபாஷ் நல்ல தெளிவான ஆன்மிக தொடர் தொடருட்டும் கும்பமேளா மோஹ்ன்குமார்
யோகம் என்பது எவ்வளவு அற்புதமானது.
மிகவும் அருமையான விளக்கம்.
superb explanation
Sami, it is much informative. Thank you.
ஸ்வாமி அருமையான பதிவு. குரு அருள் திருவருள் !!!
vegu arumai swamy ahaa anandham nanri nanri nanri
பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு சுவாமிஜி அவர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் .
உங்களது சேவை மிகவும் போற்றுதலுர்க்குரியது . அதுபற்றி கருத்து சொல்லக்கூட எனக்கு தகுதி உண்டா என்று எனக்குத் தெரியாது.
ஆனால் தங்கள் மேல் மிகப்பெரும் அபிமானம் உள்ளது. அதுவும் மற்றும் தங்களுடைய பதிவுகளை சுவாசிக்கும் பாமரன் என்ற முறையிலும்
உரிமையும் உள்ளதாக எண்ணுகிறேன்.
சுவாமி நான் கோயம்பத்தூருக்காரன் . சிவன் வழி சித்தன் வழி என்பது போல அவசியமிருக்கிறதோ இல்லையோ சம்பாதிப்பதற்காக
சவுதி அரேபியாவில் அரசாங்க நிறுவனத்தில் என்னை நல்ல வேலையில் அமர்த்தி வேடிக்கை பார்க்கிறான் என்னப்பன் வேலன் என்கிற தேவசேனாதிபதி.
இது அல்ல நான் பூமிக்கு வந்த காரணம் என்று அவ்வப்போது எனக்குள் தோன்றிக் கொண்டிருந்தாலும், ஏதோ என்னிடம்தான் 'சும்மாகிட' என்று முருகன்
சொன்னதாக நினைத்து வாளாவிருக்கிறேன். ஆனாலும் மனம் அடிக்கடி சூன்யத்தை நினைத்து ஏங்குகிறது. பெருத்த இரைச்சல்கள் மற்றும் பேரலைகளின்
நடுவே நான் பற்றிக்கொள்ள கிடைத்த துடுப்பாக உங்கள் பதிவுகளின் அறிமுகம் எனக்கு உதவுகிறது.
பெரிய பிரச்சினைகள் அல்லது தேவைகள் என்று எதுவுமே எனக்குக் குறையாக வேலன் வைக்கவில்லை. இருப்பினும், நான் மற்றவர்களுக்கு என்ன செய்திருக்கிறேன்
என்று தான் கவலைப்படவேண்டியதாக இருக்கிறது. ஏதாவது செய்யனும் ங்கிற ஆசை உண்டு. உங்கள் ஆசிர்வாதம் இருந்தால் நடக்கும் என்றும் தோன்றுகிறது.
பார்க்கலாம் ..விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன். வருகிற பிப்ரவரி மாதம் 12 முதல் 22 வரையிலான கால கட்டத்தில் நான் தங்களை வந்து சந்திக்கிறேன்.
முருகன் அருளால் தாங்கள் அதுசமயம் கோயம்பத்தூரில் தான் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் .
இவண்
G .நந்தகோபால்
Very Interesting and informative.
veghu arumai swamy thodarattum unghal pani
//சூரிய நாடி செயலும், சந்திர நாடி செயலும் இணைந்து செயல்பட்டால் மிகவும் சிறப்பான ஒரு நிலை வாழ்க்கை தன்மை ஏற்படும்.
இந்த நிலையே ஆன்மீக ஒருநிலை அல்லது யோகம் என்பார்கள். பல்வேறு ஆன்மீக பயிற்சிகளும், யோக முறைகளும் சுஷ்மணா நாடியில் இருப்பதற்கு வழிகளை கூறுகிறது.//
என்ன அருமையான விளக்கம். கும்பமேளாவின் உண்மையான தாத்பர்யம் இப்போத் தான் புரிகிறது.
Post a Comment